Dec 10, 2009

வெளிச்சம் விழாத நதி

சி.எஸ்.சுப்பிரமணியம் என்ற பெயர் நான் ஹைதராபாத்தில் இருந்த போது அறிமுகம் ஆனது. எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும் போது சி.எஸ்.எஸ் என்ற முதுபெரும் சுதந்திர போராட்ட வீரர் கோபியில் வசிப்பதாகவும், அவர் பழம்பெரும் கம்யூனிஸ்ட் என்ற தகவலையும் சொன்னார்.

ஹைதராபாத் எங்கள் ஊருக்கு வெகுதூரம் என்பதால் ஆறுமாதத்திற்கு ஒரு முறையோ அல்லது சில சமயங்களில் ஆறுமாதம் தாண்டிய பிறகும் அம்மா ஊருக்கு வரச் சொல்லி போனில் அழும் வரையிலும் இழுத்தடித்தோ செல்வதுண்டு.
ஊருக்குச் செல்லும் சமயங்களில் எல்லாம் பழனியம்மாள் பள்ளிக்கு அருகில் இருக்கும் சி.எஸ்.எஸ் வீட்டில் அவருடன் நான்கு மணி நேரங்கள் வரைக்கும் பேசிக் கொண்டிருப்பேன். அவருக்கு என் மீது நம்பிக்கையும் பிரியமும் உண்டு. அவருக்கு பழைய விஷயங்கள் பலவும் மறந்திருக்கும், அவற்றை ஞாபகப்படுத்தினால் பேசுவார்.

எனக்கு இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் இருந்த கம்யூனிஸ்ட்கள், சதி வழக்குகள் போன்றவை பற்றிய பரிச்சயம் இல்லாத சமயம் அது. ஊருக்குப் போவதற்கு முன்னதாக, ஹைதராபாத்தில் உள்ள எஸ்.வி.ராமகிருஷ்ணன்
அவர்களிடம் அவை பற்றிய தகவல்களை பேசி குறிப்பெடுத்துக் கொள்வேன். (எஸ்.வி.ஆர் மிகச் சிறந்த வரலாற்றாய்வாளர். வருடம் வாரியாக நடந்த நிகழ்வுகளின் நினைவூற்று அவர்.(அது அந்தக் காலம், வைசிராயின் கடைசி நிமிடங்கள் ஆகிய சுவாரசியமான புத்தகங்கள் உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது.))

எஸ்.வி.ஆருக்கு ரஜினி பாமிதத் பற்றி நன்றாக தெரிந்திருக்கும், அவர் சொல்லும் போது 'ரஜினி பாமிதத்' என்ற பெயரை ஒரு சிறு காகிதத்தில் குறித்துக் கொள்வேன். சி.எஸ்.ஸிடம் பேசும் போது ரஜினி பாமிதத் என்ற பெயரை மட்டும் சொல்வேன். அவர் தன் ஞாபகப் பெட்டகத்தில் இருப்பனவற்றை மெதுவாகச் சொல்வார். இப்படியான பேச்சு எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும் அவருக்கு பகிர்தலின் ஆசுவாசத்தையும் கொடுப்பதாக உணர்ந்திருக்கிறேன். தன்னை சந்திக்க யாரும் வருவதில்லை என்பதை சில சமயங்களில் என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்.
---------
ஈரோட்டில் டிசம்பர் 11 ஆம் நாள் சி.எஸ். எஸ் அவர்களுக்கு மக்கள் சிந்தனைப் பேரவை என்ற அமைப்பின் சார்பில் 'பாரதி' விருது வழங்கி கெளரவிக்கிறார்கள். மக்கள் சிந்தனைப் பேரவையை வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன் நடத்துகிறார். ஈரோட்டில் துடிப்பான நிகழ்வுகளை திறம்பட நடத்தும் ஆற்றல் மிக்கவர் ஸ்டாலின். ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு புத்தகக்
கண்காட்சியை இந்த அமைப்பு முன்னின்று நடத்துகிறது. சி.எஸ்.எஸ் அவர்களை தகுந்த நேரத்தில் கெளரவப்படுத்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
---------
கோமல்.சுந்தரம் அய்யர்.சுப்பிரமணியம் என்பதன் சுருக்கம் சி.எஸ்.எஸ். இந்த ஆண்டில் சரியாக இவருக்கு நூறு வயது நடக்கிறது.

1910 ஆம் ஆண்டு ஜூலை பதினாறாம் தேதி பிறந்திருக்கிறார். பள்ளிப்படிப்பை கொஞ்சம் மதுரையிலும் பின்னர் சென்னையிலும் படித்ததாகச் சொன்னார். பட்டப்படிப்பு சென்னை மாநிலக் கல்லூரியில். கல்லூரி பருவத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், கம்யூனிஸ்ட் பி.ராமமூர்த்தி ஆகியோர் இவருடன் பயின்றிருக்கிறார்கள்.

கல்லூரி முடித்துவிட்டு ஐ.சி.எஸ் படிக்க வேண்டும் என்பதற்காக 'சீமைக்கு'(இலண்டன்) கப்பல் ஏறியிருக்கிறார். ஐ.சி.எஸ் என்பது தந்தையாரின் விருப்பமாக இருந்திருக்கிறது. உலகப்பிரசித்தி பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் மாணவராக இருந்த சமயத்தில்தான் கம்யூனிஸத்தின் மீதான ஆர்வமும், சில கம்யூனிஸ்ட் தலைவர்களின் அறிமுகமும் கிடைத்திருக்கிறது. இந்தச் சமயத்தில் இலண்டனிலிருந்து வெளியான 'டெய்லி வொர்க்கர்' என்ற பத்திரிக்கையில் பணியாற்றினார். பத்திரிக்கையில் தனது ஆங்கிலப் புலமை மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள் என ஒரு
முறை குறிப்பிட்டார்.

இந்தக் காலகட்டத்தில் (1931 செப்டெம்பர்- டிசம்பர்) இலண்டனில் நடைபெற்ற இந்திய சுதந்திர போராட்டத்திற்கான இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காந்தியடிகள் தங்கியிருந்தார். அவரைச் சந்தித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசச் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சி.எஸ்.எஸ் முன்னின்று நடத்தியிருக்கிறார்.

இத்தகைய தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகளால் தன் படிப்பின் மீதான நாட்டத்தை இழந்துவிட்டு, ஐ.சி.எஸ் பட்டம் பெறாமலேயே சீமையிலிருந்து மீண்டும் இந்தியாவுக்கு கப்பல் ஏறியிருக்கிறார் சி.எஸ்.எஸ். இது அவரது தந்தையை மிகுந்த வருத்தமடையச் செய்ததாம்.

1937 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "ஜனசக்தி"யில் முக்கியப் பொறுப்பேற்றிருக்கிறார். ஜீவா ஆசிரியராக இருந்த இந்தப் பத்திரிக்கையில் அந்தச் சமயத்தில் வெளிவந்த பெரும்பாலான எழுத்துக்கள் சி.எஸ்.எஸ் அவர்களுடையது. கட்டுரைகளில் இவரது பெயர் இருக்காது, இவர் எழுதிய கட்டுரைகளை சேகரித்து வைக்கும் பழக்கமும் கிடையாது. இதுவரை யாருடனும் சேர்ந்து புகைப்படமும் இவர் எடுத்ததில்லை என்ற போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

1940 களில் தொடரப்பட்ட சென்னை சதி வழக்கு(Madras Conspiracy Case) வழக்கில் கைது செய்யப்பட்டார். தனது தலைமறைவு வாழ்க்கை பற்றியும், அந்தச் சமயத்தில் வெளியுலகில் வாழ்ந்த பிற அரசியல் போராளிகளுடனான தொடர்பு முறைகள், போலீஸீன் உளவு நடவடிக்கைகள், உடனிருந்த ஒரு போராளி போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற நிகழ்ச்சிகள் போன்றவற்றை சி.எஸ்.எஸ் விவரிப்பது அதிசுவாரசியமாக இருக்கும்.

பி.ராமமூர்த்தி, மோகன் குமாரமங்கலம், சுப்பிரமணிய சர்மா, உமாநாத் ஆகியோர் இவருடன் தலைமறைவு வாழ்க்கையிலும் கைதிலும் உடனிருந்தவர்கள். குறிப்பிடப்பட்ட மற்ற அனைவரின்
பெயரும் பிற்காலத்தில் மற்றவர்களுக்கு பரிச்சயமாகியிருக்கிறது. சி.எஸ்.எஸ்ஸின் பெயரைத் தவிர. அதுதான் சி.எஸ்.எஸ்ஸின் சுபாவம். தன் ஓட்டை விட்டு வெளியே வராமல் சுருங்கிக் கொள்ளும் நத்தையாகவே வாழ்ந்திருக்கிறார். எந்த வெளிச்சத்தின் மீதும் விருப்பமற்ற துறவியின் வாழ்க்கைதான் இவரது வழி.

சுதந்திரத்திற்கு பிறகு தீவிர அரசியலில் பிடிப்பில்லாமல் 1948 ஆம் ஆண்டு மனைவியுடன் கோபிச்செட்டிபாளையத்திற்கு வந்துவிட்டார். இந்தப் பகுதியின் முதல் பெண் மருத்துவர் இவரது மனைவி சுகுணாபாய் தான். இருவருக்கும் காதல் திருமணம். சுகுணா பாய் ஒரு சுதந்திர போராட்ட வீரரின் உறவுமுறை( எனக்கு அது குறித்தான தகவல் நினைவில் இல்லை). 1970 களில்
மனைவி இறந்த பிறகு கோபியை விட்டு நகராமல் இங்கு வாழ்ந்து வருகிறார். இவர் மட்டும் தனியாக இருக்கிறார். உறவுகள் என்று யாரும் தொடர்பில் இல்லை.
நூறு வயதில் தன் துணிகளை தானே துவைத்துக் கொண்டிருக்கிறார், தனக்கான எளிய சமையலை- பெரும்பாலும் பால், வெறும் சாதம், தண்ணீரில் உப்புடன் வேக வைத்த ஏதேனும் ஒரு காய் ஆகியவற்றை அவரே தயாரித்துக் கொள்கிறார். எதற்காக இத்தனை கஷ்டம் என்ற போது "உண்மையான சுதந்திரம் என்றால் என்ன?' என்றார். நான் பதில் பேசவில்லை. "தன் கடமைகளை தானே செய்வது" என்று சொன்னார்.

இவருக்கு கடவுள் நம்பிக்கை என எதுவுமில்லை, கழுத்தில் பூணூல் இருக்காது, தாடியும் மீசையும் மிகுந்து வளர்ந்திருக்கும். அவ்வப்போது மழிப்பதுண்டு. காலையில் தெருவோர பூக்களை எடுத்து, அவைகளை நீரூற்றிய கண்ணாடி சீசாவில் செருகி வைத்திருப்பார். அதற்கான காரணத்தை நான் கேட்டதில்லை. மிகச் சமீபத்தில் சாலையில் நடக்கும் போது கீழே விழுந்ததால் இப்பொழுது வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் முடங்கிவிட்டார்.

சி.எஸ்.எஸ் பங்களித்த புத்தகங்கள்:

1. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்:சிங்கார வேலர் - இந்தப் புத்தகம் சிங்காரவேலுச் செட்டியாரின் முழு வாழ்க்கை வரலாறு. சிங்காரவேலு பாரதியின் மிக நெருங்கிய நண்பர். பாரதியின் கடைசிக் கணத்தில் உடனிருந்தவர். இந்தப் புத்தகம் 1977இல் வெளி வந்தது. ஒரு பிரதி சி.எஸ்.எஸ்ஸிடம் இருக்கிறது.(நாகை முருகேசன் உடன் சேர்ந்து எழுதப்பட்டது). இதே புத்தகம் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருப்பதாக எனக்கு ஞாபகம்.

2. சிங்காரவேலரும் கான்பூர் சதி வழக்கு என்றொரு நூலை எழுதியிருக்கிறார்.
3. பாரதி தரிசனம்- பாரதியின் வெளிவராத கட்டுரைகளின் தொகுப்பு(இரண்டு பாகங்கள்). 1977இல் வெளி வந்தது. எட்டையபுரம் இளசை மணியனோடு சேர்ந்து எழுதப்பட்டது.

4.ஆங்கிலத்தில் எம்.பி.டி.ஆச்சார்யாவின் வாழ்க்கை வரலாறு(M.P.T. Acharya, His life and times) சி.எஸ்.எஸ் அவர்களால் எழுதப்பட்டது. ஆச்சார்யா பாரதி ஆசிரியராக பணியாற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'இந்தியா' பத்திரிக்கையின் ஆசிரியர். பாரதியின் உற்ற தோழர்.

5. சக்லத் வாலா என்ற இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரின் வாழ்க்கை வரலாறு. 'சக்லத் வாலா' இந்திய விடுதலைக்காகவும், இங்கிலாந்தின் தொழிலாளர் நலனுக்காகவும் போராடியவர்.

தினமும் ஹிந்து நாளிதழும், ஜனசக்தியும் வாசித்து விடும் சி.எஸ்.எஸ் வீட்டிற்கு, இன்றைக்கு வீட்டை பெருக்குவதற்கென மட்டும் ஒரு இசுலாமிய பெண் வந்து போகிறாள். அவளுக்கு இவரை பற்றிய எந்தத் தகவலும் தெரிந்திருப்பதற்கான சாத்தியம் இல்லை.

இத்தனை எளிய மனிதரை இனி என் வாழ்நாளில் சந்திக்கப் போவதில்லை. தனக்கு குழந்தைகள் இல்லை என்று சொல்லும் போது அவரது முகத்தில் வெறுமை வருவதை கவனித்திருக்கிறேன். நல்ல மனிதர்களுக்கு ஆண்டவன் பெரிய வெறுமை ஒன்றை கொடுப்பான் என்று எப்பொழுதோ படித்திருக்கிறேன்.
------
ஈரோட்டிலும் சுற்றுப்புறத்திலும் இருக்கும் நண்பர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

நாள்: 11.12.2009, வெள்ளிக்கிழமை.
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: கொங்கு கலையரங்கம், சம்பத் நகர்
------
-->நான், தாராபுரம் முருகானந்தம், இன்னும் இரு நண்பர்கள் சேர்ந்து சி.எஸ்.எஸ்ஸூடன் நடத்தில் ஐந்து மணி நேர நேர்காணல் இன்னும் வடிவமைக்கப்படாமல் இருக்கிறது.

-->தகவல்கள் மக்கள் சிந்தனைப் பேரவை வெளியிட்ட நான்கு பக்க சி.எஸ்.எஸ் வாழ்க்கைக் குறிப்பில் இருந்தும் எடுக்கப்பட்டிருக்கிறது.

7 எதிர் சப்தங்கள்:

Sangkavi said...

சி.எஸ்.எஸ் எனும் மாபெரும் கம்யூனிச தலைவரை
இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மணி......

நான் கோபியில் படிக்கும் போது அவர் வீட்டைப்பார்த்து இருக்கிறேன் அவரைப்பார்க்க முயற்சிக்கவில்லை
உங்கள் பதிவை பார்ததவுடன் ஒரு மாபெரும் மனிதரை சந்திக்காமல் விட்டுவிட்டோம் என்று மனது அடித்துக்கொள்கிறது

அவருடன் உங்கள் நேர்கானலை படிக்க காத்திருக்கிறேன் மணி.........

அனுஜன்யா said...

பகிர்வுக்கு நன்றி மணி. இப்படி பாடப்படாத நாயகர்கள் எத்தனை பேரோ? 'சுதந்திரம்' பற்றி அவர் சொன்னது ...எனக்கு வெட்கமாக இருக்கிறது.

அனுஜன்யா

வா.மணிகண்டன் said...

நன்றி சங்கவி. பெரியவரை பேச வைக்க நிறைய முயல வேண்டியிருக்கும். நீங்கள் கோவைதானே? அதிக தூரமில்லை. வேண்டுமானால் சொல்லுங்கள் ஒரு வாரக்கடைசியில் இயலுமானால் உங்களை அழைத்துச் செல்கிறேன்.

நன்றி அனு. எனக்கும் வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் வெட்கப்பட்டா ஆகுமா?

Nanum enn Kadavulum... said...

எவ்வளவோ தியாகம் செய்த அந்த மனிதரை "அப்பா" என அழைத்து அந்த மனதின் வெறுமையை போக்க யாரேனும் முன்வருவீரா ?
தொலை தூர தேசத்தில் இருப்பதால் கோரிக்கை மட்டும் முன்வைக்கிறேன்.
நன்றி !

கென்., said...

தேவையான பதிவு மணி விளம்பர யுகத்தில் எந்த சுயநலமுமின்றி வாழும் மனிதர்கள் இன்னமும் இருப்பது அதிசயம்தான்

ராஜன் said...

வெளிச்சம் விழச்செய்தமைக்கு அன்பு

:-)

ராம்ஜி_யாஹூ said...

அருமை , நன்றிகள்