Aug 24, 2009

காமம் இல்லாத காமக் கதையோகம் டீஸ்டாலில் ஒரு டீயும் வடையும் எனக்குள்ளே சென்று கொண்டிருந்த போது புரட்டிய செய்தித்தாளில் இருந்த பெரும்பாலான செய்திகள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் மூன்றாம் பக்கத்தில் இருந்த செய்தியை விலாவாரியாக படிக்க வேண்டும் போன்றிருந்தது. "கணவனின் நண்பருடன் உல்லாசம். தட்டிக் கேட்ட கணவனை கூலிப்படை வைத்துக் கொன்ற மனைவி". இந்தச் செய்தியின் "உல்லாசம்" என்ற வார்த்தை செய்திக்குள்ளாக என்னை இழுத்துவிட்டது. என்னைப் போன்ற அரைகுறைகளை எப்படி செய்திகளுக்குள் விழச் செய்வது என்பதெல்லாம் டீக்கடைக்கு வரும் பத்திரிக்கைகளின் ஆசிரியர்களுக்கு அத்துப்படி. இது போன்ற உல்லாச செய்திகளை மட்டும் நான் எந்த பத்திரிக்கையிலும் தவறவிடுவதில்லை. முழுமையாக படித்து ஒரு விதமான திருப்தியை அடைவது என் எட்டாம் வகுப்பிலிருந்து தொடரும் பழக்கம். ஒரு ஏழாம்தர மலையாளப் படத்தின் அளவுக்கு கிளுகிளுப்பான செய்திகளை டீக்கடை செய்தித்தாள்களைத் தவிர வேறு பத்திரிக்கைகள் தர முடியாது என்பதும் என் அபிப்பிராயம்.
இந்த பத்திரிக்கை புராணத்தை விடுங்கள். நீங்கள் இந்த செய்தியை ஏற்கனவே படித்திருந்தால் திரும்ப படித்து நேரத்தை வீணடிக்காமல் இதே புத்தகத்தில் வேறு கட்டுரையையோ அல்லது கதையையோ படியுங்கள். அதுவே நீங்கள் என்னைப்போன்ற 'உல்லாச' கதை பிரியராகவோ அல்லது நேரத்தை எப்படியாவது கழிக்க வேண்டும் என்றிருந்தாலோ நான் சொல்லப்போகும் இந்தக் கதையை தொடர்ந்து வாசியுங்கள்.
மேற்சொன்ன சம்பவம் நடந்தது எங்கள் பக்கத்து ஊர் வள்ளியாம்பாளையத்தில் என்பதால் என் அம்மாவுக்கு பேப்பரை படிக்காமலே தெரிந்திருந்தது. அம்மா ஆத்தாவுக்கெல்லாம் இப்பேற்பட்ட விஷயங்கள் பக்கத்து ஊரில் இல்லை, சுற்றுவட்டாரத்தில் எங்கு நடந்திருந்தாலும் தெரிந்திருக்கும் என்பது வேறு விஷயம். ஆனால் என்னிடம் இது பற்றியெல்லாம் விலாவாரியாக பேச மாட்டார்கள். அதனால் ஐஸ்க்ரீம் பார்லர் வைத்திருக்கும் லலிதாவிடம் ஆரம்பிப்பேன். அவள் அஜால் குஜாலாக கதையைச் சொல்லி கிறுகிறுப்பூட்டுவாள்.
பூங்கொடி குன்னத்தூர்க்காரி. சரவணனுக்கு கட்டிக் கொடுத்து பதினான்கு வருடம் ஆகிறது. திருமணமான அடுத்த வருடம் மகன் சந்தோஷ் பிறக்க, இப்பொழுது சாரதா ஸ்கூலில் ஏழாவது படிக்கிறான்.
கொஞ்ச வருடங்களுக்கு முன்பாக பூங்கொடியின் பிறந்த வீட்டில் நிகழ்ந்த சொத்துச் சண்டையில் பங்காளிகள் சேர்ந்து பூங்கொடியின் குடும்பத்தை மொத்தமாக முடித்துவிட்டார்கள். முடிப்பது என்றால் சாதாரணமாக இல்லை. கர்ண கொடூரமாக. அரிவாள்களால் பூங்கொடியின் அம்மா, தங்கை, அண்ணன், அண்ணன் மனைவி, அண்ணனின் குழந்தை என்று சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள். முனகிக் கொண்டு கிடந்தவர்களை யாராவது மருத்துவமனையில் சேர்த்து பிழைத்து வைக்கலாம் என்பதால், அருகில் நின்றிருந்த ட்ராக்டரில் இருந்த டீசலை எடுத்து அனைவரின் மேலும் ஊற்றி தீயை கொளுத்தியிருக்கிறார்கள். அக்னி சமாதி.
கடைக்கு முட்டை வாங்கச் சென்ற பூங்கொடியின் அப்பா மட்டும் அந்த பயங்கர தாக்குதலில் தப்பித்துவிட்டார். கொலை செய்வது பெருமிதச் செயல் என்ற போக்கிரிகளிடம் தப்பித்த பின்னர் பூங்கொடியின் குடும்பத்தோடு வள்ளியாம்பாளையத்தில் தங்கிவிட்டார்.அந்த ரணகளத்திலும் சொத்து கைவிட்டு போய் விடக் கூடாது என்று கேஸ், கோர்ட் என்று சரவணன் இதுவரைக்கும் மாமானார் ஊர் பங்காளிகளுக்கு எதிராக அலைந்து கொண்டிருந்தான். சரவணன் பண விஷயத்தில் தில்லாலங்கடி. ஏற்கனவே தம்பி சம்பத்தையும், அக்கா நளினியையும் ஏமாற்றி சொத்துக்களை தாறுமாறாக சேர்த்திருந்தான். இப்படி மாமனார் ஊர் பங்காளிகளில் இருந்து , உள்ளூரில் சொந்தப் பங்காளி வரைக்கும் பங்குக்கு வருபவர்களோடு எல்லாம் எசகுபிசகான உறவுதான் சரவணனுக்கு.
அதற்காக சரவணனை மொத்தமாக கெட்டவனாக்கி விட வேண்டாம். தன் சொந்த பந்த குடும்பத்தாரிடம் தான் பண விவகாரத்தில் கறாராக இருந்திருக்கிறான். ஆனால் வெளியாட்களிடம் தாராளமாகவே வரவு செலவு வைத்திருக்கிறான். அரிசிக்கார பழனிச்சாமிக்கு கூட பத்து லட்சம் ரூபாய்கள் வரை வட்டியில்லாத கடனாக கொடுத்திருக்கிறான் . அரிசிக்கார பழனிச்சாமி நெல் ப்ரோக்கராக இருந்தவன். நெல் விற்றல் வாங்கலில் தரகராக வயிற்றுக்கும் வாய்க்கும் அளவாக சம்பாதித்திருக்கிறான்.நெல் புரோக்கராக இருப்பது மிச்சம் ஒன்றும் செய்ய முடியாத வருமானம் மட்டுமே தரும் தொழில். சரவணனிடம் நான்கு இலட்சம் வாங்கி ரூபாய் வாங்கி உள்ளூரில் அரிசிக்கடையை ஆரம்பித்ததும் அதுவரை நெல் புரோக்கர் என்று அறியப்பட்ட பழனிச்சாமி அரிசிக்கார பழனிச்சாமி ஆகிவிட்டான். சரவணனுக்கும் மிக நெருங்கிய தோழனாகியிருக்கிறான்.
நீங்கள் தினமும் டீக்கடை தமிழ் பேப்பர் படிப்பவரென்றால் இந்த இடத்தில் உங்கள் மூளைக்குள் ஒரு பல்ப் எரிய வேண்டுமே. அந்த பல்ப் வெளிச்சத்தில் பூங்கொடியும், பழனிச்சாமியும் சல்லாபித்துக் கொண்டிருக்க வேண்டுமே. நீங்கள் தமிழரல்லவா? உங்களின் யூகம் எப்படி தவறாகும்?அப்படித்தான் ஆகிப் போனது. உல்லாசம் பற்றி பேசும் போது ஓரிரு வரிகளாவது பூங்கொடியின் அழகு பற்றிச் சொன்னால்தானே கதையின் 'கியர்' மாறி கொஞ்சம் வேகம் எடுக்கும். நல்ல வாட்டசாட்டமான பெண், மாநிறத்தில் குதிங்கால் கொஞ்சம் எம்பி இறங்கும் படியாக ஒரு குதிரையின் நடையை ஒத்ததாக நடப்பாள். மிக நேர்த்தியாக புடவையைக் கட்டி, இடுப்பில் சாவிக் கொத்தின் நுனியை மட்டும் செருகியிருப்பாள்.
ஒரு நேர்பார்வையை உங்கள் கண்களின் வழியாக செருகி ஒரு இதமான புன்னகையை உதிர்த்துச் செல்வாள். நீங்கள் திரும்பி அவளது நடையசைவை ரசிக்கப்பதற்கான ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் போது அவள் உங்களை கடந்திருப்பாள். இப்படி ஒரு 'கிக்'கான புன்னகையை எல்லோரும் அவளிடம் இருந்து பெற்று விட முடியாது. அவளுக்கு நீங்கள் அறிமுகமானவராக இருக்க வேண்டும். மேலும் இந்தப் புன்னகை உங்களை படுக்கைக்கு அழைக்கும் புன்னகை என்று நினைத்தால் நீங்கள் ஏமாறுவீர்கள். இது வெறும் ஸ்நேகமான புன்னகைதான். அவள் வேறொருவனிடம் தொடர்புடையவள் என்பதெல்லாம் வெளியுலகுக்கு தெரிவதற்கான வாய்ப்பே இல்லை. அந்த அளவிற்கு தன் நடைமுறையை வடிவமைத்திருந்தாள்.
ஒரு நாள் தோட்டத்திற்கு சென்றிருந்த சரவணன் திரும்ப வரும் போது, பழனிச்சாமியும் பூங்கொடியும் அலங்கோலமாக இருந்ததை பார்த்துவிட்டதாக பேப்பர்க்காரன் எழுதியிருக்கிறான். சரவணன் இருவரையும் நேரடியாக பார்த்தோனோ அல்லது யூகத்தில் கண்டறிந்தானோ தெரியாது, ஆனால் பூங்கொடியை அடித்துவிட்டான்.
இதன் பிறகு சரவணனும், பூங்கொடியும் எலியும் பூனையுமாக மாறிவிட்டார்கள். பூங்கொடியின் பெயரில் இருந்த சொத்துக்களை எல்லாம் விற்பதற்கோ அல்லது தனது பெயரிலும் மகனின் பெயரிலும் மாற்றுவதற்கான முயற்சிகளில் சரவணன் இறங்க, தினம் சண்டையும், கண்ணீரும், மூக்கு ஒழுகலுமாக மாறியிருக்கிறது வீடு.
இடையிடையே பழனிச்சாமி வீட்டிற்குள் திருட்டுப்பூனையாக சட்டி பானையில் வாய் வைத்ததோடு இல்லாமல் சரவணனை ஒழிப்பதற்கான தூபத்தையும் போட்டிருக்கிறான். மந்திரத்தில் கட்டுண்டவள் போல் பூங்கொடி தலையாட்டியிருக்கிறாள்.
கொலைக்கான கூலிப்படை பவானியில் செட்டப் செய்யப்பட்டது. பவானியில்தான் காவிரி ஆறும், பவானி ஆறும் இணைகின்றன. இந்த இரண்டு ஓடைகளும் இணைந்து ஓடும் ஊர்தான் ஈரோடை, அதாவது ஈரோடு. இந்த ஈரோடு பற்றி எல்லாம் எதற்கு சொல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் கதை சொல்பவர்கள் எல்லாம் இப்படி எதையாவது சொல்லி தங்கள் அறிவை நிலைநாட்ட வேண்டும் என்பது நியதி.
நேற்று காலையில் பழைய சோறும் வறுத்த மோர் மிளகாயும் தின்றுவிட்டு தோட்டத்திற்கு சைக்கிளில் சென்றிருந்த சரவணனை காரில் கடத்திச் சென்றிருக்கிறார்கள் கூலிப்படையினர்.
இதற்கு மேல் இந்தக் கதையை டைப் செய்ய எனக்கு கை வலிப்பதால், கூலிப்படையில் ஒருவன் வாக்குமூலம் கொடுக்க அதை எழுதிய போலீஸ் ஏட்டு சண்முகத்தின் அனுமதியோடு (அவர் சில ரகசியங்களை எடிட் செய்தது போக மீதமானவற்றை) இங்கே பேஸ்ட் செய்கிறேன். ஓவர் டூ கூலிப்படை வாக்கு மூலம்.
என் பேர் சச்சான்(என்கிற) சச்சுதானந்தம். பவானி மார்கெட்டில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறேன். அடிதடிக்கு எல்லாம் அவ்வப்போது போய் வருவதால் மார்கெட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் என்னை அழைப்பார்கள். அடிதடியில் பெரிதாக வருமானம் இல்லை. அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். பிரியாணி தின்பதற்கும், கொஞ்சம் சரக்கடிக்கவும், கூத்தியாவிடம் போய் வரவும் சரியாக இருக்கும். டாக்ஸி டிரைவர் நாராயணன் யாராயாவது கடத்தி பணம் கேட்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். நல்ல 'லம்ப்' ஆக கிடைக்கும் என்றான். நானும் அது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயம்தான் யாரையோ விசாரித்து பழனிச்சாமி என்னிடம் வந்திருந்தான். சரவணன் என்பவனின் கதையை முடிக்க வேண்டும் என்றும் அதற்காக இரண்டு இலட்சம் ரூபாய் தருவதாகவும் பேச்சு. ஒரு இலட்சம் ரூபாய் அட்வான்ஸ். மீதி காரியம் முடிந்த பிறகு என்று சொன்னான். அத்தனை பணத்தை பார்த்ததே இல்லை என்பதால் நான் நிறைய கொலைகள் செய்திருப்பதாகவும், அவன் என்னைப்பற்றி நம்ப வேண்டும் என்பதால் இது எல்லாம் எனக்கு மிகச் சாதாரணமான விஷயம், நான் பல கொலைகளைச் செய்திருப்பதாகவும் சொன்னேன். கடத்தி காரியத்தை முடிப்பதற்கு நாராயணன் தனது காரை ஓட்டி வருவதாகவும் அதற்கு ஒரு இலட்சம் ரூபாய் தர வேண்டும் என்றான், கடைசியாக எழுபத்தைந்தாயிரத்துக்கு ஒத்துக் கொண்டான். பின்னர் வெங்காயக் கடை ராஜு, பட்டறையில் வேலை செய்யும் விநாயகன், சால்னாக்கடை விஜியன் ஆகியோருக்கு ஆளுக்கு இருபத்தைந்தாயிரம் தருவதாக பேசி செவ்வாய்க்கிழமை காலை ஒன்பது மணிக்கு பவானியிலிருந்து கோபிக்கு கிளம்பிச் சென்றோம். வழியில் கருப்பராயன் கோயிலில் ஒரு தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டு விட்டுத்தான் வண்டியை எடுத்தோம்.
கோபிக்கு வந்தவுடன் பழனிச்சாமிக்கு போன் செய்தேன். அவன் வள்ளியாம்பாளையத்தில் இருக்கும் சரவணனின் தோட்டத்துக்கு வழியைச் சொல்லிவிட்டு தானும் அவனோடு இருப்பதாகச் சொன்னான். கொஞ்சம் படப்படப்பாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் போனை வைத்துவிட்டேன். சரவணனும் பழனிச்சாமியும் தென்னை மரத்திற்கு அடியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களை கவனித்தாலும் மிக இயல்பாகவே நின்றார்கள். நாங்களும் அருகில் செல்லும் வரை இயல்பாகவே காரில் சென்றோம். சரவணனுக்கு மிக அருகில் சென்றவுடன், கார் கதவை திறந்து சரவணனை உள்ளே இழுத்தோம். சத்தம் போட்டான். திமிறியதால் விஜியன் அவன் மண்டையில் ஓங்கி ஒரு அடி அடித்தான். ஏற்கனவே வாங்கி வைத்திருந்த நைலான் கயிறை வைத்து நான் கழுத்தில் இறுக்கியதில் அவனுக்கு கண்கள் பிதுங்கிக் கொண்டு வந்தன, நாக்கை பயங்கரமாக கடித்தான். நாக்கிலிருந்து ரத்தம் கசிந்தது. மற்றவர்கள் கைகால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்கள். ஐந்து நிமிடத்திற்குள்ளாக கதையை முடித்துவிட்டோம். பிறகு வண்டியின் வேகத்தை குறைத்து, அந்தியூர் வாய்க்காலில் அவனது லுங்கியில் ஒரு கல்லைக் கட்டி எறிந்துவிட்டோம்.
இரவு மூன்று மணிக்கு பழனிச்சாமி போன் செய்தான். ஊர் முழுவதும் சரவணன் கடத்தப்பட்டது பற்றி பேசிக் கொள்வதாகவும், காரை சமையல்காரன் முருகன் பார்த்ததாகவும் ஆனால் அவனுக்கு கார் நெம்பர் தெரியாததால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னான். அந்த இரவில் பழனிச்சாமிதான் பூங்கொடிக்கு இட்லி, வடை வாங்கிக் கொடுத்தாகவும் மீதி ஒரு இலட்சம் ரூபாயை நாளைக்கு தருவதாகவும் சொன்னான். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, டாஸ்மாக்கில் மது அருந்தியிருந்தோம் தூக்கம் பயங்கரமாக வந்ததால் தூங்கிவிட்டோம். என்ன நடந்தது என்று தெரியவில்லை, அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு எல்லாம் போலீஸ் பழனிச்சாமியை கைது செய்துவிட்டார்கள், எங்களைத் தேடி மாலை மூன்று மணிக்கு போலீஸ் வந்துவிட்டது.
இனி கதையை நானே சொல்கிறேன்.
போலீஸ் அடித்த அடியில் சரவணனை கொல்லச் சொல்லி பூங்கொடிதான் பணம் கொடுத்தாள் சரவணன் தனது வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறான். அதன் பேரில் பூங்கொடியை போலீஸ் கைது செய்திருக்கிறார்கள்.
பழனிச்சாமியோடு தனக்கு நெருக்கம் இருந்தது உண்மை எனவும் ஆனால் சரவணனை தான் கொலை செய்யச் சொல்லவில்லை என்று கைதாவதற்கு முன்பாக உறவினர்களிடம் பூங்கொடி சொல்லியிருக்கிறாள்.
ஊர் பிரசிடெண்ட் கந்தசாமி கடத்தூர் காவல்நிலையத்தில் பூங்கொடியை பார்க்கச் சென்றபோது அவளது முகம் போலீஸ் அடியில் வாங்கி வீங்கி இருந்ததாம். அடி வாங்கியதற்கு பிறகு போலீஸிடம் என்ன வாக்குமூலம் பூங்கொடி கொடுத்தாள் என்று தெரியவில்லை.
பழனிச்சாமிக்கும் , பூங்கொடிக்கும் இருக்கும் தொடர்பை இனி துண்டிக்க முடியாது என்று நினைத்த சரவணன் தன் மனைவியை நண்பனுக்கு விட்டுத் தர சரவணன் முடிவு செய்துவிட்டதாகவும், ஆனால் தனக்கு செய்த துரோகத்துக்கு அவள் தண்டனை அனுபவிக்க வேண்டுமென பழனிச்சாமியோடு சேர்ந்து திட்டம் தீட்டிவிட்டு, தலை மறைவு, சந்நியாச வாழ்க்கையை மேற்கொண்டதாக குரு பிரசாத் சொல்கிறான்.
எனக்கு தலை சுற்றுகிறது. உங்களுக்கு?
தலை சுற்றவில்லையென்றால் இன்னும் சில குறிப்புகள்.
1. சரவணன் சாகும் போது அவனது சத்தத்தை கேட்கவேண்டும் என்றும் அதற்காக செல்போனை ஆன் பண்ணி வைக்க கூலிப்படையினரிடம் பூங்கொடி சொன்னாள் என்று சொல்கிறார்கள்.
2. சரவணனின் மகன் சந்தோஷ், பூங்கொடியோ அல்லது பழனிச்சாமியோ தனது தந்தையை கொலை செய்யவில்லை என்று உறுதியாக நம்புகிறான்.
3. இப்பொழுது ஜாமீனில் வெளி வந்திருக்கும் பழனிச்சாமியும், பூங்கொடியும் சேர்ந்து அளுக்குளியில் வீடு எடுத்து தங்கியிருப்பதாகவும் ஊருக்குள் பேசுகிறார்கள்.
4. இந்தக் கொலைக்கு பூங்கொடியின் அப்பாவும் உடந்தை என்ற பேச்சும் உண்டு.

Aug 23, 2009

தகவல்

சென்ற வாரத்தில் பிரவீன் குறித்த கட்டுரையை படித்த சில நண்பர்கள் எவ்வாறு பணப்பரிமாற்றம் செய்வது என்று வினவியிருந்தார்கள். சந்தோஷமாக இருந்தது.

விருப்பப்படும் தோழர்கள் எனது மின்னஞ்சலுக்கு ஒரு தகவல் அனுப்பினால் தேவையான விபரங்களை நன்றிகளுடன் அனுப்பி வைக்கிறேன். (vaamanikandan@gmail.com/ அலைபேசி: 9663303156)

இதுவரைக்கும் ரூ.11,300/ ரூபாய் கிடைத்திருக்கிறது.

இந்த நிதி திரட்டலை ஆகஸ்ட் 31 அன்று முடித்துக் கொள்ளலாம என்று நினைத்திருந்தேன். ஊதியம் வந்த பிறகு உதவுவதாக ஓரிருவர் தெரிவித்ததால் செப்டம்பர் 4 வரை நீட்டித்து, தொகையை செப்டம்பர் 5 அன்று பிரவீனிடம் தந்துவிடலாம் என்றிருக்கிறேன்.

ஏதோ ஒரு நண்பர் பிரவீனின் தந்தையிடம் இதைப் பற்றி தெரிவித்துவிட்டார்.
கரட்டடிபாளையத்தைச் சேர்ந்த வேறொருவர் எனது வலைப்பதிவை கவனிக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமான விஷயம். நண்பருக்கு ஒரு வேண்டுகோள்: சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். அவரது எதிர்பார்ப்பினை அதிகமாக்கிவிட வேண்டாம்.

நன்றி.

Aug 20, 2009

பிரவீன் - உதிர முயலும் இலை

பிர‌வீனை என‌க்கு கொஞ்ச‌ நாட்க‌ளாக‌வும் அவன‌து அப்பாவை என‌க்கு நீண்ட நாட்க‌ளாக‌வும் தெரியும். பிரவீனுக்கு ப‌தின் மூன்று வ‌ய‌தாகிற‌து. கொஞ்ச‌ நாட்க‌ளாக‌ ப‌ள்ளிக்குச் செல்வ‌தில்லை. ட‌யாலிஸிஸ் செய்வ‌த‌ற்காக‌ ஒரு ட்யூப் செருகியிருக்கிறார்க‌ள். ப‌ள்ளியில் ஏதாவ‌து டியூப் மீது ப‌ட்டு அசைந்தால் ர‌த்த‌ப் போக்கை த‌டுக்க‌ முடியாது என்பதால் பள்ளிக்கு வேண்டாம் என நிறுத்திவிட்டார்க‌ள்.

எட்டுக்கு எட்டுக்கு சிங்கிள் பெட் ரூமில் க‌ட்டிலில் உட்கார‌ வைத்து டிவியை அவ‌ன் ப‌க்க‌மாக‌ திருப்பி ரிமோட்டை கொடுத்துவிட்டார்க‌ள். வ‌டிவேலையும், விவேக்கையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறான். வ‌ந்து போவோர்க‌ள் எல்லோரும் சிகிச்சை முறைக‌ளையும், அத‌ன் ஆபத்துக்க‌ளையும் அதே அறையில் பேசுகிறார்க‌ள். பிர‌வீனுக்கு இவை எல்லாம் ச‌லித்து போயிருக்க‌ வேண்டும். அவ‌ன் உயிர் மீதான பிரிய‌ம் அவ‌னிட‌ம் இல்லாம‌ல் இருப்ப‌தாக‌ உண‌ர்ந்தேன். நான் சென்றிருந்த‌ போது ஒரு முறை முக‌த்தை பார்த்துவிட்டு டிவியை பார்க்க‌ ஆர‌ம்பித்துவிட்டான்.

வெளியே சென்று பேச‌லாம் என்று அவ‌ன‌து அப்பாவிட‌ம் சொன்னேன். "அவ‌னுக்கு எல்லாம் தெரியும் க‌ண்ணு, க‌ண்டுக்க‌ மாட்டான்" என்றார்.

இப்பொழுது இரண்டு சிறுநீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. இப்போதைக்கு வாரம் ஒருமுறை டயாலிசிஸ் செய்து வருகிறார்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கும் நிலையில், தமிழக அரசின் கலைஞர் காப்பீடு திட்டத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

தினக்கூலியான பிரவீனின் தந்தைக்கு அவரது ஒரே மகனை காப்பாற்றும் முயற்சியில் உதவலாம் என இயன்ற தொகையினை அவர்களுக்கு கொடுக்கும் விதமாக பணம் திரட்டத் துவங்கியிருக்கிறேன்.

மின்னஞ்சல் மூலமாகவே நண்பர்களை கேட்கலாம் என்றிருந்தேன். இதுவரைக்கும் மின்னஞ்சல் மூலமாக உதவி கோரியதில் ரூபாய் ஒன்பதாயிரம்(அதில் நண்பர் ஒருவர் மட்டுமே ஐந்தாயிரம் வழங்கினார்) கிடைத்திருக்கிறது.

இவ்வாறு உதவி கோரி பணம் திரட்டுவது என்பது எனக்கு முதல் முறை என்பதால், வலைப்பதிவு போன்ற பொதுவான இடத்தில் உதவி கோரும் போது ஏதேனும் சட்டதிட்டங்களுக்கு உட்பட வேண்டுமா என்று தெரியவில்லை. ஏதோ ஒரு வித‌த்தில் இப்பொழுது எழுத‌ வேண்டிய‌தாகிவிட்ட‌து.

இந்த நிதி திரட்டும் விவகாரத்தை இதுவரைக்கும் பிரவீனின் தந்தைக்கு தெரியப்படுத்தவில்லை. அவர் ஒரு தொகை கிடைக்கலாம் என எதிர்பார்த்து அதனை செய்ய முடியாமல் போகுமெனில் உண்டாக‌க்கூடிய‌ ஏமாற்ற‌த்தை தவிர்க்க‌வே சொல்லாம‌ல் இருக்கிறேன்.

மின்ன‌ஞ்ச‌ல் கூட‌ சில‌ருக்கு ம‌ட்டுமே அனுப்பி இத‌னை Forward செய்ய‌ வேண்டாம் என்று வேண்டிக் கொண்டேன். அப்ப‌டி அனுப்பினால் நிறைய‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌ வேண்டி வ‌ர‌லாம். வ‌ரும் தொகையினை விட‌வும் ‍ப‌ன்ம‌ட‌ங்கான‌ கேள்விக‌ளை ப‌ல‌ரும் கேட்க‌க் கூடும்.

மேலும் அறுவை சிகிச்சைக்கு நான்கு இல‌ட்ச‌ம் வ‌ரையிலும் ஆக‌லாம் என்று அந்த‌ச் சிறுவ‌னின் த‌ந்தை தெரிவித்திருந்தார். இந்த‌த் தொகை பெரிது. என்னால் அவ்வ‌ள‌வு திர‌ட்ட‌ முடியாது என்றும் தெரியும். இருப‌த்தைந்தாயிர‌ம் என‌து குறிக்கோள். ஒரு ட‌யாலிஸிஸுக்கு ரூ.1300 எனில் ஒரு ப‌தினைந்து ட‌யாலிஸிஸூக்கு உத‌வ‌க் கூடும்.
===
நான் சொல்ல‌ வ‌ந்த‌து அதுவ‌ல்ல‌. சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ஜிடாக்கில் பேசும் போது இத‌னைப் ப‌ற்றி பேசினேன். சில‌ர் ப‌ணம் தருவது ப‌ற்றி பேசினார்க‌ள். சில‌ர் ப‌ரிதாபப் ப‌ட்டார்க‌ள். சூழலுக்கு தகுந்த முடிவை எடுக்கிறார்கள். நான் யாராவ‌து உத‌வி கேட்டால் பெரும்பாலும் ப‌ரிதாபப்ப‌டுவ‌தாக‌ ந‌டித்திருக்கிறேன் என்ப‌தை நினைத்துக் கொள்ள‌ முடிகிற‌து.

இன்று ஒரு ந‌ண்ப‌ர் ர‌த்த‌ உற‌வுக‌ளில் யாராவ‌து சிறுநீர‌க‌ம் த‌ருகிறார்க‌ளா என்றார். அவ‌ன‌து அம்மா கொடுக்க‌ முடியாது. பிரவீனின் அப்பா கொடுத்தால் நாளை வேலைக்கு யார் போவ‌து, சாப்பாட்டுக்கு என்ன‌ வ‌ழி என்ற‌ பிர‌ச்சினைக‌ள். எத்த‌னை ர‌த்த‌ உற‌வுக‌ள் சிறுநீர‌க‌ம் தான‌ம் த‌ரும் அள‌வுக்கு இருக்கிறார்கள் என்ப‌தும் வினா. "இல்லை, காசுக்குத்தான் வாங்க‌ப் போகிறார்கள்" என்றேன்.

அதோடு நிறுத்தியிருக்க‌லாம். "இல்லை, அது ச‌ரிப்ப‌ட்டு வ‌ராது. என் சித்த‌ப்பாவுக்கு செஞ்சு ஒரே வ‌ருட‌த்தில் இற‌ந்துட்டாரு" என்றார். என‌க்கு வ‌ந்த‌ எரிச்ச‌லில் என்ன‌ சொல்வ‌து என்று தெரிய‌வில்லை.

பிரவீனின் குடும்பத்தாருக்கு தெரியும் இதில் எத்த‌னை பிர‌ச்சினைக‌ள் இருக்கிறது என்ப‌து. ம‌ருத்துவ‌ர்க‌ள் எல்லாவ‌ற்றையும் சொல்லி இருப்பார்க‌ள். இயலாத‌ சூழ‌லில்தான் ம‌ருத்துவ‌ம் ச‌ம்ப‌ந்த‌மான‌ முடிவுக‌ளை வ‌றுமையில் இருப்ப‌வ‌ர்க‌ள் எடுக்கிறார்க‌ள். அந்த முடிவு தவிர்த்த வேறு வழி பெரும்பாலும் இருப்பதில்லை. அந்தச் சூழலில் இந்த‌ மாதிரியான தேவையற்ற அறிவுரைக‌ளை அவ‌ர்க‌ள் எதிர்பார்ப்ப‌துமில்லை.

இத‌னை எழுதும் போது அறிவுரை தருபவர்களை தாறுமாறாக‌ திட்டி எழுத‌ வேண்டும் என்று தோன்றிய‌து. ஆனால் என‌க்கு சின்ன‌ அந்த‌ அறையில் அம‌ர்ந்து கொண்டு இதை விட‌ குரூர‌மான‌ வார்த்தைக‌ளை பிர‌வீன் கேட்டிருப்பான் என்ப‌தை நினைக்கும் போது எதையும் எழுத‌த் தோன்ற‌வில்லை.

Aug 19, 2009

ஸ்வைன் ஃப்ளூ: மீடியாக்க‌ளின் கொண்டாட்ட‌ம்

இன்றுவரையிலும்(ஆகஸ்ட் 13,2009) 20 பேர் வரை பன்றிக்காய்ச்சலுக்கு இந்தியாவில் மரணித்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னமும் கூட அதிகமாகலாம். ஆனால் இந்திய மனதில் ஊடகங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் பீதியும், கலவரமும் இறப்பு எண்ணிக்கையோடு விகிதாச்சாரப்படுத்தும் போது பன்மடங்கு குரூரமானது.

பன்றிக் காய்ச்சல் பரவும் வேகத்தை விட பன்மடங்கு வேகமாக அது குறித்தான பீதி மக்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது. எல்லாப் புகழும் மீடியாவுக்கே. மொத்தமாகச் சொன்னால் இந்திய மீடியா, அதில் குறிப்பாக வட இந்திய மீடியாக்கள் பயத்தை பரப்புகின்றன‌. தங்களுக்கென எந்தவித பொறுப்புணர்ச்சியுமற்ற வணிகம் மற்றும் பரபரப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் நுகர்வு கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாக இவர்க‌ள் செயல்படுகிறார்கள்.

அரசின் ஊடகங்கள் தங்கள் உறக்கத்திலிருந்து விழித்து இந்நோய் குறித்தான தகவலைப் பரப்புவதற்கு முன்பாகவே, தனியார் தொலைக்காட்சி சானல்கள் குதியாட்டம் போட ஆரம்பித்துவிட்டன. ப்ளாஷ் நியூஸ்கள், நீயுஸ் ரூம் விவாதங்கள் போன்றவற்றோடு பெரும் வெள்ளத்தில் நகரங்கள் அடித்துச் செல்லப்படும் போது பதறியபடி செய்தி கொடுக்கும் ஆங்கில திரைப்பட நடிகர்களின் முகபாவத்தோடு இந்தியச் செய்தியாளர்கள் மருத்துவமனைகளின் முன்பாக மைக்களோடு தோன்றினார்கள்.

பன்றிக்காய்ச்சல் தடுக்க முடியாத அளவில் பரவுவதாகவும், தாக்குபவர்கள் உடனடியாக இறந்து போவது உறுதி என்ற ரீதியிலும் பொது ஜன மனதில் அவநம்பிக்கையை விதைத்துவிட்டார்கள்.

சளி பிடித்த‌வ‌ர்க‌ள் எல்லோரும் பேயடித்தது போல அலறியபடி ம‌ருத்துவ‌ம‌னைக்குச் செல்ல‌த் துவங்கியிருக்கிறார்க‌ள். ஊட‌க‌ங்க‌ள் இந்த அச்சத்தில் மேலும் எண்ணெய் ஊற்ற‌த் துவ‌ங்கியிருக்கின்ற‌ன. ம‌காராஷ்டிராவிலும், புனேயிலும், இன்ன பிற ஊர்களிலும் இற‌ந்த‌வ‌ர்க‌ளின் ப‌ட்டிய‌லை ப்ளாஷ் செய்தியில் ஓட‌ விடுகிறார்க‌ள். மருத்துவமனையின் கூச்சல் பின்புறத்தில் கேட்க ஆங்கிலம் பேசும் குமரி ஒருத்தி மாஸ்க் அணிந்து வீட்டின் வரவேற்பறையில் இருந்து நம்மை பயமூட்டுகிறாள். இந்த திகிலூட்டும் படியான பயம் நம் மனதிற்கு ஒரு போதையை தருகிறது. அது மும்பையில் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதலானாலும் சரி, அடித்துச் செல்லும் சுனாமியாக இருந்தாலும் சரி. நமக்கு அந்த திகிலுடன் கூடிய செய்தி தேவைப்படுகிறது. நமக்கு வெகு அருகில் இருக்கும் ஆபத்தை ரசிக்கப் பழகியிருக்கிறோம். இந்த ரசனையை செய்தி நிறுவனங்கள் காசாக்குகின்றன. இந்த காசாக்கும் வித்தை இப்பொழுது பன்றிக்காய்ச்சலில் டேரா போட்டிருக்கிறது.

அர‌சின் மெத்த‌ன‌ப் போக்கிற்கு பெருத்த‌ அடி விழுந்திருக்கிற‌து. ஒரு ப‌ன்றிக்காய்ச்ச‌ல் சோத‌னைக்கு 'மட்டுமே' ஐந்தாயிர‌ம் ரூபாய் வ‌ரை அர‌சுக்கு செல‌வு பிடிப்ப‌தாக‌ ஒரு செய்திக் குறிப்பில் இருந்த‌து. நேற்று ம‌ட்டும் சென்னையில் மட்டும் ஆயிர‌ம் பேருக்கு சோத‌னை செய்திருக்கிறார்க‌ள். இதுவரைக்கும் இந்தியா முழுமைக்குமான மொத்த‌ செல‌வு தொகையை க‌ண‌க்கிட்டுக் கொள்ள‌லாம்.

அர‌சு கொஞ்ச‌ம் முன்ன‌தாக‌ செய‌ல்ப‌ட்டிருந்தால், ம‌க்க‌ளிடையே இந்நோய் குறித்தான‌ விழிப்புண‌ர்வை உருவாக்கியிருக்க‌லாம். மக்களின் பதட்டம் கொஞ்சமாவது குறைந்திருக்கும். ஆனால் அரசு ஊடகம் பற்றி நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. இன்னமும் விண்டோஸ் பவர்பாய்ண்ட்டில் ஸ்லைட் மாற்றுவதுதான் பொதிகை சேனலுக்குத் தெரிந்த அதிகபட்ச கிராபிக்ஸ். டிஜிட்டல் டிவி உலகில் தொடர்ந்து இருப்பவர்கள் தினமும் ஒரு முறை பொதிகைச் சேனலுக்கு சென்று வந்தால் வாய்விட்டு சிரிக்கலாம்.

பன்றிக் காய்ச்சல் நோய் வந்த உடனே யாரும் இறப்பதில்லை. மருத்துவமின்றி நோய் தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் நுரையீரல் போன்ற சுவாச உறுப்புகள் பாதிக்கப்பட்டு பின்னர்தான் இறக்கிறார்கள். சரியான மருத்துவம் அளிக்கப்படுமானால் ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்களில் பிரச்சினையில்லாமல் நிவாரணம் பெற்றுவிடலாம்.ஆனால் இது போன்ற தகவல்களை எந்தச் செய்தி நிறுவனமும் தெளிவாகச் சொல்வதாகத் தெரியவில்லை.

சளிக்காய்ச்சலோடு மருத்துவமனைக்கு யாராவது வந்து, ஒரு வேளை பன்றிக்காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் பரிசோதனைக்கான மாதிரி எடுப்பதைக் கூட ஊடக மனிதர்கள் செய்தியாக்குகிறார்கள். நெல்லையில் 2 பேர், மதுரையில் 3 பேர், கோவையில் ஒருவர் என்று எண்ணிக்கையை கூட்டி ஜென்ம சாபல்யம் அடைகிறார்கள். செய்திச் சேனல்களின் சில்லரைத் தனத்தோடு ஒப்பிட்டால் செய்தித் தாள்கள் தேவலாம் என்றுதான் படுகிறது. ஆனால் அவர்களும் மாஸ்க்களோடு பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு முன்னதாக நிற்கும் நீண்ட வரிசை, இறந்தவர்களின் உடல், அவர்களின் அழும் குடும்பத்தார் போன்ற நிழற்படங்களை வெளியிட்டு திருப்திபடுகிறார்கள்.

மெக்ஸிகோ போன்ற நாடுகளில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான பேர்களை கொன்றுவிட்டாலும் இந்நோயின் பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.ப்ளேக், அம்மை போன்ற கொள்ளை நோய்களை இந்த உலகம் ஏற்கனவே முற்றாக நீக்கியிருக்கிறது. இதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட சார்ஸ் என்ற நோயின் பெயரை பல பேர்கள் மறந்திருக்கலாம். பன்றிக் காய்ச்சலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அதுவரையிலும் ஊடகங்கள் நோய் குறித்தான பயனுள்ள தகவல்களையும், நோயின் அறிகுறிகள், தடுப்பு முறைகள் போன்றவற்றை ஒளிபரப்பலாம். அரசு, மருத்துவமனைகள், மருத்துவர்கள் மெத்தனமாக இருந்தால் அவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வருமானால் பாராட்டலாம். இறப்பு குறித்தான செய்திகளை மறைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதற்கென பக்குவமான முறையில் தெரிவித்து, மக்களை பயமுறுத்துவதை தவிர்க்கலாம். ஆனால் இவை எல்லாம் மீடியாக்களிடையே தற்போது நிலவி வரும் போட்டியிலும் பொறாமையிலும் சாத்தியமில்லை.

இந்தியாவில் சற்றே வேகமாக பரவத்துவங்கியிருந்தாலும் இன்ன‌மும் கூட‌ ப‌ன்றிக்காய்ச்ச‌லுக்கான‌ ச‌ரியான‌ அறிகுறிகளும் பாதுகாப்பு முறைகளும் பரவலாக எல்லோருக்கும் தெரிந்திருக்க‌வில்லை.

ச‌ளிக் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் என்ப‌து கிட்ட‌த்த‌ட்ட‌ அனைத்து வ‌கையான‌ வைர‌ஸ்க‌ளுக்கும் பொதுவான‌து. இவை த‌விர்த்து வாந்தி, வ‌யிற்றுப் போக்கு, உட‌ல்வ‌லி, அச‌தி, த‌லைவ‌லி போன்ற‌வையும் பன்றிக்காய்ச்சல் இருப்போருக்கு சேர்ந்திருக்க‌க் கூடும். ச‌ளிக் காய்ச்ச‌ல் வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கும் பின் சொன்ன‌ தொந்த‌ர‌வுக‌ள் இய‌ல்பான‌வை என்ப‌தால், எந்த‌ வித‌மான‌ அறிகுறிக‌ளெனில் உஷாராக‌ வேண்டும் போன்ற‌ செய்திக‌ளை அரசோ அல்லது தனியாரோ விளம்பரப்படுத்த வேண்டும்.

பன்றிக் காய்ச்சல் தடுப்பு முறைகளில் கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வேண்டும், கண், வாய் போன்ற பகுதிகளை கழுவாத கைகளின் மூலம் தொடுவதை தவிர்க்க வேண்டும், தும்மும்போதும் இருமும் போதும் டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துவது என்பதும் அவற்றை மறுமுறை உபயோகப்படுத்துவதை தவிர்ப்பது போன்ற சில செயல்களோடுதான் மாஸ்க் போன்ற வஸ்துகளை பயன்படுத்தி இதன் பரவலை கட்டுப்படுத்தலாம்.

சிலர் இலாபம் கொழிப்பதற்காகவோ என்னவோ மாஸ்க் மட்டுமே பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் ஆயுதம் போன்று ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது.
பாதுகாப்புக்காக விற்கப்படும் முக‌வுறைக‌ளை(மாஸ்க்)பெங்க‌ளூரு போன்ற‌ மாந‌க‌ர‌ங்களின் மருந்துக் க‌டைக‌ள் ப‌ன்ம‌ட‌ங்கு இலாப‌ம் வைத்து கொழுக்கின்ற‌ன‌. டெமிப்ளூ போன்ற‌ ம‌ருந்துக‌ள் அர‌சாங்க‌த்தின் மூல‌ம் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டாலும் அவை த‌னியார்க‌ளாலும் ப‌துக்க‌ப்ப‌டுவ‌தாக‌ செய்திக‌ள் வ‌ருகின்ற‌ன‌. வேறு சில‌ர் எங்க‌ளிட‌ம் ஊசி போட்டுக் கொண்டால் ப‌ன்றிக் காய்ச்ச‌ல் வ‌ராது என்று விள‌ம்ப‌ர‌ம் செய்கிறார்க‌ள்.

இந்த‌ ஊசி வியாபாரிக‌ளுக்கும், "பயமுறுத்தும்" ஊட‌க‌ங்க‌ளுக்கும் பெரிய‌ வித்தியாச‌ம் ஒன்றுமில்லை. இர‌ண்டு பேருமே ம‌க்க‌ளின் பீதியில் த‌ங்க‌ளின் வ‌யிறு வ‌ள‌ர்க்கும் அற்ப‌ஜீவிக‌ள். ம‌க்க‌ள் ப‌ய‌ப்ப‌ட‌ வேண்டும். இந்த‌ ப‌ய‌ம் இன்னும் அதிக‌மாக‌ வேண்டும். ம‌றுநாள் இன்னும் கூட‌ வேண்டும். அப்பொழுதுதான‌ இவ‌ர்க‌ள் பிழைக்க‌ முடியும். எச்சிலையை அண்டிப் பிழைக்கும் நாய்களைப் போல.
நன்றி:உயிரோசை