
கடந்த நான்கைந்து வருடங்களாகவே சென்னையில நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு சென்றுவிடுவதுண்டு. ஆரம்பத்தில் அனைத்து நாட்களும் கண்காட்சியில் இருப்பதாக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக நாட்களின் எண்ணிக்கை குறைந்து சென்ற முறை ஒரே ஒரு நாள் மட்டும் இருந்தேன்.
சென்ற ஆண்டில் நான் புது மாப்பிள்ளை. சென்னை சங்கமத்தில் கவிதை வாசித்துவிட்டு, புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். உடன் மனைவி வேறு. சென்னை சங்கமத்தில் எழுபது எண்பது கவிஞர்கள் வாசிப்பது வரை அமைதி காத்தவள், பல்லை நெருக்கிக் கொண்டு தலை வலிப்பதாகச் சொன்னாள். எத்தனை பெரிய துன்பத்தை கொடுத்திருக்கிறேன் என்பது புரிந்தது. ஒரு பெரிய துன்பத்தை ஆரம்பத்திலேயே கொடுத்துவிடும் போது அடுத்து நாம் தரும் துன்பங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்னும் நம்பிக்கையில் செய்தது அது.
கண்காட்சியில் அலைவது என்பது எனக்கு பிடித்தமான வேலையில்லை.ஒரு கடையில் நின்று கொண்டு புத்தகங்களைப் பற்றி மணிக்கணக்கில் மற்றவர்களோடு பேச வேண்டும். அவ்வளவுதான்.
சென்னையில் இருந்த சமயத்தில் உயிர்மை அலுவலகத்திற்கு சென்று வருவதால் அந்தச் சமயத்தில் உயிர்மை வெளியிடும் புத்தகங்களை உடனுக்குடன் படித்து விடுவதுண்டு. கண்காட்சியில் வருவோரிடம் வாசித்த புத்தகத்தை பற்றி பேசுவேன். அதுதான் விருப்பமும். அது வெறும் சிலாகிப்பும் விமர்சனமும் தான். பல நாட்களில் தொண்டை வறண்டு புண்ணாகியிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் ஒரு உண்மை மட்டுமே தெளிவாக புரிகிறது. ஆழ்ந்த வாசகர்கள் மிக அமைதியானவர்கள். அவர்களை எந்த விதத்திலும் ஏமாற்ற முடிவதில்லை.மற்றவர்களால் கொண்டாடப்படும் எழுத்தாளனின் ஈர்க்காத எழுத்தை 'ச்சும்மா' என்று நிராகரிக்க தெரிந்தவர்கள். அவர்கள் அதிகம் பேசுவதில்லை. விமர்சனத்தை உரத்த குரலில் முன் வைப்பதில்லை. வெறும் அமைதியால் நிராகரிக்கிறார்கள். அதே அமைதியால் மட்டுமே எழுத்தை கொண்டாடுகிறார்கள். அவர்களை நெருங்குவது என்பது எழுத்தின் வலிமையால் மட்டுமே முடியும்.
அரசியல் சித்து விளையாட்டுகள், சிண்டு முடிதல், சேறு தூற்றுதல் போன்ற தன் புத்தக விற்பனையை உயர்த்திக் கொள்ளவும், ரசிகர் வட்டத்தை நிறுவுவதற்கும் அரங்கேற்றப்படும் அக்கப்போர்களும், இலக்கியத்தில் தன் இடம் குறித்தான சந்தேகம்/பயத்தினால் எழும் பதட்டத்தினால் நிகழ்த்தப்படும் நிராகரிக்கத் தக்க செயல்பாடுகளும் அவர்களின் நிழலைக் கூட தொடுவதில்லை. ஆனால் ஒரே வருத்தம் இத்தகைய வாசகர்களின் எண்ணிக்கை சொற்பம் என்பதுதான்.
இத்தகைய வாசகர்களை சந்திக்கக் கூடிய இடம் புத்தகக் கண்காட்சி என்று எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் புத்தகம் வாங்குபவர்களிடம் பேசுவது மட்டுமே என் குறிக்கோளாக இருந்திருக்கிறது. நான் ஒரு வருடம் முழுவதுமாக கட்டியெழுப்பிக் கொள்ளும் என் ஈகோவை யாரோ ஒருவர் தன் ஆழ்ந்த வாசிப்பின் மூலமாக தட்டி நொறுக்குவதை மிகச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் இடம் அது.
இதே கண்காட்சியில் சில அரைவேக்காட்டு மனிதர்களிடம் சிக்கி சீரழிந்த கதைகளைச் சொல்லி ரத்தக் கண்ணீரும் வடிக்கலாம். ஆனால் அது இந்த இடத்தில் எழுதும் நோக்கம் இல்லை.
ஞானக் கூத்தனின் சில கவிதைகளை மட்டுமே தெரிந்து வைத்திருந்த நான் ஒருவரிடம் பேசி மூக்கு உடைபட்டு மீதக் கவிதைகளை வாசித்திருக்கிறேன்.ஆத்மாநாம்மின் கவிதையில் இருக்கும் புதிர்களை அவிழ்ப்பது பற்றியதான ஒரு பெரியவர் பேசியது ஞாபகமிருக்கிறது.மோகமுள்ளின் வேறொரு பரிமாணத்தை மற்றவரிடம் பேசி புரிந்திருக்கிறேன்.இந்த அவமானங்களையும் அறிதலையும் மிகச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன். அறியாமையைக் களையும் போது மட்டுமே நாமாக உருவாக்கிக் கொள்ளும் போலி அறிவுஜீவி பிம்பத்தை விட்டு விலகி வருகிறோம்.
ஒருவன் தொடர்ந்து எழுதுவதற்கு வாசிப்பு மட்டுமில்லாமல் தொடர்ச்சியான விவாதமும் அல்லது விவாதத்திற்கான தொடக்கப்புள்ளியையும் கண்டறிதல் அவசியமாகிறது. அது இத்தகைய அறிவுசார் கண்காட்சிகளில் சாத்தியமாகிறது என்று நம்புகிறேன்.
===
ஸ்ஸ்ஸ் அப்பாடா...ஸீன் முடிந்தது.
இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருவதாக இருக்கிறேன். இந்த மாதிரியான ரம்பத்திற்கு துணிந்து தலை கொடுக்க விரும்பும் நண்பர்களைச் சந்திக்க விருப்பம். பதில் ரம்பம் என்றாலும் நெம்ப சந்தோஷம்.
7 எதிர் சப்தங்கள்:
//ஆழ்ந்த வாசகர்கள் மிக அமைதியானவர்கள். அவர்களை எந்த விதத்திலும் ஏமாற்ற முடிவதில்லை.மற்றவர்களால் கொண்டாடப்படும் எழுத்தாளனின் ஈர்க்காத எழுத்தை 'ச்சும்மா' என்று நிராகரிக்க தெரிந்தவர்கள். அவர்கள் அதிகம் பேசுவதில்லை. விமர்சனத்தை உரத்த குரலில் முன் வைப்பதில்லை.//
மணிகண்டன்,
உண்மை தான் என என்னால் நிச்சயமாய் சொல்ல முடியும்.
ஆழ்ந்த வாசிப்பு தரும் அமைதி அது.
மணிகண்டன், சந்திக்கலாம்.
-பொன்.வாசுதேவன்
:-) அருமை!
gud post
regards
www.hayyram.blogspot.com
நல்லா எழுதியிருக்கிங்க உங்கள் மனதை படிக்க முடிகிறது தலைவரே ..................
nice post thanks for sharing
புரிந்துகொண்டீர்கள்
Post a Comment