Dec 31, 2009

பழையன கழிதல்

2009 ஐ திரும்பிப்பார்க்கிறேன் என்று டைரிக் குறிப்பெழுதிவிடுவேனோ என்ற அச்சப்படுவதால் அதிகம் பேசாமல், 2010 அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமையவும், ஈழத்தமிழர்கள் வாழ்வில் சிறிதேனும் ஒளிக்கீற்று தென்படட்டும் என்றும் விரும்புகிறேன்.
---
இதுவெல்லாம் நடக்காமல் இருந்திருக்கலாம் என்றும் அவ்வாறு நடந்திருந்தால் நன்றாயிருக்கும் என்று எப்பொழுதுமே நிகழாத ஒன்று குறித்து மனம் அலை பாய்கிறது/விருப்பப்படுகிறது. ஆனால் உண்மை எப்பொழுதுமே யாரும் எதிர்பாராததாக இருந்து கொண்டிருக்கிறது.

ஸ்ரீராம் ஜொன்னவிட்டுலா, இங்கு பெங்களூரில் உடன் பணி புரியும் ஆந்திரக்காரர். அவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறார்.ஜனவரி 7 ஆம் தேதி குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் நாள் குறித்துக் கொடுத்திருக்கிறார்கள். ஏதோ சிக்கல் இருக்கும் போலிருக்கிறது. வாரம் ஒரு முறை ஸ்கேன் செய்து பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

சிசேரியனாக இருக்கலாம் என்பதால், அறுவை சிகிச்சை செய்வதற்காக நல்ல நேரம் பார்த்து வைத்திருக்கிறார்கள். குழந்தை பிறப்புக்குப் பின் விடுப்பு எடுப்பது பற்றி பேசாமல் இருந்தார். விடுப்பு அளிப்பார்களா என்று சந்தேகமாக இருக்கிறது என்றார். இதற்கு கூட விடுப்பு தரவில்லையென்றால் வேலையை விட்டுவிட்டு ஊரில் ஒரு கடை வைத்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பச் சொன்னேன். அவர் அனுப்புவதற்காக வரிகளை தயார் செய்து கொண்டிருந்தார்.

இடையில் பெங்களூரில் அருகில் இருக்கும் தமிழ் நான்கைந்து குடும்பங்களுக்கு ஒரு விருந்து கொடுப்பதாக ஏற்பாடு. மாலை இந்திரா நகரில் இருக்கும் அண்ணாச்சி செட்டிநாடு ரெஸ்டாரண்டில் வைத்துக் கொள்ளலாம் என்றிருந்தோம். சிலர் கீழே இருக்கும் கடையில் பீடா நன்றாக இருக்கும் என்றும், அருகில் நல்ல ஐஸ்கிரீம் கடை இல்லை என்றும் வேறு சிலரும் விவாதித்தார்கள்.

அவர்களுடன் பேசிவிட்டு மதிய உணவு முடித்து விட்டு திரும்பி வந்தேன்.ஸ்ரீராம் தனது கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு இரு முழங்கைகளையும் டேபிள் மீது குத்தி கண்களை தேய்த்துக் கொண்டிருந்தார்.'மணி ஆர் யூ பிஸி' என்ற போது வழக்கமாகச் சொல்வது போல 'நோ டெல் மீ' என்றேன். நல்ல மனநிலையில் இருக்கும் போது 'செப்பண்டி' என்பதுண்டு.

"இறப்பு நிகழ்ந்துவிட்டது. எல்லாம் முடிந்து விட்டது" என்றார்.

அதிர்ச்சியில் சடாரென்று திரும்பியதில் டேபிள் மீது இருந்த ஹெல்மெட் கீழே வீழ்ந்து அதன் கண்ணாடி நொறுங்கிவிட்டது. அவரது மனைவியும் குழந்தையும் இறந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. கண்கள் சிவந்து வீங்கியிருந்தது.

குழந்தை என்பது ஒரு கனவு.பத்து மாதங்களாகவோ அல்லது அதற்கும் முன்னதாகவோ இருந்து கற்பனை செய்திருப்பார். நான் இறப்பு பற்றி மேலே எதுவும் பேசவில்லை. வீட்டிற்கு கிளம்புங்கள், எல்லோரிடமும் நான் சொல்லிக் கொள்கிறேன் என்றேன். பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் அலைவுறுவதாகத் தோன்றியது.

மாலையில் விருந்துக்கு உடன் வரும் குடும்பங்களுக்கு ஸ்ரீராம் பற்றித் தெரியாது. எனவே விருந்தை தவிர்க்க முடியவில்லை. அவர்களோடு உண்ணும் போது ஏதோ பசியை மறித்தது. சாப்பிடாமல் அமர்ந்திருந்தேன். "பில் அதிகம் ஆகாது, சாப்பிடுங்க" என்று சிரித்தார் ஒரு நண்பர்.

இரவில் சில புத்தகங்களை அங்கொன்றுமிங்கொன்றுமாக வாசித்துக் கொண்டிருந்தேன். காலையில் ஏழு மணிக்கு ஸ்ரீராமுடன் பேசினேன். விஜயவாடா போய்ச் சேர்ந்திருந்தார்.

குழந்தை வயிற்றுக்குள் இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டதாம்.இப்பொழுது அறுவை சிகிச்சையில் வெளியில் எடுத்துவிட்டார்கள். மனைவிக்கு எதுவும் பாதிப்பில்லை என்றார். கடைசி வரி கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் துக்கத்தினூடான ஒரு ஆறுதல்.
---
துக்கம் எப்பொழுதும் நம்மை ஆக்கிரமிக்கிறது, அதிலிருந்து சிறு கீற்றுக்களாகவே சந்தோஷங்கள் வெளிப்படுகின்றன.

பழையன கழிதலில் நாம் விரும்பாதவை நம்மைத் தொடரக்கூடாது என்று விரும்புகிறோம், பிரார்த்திக்கிறோம், ஆழ்ந்து நம்புகிறோம். அந்த நம்பிக்கை முன்னகர்வதற்கான தெம்பைத் தருகிறது. அந்தத் தெம்பில் மகிழ்ச்சிக்கான தேடல் பயணம் தொடர்கிறது. துவண்டுவிடாத தேடல்தானே வாழ்க்கையின் மையப்புள்ளி.

இந்த ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக அமையட்டும். வாழ்த்துக்கள்.

Dec 28, 2009

விரவிக் கிடக்கும் வெளியில்.

மதனின் கவிதைகள் "உறங்கி விழிக்கும் வார்த்தைகள்" என்ற பெயரில் தொகுப்பாக அகநாழிகை வெளியீடாக வருவதற்கான ஆயத்த வேலைகள் நடப்பதாக அறிகிறேன். இந்த தொகுப்பில் உள்ள கவிதைகள் குறித்தான எனது பார்வை.
======

கவிதைக்கு அணிந்துரை எழுதுதல் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. விமர்சனம் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம். விமர்சனம் என்பது தனியொருவனின் குறுக்கு வெட்டுப் பார்வை. அது வெறும் பார்வை மட்டுமே;கவிதையின் மீதான மதிப்பீடோ, தீர்ப்போ இல்லை. வெற்று பாவனையும் அலங்காரமும் இல்லாத ஒரு வாசகப் பார்வை கவிதையின் மீதான விவாதத்தை முன் நகர்த்தலாம்.

புறச்சூழலின் அழுத்தங்களும், ஆழ்மன பிளவுகளும், ஸ்தம்பித்த உறவுகளும் சிதைத்து விட்ட மனநிலையை உதறிவிட்டு அகண்ட பெருவெளியில் தனித்த வாசகனாக கவிதையை அணுகும் போது கவிதைக்கான புள்ளி பிடிபடுகிறது. இந்த வரிகளுக்கு நேர்மாறாக- அவன் அவனாகவே, தன் இருண்மைகளோடும், கண்ணீரின் கசப்புகளோடும் ஒரு கவிதையை உள்வாங்க முடியுமானால் அப்பொழுதிலிருந்து அந்தக் கவிதையோடு உடைக்க முடியாத பந்தத்தை அந்த வாசகன் தொடங்குகிறான்.

மதனின் கவிதைகளை அடர்ந்து பெய்யும் பனியில் இன்றைய தினத்தின் பெரும் சுமைகளோடு வாசிக்கத் துவங்குகிறேன்.

மனதின் அழுக்குகளையும் கருங்கசடுகளையும் போகிற போக்கில் தெறித்துவிட்டுச் செல்லும் பாங்குடன் சில கவிதைகளும், அன்றாட சுகதுக்கங்களின் பிதுங்கலோடு வெளிப்படும் சில கவிதைகளும் இந்தத் தொகுப்பில் என்னைக் கவர்கின்றன. இந்தக் கவிதைகளின் இன்னொரு அம்சம் கவிதைக்குள் வலிந்து புதிர்களையும் சுழல் சொற்களையும் உருவாக்கும் முயற்சி அதிகம் தென்படவில்லை. எளிமையான வரிகள் கவித்துவத்தோடிருக்கின்றன; அந்த வரிகள் அதிகப் பிரயத்தனமில்லாமல் காட்சிகளை உருவாக்குகின்றன.

நம் வாழ்நாளின் பெரும்பாலான கணங்கள் துக்கத்தால் நிரப்பப்படுகின்றன.வாசலில் பெய்யும் மழை கொஞ்சமாக ஜன்னலுக்குள் சிதறுதலைப் போல சந்தோஷங்கள் எப்பொழுதும் சிறு சிதறல்களாகவே இருக்கின்றன. இந்தச் சிதறல்களை தேடி துக்கத்தின் முட்பாதைகளில் நடந்து கொண்டேயிருக்கிறது மனிதமனம். இந்தத் தேடலின் தடுமாற்றத்தில் ஆதரவாகப் பற்றிக் கொள்ள காமத்தையும்,கோபத்தையும் இன்னபிற உணர்ச்சிகளையும் மனம் நாடுகிறது. இந்த சாமானிய மனநிலை மதனின் கவிதைகள் முழுவதுமாக விரவிக்கிடக்கிறது. கவிதைகள் சாதாரணமாக வாசகனோடு உரையாடுகின்றன.

ஒரு கவிதையில், ஒவ்வொரு தினமும் ஏழுமணிக்கு எழ வேண்டிய கட்டாயத்திலிருக்கும் ஒருவன், 6.50க்கு அலாரம் வைத்து அடுத்த பத்து நிமிடம் தூங்கியும் தூங்காமலும் தனக்கான சுதந்திரத்தை அவனாகவே எடுத்துக் கொள்கிறான். கவிதையில் நேரடியாக சொல்லப்படாத இந்தச் சந்தோஷமும் சிறு சுதந்திரமும் நவீன வாழ்வு நகர மனிதன் மீது நிகழ்த்தும் நெருக்கடியான வன்முறையின் அவலத்தை காட்சியாக்குகின்றன.

கவிதைக்கான வரையறை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் ஒரு வரையறை இருந்திருக்கிறது. ஒவ்வொரு நிலப்பகுதியிலும் ஒரு வரையறை என்றிருக்கிறது அல்லது ஒவ்வொரு வாசகனும் ஒரு வரையறை வைத்திருக்கிறான். நான் சுதந்திரமாய் உலவி வருவதற்கென அந்தர வெளியை உருவாக்கித் தருவதாக எனக்கான கவிதை இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இந்த வெளியில் நான் கவிதைக்கான சில புதிர் கேள்விகளை உருவாக்குவேன். அந்த புதிர்களுக்கான விடைகளை தேடி வர எனக்கான சிறகினை பொருத்திக் கொண்டு அலைந்து திரிவேன். சில விடைகளைக் நான் கண்டறியக் கூடும் ஆனால் அவை எதுவுமே திருப்தியளிக்கப் போவதில்லை. இந்த திருப்தியின்மைதான் கவிதை உருவாக்கி வைத்திருக்கும் அந்தர வெளியின் எல்லையை விரிவாக்குகிறது, மீண்டும் என் தேடல் தொடரும். உருவாக்கிய புதிர்களுக்கும் அதற்கான பதில்களுக்குமான இந்த கண்ணாமூச்சி விளையாட்டான வாசிப்பனுபவமே எனக்கு உச்சபட்ச கவிதானுபவமாக இருந்திருக்கிறது.

இத் தொகுப்பில் இருக்கும் 'என் பங்குக் காதல் கவிதைகளில்' இரண்டாவதாக இருக்கும் "ஒரு அவன் ஒரு அவள்/ஒரு காதல் வந்தது/ஒரு உலகம் காணாமல் போனது" என்ற கவிதை எனக்கு மிகப்பிடித்தமானதாக இருக்கிறது. இந்தக் கவிதை உருவாக்கும் வெற்றிடத்தில் வாசகன் உருவாக்கிக் கொள்ளும் கேள்விகளும் அவன் தேடிச் செல்லும் விடைகளும் கவிதையை வாசகனுக்கு நெருக்கமானதாக்குகின்றன. மதனின் சில கவிதைகளில் இருக்கும் "ஒரு" என்ற சொல் தேவையற்றதாக தொங்கிக் கொண்டிருக்கிறது. அதே "ஒரு" இந்தக் கவிதையில் மிக முக்கியமானதாக இருக்கிறது.ஒவ்வொரு "ஒரு"வும் வினாக்களை உருவாக்குகிறது.

'எல்லோரும் மறந்துவிட்டிருப்பது' என்ற கவிதையை இந்தத் தொகுப்பில் முக்கியமான கவிதையாக குறிப்பிடுவேன். காவ்யா என்பவள் அக்கா ஆகிறாள்; ஆனால் அவள் கவிதையில் தன்னை பொறுத்திக் கொள்ளும் வாசகனின்/ளின் முலையை கிள்ளிவிட்டுச் செல்கிறாள். அவள் செய்யும் இந்தக் காரியம் நம் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் 'அக்கா' என்ற பிம்பத்தை தகர்த்தெறிகிறது. இந்த தகர்ப்பு தரக்கூடிய அதிர்ச்சி மிக இயல்பானது. கவிஞன் வாசகனுக்கு அதிர்ச்சியூட்டுவதற்கான எந்த முயற்சியையும் இந்தக் கவிதையில் செய்வதில்லை. இந்த இயல்புத் தன்மையும், பிம்பத் தகர்ப்பும் இந்தக் கவிதையை முக்கியமானதாக எனக்குக் காட்டுகின்றன.

இன்னொரு கவிதை 'கையலாகாதவனின் காலை'. இந்தக் கவிதை முந்தைய வரிகளில் சொன்ன கவிதையைப் போல அதிர்ச்சி தருவதில்லை, ஆனால் குப்பியில் இருந்து வெளிவரும் உறைந்து போன தேங்காயெண்ணையைப் பார்த்து, முந்தைய இரவில் கையலாகத்தனத்தை ஒரு ஆண்மகன் நினைவு கொள்கிறான் என்பது ஈர்ப்பானதாக இருக்கிறது.

கவிதைக்குள் சிறுகதை இருப்பது பற்றிய ஒரு விவாதம் தொடர்ந்து இலக்கிய உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எளிய வாசகன் இந்த விவாதத்தை நிராகரித்துவிடுகிறான். அவனுக்கு வடிவம் குறித்தான கவலை இருப்பதில்லை. வாசிப்பனுபவம் என்னும் ஒற்றை மையம் அவனை தொடர்ந்து இயங்கவும் வாசிக்கவும் செய்கிறது. மதன் சில கவிதைகளில் சிறுகதைக்கான முடிச்சுகளை வைத்திருக்கிறார். 'மலர் வாதையும் உடன் சில அனிச்சை துரோகங்களும்' கவிதையில் காரிலிருந்து உதிர்ந்து விழும் ரோஜாவைப் பற்றிய கவனம் கவிதையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. இதே கவிதையில் அதன் வடிவத்தில் இறுதியாக முயன்று பார்த்திருக்கும் முயற்சி சுவாரஸியமாக இருக்கிறது.

எப்பொழுதுமே கவிதைகளில் வரும் 'நான்' கவிஞனாக இருப்பதில்லை. அந்த 'நான்' வாசகன். வாசிப்பவன் 'நான்' என்னுமிடத்தில் தன்னைப் பொருத்திக் கொள்கிறான். இந்த இடத்தில் கவிஞன் நகர்ந்து வாசகனுக்கான இடத்தை தர வேண்டும். கவிஞன் நகராமல் இருப்பானேயானால், அந்தக் கவிதையை விட்டு வாசகன் நகர்ந்துவிடுவான். இந்த சூட்சுமத்தை பல கவிதைகளில் லாவகமாக கையாண்டிருக்கும் மதன் சில கவிதைகளில் அப்பட்டமாக "மதனாகவே" இருக்கிறார். "நினைவில் கொள்ளும் கலை" என்றொரு கவிதை. நல்ல கவிதையாக வந்திருக்க வேண்டிய இந்தக் கவிதையின் கடைசி வரிகளில் தன்னை நுழைத்து கவிதையை சிதைத்திருக்கிறார்.

இந்தத் தொகுப்பில் குறைகள் இருக்கின்றன. ஆனால் கவிதைக்கான முயற்சி மதனுக்கு கைகூடியிருக்கிறது. மேலோட்டமான மதிப்பீடுகளையும், கவித்துவங்களையும் நிராகரித்துவிட்டு பாசாங்கில்லாத கவிதை வரிகளை நோக்கி மதன் நகர்வார் என நம்புவதற்கான சாத்தியங்கள் இந்தத் தொகுப்பின் கவிதைகளில் தெரிகிறது.

Dec 26, 2009

சி.எஸ்.சுப்ரமணியம் சில புகைப்படங்கள்நேற்று(25th Dec 2009) சி.எஸ்.எஸ் அவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தேன். பொத்தல்களுடனான ஒரு கிழிந்த அழுக்கு வேட்டி, பல நாட்களாக சவரம் செய்யப்படாத முகம் என்றிருந்தார். இதே தோற்றத்தில்தான் ஒரு மாவட்ட ஆட்சியர் தனக்கு விருது வழங்கும் விழாவுக்குச் சென்றிருக்கிறார்.

என் முகத்தை சட்டென அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் இருந்தார். அறிமுகப் படுத்திக் கொண்டேன். I am glad என்றார்.

வழக்கம் போல கம்யூனிஸ சித்தாந்தம் பன்னாட்டு நிறுவனங்களில் சிதைக்கப்படுவது குறித்தான சில கேள்விகளை கேட்டுவிட்டு, தன் உடல்நிலை பற்றியும் கொஞ்சம் பேசினார்.

அவர் புகைப்படம் எதுவும் எடுத்துக் கொண்டதில்லை. தன் புகைப்படங்கள் எதுவுமில்லாத ஒரு மனிதராக இருக்கிறார். எனக்குத் தெரிந்து புகைப்படங்கள் பிறர் எடுப்பதையும் பேட்டி எடுப்பதையும் அவர் அனுமதிப்பதில்லை.

தயங்கியவாறு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்றார். வேண்டுகோளை நிராகரிக்க முடியதவராக "ஒரு கிழவன் முகம் தானேப்பா தெரியும்" என்றார். பரவாயில்லை என்று சொல்லியவாறு பாரதி விருதை அருகில் எடுத்து வந்து வைத்தேன். பாரதியை சந்தித்திருக்கிறார். தனது கல்லூரி படிப்பின் போது திருவல்லிக்கேணியில் பாரதி இருந்த போது சந்தித்திருக்கிறார். அதே பகுதியில் தான் அந்தச் சமயத்தில் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும் இருந்திருக்கிறார். ஆனால் இவை பற்றிய சி.எஸ்.எஸ் நினைவுகள் மங்கியிருக்கிறது.

புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்பும் போது அடுத்த முறை வரும் போது சந்திக்கிறேன் என்றேன். சிரித்துக் கொண்டு எப்பொழுதும் சொல்வது போல‌ தூணைப் பிடித்துக் கொண்டு All the best என்றார். வெளியில் வண்டியை எடுக்கும் போதும் அவரைப் பார்த்தேன். அதே தூணைப் பிடித்துக் கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பின் குறிப்பு:

பாரதியார் 1921 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். எனவே 1910 இல் பிறந்த சி.எஸ்.எஸ் தன் கல்லூரி சமயத்தில் பாரதியை பார்த்திருக்க முடியாது. அவரே குறிப்பிட்டது போல தன் மங்கிய நினைவுகளில் இருந்து தரும் சில தகவல்களில் பிழை வருவதை தவிர்க்க முடியாது.(இந்தத் தகவலை எஸ்.வி.ஆர் அவர்கள் சுட்டிக் காட்டி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்)

Dec 24, 2009

வெறும் ஒரு இலையுதிர்கால மாலைதான்


இந்த நள்ளிரவில், மார்கழிக் குளிரின் சில்லிடுதலில், குரைத்துத் திரியும் நாய்களின் இரைச்சலால் ஆர்.அபிலாஷ் தொகுத்திருக்கும் "இன்றிரவு நிலவின் கீழ்" என்ற ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பை மேலோட்டமாகவே புரட்ட முடிகிறது.

கவிதைகள்(ஹைக்கூ) பேய்களைப் போலிருக்கின்றன. மனம் உற்சாமடையும் போதெல்லாம் ஒரு ஹைக்கூவை படிக்கிறேன். பின்னர் கொஞ்ச நேரம் ஆயாசமாக அமர வேண்டியிருக்கிறது. மீண்டும் ஒரு ஹைக்கூ. மீண்டும் அமைதி. ஒவ்வொரு கவிதையை வாசிக்கும் போதும் ஹைக்கூ என்பதன் வரையறையை இணையத்தில் தேட வேண்டும் என்று நினைத்தாலும் அப்படிச் செய்ய முடிவதில்லை. இந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் "இதுதான் ஹைக்கூ" என்பதற்கான வரையறையை செய்வது கொள்வதற்கான அனைத்து சாத்தியங்களையும் வாசகனுக்கு கொடுக்கின்றன. ஆனால் மனம் இந்த வரையறை உருவாக்குதலில் லயிப்பதில்லை. கவிதை தரும் அனுபவத்தை விடவா வரையறை/வடிவம் அறிதலில் இன்பம் கிடைத்துவிடப் போகிறது என்ற உதாசீனம் மனதின் ஏதோ ஒரு இடத்தில் உருவாகிவிடுகிறது.

இந்தக் ஹைக்கூக்களுக்கென ஒரு பருவம் இருக்கிறது. அந்த பருவத்திற்கான குறிப்போ குறியீடோ கவிதையில் இருக்கிறது. இந்த மொழி பெயர்ப்பு ஹைக்கூக்களை வாசிக்கும் போது ஒரு காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. மேற்கத்திய பருவநிலை பற்றி ஒரு மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். பனிக்காலம் என்றால் காற்றும் நீரும் உறைந்து சாலையில் மென்பனி விரவிக்கிடக்கும் கடுங்குளிர்காலம். வெக்கை என்றால் இந்திய தேசத்து வெம்மையில்லை. சற்றே மிதமான கோடை. ஆடைகளை கழற்றிவிட்டு சூரிய ஒளி வாங்குவதற்காக ஒரு மணியின் மதிய வெயிலில் கடற்கரையில் கிடந்தாலும் உடல் வெந்துவிடாத வெப்பம். பின்னர் வாசிக்கும் போது ஒவ்வொரு கவிதையும் வாசகனை ஒரு பருவத்திற்குள் தள்ளி விடுகிறது. அது கவிதைக்கும் வாசகனுக்குமான விளையாட்டு.

ஹைக்கூக்கள் ஒரு காட்சியையும், ஒரு பருவத்தையும் தன்னுள் கொண்டிருக்கின்றன. கவிஞன் எந்த பிரயத்தனமுமில்லாமல் இவற்றைச் சொல்லிச் செல்வதாக தோன்றுகிறது. இதிலிருந்து வாசகன் தனக்கான உலகத்தை உருவாக்கிக் கொள்கிறான். கவிதைக்கான சாத்தியங்களும், அவனின் புரிதலையும் பொறுத்து வாசகன் ஹைக்கூவை நெருங்குகிறான் என்று சொல்லும் போது 'புரிதல்' என்ற சொல்லில் நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஹைக்கூவில் புரிதல் என்று எந்த சிக்கலும் இல்லை. பனி மூட்டத்தில் மூதாட்டி நட்சத்திரங்களை நோக்குகிறாள் என்பது ஒரு காட்சி மட்டுமே. அதோடு கூட வாசிப்பவன் நிறுத்திக் கொள்ள முடியும். இந்தக் காட்சியின் நீட்சியாக தான் ஒரு கதையை உருவாக்குவதும், தன் அனுபவத்தை கோர்ப்பதும் கவிதையோடான வாசகனின் ஒன்றுதலை பொறுத்து அமைகிறது.

ஆலன் ஸ்பென்ஸ் கவிதை ஒன்று பின்வருமாறு இருக்கிறது.

குழந்தைகள் வரைகிறார்கள்
உலர்ந்து மறையும்
ஓவியங்கள்

மழைக்காலத்தில் நீரில் வரையும் ஓவியங்கள் என்பது என் புரிதல், இந்தக் காட்சியை குழந்தைகள் மழைக்காலத்தில் செய்யும் ஒரு செய்லோடு மட்டுமாகவோ அல்லது அவர்களது வாழ்வோகவோ அல்லது தத்துவார்த்தமாக குழந்தமையின் நிலையின்மை வரைக்குமோ யோசிக்க முடிகிறது.

இந்தக் கவிதைகளை தொகுப்பாக்கியதில் அபிலாஷ் மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார் என்று படுகிறது. வேனிற்கால கவிதைகள், மழைக்கால கவிதைகள், குளிர்கால கவிதைகள் என்று கவிதைகள் பருவத்தினடிப்படையில் ஒரு சேர இருக்கின்றன. இந்தத் தொகுப்பில் இருக்கக்கூடிய ஒரு சில கவிதைகள் தனியாக வாசிக்கும் போது ஆழ்ந்த வாசிப்பனுபவம் தராமல் இருக்கக் கூடும் ஆனால் அவற்றை தொகுப்பில் ஒத்த பருவமுடைய வேறு சில கவிதைகளுடன் சேர்த்து வாசிக்கும் போது மிகுந்த சந்தோஷம் அளிப்பதாக இருக்கின்றன.
கர்த்தரின் சிலை
தலைக்குப் பின் சூரியன்-
பட்டாம்பூச்சி தன் சிறகுகளை விரிக்கிறது.

இந்தக் கவிதை ஒற்றைக்காட்சியை மட்டுமே தருவதாக தெரிகிறது. பருவமும் மறைந்திருக்கிறது. இது வேனிற்கால கவிதைளோடு தொகுப்பில் இருக்கிறது என்னும் போது சூரியன் இந்தக் கவிதையில் தனித்து தெரிகிறது. கர்த்தருக்குப் பின் சூரியன் இருப்பது காலையா மாலையா என்ற கேள்வியும், பட்டாம்பூச்சி சிறகுகளை விரிப்பதன் காட்சியும் வேறு பல புரிதல்களை உருவாக்குகின்றன.
ஒவ்வொரு ஹைக்கூவும் ஒரு உலகத்தை தனக்குள் அடக்கியிருக்கிறது. அந்த உலகம் வாசகனை தனக்குள் இழுத்துக் கொள்வதற்காக பெரும் கதவுகளை திறந்து வைத்திருப்பதாகத் தோன்றுகிறது.

இதே தொகுப்பில் சில ஹைக்கூக்கள் நேரடியான காட்சியை சுட்டுவதில்லை. நேரடியான பருவ கால குறிப்பும் இல்லை.
நாய்ப்பீ
அல்லது நான்
ஈக்கு பொருட்டில்லை

இந்தக் கவிதையில் பருவம் நேரடியாக இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை ஈக்கள் அதிகம் அலைவது என்பது வேனிற்காலத்தின் குறியீடாக இருக்கலாம் என்று படுகிறது. ஒற்றைவரி உரையாடலாக இருக்கும் இந்த சுய எள்ளல் மெல்லிய சிரிப்பை ஊட்டியது.
ஹைக்கூக்கள் என்பவை தத்துவம் சார்ந்தவை மட்டுமே என்பதும் சரியான கணிப்பில்லை. அங்கதமும் எள்ளலும் இந்தக் கவிதைகளில் தெறித்துக் கிடக்கின்றன. இன்னொரு முக்கியமான அம்சம், கவிதையின் இளமை. இதே கவிதைகள் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒரு வாசகனுக்கு பழைய கவிதை என்ற எண்ணத்தைத் தரப்போவதில்லை.

அபிலாஷின் பெரும்பான்மையான மொழிபெயர்ப்பு கவிதைகள் ஆங்கில மூலத்தை வாசிக்க வேண்டும் என்ற நினைப்பைத் தரவில்லை. வெகு சில கவிதைகள் அப்படி வாசிக்கச் செய்கின்றன. warmth என்ற சொல் ஒரு கவிதையில் கதகதப்பு என்றும் இன்னொரு கவிதையில் வெதுவெதுப்பு என்று வருகிறது. பொருளில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் மூலத்தை எழுதிய கவிஞனின் மனநிலைக்குச் செல்ல வாசகனுக்கு ஆங்கிலச் சொல் தேவைப்படுகிறது.

இந்தத் தொகுப்பின் சில ஹைக்கூக்களில் வரும் கவிதைக்குரிய தேசத்திற்கான பழங்கள், காய்கள், பூக்கள், பறவைகளின் பெயர்கள் வரும் போது சற்று அந்நியத்தன்மையுடையவையாக இருந்தன. இது மொழிபெயர்ப்பின் தவிர்க்க முடியாத அம்சம் என்றே நினைக்கிறேன். ஆனால் இத்தகைய மொழிபெயர்ப்பின் பலவீனங்கள் என்பது இந்தத் தொகுப்பில் மிகச் சொற்பம். எனக்கு அவை Negligible.

ஹைக்கூ கவிதைகளுக்கென இருக்கும் வரைமுறைகள், வடிவம் போன்ற எந்தக் கூறின் மீது எனக்கு புரிதல் இருந்ததில்லை. ஆனால் டீக்கடை செய்தித்தாள்களின் ஓரங்களில் மூன்று வரிகளை மடக்கிப் போட்டு ஹைக்கூ என்ற தலைப்பின் கீழாக பிரசுரிக்கப்பட்டிருப்பது சத்தியமாக ஹைக்கூ இல்லை என்று நம்பி வந்திருக்கிறேன். அந்த நம்பிக்கை பொய் போகவில்லை என்பதை "இன்றிரவு நிலவின் கீழ்" தொகுப்பை வாசிக்கும் போது உணர்கிறேன்.

எனக்கு மிக நெருக்கமான ஹைக்கூ:

ஈ என் மூக்கில்
நான் புத்தன் அல்லன்
இங்கே ஒரு ஞானமும் இல்லை
100 நவீன கவிஞர்களின் ஹைக்கூக்களை மொழிபெயர்த்து கவிஞர்களைப் பற்றிய சிறு குறிப்புடன்(இருபது கவிஞர்களின் குறிப்புகள்) கையடக்கமாக வந்திருக்கும் இந்த நூல் கைக்கு கிடைத்ததிலிருந்து இரு மாதங்களாக வாசிக்காமல் வைத்திருந்தது ஏன் என்று தெரியவில்லை.

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.

Dec 23, 2009

குழந்தை அழுது கொண்டிருக்கிறது

எல்லோரும் கலைந்துவிட்ட
மைதானத்தில்
குழந்தை
அழுது கொண்டிருக்கிறது

தேம்பலுக்கான காரணம் அதனிடமில்லை
விசும்பலுக்கான பொருளும் இல்லை
என்றாலும்
அழுது கொண்டிருக்கிறது

அது
கருணையை எதிர்பார்க்கவில்லை
நண்பர்களை விரும்பவில்லை
ரொட்டித் துண்டின் பசியாற்றலை நினைக்கவில்லை
ஆனால்
அழுது கொண்டிருக்கிறது


குழந்தையின் கண்ணீர் துக்கரமானது
மட்டுமில்லை
பரிசுத்தமானதும்.

குழந்தையின் துக்கம் கசியச்செய்வது
மட்டுமில்லை
தனிமையானதும்.

அவை
பதில்களற்ற வினாக்கள்
மட்டுமில்லை
அவிழாத புதிர்களும்.

சிறு மழை
இந்த
அழுகையை நிறுத்தலாம்
ஒரு
குருவி கவனத்தை திசை திருப்பலாம்
மீறி
அழுது கொண்டிருக்கிறது

கைவிடப்பட்ட மைதானத்தில்
அக்குழந்தையின்
உதிராத
கண்ணீர்த்துளியில்
யாரும் கலையாத
விளையாட்டு
ஒன்றை உருவாக்கும்
அம்மாவுக்கு
தெரிந்திருக்கிறது
அந்த
அழுகையை நிறுத்த.

Dec 22, 2009

படைப்பிலக்கியத்தில் வாரிசு என்னும் நகைச்சுவை

அரசியல்வாதியின் வாரிசு, தொழிலதிபரின் வாரிசு என்பது போல இலக்கியவாதியின் வாரிசு என்று சொன்னால் சிரிப்பு வந்துவிடுகிறது.

எழுத்தாளன் எதற்காக வேறொருவரின் வாரிசாக இருக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது? படைப்பாளியை யாரும் உருவாக்குவதில்லை. அவன் தன் வாழ்வியல் அனுபவங்களை தன் எழுத்தில் கொண்டு வருகிறான். அவன் யாருடைய கால்தடத்தையும் பற்றிக் கொள்ள வேண்டியிருப்பதில்லை. அவன் உருவாக்கும் தடங்களின் ஆயுள் அவனது எழுத்தின் வலிமையையும் ஆழமும் பொறுத்தே இருக்கிறது.

இது மட்டுமே நிதர்சம்.

எந்த ஒரு படைப்பாளியாலும் வேறு ஒருவனை தன் படைப்பு சார்ந்த வாரிசாக உருவாக்க முடியாது.

தன் எழுத்துக்களால் கவனம் பெற முடியாத எழுத்தாளன் தன் பெயரை நிலை
நிறுத்துவதற்கான சில அண்டர்கிரவுண்ட் வேலைகளின் மூலமாக கொஞ்ச நாட்களுக்கு காலத்தை ஓட்ட முடியுமே தவிர்த்து அவனால் எந்த விதத்திலும் கால ஓட்டத்தில் தொடர்ந்து நிலைக்க முடியாது.

தன் எழுத்துக்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படும் போது அந்த நிராகரிப்பின் வலியை ஏற்றுக்கொள்ள முடியாதவன் சில சூட்சுமங்களால் தன் பெயரை பிரசுரத்தில் பார்க்கிறான். இந்த சூட்சுமங்கள் சில நாட்களில் அவனுக்கு மனச்சோர்வை தந்து அவனாகவே இலக்கிய செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ளச் செய்கின்றன. செயல்பாடுகள் நிற்கும் போது அவனது பெயர் இலக்கிய வட்டாரத்தில் காணாமல் போகிறது. அவனது படைப்புகளும் இல்லாமல் போகின்றன.

மற்றபடி இவன் என் வாரிசு என்று ஒரு இலக்கியவாதி அறிவிப்பதை பம்மாத்து என்றோ அல்லது வெற்று ஸ்டண்ட் என்றோ சொல்லிவிடுவேன். தான் தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொள்ள விரும்பும் அதிகார மையத்திற்கான ஆரம்பப்புள்ளிதான் தன் வாரிசை அறிவிப்பது.

எப்படி இளம் எழுத்தாளனுக்கு ஒரு பற்றுக்கோல் தேவைப்படுவதாக அவன் உணர்கிறானோ அது போலவே மூத்த எழுத்தாளன் தன் படைப்பின் மீதான நம்பிக்கை இழக்குமிடத்தில் சில அரசியல் செயல்பாடுகளை மேற்கொள்கிறான். இதுதான் வாரிசு, பள்ளிக்கூடம் என்ற சொற்பிரயோகங்களுக்கான அடிப்படை என்று நான் நினைக்கிறேன்.

எழுத்தின் நீட்சி என்பதற்கும், எழுத்தின் வாரிசு என்பதற்கும் அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. சுகுமாரனோ அல்லது கலாப்ரியாவோ தொட்டிருக்கும் புள்ளியிலிருந்து அடுத்த கட்டத்திற்கு தன் கவிதையின் மூலமாக ஒரு கவிஞன் நகர்வது என்பது அவர்களின்(சுகுமாரன்/கலாப்ரியா) எழுத்தின் நீட்சி. முன்னோடிகள் நடந்த திசையில் நடக்கலாம். ஆனால் அதற்கு அவர்களின் எழுத்துக்கு வாரிசு என்று பொருளில்லை.

இந்த உருப்படியற்ற சித்து விளையாட்டுக்கள் பற்றி முழுமையான புரிதலை ஒரு உண்மையான வாசகன் வைத்திருப்பான் என்னும் நம்பிக்கை இருக்கிறது. இந்த சால்ஜாப்புகள் அவனை எந்த விதத்திலும் நெருங்க முடிவதில்லை. மேலோட்டமான வாசிப்பும் அரைகுறையான புரிதலும் உடைய சிலரை எதிர்நோக்கி நிகழ்த்தும் உள்ளீடற்ற இந்த இலக்கிய அரசியல் காலி டப்பா மட்டுமே.

படைப்பில் வாரிசு என்று எதை வைத்துச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. ஒரு வேளை நகலைச் சொல்கிறார்களோ?. தனக்கென தனித்துவம் இல்லாத ஒரு படைப்பாளியை வாசகன் எதற்காக வாசிக்க வேண்டும். அசல் இருக்கும் போது வாசகனுக்கு நகல் எதற்கு தேவைப்படுகிறது? எனக்கு குழப்பமாக இருக்கிறது.

சரி அதை விடுங்கள். அடுத்த கிரிக்கெட் போட்டி எப்பொழுது?

ஒரு பெயர் வேண்டும்

பத்து பதினைந்து நாட்களாக குழந்தைக்கான பெயருக்காக இணையதளங்களை மேய்ந்து கொண்டிருக்கிறேன். முதலில் இந்தத் தேடல் இத்தனை கடினமானதாக இருக்கும் என்று நினைக்கவில்லை.

இந்த தேடலின் சிக்கலே நமக்கே தெரியாமல் விதிகள் உருவாக்கப்படுவதுதான். புதிய விதிகள் மெளனமாக நுழைவதும் சில பழைய விதிகள் தளர்த்தப்படுவதும் தொடர்ந்து அரங்கேறுகிறது.

தேர்ந்தெடுக்கும் பெயர் நான், மனைவி என்ற முதல் தலைமுறையில் தொடங்கி, அம்மா அப்பா என்ற இரண்டாம் தலைமுறை, அப்பச்சி அமத்தா என்ற மூன்றாம் தலைமுறை வரைக்கும் பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்பது முதல் விதி.

இருபது வருடங்களுக்கு பிறகு 'உங்களுக்கு வேறு பெயரே தோன்றவில்லையா?" என்று மகன் கேட்கக் கூடாது என்பது இரண்டாவது விதி.

இவ்வாறான சில அடிப்படையான விதிகளோடு பெயர்களுடனான விளையாட்டை இரவில் கணிணியில் தொடர்கிறேன்.

குறிப்பிட்ட பெயர்களே திரும்ப திரும்ப வேறு வேறு தளங்களில் இருக்கின்றன. சில தமிழ் பிரியர்களின்(வெறியர்கள்?) தமிழ் மோகம் எரிச்சல் உண்டாக்குகிறது. தமிழ் படுத்துகிறேன் என்ற பெயரில் பல பெயர்களை குதறி எடுத்திருக்கிறார்கள்.

முடிந்தவரை வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் பெயர் கிடைத்தால் பரவாயில்லை என்பது 2() விதி. இவை தவிர்த்து நானாக உருவாக்கி வைத்திருக்கும் விதிகள் பின்பருபவை.

1. ஊரில் எந்த முதியவரும் சிக்கலில்லாமல் அந்தப் பெயரை உச்சரிக்க வேண்டும்.

2. ''கரம் இருந்தால் ஆங்கிலத்தில் எழுதுவது சிரமம் என்பதால் அவற்றை தவிர்க்க விரும்புகிறேன்.

3. வேற்று மொழிக்காரர்கள் பெயரை சிதைக்கக் கூடாது.

4. 'ன்' விகுதி வேண்டாம்.

5. Permutatian and combination க்குதயார்.


இத்தனை விதிகளில் ஒன்றிரண்டு மீறப்படலாம். விருப்பமான பெயர் அமையாமல் போகும் பட்சத்தில் அனைத்து விதிகளையுமே மீறிவிடக் கூடும். Break the rules!!!
உங்களுக்கு ஏதேனும் பெயர் தோன்றினால் சொல்லுங்கள்.
--
ஆர்.அபிலாஷ் தொகுத்திருக்கும் "இன்றிரவு நிலவின் கீழ்" என்ற ஹைக்கூக்கள் மிகுந்த உற்சாகம் தருவதாயிருக்கின்றன.

இதுவரைக்கும் ஹைக்கூவுக்கான வரைமுறைகள் எதையும் தெரிந்து வைத்திருக்கவில்லை. சுஜாதா அவ்வப்போது அவரது கட்டுரைகளில் எழுதியதை தவிர தேடியும் படித்ததில்லை. ஆனால் டீக்கடை செய்தித்தாள்களின் ஓரங்களில் மூன்று வரிகளை மடக்கிப் போட்டு ஹைக்கூ என்ற தலைப்பின் கீழாக பிரசுரிக்கப்பட்டிருப்பது சத்தியமாக ஹைக்கூ இல்லை என்று நம்பி வந்திருக்கிறேன். அந்த நம்பிக்கை பொய் போகவில்லை என்பதை "இன்றிரவு நிலவின் கீழ்" தொகுப்பை வாசிக்கும் போது உணர்கிறேன்.
இது பற்றி விரிவாக எழுத விருப்பமிருக்கிறது. எதற்குத்தான் விருப்பமில்லை? (எழுதுவதற்கு வளைய வேண்டும்).
ஒரே ஒரு ஹைக்கூ. (இது எத்தனை ஆழம்....எத்தனை மென்மை என்று பாருங்கள்..)

குவிந்த கைகளில்
எனக்குக் கொண்டுவருகிறாள்
சில்வண்டின் மெளனம்

Dec 10, 2009

வெளிச்சம் விழாத நதி

சி.எஸ்.சுப்பிரமணியம் என்ற பெயர் நான் ஹைதராபாத்தில் இருந்த போது அறிமுகம் ஆனது. எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும் போது சி.எஸ்.எஸ் என்ற முதுபெரும் சுதந்திர போராட்ட வீரர் கோபியில் வசிப்பதாகவும், அவர் பழம்பெரும் கம்யூனிஸ்ட் என்ற தகவலையும் சொன்னார்.

ஹைதராபாத் எங்கள் ஊருக்கு வெகுதூரம் என்பதால் ஆறுமாதத்திற்கு ஒரு முறையோ அல்லது சில சமயங்களில் ஆறுமாதம் தாண்டிய பிறகும் அம்மா ஊருக்கு வரச் சொல்லி போனில் அழும் வரையிலும் இழுத்தடித்தோ செல்வதுண்டு.
ஊருக்குச் செல்லும் சமயங்களில் எல்லாம் பழனியம்மாள் பள்ளிக்கு அருகில் இருக்கும் சி.எஸ்.எஸ் வீட்டில் அவருடன் நான்கு மணி நேரங்கள் வரைக்கும் பேசிக் கொண்டிருப்பேன். அவருக்கு என் மீது நம்பிக்கையும் பிரியமும் உண்டு. அவருக்கு பழைய விஷயங்கள் பலவும் மறந்திருக்கும், அவற்றை ஞாபகப்படுத்தினால் பேசுவார்.

எனக்கு இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் இருந்த கம்யூனிஸ்ட்கள், சதி வழக்குகள் போன்றவை பற்றிய பரிச்சயம் இல்லாத சமயம் அது. ஊருக்குப் போவதற்கு முன்னதாக, ஹைதராபாத்தில் உள்ள எஸ்.வி.ராமகிருஷ்ணன்
அவர்களிடம் அவை பற்றிய தகவல்களை பேசி குறிப்பெடுத்துக் கொள்வேன். (எஸ்.வி.ஆர் மிகச் சிறந்த வரலாற்றாய்வாளர். வருடம் வாரியாக நடந்த நிகழ்வுகளின் நினைவூற்று அவர்.(அது அந்தக் காலம், வைசிராயின் கடைசி நிமிடங்கள் ஆகிய சுவாரசியமான புத்தகங்கள் உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது.))

எஸ்.வி.ஆருக்கு ரஜினி பாமிதத் பற்றி நன்றாக தெரிந்திருக்கும், அவர் சொல்லும் போது 'ரஜினி பாமிதத்' என்ற பெயரை ஒரு சிறு காகிதத்தில் குறித்துக் கொள்வேன். சி.எஸ்.ஸிடம் பேசும் போது ரஜினி பாமிதத் என்ற பெயரை மட்டும் சொல்வேன். அவர் தன் ஞாபகப் பெட்டகத்தில் இருப்பனவற்றை மெதுவாகச் சொல்வார். இப்படியான பேச்சு எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும் அவருக்கு பகிர்தலின் ஆசுவாசத்தையும் கொடுப்பதாக உணர்ந்திருக்கிறேன். தன்னை சந்திக்க யாரும் வருவதில்லை என்பதை சில சமயங்களில் என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்.
---------
ஈரோட்டில் டிசம்பர் 11 ஆம் நாள் சி.எஸ். எஸ் அவர்களுக்கு மக்கள் சிந்தனைப் பேரவை என்ற அமைப்பின் சார்பில் 'பாரதி' விருது வழங்கி கெளரவிக்கிறார்கள். மக்கள் சிந்தனைப் பேரவையை வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன் நடத்துகிறார். ஈரோட்டில் துடிப்பான நிகழ்வுகளை திறம்பட நடத்தும் ஆற்றல் மிக்கவர் ஸ்டாலின். ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு புத்தகக்
கண்காட்சியை இந்த அமைப்பு முன்னின்று நடத்துகிறது. சி.எஸ்.எஸ் அவர்களை தகுந்த நேரத்தில் கெளரவப்படுத்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
---------
கோமல்.சுந்தரம் அய்யர்.சுப்பிரமணியம் என்பதன் சுருக்கம் சி.எஸ்.எஸ். இந்த ஆண்டில் சரியாக இவருக்கு நூறு வயது நடக்கிறது.

1910 ஆம் ஆண்டு ஜூலை பதினாறாம் தேதி பிறந்திருக்கிறார். பள்ளிப்படிப்பை கொஞ்சம் மதுரையிலும் பின்னர் சென்னையிலும் படித்ததாகச் சொன்னார். பட்டப்படிப்பு சென்னை மாநிலக் கல்லூரியில். கல்லூரி பருவத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், கம்யூனிஸ்ட் பி.ராமமூர்த்தி ஆகியோர் இவருடன் பயின்றிருக்கிறார்கள்.

கல்லூரி முடித்துவிட்டு ஐ.சி.எஸ் படிக்க வேண்டும் என்பதற்காக 'சீமைக்கு'(இலண்டன்) கப்பல் ஏறியிருக்கிறார். ஐ.சி.எஸ் என்பது தந்தையாரின் விருப்பமாக இருந்திருக்கிறது. உலகப்பிரசித்தி பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் மாணவராக இருந்த சமயத்தில்தான் கம்யூனிஸத்தின் மீதான ஆர்வமும், சில கம்யூனிஸ்ட் தலைவர்களின் அறிமுகமும் கிடைத்திருக்கிறது. இந்தச் சமயத்தில் இலண்டனிலிருந்து வெளியான 'டெய்லி வொர்க்கர்' என்ற பத்திரிக்கையில் பணியாற்றினார். பத்திரிக்கையில் தனது ஆங்கிலப் புலமை மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள் என ஒரு
முறை குறிப்பிட்டார்.

இந்தக் காலகட்டத்தில் (1931 செப்டெம்பர்- டிசம்பர்) இலண்டனில் நடைபெற்ற இந்திய சுதந்திர போராட்டத்திற்கான இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காந்தியடிகள் தங்கியிருந்தார். அவரைச் சந்தித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசச் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சி.எஸ்.எஸ் முன்னின்று நடத்தியிருக்கிறார்.

இத்தகைய தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகளால் தன் படிப்பின் மீதான நாட்டத்தை இழந்துவிட்டு, ஐ.சி.எஸ் பட்டம் பெறாமலேயே சீமையிலிருந்து மீண்டும் இந்தியாவுக்கு கப்பல் ஏறியிருக்கிறார் சி.எஸ்.எஸ். இது அவரது தந்தையை மிகுந்த வருத்தமடையச் செய்ததாம்.

1937 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "ஜனசக்தி"யில் முக்கியப் பொறுப்பேற்றிருக்கிறார். ஜீவா ஆசிரியராக இருந்த இந்தப் பத்திரிக்கையில் அந்தச் சமயத்தில் வெளிவந்த பெரும்பாலான எழுத்துக்கள் சி.எஸ்.எஸ் அவர்களுடையது. கட்டுரைகளில் இவரது பெயர் இருக்காது, இவர் எழுதிய கட்டுரைகளை சேகரித்து வைக்கும் பழக்கமும் கிடையாது. இதுவரை யாருடனும் சேர்ந்து புகைப்படமும் இவர் எடுத்ததில்லை என்ற போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

1940 களில் தொடரப்பட்ட சென்னை சதி வழக்கு(Madras Conspiracy Case) வழக்கில் கைது செய்யப்பட்டார். தனது தலைமறைவு வாழ்க்கை பற்றியும், அந்தச் சமயத்தில் வெளியுலகில் வாழ்ந்த பிற அரசியல் போராளிகளுடனான தொடர்பு முறைகள், போலீஸீன் உளவு நடவடிக்கைகள், உடனிருந்த ஒரு போராளி போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற நிகழ்ச்சிகள் போன்றவற்றை சி.எஸ்.எஸ் விவரிப்பது அதிசுவாரசியமாக இருக்கும்.

பி.ராமமூர்த்தி, மோகன் குமாரமங்கலம், சுப்பிரமணிய சர்மா, உமாநாத் ஆகியோர் இவருடன் தலைமறைவு வாழ்க்கையிலும் கைதிலும் உடனிருந்தவர்கள். குறிப்பிடப்பட்ட மற்ற அனைவரின்
பெயரும் பிற்காலத்தில் மற்றவர்களுக்கு பரிச்சயமாகியிருக்கிறது. சி.எஸ்.எஸ்ஸின் பெயரைத் தவிர. அதுதான் சி.எஸ்.எஸ்ஸின் சுபாவம். தன் ஓட்டை விட்டு வெளியே வராமல் சுருங்கிக் கொள்ளும் நத்தையாகவே வாழ்ந்திருக்கிறார். எந்த வெளிச்சத்தின் மீதும் விருப்பமற்ற துறவியின் வாழ்க்கைதான் இவரது வழி.

சுதந்திரத்திற்கு பிறகு தீவிர அரசியலில் பிடிப்பில்லாமல் 1948 ஆம் ஆண்டு மனைவியுடன் கோபிச்செட்டிபாளையத்திற்கு வந்துவிட்டார். இந்தப் பகுதியின் முதல் பெண் மருத்துவர் இவரது மனைவி சுகுணாபாய் தான். இருவருக்கும் காதல் திருமணம். சுகுணா பாய் ஒரு சுதந்திர போராட்ட வீரரின் உறவுமுறை( எனக்கு அது குறித்தான தகவல் நினைவில் இல்லை). 1970 களில்
மனைவி இறந்த பிறகு கோபியை விட்டு நகராமல் இங்கு வாழ்ந்து வருகிறார். இவர் மட்டும் தனியாக இருக்கிறார். உறவுகள் என்று யாரும் தொடர்பில் இல்லை.
நூறு வயதில் தன் துணிகளை தானே துவைத்துக் கொண்டிருக்கிறார், தனக்கான எளிய சமையலை- பெரும்பாலும் பால், வெறும் சாதம், தண்ணீரில் உப்புடன் வேக வைத்த ஏதேனும் ஒரு காய் ஆகியவற்றை அவரே தயாரித்துக் கொள்கிறார். எதற்காக இத்தனை கஷ்டம் என்ற போது "உண்மையான சுதந்திரம் என்றால் என்ன?' என்றார். நான் பதில் பேசவில்லை. "தன் கடமைகளை தானே செய்வது" என்று சொன்னார்.

இவருக்கு கடவுள் நம்பிக்கை என எதுவுமில்லை, கழுத்தில் பூணூல் இருக்காது, தாடியும் மீசையும் மிகுந்து வளர்ந்திருக்கும். அவ்வப்போது மழிப்பதுண்டு. காலையில் தெருவோர பூக்களை எடுத்து, அவைகளை நீரூற்றிய கண்ணாடி சீசாவில் செருகி வைத்திருப்பார். அதற்கான காரணத்தை நான் கேட்டதில்லை. மிகச் சமீபத்தில் சாலையில் நடக்கும் போது கீழே விழுந்ததால் இப்பொழுது வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் முடங்கிவிட்டார்.

சி.எஸ்.எஸ் பங்களித்த புத்தகங்கள்:

1. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்:சிங்கார வேலர் - இந்தப் புத்தகம் சிங்காரவேலுச் செட்டியாரின் முழு வாழ்க்கை வரலாறு. சிங்காரவேலு பாரதியின் மிக நெருங்கிய நண்பர். பாரதியின் கடைசிக் கணத்தில் உடனிருந்தவர். இந்தப் புத்தகம் 1977இல் வெளி வந்தது. ஒரு பிரதி சி.எஸ்.எஸ்ஸிடம் இருக்கிறது.(நாகை முருகேசன் உடன் சேர்ந்து எழுதப்பட்டது). இதே புத்தகம் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருப்பதாக எனக்கு ஞாபகம்.

2. சிங்காரவேலரும் கான்பூர் சதி வழக்கு என்றொரு நூலை எழுதியிருக்கிறார்.
3. பாரதி தரிசனம்- பாரதியின் வெளிவராத கட்டுரைகளின் தொகுப்பு(இரண்டு பாகங்கள்). 1977இல் வெளி வந்தது. எட்டையபுரம் இளசை மணியனோடு சேர்ந்து எழுதப்பட்டது.

4.ஆங்கிலத்தில் எம்.பி.டி.ஆச்சார்யாவின் வாழ்க்கை வரலாறு(M.P.T. Acharya, His life and times) சி.எஸ்.எஸ் அவர்களால் எழுதப்பட்டது. ஆச்சார்யா பாரதி ஆசிரியராக பணியாற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'இந்தியா' பத்திரிக்கையின் ஆசிரியர். பாரதியின் உற்ற தோழர்.

5. சக்லத் வாலா என்ற இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரின் வாழ்க்கை வரலாறு. 'சக்லத் வாலா' இந்திய விடுதலைக்காகவும், இங்கிலாந்தின் தொழிலாளர் நலனுக்காகவும் போராடியவர்.

தினமும் ஹிந்து நாளிதழும், ஜனசக்தியும் வாசித்து விடும் சி.எஸ்.எஸ் வீட்டிற்கு, இன்றைக்கு வீட்டை பெருக்குவதற்கென மட்டும் ஒரு இசுலாமிய பெண் வந்து போகிறாள். அவளுக்கு இவரை பற்றிய எந்தத் தகவலும் தெரிந்திருப்பதற்கான சாத்தியம் இல்லை.

இத்தனை எளிய மனிதரை இனி என் வாழ்நாளில் சந்திக்கப் போவதில்லை. தனக்கு குழந்தைகள் இல்லை என்று சொல்லும் போது அவரது முகத்தில் வெறுமை வருவதை கவனித்திருக்கிறேன். நல்ல மனிதர்களுக்கு ஆண்டவன் பெரிய வெறுமை ஒன்றை கொடுப்பான் என்று எப்பொழுதோ படித்திருக்கிறேன்.
------
ஈரோட்டிலும் சுற்றுப்புறத்திலும் இருக்கும் நண்பர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

நாள்: 11.12.2009, வெள்ளிக்கிழமை.
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: கொங்கு கலையரங்கம், சம்பத் நகர்
------
-->நான், தாராபுரம் முருகானந்தம், இன்னும் இரு நண்பர்கள் சேர்ந்து சி.எஸ்.எஸ்ஸூடன் நடத்தில் ஐந்து மணி நேர நேர்காணல் இன்னும் வடிவமைக்கப்படாமல் இருக்கிறது.

-->தகவல்கள் மக்கள் சிந்தனைப் பேரவை வெளியிட்ட நான்கு பக்க சி.எஸ்.எஸ் வாழ்க்கைக் குறிப்பில் இருந்தும் எடுக்கப்பட்டிருக்கிறது.

Dec 8, 2009

ஒரு புத்தகம் ஒரு குழந்தை


ஒரு வாரமாக வலைப்பதிவில் எதுவும் எழுதவில்லை. ஆனால் அதற்கு 'உருப்படியான' காரணம் இருக்கிறது. காரணத்தைச் சொல்வதற்கு முன்பாக ஒரு செய்தி.

இந்த வருடம் உயிர்மை வெளியீடாக "சைபர் சாத்தான்கள்" என்ற புத்தகம் வெளிவருகிறது. எழுதி முடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது.

இந்தக் கட்டுரைகளில் இணையக் குற்றங்களின் பல்வேறு சாத்தியங்கள் விவாதிக்கப்பட்டிருகிறது. பலரும் அறிந்த வைரஸிலிருந்து, ட்ராஜன், ஹேக்கிங், மார்பிங், குழந்தைகள் மீதான் இணைய வன்முறைகள் என்பது வரை சில சுவராசியமான விஷயங்களை எளிமையாக்கியிருக்கிறேன். இருபது கட்டுரைகளுக்கான செய்திகளை தேடி எழுதி முடிக்க நான்கு மாதங்கள் ஆனது.

சென்ற ஆண்டு வெளி வந்திருக்க வேண்டிய புத்தகம். சில காரணங்களால் தாமதமாகிவிட்டது. அந்திமழையில் இந்தக் கட்டுரைகள் தொடராக வந்த போது நிறைய நண்பர்கள் மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் கட்டுரைகளைப் பற்றி பேசிய போது மகிழ்ச்சியாகவே இருந்தது.

புத்தகமாக்குவதற்கான முயற்சியில், மூன்று மாதங்களுக்கு முன்பாக கட்டுரைகளை திரும்ப வாசித்த போது ஏகப்பட்ட மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் ஸ்டைலுக்கு கொண்டு வரவும், சில தகவல்களை மாற்றியமைக்கவும் இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டேன். வேறொருவராக இருந்தால் இந்த நேரத்தில் இன்னொரு புத்தகமே எழுதியிருப்பார்கள்.

நெட்டில் எடுத்து தமிழாக்கம் செய்வதோவோ அல்லது டவுன்லோட் செயவதாகவோ இல்லாமல் நிறைய உழைப்பை தந்திருக்கிறேன். அதுவரைக்கும் திருப்தி.
----
நவம்பர் 27 இல் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தேன். பேருந்தில் சரியான கூட்டம். படியில் நின்று பயணம் செய்யாதீர் என்ற நோட்டீஸுக்கு கீழாக மூன்று பேர் அமர்ந்து கொண்டோம்.

காலை மூன்று மணிக்கு பவானியை நெருங்கிய போது நேராக மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள். ஆறரை மணிக்கு மருத்துவமனை இருந்த கோயமுத்தூருக்குப் போய்ச்சேர்ந்தேன். மூன்று மணி நேர பதட்டத்துக்குப் பிறகு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் சொன்னார்கள்.

அதுவரை அலைந்திருந்த மனம் அப்பொழுதும் சமநிலையை அடைய இன்னுமொரு மணி நேரத்தை எடுத்துக் கொண்டது. மதியம் இரண்டு மணிக்கு குழந்தையை கையில் கொடுத்தார்கள். இளஞ்சிவப்பு நிறத்தில் கண்களை மூடி சிணுங்கினான்.

அடுத்த ஐந்து நாட்களுக்கு விடுமுறையில் அவனருகில் இருந்தேன. இரவு பகலாக மஹாபாரதத்தை வாசித்தேன். பாரதத்தின் கதாபாத்திரங்கள் கனவுகளில் வந்து போனார்கள். குழந்தையும் அவர்களோடு அவ்வப்பொழுது சேர்ந்து கொண்டான். அவன் உடலை முறுக்குவதும், தானாக சிரிப்பதும் அழுவதுமாக தனக்கென ஒரு உலகை உருவாக்கிக் கொண்டிருந்தான். விக்கல்களும் தும்மல்களும் பயமுறுத்துவதாக இருந்தன.

ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தந்தை ஆகிறான். அந்த புது உறவை உணரும் தருணம் அற்புதமானது. அந்த மனப்பூர்வமான உணர்தலில் மற்ற உணர்ச்சிகள் அடங்கிப்போய் விடுகின்றன.

தந்தையானவனுக்கு அந்தக் கணம் ஒரு தியான நிலை. மற்றவர்களுக்கு அது இன்னுமொரு செய்தி அவ்வளவுதான்.