Jan 12, 2010

சென்னையின் கலாச்சார நிகழ்வு- புத்தகக் கண்காட்சி

சென்னையின் உற்சாகமான புத்தக உற்சவம் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளின்(09-10/01/2010)உச்சபட்ச கூட்டத்தோடு இந்த ஆண்டு நிறைவுற்றது. கடந்த சில ஆண்டுகளில் இந்தத் திருவிழா சென்னையின் கலாச்சாரம் சார்ந்த செயல்பாடாக உருமாறி வருவதாக அவதானிக்கிறேன். வாசகர்கள் புத்தகங்களை கொத்து கொத்தாக அள்ளிச் செல்கிறார்கள். எந்தக் கடைக்காரரும் இந்த ஆண்டு கண்காட்சி முந்தைய ஆண்டை விட நன்றாக இருப்பதாகச் சொல்கிறார். இதையேதான் ஒவ்வொரு ஆண்டும் சொல்கிறார்கள்.
இந்த ஆண்டு புத்தகங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம் ஆகியிருக்கிறது. பதிப்பாளர்களின் முதலீடும் அதிகமாகியிருக்கிறது. ஆனால் அவர்கள் உற்சாகமாகவே இருக்கிறார்கள். ஆக ஒவ்வொரு ஆண்டும் கண்காட்சிக்கு வரும் கூட்டமும், வாசகர்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கிறது. வாசிக்கிறார்களோ இல்லையோ, வாங்குகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இணையம் வந்த பிறகு வாசகர் எழுத்தாளர் சந்திப்பு ஒரு முக்கியத்துவம் இல்லாத நிகழ்வு எனச் சிலர் சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆனால் முற்றும் நிராகரிக்க வேண்டிய கூற்று என்றே இதைச் சொல்லலாம். எழுத்துக்களால் சொல்ல முடியாத ஒன்றை நேரடியான ஐந்து நிமிட பேச்சு சொல்லிவிடும். நேரடிச் சந்திப்பில் மட்டுமே இது சாத்தியம். சந்திப்பு வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமான ஒரு திறப்பு. இந்தச் சந்திப்பிற்கான அனைத்து சாத்தியங்களையும் கண்காட்சி உருவாக்குகிறது. வாசகர்கள் தங்களின் விருப்பமான எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடுகிறார்கள். எழுத்தாளர்கள் தங்களின் சக படைப்பாளிகளோடு விவாதிக்கிறார்கள். பல நேரங்களில் 'மொக்கை'யும் போடுகிறார்கள்.

காலி டப்பாவுக்குள் நிரப்படும் அனுபவங்களாக நம் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த அனுபவங்களை எழுத்துக்களாக மாற்றி வெளியில் எடுக்கும் ஒவ்வொரு படைப்பாளியும் தான் 'குழம்பு' வைக்கும் ஸ்டைலில் ஒவ்வொரு 'flavour' ஐ உபயோகப்படுத்துகிறான். இந்த 'flavour', படைப்பாளி-வாசகன் என்ற சந்திப்பின் மூலமாக 'fine tune' செய்யப்படுகிறது என்று நினைக்கிறேன்.

நான் கவனித்த வரையிலும் கவிதைக்கென வாசகர்கள் இல்லை என்பதை மறுக்க வேண்டியிருக்கிறது. கவிதைப் புத்தகங்களை மட்டுமே தேடி வந்த சிலரை இந்தக் கண்காட்சியில் சந்திக்க முடிந்தது. இந்த இடத்தில் 'சிலர்' என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து படித்துக் கொள்ளுங்கள்.

ஆரம்பத்தில் உயிர்மையின் அரங்கிற்குள் நின்று பேசிக் கொண்டிருந்தேன். "நீங்கள் யார்?" எதிரில் நிற்பவர் வினவும் போது என்னைப் பற்றிய அறிமுகம் கொடுத்துக் கொள்வதும், அவர் நான் எழுதியவை பற்றிக் கேட்டால் என் புத்தகத்தை காட்டுவதும் சங்கடமாக இருந்ததால் கொஞ்ச நேரத்தில் வெளியே வந்துவிட்டேன். கடைக்குள் பேசியதை விடவும் கடைக்கு வெளியே நின்று புத்தகங்கள் பற்றி அதிகம் பேச முடிந்தது.

மற்றபடி கண்காட்சிக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட எழுத்தாளரின் புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற முன்முடிவோடுதான் வருகிறார்கள். அந்தப் புத்தகங்களை மட்டுமே கழுகுப் பார்வை கொண்டு தேடுகிறார்கள். புது எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்குபவர்கள் மிக அரிது. அந்தந்த புது எழுத்தாளர்களின் நண்பர்கள் சிலர் வாங்குகிறார்கள் அல்லது கடையில் யாரேனும் குறிப்பிட்ட புத்தகத்தை வாங்குதலை நியாயப்படுத்தி பேசி சம்மதிக்க வைப்பின் பிரதிகள் நகர்கின்றன.

சில புத்தகங்கள் தலைப்பிற்காக வாங்கப்பட்டாலும் விற்பனையின் விகிதாச்சார அடிப்படையில் இது மிகக் குறைவு. வாசகன் தன்னை நோக்கி தேடிவரச் செய்யும் படைப்பாளிகளின் பெயர்களை கவனிக்கும் போது தொடர்ச்சியான, ஆழ்ந்த உழைப்பின் மூலமாக தங்களின் இடத்தை உறுதிப்படுத்தியவர்களாக இருக்கிறார்கள்.

மேற்சொன்ன மூன்று பத்திகளும் உயிர்மை, காலச்சுவடு, தமிழினி, அம்ருதா, வம்சி, சந்தியா, நவீன விருட்சம் போன்ற படைப்பிலக்கிய புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்களுக்கு பொருந்தும். கவர்ச்சியான தலைப்புகளால் மேலோட்டமான எழுத்துக்களை விரும்பிப்படிக்கும் வாசகர்களை குறி வைத்து வெளியிடப்படும் புத்தகங்களை வைத்திருந்த கடைகள் பற்றிய அபிப்பிராயம் எனக்கு இல்லை.

ஒன்றுமே எழுதாமல் அல்லது ஓரிரு புத்தகங்களோடு "நானும் எழுத்தாளர் ஆகிட்டேன், நானும் எழுத்தாளர் ஆகிட்டேன்" என்று வடிவேலு பாணியில் சுற்றிக் கொண்டிருந்த சில 'எழுத்தாளர்களின்' இம்சையையும், வாதையையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுக்கு எழுத்துக்களை பற்றிய சிந்தனையோ, தன் சமகால எழுத்தாளர்களைப் பற்றி பேசவோ, இலக்கியம் சார்ந்து விவாதிக்கவோ ஒன்றும் இருக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். தங்களின் இருப்பை பிரதிபலிப்பது மட்டுமே அவர்களுக்கு குறிக்கோளாக இருந்தது. இவர்களையும், தங்களுக்கு பிறரோடு பேச ஒன்றுமே இல்லை என்ற தொனியோடு ஒரு மட்டப்பார்வை பார்த்த புத்தக விரும்பிகளையும் தவிர்த்து எனக்கு இந்த கண்காட்சியில் சந்தோஷமாக இருக்க நிறைய விஷயங்கள் இருந்தன. இந்த இரண்டு பிரிவினரையும் சேர்த்து, பிற அனைத்துமே அனுபவங்கள்தான்.

புதிய நண்பர்கள் கிடைத்தார்கள், ஏற்கனவே ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டிருந்த நண்பர்களை நேரில் சந்திக்க முடிந்தது, தீவிரமான வாசகர்களோடு நிரம்ப பேச முடிந்தது என்று அடுக்கிக் கொண்டே போவேன் என்பதால் இதோடு நிறுத்துவது உத்தமம்.

அரங்கில் காற்றோட்டத்திற்கான ஏற்பாடுகளை அடுத்த முறை பப்பாஸி கவனிக்க வேண்டும். நெருக்கித் தள்ளிய கூட்டத்தில் ஒவ்வொருவரும் அரைலிட்டர் தண்ணீரையாவது வியர்வையாக மாற்றியிருப்பார்கள். நொந்து சுழன்று கொண்டிருந்த மின்விசிறிகள் எந்த பலனையும் தரவில்லை.மழைத்தண்ணீர் உள்ளே வந்துவிடக் கூடாது என்ற கவனத்தில் அரங்கை இறுக்கமாக மூடியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால் அதற்காக ஒரே மூச்சையே பலரும் சுவாசிக்க வேண்டியிருக்கும் என்பதை நினைத்திருக்க மாட்டார்கள் போலிருக்கிறது.

உணவுப்பண்டங்களின் விலையும் அநியாயக் கொள்ளை. கண்காட்சியில் அதிகபட்ச இலாபம் தின்பண்ட கடைக்காரர்களுக்காகத் தான் இருக்கும்.

டெயில் பீஸ்:

சனிக்கிழமை மாலையில் சாருவின் அருகில் நின்று கொண்டு மனுஷ்ய புத்திரன், மனோஜ் மற்றும் நண்பர் பாஸ்கருடன் பேசிக் கொண்டிருந்தேன். சில இளைஞர்கள் சாருவிடம் 'ஆட்டோகிராப்' வாங்கினார்கள். கவனித்த போது அது ஜெயமோகனின் 'ஊமைச் செந்நாய்' என்ற புத்தகத்தில். ஒருவேளை சாரு,ஜெமோ வின் இணையதளங்களை வாசிக்காதவர்களாக இருப்பார்களோ? ச்சே..ச்சே..அப்படி இருக்க முடியாது
நன்றி: உயிரோசை.