Jan 26, 2010

கோவை சந்திப்பு- ஜெயமோகன்: சில விமர்சனங்கள்

கோவை ஞானியுடன் ஜெயமோகன்

ஜெயமோகன் மீது வைக்கப்படுவதாக நான் கோவை வாசகர் சந்திப்பில் குறிப்பிட்ட விமர்சனங்களின் தொடர்ச்சியாக ஜெ வுடன் நிகழ்த்திய மின்னஞ்சல் பரிமாற்றங்களின் தொகுப்பு.

===============
டியர் சார்,

வணக்கம். நாகர்கோயிலை அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களை சனிக்கிழமையன்று கோவையில் சந்தித்தது மிகுந்த சந்தோஷமும் உற்சாகமும் அளிப்பதாக இருந்தது. குறிப்பாக ஹோட்டல் அறையில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அமெரிக்க தேசத்தில் இருந்து உருவாகி வந்திருக்கும் விமர்சனக் கோட்பாடுகள், நகுலனின் 'ராமச்சந்திரன்' கவிதையில் அமெரிக்க விமர்சன சாராம்சத்தோடு சு.ரா கொண்டிருந்த பார்வை, நாவல் உள்ளிட்ட இலக்கிய படைப்புகளின் வடிவம், யுவனின் மணற்கேணி வாசகனுக்குள் உருவாக்கும் சித்திரங்கள், கவிதையின் வடிவத்தில் நாம் இன்று அடைந்திருக்கும் புள்ளியியை நோக்கிய இரண்டாயிரம் ஆண்டுக்கான பயணம், சுகுமாரன் தமிழ்க் கவிதை வெளிக்குள் நிகழ்த்திய பிரவேசம், Abstract ஆன புரிதல் போன்றவற்றை குறித்து நீங்கள் பேசியவற்றை உரையாடலின் சுவாரசியமான பகுதிகளாக உணர்ந்தேன்.

அந்தச் சமயத்தில் உங்களின் மீதாக வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்கள் பற்றிக் குறிப்பிட்ட என் பேச்சின் தொடர்ச்சியாக எனக்குள் இருந்த சில வினாக்களை அறையிலேயே கேட்டிருக்க வேண்டும் என பிறகு தோன்றியது. அவற்றை பின்னர் நிகழ்ந்த வாசகர் சந்திப்பில் தவிர்த்திருக்கலாமோ என்றும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

உங்களின் மீதான எதிர்மறை விமர்சனங்களாக இலக்கியப்பரப்பில் வைக்கப்படுபவைகளில் நான் வாசகர் சந்திப்பில் குறிப்பிட்டவை:

1. ஜெயமோகன் தன் படைப்புகள் மீதான எந்த விதமான பரிச்சயமும் இல்லாத இணைய வாசர்களுக்காகவும் Compromise செய்து கொண்டு தனக்கான ஒரு பீடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

2. தன்னோடு இருப்பவர்கள் வாசகனாக இருப்பதை விரும்பும் ஜெ.மோ அவன் எழுத்தாளனாக விரும்புவதில்லை.

3. முந்தைய விமர்சனத்திற்கான துணை விமர்சனம். சமீபத்தில் வந்திருந்த இணையக் கட்டுரையிலிருந்து- ஜெயமோகன் புதிய தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்காமல், தனக்கு உவப்பானவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்துபவர்.

இத்தகைய விமர்சனங்களை நீங்கள் எப்படி எதிர்க்கொள்கிறீர்கள், இவை உங்களின் படைப்பூக்கத்தில் குறுக்கிடுகின்றனவா, இந்த மூன்று விமர்சனங்களுக்கு நீங்கள் பதில் அளிப்பதாக இருந்தால் என்ன சொல்வீர்கள். இதுதான் நான் பேசியது.

இதைச் சொல்லி முடிக்கும் போது பின்வரிசையில் நின்று கொண்டிருந்த என்னை முன்னால் அமர்ந்திருந்த சிலர் திரும்பி பார்த்த விதத்தில் கொஞ்சம் தடுமாறினேன். அடுத்த கணம் கோவை ஞானி அவர்கள் எழுந்து இந்த வினாக்கள் இலக்கியச் சூழலில் இருபது வருடங்களாக எழுப்படுபவை என்றும், இவை குழாயடிச் சண்டையின் நீட்சி என்றும், தாங்கள் இவற்றிற்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை என்ற போது திடுக்கிடலாக இருந்தது.

ஞானியோ அல்லது வேறு எவரோ அந்த இடத்தில் எழுவார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு இலக்கியக் கூட்டத்தில் வெட்டிப்பிரச்சினை செய்ய வந்திருக்கும் ஒரு இளைஞன் என்றே என்னைப் பற்றிய பிம்பம் உருவாகியிருக்கும் என்று மனம் யோசிக்கத் துவங்கிவிட்டது. நீங்கள் பதில் சொல்ல ஆரம்பித்திருந்தீர்கள். ஞானிக்கு என் நிலையை தெளிவாக்க அடுத்த முறை என்ன பேச வேண்டும் என்று மூளை வார்த்தைகளைப் பின்னிக் கொண்டிருந்ததால் உங்களின் பதிலை முழுமையாக உள்வாங்க முடியவில்லை.

வேறு ஒருவர் குறுக்கிட்டிருந்தால் அத்தனை சலனம் அடைந்திருக்க மாட்டேன் என்று என்னால் சொல்ல முடியும். ஞானி என்னும் ஆளுமை பற்றி நான் வாசிக்கத் துவங்கிய கட்டத்தில் இருந்து உருவாக்கியிருந்த பிம்பம் பிரம்மாண்டமானது. அத்தகைய ஒரு ஆளுமை நான் பேசியதற்கு எதிர்வினையாற்றுவதை எப்படி எதிர்கொள்வது என்பதை திட்டமிட வேண்டிய கட்டாயத்திற்கு அடுத்த இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு தள்ளப்பட்டேன். அவை பதட்டமான நிமிடங்களாகவே எனக்குள் பதிந்திருக்கிறது.

எனது நோக்கம் வேறானது. இத்தகைய விமர்சனங்கள் உங்களை காயப்படுத்துகிறதா என்பதையும், அவற்றை எதிர்கொள்ளும் போது எப்படி கடந்து வருகிறீர்கள் என்பதையும் அறிய விரும்பும் நான் இத்தகைய கேள்விகளை மற்ற அனைத்து எழுத்தாளர்களிடமும் எழுப்பப் போவதில்லை. மிக விருப்பமான எழுத்தாளர்களிடம் மட்டுமே இந்த எதிர்மறை விமர்சனங்களை என்னால் நேரடி பேச்சில் முன் வைத்திருக்க முடியும். நாம் முன்னோடிகளாக கருதுபவர்கள், தங்களின் மீதான பல்வேறுவிதமான விமர்சனங்களையும் எப்படி தாண்டி வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் இருக்கும் எளிய ஆர்வத்தில் உருவாகும் வினாக்கள் அவை.

தமிழ் இலக்கியப் பரப்பில் தற்கால விமர்சன முறைகளின் அவலச் சூழல் பற்றி நாஞ்சில் நாடன் அவர்கள் குறிப்பிட்ட செய்திகளின் தொடர்ச்சியாகவும் என் பேச்சை அமைத்துக் கொள்ள நான் முயன்றதன் விளைவே எனக்குள் உருவான இந்த பதட்டத்தின் துவக்கப்புள்ளி.

நன்றி.

அன்புடன்,
வா.மணிகண்டன்.
=======
அன்புள்ள மணிகண்டன்,

இந்த வாதங்கள் மட்டுமல்ல இத்தகைய எந்த வாதங்களுமே என்னை பாதிப்பதில்லை. நான் உங்களிடம் மட்டுமல்ல அத்தனை நண்பர்களிடமும் கோருவதே அப்படி பாதிக்க அனுமதிக்காதீர்கள், பாதிப்பதை தடுக்க முடியவில்லை என்றால் முழுமையாக ஒதுங்கிவிடுங்கள், படிக்கவே படிக்காதீர்கள் என்பதே. சில்லறை விவாதங்கள் அளவுக்கு புனைவுத்திறனை பாதிக்கும் விஷயம் வேறில்லை. அதற்கு அடுத்ததாக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது சில்லறை விஷயங்கள் நம் படைப்பில் கண்டு பாராட்டப்படுவது.

இந்தக் குற்றச்சாட்டுகளையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் தமிழில் கடந்த 20 ஆண்டுகளாக தீவிரமாக விமர்சனங்கள் செய்துவருகிறேன். நேர்மையான ஒரு விமரிசகன் ஒரு படைப்பை நல்லது என்றால் அதன் வழியாக நூறு படைப்புகளை நிராகரிக்கிறான். அந்த நூறு பேருக்கும் மனக்கசப்பை அளிக்கிறான். அதிலும் நான் மிகக்கூர்மையாக, கறாராகச் சொல்பவன். அப்படியானால் எத்தனை கசப்பு இருக்க வேண்டும்? அந்தக் கசப்பு என் மீது இருப்பதில் ஆச்சரியமே இல்லை.

விமரிசகன் ஒருவன் புனைகதைகளும் எழுதினான் என்றால் அது இன்னமும் சிக்கலானது. அந்த நூறுபேரும் வன்மத்துடன் பாய்வதற்காக அவன் தன் கதைகளை திறந்து வைக்கிறான் அல்லவா? அதை நான் இருபதாண்டுக்காலமாகச் செய்து வருகிறேன். அது ஒரு வெல்விளி.

அப்படி இருந்தும் என் படைப்புகளைப்பற்றி இன்று வரை ஆணித்தரமான மறுப்புகள் அல்லது நிராகரிப்புகள் எத்தனை வந்துள்ளன? போகிறபோக்கில் மேலோட்டமாக ஏதாவது சொல்வார்கள். சொல்பவனின் தகுதியின்மைக்குச் சான்றாக அந்த வரிகள் இருந்துக்கொண்டிருக்கின்றன. அல்லது சில்லறை பிழைகண்டுபிடிப்புகள் -- அப்போதுகூட உருப்படியான பிழைகள் ஏதும் இன்றுவரை சுட்டப்பட்டதில்லை.

இது எனக்கு நானே வைத்துக்கொண்ட அறைகூவல், சோதனை. என்னை நானே தாண்டிச்செல்வதற்கான முயற்சி. தமிழ் அறிவியக்கத்தின் பெருபகுதியை எனக்கு எதிரான சக்தியாக நிறுத்திக்கொண்டு இந்த முரணியக்கத்தை நிகழ்த்துகிறேன். இதில் இக்கணம் வரை நான் மிக தூரத்தில் முன்னகர்ந்துகொண்டுதான் இருக்கிறேன் .இது புதுமைப்பித்தனும் தனக்கு விட்டுக்கொண்ட அறைகூவல்தான்.

இதையே இந்தக் கிசுகிசுக்கள் குறித்தும். இத்தனை எழுதும் ஓர் எழுத்தாள- விமர்சகனைப் பற்றி இத்தனை மேலோட்டமாக, ஆதாரமில்லாத சில விஷயங்களை கிசுகிசுக்க மட்டுமே முடிகிறதென்றால் அது எத்தனை பெரிய சான்று இல்லையா? உண்மையில் இவ்வரிகள் அளித்த மன எழுச்சியும் தன்னம்பிக்கையும் சாதாரணமானதல்ல.

இத்தகைய ஒரு தொடர் செயல்பாட்டில் பிழைகள் கண்டிப்பாக நிகழக்கூடும். கவனமின்மை காரணமாக பாரபட்சங்கள் நிகழக்கூடும். ஆனால் என் கடுமையான விமரிசகர்கள்கூட இத்தனை அபத்தமாக சிலவற்றை மட்டுமே சொல்லமுடிகிறது என்பது அதிகமாக ஏதும் பிழை நிகழவில்லை என்பதற்கான நற்சான்றிதழ்.

1. இந்த இணையதளத்தில் என்ன சமரசம் செய்துகொண்டிருக்கிறேன் என்பதை இதை வாசிக்கும் எவருமே மதிப்பிடலாம். என் எழுத்துக்கான எனக்கான தளம் இது. இதில் என் விருப்பப்படி எனக்கான வாசகர்களுக்காக மட்டுமே எழுதுவேன் என்று அறிவித்து இந்த இணையதளத்தை தொடக்கம் முதல் நடத்தி வருகிறேன். சென்ற இருவருடங்களில் வந்த பல மிகக் கனமான நூல்கள் அனைத்தும் இந்த இணையதளத்தில் வெளிவந்தவை. 'ஈழ இலக்கியம் ஒரு பார்வை' 'இந்தியஞானம்' 'புதியகாலம்' போன்று பல. இந்நூல்களை விட தரமான, கனமான எந்த நூல்கள் சென்ற இருவருடங்களில் தமிழில் வெளிவந்துள்ளன?

நான் இன்றுவரை எழுதிய விஷயங்களின் உச்சநிலை வெளிப்பாடுகள் பல இந்த இணையதளத்திலேயே வந்துகொண்டிருக்கின்றன கீதைமுதல் இன்றைய காந்தி. இவ்விமரிசனங்களைச் சொல்பவர்களில் எத்தனைபேரால் இவற்றை சாதாரணமாக வாசிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியும் என்றே எனக்கு தெரியவில்லை. இது எதையுமே படிக்காமல், புரிந்துகொள்ள முடியாமல் செய்யப்படும் ஒரு குத்து மதிப்பான பேச்சு மட்டுமே

பீடத்தை உருவாக்க இந்த இணையதளத்தை நான் நடத்துகிறேன் என்பதையும் இதன் பக்கங்களை வைத்தே மதிப்பிடலாம். இந்த இணையதளம் வாசகர்களை 'தாஜா' செய்து திரட்டுவதில்லை. அவர்களை சீண்டுகிறது, உடைக்கிறது, சோதிக்கிறது. இதில் ஏதேனும் ஒரு விஷயத்தால் சீண்டப்படாமல் எத்தனை வாசகர்கள் இதை வாசித்திருப்பார்கள் என்று சிந்தித்துப்பாருங்கள் -- நீங்கள் உட்பட. இது விவாதிக்கவே அறைகூவுகிறது

அதை மீறி 'பீடம்' உருவானால் அது காலம் கலைஞனுக்கு அளிக்கும் பீடம். அவனுக்குரிய பீடம் அது. உலகெமெங்கும் கலைஞர்கல் அமர்ந்திருக்கும் பீடம். அந்த பீடத்தின் முன் பிறர் தலைவணங்கித்தான் ஆகவேண்டும். முடியாதவர் மூலையில் அமர்ந்து பொருமவும் செய்யலாம்


2 நான் இன்றுவரை எந்தெந்த ஆக்கங்களை பற்றி பேசியிருக்கிறேன் என்று ஒரு பட்டியல் போட்டு அதில் எவர் என் நண்பர்களாக இருந்து எழுத ஆரம்பித்ததும் என்னால் விலக்கப்பட்டவர்கள் என்று சொல்லி நிரூபிக்க வேண்டிய விஷயம் அல்லவா இது? அப்படி ஒரே ஒருவரைப் பற்றி சொல்லட்டும் .

சமீபத்தில் நான் எழுதிய கட்டுரைகளை பார்ப்போம். யுவன் சந்திரசேகர், எம்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் என் நண்பர்களாக இருந்து எழுத வந்து இன்றும் நண்பர்களாக நீடிப்பவர்கள். இப்படி குறைந்தது 10 பேரையாவது சொல்லமுடியும். இவர்களில் பலருக்கு அவர்களின் ஆரம்பகால எழுத்துக்களை வடிவமைக்க, பிரசுரிக்க நான்தான் உதவிசெய்திருப்பேன்.

அதேபோல சு.வெங்கடேசன் போன்றவர்கள் என் மிகப்பரிய எதிரிகளாக அறியப்பட்டவர்கள். அப்படி பேசியவர்கள், எழுதியவர்கள். பேசி எழுதி வருபவர்கள். அது அவர்களின் அரசியல்நிலைபாடு. கண்மணி குணசேகரன், ஜோ.டி.குரூஸ் போன்றவர்கள் எனக்கு அறிமுகமே இல்லாதவர்கள். இவர்களைப்பற்றி நான் எழுத இவர்களின் படைப்புகள் என்னைக் கவர்ந்ததே காரணம். அதேசமயம் எனக்கு தெரிந்தவர் என்பதற்காக என்னைக் கவராத ஒரு ஆக்கத்தை ஒருபோதும் நான் நன்று என்று சொல்வதில்லை.

காரணம் எனக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். யாருமே வாசிக்காமல் ஒரு முன்னுரை, மதிப்புரை எழுதிவிட்டுச் செல்பவன் அல்ல நான். உடனடியாக சிலநூறு எதிர்வினைகள் எனக்கு வரும். அந்த வாசகர்கள் என் நேர்மையை, ரசனையை நம்புகிறார்கள். அவர்களுக்கு நான் கடமைப்பட்டவன்.


3. எனக்கு 'உவப்பானவர்களை' தானே நான் எழுதமுடியும்? இலக்கியம் வழியாக, எழுத்து வழியாக உவப்பானவர்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு 'உவப்பற்ற'வர்கள் என்னை கடுமையாக எழுதியவர்கள் தரமான ஆக்கங்களைக் கொடுத்தபோது அவர்களின் ஆக்கங்களை முதன்முதலில் எடுத்து அறிமுகம் செய்து முன்வைப்பவனாகவே இக்கணம் வரை இருந்திருக்கிறேன். ஷோபா சக்தியோ, சு வெங்கடேசனோ இல்லை என்று சொல்லட்டும் பார்ப்போமே... இன்றைக்கு எனக்கு உவப்பில்லாமல் இருப்பவர்கள், என்னை உவக்காதவர்கள் ஒரே ஒரு நல்ல ஆக்கத்தை எழுதி நான் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன் என்றால் அவர்கள் அதை சுட்டிக்காட்டலாமே

இந்த ஒட்டுமொத்த விவாதத்தையே இப்படிச் குறுக்கலாம். தமிழில் வெளிவந்த எந்த நல்ல ஆக்கத்தை நான் தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டும் புறக்கணித்திருக்கிறேன்? எந்த மோசமான ஆக்கத்தை தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டும் தூக்கிப்பிடித்திருக்கிறேன்? இவர்கள் அதை எடுத்துச் சொல்லி, அதற்கான காரண காரியங்களை விளக்கி எழுதலாமே. அதற்கு நான் பதில் சொல்கிறேன். அதுதானே இலக்கிய விவாதத்தின் வழி?

என் ரசனை மிக வெளிப்படையானது. காரணகாரியங்களை விரிவாகச் சொல்லாமல் ஒரு படைப்பைக்கூட நான் விமரிசித்ததில்லை. அந்த காரண காரியங்களுக்கு ஒரு தெளிவான தொடர்ச்சி உண்டு. அதன் வழியாக துலக்கமாக தெரியும் என்னுடைய பார்வை ஒன்று உண்டு. அந்தப்பார்வை சீரானது. அதில் முரண்பாடிருந்தால் சுட்டிக்காட்டலாம். அதற்காகவே அவை பிரசுரிக்கப்படுகின்றன. மனம் போன போக்கில் ஒன்றை சொல்லவும் முடியாது விடவும் முடியாது. நான் சொன்ன பல்லாயிரம் வாசகர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

*
நீங்கள் கோவை அரங்கில் அக்கேள்விகளை அரங்கில் கேட்டதில் தவறில்லை. அது தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய விஷயம். ஆனால் ஞானி பொறுமை இழந்ததிலும் காரணம் உள்ளது. இருபது வருடங்களாக இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் -- வேறு வேறு எழுத்தாளர்கள். இதற்கு விரிவாக திட்டவட்டமாக மீண்டும் மீண்டும் பதில் சொல்லப்பட்ட பிறகும் புதிய குரல்கள் கிளம்பிவருகின்றன. ஒரு ஆதாரம் கூட காட்டாமல் இதையே சொல்கிறார்கள். அதை ஞானியும் இருபதாண்டுகளாக, நிகழ் நடந்த காலம் முதல், கண்டுவருகிறார்.

பலரது முயற்சியால் பல வருடங்கள் கழித்து ஒரு கூட்டம் நிகழும்போதும் இதையேதான் பேசவேண்டுமா என்றுதான் அவர் கேட்டார். நான் எழுதிய இத்தனை பெரிய நாவல்கள் இருக்கின்றன, இத்தனை கதைகளும் கோட்பாடுகளும் என்னால் எழுதப்பட்டிருக்கின்றன, அவற்றைப்பற்றி பேச்சே இல்லாமல் மீண்டும் வம்புகளைத் தவிர எதையுமே என்னிடம் கேட்பதற்கில்லையா என்றுதான் அவர் சினம் கொண்டார்.

அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கும் விஷயம் இதுவே. மிக கோபமாகக் கூட சொல்லியிருக்கிறார். 'நீங்கள் இந்த வம்புகளின் தளத்தைவிட்டு விஷ்ணுபுரம் வழியாக வெளியே போய்விட்டீர்கள். கொற்றவை வழியாக முற்றிலும் புதிய இடத்துக்கு சென்றுவிட்டீர்கள். அங்கே வரக்கூடியவர்களை தவிர எவருமே உங்களிடம் பேச தகுதியற்றவர்கள். மற்றவர்களை புறக்கணித்துவிடுங்கள். பதில் சொல்லாதீர்கள்' என்று அவர் எனக்கு பலமுறை ஆணையிட்டிருக்கிறார். அந்த ஆணையைத்தான் அங்கேயும் சொன்னார். அது என் ஆசானின் ஆணை. ஆனால் அதை முழுமையாக நிறைவேற்ற என்னால் இயலவில்லை. ஆகவே தான் மீண்டும் இப்பதில்கள்

ஜெ
=====
டியர் சார்,

ஒரு நீண்ட பதிலுக்கு நன்றி.

ஜெயமோகனை விஷ்ணுபுரம் வழியாகவோ அல்லது கொற்றவை வழியாகவோதான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். தமிழின் சிறந்த படைப்பாளி ஒருவரை வேறு முறைகளில் எதிர்கொள்ளுதல் வெற்று அரசியலாகிவிடலாம்.

ஆனால் வெறும் இலக்கிய படைப்பு சார்ந்த செயல்பாடுகளில் மட்டும் நீங்கள் இயங்குவதில்லை. மத ரீதியான விவாதங்களை நீங்கள் முன்னெடுக்கிறீர்கள், இலக்கிய அரசியல் பற்றி தொடர்ந்து பேசி வருகிறீர்கள். சித்த மருத்துவம் தொடங்கி இந்திய தத்துவ மரபியல் வரை பல்வேறு தளம் சார்ந்த இயக்கத்தில் இருக்கும் ஒருவரை அவரின் படைப்புகளை முன்வைத்து மட்டுமே எதிர்கொள்வது என்பது சாதாரண வாசகன் ஒருவனுக்கு சாத்தியமா?

வெறும் அச்சு ஊடகம் மட்டுமே இருந்த சமயத்தில் தீவிர இலக்கியத்தில் இயங்கும் படைப்பாளியை நோக்கி தொடர்ந்த வாசிப்பு பயிற்சியின் மூலமாகவே வாசகன் ஒருவன் வர முடியும். அப்படி வாசிப்பனுபவம் நிறைந்த ஒருவன் படைப்பாளியை நோக்கி வெற்று விமர்சனங்களை வைக்கும் போது அவை உருப்படியில்லாதவை என்று நிராகரிக்கலாம்.

ஆனால் வாசிப்பு என்பதே சிறிதும் இல்லாத மிக மிகச் சாதாரணமான வாசகர்கள் உலவும் தளமாகவே இணையத்தை பார்க்கிறேன். விகடன், குமுதத்தில் படித்தவைகளை மட்டுமே வைத்துக் கொண்டு, தொலைதூர பஸ்ஸில் சே பற்றியும், கம்யூனிஸம் பற்றியும் உரத்த குரலில் பேசும் நபர்களை சந்திக்கும் அதே அனுபவம் தானே இணையத்தில் ஒரு தீவிரமான விஷயத்தை எழுதும் ஒவ்வொரு முறையும் நேர்ந்து கொண்டிருக்கிறது. இவர்கள் போகிற போக்கில் எந்தவிதமான விமர்சனத்தையும் ஒரு மின்னஞ்சலில் தட்டி விடுகிறார்கள். இந்த மாதிரியான வெற்று வார்த்தைகளுக்கு பதில் அளிக்கும் போது அவர்களை நீங்கள் நிராகரிப்பது இல்லை என்று ஆகிவிடுகிறது அல்லவா.

மூன்றாவதாக நான் சொன்ன வாதம் ஒரு பைசாவுக்கு பிரையோஜனமில்லாத விமர்சனக்கட்டுரையிலிருந்துதான் உருவினேன். ஆனால் அதையும் நான் குறிப்பிடக் காரணம், புத்தகக் கண்காட்சி சமயத்தில், ட்விட்டர் போன்ற தளங்களில் எழுதியவர்கள் நீங்கள் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை பற்றி திடீரென பேசுகிறீர்கள் என்று எழுதியதை கவனிக்க முடிந்தது. தமிழினியில் எழுதும் எழுத்தாளர்களின் புத்தகங்களை முன்னிலைப்படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டுதானே.

என் கேள்விகளின் சாரம்- விமர்சனங்கள் வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு காலகட்டத்தில் உங்கள் மீது சுமத்தப்படுகின்றன.அந்த விமர்சனங்களை நிராகரிப்பது பற்றியோ அல்லது உங்களிடம் அதற்கு பதில் இருப்பின் அவற்றை பெற்றுவிடுவதான முயற்சி.

பீடம் என்பது பற்றிய உங்களின் கருத்து பற்றி- ஒரு கலைஞனுக்கு எதற்காக பீடம் தேவைப்படுகிறது. பீடத்தில் இருக்க வேண்டியது படைப்பு மட்டுந்தானே. வாசகன் கைக்கு இலக்கிய பிரதி செல்லும் கணத்தில் இருந்து படைப்பாளி உதிர்ந்துவிடுகிறான் இல்லையா? படைப்பு தரும் குவியம் மட்டுந்தானே வாசகனுக்கு முக்கியம். பிறகு ஏன் கலைஞன் பீடத்தில் அமர்த்தப்பட்டு அவன் முன்னால் மற்றவர்கள் தலை வணங்க வேண்டும்? அதை நோக்கி நடப்பது எழுத்தாளனின் விருப்பமாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா?

நன்றி.

அன்புடன்,
மணி
=====
அன்புள்ள மணிகண்டன்,

ஞானி அவரே தமிழியம் குறித்தும் மார்க்ஸியம் குறித்தும் கேட்டார் அல்லவா? அவர் சொன்னது இலக்கியம், பண்பாட்டு சார்ந்த விவாதங்கள் தேவை என்று மட்டுமே. அவை வெறும் அக்கப்போர் அலசலாக ஆகிவிடக்கூடாது என்றுதான். அது பலசமயம் உண்மையான விவாதங்களை இல்லாமலாக்கிவிடுகிறதல்லவா?
இணையத்திலும் பிறவற்றிலும் வெறும் வம்புகள் அதிகமாக விவாதிக்கப்படுகின்றன என்பது உண்மை. அவற்றுக்கு உரிய சுருக்கமான பதில்களை நான் சொல்வதுமுண்டு. காரணம் அவை இளம் வாசகனை வழிதிருப்பிவிட்டுவிடக்கூடாது என்பதனாலேயே. ஆனால் ஒருபோதும் அவற்றுடன் விரிவாக விவாதிப்பதில்லை. அந்த விவாதங்களுக்கு முடிவே இல்லை. பொறாமை, அரைகுறைவாசிப்பு, அரசியல் காழ்ப்புகள், மத-இன மாச்சரியங்களால் வரும் வம்புகளை ஒருபோதும் விவாதித்து வெல்ல இயலாது. அவற்றை உதாசீனம் செய்தே ஆகவேண்டும். நீங்களும் கூட அதைத்தான் செய்யப்போகிறீர்கள்.

யார் வேண்டுமானாலும் எதையும் விமரிசனம் செய்யலாம். நிராகரிக்கலாம். ஆனால் கொஞ்சம் நுண்ணுணர்வுள்ள வாசகன் உடனே கேட்க வேண்டிய கேள்வி 'சரி நீ யார்?' என்பதே. நீ என்ன வாசித்திருக்கிறாய், என்ன எழுதியிருக்கிறாய், அவற்றின் தரம் என்ன என்பதே. அந்த ஒரு கேள்வியே முக்கால்வாசி வம்புகளை சுருங்கச்செய்துவிடும்.

'பீடம்' என்பது என் சொல்லாட்சி அல்ல. அது பிறர் சொல்வது. அதற்கான பதில்தான் நான் சொன்னது. ஆனால் ஒரு கவிஞனாக நின்று யோசித்துப் பாருங்கள். மானுட வரலாற்றில் இன்று வரை எங்காவது படைப்பாளி இல்லாமல் பிரதி மட்டுமே 'பீட'த்தில் அமர்ந்திருக்கிறதா? உலகமெங்கும் இன்றும் மீளமீளப் பேசப்படுவது படைப்பாளிகளைப்பற்றியே. சொல்லப்போனால் சிந்தனையாலார்களைவிட, அரசியலாளார்களை விட, தலைவர்களைவிட இலக்கியவாதிகளைப்பற்றியே மானுடம் பேசிக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் அதன்வழியாகவே அது தன்னை உருவாக்கி நீட்டித்துக்கொள்ள முடியும்.

படைப்பாளி யாரென தெரியாதபோது கூட அவனை உருவகித்துக்கொள்கிறது மானுட மனம். ஏனென்றால் மானுடத்திற்கு படைப்புகள் தேவை. படைப்புகள் என்பவை படைப்பாளியின் குரல்கள், அவன் ஆத்மா. படைப்பாளியிடமிருந்து படைப்பை பிரித்தே பார்க்க முடியாது. அது சாத்தியமே அல்ல. ஒரு கட்டத்தில் படைப்பாளி அவன் எழுதியவற்றின் குறியீடாக ஆவான். அவனே அவன் ஆக்கத்தின் பிரதிநிதியாக வரலாற்றில் நிற்பான்.

அதை இலக்கியவாதி இலக்காக கொள்ளலாமா, அது தேவையா, அது நல்லதா என்பதெல்லாம் விவாதமே அல்ல. அது மட்டுமே நடக்கும் அதுவே விதி என்பதே உண்மை.

சென்ற காலத்தில் படைப்பை படைப்பாளியின் ஆளுமையில் இருந்து பிரித்து ஒரு மொழிக்கட்டுமானமாக அணுகும் முறை மேல்நாட்டில் எழுந்தது. அது படைப்பு மட்டுமே முக்கியம் என்றது. காரணம் அதற்கு முன்னால் படைப்பாளியை அக்குவேறு ஆணிவேறாகக் கழட்டிப்போடும் விமரிசனமுறைகள் கோலோச்சின என்பதே. மேல்நாட்டில் ஓர் இயக்கத்துக்கு எதிர்வினையாக அடுத்த இயக்கம் உருவாவது வழக்கம்.

இங்கே சில விமரிசகர்கள், படைப்பியக்கத்தை புரிந்துகொள்ளவோ ஒரு நல்ல படைப்பை வாசிக்கவோ திராணியில்லாத சிலர், அந்தக்கொள்கைகளை அரைகுறையாகக் கொண்டுவந்து இறக்கி படைப்பாளியையும் படைப்பியக்கத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க அதைப் பயன்படுத்தினார்கள். தமிழகத்தில் எப்போதுமே படைப்பியக்கத்துக்கு எதிரான அரைவேக்காட்டுப் பண்டிதக்குரல் உண்டு. அந்தக்குரலின் எதிரொலிகள் இப்போதும் உள்ளன. அதுவே உங்கள் குரலிலும் உள்ளது
எங்கும் எந்த இடத்திலும் இக்கணம் வரை இலக்கியப்படைப்பாளியின் முக்கித்த்துவம் குறையவில்லை என்பதை நினைவில் வையுங்கள். அந்த விமரிசனமுறைகள்தான் காலாவதியாகியுள்ளன. ஏனென்றால் இது மானுடனின் அடிப்படை மனநிலை. எது முப்பது குடும்பங்கள் கொண்ட ஒரு சாதாரணப் பழங்குடிச் சமூகத்தில்கூட குலப்பாடகனை உருவாக்குகிறதோ அந்த அம்சமே இன்றும் இலக்கியவாதியை உருவாக்குகிறது.

ஒரு குலம், ஒரு சமூகம் அதன் கலைஞர்களின் மொழியால்தான் தொகுக்கப்படுகிறது. நினைவில் நீட்டிக்கப்படுகிறது. மனிதர்கள் பிறந்தி இறப்பா¡ர்கள், சமூகம் தொடர்ந்து செல்லும். அது நிகழ்வது மொழி வழியாக, மொழியில் இயங்கும் கலைஞர்கள் வழியாக. ஆகவேதான் அச்சமூகம் அவனுக்குரிய மதிப்பை அளிக்கிறது, அளித்தாகவேண்டும்.

அந்த போதம் உங்களுள் இருக்கும் வரைத்தான் நீங்கள் நான் கவிஞன் என்று நிமிர்ந்து நின்று சொல்லமுடியும். அப்படித்தான் பாரதி 'தமிழ்ச்சாதிக்கு நாம் கவிஞன்' என்றான். 'கேளடா மானுடா' என்று பாடினான். அந்த உணர்வை விமரிசகர்களின் முதிர்ச்சி இல்லாதக் சொற்களை நம்பி இழக்க வேண்டாம் என்றுமட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

'நான் சொல்வதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும், ஏனென்றால் நான் ஒரு குலப்பாடகன் [பார்ட்]' என்றார் ராபர்ட் ·ப்ரோஸ்ட். அதன்பின் உள்ளது அந்த சுயப்பிரக்ஞைதான்.

ஜெ
===============

Jan 21, 2010

இந்தக் குடிசையில் ஆறாவது வருடம்


இந்த பேட்டையில் குடிசை போட்டு ஐந்து வருடம் முடிகிறது.ஏன் வந்தேன் எப்படி வந்தேன் என்றெல்லாம் ஜல்லியடிக்காமல்,நேரடியாகச் சொன்னால் எழுத வந்ததில் இருந்து சிறு இடைவெளிகள் தவிர்த்து ஐந்து வருடங்களும் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். மொத்தமாக 280 பதிவுகள்.

இடைப்பட்ட காலம் வரையிலும் எழுத்துக்கள் முதிர்ச்சியும் பக்குவமுமில்லாமல் எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. இன்றைக்கு நான் எழுதிக் கொண்டிருப்பவையும் பக்குவப்பட்ட எழுத்துக்கள்தானா என்பதை என் பார்வையில் இருந்து கணிக்க முடியவில்லை என்றாலும், முன்பு எழுதியவையோடு ஒப்பிடும் போது இப்போதைய சரக்கு தேவலாம் ரகம்.

தலைக்கனம் வராமல் எழுத வேண்டும் என்றுதான் முயற்சித்திருக்கிறேன்.ஆனால் பல கட்டுரைகளில் '___'த்தனம் எட்டிப்பார்த்திருக்கிறது என்பது வெட்கமாக இருக்கிறது.

எழுத்து என்பதும் பயிற்சிதான். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் போது அதன் ஓட்டம் உருமாறி சீரான திசையில் நகர்வதை கவனிக்க முடியும்.நான் மேற்கொண்டிருக்கும் இந்தப் பயிற்சிக்கு 'பேசலாம்' பெரிதும் உதவியிருக்கிறது.

தொடக்க காலத்தில் வலைப்பதிவிற்கு எத்தனை பேர் வருகிறார்கள், வாசிக்கிறார்கள் என்பதனை கவனித்து வந்தேன். இடையில் இந்த எண்ணிக்கையின் மீது கவனம் இல்லாமல் போனது. சமீபத்தில் மீண்டும் கணக்குப்பார்க்கத் தோன்றியபோது ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. தேடுபொறிகளில் தேடுபவர்களுக்கு அனுஷ்கா,ஸ்ரேயா,சார்மி ஆகியோரின் படங்களும், "ஒரு நடிகையின் கதை", "காமக் கதை" என்ற குறிசொற்களும் இந்த வலைப்பதிவை காட்டிக் கொடுக்கின்றன என்பது இதைப்பற்றிய கவனமே இல்லாமல் இருந்துவிடுவது உசிதம் என்ற மனநிலையை கொடுத்திருக்கிறது.

ஆனந்தகுமார் காந்தி- இந்தப் பெயரை காமராஜர் அவருக்குச் சூட்டினாராம். அமெரிக்கவாசி. என் நண்பருக்கு நண்பர். பெங்களூரில் இருக்கும் இவரது அலுவலகம் எனது அலுவலகத்துக்கு பக்கமாக இருக்கிறது என்பதால் மாலையில் இவரை தனது வீட்டுக்கு அழைத்து வரச் சொல்லி நண்பர் சொல்லியிருந்தார். அழைத்து வரச் சொன்ன நண்பர் அலுவலகத்தில் இருந்து வந்து சேராததால் ஒரு கேரளக் கடையில் டீ குடித்துவிட்டு மொக்கை போட்டுக் கொண்டிருந்தோம்.நண்பர் வந்தவுடன் நான் கிளம்பிவிட்டேன்.

காந்தியின் மகனின் பெயர் 'மகிழன்' என்பதால், என் மகனுக்கு பெயர் தேடும் முஸ்தீபுகளில் இருக்கும் எனக்கும் நல்ல பெயர் பட்டியல் அனுப்பி வைக்கச் சொல்லி ஒரு மின்னஞ்சல் செய்தி அனுப்பினேன்.

மின்னஞ்சலில் என் பெயரை அடையாளம் கண்டவராக தான்'பேசலாம்' தளத்தை பல ஆண்டுகளாக தொடர்ந்து வாசிப்பதாகவும் உடனடியாக பேச வேண்டும் என்று பதில் அனுப்பினார். அடுத்த நாள் மாலையில் இன்னொரு டீக்கடையில் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

முகம் தெரியாத ஒரு மனிதருடன் நீண்டகால பந்தத்தை எழுத்து மூலமாக தொடர்ந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சியளித்தது. எழுதுவதை யாராவது படிக்கிறார்களா என்று சில சமயங்களில் யோசித்தாலும் எழுதிக் கொண்டேயிருக்கிறேன். அவ்வப்பொழுது நிகழும் இத்தகைய சந்தோஷமான தருணங்கள் என் சந்தேகத்திற்கு பதிலாக இருக்கின்றன.

மற்றபடி இந்தக் கட்டுரை எழுத ஆரம்பிக்கும் போது நிறைய விஷயங்களை எழுத வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவை வெட்டிவிவகாரத்துக்கு அடி போடுபவையாகவே இருக்கும் என்பதால் தவிர்த்துவிடுவதுதான் நல்லது. நிதானமாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்.

அனைவருக்கும் நன்றிகள்.

Jan 19, 2010

எம்.ஜி.ஆர் பாடிக் கொண்டிருந்தார்


அன்று எம்.ஜி.ஆரின் 93 வது பிறந்தநாள் என்பதால் ஒவ்வொரு ஊரிலும் எம்.ஜி.ஆர் ஒலிபெருக்கியில் பாடிக் கொண்டிருந்தார்.சேவூரில் 'கடலோரம் வாங்கிய காற்று'சுற்று வட்டாரத்தை அதிரச் செய்தது. அவரது படத்துக்கு மாலையிட்டு தேங்காய்,பழம் படையலிட்டு இருந்தார்கள்.

வெயில் உச்சியேறிக் கொண்டிருந்தது. பைக்கில் வேகமாக மொட்டணம் அருகில் வந்து கொண்டிருந்த போது ஒரு முதிய பெண்மணி சாலையின் ஓரமாகக் கிடந்தார்.அவரை ஏதோ ஒரு வாகனம் முட்டித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றிருக்கிறது.இரண்டு செருப்புகள், ஒரு சுருக்குப்பை சிதறியிருக்க குப்புறக் கிடக்கிறார். உடலில் அசைவுகள் இல்லை. அந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கின்றன. எல்லா வாகன ஓட்டிகளும் 'கருணை பொங்க' அந்தப் பெண்மணியின் உடல் மீது ஏறி விடாமல 'U' வடிவத்தில் வளைத்துச் செல்கிறார்கள். யாருமே இல்லாத சாலையில் இறங்கி அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தால் 'நீ தான் அடித்து இருக்கக் கூடும்' என்று பழிச் சொல் வருவதற்கான அனைத்து சாத்தியங்களும் நிரம்பிய ஆள் அரவமற்ற இடமாக அந்தப் பகுதி இருந்தது.

இதே பயம் தொற்றிக் கொள்ள நானும் 'U' வடிவத்தில் வளைத்து அந்தப் பெண்ணைக் கடந்தேன். இருநூறு மீட்டர் கடந்தவுடன் ஒரு முதியவர் சைக்கிளில் வைக்கோல் கட்டை வைத்து மிதித்துக் கொண்டு எதிரில் வந்து கொண்டிருந்தார்.அவரோடு சேர்ந்து கொண்டு அந்தப் பெண்ணுக்கு உதவினால் சிக்கல் எதிலும் நான் சிக்க வேண்டியிருக்காது என்று நம்பினேன். நான் அந்தப் பெண்ணை இடிக்கவில்லை என்பதை முதலிலேயே அவருக்கு தெளிவாக புரிய வைக்கும் நோக்கத்தில் தூரமாக நின்று கொண்டு "அந்த இடத்தில் ஒரு பெண் விழுந்து கிடக்கிறாள். அனேகமாக உள்ளூராக இருக்க வேண்டும், உங்களுக்கு யாரென்று தெரியுமா?" என்றேன். பதறியவர் அந்த இடத்தில் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு வேகமாக வந்தார்.

அவர் அந்தப் பெண்ணை நோக்கி நகரும் போதே அவசர உதவி எண் 108ஐ அழைத்தேன். இடம்,விபத்து நிகழ்ந்த நேரம் போன்றவற்றை வாங்கியவர்கள் என் பெயர்,தொலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். என்னைப் பற்றிய தகவல்களைக் கொடுப்பதற்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

நான் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போதே ஓரிருவர் அந்த இடத்தை நோக்கி அருகில் வந்தார்கள். கார் அடித்துவிட்டுச் சென்றது என்றார்கள். அவர்கள் எல்லோரும் கார் அந்தப் பெண்ணின் மீது மோதுவதை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். ஆனால் எதற்கு வம்பு என்று யாரும் வரவில்லை போலிருக்கிறது இப்பொழுது கொஞ்சம் கூட்டம் சேர்ந்தவுடன் ஓசியில் ஒரு படம் பார்க்கிறார்கள் என்று புரிந்தது.

என்னுடன் வந்த பெரியவர் குப்புறக் கிடந்த பெண்மணியின் முகத்தைத் திருப்பிப் பார்த்தார்.முகம் முழுவதுமாக உடைந்து ரத்தம் ஓடிக் கிடந்தது. முனகல் சத்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது.சத்தம் கேட்ட அந்தக் கணம் வரை அவர் இறந்துவிட்டார் என்றே நினைத்திருந்தேன்.அருகில் இருந்த வேறொரு பெண்மணியிடம் தண்ணீர் கொடுக்கச் சொன்ன போது தண்ணீர் எடுத்துவர தூரமாக நடந்து போக வேண்டும் என்றார்.காரணம் அது இல்லை. ஒரு வேளை அந்தப் பெண்மணி இறந்துவிட்டால் தண்ணீர் கொடுத்த வம்பு தனக்கு வரலாம் என்று அவர் மனதிலும் பயம் இருக்கிறது.

வைக்கோல் கட்டு பெரியவர் அந்தப் பெண்மணியை அடையாளம் கண்டவராக 'இவள் பிலியபாளையம் மூப்பச்சி' என்றார்.நல்ல கறவையாக இருந்த ஒரு எருமை மாட்டை காணவில்லை என்று நேற்று மதியத்திலிருந்து சோறு தண்ணீர் இல்லாமல் இவள் தேடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். நேற்று இரவும் முழுவதும் அவள் எருமையைத் தேடிக் கொண்டிருந்ததால், அவளைக் காணாமல் அவளது மகன் தங்கமணி மினி ஆட்டோவை எடுத்துக் கொண்டு தன் அம்மாவைக் தேடினான் என்றும், அந்த எருமை மாடு பத்தாயிரம் ரூபாய் பெறுமானமுள்ளதாக இருக்கும் என்றும் சொல்லி கூட்டம் ஒரு கிளைக்கதையை உருவாக்க வழி செய்தார்.

அவளது மகனுக்கு தகவல் கொடுத்துவிட வேண்டும் என்று முதியவரை ஏற்றிக் கொண்டு பைக்கில் அந்தப் பெண்மணியின் வீட்டுக்குப் நானும் அவரும் கிளம்பினோம். தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்ட வறண்ட பூமியில் அவளது குடிசை மட்டும் தனியாக இருந்தது. பைக்கில் ஒற்றையடிப்பாதையில் போகும் போது புழுதி கிளம்பியது. வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்தப் பெண்மணியின் வீட்டிலிருந்து ஐந்நூறு அடி தூரத்தில் இருந்த பெட்டிக் கடையிலும் எம்.ஜி.ஆர் பாடிக் கொண்டிருந்தார். அந்தக் கடையில் இருந்த பெண்மணியிடம் தகவல் சொன்னபோது எம்.ஜி.ஆரின் சப்தத்தை மீறி எங்கள் செய்தி அவர் காதில் விழவில்லை. பின்னர் சத்தமாகச் சொன்ன போது நெஞ்சை பிடித்துக் கொண்டவர் டவுனுக்குள் இருக்கும் ஆட்டோ ஸ்டேண்டில் பெண்மணியின் மகன் இருப்பார் என்றார்.

மீண்டும் பெரியவர் பைக்கின் பின்புறமாக ஏறிக் கொள்ள புழுதி கிளப்பினேன்.ஆட்டோ ஸ்டேண்டில் பெண்மணியின் மகன் இல்லை. அவனது நண்பர்களிடம் தகவல் கொடுத்துவிட்டு அவர்களையும் எங்களுடன் கிளம்பி வரச் சொன்னோம்.அந்தப் பெண்மணி கிடந்த இடம் நோக்கி வண்டியை ஓட்டிய போது அந்தப் பெண்ணைப் பற்றி இப்பொழுது என்னவெல்லாமோ தோன்றியது. பத்தாயிரம் ரூபாய்க்காக இரண்டு நாட்களாக சோறு தண்ணீர் இல்லாமல் அலையக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பதும், எந்த வசதியும் இல்லாத அந்தக் குடிசையில் இருக்கும் அவர் அந்த பணத்தை வாங்கி என்ன செய்வார் என்றும் கேள்விகளாக முளைத்தன.

அடித்து வீழ்ந்ததில் ரத்தத்தில் கசங்கிய துணியாகக் கிடக்கும் அவர் பிழைத்திருப்பாரா என்றும் ஒருவேளை இறந்திருந்தால் இறக்கும் தருவாயில் கொஞ்சம் தண்ணீராவது ஊற்றியிருப்பார்களா என்றும் தோன்றியது.

இடத்திற்கு வந்த போது உயிரோடுதான் இருந்தார். இன்னமும் ஆம்புலன்ஸ் வரவில்லை. அருகில் இருந்த ஒருவன் ஆம்புலன்ஸ்காரர்கள் உடனடியாக வரமாட்டார்கள் என்றும் கலெக்டர் அல்லது எஸ்.பி அலுவலகத்தில் அனுமதி கிடைத்த பிறகே வருவார்கள் என்றான். மீண்டும் 108 ஐ தொடர்பு கொண்ட போது, ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் ஐந்து நிமிடங்களில் இடத்திற்கு வந்துவிடும் என்றார்கள்.அவனைப் பார்த்தேன்,சும்மா சொல்கிறார்கள் என்றான்.அருகில் இருக்கும் கல்லை எடுத்து அந்த 'ஆல் இன் ஆல்' அழகுராஜாவை அடித்துவிடலாம் என்று தோன்றியது.

அந்தச் சமயத்தில் அந்தப் பெண்மணியின் மகன் இன்னொரு மினி ஆட்டோவில் வேகமாக வந்தார். நம்மை நசுக்கிவிடுவாரோ என்று கூட கூட்டத்தில் இருப்பவர்கள் சற்று அதிர்ந்தார்கள். மிக வேகமாக இறங்கி வந்தவர் முகத்தில் அதீத படபடப்பு இருந்தது. நன்றாக வியர்த்தும் இருந்தது. நேராக பெண்மணியின் அருகில் வந்தவர் ஓங்கி அவளை உதைத்தவனாக சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்துவிட்டு "செத்திருந்தா டீசலை ஊற்றி இங்கேயே கொளுத்திவிடுகிறேன்" என்றான். "எருமையை போய் இவ*****" என்றெல்லாம் அவன் சொல்லத்துவங்கிய போது தொடர்ந்து அங்கிருக்கத் தோன்றவில்லை.

அந்தப் பெண்ணை திரும்பிப் பார்த்தேன்.ரத்தம் நிற்கவில்லை,முனகல் குறைந்திருந்தது.நான் அந்த முதியவரிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

குருமந்தூர் மேட்டில் வேகமாக பைக்கில் வந்த போது எம்.ஜி.ஆர் அங்கும் பாடிக் கொண்டிருந்தார். "கடவுள் ஏன் கல்லானான்".....
நன்றி: உயிரோசை

Jan 12, 2010

சென்னையின் கலாச்சார நிகழ்வு- புத்தகக் கண்காட்சி

சென்னையின் உற்சாகமான புத்தக உற்சவம் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளின்(09-10/01/2010)உச்சபட்ச கூட்டத்தோடு இந்த ஆண்டு நிறைவுற்றது. கடந்த சில ஆண்டுகளில் இந்தத் திருவிழா சென்னையின் கலாச்சாரம் சார்ந்த செயல்பாடாக உருமாறி வருவதாக அவதானிக்கிறேன். வாசகர்கள் புத்தகங்களை கொத்து கொத்தாக அள்ளிச் செல்கிறார்கள். எந்தக் கடைக்காரரும் இந்த ஆண்டு கண்காட்சி முந்தைய ஆண்டை விட நன்றாக இருப்பதாகச் சொல்கிறார். இதையேதான் ஒவ்வொரு ஆண்டும் சொல்கிறார்கள்.
இந்த ஆண்டு புத்தகங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம் ஆகியிருக்கிறது. பதிப்பாளர்களின் முதலீடும் அதிகமாகியிருக்கிறது. ஆனால் அவர்கள் உற்சாகமாகவே இருக்கிறார்கள். ஆக ஒவ்வொரு ஆண்டும் கண்காட்சிக்கு வரும் கூட்டமும், வாசகர்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கிறது. வாசிக்கிறார்களோ இல்லையோ, வாங்குகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இணையம் வந்த பிறகு வாசகர் எழுத்தாளர் சந்திப்பு ஒரு முக்கியத்துவம் இல்லாத நிகழ்வு எனச் சிலர் சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆனால் முற்றும் நிராகரிக்க வேண்டிய கூற்று என்றே இதைச் சொல்லலாம். எழுத்துக்களால் சொல்ல முடியாத ஒன்றை நேரடியான ஐந்து நிமிட பேச்சு சொல்லிவிடும். நேரடிச் சந்திப்பில் மட்டுமே இது சாத்தியம். சந்திப்பு வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமான ஒரு திறப்பு. இந்தச் சந்திப்பிற்கான அனைத்து சாத்தியங்களையும் கண்காட்சி உருவாக்குகிறது. வாசகர்கள் தங்களின் விருப்பமான எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடுகிறார்கள். எழுத்தாளர்கள் தங்களின் சக படைப்பாளிகளோடு விவாதிக்கிறார்கள். பல நேரங்களில் 'மொக்கை'யும் போடுகிறார்கள்.

காலி டப்பாவுக்குள் நிரப்படும் அனுபவங்களாக நம் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த அனுபவங்களை எழுத்துக்களாக மாற்றி வெளியில் எடுக்கும் ஒவ்வொரு படைப்பாளியும் தான் 'குழம்பு' வைக்கும் ஸ்டைலில் ஒவ்வொரு 'flavour' ஐ உபயோகப்படுத்துகிறான். இந்த 'flavour', படைப்பாளி-வாசகன் என்ற சந்திப்பின் மூலமாக 'fine tune' செய்யப்படுகிறது என்று நினைக்கிறேன்.

நான் கவனித்த வரையிலும் கவிதைக்கென வாசகர்கள் இல்லை என்பதை மறுக்க வேண்டியிருக்கிறது. கவிதைப் புத்தகங்களை மட்டுமே தேடி வந்த சிலரை இந்தக் கண்காட்சியில் சந்திக்க முடிந்தது. இந்த இடத்தில் 'சிலர்' என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து படித்துக் கொள்ளுங்கள்.

ஆரம்பத்தில் உயிர்மையின் அரங்கிற்குள் நின்று பேசிக் கொண்டிருந்தேன். "நீங்கள் யார்?" எதிரில் நிற்பவர் வினவும் போது என்னைப் பற்றிய அறிமுகம் கொடுத்துக் கொள்வதும், அவர் நான் எழுதியவை பற்றிக் கேட்டால் என் புத்தகத்தை காட்டுவதும் சங்கடமாக இருந்ததால் கொஞ்ச நேரத்தில் வெளியே வந்துவிட்டேன். கடைக்குள் பேசியதை விடவும் கடைக்கு வெளியே நின்று புத்தகங்கள் பற்றி அதிகம் பேச முடிந்தது.

மற்றபடி கண்காட்சிக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட எழுத்தாளரின் புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற முன்முடிவோடுதான் வருகிறார்கள். அந்தப் புத்தகங்களை மட்டுமே கழுகுப் பார்வை கொண்டு தேடுகிறார்கள். புது எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்குபவர்கள் மிக அரிது. அந்தந்த புது எழுத்தாளர்களின் நண்பர்கள் சிலர் வாங்குகிறார்கள் அல்லது கடையில் யாரேனும் குறிப்பிட்ட புத்தகத்தை வாங்குதலை நியாயப்படுத்தி பேசி சம்மதிக்க வைப்பின் பிரதிகள் நகர்கின்றன.

சில புத்தகங்கள் தலைப்பிற்காக வாங்கப்பட்டாலும் விற்பனையின் விகிதாச்சார அடிப்படையில் இது மிகக் குறைவு. வாசகன் தன்னை நோக்கி தேடிவரச் செய்யும் படைப்பாளிகளின் பெயர்களை கவனிக்கும் போது தொடர்ச்சியான, ஆழ்ந்த உழைப்பின் மூலமாக தங்களின் இடத்தை உறுதிப்படுத்தியவர்களாக இருக்கிறார்கள்.

மேற்சொன்ன மூன்று பத்திகளும் உயிர்மை, காலச்சுவடு, தமிழினி, அம்ருதா, வம்சி, சந்தியா, நவீன விருட்சம் போன்ற படைப்பிலக்கிய புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்களுக்கு பொருந்தும். கவர்ச்சியான தலைப்புகளால் மேலோட்டமான எழுத்துக்களை விரும்பிப்படிக்கும் வாசகர்களை குறி வைத்து வெளியிடப்படும் புத்தகங்களை வைத்திருந்த கடைகள் பற்றிய அபிப்பிராயம் எனக்கு இல்லை.

ஒன்றுமே எழுதாமல் அல்லது ஓரிரு புத்தகங்களோடு "நானும் எழுத்தாளர் ஆகிட்டேன், நானும் எழுத்தாளர் ஆகிட்டேன்" என்று வடிவேலு பாணியில் சுற்றிக் கொண்டிருந்த சில 'எழுத்தாளர்களின்' இம்சையையும், வாதையையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுக்கு எழுத்துக்களை பற்றிய சிந்தனையோ, தன் சமகால எழுத்தாளர்களைப் பற்றி பேசவோ, இலக்கியம் சார்ந்து விவாதிக்கவோ ஒன்றும் இருக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். தங்களின் இருப்பை பிரதிபலிப்பது மட்டுமே அவர்களுக்கு குறிக்கோளாக இருந்தது. இவர்களையும், தங்களுக்கு பிறரோடு பேச ஒன்றுமே இல்லை என்ற தொனியோடு ஒரு மட்டப்பார்வை பார்த்த புத்தக விரும்பிகளையும் தவிர்த்து எனக்கு இந்த கண்காட்சியில் சந்தோஷமாக இருக்க நிறைய விஷயங்கள் இருந்தன. இந்த இரண்டு பிரிவினரையும் சேர்த்து, பிற அனைத்துமே அனுபவங்கள்தான்.

புதிய நண்பர்கள் கிடைத்தார்கள், ஏற்கனவே ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டிருந்த நண்பர்களை நேரில் சந்திக்க முடிந்தது, தீவிரமான வாசகர்களோடு நிரம்ப பேச முடிந்தது என்று அடுக்கிக் கொண்டே போவேன் என்பதால் இதோடு நிறுத்துவது உத்தமம்.

அரங்கில் காற்றோட்டத்திற்கான ஏற்பாடுகளை அடுத்த முறை பப்பாஸி கவனிக்க வேண்டும். நெருக்கித் தள்ளிய கூட்டத்தில் ஒவ்வொருவரும் அரைலிட்டர் தண்ணீரையாவது வியர்வையாக மாற்றியிருப்பார்கள். நொந்து சுழன்று கொண்டிருந்த மின்விசிறிகள் எந்த பலனையும் தரவில்லை.மழைத்தண்ணீர் உள்ளே வந்துவிடக் கூடாது என்ற கவனத்தில் அரங்கை இறுக்கமாக மூடியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால் அதற்காக ஒரே மூச்சையே பலரும் சுவாசிக்க வேண்டியிருக்கும் என்பதை நினைத்திருக்க மாட்டார்கள் போலிருக்கிறது.

உணவுப்பண்டங்களின் விலையும் அநியாயக் கொள்ளை. கண்காட்சியில் அதிகபட்ச இலாபம் தின்பண்ட கடைக்காரர்களுக்காகத் தான் இருக்கும்.

டெயில் பீஸ்:

சனிக்கிழமை மாலையில் சாருவின் அருகில் நின்று கொண்டு மனுஷ்ய புத்திரன், மனோஜ் மற்றும் நண்பர் பாஸ்கருடன் பேசிக் கொண்டிருந்தேன். சில இளைஞர்கள் சாருவிடம் 'ஆட்டோகிராப்' வாங்கினார்கள். கவனித்த போது அது ஜெயமோகனின் 'ஊமைச் செந்நாய்' என்ற புத்தகத்தில். ஒருவேளை சாரு,ஜெமோ வின் இணையதளங்களை வாசிக்காதவர்களாக இருப்பார்களோ? ச்சே..ச்சே..அப்படி இருக்க முடியாது
நன்றி: உயிரோசை.

Jan 7, 2010

நிறைகுடம் நீர் தளும்பல் இல்


கடந்த நான்கைந்து வருடங்களாகவே சென்னையில நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு சென்றுவிடுவதுண்டு. ஆரம்பத்தில் அனைத்து நாட்களும் கண்காட்சியில் இருப்பதாக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக நாட்களின் எண்ணிக்கை குறைந்து சென்ற முறை ஒரே ஒரு நாள் மட்டும் இருந்தேன்.

சென்ற ஆண்டில் நான் புது மாப்பிள்ளை. சென்னை சங்கமத்தில் கவிதை வாசித்துவிட்டு, புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். உடன் மனைவி வேறு. சென்னை சங்கமத்தில் எழுபது எண்பது கவிஞர்கள் வாசிப்பது வரை அமைதி காத்தவள், பல்லை நெருக்கிக் கொண்டு தலை வலிப்பதாகச் சொன்னாள். எத்தனை பெரிய துன்பத்தை கொடுத்திருக்கிறேன் என்பது புரிந்தது. ஒரு பெரிய துன்பத்தை ஆரம்பத்திலேயே கொடுத்துவிடும் போது அடுத்து நாம் தரும் துன்பங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்னும் நம்பிக்கையில் செய்தது அது.

கண்காட்சியில் அலைவது என்பது எனக்கு பிடித்தமான வேலையில்லை.ஒரு கடையில் நின்று கொண்டு புத்தகங்களைப் பற்றி மணிக்கணக்கில் மற்றவர்களோடு பேச வேண்டும். அவ்வளவுதான்.

சென்னையில் இருந்த சமயத்தில் உயிர்மை அலுவலகத்திற்கு சென்று வருவதால் அந்தச் சமயத்தில் உயிர்மை வெளியிடும் புத்தகங்களை உடனுக்குடன் படித்து விடுவதுண்டு. கண்காட்சியில் வருவோரிடம் வாசித்த புத்தகத்தை பற்றி பேசுவேன். அதுதான் விருப்பமும். அது வெறும் சிலாகிப்பும் விமர்சனமும் தான். பல நாட்களில் தொண்டை வறண்டு புண்ணாகியிருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் ஒரு உண்மை மட்டுமே தெளிவாக புரிகிறது. ஆழ்ந்த வாசகர்கள் மிக அமைதியானவர்கள். அவர்களை எந்த விதத்திலும் ஏமாற்ற முடிவதில்லை.மற்றவர்களால் கொண்டாடப்படும் எழுத்தாளனின் ஈர்க்காத எழுத்தை 'ச்சும்மா' என்று நிராகரிக்க தெரிந்தவர்கள். அவர்கள் அதிகம் பேசுவதில்லை. விமர்சனத்தை உரத்த குரலில் முன் வைப்பதில்லை. வெறும் அமைதியால் நிராகரிக்கிறார்கள். அதே அமைதியால் மட்டுமே எழுத்தை கொண்டாடுகிறார்கள். அவர்களை நெருங்குவது என்பது எழுத்தின் வலிமையால் மட்டுமே முடியும்.

அரசியல் சித்து விளையாட்டுகள், சிண்டு முடிதல், சேறு தூற்றுதல் போன்ற தன் புத்தக விற்பனையை உயர்த்திக் கொள்ளவும், ரசிகர் வட்டத்தை நிறுவுவதற்கும் அரங்கேற்றப்படும் அக்கப்போர்களும், இலக்கியத்தில் தன் இடம் குறித்தான சந்தேகம்/பயத்தினால் எழும் பதட்டத்தினால் நிகழ்த்தப்படும் நிராகரிக்கத் தக்க செயல்பாடுகளும் அவர்களின் நிழலைக் கூட தொடுவதில்லை. ஆனால் ஒரே வருத்தம் இத்தகைய வாசகர்களின் எண்ணிக்கை சொற்பம் என்பதுதான்.

இத்தகைய வாசகர்களை சந்திக்கக் கூடிய இடம் புத்தகக் கண்காட்சி என்று எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் புத்தகம் வாங்குபவர்களிடம் பேசுவது மட்டுமே என் குறிக்கோளாக இருந்திருக்கிறது. நான் ஒரு வருடம் முழுவதுமாக கட்டியெழுப்பிக் கொள்ளும் என் ஈகோவை யாரோ ஒருவர் தன் ஆழ்ந்த வாசிப்பின் மூலமாக தட்டி நொறுக்குவதை மிகச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் இடம் அது.

இதே கண்காட்சியில் சில அரைவேக்காட்டு மனிதர்களிடம் சிக்கி சீரழிந்த கதைகளைச் சொல்லி ரத்தக் கண்ணீரும் வடிக்கலாம். ஆனால் அது இந்த இடத்தில் எழுதும் நோக்கம் இல்லை.

ஞானக் கூத்தனின் சில கவிதைகளை மட்டுமே தெரிந்து வைத்திருந்த நான் ஒருவரிடம் பேசி மூக்கு உடைபட்டு மீதக் கவிதைகளை வாசித்திருக்கிறேன்.ஆத்மாநாம்மின் கவிதையில் இருக்கும் புதிர்களை அவிழ்ப்பது பற்றியதான ஒரு பெரியவர் பேசியது ஞாபகமிருக்கிறது.மோகமுள்ளின் வேறொரு பரிமாணத்தை மற்றவரிடம் பேசி புரிந்திருக்கிறேன்.இந்த அவமானங்களையும் அறிதலையும் மிகச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன். அறியாமையைக் களையும் போது மட்டுமே நாமாக உருவாக்கிக் கொள்ளும் போலி அறிவுஜீவி பிம்பத்தை விட்டு விலகி வருகிறோம்.

ஒருவன் தொடர்ந்து எழுதுவதற்கு வாசிப்பு மட்டுமில்லாமல் தொடர்ச்சியான விவாதமும் அல்லது விவாதத்திற்கான தொடக்கப்புள்ளியையும் கண்டறிதல் அவசியமாகிறது. அது இத்தகைய அறிவுசார் கண்காட்சிகளில் சாத்தியமாகிறது என்று நம்புகிறேன்.
===
ஸ்ஸ்ஸ் அப்பாடா...ஸீன் முடிந்தது.

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருவதாக இருக்கிறேன். இந்த மாதிரியான ரம்பத்திற்கு துணிந்து தலை கொடுக்க விரும்பும் நண்பர்களைச் சந்திக்க விருப்பம். பதில் ரம்பம் என்றாலும் நெம்ப சந்தோஷம்.

Jan 5, 2010

ஹிட்லர்


ஒரு நாள் காலை தன் நிலைக்கண்ணாடியில்
சாப்ளினின் முகம் தெரிவதைக்கண்டு
அதிர்ச்சியில் உறைந்தான் ஹிட்லர்
விரைத்து நின்றபடி முகமன்கூறும்
அவன் சகாக்கள் யாவரிடமும்
ஒரு ரகசியப் புன்னகையின் கீற்று
நெளிந்து கொண்டிருப்பதாக சந்தேகப்பட்டவன்
அரண்மனையில் இருந்த தன்னுடைய படங்கள்
அனைத்தையும் அகற்றிவிட உத்தரவிட்டான்
அன்று மாலை நடந்த
மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில்
உணர்வுப்பூர்வமான எழுச்சியுரையாற்றி கொண்டிருக்க
கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுவதை
கவனித்தபோதுதான் உணர்ந்தான்
மெல்லத் தன் குரல்
சாப்ளின் குரல் போல் மாறியிருந்ததை
ஒரு சிறுவன் சாப்ளின் எனக் கத்திய போது
வெடித்து எழுந்தது சிரிப்பலை ஆத்திரம் தாளாது
உக்கிரத்தோடு மேடையில் இருப்பவர்களை பார்த்தான்
அவன் தளபதிகளில் ஒருவனுக்கு
தவறு செய்துவிட்டு விழிக்கும்
சாப்ளினின் அப்பாவி தோற்றம் அந்த முகத்தில் தெரிய
பெருங்குரலெடுத்து சிரித்துவிட்டானவன்
திடீரென...
நான் சாப்ளின் இல்லை ஹிட்லர்... அடால்ப் ஹிட்லர்
எனத் திரும்ப திரும்ப கத்தியவாறு
மேடையைவிட்டு ஒடத்துவங்கினான்
சாப்ளின்...சாப்ளின்... என குழந்தைகள் துரத்த
பெர்லின் நகர வீதிகளில்
பைத்தியம் போல் ஒடிக் கொண்டிருந்தான்
அப்போது அவன் நடையும் ஒட்டமும்
உண்மையாகவே சாப்ளினைப் போல் இருந்தது


இது இளங்கோ கிருஷ்ணனின் காயசண்டிகை தொகுப்பில் இருக்கும் ஒரு கவிதை. முந்தைய விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். நண்பர் சிவராமனின் ஹிட்லர் ரிடர்ன்ஸ்-பார்ட் 2 உடன் இணைத்து வாசிக்க வேண்டியதில்லை என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.

Jan 4, 2010

காதலென்றும் சொல்லலாம்


புத்தாண்டுக்கு முந்தின நாள் சச்சு போனில் அழைத்திருந்தான். அவன் அழைப்பது மிக அரிது. ஆடிக்கொரு நாளோ அமாவாசைக்கு ஒரு நாளோ நான்தான் அவனை அழைத்து கொஞ்சம் நேரம் பேசுவேன். இந்தப் பேச்சுக்களில் பெரும்பாலும் ஊருக்குள் நிகழும் 'கிசுகிசு'க்களைத்தான் சுவாரசியமாகச் சொல்வான்.

நண்பன் என்றும் சொல்ல முடியாத, உறவினன் என்றும் சொல்ல முடியாததான ஒரு நெகிழ்வும் இறுக்கமும் கலந்த உறவே எங்களுக்கிடையே இருந்தது. பள்ளியில் தொடங்கிய உறவு இது.

வழக்கத்திற்கு மாறாக அன்றைய தினம் பேச்சு சுவாரசியமான திசையில் நகரவில்லை. கொஞ்சம் தலையை வலித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.

தொலைபேசியில் அழைத்து ஒருவன் தலையை வலிக்கிறது என்று சொல்வது அவன் குறித்தான நம் அக்கறையாக மாறுவதில்லை.பேச்சை நான் திசை மாற்றினேன். அவன் அசுவாரசியமாகவே பேசினான். துண்டித்து விட்டு கொஞ்சம் வெளியே போய்வரலாமா என்று யோசித்தேன்.

சச்சுவுக்கு அடுத்த தெருவில் வசிக்கும் ஒரு பெண்ணோடு தொடர்பு இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஊருக்குள் இதுபற்றி பரவலாகவே பேசிக்கொள்கிறார்களாம். அவனிடம் நான் இது குறித்து பேசியதில்லை. இன்று அதைப் பற்றி பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எப்படி துவங்குவது என்று தெரியாததால் அமைதி காத்தேன். அவனாக மீண்டும் தலையை வலிக்கிறது என்றான். அவன் எதையோ என்னிடம் குறிப்பாகச் சொல்ல விரும்புவதாக இந்த முறை தோன்றியது.

இரவில் உறக்கம் இல்லையா என்றதற்கு 'ஆம்' என்றான். சத்யா பற்றியும் அவளோடான உறவை பற்றி பேச ஆரம்பித்தான். சத்யாதான் அவனோடு தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட பெண். வழக்கமாக அவன் பேச்சில் இருக்கும் சந்தோஷமோ, எப்பொழுதும் வார்த்தைகளில் அவன் உருவாக்க முயலும் கிளுகிளுப்போ இல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான்.

அதே பேச்சு வேகத்தில் 'சத்யா போன வாரம் இறந்துவிட்டாள்' என்றான். எனக்கு அதிர்ச்சியாக இல்லை. அவளை இதுவரைக்கும் நான் பார்த்திராதது கூட அதிர்ச்சியின்மைக்குக் காரணமாக இருக்கலாம். தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அம்மியை தன் தலைக்கு மேலாக உயர்த்தி கைகளை அந்தரத்தில் விலக்கிக் கொண்டாளாம். மண்டை பிளந்து இறந்திருக்கிறாள். இதைச் சொல்லும் போது சச்சு உடைந்துவிட்டான்.மிகக் கொடூரமாக தன்னை வருத்தியிருக்கிறாள் என்று திரும்ப திரும்பச் சொன்னான்.

அவள் இறந்த நாளிலிருந்து அவளது வீட்டிற்கு இவன் செல்லவில்லையாம். அவளது உறவினர்கள் சச்சு மீது கோபமாக இருப்பதாகச் சொன்னான். நேற்றோடு ஐந்து நாட்கள் முடிந்திருக்கிறது. நேற்றிரவு நெடு நேரம் சுடுகாட்டில் அமர்ந்திருக்கிறான். அவள் வந்து இவனை தன்னோடு அழைத்துச் செல்லக் கூடும் என்றிருந்தானாம். அவள் மீதான தன் காதல் வெறும் உடல் இச்சை இல்லை என்பதைச் சொல்லி அவளோடான தன் உறவை நியாயப்படுத்த முயன்று கொண்டிருந்தான். அவனுக்கு ஆறுதலாக இருக்க வேண்டியாவது நான் அவன் சொல்வதை ஆமோதிக்க வேண்டியிருந்தது.

நள்ளிரவு தாண்டிய பின் அவனது அம்மாவும் மனைவியும் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு இவனைத் தேடி மயானத்திற்கு வந்துவிட்டார்களாம். துணைக்கு பஞ்சாயத்து போர்டில் வேலை செய்யும் காளிமுத்துவும் உடன் வந்திருக்கிறான். சச்சுவின் மனைவி கதறி அழுதிருக்கிறாள். அவனது அம்மாவுக்கும் அழுகையை அடக்க முடியாமல் இருந்திருக்கிறது. அவர்களுக்கு வேண்டி அந்த இரவில் வீட்டிற்கு வந்திருக்கிறான்.

சத்யாவுக்கு தான் துரோகம் செய்துவிட்டதாகச் சொன்னான். சத்யாவுடனான உனது உறவு காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு துரோகமாக ஆகாதா என்றதற்கு மீண்டும் அழுதான். நானேதான் பேச வேண்டியிருந்தது. சத்யா உயிரோடிருந்திருந்தால் பிரச்சினை சிக்கல் ஆகியிருக்கலாம். அவள் இறந்துவிட்டாள். இப்பொழுது அதிகம் குழம்பாமல் மனைவியோடு இரு என்றேன். குழந்தையை காக்க வேண்டியது பற்றியும் பேசினேன். சத்யா தனக்காகவே இறந்தாள் என்றான். இந்த மனநிலையில் வேறு என்ன பேசினாலும் அவனுக்கு மண்டையில் ஏறாது என்பதால் போய் உறங்கச் சொன்னேன். அழுது கொண்டே புத்தாண்டு வாழ்த்து சொன்னான்.

பிரகாஷ் எங்கள் இருவருக்குமே நண்பன், அவனை அழைத்து சச்சு குறித்துப் பேசினேன். தான் கவனித்துக் கொள்வதாகச் சொன்னான். பிறகு நண்பர்களின் புத்தாண்டு எஸ்.எம்.எஸ், வாழ்த்துச் செய்திகளுக்கு பதில் அனுப்பியவாறு தூங்கிப் போனேன். காலையில் 7 மணிக்கு சச்சு அழைத்திருக்கிறான். மிஸ்டு கால் ஆகியிருந்தது.

ஒன்றாம் தேதி அலுவலகம் முடித்து மாலையில் ஊருக்குக் கிளம்பும் போது, சச்சு தற்கொலைக்கு முயன்றதாக பிரகாஷ் போனில் சொன்னான்.ஆனால் பிழைத்துக் கொண்டானாம். மற்றபடி நன்றாக -வீட்டில் தான் இருக்கிறானாம். அப்பொழுதே ஊருக்கு கிளம்பி வரச் சொன்னான். சந்தேகமாகவே இருந்தது. ஊரை அடையும் போகும் போது இரவு மணி பதினொன்று ஆகியிருந்தது. நேராக சச்சு வீட்டுக்குத் தான் சென்றேன்.கூட்டமாக இருந்தது. மனது குறு குறுத்தது. அழுது கொண்டிருந்தார்கள்.

சச்சு இறந்திருக்கிறான்.

காலையில் 7.10க்கு பிரகாஷை அழைத்து தான் வஞ்சிபாளையம் ரயில்வே கேட் அருகில் நிற்பதாகவும் தண்டவாளத்தில் வரவிருக்கும் தொடர்வண்டியில் தலையைக் கொடுப்பதாகவும் சொல்லும் போது பிரகாஷூக்கு மிக விகாரமாக தொடரூர்தியின் சத்தம் கேட்டிருக்கிறது.அதோடு தொலைபேசியின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

எல்லாம் முடிந்து 'சவ'த்தை எடுத்து வரும் போது,முகத்தின் வலது பாகம் காணாமல் போய் இருக்கிறது. உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நின்ற படி தலையை மட்டும் தொடரூர்திக்கு முன்பாக நீட்டியிருக்கிறான்.

பிரகாஷூக்கு முன்னதாக என்னிடம் பேசத்தான் சச்சு முயன்றிருக்கிறான் என்பதை நினைக்கும் போது தலை சுற்ற ஆரம்பித்தது. வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. திரும்பி வீட்டிற்கு வந்துவிட்டேன். அவன் குழந்தையை தொட்டிலில் போட்டு யாரோ பாடிக் கொண்டிருந்தார்கள். அது ஒப்பாரியா தாலாட்டா என்பதை கவனிக்க முடியவில்லை.


(நிகழ்ந்த சம்பவம். புனைவென்றும் கொள்ளலாம்)

நன்றி: உயிரோசை,04 ஜனவரி 2010.

கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியல் தயாரிப்பவன்-காயசண்டிகை விமர்சனம்

காயசண்டிகை தொகுப்பை சில நாட்களுக்கு முன்பாக வாசித்திருந்தேன். அப்போதைய சூழலில் ஆழ்ந்து வாசித்ததாக ஞாபகமில்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாக கொத்தியிருந்த கவிதைகள் மனதின் அடுக்குகளை அரித்துக் கொண்டிருந்தன. அது விட்டகுறை தொட்டகுறையாக நீளும் கவிதைக்கும் வாசகனுக்குமான உறவின் சரடு. தன்னை மீண்டும் வாசிக்கக் கோரும் கவிதையும், வாசிக்க விரும்பும் வாசக மனதின் பரிதவிப்பும் ஒரு புள்ளியில் இணையும் ரசவாதம் அது. மீண்டும் ஒரு முறை அந்தக் கவிதைகளை வாசிப்பது அந்த வாசகனுக்குள்ளாக வேறொரு அனுபவத்திற்கான துவக்கமாகிறது.

காயசண்டிகையை புரட்டத் துவங்கும் மனதிற்கு இன்னும் சில மணி நேரங்களில் இன்னொரு வருடம் காலண்டரில் உதிக்கிறது என்பது தெரிந்தே இருக்கிறது. சாமனியனுக்கு நேற்று போலவேதான் இன்றும் இருக்கிறது. ஒரு புதிய வருடம் உருவாகிறது என்பதை நடைபாதையில் சுருண்டு கிடப்பவனும், விடியாப்பொழுதில் கொஞ்சம் மது அருந்திவிட்டு அழுக்குத் துணியோடு நகரத்தின் குப்பை மேடுகளில் பொறுக்கிக் தன் வாழ்நாளை கழிப்பவனும் பொருட்படுத்துவதில்லை. எந்தப் புதிய வருடமும் அவர்களுக்கான வாழ்வியல் ரகசியங்களை தேவதைகளைக் அனுப்பித் தரச் செய்வதில்லை. இந்த விளிம்புநிலை மனநிலையுடையவனுக்கான கவிதைகள்தான் காயசண்டிகை கவிதைகளோ என்று இவற்றை வாசிக்கும் போது தோன்றுகிறது. சரியாகச் சொன்னால் விளிம்பு நிலை இல்லை, அதனை விட ஒரு படி மேல்நிலை வாழ்க்கையுடயவனின் குரலாக இந்தக் கவிதைகள் இருக்கின்றன.


வாழ்வின் கசப்புகளை புகார்களோடும் சலிப்புகளோடும் புலம்பியும் கொண்டாடியும் திரியும் சாமானியனின் கவிதைகள்தான் 'காயசண்டிகை' கவிதைகள். இந்த உலக வாழ்வு நம்மைச் சுற்றிலும் உருவாக்கும் இருள்வெளியில் எந்த சங்கடமும் இல்லாமல், அல்லது சங்கடங்களை ஏற்றுக்கொண்டு தன்னை நகர்த்திக் கொள்ளும் சாதாரணமானவனின் சொற்களை இளங்கோ கிருஷ்ணன் கவிதைகளாக்குகிறார்.

கடவுளை கொலை செய்வதற்காக கூரிய கத்தியையும், கொஞ்சம் சொற்களையும் சுமந்து திரிபவனை இந்தக் கவிதைகளில் காணலாம். 'கவிதையாம் மயிராம்' என்று தன் கவிதைகள் இளக்காரமாக்கபடுவதை ஏற்றுக் கொண்டு கவிதையில் உழலும் கவிஞனை சந்திக்கலாம். 'ஒரு கரப்பானையோ/சிறு செடியொன்றையோ இம்சி'க்கும் சாமானிய சாத்தான் இந்தக் கவிதைகளில் எதிர்படுகிறான். இந்த 'சாதாரணர்களே' கவிதைகள் முழுவதுமாக விரவி சிண்டுகளாகிக் கிடக்கும் வாழ்வின் அபத்த முடிச்சுகளை அவிழ்க்கிறார்கள்.

'..புத்தனின் பல் நுனியில்/ரத்தத் துளியொன்று/துடைக்கத் துடைக்க அரும்பிக் கொண்டிருக்கிறது' என்பதைக் காண்பவனும், இந்த உலகின் வக்கிரங்களையும் வன்முறைகளையும் மிக இயல்பாக எதிர்கொள்பவனும் கவிதைகள் முழுவதுமாக அலைகிறார்கள். இவர்களை நேற்றோ அல்லது போன மாதமோ, சலூன் கடையிலோ, முட்டுச் சந்திலோ அல்லது மீன் கடையிலோ நாம் சந்தித்திருக்கிறோம். அவர்கள்தான் இந்தக் கவிதைகளுக்குள்ளாக இருக்கிறார்கள்.

பாக்தாத் நகர வீதிகளில் தோற்றுப்போன வியாபாரத்தின் கசப்போடு பாலையின் கொதிமணலில் வறண்ட நாவோடு நகரும் முல்லாவின் கரங்களை கடவுள் பற்றுகிறார். கடவுளின் கரங்களை பார்த்துவிட்டு இந்தக் கரங்களை எனக்கு ஏற்கனவே தெரியும் எனச் சொல்லும் முல்லாவிடம் எப்படித் தெரியும் என வினவும் கடவுளுக்குத் தன் பதிலாக, 'என் கால்களுக்கு அடியில்/முள் வைத்துக் கொண்டே போகும் கரங்களை நன்கறிவேன்' என்கிறார். இந்த நவீன உலகம் இடைவெளியின்றி பாய்ச்சும் கூரிய அம்புகளில் சிக்கிக் கொள்ளும் மனிதர்களின் பிரதிநிதியாகவே இந்தக் கவிதையில் முல்லாவை நிறுத்துகிறார் இளங்கோ கிருஷ்ணன். கால்களுக்கடியில் வைக்கப்படும் இந்த முற்களைத்தானே குருதியொழுகும் ரணங்களோடு ஒவ்வொரு நவீன மனிதனும் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கிறான்.

'கடவுளின் பற்கள்' என்ற வேறொரு கவிதையில் மனிதனைக் கொன்று தின்று, குறைந்து வரும் தனது கருணையை கூட்டிக் கொள்ளும் கடவுளின் முகம் காட்டப்படுகிறது. இந்தக் கவிதைகளை கடக்கும் போது தன் அரிதாரமும் முகமூடியும் கலைந்துவிட்ட துக்கத்தில் வாடிய கடவுளர்கள் கண் முன்னால் வந்து போகிறார்கள். எனக்கு பாலியல் சர்சைகளில் சிக்கி முகம் தொங்கிக் கிடக்கும் நவீன கடவுளர்களான அரசியல்வாதிகளின் முகங்களும் வந்து போகின்றன. இந்த சாதாரணத்தன்மையும் எளிமையும் இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகளை பாய்ச்சலோடு நகர்த்துகின்றன.

கவிதை என்பது ஒரு உச்சத்தை நோக்கி நகரும் பல சொற்களின் கூட்டுப் பயணம் என்று சொல்வதுண்டு. ஒவ்வொரு கவிஞனும் இதைத்தான் செய்ய முயல்கிறான் என்றும் தோன்றுகிறது. வசனகவிதையிலும் கூட கவிதையின் நகர்வு இந்த உச்சத்தை நோக்கியே இருக்கிறது. உச்சத்தை நோக்கி நகரும் இந்தப் பயணத்தில் சொற்களின் கூட்டு சரியாக அமையாத தருணத்தில் கவிதை தன் வலுவை இழக்கிறது. இந்த நுண் நுட்பம் பெரும்பாலான கவிதைகளில் இளங்கோவுக்கு எளிதாகியிருக்கிறது.

இளங்கோ கிருஷ்ணன் வசனகவிதைகளின் உச்சத்தை சில கவிதைகளில் அனாயசமாக தொட்டுச் செல்கிறார். 'சொற்களாகத் தேய்ந்துபோன கவிஞனின் நகரத்தில்' ஆத்மாநாமை சந்திக்கும் கவிஞனின் அனுபவம் என்னை மிக உற்சாகமடையச் செய்கிறது. ஆத்மாநாமின் ரோஜா பதியன்களையும் பிரம்மராஜன் தொகுத்த கறுப்பு அட்டையிட்ட தொகுப்பையும் மிக இயல்பாக கவிதைக்குள் எதிர்கொள்ளும் தருணம் கொஞ்சம் சிலிர்ப்படைய வைக்கிறது என்று சொல்வது கூட மிகையில்லாமல் பொருந்தும். ஆத்மாநாம்மின் ரோஜாபதியன்கள் கவிதையை சிலாகிக்கும் எந்த ஒரு கவிதை மனதிற்கும் இந்த அனுபவம் நேரலாம். தன் கவிதைகளால் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கவிஞனை வேறொரு கவிஞனும், ஒரு வாசகனும் சந்தித்து பிரியும் இந்தக் கவிதை தருணம் தரும் அனுபவம் ஒரு நாள் முழுவதற்குமான உற்சாகத்தைத் தருகிறது.

'நிலாக்கனி' என்னும் கவிதையில் ஒரு மரத்தின் அடிக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் நிலாவை பறிக்கத் தாவுகிறது ஒரு குரங்கு. குரங்கின் ஒவ்வொரு தாவலிலும் இன்னொரு கிளைக்கு நிலா நகர்கிறது. நிலாவை பிடிக்க இயலாமல் சரிந்து பள்ளத்தில் விழும் குரங்கின் கண்களுக்கு மீண்டும் நிலா அடி மரக்கிளையில் தொங்குவது தெரிகிறது. இந்தக் கவிதை வெறும் நிலா-குரங்கு விளையாட்டோடு நின்று கொள்ள வேண்டியதில்லை. இந்தக் கவிதைக்கான புரிதல் சாத்தியங்கள் மிக அதிகம். ஒவ்வொரு வாசகனும் தன் அனுபவத்தை இந்த விளையாட்டில் நிகழ்த்தலாம். இந்த கவிதையின் உச்சமாக, இறுதி வரிகளைச் சொல்வேன். குரங்கின் துக்கமும் நிலாவின் பரிகாசமும் ஒரே வரியில் தென்படும் இந்த வரி இந்தக் கவிதையில் ஒன்றியிருக்கும் வாசகனை இன்னொரு உலகத்தில் நிறுத்துகின்றன.

இந்த உச்சத்தை 'காயசண்டிகை'யில் சில வசனகவிதைகள் பெறவில்லை என்பது என் அபிப்பிராயம். மரப்பாச்சி என்றொரு கவிதையில் மிகுந்த காதலோடு தன் பெயரை மரப்பாச்சி பொம்மைக்கு வைக்கும் இரண்டாவது வரியில் கவிதையின் தளம் மிக முக்கியமான புள்ளியை நோக்கி நகர்கிறது. பின்னர் ஒவ்வொரு வரிகளும் மெல்லிய அதிர்வுடன் வாசகனை நெருங்குகின்றன. மரப்பாச்சி காணாமல் போய்விடுவது வரை உருவாகும் கவிதானுபவம் 'திடீரென காணாமல் போவது எப்படியென' கேட்க விரும்பும் கவிஞனின் கேள்வியில் உதிர்ந்து விடுகிறது. எனக்கு இந்த கேள்வி எந்த விதமான திருப்தியையும் தரவில்லை. இந்தக் கேள்வி முக்கியமானதாகவும் படவில்லை. இந்தத் தொகுப்பில் என் மனதில் தோன்றும் குறையாக ஓரிரண்டு கவிதைகளில் இந்த 'உதிர்ந்து' விடும் கவிதானுபவங்களைச் சொல்வேன். இன்னொன்று 'ரூபாய் நோட்டிலிருந்து இறங்கி வந்த கானுறை வேங்கை' போன்ற சில பழகிய படிமங்கள் மிக அரிதாக சில கவிதைகளில் தென்படுகிறது. இது கவிதையில் புழங்கும் மனதில் எந்தவிதமான சலனத்தையும் உண்டாக்குவதில்லை.

'தன் குறியின் நிறத்தில்/குளிர்பான பாட்டிலொன்றை பிடித்தவாறு' என்ற வரிகளை விட்டு நகர எனக்கு கொஞ்ச நேரம் தேவைப்படுகிறது. நாளை பெப்ஸி, கோக் குடிக்கும் யாதொரு மனிதனும் எனக்கு இந்த வரிகளை நினைவுபடுத்தக் கூடும் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

ஹிட்லர், சாப்ளினாக உருமாறி பெர்லின் நகர வீதிகளில் ஓடும் காட்சி ஒரு கவிதையில் இருக்கிறது. மேலோட்டமான வாசிப்பிற்கு எள்ளலாக தெரிந்தாலும், ஒரு குரூர மனிதனுக்குள் இருக்கும் குழந்தமையை பிரதியாக்குவதான வாசிப்பாகவே இக்கவிதையை உள்வாங்குகிறேன். மனம் என்பது கல் போன்ற ஸ்திதி. எதிர்படும் மனிதர்களாலும், சூழ்நிலைகளாலுமே அந்த மனதின் வடிவங்கள்- குரூரனாக, பைத்தியமாக,சர்வாதிகாரியாக,அப்பாவியாக,காமுகனாக என பல வகைகளில் வடிவமைக்கப்படுகின்றன என்ற ஆழ்ந்த நம்பிக்கையின் வழியாகவே இந்தக் கவிதையை நெருங்குகிறேன். இந்த நெருக்கம் மனதின் இயங்குதல் குறித்தான வியப்புகளை மையப்படுத்துகிறது. இந்த சில வியப்புகளின் கதவுகளை திறந்துவிடுவதும் கவிதையின் ஒரு பண்புதானே.

காயசண்டிகை தொகுப்பு முழுவதும் கவிதையின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் பல்வேறு பரிசோதனைகளை நிகழ்த்தியிருக்கும் இளங்கோ கிருஷ்ணன் பலவற்றில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் தொகுப்பு தமிழ்கவிதையின் அடுத்த கட்ட நகர்வுக்கான சாத்தியங்களை உள்ளடக்கியிருக்கிறது என்றே நினைக்கிறேன். தமிழ்க் கவிதையின் சாதாரண வாசகனாக இந்த சாத்தியங்கள் மீதான விவாதங்கள் நிகழ்த்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இதுவரையிலான காயசண்டிகை பற்றிய 'பேச்சு' போதாதென்றும் உறுதியாகச் சொல்வேன்.

vaamanikandan@gmail.com

Jan 1, 2010

நேற்று போல் இன்று இல்லை..

வருடத்தில் முதல் நாள் செய்வதே வருடம் முழுவதும் நடக்கும் என்பதால் மனப்பூர்வமாக அந்த நாளில் பாடத்தை படி என்று ஒரு காலத்தில் ஐந்து மணிக்கு எழுப்பி விட்டுவார்கள். ஆனால் படிப்பு விஷயத்தில் எப்பொழுதும் போலவே போராட்டமாகத்தான் வருடங்கள் ஓடியிருக்கின்றன.

நேற்று இரவில் பதினோரு மணிக்கு படுத்து புத்தாண்டின் முதல் நாளான இன்று காலை எட்டரை மணிக்கு எழுந்தேன். அனேகமாக இந்த வருடம் முழுவதும் ஒன்பது மணி வரை தூங்கும் சோம்பேறி ஆகக்கூடும்.

புத்தாண்டு என்பது ஒரு பிரிவினருக்கானது மட்டும்தானே என்று நினைத்தால், இன்று காலையில் தெருக்களிலும், குப்பை மேடுகளிலும் பொறுக்கி பிழைப்பை ஓட்டும் இரண்டு இளைஞர்கள், முட்டி வரைக்கும் மடக்கிய ஜீன்ஸ் பேண்ட்டும் கிழிந்த சட்டையுமாக ஒயின்ஷாப்புக்குள் இருந்து வெளியே வந்தார்கள். அந்த வழியில் சென்றவர்களிடமெல்லாம் ஹேப்பி நியூ இயர் சொன்னார்கள். தோளில் ஒரு வெள்ளைச் சாக்கு இருந்தது. இன்னும் காலியாகவே இருந்தது.

வரும் வழியில் வழக்கமான உணவு விடுதிக்கு விடுமுறை விட்டுவிட்டார்கள். இரண்டு ரூபாய்க்கு வேகவைத்த கடலையை வாங்கிய போது, கடலை விற்றவரிடம் "புது வருஷம் எப்படி இருக்குங்க" என்றேன். சிரிப்பைத் தவிர பதில் இல்லை. நான்கைந்து பதில்களை நானாக உருவாக்கிக் கொண்டேன். ஒரு பதிலாவது அவரது மனதிற்குள் இருக்கும் பதிலுடன் சரியாக பொருந்துமா என்று தெரியவில்லை. ஹேப்பி நியு இயர்!

ஊருக்குச் செல்லும் நாட்களில் நண்பர்களுடன் அலுவலகம் முடித்து நேராக ஒசூர் வரை சென்றுவிடுவதுண்டு என்பதால், வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு பைக்கில் வராமல், பேருந்தில் அல்லது நடந்து வருவேன். அலுவலகத்தின் பின் கதவு திறந்திருந்தால் 1.5 கி.மீ தான் நடக்க வேண்டியிருக்கும், மூடியிருந்தால் சுற்றி 3 கி மீ நடக்க வேண்டும். பத்தரை மணிக்கு மூடிவிடுவார்கள். நான் 7 நிமிடம் தாமதாக வந்தேன்.காவலுக்கு நின்றவர் திறந்து விட முடியாது என்று முகத்தில் கடுகடுப்பை காட்டினார்.

என் முக ராசியா என்று தெரியவில்லை என்னோடு பழகாத யாருக்குமே என்னைப்பார்த்தால் கோபம்/எரிச்சல் வருகிறது.நானும் கறுவிவிட்டு பசியோடு நடந்து வந்தேன்.

இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

...புத்தாண்டு வாழ்த்துக்கள்.