Feb 8, 2010

கற்க கசடற

விடுமுறை நாட்களில் காரிலேயே தன் கணவருடன் பெங்களூரிலிருந்து ஊருக்குச் சென்றுவிடுவதாக லீலாவதி சொல்லும் போதும், சில சமயங்களில் மோகனசுந்தரமும் இதே வாக்கியத்தை பிரயோகிக்கும் போதும் நானும் கார் ஓட்டிப் பழக வேண்டும் என்ற வீராவேஷம் வந்துவிடுகிறது. என்னிடமும் கார் ஓட்டுனர் உரிமம் இருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பாக இரண்டாயிரம் ரூபாய்கள் செலவு செய்து 'நோகாமல்' வாங்கி வைத்தது. ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது நம் ஊரில் வாகனம் ஓட்டத் தெரியும் என்பதற்கான அத்தாட்சி இல்லை என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறேன்.

காரில் போகும் போதெல்லாம் எதிரில் லாரியோ, பேருந்தோ நெருங்கி வரும் போது வியர்த்துவிடுகிறது. வாகனத்தை ஓட்டுவதற்கு பயிற்சி வேண்டும் என்பதைவிட மனதில் இருக்கும் தைரியம்தான் முக்கியமானதாகப்படுகிறது. எனக்கு உயிர் மீது ஆசை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. ஆசை அதிகமாகும் போது ஆயுள் குறைகிறது என்று சொன்ன ஒரு கிழவியின் முகம் வந்து போவதையும் தவிர்க்க முடிவதில்லை. இந்த ஆசை வருவதற்கு வயது கூடுவது காரணமாக இருக்கலாம் அல்லது மனைவி, புத்தம் புது மலராக மகன் என்ற புதிய உறவுகளும் காரணமாக இருக்கலாம்.

வீட்டில் கார் ஒன்று பல நாட்களாக குப்பையடித்துக் கிடக்கிறது. எதிரில் நடந்து வந்த பெண்ணின் மீது மோதாமல் தவிர்க்க, எதிர்வீட்டுச் சுவற்றில் மோதி அப்பாவால் நொறுக்கப்பட்டு பிறகு தயார் செய்யப்பட்ட கார் அது. பல நாட்களாக குளிக்காத அழகிய வாலிப பெண்ணின் கவர்ச்சியோடு வீட்டில் அது நின்று கொண்டிருப்பதாகவே படுகிறது. தைரியமாக இந்த யுவதி(என்கிற)காரை ஓட்டிவிடலாம் என்று முடிவு செய்து வெளியே எடுத்தேன் என்று துவங்கும் போதே விபத்தில் சிக்கிக் கொண்டிருப்பேன் என்று நீங்களாக முடிவு செய்து கொள்ள மாட்டீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன்.

ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாக இருந்தாலும் பத்து கிலோமீட்டர்களை தாண்டியவுடன் தெளிவாகிவிட்டேன். கொஞ்சம் வேகம் கூட்டிய போதெல்லாம் காருக்குள் தனியாக இருப்பது குறித்தான பிரக்ஞை தயக்கத்தை உண்டாக்கியது. ஒரு வேளை விபத்து ஏதேனும் நிகழ்ந்தால் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கக் கூட யாரும் இல்லை என்பதே பெரிய தயக்கம்.இந்த தயக்கத்திலும் பயத்திலுமே முப்பது கிலோ மீட்டர்கள் வரை பிரச்சினையில்லாமல் ஓட்டிச் சென்று ஒரு முட்டுச் சந்தில் 'ரிவர்ஸ் கியரில்' திரும்பிய போது இனிமேல் பெங்களூர் கூட ஓட்டிச் சென்று விடலாம் என்று பட்டாம்பூச்சி ஒன்று உள்ளுக்குள் பறக்க ஆரம்பித்தது.

திரும்பி வீடு நோக்கி வரும் போது ஒரு பாலத்தின் மேல் காருக்கு எதிரே நெல் அறுக்கும் வண்டி வந்து கொண்டிருந்தது. லாரியின் அகலம் தான் இருக்கும் ஆனால் உயரத்தில் லாரியை விட அதிகமாக ஆஜானுபாகுவாக இருந்தது. யாரோ ஒருவன் கயிறு ஒன்றைக் கையில் சுழற்றியவாறு எருமை மீதாக வருவது போன்ற கதையெல்லாம் கண நேரத்தில் தெறித்துச் சென்றது. காரை நிறுத்துவதா அல்லது அப்படியே ஓட்டலாமா என்று யோசிக்ம்போதே இடது பக்கமாக சைக்கிளில் போகும் முதியவர் மீது படாது என்று நினைத்து திருப்ப முயல அவர் மீது கார் பட்டு 'அலேக்காக' கீழே விழுந்தார்.

பின்னால் சக்கரத்திற்குள் விழுந்திருந்தால் கதை முடிந்தது. பாலத்தின் மீது நிறுத்தினால் மீண்டும் சிக்கல் என்று பாலத்தை தாண்டி நிறுத்திவிட்டு இறங்கலாம் என்று யோசித்து மெதுவாக நகர்த்துவதற்குள் ஒருவன் ஸ்கூட்டியில் வேகமாக முந்தி வந்து காருக்கு குறுக்கே நிறுத்தினான். நான் தப்பித்து விடுவதை தடுத்து நிறுத்தும் ஒரு கதாநாயகனின் இலாவகம். என்னை அந்த இடத்தின் வில்லன் ஆக்குவதற்கான அனைத்து முஸ்தீபுகளிலும் இறங்கினான்.

நான் காரிலிருந்து இறங்கி பெரியவரிடம் வேகமாக போனேன். அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. அதற்குள்ளாக எழுந்து நின்று முதுகை தட்டிவிட்டு, சைக்கிளையும் எடுத்து நிறுத்தியிருந்தார். தெரியாமல் நடந்துவிட்டது மன்னித்துக் கொள்ளுங்கள் என்று இருநூறு ரூபாய்களைக் கொடுத்தேன். அவருக்கு சந்தோஷமில்லை என்றாலும் வருத்தமில்லை. வாங்கிக் கொண்டு "பார்த்து போங்க தம்பி" என்றார். நான் கிளம்ப எத்தனிக்கும் போது அந்த ஸ்கூட்டி கதாநாயகன் நான்கைந்து பேர்களை திரட்டிவிட்டான். இந்தப் பெரியவர் தனக்கு அப்பா முறை என்றும் அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் தன்னால் அமைதியாக இருக்க முடியாது என்றும் சொன்னான். மாமா முறை, சித்தப்பா முறை எல்லாம் கேள்விப்பட்டிருந்த எனக்கு 'அப்பா முறை' என்பது 'ரணகளத்திலும் சற்று கிளுகிளுப்பாக' தெரிந்தது.

எனக்கு இந்த இடத்தில் இருந்து தப்பிக்க உபாயங்களை கொடுத்தான். ஒன்று இரண்டாயிரம் ரூபாய் பணத்தை அந்தப் பெரியவருக்கு கொடுக்க வேண்டும் அல்லது புதிய மிதிவண்டி ஒன்று வாங்கித் தர வேண்டும் இரண்டும் இல்லாத பட்சத்தில் காவல் நிலையத்துக்குச் சென்று உடன்படிக்கை செய்யலாம். முதல் இரண்டு உபாயங்கள் பரவாயில்லை என்று தோன்றியது. மூன்றாவது உபாயத்தில் ஐந்நூறு ரூபாயை பெரியவருக்கு கொடுக்க வேண்டியபட்சத்தில் இரண்டாயிரம் ரூபாயை நாட்டாமைகளுக்கு கப்பம் செலுத்த வேண்டி வரலாம் என்பதால் அதில் விருப்பமில்லை. கதாநாயகன் என்னை மிரட்டுவதற்காகத்தான் மூன்றாவதை சொல்லியிருக்கிறான் மற்றபடி அவனுக்கும் அதில் விருப்பம் இல்லை என்றே தோன்றியது.

கூட்டத்தில் இருந்த ஒருவர், "இந்த சின்ன அடிக்கு எல்லாம் இரண்டாயிரம் ரூபாய் அதிகம்" என்று சொன்னபோது சோற்றுக்கே லாட்டரி அடிக்கும் ஒருவனுக்கு ஹைதராபாத் பிரியாணி வாங்கித் தருபவர் போலத் தோன்றினார். நன்றிப் பெருக்கோடு ஒரு பார்வை பார்த்தேன். படங்களில் மட்டும் தான் 'சிங்கிள் ஹீரோ சப்ஜெக்ட்' அதிகம். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகர்கள் சுற்றித் திரிகிறார்கள். முதல் கதாநாயகனுக்கு உறுதுணையாக அடுத்த கதாநாயகன் தோன்றினான்.

"என்னடா அடிச்சுட்டு பணம் தர மாட்டேங்குற" என்றான்.

"கொஞ்சம் மரியாதையா பேசுங்க"

"என்ன வெங்காயம் மரியாதை, நான் சிறுத்தைகள் இளைஞர் அணி"

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்" என்ற போது அடங்கமறு, அத்துமீறு, திமிறிஎழு, திருப்பிஅடி என்று திருமா மீசை முறுக்குவது மனக்கண்ணில் வந்து போனது.

திருமா சொல்லிக் கொடுத்த நான்கு படிப்பினைகளில் நான்காவதில் "திருப்பி"ஐ மட்டும் கத்தரித்து விட்டு "அடி"ப்பதற்கு தயாராக நின்றான். இவனிடம் தப்பிப்பதுதான் பெரும் சிரமம் என்று தோன்றியது,

"எனக்கு ரவிக்குமார் சார் தெரியும்ங்க. அவரிடம் வேண்டுமானால் பேசட்டுமா" என்றேன்.

"அது யாரு ரவிக்குமாரு?"

"உங்க கட்சி எம்.எல்.ஏ".

"அவருகிட்ட எல்லாம் பேச வேண்டாம்" என்று சொல்லி என்னை ஆசுவாசப்படுத்தினான். ஒருவேளை "சரி பேசு" என்று சொல்லியிருந்தால் சிக்கியிருப்பேன். அவர் தொலைபேசி எண் கூட என்னிடம் கிடையாது. அந்த'டயலாக்' தப்பிக்க ஏதேனும் பற்றுக்கோல் கிடைத்துவிடாதா என்ற பதட்டத்திலும், குருட்டு தைரியத்திலும் சொன்னது. ஆனால் இப்பொழுது ஒரு முன்னேற்றம். கொஞ்சம் மரியாதையாக விளிக்க ஆரம்பித்தான். மரியாதை யாருக்கு வேண்டும், கூட்டம் சேர்ந்து கொண்டேயிருக்கிறது. நான் தப்பித்தாக வேண்டும். இன்னொரு முந்நூறு ரூபாயை பெரியவரிடம் கொடுத்தேன். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று இரண்டு கதாநாயகர்களும் கோரஸாக பேசினார்கள்.

வேறு வழியே இல்லை என்று என்னிடம் இருந்த இன்னொரு ஐந்நூறையும் கொடுத்தேன். அப்பொழுதும் சமாதானம் ஆவதாக தெரியவில்லை. சமாதானம் ஆகவில்லை என்றாலும் என்னிடம் அவ்வளவுதான் இருக்கிறது. கூட்டம் தான் இருக்கிறதே தவிர யாரும் எனக்கு ஆதரவாக பேசவில்லை. கார் வைத்திருப்பது ஒரு குற்றச் செயல் போன்று பார்த்தார்கள். முகத்தை எத்தனை பரிதாபமாக மாற்றி வைத்ததும் பலனளிக்கவில்லை. "ஹைதராபாத் பிரியாணி" மனிதர்தான் மீண்டும் உதவினார். "அந்த சைக்கிள் ஐந்நூறுக்குக் கூட போகாது. போதும் விடுங்க. தம்பீ நீங்க கிளம்புங்க" என்றார். எனக்கு அந்த வார்த்தைகளே போதுமானதாக இருந்தது. வேகமாக நடந்து- கிட்டத்தட்ட ஓடி வந்து காருக்குள் அமர்ந்து கொண்டேன்.

முதல் கியரில் வண்டி எடுக்கும் போது பெரும்பாலும் அனர்த்தி நின்று விடும். இந்த முறை அப்படி எதுவும் ஆகிவிடக்கூடாது என்று ஊரில் இருக்கும் கடவுளை எல்லாம் வேண்டிக் கொண்டேன். அவர்களும் கைவிடவில்லை. ஜன்னலுக்கு வெளியே தலை நீட்ட வேண்டாம் என்று கண்ணாடி வழியே பார்த்தேன். கூட்டம் கலையத் துவங்கியிருந்தது. பெரியவரின் கைகளில் இருந்த ரூபாய்த்தாள் முதல் கதாநாயகன் கைகளுக்கு மாறியது.
குறிப்பு: பெங்களூரில் இருந்து ஊருக்கு காரில் வரும் திட்டத்தை மகன் கார் ஓட்டிப் பழகும் வரை ஒத்தி வைத்திருக்கிறேன். மகன் பிறந்து அறுபத்திரண்டு நாள் ஆகிறது.

10 எதிர் சப்தங்கள்:

மஞ்சூர் ராசா said...

காவல் நிலையத்துக்கு போயிருந்தால் பிரச்சினையே இல்லை. பயந்துட்டீங்க போலெ
(காவல் நிலையத்திலும் காசு கொடுக்கவேண்டுமென்றாலும் பெரியவருக்கு பெரிய அடி இல்லை என்னும் நிலையில் நிலமை மாறியிருக்கும்).

Mohan said...

உங்கள் அனுபவத்தை அழகாக வார்த்தைகளில் கொண்டு வந்திருக்கின்றீர்கள்!

மாரி-முத்து said...

//பெங்களூரில் இருந்து ஊருக்கு காரில் வரும் திட்டத்தை மகன் கார் ஓட்டிப் பழகும் வரை ஒத்தி வைத்திருக்கிறேன். மகன் பிறந்து அறுபத்திரண்டு நாள் ஆகிறது//

ha ha ha....

கற்க கசடற....சரியான தலைப்பு...

gulf-tamilan said...

/மகன் பிறந்து அறுபத்திரண்டு நாள் ஆகிறது/
:)))

பைத்தியக்காரன் said...

அன்பின் மணிகண்டன்,

இந்த இடுகை ஒருபக்க சார்புடன் எழுதப்பட்டிருக்கிறது. அடிபட்டவர்கள் அல்லது கீழே விழுந்தவர்கள் சார்பாக கூடும் கூட்டம் அனைத்தும் 'வழிப்பறி' செய்கின்றன என்பதான வாசிப்பை இடுகை தருகிறது.

அதிலும் 'சிறுத்தை', 'திருமா' என்பதான சொற்கள் தரும் பிம்பம், இடுகையின் அரசியலை சட்டென உணர்த்திவிடுகிறது.

உங்கள் அனுபவம் இப்படி என நீங்கள் இந்த மறுமொழியை மறுக்கலாம். ஆனால், அகப்பரப்பு எப்படி புறப்பரப்பில் எதிரொலிக்கிறதோ அப்படியே புறப்பரப்பும் அகப்பரப்பில் எதிரொல்லிக்கும் என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.

அனுபவத்தை அழகான வார்த்தைகளில் கோர்த்திருக்கிறீர்கள். ஆனால், இடுகை தரும் அனுபவத்துடன் வேறுபடுகிறேன்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வா.மணிகண்டன் said...

மஞ்சூர் ராசா,மோகன், மாரிமுத்து,கல்ஃப் தமிழனுக்கு நன்றி.

சிவராமன்,
திரும்ப வாசித்துப் பார்த்தேன். ஒரு பக்கச் சார்புடன் எழுதப்பட்டதாக உணருவதற்கான அனைத்து சாத்தியங்களையும் உள்ளடக்கியிருக்கிறது.

அடிபட்டவர்கள் சார்பாக கூடும் கூட்டம் அனைத்தும் வழிப்பறி செய்வதாக சொல்வது நோக்கமில்லை. இரண்டு பேர்கள் மட்டுமே கட்டுரையில் துருத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பதும், ஹைதராபாத் பிரியாணி மனிதர் வேறு பார்வை உடையவர் என்பதும் தெளிவாகச் சொல்லப்பட வேண்டும் என்று முயற்சித்தேன்.

சிறுத்தை, திருமா வந்ததால் கட்டுரைக்கான அரசியல் இருக்கிறது என்பதில் எனக்கு ஒப்புதலில்லை. அது நீங்கள் சொன்னது போலவே இயல்பாக நிகழ்ந்த விஷயம்.

ஒருபக்கச் சார்பு தெரியுமிடத்தில் இந்தக் கட்டுரையில் நான் கட்டுரையாளனாக தோற்றிருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும்- ஒரு நல்ல அனுபவக் கட்டுரையாக வேண்டியிருப்பதை திசை மாற்றிய இடத்திலிருந்து..

Madurai Saravanan said...

neengal solvathu unmai aanal arasiyal perai solli pala katchi aatkal , ithu ponra vali pariyil thaan pilaippai nataththukiraarkal.nanraaka thoivenri solli irukkereerkal.

Baski.. said...

நான் கூட பைக் வாங்கி ரூம்ல பூட்டி வச்சிக்கிட்டு பஸ்ல ஊர் சுத்திகிட்டு இருக்கேன்....

ஜெகநாதன் said...

சூழலின் அபத்தம் மனிதர்களால்தான் நிறுவப்படுகிறது. தனியனாக நிற்கும்​போது ஏற்படும் மன​சோர்வை பதிவு​செய்திருக்கிறீர்கள். ஹீரோயிஸம் என்பது ஒரு வதைக்குள்ளாவது அது வதைப்பது என்ற மனோபாவம்தான் என்பது மைய இழையாக​நெருடுகிறது.
படைப்பு - படிப்பினை!

VENKAT said...

Namma oorla enga vanthaanga intha siruthaigal? oru chinna santhegam. avvalavu thaan.

Nalla comedy!!!