Nov 26, 2009

உறுமீன்களற்ற நதி

இசையை ஒரு மாலை நேரத்தில் கோயமுத்தூரில் நிகழ்ந்த இலக்கியக் கூட்டத்தில் பார்த்திருக்கிறேன். அதன் பிறகாக இரண்டு முறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். அதோடு அவரை நானும் என்னை அவரும் மறந்துவிட்டோம். ஆனால் அவருடைய கவிதைகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறேன்.

கவிஞனின் கவிதைகளை சில சஞ்சிகைகளிலும், சிற்றிதழ்களிலும் அவ்வப்போது வாசிப்பதை விடவும், தொகுப்பாக வாசிப்பதில் கிடைக்கும் அனுபவம் என்பது ஆசுவாசமானது. தொகுப்பாக்கி தருவதில் கவிஞனுக்கும் ஆசுவாசம் உண்டு. கவிதைகள் தொகுக்கப்படும் கணத்தில் கவிஞன் கவிதைகளை விட்டு வெளியேறி வாசகன் தன் கவிதையோடு இணையும் புள்ளியை ரசிப்பவனாகிறான்.

இசையின் "உறுமீன்களற்ற நதி" தொகுப்பு வெளி வந்து ஓராண்டுக்கும் மேலாக ஆகிறது. கவிதைக்கென ஏதேனும் வரைமுறைகள் இருப்பின் அவைகளை தகர்ப்பதற்கான அல்லது நிராகரிப்பதற்கான சாத்தியங்களை தன் கவித்துவத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் இத்தொகுப்பினை இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன். முடித்தேன் என்ற சொல் இங்கு நீட்சியுடையது.

கவிதைகள் மனதிற்குள்ளாக உருவாக்கும் வாதைகளையும், அதன் கொதிநிலையையும் விட்டு வெளியேற முடியாத நேரத்தில் அந்தக் கவிதைகளைப் பற்றி எழுதிவிட வேண்டும். அப்பொழுது அது வாசகனின் பார்வையாக இருக்கிறது.

இந்தத் தொகுப்பில் தலைப்புகள் வித்தியாசமானவையாக இருக்கின்றன. பெரும்பான்மையான தலைப்புகள் கவிதைக்கான மொழியில் இல்லை. Mr.சஷ்டிக்கவசம், முன்னொரு காலத்தில் குணசேகரன் என்றொருவன் வாழ்ந்து வந்தான் போன்றவை கவிதையின் வாசகனை வேறொரு திசைக்கு நகர்த்துகின்றன.

கவிதைகளின் அமைப்பும், மொழியும் இசைக்கு கச்சிதமாக கை கூடியிருப்பதாகச் சொல்வேன். இவரது கவிதைகளில் இருக்கும் கவிதைக்கான சாத்தியங்கள் தொடர்ச்சியாக வாசகனை கட்டுக்குள் வைக்கின்றன. கவிதைகளில் இருக்கும் சிறுகதைக்கான சுவாரசியமும், கவிதைக்கான வெளியும், அடர் வனத்தின் புதிர்களை விடுவித்தவாறு நிலவின் வெளிச்சத்தோடு நடக்கும் அனுபவத்தை வாசகனுக்குத் தருகின்றன.

இத் தொகுப்பின் கவிதை மொழியில் இருக்கும் அங்கதம் எனக்கு வெகுவாக பிடித்திருக்கிறது.

தூக்கத்திலிருந்த
ராசாதேவி!உன் கார்குழலின் வனப்பினிலே...
என ஏதோ முனகத்
துவங்கயோவ் மூடிட்டு
படுய்யாஎன அதட்டினாள் தேவி.

இந்த வரிகளை தலைப்போடு சேர்க்காமல் படிக்கும் போது ஒரு மெல்லிய புன்னகை எழுகிறது. இதன் "ராசா வேசம் கட்டும் கூத்துக் கலைஞன்: சில குறிப்புகள்" என்ற தலைப்போடு சேர்த்து வாசிக்கும் போது உண்டாகும் அதிர்வுகளும், தலைப்பும் கவிதை வரிகளும் மனதிற்குள் உருவாக்கும் காட்சியமைப்பும், கூத்துக் கலைஞர்களின் துக்கமும் வேறொரு அனுபவத்தைத் தருகின்றன. வெறும் அங்கதம் மட்டுமே கவிதானுபவத்தை தருவதில்லை என்பதை இந்தக் கவிதைகள் வாயிலாக உணர முடிகிறது.

பெரும்பாலான கவிதைகள் அழுத்தம் இல்லாமல் மிக இயல்பாக வெளிப்படுகின்றன. இந்த எளிமைதான் இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளின் தனித்துவம் என நினைக்கிறேன். தான் சொல்ல வரும் காட்சியமைப்புகளையும், தன் மனதின் கவித்துவ விரிவுகளையும் அதிக பிரயத்தனம் இல்லாமல் இசையால் வெளிப்படுத்த முடிகிறது.
அதி ஆழமான
பாழ்கிணறு என் தனிமை
ஒரு சொல்லிட்டு
நீ அதை நிரப்பு

இந்தக் கவிதையில் தன் வாசகனுக்காக இசை உருவாக்கும் பெருவெளி பிரம்மாண்டமாக தெரிகிறது.

இங்கு தனிமை என்பது பாழ்கிணறு. பித்து நிலை, நோய்மை, முதுமை போன்றவற்றின் கசந்த பிடிகளுக்குள் சிக்கி சமூகம் ஒதுக்கி வைத்திருக்கும் தனித்த மனிதனொருவனில் கவிதையை வாசிப்பவன் தன்னை பொருத்திக் கொள்ளும் போது தனிமையின் கொடுமையை அதிர்ச்சியுடன் உணர முடிகிறது.

ஒரு ஒற்றைச் சொல் கூட பாழ்கிணறை நிரப்பிவிடும் என்பது, தனிமையில் கசங்கிக் கிடப்பவனுக்கு அந்த ஒற்றைச் சொல்லின் தேவை எத்தனை முக்கியமானது என்பதனை கவிதையில் கொண்டு வருகிறது.
இந்தக் கவிதையை முழுமையாக உள்வாங்க முடியுமெனில் தன்னிலிருந்து இந்தக் கவிதையை உதிர்த்து விட வாசகன் பெரும் சிரமப்பட வேண்டியிருக்கலாம்.
கவிதை சொல்லியை கவிதையில் கொண்டு வருவது போன்ற இசையின் சில முயற்சிகள் பழையதாக இருக்கிறது. ஆனால் முன்னோடிகள் பரீட்சித்த இந்த பழைய முயற்சிகளை கவிதையில் தவிர்ப்பது என்பது எந்த ஒரு கவிஞனுக்கும் கடினமானதுதான்.

குறைகளை பற்றி அதிகம் பேசுவது, கவித்துவ சாத்தியங்களை தவிர்ப்பதற்கான முயற்சியாகிவிடலாம் என்பதால் அதை நான் குறையாக சுட்டப் போவதில்லை.

இந்தத் தொகுப்பு சமீபத்திய இளம் கவிஞர்களின் தொகுப்புகளில் முக்கியமானதாக எனக்குப் படுகிறது.

Nov 23, 2009

தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட சில வார்த்தைகள்


வெள்ளிக்கிழமை இரவில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு கிளம்புவதற்காக வீட்டை பூட்டும் சமயத்தில் மின்சாரத்தடை வந்து விட்டது. நான் அதிகமாக சகுனங்கள் பார்ப்பதில்லை என்றாலும் மின்சாரம் வரும் வரை பொறுத்திருக்கலாம் என்று அமர்ந்து கொண்டேன். மின்சாரம் வந்து மீண்டும் போனது. ஒரு முறையல்ல. மூன்று முறை. அடுத்து அப்பாவுடன் போனில் பேசினேன். "சென்னைக்கு இந்த வாரம் கண்டிப்பாக போகணுமா? ஊருக்கு வந்திருக்கலாம் இல்ல"என்றார். கிளம்பும் போது இவரும் ஏன் தடை சொல்கிறார் என டென்ஷன் அதிகமானது.

அடுத்ததாக பெங்களூர் மடிவாலா போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்பாக சென்னை செல்லும் பேருந்துக்காக முக்கால் மணி நேரம் காக்க வேண்டியிருந்தது. சென்னை செல்லும் பேருந்துகள் ஓரிரண்டு வந்தாலும் அமர இடம் இல்லை. ஒரு கர்நாடக போக்குவரத்துக் கழக வண்டியில் டிரைவர் தனக்கு பின்னால் இருக்கும் கேபினில் அமர்ந்து கொள்ள விருப்பமா என்றார்? அதில் அமர்ந்தால் உறக்கம் இருக்காது; என்றாலும், இரவின் சாலையை சோடியம் வெளிச்சத்தில் வேடிக்கை பார்ப்பது சுகம் என்பதாலும், இதை விட்டால் பேருந்து கிடைக்காமல் போய்விடலாம் என்ற பயத்தாலும் சம்மதித்தேன். அங்கிருந்து ஒசூர் வரும் வரைக்கும் ஒவ்வொரு நிறுத்தத்திலும் கேபினில் அமர வைத்துக் கொள்ள இன்னொரு ஆளை டிரைவர் தேடினார். என்னிடம் வாங்கிக் கொண்ட இருநூற்றைம்பது ரூபாய்க்கு டிக்கெட் தரவில்லை.

கேபினில் இரண்டு பேர் அமர்ந்தால், சாலையில் எதிர்படும் வாகன வெளிச்சத்தையும் மீறி ஒரு வேளை தூக்கம் வந்தால், சாய்ந்து கொள்ளக் கூட முடியாது என்பதால் ஒவ்வொரு நிறுத்தத்திலும் வேறொரு ஆள் கேபினுக்கு பங்காளி ஆகிவிடக் கூடாது என்று உள்மனம் படபடத்தது. மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்த சமயம். பேருந்துக்காக காத்திருக்கும் கூட்டம் குறையும் நேரம் அது. உள் மன ஆசை பூர்த்தி செய்யப்பட்டது; நான் மட்டுமே கேபினை ஆக்கிரமிக்கலாம் என்றானது. அத்திபள்ளி தாண்டியவுடன் இருநூற்று ஏழு ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்தார். அது அத்திபள்ளியிலிருந்து சென்னைக்கான தொகை. கொடுத்த தொகையில் மீதம் டிரைவரின் பாக்கெட்டுக்கு.

இதற்குள் டிரைவர் இரண்டு மூன்று கொட்டாவிகளை விட்டிருந்தார். இப்பொழுது உயிர் மீதான கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது, விபத்து நிகழ்ந்தால் முதல் பலி டிரைவராக இருக்கலாம், இரண்டாவது நிச்சயம் நான் தான். இப்பொழுது தூங்க வேண்டும் என்ற எண்ணம் போய்விட்டிருந்தது. சாலையை ரஸிக்க வேண்டும் என்ற எண்ணமும் கலைந்திருந்தது. டிரைவர் முகத்தை மட்டும் வெறித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால் அவர் தூங்காமல் ஓட்டலாம் என்பதால், "ஏன் சார் இந்த பஸ்ஸில் கண்டக்டர் இல்லை?' என்று வாயைத் திறந்தேன்.

"உஷ்ஷ்" என்று சைகை செய்தார். கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பேச வேண்டாம் என்கிறாரா அல்லது தன் தூக்கம் கெட்டுவிடும் என்பதால் அமைதியாக இருக்கச் சொல்கிறாரா என்ற குழப்பம் புதிதாகச் சேர்ந்து கொண்டது.

இனி என்னதான் பயப்பட்டாலும் விபத்து நிகழுமெனில் தப்பிக்க வாய்ப்பில்லை. எனவே தைரியமாக இருப்பது என்று முடிவெடுக்க கொஞ்சம் நேரம் பிடித்தது. அந்த கொஞ்ச நேரத்திற்கு பிறகு கேபினில் காலை நீட்டி படுத்துக் கொண்டேன்.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சிங்காரச் சென்னையில் இறக்கி விட்டுவிட்டார்கள். கோயம்பேட்டிலிருந்து எம்.எம்.டி.ஏ, க்குச் செல்ல வேண்டும். நகரப் பேருந்தில், அருகில் அமர்ந்து இருந்தவரிடம் இடம் வந்தால் சொல்லச் சொன்னேன். பிரமாதமாய் தலையாட்டினார். உதயம் தியேட்டர் வந்த பிறகு "எம்.எம்.டி.ஏ ல இறங்கலியா" என்றார். இரண்டு மூன்று நிறுத்தங்களை தாண்டி வந்தததை உணர்ந்தேன். நான்கைந்து கெட்ட வார்த்தைகள் தொண்டையை அடைத்தது.

அடுத்த போணி ஷேர் ஆட்டோக்காரன், ஆட்டோவில் ஏற்கனவே மூன்று பேர் இருந்தார்கள்.

"இன்னா சார், எம்.எம்.டி.ஏ வா? இந்தாண்ட வா",

"பிப்ட்டி ருப்பீஸ் ஆவும்"

"ஏங்க அடுத்த ரெண்டு ஸ்டாப்த்தானே"

"அதுக்குன்னு... ராத்திரில சும்மா கொண்டி வுடுவாங்களா"

"சரிங்க, நான் பஸ்ல போய்க்கிறேன்"

"ங்கோத்தா, அப்புறம் ஆட்டோல ஏன் ஏறுன? சாவு கிராக்கி". இப்பொழுதும் நான்கைந்து வார்த்தைகள் என் தொண்டையை அடைத்தது.

கறுவிக் கொண்டே பஸ் பிடித்து எம்.எம்.டி.ஏ போய்ச் சேர்ந்தேன்.

பகலை எப்படியோ சமாளித்துவிட்டேன்.

இரவில் நண்பர்களை(இணைப்பு1(நர்சிம்), இணைப்பு2(தாமிரா), இணைப்பு3(மோகன்) சந்தித்துவிட்டு, வடபழனியில் சாப்பிட்டும் ஆகிவிட்டது. இப்பொழுது நடந்தே எம்.எம்.டி.ஏ போய்விடலாம் என்று முடிவு செய்து நடக்கத் துவங்கினேன்.

வடபழனி சிக்னலுக்கு அருகில் இருக்கும் பழைய டி.சி.எஸ் கட்டடத்தில் இப்பொழுது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் என்ற பெயர் இருக்கிறது. அந்த இடத்தில் வெளிச்சம் குறைவு. வேக வேகமாக பவுடரும், லிப்ஸ்டிக்குமாய், சிவப்பு நைலான் புடவை மினுமினுக்க ஒருத்தி நடந்து வந்தாள். பெண்தானா என்றும் கணிக்க முடியவில்லை, நொடிப்பொழுதில் என்னைத் தாண்டி, அருகில் இருந்த புதருக்குள் மறைந்தாள். இயல்புக்கு மாறான விஷயம் நிகழ்ந்தால் சிலர் நகர்ந்துவிடலாம் அல்லது நின்று கவனிக்கலாம். நான் இரண்டாவது கட்சி.

அவளைப் பின் தொடர்ந்து வந்த ஜீன்ஸ்ஸூம், டீ சர்ட்டும் அணிந்த ஒரு வாலிபன் என் முகத்தை தெளிவாக பார்த்துவிட்டு புதரை நோக்கி நகர்ந்தான். ஒரு வினாடி புதருக்குள் நுழையாமல் தாமதித்தவன், சாலையில் வழக்கமாக நடப்பது போல 'பாவ்லா' செய்தான். அருகில் போலீஸ் ஜீப் வந்து கொண்டிருந்ததை அவன் கவனித்திருக்க வேண்டும். அவர்களும் இவன் செயலை கவனித்துத்தான் ஜீப்பை ஒதுக்கியிருக்க வேண்டும். அவனைப் பிடித்து ஜீப்பில் அமர வைத்துவிட்டு இரண்டு காவலர்கள் புதருக்குள் நுழைந்தார்கள். அவள் தப்பித்து விட்டாள்.

நேராக ஜீப்பில் அமர்ந்திருந்த இளைஞனிடம் வந்தார்கள், கீழே இறங்கிய இளைஞன், பகவான் சத்தியமாக நல்லவன் என நிரூபிக்க முயன்றான். அடிக்க வேண்டாம் என்றும் கெஞ்சினான்.

சொட்டைத்தலை போலீஸ்காரர் எஸ்.ஐ ஆக இருக்க வேண்டும். அவரின் உயரத்தில் பாதியளவுக்கு லத்தி வைத்திருந்தார். ஜீன்ஸ் இளைஞன் மீது நான்கு அடிகளை இடியென இறக்கினார். அவன் அங்கிருந்து ஓட வேண்டும் என்று உத்தரவிட்டார். தன் வாழ்நாளின் அதிக பட்ச வேகம் அவனுக்கு இன்று 'கால்'கூடியிருக்கலாம்.

என்னை உற்றுப்பார்த்தததில் என் சகுனங்களின் பலன்கள் அவனுக்கு ஒட்டிவிட்டதோ என்ற பச்சாதாபம் கூட அவன் மேலாக ஓரிரு கணங்கள் வந்தது.

அந்த எஸ்.ஐ. தன் பார்வையை சுழற்றினார். அருகில் நான் மட்டுமே இருந்தேன். நான் நல்லவன் என நிருபிக்க நடந்த நிகழ்வின் சுவடை அறியாதவனாய், "ஸார், எம் எம் டி ஏ எப்படி போகணும்" என்றேன்.

"ஷேர் ஆட்டோ எடுத்துக்குங்க" என்று சொல்லிவிட்டு திரும்பி, அந்த இளைஞன் போன திசையை பார்த்து சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்தார். அவை காலையிலிருந்து என் தொண்டையை அடைத்திருந்த நான்கு கெட்ட வார்த்தைகள்.

நன்றி: உயிரோசை

Nov 20, 2009

அதற்கு மேல் ஒன்றுமில்லை

நீண்ட நாட்களாக இருந்து வந்த வலைப்பதிவின் வடிவத்தை மாற்றியாகிவிட்டது.

மாற்றிவிட்டு பார்க்கும் போது வெயிலில் அலைந்து கசங்கியவன் வெதுவெதுப்பான வெந்நீரில் குளித்துவிட்டு வருவதை போல இதமாக இருக்கிறது.

இது ரசனையும் அழகியலும் சார்ந்த விஷயம். அழகு என்பதன் வரையறை கூடவும் ஆளுக்குத் தகுந்தவாறுதானே?."பொண்ணு வெள்ளையா பளிச்சுன்னு வேணும்" என்று சொல்வதில் கூடவும் அரசியல் இருக்கிறது. மரங்களும், உதிரும் மலர்களும் அழகு என்று நினைத்து வடிவமைத்திருக்கிறேன். கற்பனாவாதம் என்றும் சொல்லலாம்.

அதைப் பற்றி எல்லாம் யோசிக்கவில்லை.

இலவசமாக கிடைத்த வடிவமைப்பில், இதுதான் கண்ணுக்கு பிடித்ததாகவும், எளிமையாகவும், டெக்னிக்கலாக பிரச்சினை செய்யாததாகவும் இருந்தது.
====
ஒரு வலைப்பதிவில் "பின்னூட்டமிட்டால் அதற்கு பதிலிடும் நல்ல பழக்கத்தை பின் பற்றுங்கள்" என்று அந்த வலைப்பதிவாளருக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். இது எனக்கான பின்னூட்டம் இல்லை என்றாலும், உறுத்துகிறது.

பெரும்பாலான பின்னூட்டங்களுக்கு பல சமயங்களில் பதிலிடாமல் இருந்திருக்கிறேன். அடிப்படை நாகரிகம் கூட இல்லையோ? பதிலிட வேண்டும். இல்லையென்றால் பின்னூட்ட வசதியை நீக்கிவிடலாம்.

ஒவ்வொருவருக்கும் பதிலிடுவதிலேயே பின்னூட்டத்தின் எண்ணிக்கையை அதிகமாக்கி காட்டாமல் இருந்தால் சரி.
===
இந்த வாரம் சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு ஏதும் உண்டா?. இந்த சனி,ஞாயிறு சென்னையில்தான் டேரா. (09663303156) யாரேனும் தெரியப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சி.
===
உலகப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் திரும்பிவிட்டதாக சொல்கிறார்கள். பெரும்பாலான ஐடி நிறுவனங்களும், இன்ன பிற தனியார் நிறுவனங்களும் இரண்டாண்டு கால மந்தநிலையைக்காட்டி ஊதிய உயர்வை நிறுத்தி வைத்திருக்கின்றன. இந்திய ஐடி நிறுவனங்கள் இந்தச் சூழலை பயன்படுத்தி உறிஞ்சி எடுக்கின்றன. வேலை போய்விடலாம் என்ற பயத்திலேயே வாய் திறவாமல் செக்கு மாடுகளை விடவும் அதிகமாக, செய்த வேலையையே திரும்பச் செய்யும் ஐடி நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது.

ஐடி காரனுகளுக்கு சம்பளம் அதிகம், அவர்களால் விலைவாசி உயர்ந்துவிட்டது என்றெல்லாம் போராடி அரசு ஊழியர்கள் 40% ஊதிய உயர்வு என்பதெல்லாம் சாதாரணம் என்ற நிலையை அடைந்துவிட்டார்கள். நல்ல ஊதியமும் பெறுகிறார்கள்.

ஐடிக்காரனும் அரசு ஊழியனும் பெறும் வருமானத்தில் எத்தனை சதவீதம் கூலி வேலை செய்பவனுக்கும், தனியார் மில்லில் வேலை செய்பவனுக்கும் கிடைக்கிறது என்று பார்த்தால் சதவீத அடிப்படையில் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

இந்த வித்தியாசம் தொடருமானால் வாழ்க்கைத்தரத்தில் பெரும் வித்தியாசங்களை உடைய சமூகங்கள் உருவாகும்.

எப்பொழுதுமே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு சமூகத்தினுள் நிலவும் வேறுபாடுகளே காரணமாக இருந்திருக்கின்றன.
====
மது கோடா நோட்டுக்களை எண்ணுவதற்கு மட்டும் நான்கு மெஷின்களை வைத்திருந்தாராம். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பான் என்ற கதைதான் இது. சுயேட்சை எம் எல் ஏவாக இருந்து, அடித்த காற்றில் கோபுரம் ஏறி முதல்வரும் ஆகிவிட்ட குப்பை மது கோடா.

கிடைத்ததே சமயம் என்று வாரிச்சுருட்டியிருக்கிறார். பல அரசியல்வாதிகளின் வருமானத்தில் ஒப்பிடும் போது 2500 கோடி என்பது ஜுஜுபி மேட்டர். மற்றவர்களுக்கு எப்படி சிக்காமல் கை வைக்க வேண்டும் என்று தெரிகிறது. மது கோடாவுக்கு தெரியவில்லை.

ஏதோ அறுபதாயிரம் கோடி ஊழல் என்றார்களே. அது எந்த ஊழல்???

Nov 19, 2009

விடுவிக்கப்படாத மரணத்தின் புதிர்கள்


காற்றில் மிதந்து வந்த
பாலீத்தின் பை
அறைந்ததில்
இறந்து போனான் ப்ரனீத்

யாரோ பறக்கச் செய்த
பட்டத்தின் கயிறு
சத்யாவின்
கழுத்தை அறுத்திருக்கிறது

தூக்கிலிட்டுக் கொண்டவன்
விஷம் அருந்தியவனை விட
அதிர்ஷ்டசாலி

உறக்கத்தில் இறந்தவனுக்கு
நல்ல சாவு
வாய்த்திருக்கிறது

கழுத்தில் செருகப்பட்ட கத்திகளை
விட
நெஞ்சில் பாய்ந்த கத்திகள்
கருணை மிக்கவை

லாரியில் தலை நசுங்கியவனும்
நீருள் மூழ்கி இறந்தவனும்
மின்சாரம் தாக்கி மறைந்தவனும்
இறுதி மூச்சுக்கு முந்தைய மூச்சில்
நினைத்தவற்றை கவிதைகளாக்கலாம்

கொலை செய்யப்பட்டவர்களும்
நோய்மையில் மரணித்தவர்களும்
அலையும்
தெருக்களில்தான்
குழந்தைகள்
விழுந்து
காயம் பெறுகின்றன

விடுவிக்கப்படாத மரணத்தின்
புதிர்கள்
இறந்தவனின் புதைகுழி மீதும்
எரித்த சாம்பலின் நுனியிலும்
ஒட்டிக் கொள்வதாக சொல்கிறார்கள்.

Nov 11, 2009

பெருமழைக் காமம்


காற்றின் வெற்றிரைச்சல்
ரகஸிய
கதைகளைச் சொல்லிக் கடக்கும்
இரவின் வெறுமையில்
பொழிகிறது பேய்மழை

தவளைகளின் ஈரச்சமிக்ஞை
புரிந்த
பிச்சைக்காரி
ஒதுங்கிய
சாராயக்கடை வாசலில்
மெளனமாய் ஒடுங்குகிறது
கருநாயும்

மரங்களின் விசிறலில்
இடம் மாறும்
மழையின் சோடியச் சிதறல்கள்
ஜன்னல் திரையசைவில்
நுழைகின்றன

தனிமையில் கசங்கிக் கிடக்கும்
அவன்
மழையை
ரஸிப்பதில் விருப்பமின்றி
திரும்பிப் படுக்கிறான்

மழைக்கும் அவனுக்குமான
பந்தம் அறுந்துபோனது-
தீராத காமமும்
ஓயாத மழையும்
பொய்
என்று அவள் சொன்னபோது.

Nov 10, 2009

செல்போன் பாபா


கடந்த ஞாயிறு மாலை நான்கு மணிக்கு எழுத்தாளர் பாவண்ணனை பார்க்கப் போவதாக திட்டம். முன்பே அவரிடம் பேசி வைத்துவிட்டேன். மூன்றரை மணிக்கெல்லாம் அவர் வீடு இருக்கும் அல்சூரை அடைந்துவிட்டேன். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவர் தூங்கிக் கொண்டிருக்கலாம் என நானாக நினைத்துக் கொண்டு அந்தப் பகுதியில் அனாமத்தாக சுற்றியதில் பெங்களூர் தமிழ்ச் சங்கக் கட்டடம் கண்ணில் பட்டது.

பைந்தமிழ்ப்பாவலர் எனத்தொடங்கி இன்னும் சில அடைமொழிகளுடன் கூடிய பேராசிரியை ஒருவரின் கவிதை நூல் வெளியீட்டு விழா பேனரை வைத்திருந்தார்கள். கட்டத்திற்குள் செல்லலாம் என்ற நினைப்பை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டியதாகிவிட்டது.

நான்கு மணிக்கு பாவண்ணனை அழைத்தேன். அவர் வீட்டிற்கு நேரெதிர் திசையில் நான் சுற்றிக் கொண்டிருப்பது இருப்பது புரிந்தது. ஆதர்ஷா தியேட்டரை கண்டுபிடித்து இடத்தை நெருங்குவதற்குள் அவர் மழையில் நனைந்தவாறு காத்துக் கொண்டிருந்தார். பிறகு பேசிக் கொண்டிருக்கும் போது சில சமயம் 'வீசிங்' தொந்தரவு இருப்பதாகச் சொன்னார். மழையில் நனைய வைத்தது உள்ளுக்குள் உறுத்தியது.

அவரது மனைவி ஊருக்கு போயிருப்பதாகச் சொல்லி டீயும், ஹால்டிராம்மின் மூங்தாலும் கொடுத்தார். புத்தகக் கண்காட்சி, பிஎஸ்என்எல் போன்ற சாதாரண விஷயங்களை பேசிக் கொண்டிருக்கும் போது அவரது நண்பர் சம்பந்தம் வந்து சேர்ந்தார். இவர் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸில் பணிபுரிகிறார்.

பாவண்ணன் முதலில் எழுதிய சிறுகதை தீபம் இதழில் வெளிவந்தது பற்றியும், மொழி பெயர்ப்புகள் பற்றியும், இன்றைய இளம் கவிஞர்கள் பற்றியும் பேசினார். நான் வழக்கம் போலவே அதிகம் பேசவில்லை. மூன்று பேரும் நான்கு மணி நேரங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.

தகவல் தொடர்பில் நடைபெறும் மாற்றங்கள் பற்றியும் பேசினோம்.

சம்பந்தம் ஒரு சுவாரசியமான அனுபவத்தைச் சொன்னார்.

அவர் தொண்ணூறுகளில் புனேவில் ட்ரெயினிங்கில் இருந்த போது ஒரு அவசரத் தந்தி வந்திருக்கிறது. "periya akka died" என்பது தந்தி. அவரது ஊர் தர்மபுரிக்கு அருகே உள்ள குக்கிராமம். தொலைபேசி வசதி எதுவுமில்லாத அந்தக் காலத்தில் வீட்டை தொடர்பு கொண்டு துக்கம் பற்றி விசாரிக்க முடியவில்லை. இரவோடு இரவாக பேருந்தை பிடித்து பெங்களூருக்கு அடுத்த நாள் மாலை ஐந்தரை மணிக்கு வந்து சேர்ந்திருக்கிறார் . இருபத்து நான்கு மணி நேர பயணத்தில், வரும் வழியெங்கும் அக்கா இறந்ததன் காரணம் என்னவாக இருக்கும் என்னும் புதிர் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது. யாரிடமும் பேச முடியவில்லை. நான்கு வேளையும் சோறு இல்லை. கைகால் நடுக்கமெடுத்திருக்கிறது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி என்று பஸ்களை பிடித்து நள்ளிரவு வீட்டை அடைந்த போது வீடு அமைதியாக இருந்திருக்கிறது. ஏன் இவர் பாதியில் வந்தார் என அவர்கள் குழம்பியிருக்கிறார்கள்.

விசாரித்ததில் அவருடைய பெரிய ஆத்தா(periya atha) இறந்ததை மாற்றி பெரிய அக்கா என்று கொடுத்திருக்கிறார்கள். அந்த ஆத்தா இறந்து ஏற்கனவே ஒரு வாரம் ஆகியிருந்ததாம்.

இந்த மாத உயிர்மையில் ஒரு கட்டுரை வந்திருந்தது. பன்றி பிடிக்கும் இரண்டு பேர் பன்றி எந்த இடத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்.

Nov 9, 2009

பெங்களூர் புத்தகக் கண்காட்சி

பெங்களூரில் புத்தக திருவிழா தொடங்கியிருக்கிறது.

கிழக்கு பதிப்பகத்தில் இருந்து மின்னஞ்சலும், கூரியரில் ஒரு தபாலும், ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார்கள். கண்டோண்ட்மெண்ட் அருகில் இருக்கும் பேலஸ் மைதானம்தான் திருவிழா நடைபெறும் இடம். நிற்க. நானறிந்த வரையில் சென்னையில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் நடைபெறும் நிகழ்விற்கு மட்டுமே புத்தகத் திருவிழா என்ற சொல் பொருந்தும். மற்றவை எல்லாம் புத்தகக் கண்காட்சிதான்.

ஞாயிற்றுக்கிழமையின் சாரலில் பேலஸ் மைதானத்திற்கு போய்ச் சேர்ந்தேன். முடிந்தவரையில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனியாக போவதுதான் வழக்கம். நம் விருப்பத்திற்கு சுற்ற முடியும். உடன் வருபவருக்கு பசிக்குமா கால் வலிக்குமா என்பது பற்றி யோசித்துக் கொண்டு இருக்கத் தேவையில்லை.

கேண்டீன் வழியாக நுழைந்தேன். டிக்கெட் இல்லாமல் புத்தகக் கண்காட்சி நடத்தும் பெங்களூர்காரர்கள் நல்லவர்கள் என்று நினைத்துக் கொண்டே ஒரு மசால் தோசையை உள்ளே தள்ளிவிட்டு நகரலாம் என்பது திட்டம். வழக்கமான கண்காட்சிகளைப் போலவே கேண்டீனில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது.

கண்காட்சியில் பெரும்பாலும் ஆன்மிக புத்தகக் கடைகளாக தென்பட்டன. ரவிசங்கர், சத்குரு, நித்யானந்தர், சச்சிதானந்தர் போன்ற தமிழ் மக்களுக்கு பரிச்சயமான சாமியார்கள் கடை விரித்திருந்தார்கள். இவர்கள் தவிர்த்து ராமகிருஷ்ண மடம் போன்றவர்களும், எனக்கு தெரியாத இன்ன பிற காவிகளும் அதோடு சில இசுலாமிய அமைப்புகளும் கூட்டங்களை இழுத்துக் கொண்டிருந்தார்கள்.

தமிழ் பதிப்பகங்கள் கண்ணில் அதிகம் படவில்லை. ஆனந்தவிகடனில் கூட்டம் அதிகம். அடுத்தபடியாக கிழக்கு பதிப்பகத்தில் கூட்டம் இருந்தது. கடைகளை பார்த்துக் கொண்டே வேகமாக நடந்ததில் திருமகள் பதிப்பகம் தென்பட்டது. இன்னும் சில தமிழ் பதிப்பகங்கள் இருந்தன. ஆனால் நான் போகவில்லை.

சில ஆங்கில புத்தகங்களும், கிழக்கில் ஒரு புத்தகமும் வாங்கிக் கொண்டு, காலச்சுவட்டில் இசை, இளங்கோ கிருஷ்ணன், ஆனந்த் ஆகியோரின் கவிதை தொகுப்புகளும் பா.திருச்செந்தாழையின் சிறுகதை தொகுப்பும் வாங்கி வந்திருக்கிறேன்.

உடனடியாக படிக்கத் துவங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்கிலத்தில் குரானும் வாங்கியிருக்கிறேன்.

கடைகள் முடியும் கடைசி வரிசைக்கு சென்ற போது டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுதுதான் நான் டிக்கெட் வாங்காமல் உள்ளே நுழைந்துவிட்ட Back door Party என்று உணர்ந்தேன். திரும்ப கேண்டீன் வழியாகவே வெளியேறிவிட்டேன். யாரும் கேட்கவும் இல்லை.

வெளியே வரும் போது, ஒரு பெண் புடவைக்கு அணியும் வெள்ளை ஜாக்கெட்டும் 'லோஓஓஓஓ ஹிப்பில்' கருப்பு பேண்ட்டும் அணிந்திருந்தாள். இரண்டு துணிகளுக்கு இடையேயான இடைவெளி எத்தனை செ.மீட்டரில் இருக்கும் என_______ கோடிட்ட இடத்தை நிரப்புக.

இளைஞர்களும் பெண்களும் இன்ன பிற தாத்தாக்களும் அலேக்காக அவளின் இடுப்பை நோட்டம் விட்டார்கள். நான் பார்க்கவில்லை என்று பொய் சொல்ல வேண்டிய சூழ்நிலைக் கைதியாக இருக்கிறேன்.

சாயல்களிலிருந்து விடுபடுதல் சுலபமில்லைதற்கொலை செய்து கொண்டவர்கள்
எப்பொழுதும்
நம்மை துரத்தும்படியான
சாயலை
விட்டுச் செல்கிறார்கள்

தினமும்
பன்னிரெண்டு மணி
பேருந்தில்
இறந்து போனவர்கள்
வந்து கொண்டிருக்கிறார்கள்

உறைந்த தலையென
பனிக்கட்டி நினைவுகளில்
புதைந்த
மீளா முகங்களை
எதிர் கொள்ளும்
ஒவ்வொரு கணமும்
அதிர்ந்து
நடுங்குகிறது
உடல்

மறக்கப்பட வேண்டியவர்கள்
எதாவதொரு சாயலில்
ஏதாவதொரு சாலையில்
எதிர்பாராத பொழுதில்
நம்மை கடக்கிறார்கள்

சாயல்களிலிருந்து விடுபடுதல் சுலபமில்லை

சில சாயல்கள் அழ வைக்கின்றன
சில சாயல்கள் பதற வைக்கின்றன
சில சாயல்கள் சாரலில் நனைக்கின்றன

நேற்றும்-
இரத்தச் சகதியோடு
தோண்டப்பட்ட கண்களில்
கடைசி முத்தத்தில்
கசிந்த
உன் கண்களின்
சாயலை பார்க்கிறேன்.

(நண்பர் கென்னிற்கு)

Nov 3, 2009

பாரத் மாதா கி ஜே!


ஈரோட்டில் இருந்து கோபிச்செட்டிபாளையத்துக்கு இரவில் பேருந்துகள் அதிகமாக இருப்பதில்லை. பெங்களூரில் மாலை ஐந்து மணிக்கு கிளம்பினால் ஒசூரை ஆறரை மணிக்கு அடைந்துவிடலாம். அங்கிருந்து நான்கு மணி நேர பயணத்தில் சேலம், பின்னர் இன்னும் ஒன்றரை மணி நேரம் பயணித்தால் ஈரோடு வரும். பன்னிரெண்டு மணிக்கு ஈரோட்டில் இருந்தால் பன்னிரெண்டரை மணிக்கு கோபி செல்ல ஒரு பேருந்து இருக்கிறது.அடுத்ததாக இரவு 1.25 க்கு ஒரு பேருந்து. அதையும் விட்டால் இரண்டே முக்காலுக்குத்தான் அடுத்த பஸ்.

இந்தவாரம் 1.25 மணி பேருந்தை ஈரோட்டில் பிடித்துவிட்டேன். போக்குவரத்து கழகத்தில் பயணச்சீட்டுக்கான தொகையை யார் நிர்ணயிக்கிறார்கள் என்று தெரிவதில்லை. ஒரு சில நாட்கள் ஈரோட்டிலிருந்து கோபிக்கு பத்து ரூபாய் டிக்கெட் தருவார்கள், சில நாட்கள் பன்னிரெண்டு ரூபாய்கள். இரவு சர்வீஸ் என்பதால் இரண்டு ரூபாய் அதிகம் என்று நடத்துனர் யாராவது ஒருவருக்கு பதில் சொல்லுவார். மற்றவர்களும் அந்த பதிலில் அமைதியாகி விட வேண்டும். யாராவது கேள்வி கேட்டால் "இப்பத்தான சொன்னேன் நைட் சர்வீஸ்ன்னு. எத்தனை தடவ சொல்றது" என்பார்.

பேருந்தின் கடைசி வரிசையில் ஆரம்பித்து முன் வரிசை நோக்கி டிக்கெட் கொடுத்து வந்த நடத்துனர், ஐந்தாவது வரிசையில் சன்னலோரமாக சாய்ந்து அமர்ந்திருந்த எனக்கு டிக்கட் கொடுத்து முடித்த நான்காவது நிமிடத்தில் முன்புறமாக ஒரு பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரண்டு ரூபாயை எப்படி அதிகம் வசூலிக்கலாம் என்பதாக அந்தப் பெண் ஆரம்பித்தார். அவர்களுக்கிடையேயான சம்பாஷணையின் முதல் ஓரிரு வாக்கியங்களை தூக்கக் கலக்கத்தில் தவறவிட்டிருந்தேன்.

கேள்விகேட்ட பெண்ணின் வேகமும், பதில் சொல்ல முடியாத நடத்துனரின் சமாளிப்பான பதில்களும் பஸ்ஸிலிருந்த பலரையும் விழிக்கச் செய்தன. மூன்றாவது வரிசையிலிருந்த ஒரு ஆஜானுபாகுவான மனிதரொருவர், நடத்துனரின் சார்பாக பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு "எல்லோரும் பணம் கொடுக்கும் போது உனக்கு மட்டும் என்ன வந்தது" என்றார்.

அந்தப்பெண்மணி "இது நடத்துனருக்கும் எனக்கும் இடையேயான பேச்சு. நீ ஏன் இடையில் பேசுகிறாய்?" என்றார். பேச்சு வார்த்தை நீ, நான் என்ற ஒருமையில் நீண்டது. இப்பொழுது அந்தப் பெண்மணியிடமிருந்து நடத்துனர் தப்பித்துவிட்டார். சண்டை ஆஜானுபாகுவுக்கும், பெண்மணிக்கும் இடையே நகர்ந்து மற்றவர்களை தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது.

கொஞ்சநேர அமைதிக்கு(கொஞ்ச நேரம் என்பது அதிகமில்லை, மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் இருக்கலாம்) பின்னர் திடீரென்று அந்த ஆஜானுபாகு உரத்தகுரலில், "பாரத் மாதா கி ஜேன்னு சொல்லிடுவேன்", "ஹமாரா ஹிந்துஸ்தானி தேஷ்..சலோன்னு சொல்லிடுவேன், தெரியுமா?" என்றார்.

எனக்குசிரிப்பு வந்துவிட்டது. எங்கள் ஊரில் ஹிந்தி அறிந்தவர்களை பார்ப்பது மிக அரிது. இந்த ஆள் ஏதோ இரண்டு வரிகளை தெரிந்து கொண்டு அந்தப் பெண்ணிடம் உதார் விடுகிறார் என்று நினைத்து சிரித்துக் கொண்டிருந்தேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் ஓரிரு ஊர்களைச் சுற்றி ஓரிரு மொழிகள் தெரிந்த மேதாவி என்ற நினைப்பில் அமர்ந்திருந்தேன்; இப்படி ஒரு நினைப்பிருக்கும் போது அடுத்தவரின் அசட்டுத்தனத்தைப் பார்த்தால் தெனாவெட்டாக உதட்டைச் சுழித்து ஒரு சிரிப்பை உதிர்ப்போம் அல்லவா? அந்தச் சிரிப்பை உதிர்த்தேன்.

அந்தப்பெண் அந்த ஆளின் ஹிந்தி உதாருக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். திடீரென்று அந்த ஆள் எழுந்து அந்தப் பெண்ணின் அருகில் சென்றார். இப்பொழுது அந்தப் பெண்ணை அடக்கிவிட்டதான மமதை அந்த ஆளிடம் இருந்தது. "கோபியில தான இறங்குவ? ஊட்ல அண்ணன் என்ன வேலை பண்ணுறாரு? கோபியில எறங்கு..பார்த்துக்கலாம்" என்றார். நள்ளிரவில் ஒரு ஆணின் மிரட்டலுக்கு ஆளான அந்தப் பெண்ணின் மீது எனக்கு பரிதாபம் வந்திருந்தது. எழுந்து ஏதாவது அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பஸ்ஸிலிருந்த மற்றவர்களின் மெளனம் என்னை கொஞ்சம் தயங்கச் செய்தது.

அடுத்தவினாடி பேருந்தில் ஒரு பேரிடி இடித்தது போல அந்தப் பெண்ணின் குரல் ஓங்கியது. "என்னய்யா செய்வ? நான் கோபி, சத்தி(சத்தியமங்கலத்தை சத்தி என்பார்கள்) மட்டுமில்ல, மெட்ராஸ் பெங்களூர் வரைக்கும் பார்த்தவ. உன்ன மாதிரி தறுதலைகள பார்த்து பயந்துட்டு இருப்பேனா? ராத்திரி மணி ஒண்ணாகுது. ஒருத்தி தனியா வர்றான்னா அவளைப்பார்த்தா தெரிய வேண்டாமா? உன்ன மாதிரி எத்தன பேரு வந்தாலும் ஒரு கை பார்ப்பான்னு.... சும்மா எல்லா பொம்பளையாலும் இப்படி தனியா வர முடியாது. மூடிகிட்டு உட்காரு."

அந்த ஆள் இடையில் பேசத் துவங்கிய போதெல்லாம் அந்தப் பெண்மணி சில கூரிய சொற்களை தன் குரலை உயர்த்திச் சொன்ன போது அந்த ஆள் அவமானம் அடைவதாலோ அல்லது வேறு காரணத்தினாலோ அமைதியாக வேண்டியிருந்தது.

எனக்கு சந்தோஷமாக இருந்தது. தன்இருக்கையில் இருந்து அந்தப் பெண் எழுந்து கொண்டார். தன் கழுத்தில் கறுப்புத் துணியைச் சுற்றியிருந்தார். நெற்றியில் பொட்டு இல்லை. இந்த ஆஜானுபாகு ஒரு மங்கிய காவி வேட்டியை அணிந்திருந்தார். இப்பொழுது எனக்கு அந்த ஆள் முன்பு பயன்படுத்திய இரு ஹிந்தி வாக்கியங்களின் கொடூர அர்த்தம் புரிந்தது.

அந்த ஆஜானுபாகு சொன்னதன் உள்ளர்த்தம் "இந்த தேசத்தில் இசுலாமியர்கள் யாரும் இருக்கக் கூடாது. பாரத் மாதா கி ஜே என்பது பாரத தேவியை புகழ்கிறதோ இல்லையோ இசுலாமியனை இழிவு படுத்துகிறது".இப்படியான பிம்பம் இங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.

மிகக்குரூரமான வக்கிர சிந்தனையுடைய இந்து அடிப்படைவாதிகளின் கைங்கர்யத்தால் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இசுலாமியர்கள் மீதான இத்தகைய சில்லறைத்தனமான தாக்குதல்கள் வட இந்தியாவிலும், தென்னகத்தில் ஹைதராபாத் வரையிலும் நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் கோபி போன்ற, இன்னமும் கிராமச் சாயல் மாறாத தமிழகத்தின் உட்புறத்தில் இருக்கும் சிறு நகரத்தில், அதுவும் நள்ளிரவில் தனித்த பயணத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் மீதான மத வெறியுடன் கூடிய சொற்தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை. மிக அதிர்ச்சியாக இருந்தது.

மதரீதியான விஷம் ஊடுருவிக் கொண்டிருக்கும் இந்த தேசத்தில் அரை வேக்காடான மதவாதிகளின் தூபங்கள், நகரங்களை விட கிராமங்களில் ஆழமாக கால்பதிக்கிறது. தனது மத நம்பிக்கைகள் குறித்தான முழுமையான புரிதலைக் கொண்டிருப்பவர்கள் அடுத்த மதத்தினரின் மீதான் வன்முறையை தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் அரைகுறையான நம்பிக்கையும் புரிந்துணர்வும் கொண்டிருக்கும் நபர்களிடத்தில், அதுவும் எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடிய கிராமத்தின் மக்களிடம் அடுத்த மதத்தின் மீதான தாக்குதலே உங்கள் மதம் மீதான உங்களின் விசுவாசம் என்ற ரீதியில் வக்கிர சிந்தனைகளை மதவாதிகளால் எளிதில் பரப்ப முடிகிறது.

குறிப்பிட்ட ஒரு மதத்தினர் மட்டும் குற்றங்களைப் புரிவதில்லை. இசுலாமியர்களிலும் பாகிஸ்தான் மீதாக பிரியம் உள்ளவர்களைக் காண முடிகிறது. பாகிஸ்தானின் பெரும்பான்மை மதம் இசுலாம் என்ற நம்பிக்கை மட்டுமே இந்திய முஸ்லீம்களில் சிலரை பாகிஸ்தானோடு பிணைக்கிறது. பாகிஸ்தானில் உள்ள மக்கள் தொகையைக் காட்டிலும் இந்தியாவில் உள்ள இசுலாமியர்களின் எண்ணிக்கை அதிகம் என்ற உண்மையை அவர்கள் உணர்ந்திருப்பதில்லை.

மதம் என்பதன் அடிப்படையைக் கூட உணர்ந்திராத ஆதிதிராவிட குடும்பத்துக்கு பணம் கொடுத்து , ஞானஸ்நானம் செய்து தன் ஆண்டவனுக்கு விசுவாசமாக இருக்கும் சில கிறிஸ்தவர்களின் மதவெறியும் எந்த விதத்திலும் சளைத்ததில்லை.

தேச ஒற்றுமை, மத நல்லிணக்கம் என்ற புனிதபிம்பங்கள் எல்லாம் வைத்து ஜல்லியடிக்க விரும்பவில்லை. மதங்களின் பெயரால் சாமானியர்கள் மீதாக நிகழ்த்தப்படும் வன்முறைகள் பற்றித்தான் இங்கு பேச நினைப்பது.

ஆனால் இதையெல்லாம் புலம்புவதால் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை என்பதால் அந்த பஸ் சம்பவத்துக்கு வந்துவிடலாம்.

நேரம் ஆக ஆக அந்தப் பெண்ணின் ப்ளட் பிரஷர் அதிகம் ஆகி இருக்க வேண்டும். அவரது வார்த்தைகள் நடுங்கத் துவங்கின. பொதுவில் பேசத் தகாத சில சொற்களை அநாயாசமாக தெறிக்கச் செய்தார். இப்பொழுது அந்த ஆஜானுபாகு பரிதாபமாகியிருந்தார். பஸ்ஸில் சிலர் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர். அவர் அமைதியாவதாயில்லை. டிரைவரும் நடத்துனரும் தங்கள் செயலில் லயித்தனர். பஸ்ஸில் சிலர் உறங்கத் துவங்கினர். கொஞ்சம் பெரியவன் ஆன பிறகு பெண்கள் உபயோகிக்கும் கெட்டவார்த்தைகளை நான் கேட்க முடிவதில்லை என்பதால், இந்தச் சந்தர்ப்பத்தில் அவற்றைக் கேட்க விரும்பி காதைக் கூராக்கினேன். ஓரிரு வார்த்தைகள் காதுகளை நிரப்பின. அதற்குள் கோபி பஸ் நிலையம் வந்துவிட்டது. மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.

இனி நான் பஸ்ஸிருந்து இறங்கி கரட்டடிபாளையத்துக்குச் செல்ல ஆட்டோக்காரருடன் பேரம் பேச வேண்டும்.

நன்றி: உயிரோசை 02/11/2009.