Oct 29, 2009

மரணத்தின் ரசனை


பாதியில் கலைக்கப்பட்ட கனவுகளைச் சேமித்து வைக்கிறீர்கள்
உறக்கத்தில் புன்னகைகளை மீதம் வைக்கிறீர்கள்
யாரும் கேட்டிராத நள்ளிரவின் ஓசையில் திடுக்கிடுகிறீர்கள்
தனிமையின் நிசப்தத்தில் நீங்கள் அதிர்வுறுகிறீர்கள்.

மரணம்
ரசித்துக் கொண்டிருக்கிறது.

நிதானமாக.
=============

இந்தக் கவிதையோடு இணைக்கப்பட்ட இந்தப் படம் யதேச்சையாக கிடைத்தது. துக்கத்தோடு கலந்த நகைச்சுவை. நகைச்சுவையில் எப்பவும் மெல்லிய துக்கம் இழையோடும் என்று எப்பவோ படித்த ஞாபகம்.

Oct 26, 2009

குடியால் விளையும் நன்மை(சத்தியமாக நீங்கள் நினைப்பது பற்றியது இல்லை)

சேலம் மாவட்டம் சங்ககிரியில் கட்டப்பட்டிருக்கும் அண்ணா நூற்றாண்டுவிழா பேருந்து நிலையத்தை துவக்கி வைக்க துணை முதல்வர் ஸ்டாலின் வருகிறார்.

ஈரோடு-சேலம் சாலையின் நடுநாயகமாக இருக்கும் முக்கியமான ஊர் சங்ககிரி. (சங்கு வடிவ கிரி?). ஊருக்கு இரண்டு பக்கமுகாக இரண்டடிக்கு ஒன்றாக, தோராயமாக பத்துக் கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறங்களும் டியூப்லைட்கள் கட்டி, சங்ககிரியிலிருந்து சேலம் வரைக்குமான முப்பத்தி சொச்சம் கிலோமீட்டர்களும் கொடி தோரணங்களும், பேனர்களுமாக தங்கள் பராக்கிரமத்தை காட்டியிருக்கிறார்கள் சேலத்துக் கண்மணி்கள்.

நேற்று பெங்களூருக்கு பேருந்தில் வரும் போது எனக்கு ஓரிரண்டு சந்தேகங்கள் வந்தன.

1. இத்தனை டியூப்லைட்களுக்கும் யார் எலெக்ட்ரிக் பில் கட்டுவார்கள்?

2. இருபக்கமும் இருக்கும் ஆயிரக்கணக்கான விளக்குகள், இலட்சக்கணக்கான பேனர்கள், கோடிக்கணக்கான கொடி தோரணங்களை ஸ்டாலின் விரும்புகிறாரா? இல்லை கழகத்தினர் அவர் பேச்சையும் கேட்காமல் செய்கிறார்களா?

3. வீரபாண்டியார், ஸ்டாலினுக்கு எதிரான செயல்பாடுகளை நடத்துபவர் என்று சில நாட்கள் முன்பு வரைக்கும் செய்திகளில் படித்திருக்கிறேன். வீரபாண்டியாரின் கோட்டை என்று பேசப்படும் சேலத்தில் ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு பிரம்மாண்டமான வரவேற்பு தருகிறார். மாறிவிட்டாரா?

==========

நேற்று எங்கள் ஊரில் சில ரத்தத்தின் ரத்தங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் நம்புவதாக நான் உணர்ந்தது.

1. இத்தனை இலவச திட்டங்களும் நிச்சயமாக இன்னும் ஒரு தேர்தலுக்கு திமுக வின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன.

2. டாஸ்மாக் வருமானமே இத்தனை கோடிகளை இலவச திட்டங்களில்செலவழிக்கும் தைரியத்தை அரசாங்கத்திற்கு கொடுக்கின்றன. (சரியா?)

என் சித்தப்பாவுக்கு ஒரு சந்தேகம், அந்த சந்தேகம் முந்தைய கேள்விக்கு பதில் கொடுக்கலாம்.

பால் விலை, பஸ் டிக்கெட் விலை உயர்வுக்கு எல்லாம் போராட்டங்கள் நடக்கின்றன. தீபாவளி சமயத்தில் 110 ரூபாய் சரக்கு 140 ரூபாய்க்கு விற்ற போதும் எந்த குடிமகனும் பிரச்சினை செய்ததாக தெரியவில்லை. ஏன்?

=====

விவசாயக் கூலிகளுக்கு ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலை வாய்ப்பு தரும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. வருடத்தில் நூறு நாட்களுக்கான வேலை வாய்ப்பைத் தரும் அரசாங்கமே தினக்கூலிகளுக்கான கூலியை கொடுக்கும். கிணறு வெட்டுதல், குளம் தூர் வாருதல் போன்ற பணிகளை இத்திட்டத்தின் மூலமாக செய்வார்கள்.

இந்தத் திட்டத்தில் அரசாங்கம் கொடுக்கும் கூலியானது, இன்றைய நிலையில் தோட்டம், வயல் வேலைகளில் தரப்படும் கூலியை விட பத்து அல்லது இருபது ரூபாய்கள் குறைவு. ஆனால் தொழிலாளர்கள் அரசின் வேலைத்திட்டத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். அடிப்படை காரணங்கள்

1. வேலை நேரம் சொற்பம்
2. வேலை செய்யவில்லை என்றால் கேட்கப்படும் கேள்விகள் குறைவு.

மில் வேலைக்கும், நூல் கம்பெனிகளுக்கும் வேலை தேடி பல பேர் போய்விட்டார்கள். மீதமிருந்த கொஞ்சம் பேரும் இப்படி அரசாங்கத்தின் திட்டத்தால் விவசாய வேலை செய்ய வருவதில்லை. விவசாயம் எப்படி செய்து பிழைப்பது என்ற விவசாயிகளின் புலம்பல் கோபி, பொள்ளாச்சி போன்ற ஊர்களில் அதிகமாகிவிட்டது.

அரசாங்கம் கொஞ்சம் விரிவாக பரிசீலித்தால் நூறு நாட்கள் திட்டத்தை, 365 நாட்கள் திட்டமாக மாற்றிவிடலாம். எண்பது ரூபாய் தருவதற்கு பதிலாக ஐம்பது ரூபாய் தந்து பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

1. தொழிலாளர்கள் விவசாயிகளின் தோட்டங்களில் வேலை செய்வார்கள். அரசாங்கம் ஐம்பது ரூபாய் கொடுத்துவிடும். தோட்ட உரிமையாளர் ஐம்பது ரூபாய் கொடுப்பார்.

2. இதில் தொழிலாளியின் கூலி அதிகமாகிறது. விவசாயி, தன் தொழிலாளிக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை மிச்சம் செய்யலாம்.

3. அரசாங்கம், தினக்கூலிகள் 365 நாட்களும் வேலை கிடைப்பதை உறுதிப்படுத்தலாம்.

இந்தத் திட்டம் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் சாத்தியமில்லை. நல்ல தண்ணீர் வசதியோடு விவசாயம் செழிக்கும் கொங்கு மண்டலம், காவிரி படுகைகளில் செயல்படுத்தலாம். மற்ற ஊர்களுக்கு வேறு முறைகளை பரிசீலிக்கலாம்.

Oct 22, 2009

குடித்து விட்டு பேசலாம்

நான் லார்ஜ் விஸ்கி அடிச்சேன் அடுத்தவன் ரம் தான் அடிச்சான், கூட இருந்தவன் சைட் டிஷ் மட்டும் சாப்பிட்டான் எங்களுக்குள் பயங்கர சண்டை வந்து மூக்கை உடைத்துக் கொண்டோம் என்றால் அது பெரிய பரபரப்பாக ஆகிவிடுகிறது. இந்த நிகழ்ச்சியை எழுத்து வடிவமாக்கினால் இலக்கியச் சண்டை என்று கொடிபிடிக்க ஒரு கூட்டம் சேர்ந்து விடுகிறது. கிராமத்தில் அல்லது நகரத்தில் டாஸ்மாக் கடைகளுக்குள் முன்னால் இவை நடந்திருந்தால் இதன் பெயர் "குடிகாரர்கள் சண்டை". சாலையில் நடந்து செல்லும் இரண்டு பெண்கள் முகத்தைச் சுளித்து நான்கைந்து வார்த்தைகளை துப்பிவிட்டுச் சென்றிருப்பார்கள்.

டாஸ்டாயோவ்ஸ்கியை கடைசி பக்கத்தில் இருந்து படித்தவர்களும், குறட்டை விட்டால் கூட கிப்ரான் வரிகள் மூச்சுக் காற்றில் கலந்து வருகிறது என்றெல்லாம் சொன்னவர்களும், சில பல கதைகளை வக்கனையாக எழுதியவர்களும் இதில் ஈடுபட்டார்கள் என்பதால் இந்த குடிகாரச் சண்டை, இலக்கியச் சண்டையாக மாறிவிட்டது. இந்த உலகம் புனைவுகளால் பின்னப்பட்டது அல்லவா?

இருபத்தைந்து வருடங்களாக தமிழகத்தின் இலக்கிய கூட்டங்களில் குடித்துவிட்டு "நீ எழுதுவது குப்பை" என்றும் "அவன் என் சாதியைச் சொல்லித் திட்டினான்" என்றும் சொல்லிச் சொல்லியே அடித்துக் கொண்டு தங்களின் இலக்கியவாதிகளின் பிம்பத்தை கட்டமைத்த குழுக்களின் வேறு வடிவம் எனக்கு இப்பொழுது வலைப்பதிவுகளில் தெரிகிறது.

குடிப்பவர்கள் நல்ல இலக்கியங்களின் பிதாமகன்கள் என்றமைக்கப்பட்ட இலக்கியச்சூழலில் இருக்கிறோம்.

சரி எனக்கு என் மூக்கு முக்கியம் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
===
வலைப்பதிவில் நிழற்படத்தை மாற்றிவிட்டேன்.

எனக்கு இத்தனை நாட்களாக படத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றியதில்லை. நிறையபேர் உனக்கு நாற்பது வயதாக இருக்கும் என்று நினைத்திருந்ததாகச் சொன்னபோதும், உன்னிடம் இளைஞனுக்குரிய ஒரு அம்சமும் இல்லை என்று சில நண்பர்கள் நக்கலடித்த போதும், குறைந்தபட்சம் நிழற்படத்தை மாற்றியாவது நான் இளைஞன் என்று நிரூபிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை.

எப்பொழுதுதான் நிருபிப்பது நானும் "யூத்" என்று.

ஜீப்பில் ஏறியாகிவிட்டது.
===
கலாப்ரியா குங்குமத்தில் எழுதிய கட்டுரையை வாசித்தேன். சமீப காலங்களில் தனது பழைய நினைவுளின் தாழ்வாரங்களில் தூசு படிந்து கிடந்தவற்றை புத்தம் புதுசாக எழுதி பட்டையை கிளப்புகிறார். இரண்டாவது கட்டுரை இந்த வாரம் குங்குமத்தில் வந்திருக்கும். இன்னமும் கைகளில் கிடைக்கவில்லை.

வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கும் நேரத்தை பக்காவாக பயன்படுத்துகிறார் மனுஷன். எழுதிக் குவிக்கிறார்.

Oct 20, 2009

தொடர்பில்லாத அல்லது தொடர்புடைய டைரிக்குறிப்புஒவ்வொரு வாரமும் ஊருக்கு போகிறேன். அப்பா அறுபது வயதில்தான் கார் ஓட்டிப் பழகினார். இரண்டு மாதங்களுக்கு முன்பாக அறுபது கிலோமீட்டர் தூரத்திற்கு காரை ஓட்டிச் சென்றுவிட்டு திரும்பி வரும் போது வீட்டுக்கு முந்நூறு மீட்டருக்கு முன்னதாக விபத்து நடந்திருக்கிறது.

விபத்து எப்படி நடந்தது என்று சொன்னால் அது மற்றவர்களுக்கு காமெடியாக இருக்கலாம். அப்பாவுக்கு அது ட்ராஜிடி. வீட்டிற்கு அருகாமையில் வரும் போது எதிரே ஒரு பெண் வந்திருக்கிறாள். அவள் மீது கார் இடித்துவிடக் கூடும் என்று நினைத்து ஸ்டியரிங்கை திருப்பியவர், பிரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தி மிதித்திருக்கிறார். வேகமெடுத்த வண்டி அருகில் இருந்த சுவர் அதிர மோதி நின்றிருக்கிறது. வலதுகாலில் இரண்டு முறிவுகள்.

செய்தியறிந்து நான் பதறியடித்து பெங்களூரிலிருந்து இரவோடிரவாக கிளம்பிப்போனேன். இறுகிய முகத்துடன் அப்பா படுத்திருக்க, இரவு முழுவதும் அழுது வீங்கிய முகத்துடன் அம்மா இருந்தார். அறுபது வயதிலும் கார் ஓட்டிப் பழகும் ஆர்வத்தை பாராட்டுவதா அல்லது எதற்கு இந்த வயதில் வெட்டி வேலை என்று திட்டுவதா என்ற குழப்பத்தில் நான் இரண்டாவதை தேர்ந்தெடுத்தேன்.

பெரும்பாலும் பெங்களூருலிருந்து ஒசூருக்கு நண்பர்களுடன் காரில் போய்விடுவதுண்டு. பின்னர் ஓசூரிலிருந்து சேலத்திற்கு ஒரு பஸ், சேலத்திலிருந்து ஈரோடு, அங்கிருந்து கோபி, பின்னர் ஆட்டோ பிடித்து கரட்டடிபாளையம் என்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் தூக்கமில்லாமல் கரைகிறது. தூங்கிவிட எந்தப் பேருந்தும் அனுமதிப்பதில்லை. கில்லியோ, முந்தானை முடிச்சோ டிவிடி வடிவில் கண்களுக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதை என்னால் தவிர்க்கவும் முடிவதில்லை. பசங்க, நாடோடிகள் போன்ற விமர்சன ரீதியாக அதிகம் பேசப்பட்ட சமீபத்திய படங்களை பேருந்திலேயே பார்த்திருக்கிறேன்.

ரயிலில் போகும் போது எதையாவது யோசிக்க முடியும்.பேருந்தில் அதற்கான வாய்ப்பு இருப்பதில்லை. கவனம் முழுவதும் வண்ணத்திரையில் லயித்து விடுகிறது. ஆனால் இதற்காக வருந்துவதில்லை.வாழ்வில் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்துவிட வேண்டும் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். எனக்கு இப்போதைக்கு வேறு வழியில்லை. ஒவ்வொரு வாரமும் ஊருக்குப் போய்த்தான் ஆக வேண்டும்.

=====

பேருந்தில் பயணிக்கும் போது ஒரு சம்பவம் என்னால் மறக்க முடியாதததாக பதிந்திருக்கிறது.

சேலத்தில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு வார விடுமுறைக்காக ஊருக்கு பஸ் ஏறினேன். மிடுக்காக ஆடை அணிந்திருந்தவர் புன்னகைத்து 'ஹாய்' சொல்லி அருகில் இடம் கொடுத்தார். சிரித்துக் கொண்டு அருகில் அமர்ந்தேன். எப்பொழுதும் போலவே ஈரோடுக்கு ஒரு டிக்கெட் எடுத்தவுடன் தூங்க ஆரம்பித்துவிட்டேன். நான் அசந்த நேரத்தில் அவரது கை என் தொடை மீது ஏறியிருந்தது. அடுத்தவனின் கை தொடை மீதிருப்பதை உணர்ந்து ஒவ்வொரு முறை நான் என் கால்களை அசைக்கும் போதும் அவர் கையை எடுத்துக் கொண்டார். நேரம் ஆக ஆக அவரது கை என் தொடையிலிருந்து மேல்நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது. கூச்சமாக இருந்தது. இதை தவிர்க்க வேண்டும் என்று தெரியும் ஆனால் எப்படி என்று தெரியவில்லை. விடலைப்பருவம் அது. பயம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அவன் என்னை கடத்திச் சென்றி ஒரு இருட்டறையில் நாட்கணக்கில் வைத்திருப்பதாகவும் இன்ன பிறவற்றை செய்து கொண்டிருப்பதாகவும் மனதிற்குள் ஒரு குதிரை ஓடிக் கொண்டிருந்தது.

அந்தப் பேருந்தில் இருக்க தயக்கமாயிருந்ததால் சங்ககிரியில் இறங்கி அடுத்த பேருந்தில் ஏறினேன். படிக்கு அருகில் இருந்த ஒரு ஸீட்டில் இடம் காலியாக இருந்தது. அந்த முன்னிரவின் விளக்கு வெளிசத்தில், என்.ஹெச் 47 சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த வாகனங்களை மிக வேகமாக பஸ் கடந்து கொண்டிருந்தது.

என் அருகில் அமர்ந்திருந்தவர் அழுது கொண்டிருந்தார். நான் மெதுவாக திரும்பி அவரைப் பார்ப்பதும் பின்னர் ஜன்னலை பார்ப்பதுமாக இருந்தேன். இருபது நிமிடங்கள் கடந்திருக்கலாம். ஒரு லாரியை பஸ் முந்திக் கொண்டிருந்தத போது அழுது கொண்டிருந்தவர் வேகமாக எழுந்து கீழே குதித்துவிட்டார். பஸ்ஸும், லாரியும் பின்னால் வந்த சில வாகனங்களும் தன்னிச்சையாக நின்றன. குதித்தவர் லாரிச் சக்கரத்தில் விழுந்து கசங்கிப் போனார். இரண்டு நிமிடத்திற்கு முன்பாக பார்த்த ஒருவன் இரத்தத்தின் ஈரப்பசை மாறாமல் நசுங்கிக் கிடந்ததைப் பார்த்த எனக்கு மூன்று நாட்கள் எனக்கு காய்ச்சல் விடவில்லை. அவர் இறப்பதற்கு முன் பார்த்த முகம் என்னுடையது என்பது எனக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும்.

=======

ஹைதராபாத்தில் இருக்கும் போது தொடர்ந்து ஆறு மாதங்களாக ஊருக்குப் போகாமல் இருந்ததுண்டு, அந்தத் தனிமை மிக அசட்டையாக என்னைப் பார்த்து பல்லிளிக்கும். ஆனால் அந்தத் தனிமையில் ஒரு போதை இருந்தது.

நண்பன் ஒருவனை டெல்லிக்கு ரெயிலில் அனுப்பிவிட்டு 'நாம்பள்ளி' ரயில் நிலையத்திலிருந்து மெஹதிப்பட்டணம் தாண்டி இருக்கும் ரெத்திபவுலி வரைக்கும் இரவு ஒரு மணியளவில் நடந்து வந்திருக்கிறேன். சாச்சா நேரு பூங்காவிற்கு அருகில் இருக்கும் மேம்பாலத்தின் மீது நிற்கும் போது அமைதியான நள்ளிரவில் பாலத்தின் மேலாகச் செல்லும் லாரி பாலத்தில் உண்டாக்கும் மென்னதிர்வை உணர்ந்திருக்கிறேன்.இத்தகைய தனிமையின் சுகங்களை பெங்களூரில் உணர்ந்ததில்லை. பெங்களூர் எனக்கான தனிமையை பறித்துக் கொண்டது. நம் மொழி பேசுபவன் அருகில் இருப்பது கூட ஒரு விதத்தில் சுமையாக இருக்கிறது. வாய்விட்டு ஒரு மூன்றெழுத்து கெட்ட வார்த்தை பேச முடிவதில்லை.

=======

நேற்றிரவு அலுவலகம் முடித்துப் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். ரெயில்வே ட்ராக்கை தாண்டி சாலையில் இருந்த குழியில் நீர் நிரம்பியிருந்தது. ஸ்பெலெண்டர் ப்ளஸ்ஸில் வேகமாக போனால் இரண்டு பற்கள் கழண்டுவிட வாய்ப்பிருப்பதால் மெதுவாக நகர்த்தினேன். (இந்த வண்டியில் லைட்,ஹார்ன்,மைலேஜ்,பிரேக் என்ற முக்கியமான அம்சங்கள் எல்லாமே ஒரு படி கீழாகத்தான் இருக்கிறது. ஆனால் இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த சமயம், ஏனோ இதையே பெரும்பாலானோர் சிபாரிசித்தார்கள்), நான் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த சமயம் பின்னால் வந்த கார்க்காரன் பயங்கரமாக ஹார்ன் அடித்து கடுப்பேற்றினான். அவனது வண்டி கேரளா பதிவு. என்னைப்போலவே திரவியம் தேட இங்கு வந்திருப்பவன் என்பதால் கொஞ்சம் கலாய்த்தால் தப்பில்லை என்று தோன்றியது.

உள்ளூர்க்காரனிடம் அதிகம் வைத்துக் கொள்ள மாட்டேன். அவர்கள் கை ஓங்கிவிட வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்களிடம் கொஞ்சம் அடங்கிச் சென்று விடுவேன். கார்க்காரனை முன்பக்கமாக விட்டு அடுத்து வந்த வேகத்தடையில் அவன் மெதுவாக ஏறிக் கொண்டிருந்த போது போது பின்புறமாக நின்று ஹார்ன் அடித்து என் வீராப்பைக்க்காட்டினேன். கண்ணாடியை கீழிறக்கி "வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?" என்றான் முன்புறமாக நகர்ந்து பாம்புவிரலை உயர்த்தி என் வக்கிரத்தை காட்டி அவன் கோபத்தை கிளறி கொஞ்சம் குளிர்காய்ந்தேன். இடியட், ஸ்டுபிட் என்றான், நானும் பதிலுக்கு சில வார்த்தைகளைத் துப்பினேன்.

வண்டியை குறுக்காக நிறுத்தி சில வார்த்தைகள் பேசலாம் என்று தோன்றினாலும் கூட்டம் சேந்ததாலும் எனக்குள் கொஞ்சம் பயம் சேர்ந்ததாலும் அடங்கிக் கொண்டேன். அவன் நகர்ந்துவிட்ட பின்னரும், இன்று காலையில் அலுவலகம் வரும் வரைக்கும் அவனை எப்படி பழி வாங்கியிருக்க முடியும் என்று அவ்வப்போது யோசித்தேன்.

ட்ராபிக் போலீஸ் வரும் வரைக்கும் சண்டையிட்டு அவன் வண்டி கேரளா ரெஜிஸ்ட்ரேஷன் என்பதை அவருக்கு காட்டிக் கொடுத்திருக்கலாம், தமிழில் மிக வக்கிரமான வார்த்தைகளை பிரயோகித்து அவனை அவமானப்படுத்தியிருக்கலாம். இன்னும் கொஞ்சம் வழிமுறைகளையும் யோசித்துப் பார்த்தேன். அவை அச்சுக்கு ஏற்றவை அல்ல என்பதால் விட்டுவிடலாம். ஆனால் எத்தனை குரூரமானவனாக இருக்கிறேன் என்பதை இவை உணர்த்துகின்றன.

Oct 16, 2009

திருமாவுக்கு ஒரு கடிதம்


அன்பின் திருமா,

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்றுவிடக் கூடாது என்று நினைக்க காரணம் இருந்தது. திமுகக் கூட்டணியில் திருமாவும், அதிமுக கூட்டணியில் வைகோவும் வெல்ல வேண்டும் என்று விரும்பியிருந்தேன். மற்றவர்களைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.

இலங்கைப் போரின் முடிவு பற்றியும் பெரிதாக எதிர்பார்ப்பில்லாத தருணம் அது. ஆயிரக்கணக்கில் தமிழர்கள் மடிவதும், இலட்சக்கணக்கில் தமிழர்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிக் கொண்டிருப்பதுமான செய்திகள் 'சில' ஊடகங்களில் வந்து கொண்டிருந்த போது இந்தியா மெளனம் சாதித்துக் கொண்டிருந்தது. டெல்லியில் தமிழனுக்காக உரத்துக் குரல் கொடுக்க யாருமில்லாமல் வெறுமை சூழ்ந்திருந்தது. திருமாவும் வைகோவும் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்ற நம்பிக்கை துளிர்க்கத் துவங்கிய வேனிற்கால பருவம் அது.

விருப்பம் ஐம்பது சதவிகிதம் நிறைவேறியது. வென்றீர்கள், என்றாலும் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உலவிக் கொண்டிருந்தீர்கள். பெரிதாக வருத்தமடையவில்லை.

ஆனால் நேற்று ராஜபக்சேவுடன் குலாவிய என் இன நொண்டிச் சிங்கத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது அருவெருப்பாக இருந்தது. இது ராஜதந்திரம் என்று சொல்லி மழுப்பப்படும் என்று எங்களுக்குத் தெரியும் என்பதால் அவ்வாறு சொல்லி இன்னும் கொஞ்சம் அசிங்கப்பட வேண்டாம்.

நீங்கள்(குழு) எப்படி பேசினாலும் உங்களின் எந்த வேண்டுகோளும் இலங்கையில் நிறைவேற்றப்படவும் போவதில்லை; இலங்கைத் தமிழனின் வாழ்வும் மாறப்போவதில்லை என்பதை அங்கு செல்வதற்கு முன்பாகவே நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றாலும் புன்னகைத்துக் கொண்டு விமானம் ஏறினீர்கள். என்றாலும் நம்பிக்கையில்லா தமிழர்கள் வாழ்த்துக் கூற தயங்கவில்லை.

முகாம் சந்திப்புகளை முடித்துவிட்டு அதிபரை பார்க்கப் போகும் போது உங்கள் முன்னால் இரண்டு சாத்தியங்கள் இருந்தன. ஒன்று அதிபர் குழாமிடம் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு ஒரு சாமானியத் தமிழனின் கோபத்தையும் கண்டனத்தையும் குழுவில் இருந்த நீ ஒருவனவாவது காட்டியிருக்கலாம்.சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்தை சந்தித்தபோது உங்கள் வீரமும் தைரியமும் செருப்போடு சேர்த்து வெளியில் நின்றுவிட்டது போலிருக்கிறது. கூனிக் குறுகி, சிரித்து வழிந்து நீங்கள் அசிங்கப்பட்டதுமில்லாமல், மொத்த தமிழினத்தையும் கேவலப்படுத்தியிருக்கிறீர்கள்.

அல்லது அதிபரை எதிர்த்து உங்களால் பேச முடியாது என்ற பயம் உங்கள் தொடையை நடுங்கச் செய்திருக்கும் பட்சத்தில் அந்த அதிபர் சந்திப்பை புறக்கணித்து எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

இரண்டும் இல்லாமல் அதிபர் மாளிகையில் குலாவிக் கொண்டு திரும்பியிருக்கிறீர்கள். ராஜபக்ஷேவும் அந்த சகோதரன்களும் என்ன உங்களின் மச்சான் உறவா? அவர்கள் நீங்கள் "இறந்திருப்பீர்கள்" என்பார்கள், அதை நீங்கள் "ஜோக்"காக எடுத்துக் கொள்வீர்கள். எவ்வளவு அவமானகரமான நிகழ்வு இது.

இந்தியா வல்லரசு தேசம் என்ற கொடியேற்றுகிறீர்களே அந்த தேசத்தின் ஆளுங்கட்சி குழுவல்லவா நீங்கள். மிதித்தெறிய வேண்டியவனிடம் மண்டியிட்டு சரணாகதியடைந்த கொள்கை திருவிளக்காக நாடு திரும்பியிருக்கிறீர்கள்.

கொழும்பு செல்லும் நாடாளுமன்ற குழுவில் உங்களின் பெயரைப் பார்த்தவுடன் சரியான முடிவுக்கு வர முடியவில்லை. ராஜபக்ஷேவின் செயல்களை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களோடு செல்லும் உங்களால் என்ன செய்துவிட முடியும் குழப்பம் இருந்தாலும், வாழ்வில் உச்சபட்ச துன்பங்களை உணர்ந்துவரும் மக்கள் வாழும் முகாமுக்கு நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. குறைந்தபட்சம் நமக்காக குரல் கொடுப்பவனை பார்த்துவிட்ட சந்தோஷம் அவர்களுக்கு கிடைக்கலாம்.

அடுத்த நாள் அதிபர் மாளிகையில் அரங்கேறும் அசிங்கத்தை உணராமல் அவர்களும் அழுது புலம்பியிருக்கிறார்கள். வாழ்வின் அடிமட்ட கசப்போடு இலட்சக்கணக்கான மக்கள் கழிந்த பீ மூத்திரத்தின் நாற்றம் இலங்கைக்கே சென்றுமா உங்கள் நாசியில் ஏறவில்லை.

ஹிட்லர் கூட செய்யாத செயல்களைச் செய்பவன் இந்த ராஜபக்சே என்று மார்தட்டிய திருமாவை அவனது கால்களுக்கடியில் குலையும் நாய்குட்டியாக பார்கக் வேண்டி வரும் என்று நினைக்கவில்லை.

தேர்தலுக்கு முன்பாக நீங்கள் காங்கிரஸ் கட்சியை மென்று தின்று கொண்டிருந்தீர்கள். நீங்கள் கொள்கைப் பிடிப்புடையவர் என்ற நம்பிக்கை இருந்ததால் தீவுத்திடலில் சோனியாவுடன் மேடையேற மாட்டீர்கள் என்றிருந்தேன். ஏறினீர்கள். கர்ஜித்தீர்கள். தேர்தலில் வென்றாக வேண்டும், நாடாளுமன்றத்தில் குரல் உயர்ந்தாக வேண்டும் என்பதால் அது தற்காலிக உடன்படிக்கை என்று நானாக சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஆனால் சாதாரண மூன்றாம்தர அரசியல்வாதியின் பதவி ஆசை தவிர உங்களிடம் கொள்கைபிடிப்பு என்று எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் போது ஆயாசமாக இருக்கிறது. வெறும் பதவிக்காகத் தானே இத்தனை கும்பிடுகளும்.குறுகல்களும்

உங்களின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது. இன்று கூட இந்தக் கடிதத்தை பகிரங்கரங்கமாக பதிவு செய்து கொஞ்ச நாட்களாவது தமிழ் உணர்வோடு பேசிய உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் நான் நினைப்பதைத்தான் சாதாரணத் தமிழன் நினைத்துக் கொண்டிருப்பான். பதவியில் இருக்கும் உங்களால் அதை உணர முடியுமா என்று தெரியவில்லை. உங்களின் செயலை கண்டிப்பதற்கு இந்தக் கடிதம் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று, தமிழுக்காக உருவாகும் ஒவ்வொரு தலைவனும் அழிந்து வருகிறான். அல்லது அழிக்கப்படுகிறார்கள்.

யார் திட்டமிடுகிறார்கள்?

வருத்தத்துடன்,
..........................

Oct 7, 2009

அகிஹபாரா

வேமாண்டம்பாளையத்தில் இருந்து கரட்டடிபாளையம் வந்தால் கூட அமத்தா முறுக்கும்,தேங்காய் பன்னும் வாங்கிவராவிட்டால் அவருக்கு தூக்கம் வராது. ஜப்பான் வந்துவிட்டு சும்மா கையை வீசிக் கொண்டு போனால் மரியாதையாக இருக்காது. அதனால் நானும் சொந்தபந்தங்களுக்கு ஏதாவது வாங்கிச் சென்றால்தான் மரியாதை. ஆனால் ஜப்பானில் என்ன வாங்குவது என்பது சரியான குழப்படியாக இருக்கிறது. கடைகளில் ஜப்பானியத்துவம் உடைய பொருட்களைத் தேடினால் எதுவும் தட்டுப்படுவதில்லை. அப்படியே இருந்தாலும் பெரிய விலை.
விலை பார்க்கும் நேரம் எல்லாம் என்னுடைய கஞ்சத்தனம் எட்டிப்பார்க்கிறது. விளக்குகளாலும் கண்ணாடிகளாலும் அலங்கரிக்கப்பட்ட டிஸ்னி பொம்மை கடைகளையும், ரீபோக்,அடிடாஸ் கடைகளையும் பெங்களூரிலும் சென்னையிலும் கூட பார்க்கலாம். இந்தக் கடைகளை பொறுத்த வரைக்கும் நம் ஊருக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இங்கு விலை மட்டுமே அதிகம். நான் தேடுவது ஜப்பானின் அம்சம் இருக்கும் பொருட்களை.
டோக்கியோ போன்ற பெருநகரங்களில் நடுத்தர மக்கள் வாங்குவதற்கான கடைகள் ஏதாவது ஒரு பகுதியில் இருக்கும். அவற்றை கண்டறிந்து போனால் தனித்துவம் மிக்க பொருட்களை வாங்க முடியும் என்பது என் நம்பிக்கை. சென்னைக்கு ரங்கநாதன் தெருவை உதாரணமாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

டோக்கியோவில் அந்த மாதிரியான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அகிஹபாரா அந்த மாதிரியான இடம் என்று சொன்னார்கள். அகிஹபாராவை எலக்ட்ரிக் டவுன் என்றும் சொல்கிறார்கள்.

சினகாவாவிலிருந்து ரெயில் வசதி உண்டு. சின்னகாவாவில் இருக்கும் ஹோட்டல்களில் தங்குவதற்கு மிக அதிகமாக பணம் செலவழிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 30,000 ரூபாய் வரைக்கும் பில் வருகிறது. கம்பெனி ஹோட்டல் பில் தருவதானால் தாராளமாக தங்கலாம். தனிப்பட்ட பிரயாணம் என்றால் இந்த இடம் உகந்ததல்ல. ஆனால் சின்னகாவா டோக்கியோவில் முக்கியமான இடம். இங்கிருந்து பெரும்பாலான பகுதிகளுக்கு ரெயில் பிடித்து விடலாம். ரெயில் பயணங்கள் ஜப்பானில் மிகச் சுலபம்.

இந்த இடத்தில் ஜப்பான் பற்றி ஒரு அம்மிணி ஓட்டிய படத்தையும் இங்கே ஓட்டிவிடுகிறேன். நான் ஆன்லைனில் சாட் செய்து கொண்டிருந்த போது ஜப்பான் வந்திருக்கிறேன் என்றேன். அப்படியா ஜப்பான் ரொம்ப நல்ல ஊர். அமெரிக்காவிலிருந்தவர்க: போய் டோக்கியோவை பார்த்தால் நியுயார்க் நகரம் எல்லாம் அழுக்கு பிடித்திருப்பது போல நினைத்துக் கொள்வார்கள், டோக்கியோ அத்தனை சுத்தம். ஹோட்டல் ரூம் நெம்பரிலிருந்து நகருக்குள் அனைத்துமே வெறும் 'கீ வேர்ட்'களால்தான் குறிக்கப்படுகின்றன .இத்யாதி இத்யாதியாக சொல்ல ஆரம்பித்தார். நல்லவேளையாக இவரிடம் ஜப்பான் போன பிறகு பேசினேன். இல்லையென்றால் இவர் ஓட்டிய படம் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும். இத்தனைக்கும் அவர் ஜப்பானுக்கு போனதில்லை. வெளிநாட்டுக்கு போய் வந்த பிறகு, புல்லட் ட்ரெயினில் சக்கரத்தில் உட்கார்ந்து போனேன் என்ற ரேஞ்சில் கிளப்பிவிடுகிற ஒரு வகையறாவின் பேச்சில் மயங்கி என்னிடம் ஊற்றிக் கொண்டிருந்தார். இந்த வகையறாவில் பல வகை உண்டு. என் வகையறாவைச் சேர்ந்தவர்கள் இப்படி கட்டுரை எழுதுகிறேன் என்ற பெயரில் படம் ஓட்டுவார்கள். அந்த பெண்ணிடம் ஒரே வரியில், "நான் போகிறேன் என்று சொல்லவில்லை. அங்குதான் இருக்கிறேன்" என்று சொல்லி துரத்திவிட்டேன்.

விஷயம் அதுவல்ல. டோக்கியோ கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட அற்புதமான நகரம். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போவது என்பது சென்னையை விட பல மடங்கு எளிமை. அவர் சொன்ன கஷ்டங்களை எதுவுமே நான் அனுபவிக்கவில்லை. ஜப்பானின் மற்ற நகரங்களைப் பற்றி தெரியவில்லை. ஆனால் டோக்கியோவில் அனைத்து இடங்களிலும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். English என்ற சொல்லே கூட பல பேருக்கு அந்நியம்தான். வழி கேட்டு போகலாம் என்பது பெருத்த சிரமம். ஆனால் வழியே கேட்கத் தேவையில்லை என்பதுதான் உண்மை. டோக்கியோ சுத்தம்தான். ஆனால் சிங்கப்பூரின் சுத்தத்தோடு ஒப்பிட்டால் ஒரு படி கீழேதான் டோக்கியோ நிற்கும். இந்த நகர புராணத்தை முடித்துக் கொள்ளலாம்.

அகிஹபாராவுக்கு செல்வதற்காக அலுவலகத்தை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு வந்து பின்னர் கிளம்பிப் போனால் மணி எட்டு ஆகியிருந்தது. எட்டு மணிக்கு அகிஹபாராவில் கடைகளை மூடிவிடத் துவங்கியிருந்தார்கள். ஆனால் கவனிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றிய கடைகளுக்கு உள்ளே ஒரு நடை போனேன். நவீன விஞ்ஞானத்தின் முழு முகத்தையும் இங்கு பார்க்க முடிகிறது. எத்தனை நாடுகளில் சாதாரண ரோபோட்களை பார்க்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஜப்பானில் பலவித ரோபோட்களை தயாரித்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ரோபோட்கள் எதையும் செய்கின்றன. வாங்குவதற்கான பணம் மட்டும் இருந்தால் போது, ரோபோவை வைத்து எதையும் செய்துவிடலாம். செக்ஸ் ரோபோ வரை வந்துவிட்டார்கள். தன் மார்பகத்தை தொடும் ஆடவனுக்கு சரியான எதிர்வினை புரியும் அளவுக்கு பெண் ரோபோட்களை தயாரித்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

முதலில் ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்தேன். வியாபாரம் படு அமர்க்களமாக இருந்தது. அதற்கு காரணம் இருக்கிறது. பெரும்பாலான ஜப்பானியர்கள் படிக்கிறார்கள். முக்கியமாக நடுத்தர வயது கூட்டம். செய்தித்தாள், சஞ்சிகைகள், புத்தகங்கள் என்று எதையாவது படித்துக் கொண்டிருப்பதை ரயில்களில் பார்க்கலாம். இன்றைய தலைமுறை மொபைல், கையடக்க டிவி என்ற ஏதாவது ஒன்றில் இருக்கிறார்கள் என்பதால் இவர்கள் படிப்பதாகத் தெரியவில்லை . புத்தகக்டையில் இருக்கும் பெரும்பாலான புத்தகங்கள் கார்ட்டூன்களுக்கானவை. கடையின் கீழ்தளத்திற்கு போனால் அங்கும் கார்ட்டூன் புத்தகங்கள். ஆனால் போர்னோகிராபி கார்ட்டூன்கள். ஆண்களும் பெண்களும் வரிசையாக நின்று படித்துக் கொண்டிருந்தார்கள். முப்பது நாற்பது வயதுகளில் கார்ட்டூன்களில் போர்னோகிராபி பார்க்கும் இவர்களுக்கு பக்குவமே இல்லையா என்று புதிதாக பார்ப்பவர்களுக்குத் தோன்றலாம். போர்னோகிராபியில் கார்ட்டூன் ஒரு அங்கமாக இருக்கலாம். ஆனால் போர்னோகிராபியில் வெறும் கார்ட்டூன்கள் மட்டுமே என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

என்னை ஜப்பானியர்களைப் பற்றி சொல்லச் சொன்னால் "அவர்கள் இருக்கிறார்கள். வாழ்வதில்லை" என்று சொல்வேன். காலையில் அலுவலகம் செல்லும் நேரத்தில் யாருமே சிரிப்பதில்லை என்று தோன்றுகிறது. எட்டரை மணிக்கு அலுவலகம் போவோர்களின் பெரும் கூட்டம் நகரத்தில் குறுக்கும் நெடுக்குமாகவும் நீள்வெட்டாகவும் நகர்கிறது. ஒரு இராணுவத்தின் ஒழுக்கத்தோடு இரைச்சல் இல்லாமல் நடக்கிறார்கள். அடுத்தவர்களோடு பேசாமல் சிரிக்காமல் என்ன பிழைப்பு இது? ஆனால் இப்படியிருக்கும் ஜப்பானியர்கள் ஏதாவது ஒன்றுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. கார்ட்டூன், மொபைல்,வேலை,பணம் இப்படி ஏதாவது ஒன்றுக்கு.
புத்தகக் கடையை விட்டு வெளியில் வந்தால் பக்கத்தில் உள்ளாடை அணிந்த ஜப்பான் பெண்ணின் படம் போட்ட வீடியோக்கடை. வீடியோக்களும் கார்ட்டூனாக இருந்தால் ஜப்பானியர்கள் மீதான மரியாதையே போய் இருக்கும். ஆனால் இவை உண்மையான படங்கள். மூன்றாவது தளத்தில் போர்னோகிராபி படம் ஓடிக் கொண்டிருந்தது. நிறைய ஆண்களும் சில பெண்களும் பார்த்துக் கொண்டிருந்த அந்த அறையை பல காமிராக்கண்கள் கவனித்துக் கொண்டிருந்தன. ஆனால் இங்கும் கார்ட்டூன்களுக்கு பஞ்சமில்லை.
அதே சாலையில் அருகில் உள்ள எம்.எஸ் என்ற ஐந்தடுக்கு கட்டடத்தில் செக்ஸ் பொம்மைகள் நிரம்பியிருக்கின்றன. இப்படி இந்த வீதி பற்றி பேசினால் நிறைய பலான விஷயங்களையே சொல்வதால், இந்த ஏரியாவில் கே.எஃப்.சி யில் சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டோம் என்று சொல்லி முடித்துவிடலாம் என்றாலும் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும். இந்தச் சாலை முழுவதுமே குட்டைப்பாவாடை அணிந்த இளம்பெண்கள் வளைய வருகிறார்கள். ஒரே மாதிரியான பிங்க் நிறமணிந்த இப்பெண்களிடம் ஒரு துண்டறிக்கை. எல்லாம் ஜப்பானிய மொழியில் என்பதால் வாங்க வேண்டிய அவசியமில்லை. அவளே மேலே அலங்கரிக்கப்பட்ட ஒரு பாருக்கு அழைத்துச் சென்றாள். அங்கேயும் குட்டைப்பாவாடை பெண்கள்தான். அவர்கள் உங்களிடம் பேசுவார்கள், கவர்ச்சியாக நடப்பார்கள், நீங்கள் விரும்பியதை குடித்துவிட்டு வரலாம். குறைந்தப்பட்சக் கட்டணம் என்று உண்டு.

இந்த கடைகளில் மட்டுமில்லாமல் பெரும்பாலான டோக்கியோக் கடைகளில் இருக்கும் ஒரு விஷயம், யாரும் யாரையும் ஏமாற்றுவதில்லை. ஒரு கடையில் இருக்கும் விலைதான் பிற எந்தக் கடைகளிலும் இருக்கும். சில பொருட்களில் சில வித்தியாசங்கள் உண்டு. ஆனால் ஏறக்குறைய பெரும்பாலான பொருட்களை எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம். அது ஜப்பானியர்களுக்கும் சரி, பிற நாட்டவருக்கும் சரி விலையில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் ரூபாங்கி என்னுமிடத்தில் உள்ள பார்கள் மட்டும் இதில் விதிவிலக்கு. அதைப் பற்றி பின்னர் சொல்கிறேன்.

அகிஹபாரா பார்க்க வேண்டிய இடம் என்பதால், மூடிய கடைகளை தவிர்க்கக் கூடாது பிறிதொரு நாள் வரலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதன் சாத்தியம் பற்றிய நம்பகமில்லை எனவே பார்க்க முடிந்ததை பார்த்துவிடுவதுதான் உசிதம். பார்த்துக் கொண்டு வந்தேன்.

அகிஹபாரா மட்டுமில்லை, டோக்கியோவுக்கு கூட திரும்ப வராமல் இருக்கக் கூடும்.