Jul 23, 2009

சுந்தர ராமசாமி - நிராகரிக்க முடியாத ஆளுமை


சு.ரா வை நான் ஒரு முறை கூட நேரில் சந்தித்ததில்லை. ஆனால் பசுவய்யாவின் 107 கவிதைகள் தொகுப்பும் அந்தக் கவிதைகளும், கவிதை வாசகனான எனக்கு மிக முக்கியமானவை.

நவீன தமிழ்க் கவிதையின் சூட்சுமங்களை புதிய வாசகனாகயிருந்த போது நான் இந்தத் தொகுப்பில் இருந்தே கண்டறியத் துவங்கினேன். ஆசுவாசமும் பதட்டமும் ஒரு சேர பற்றிக் கொள்ள வைக்கும் இக்கவிதை தொகுப்பை பத்திரமாக வைத்திருக்கிறேன்.

ஏற்கனவே கவிதை உலகம் அறிமுகமானவனுக்கு பசுவய்யாவின் கவிதைகள் கொண்டு வரும் மனத் திறப்புகளும், வாசக மனதில் அவை உருவாக்கும் அந்தர வெளியும் கவிதானுபவத்தின் உச்சகட்டம்.

சு.ரா வின் கவிதைகள், நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திற்கான கவிதை வடிவத்தை கொண்டிருக்கவில்லை. அவர் எழுதிய கவிதை வடிவத்தில் இருந்து இன்றைய கவிதை பெருமளவில் உருமாறியிருக்கிறது. இந்த வடிவ உருமாற்றம் பிச்சமூர்த்தி, ஆத்மாநாம், நகுலன் போன்ற தமிழின் பெரும்பாலான முன்னோடிக் கவிஞர்களுக்கும் பொருந்தும். வடிவ உருமாற்றம் என்றைக்குமே கவிதையின் சிக்கலாக இருந்ததில்லை. அது படைப்பிலக்கியத்தின் இயல்பு.

ஆனால் முன்னோடிகளின் கவிதைகளினுள்ளாக பொதிந்து கிடக்கும் ஒளி என்றைக்கும் அப்படியேதான் இருக்கின்றன.

தமிழ் கவிதை, இன்றைய வடிவத்தை அடைய முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாகவே பயணித்திருக்கிறது. சு.ரா தன் கவிதைகளின் மூலம் நவீன கவிதை உலகத்தின் பெரும் வெளிக்கான பாதைக்கு சிறு வெளிச்சத்தை கொடுத்திருக்கிறார். அந்த வெளிச்சம் நிராகரிக்க முடியாத வெளிச்சம். மறுத்து ஒதுக்க முடியாத வெளிச்சம்.

சு.ரா. வையும் அவரது எழுத்தையும் தமிழில் ஒதுக்கிவிட்டு ஒருவன் இலக்கியம் பேச முடியாது. சு.ரா வை இன்னும் நூறு ஆண்டுகள் கழித்தும் கூட கவிதை வாசகனொருவன் அவரது கவிதை மொழியின் வாயிலாக சந்திப்பான்.

நவீன தமிழ் இலக்கியம் பற்றியும், உலக இலக்கியத்தை தமிழ்ச் சூழலில் வைத்து பேசும் போதும், சு.ரா வை- அவரது எழுத்தை மையமாக வைத்து எந்த இலக்கியவாதியும் நிராகரிக்க முடியாது. சு.ரா.வின் எழுத்துக்களை வாசித்துவிட்டு, அவற்றை நிராகரிக்கும் போது கூட அந்த எழுத்தின் நிழல் தன் மேல் சாய்வதை அவன் உணரலாம்.

கவிஞர் சுகுமாரன் முன்பொரு முறை சொன்னார், படைப்பாளியையும் படைப்பையும் நிராகரிக்கிறார்கள் ஆனால் அந்தப் படைப்பும், படைப்பாளியும் எப்பொழுதுமே இருக்கிறார்கள். சு.ரா வையும் ஜே.ஜே. சில குறிப்புகளையும் அன்றிலிருந்து 'சிலர்' நிராகரிக்கிறார்கள். ஆனால் சு.ராவும் ஜே.ஜே. வும் இன்றும் இருந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

===
சு.ரா. வின் இரண்டு கவிதைகள். 1973 ஆம் ஆண்டு வெளிவந்த ஞானரதத்தில் வந்த கவிதைகள் இவை.

(1)
தெருப் பாராக்காரருக்கு

எல்லாம் அறிந்திருந்தும்
ஏதும் அறியாதவர் போல்
இன்றும் விடாதுவிசிலூதி
ஜன்னலோரம் என் முகம் காண
மல்லுக்கு நிற்பதேன்?

(2)

சில நாய்கள்
வேளை கெட்ட வேளைகளில் உறங்கும்.

சில நாய்கள்
ஃப்ளுக்ஃ கெனக் கக்கி
அக் கக்கலை
அதி சுவாரஸ்யமாய் நக்கித் தின்னும்.

சில நாய்கள்
புட்டிப் புண் ஈக்கள் லபக்காக்க
முக்கி முதுகு வளைத்தும்
வாய்க்கு எட்டாது நகர்ந்தோடும்
புட்டியின் ஜாலம் புரியாது சரியும்.

சில நாய்கள்
இருந்த இருப்பில்
கத்தத் தொடங்கி
நிறுத்தத் தெரியாமல்
அக்கத்தலில் மாட்டிக் கொண்டு சுழலும்.

கொடும் வெயிலில்
சில நாய்கள்
பெண் துவாரம் தேடி அலைந்து
ஏமாந்து
பள்ளிச் சிறுமிகளை விரட்டும்.

இவ்வாறு
இவ்வாறு
இவ்வுலகில்
நான் கண்ட நாய்களின் சீலங்கள்
வாலுக்கு ஒரு விதம்.

என்றாலும்
உண்ணும் உணவில் குறுக்கிட்டால்
பட்டெனப் பிடுங்குவதில்
இவையெல்லாம்
நாய்கள்.

Jul 21, 2009

இடைத் தேர்தல் புறக்கணிப்பு- Election Enjoyment

இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக பிரதான எதிர்கட்சியான அதிமுகவும் அதன் தற்போதைய கூட்டணிக் கட்சிகளான மதிமுகவும் பாமகவும் அறிவித்துவிட்டன. கம்யூனிஸ்ட்களும் இவர்களை பின் தொடரலாம். திமுக தனது தேர்தல் பிரயத்தனங்களை குறைப்பதற்கான வாய்ப்பை இவர்கள் வழங்கியுள்ளனர். ஆளுங்கட்சியின் பணமும் அதிகார ஆதிக்கமும் இந்த இடைத் தேர்தலில் ஓரளவு குறையலாம் என்று எதிர்பார்க்கலாம் என்றாலும் முற்றாக இல்லாமல் இருக்காது.

ஜனநாயகத்தை தேர்தல் கமிஷனால் சரியாக நிலைநாட்ட முடியாது என்பதாலேயே தாங்கள் தேர்தலை புறக்கணிப்பதாகச் சொன்னாலும், உண்மையான காரணம் அதுவாக இருக்க முடியாது. பலவித தகிடுதத்தங்களையும்- மிகக் கச்சிதமாக செய்து முடிக்கும் ஆளும்கட்சியோடு தற்சமயம் மோதுவது எப்படியும் தோல்விக்கான மோதலாகவே இருக்கும். தோல்வி கிடைக்கும் பட்சத்தில் ஏற்கனவே தோல்வி கண்ட தொண்டர்கள் மேலும் சோர்வடையக் கூடும் என்று ஜெயலலிதா மறைமுகமாக அறிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா கொடநாட்டை விட்டு வெளிவருவதும், ஹெலிக்காப்டர் போன்ற தமிழக அரசியல் களத்திற்கு ஒத்துவராத சில சமாச்சாரங்களைக் கைவிடுவதும் இந்த தருணத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. எம்.ஜி.ஆர் சேர்த்து வைத்திருந்த கிராமப்புற பெண்களின் வாக்கு வங்கியை, இலவசம் என்ற பெயரில் அரசு கஜானாவில் கை வைத்து மிக இலாவகமாக தன் பக்கம் திருப்பி வரும் கருணாநிதியின் அரசியல் முன்னகர்வை தடுத்து நிறுத்தும் களப்பணி துளி கூட இல்லாமல் ஜெயலலிதா அசட்டையாக இருக்கிறார்.

முந்தைய தேர்தல் வெற்றிகளுக்கு ஜெயலலிதாவின் கிராமப்புற பயணமும், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தொட்டு வருமாறு பயணத்திட்டத்தை வகுத்துக் கொடுத்த செங்கோட்டையன் போன்றவர்களின் கடும் உழைப்புகளும் பின்புலமாக இருந்திருக்கின்றன. ராமதாஸும், வைகோவும் என்னதான் தலைகீழாக நின்றாலும் ஜெயலலிதாவுக்கு மக்களிடையே இருக்கும் கவர்ச்சிதான் அந்த அணியினருக்கு வாக்கு வாங்கித் தரும் ஆயுதம். அதை சரியாக பயன்படுத்தாமல் ஓய்வெடுக்கிறேன் என்ற பெயரில் ஜெயலலிதா வீணடிக்கிறார். இந்த ஓய்வையும் தேர்தல் புறக்கணிப்பையும் நான் இணைக்கவில்லை. ஓய்வு என்பதை அவர் குறைக்காத வரை அவரது செல்வாக்கை நிலை நிறுத்த முடியாது என்பதுதான் இங்கே குறிப்பிட விரும்புவது.

தேர்தல் புறக்கணிப்பின் பின்புலமாக ஆளும்கட்சியின் தேர்தல் செயல்பாடுகள் குறித்தான அச்சம் மட்டுமில்லாமல் வேறு காரணங்களும் இருக்கக் கூடும். ஜெயலலிதாவுக்கு இருக்கும் பெரிய பலம், அவர் யாருமே எதிர்பாராத நேரத்தில் எடுக்கும் பல முடிவுகள் பல நேரங்களில் அவருக்கு சாதகமாக முடிந்துவிடுவதே. அவரது முடிவுகள் எதற்காக எடுக்கப்பட்டன என்பதற்கான விடைகளும் வெளி வந்ததில்லை. இந்த புறக்கணிப்பு முடிவும் அத்தகையதானதாக இருக்குமா என்று தெரியவில்லை.

இந்த புறக்கணிப்பை ஒட்டுமொத்தமாக தேமுதிகவுக்கான பலமாக பார்ப்பதும் சரியென்று படவில்லை. அதிமுகவும் களத்தில் இல்லாத இந்தத் இருமுனைத் தேர்தலில், தேமுதிக தோல்வியுற்று வாக்கு வித்தியாசம் மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில், 'கேப்டனின்' கூட்டைக் கலைக்க வேறு யாரும் கை வைக்கத் தேவையில்லை. எனவே தேமுதிகவுக்கு இந்த இடைத் தேர்தல் 'ஆசிட்' டெஸ்டாகவே இருக்கும்.

தேமுதிக வெல்வதற்கும் திமுகவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. தேமுதிக ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை பிரிப்பதற்கான அஸ்திரமாக இருக்கும் என்பதால் அது மொத்தமாக அழிந்துவிட திமுக காய் நகர்த்தாது என்பதே அனுமானம். குச்சியும் முறியக் கூடாது பாம்பும் சாகக் கூடாது என்பதான அடியாகத்தான் தேமுதிகவின் மீதான திமுகவின் அடியாக இருக்கும். அதிமுகவை பொறுத்த வரைக்கும் இதுவரை, தேமுதிக, திமுகவுக்குத்தான் எதிரி என்ற கணிப்பு இருந்திருந்தால் அது தவறாகிறது. தேமுதிக எப்பவுமே எதிர்கட்சிக்கான எதிரியாக இருக்கும் என்பதே என் கணிப்பு.

நாளை அதிமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில், அதற்கு எதிரான வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் சிதறடிக்கவே தேமுதிக உதவும். எனவே அந்தச் சமயத்தில் திமுகவுக்கு எதிரியாக தேமுதிக இருக்கும். இந்த நிலையில் தேமுதிக எந்த அளவுக்கு பலவீனப்படுகிறதோ அப்போதுதான் அதிமுக தனக்கான வெற்றி வாய்ப்புகளை பொதுத் தேர்தலில் அதிகரிக்க முடியும்.

நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் போட்டியிட்ட கொங்குநாடு முன்னேற்றப் பேரவை திமுகவின் வாக்குககளை பிரித்து அதிமுகவின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இந்தக் கட்சி கொங்கு மண்டலத்தில் இருக்கும் கொங்கு வேளாளர் இனத்தில் இருந்து அதிமுகவுக்குச் செல்லும் பாரம்பரிய வாக்குகளை பிரித்து திமுக வின் வெற்றிக்காக கலைஞரால் கொம்பு சீவி விடப்பட்ட கட்சி என்ற பேச்சு இருந்தது. ஆனால் அதிமுகவின் வாக்குகள் எப்பவும் போலவே அதிமுகவுக்கே சென்றிருக்கின்றன. திமுக கொங்கு மண்டலத்தில் பெரும் அடி வாங்கியிருக்கிறது. இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்த முறை கொ.மு.பே போட்டியிடுகிறது என்பதால் தேமுதிக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் வாய்ப்புகள் உண்டு.

ஸ்ரீவைகுண்டம், பர்கூர், கம்பம் மற்றும் இளையான்குடி ஆகியவற்றில் இளையான்குடியில் யாதவர் வாக்குகளும் ராஜ கண்ணப்பனின் தனிப்பட்ட செல்வாக்கும், பர்கூரில் தம்பிதுரை மற்றும் அதிமுகவின் செல்வாக்கும் மிக முக்கியமான காரணிகள். இவை இந்தத் தேர்தலில் பயன்படப் போவதில்லையா அல்லது திமுகவுக்கு எதிரான ஆயுதமா அல்லது தேமுதிகவுக்கு எதிரான ஆயுதமா என்பதும் கவனிக்கத் தக்கவை.

ஸ்ரீவைகுண்டம் பற்றியும் கம்பம் பற்றியும் எனக்கு அவ்வளவாகத் தெரியாததால் கருத்துச் சொல்வதில் நியாமில்லை.

அரசியல் செயல்பாடுகள் நல்லதா கெட்டதா என்பது பற்றியெல்லாம் சொல்ல முடியாது. சொல்வதில் அர்த்தமும் இல்லை. இந்த கால கட்டத்தில் எந்த அரசியல் கட்சியும் அதன் தலைவரும் எடுக்கும் எந்த முடிவும் அவர்களின் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கும். இப்படி இருந்தால் இவர்கள் தோற்று அவர்கள் வெல்வார்கள் என்பதும் அந்த முடிவாக இருந்திருந்தால் இவர்கள் வெல்வார்கள் என்பது வேண்டுமானால் நமக்கு சுவாரசியமான பொழுது போக்குக்கான விவாதமாக இருக்கலாம். மற்றபடி யார் வென்றாலும் தோற்றாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. நாம் அடுத்த தேர்தல் Enjoyment க்காக காத்திருப்போம். நம் தேசத்தை பொறுத்தவரைக்கும் அரசியல் வாதிகள் எல்லோரும் ஒரு குட்டையில் இருப்பவர்கள். மக்கள் அனைவரும் வேறு குட்டையில் இருப்பவர்கள். குட்டைகள்தான் வேறு. மற்றபடி Same குட்டை மட்டைஸ்தான்.

சுனாமி வந்த தினம்

வாழ்நாளில் நான் எதிர்கொண்ட மிகப் பெரிய அச்சம் சுனாமியை எதிர்கொண்ட நாள்தான். கடற்கரையை நோக்கிய சாலையில் நான் என் வாகனத்தைச் செலுத்திக் கொண்டு சென்ற அந்தக் காலைவேளையில் திடீரென ஒரு ஜனக் கூட்டம்கடல் துரத்திட்டு வருது... ஓடுங்கஎன்று சொல்லிக் கொண்டே ஓடிவருவதைப் பார்த்தேன். அப்போது நான் அடைந்த உணர்ச்சிக்கு நிகரான ஒரு உணர்ச்சியை வேறு எப்போதும் அடைந்ததில்லை. அது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இப்போதும் நான் கனவில் அந்தக் காட்சியைப் பார்க்கிறேன். துரத்தி வரும் கடல் என்ற படிமத்திலிருந்து நான் ஒருபோதும் விடுபடமுடியாது. ’

*****


குங்குமத்தில் வெளிவந்த மனுஷ்ய புத்திரனின் இந்தப் பதிலைப் படிக்கும் போது எனக்கு சுனாமி தினத்தின் ஞாபகம் வருகிறது.

2004 ஆம் ஆண்டு முதுகலை படிப்பின் ப்ராஜக்ட் பணிக்காக சென்னையில் இருந்தேன். ஆரம்ப நாட்களில் பள்ளிக்கரனைக்குப் பக்கமாக நாராயணபுரத்தில் நண்பர்களோடு தங்கி இருந்தேன். அந்தப் பகுதி ஊருக்கு மிகத் தள்ளி இருப்பதாக உணர்ந்ததால், கொஞ்ச நாட்களில் எல்லாம் அடையாறில் ..டி க்கு அருகில் இருந்த ஒரு சந்தில் தனியாக வீடு எடுத்துக் கொண்டேன். அதை வீடு என்று சொல்ல முடியாது. ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த ஒற்றை அறை. காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்து தண்ணீர் அடித்தால்தான் குடிப்பதற்கும், குளிப்பதற்கும், இன்ன பிறவற்றிற்கும். ஆயிரம் ரூபாயில் நகருக்குள் அதை விட மேலான அறை கிடைப்பது மிகச் சிரமம் என்பதால் தங்கிக் கொண்டேன்.

சனி, ஞாயிறு போன்ற தினங்களில் விடுமுறை என்று அறையில் உறங்க முடியாது, ஆஸ்பெஸ்டாஸ் வழியாக இறங்கும் வெப்பம் ஆளை உருக்கிவிடும். காலையில் குளித்துவிட்டு கடையில் ஏதாவது- அதிகபட்சமாக ஒரு மசால் தோசை, உண்டுவிட்டு அருகில் இருக்கும் காந்தி மண்டபத்தில் படிப்பதோ வேடிக்கை பார்ப்பதோ என்றிருப்பேன். மதிய உணவுக்குப் பின் மீண்டும் மண்டபத்தில் உறங்கிவிடுவது வாடிக்கையாகியிருந்தது.

என்னைப் போன்று பலருக்கும் காந்தி மண்டபம் தற்காலிக வீடாக இருந்ததை உணர்ந்திருக்கிறேன். பூங்கா- காதலருக்கும், இன்னும் பிறரின் பொழுதுபோக்குக்கும் மட்டுமே என்ற என் மனப்பிம்பம் சிதைந்தது அந்தச் சமயத்தில்தான். சென்னை போன்ற பெருநகரங்களில் போக்கிடம் அற்ற, வாழ்வின் கசப்புகளை அசைபோட அல்லது மறக்க, தவிர்க்கவேவியலாத துன்பங்களைச் சுமந்து கொண்டு முகத்தில் வேதனையின் கோடுகளைப் படரவிடும் எண்ணற்ற நபர்களுக்குப் பூங்காக்கள்தான் இடம் தருகின்றன. சிலீரிடும் பூங்காவின் காற்றில் கணநேரமாவது வாழ்வின் வசந்தத்தை ஸ்பரிசித்துவிடுகிறார்கள்.

நான் தங்கியிருந்த அறைக்கு அருகில் அதே மாதிரியான ஆஸ்பெஸ்டாஸ் கூரையில் இன்னொரு குடும்பம் வாடகைக்கு இருந்தார்கள். அடையாறில் இருந்த புற்று நோய் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க வந்திருந்த பெண்ணும், பெண்ணின் தாயாரும் அந்தக் கூரையில் தங்கியிருந்தார்கள். அந்தப் பெண்ணைப் பார்க்க எனக்குக் கொஞ்சம் பயமாயிருந்தது. அந்தப் பெண்ணுக்கு முடியைக் கத்தரித்து விட்டிருந்தார்கள். புத்தி பேதலித்த ஒரு பார்வையை நான் எதிர்ப்படும் ஒவ்வொரு சமயமும் என் மீது நேர்கோட்டில் செலுத்துவாள். ஒரு சமயத்திலும் கூட அந்தக் கண்களை என்னால் நேருக்கு நேர் பார்க்க முடிந்ததில்லை.

கழிவறை எனக்கும் அந்தக் குடும்பத்துக்கும் வேறு என்றாலும் குளியலறை ஒன்றுதான். காலையில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை எடுத்துப் போய் சிக்கனமாக உபயோகப்படுத்த வேண்டும். ஐந்தரை மணிக்கு எழுந்து தண்ணீர் பிடித்தவுடன் குளித்து ஆறரை மணிக்கு எல்லாம் அறையைப் பூட்டிவிடுவேன். அந்த அறையில் எவ்வளவுக்கு எவ்வளவு தங்க முடியாமல் இருக்க முடியும் என்று பார்த்துக் கொள்வேன்.

இந்தச் சமயத்தில் உயிர்மை அலுவலகத்துக்குச் சென்று வர ஆரம்பித்தேன். நல்ல இலக்கியங்களை வாசிக்கத் துவங்கியதும் அப்பொழுதுதான். எனக்கு சென்னை அயல் மண்ணாக இருந்தது. இதற்கு முன்பாக சேலத்திலும், வேலூரிலும் இருந்தாலும் கல்லூரி விடுதியை விட்டு அதிகம் வெளியில் வந்ததில்லை. நண்பர்கள் உடனிருந்தார்கள். இருவாரத்திற்கு ஒரு முறை ஊருக்குப் போக வெளியில் வருவதுதான் அதிகபட்சம். சென்னையில் தனிமை என்னை நசுக்கத் துவங்கியிருந்தது. நான் எழுதுவதற்கும், படிப்பதற்கும் ஒரு பற்றுக்கோல் தேவைப்பட்டது. உயிர்மை அதைத் தந்து கொண்டிருந்தது. உயிர்மை அலுவலகத்தில் தமிழின் பிரபலமான படைப்பாளிகளை 'பார்க்கத்' துவங்கிய பருவம் அது. அந்தச் சமயத்தில் படைப்பாளிகள் யாரிடமும் பேசியதில்லை. வருபவர்கள் மனுஷ்ய புத்திரனோடு பேசிக் கொண்டிருப்பார்கள். நான் ஏதாவது இதழ் ஒன்றைப் புரட்டிக் கொண்டு அதே அறையில் இருப்பேன்.

பல சமயங்களில் இரவு ஒன்பதரை மணி தாண்டிய பிறகு பஸ் டிக்கெட் மிச்சம் ஆகும் என்பதால் அபிராமபுரத்திலிருந்து கோட்டூர் புரம் வழியாக அடையாற்றுக்கு நடந்து வருவேன். இதை இப்பொழுது நம்புவதற்கு எனக்குமே கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் வறுமை என்றில்லை. ஐடி துறை கொடி கட்டத்துவங்கிய காலம் அது. உடன் படித்த நண்பர்கள் இருபதாயிரம் ரூபாயை ஒவ்வொரு மாதமும் கண்ணில் பார்க்கத் துவங்கியிருந்தார்கள். நான் பி.. முடித்தவுடன் வேலைக்கு எதுவும் முயற்சி செய்யாமல் எம்.டெக் படித்தாக வேண்டுமென்று, வீட்டில் மாதம் இரண்டாயிரம் வாங்கிக் கொண்டிருந்தேன். போதாதற்கு வீட்டு ஓனர் தன் மகன் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருப்பதாகவும், படிக்கும் போதே அங்கிருந்து பணம் அனுப்புவதாகவும் என்னைக் கிளறிக் கொண்டிருந்தார். ஏதோ அடையாளம் இல்லாத குற்ற உணர்ச்சி என்னை அரிக்க ஆரம்பித்திருந்தது.

கடல் கொந்தளித்த டிசம்பர் 26 விடுமுறையாயிருந்தது. நண்பனொருவன் தன் தோழியைப் பார்க்க பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்தான். இருவரும் காதலித்துக் கொண்டிருந்தார்கள். அவனோடு சேர்ந்து கொண்டு அவளது திருவான்மியூர் விடுதிக்குச் சென்று கொண்டிருந்தோம். வழியில் எதிர்ப்படுவோர் எல்லாம் கடல் கொந்தளிப்பு பற்றியே பேசினார்கள். திருவான்மியூருக்குள் கடல் புகுந்துவிட்டதாகவும் சொன்னார்கள். பயத்தில் அவன் அவளை போனில் அழைத்து எதுவுமாகவில்லையே என்றான். அவள் ஜெயந்தி தியேட்டருக்கு முன்பாக நின்று கொண்டிருப்பதாகச் சொன்னாள். எங்களுக்கு நிகழ்ந்துவிட்டதன் வீரியம் தெரியாமல் இருந்தது. அவர்கள் இருவருக்கும் ஊர் சுற்ற வேண்டும் என்று ஆசை, எனக்குக் கடலைப் பார்க்க ஆசை.

காதலர்களோடு தனித்த ஒருவன் இருப்பது நாகரிகமல்ல என்பதால், எனக்கு வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். கூவத்தில் நீர் மட்டம் அதிகமாயிருந்தது. பஸ்ஸில் இருந்தவர்கள் அதைப் பற்றி மட்டுமே பேசினார்கள். ராயப்பேட்டைக்குச் சென்றேன். அரசு மருத்துவமனையில் பிணங்களை குவியல் குவியலாகக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். பிணத்தை அடையாளம் பார்ப்பதாக இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தார்கள். மருத்துவமனையின் வெளியில் ஒருவர் தானும் கடலால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கையில் ஏதோ அகப்பட்டதை இறுகப்பிடித்து தப்பித்தாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது அதை நம்பிக் கொண்டேன். இப்பொழுது யோசித்தால் அது இயலக் கூடிய விஷயமா என்று சந்தேகமாயிருக்கிறது.

என் வாழ்நாளில் அத்தனை பிணங்களைப் பார்த்ததில்லை. இனியும் பார்க்க விருப்பமில்லை. மனம் முழுவதும் விரக்தியின் கசப்பு பரவத் துவங்கியது. இனி நின்று கொண்டிருந்தால் உருவாகும் மன அழுத்தத்தையும் பயத்தையும் தாங்க முடியாது என்பதால் மனுஷ்ய புத்திரனைப் பார்க்கச் செல்ல முடிவு செய்தேன்.

அபிராமபுரத்தில் இறங்கி நடந்த போது பசிக்கத் துவங்கியது. அங்கு ஒரு தள்ளுவண்டிக்கடையில் கறிக்குழம்போடு சோறு தருவார்கள். விலையும் சல்லிசு. வெளியில் சாப்பிட்டேன், அதுவும் அபிராமபுரத்திலேயே சாப்பிட்டேன் என்று சொன்னால் மனுஷ்ய புத்திரனிடம் திட்டு வாங்க வேண்டும் என்பதால் எப்பொழுதும் என் வீட்டருகிலேயே சாப்பிட்டதாகச் சொல்லி விடுவேன். இப்பொழுது உணவை வாங்கினாலும் இரண்டு வாய்க்கு மேலாக உண்ண முடியவில்லை. மருத்துவ மனைக் காட்சிகள் நிழலாடின. வயிறு குமட்டியது. காசு கொடுத்த போது, "சாப்பாடு சரியில்லையா பா?" என்ற கடைக்காரரின் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை.

உயிர்மை அலுவலகத்தில் அனைவரும் தைரியமாக இருந்ததாகத் தோன்றியது. மனுஷ்ய புத்திரனைத் தவிர. அவர் அச்சத்தின் பிடிக்குள் இருந்தார். கடல் ஊருக்குள் வந்தால் எப்படித் தப்பிப்பது என்ற வினாவைச் சுழற்றிக் கொண்டிருந்தார். செய்தி சேனல்களில் திகிலூட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சுனாமி என்ற பெயர் அறிமுகமாகவில்லை. செய்தியாளர்கள் 'டிசுனாமி' என்றே உச்சரித்தார்கள். இன்னும் சில நாட்களுக்கு நாளிதழ்களிலும் 'ட்சுனாமி' அல்லது 'டிசுனாமி' என்று எழுதினார்கள். செய்திகளில் வரும் பிணங்களையும், அழுபவர்களையும் பார்க்க முடியாமல் வாசலில் அமர்ந்து கொண்டிருந்தோம்.அப்பொழுது நான் அமர்ந்திருந்த திண்ணையில் இப்பொழுது குருவிகளுக்கான கூடும் அதில் கொஞ்சம் குருவிகளும் இருக்கின்றன.

மனுஷ்ய புத்திரனுக்கும், எனக்கும் பயம் விலகாத முகங்கள். லல்லி, ஏதேனும் நிகழ்ந்தால் மொட்டை மாடிக்குச் சென்றுவிடலாம் என்றார். அந்தச் சமயத்திலும் எல்லோருக்கும் சிரிப்பு வந்தது. பொங்கி வரும் கடல் பதினைந்தடி உயர மாடியை மட்டுமா விட்டு வைக்கும். ஒரு காரை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டின் உட்புறமாகச் சென்றுவிடுங்கள் என்று சொன்னேன். எல்லோரும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

எனது தொலைபேசி ஒலிக்கத் துவங்கியது. சித்தப்பா பேசினார். கிளம்பி வரும்படி உத்தரவு. நான் ஏதோ சமாதானம் சொல்லி வைத்துவிட்டேன். அடுத்ததாக அம்மா பேசினார். புறப்படச் சொல்லி அழுதார். அழுகை என்றால் சாதாரணமாக இல்லை. தேம்பித் தேம்பி. நான் புதிதாக புத்தகங்களின் மூலம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயல்பவன் அல்லவா? "போக வேண்டும் என்றிருந்தால் எப்படியும் போய்விடுவோம். கடல்கிட்ட இருந்து தப்பிக்க ஊருக்கு வரும் போது பஸ்ஸில் அடிபட்டால் என்ன ஆவது" என்றேன். அவ்வளவுதான். அம்மா கதறியதில் ஊரே இரண்டு பட்டிருக்க வேண்டும். அடுத்தாக அப்பா. "அம்மாவுக்கு ஏதும் ஆகக் கூடாது என்றால், இப்பொழுதே கிளம்பு". இனியும் என்னால் ஊருக்குப் போவதைத் தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை.

"நான் கிளம்புகிறேன் சார்" என்றேன் .பு விடம். "அடப்பாவி! எங்களை எல்லாம் மட்டும் இங்கையே விட்டுவிட்டா?" என்றார் விளையாட்டாக. பெரிதாக எந்தப் பதிலும் நான் சொல்லவில்லை. அடையாறில் அறையைத் திறந்து சான்றிதழ்களை மட்டும் எடுத்துக் கொண்டேன். நாற்பது நிமிடங்களுக்குள் கோயம்பேடு சென்று சேர்ந்திருப்பேன். தாம்பரம் வருவதற்குள் நான் சென்னையைக் கடந்துவிட்டேனா என்று கேட்டு வீட்டிலிருந்து மூன்று அழைப்புகள். பொய் சொன்னாலாவது அமைதியாக இருப்பார்கள் என்று தாம்பரம் தாண்டும் போது விழுப்புரத்தைத் தாண்டப் போவதாகச் சொன்னேன். வீட்டில் நான் சுனாமியைத் தாண்டிவிட்டதாக நினைத்துக் கொண்டார்கள்.

vaamanikandan@gmail.com

நன்றி: உயிரோசை' 20-07-2009

Jul 16, 2009

எனக்கு சுவாரஸியமான பதிவுகள்

எந்த ஒரு அற்புத எழுத்தாளரின் அனைத்து எழுத்துக்களும் ஒரு வாசகனை ஈர்த்து விடுவதில்லை. அதே சமயத்தில் எந்த மோசமான எழுத்தாளரின் அனைத்து எழுத்துக்களையும் வாசகன் புறந்தள்ளிவிடுவதில்லை. நிற்க. இந்த அற்புத/மோச என்ற வரையறைகள் கூட வாசக மனம் சார்ந்த பகுப்புதான். நான் கொண்டாடும் ஒரு எழுத்தாளனையும் அவனது எழுத்தையும் நீங்கள் நிராகரிக்கலாம். நான் நிராகரிக்கும் எழுத்து உங்களின் மதிப்புமிக்க படைப்பாக இடம்பெறலாம்.

எழுத்தாளனை தனிப்பட்ட முறையில் அறியாமல் அவனது எழுத்துக்களை மட்டும் வாசிக்கும் போது கிடைக்கும் அனுபவமும் உருவாகும் பிம்பமும் வேறு, அவனை அறிந்த பின்னர் அவனது எழுத்தில் கிடைக்கும் வாசிப்பனுபவம் வேறு. பிம்பம் சிதைதல்- இதுதான் இரண்டாவதில் நிகழ்கிறது. இணைய எழுத்தின் மிகப்பெரிய பலவீனமும் பலமும் இதுதான். எழுத்தை விரும்பிவிட்டால், அந்த வாசகனுக்கு எழுத்தாளனோடான நட்புக்கு எந்தவித தடையும் இருப்பதில்லை. அவனை அறிந்து கொள்ளவும் அவன் பற்றியதான நம் உள் மன பிம்பத்தை சிதைக்கவும் அதே இணையம் இமெயில், சாட் மூலம் உதவிவிடுகிறது.
=======
நான் வாசிக்கும் சுவாரஸியமான பதிவர்களை பற்றி ஒரு குறிப்பெழுத நண்பர் சென்ஷி அழைத்திருக்கிறார்.

கலாப்ரியா :
நவீன தமிழ்க் கவிதையில் தவிர்க்க முடியாத பெயர். நான் மிக மதிக்கும் கவிஞர். சென்ற ஆண்டிலிருந்து பதிவு எழுதி வருகிறார்.கவிதைகளை விட அதிகமாக தன் வாழ்வியல் அனுபவங்களை ஈர்ப்பான எழுத்துகளின் மூலம் பதிவு செய்து வருகிறார். நேரடியாக பேசும் போது குறைந்த அளவிலேயே பேசும் இவரது எழுத்துக்களில் தெறிக்கும் நகைச்சுவை ஆச்சரியமூட்டுபவை. அவரது எழுத்தின் சுவாரஸியத்தை வாசித்தவர்கள் உணரலாம்.

கலாப்ரியாவின் off the record ஜோக் ஒன்று இங்கு record செய்யப்படுகிறது.

பி.யூ.சி முடித்த கலாப்ரியாவிடம் அவரது தந்தையாரின் அலட்டல் நண்பர் ஒருவர், அடுத்ததாக என்ன கோர்ஸ் பண்ணலாம் என்றிருக்கிறாய் என்று கேட்டிருக்கிறார். அருகில் இருந்த தந்தையாரையும் பொருட்படுத்தாமல் கடுப்பில் கலாப்ரியா உதிர்த்த வார்த்தை "ம்....இண்டர்கோர்ஸ்".

சுரேஷ்கண்ணன்:
சுரேஷ் கண்ணனின் பதிவுகளில் மாற்று சினிமா குறித்தான பார்வையும், சமகால தமிழ் இலக்கிய உலகம் குறித்தான குறிப்புகளும் என்னை பெரிதும் ஈர்த்தவை என்றாலும், சற்றேறக்குறைய இவரின் அனைத்து பதிவுகளையும் வாசித்து விடுவதுண்டு. தொடர்ந்து பதிவுகளாக அதுவும் சுவாரஸியமாக (அடுத்தவர்களின் கடிதங்களை பதிவிலேற்றி காலம் ஓட்டுவதில்லை) இவரிடம் ஒரு கேள்வி,ஸார்..இது பிச்சைப்பாத்திரமா?அட்சயபாத்திரமா?

நதியலை:
நதியலையின் பதிவில் கவிதைகள்தான் அதிகம். அனைத்துக் கவிதைகளும் எனக்கு உவப்பானவை அல்ல என்றாலும் கவிதையில் இவர் உருவாக்கும் வெளிக்காக இவரது கவிதைகளை தொடர்ந்து வாசிப்பேன். சில கவிதைகளை வேண்டுமென்றே திருகலாக எழுதிறாரோ என்ற சந்தேகம் உண்டு. அதே திருகல் மொழி கவிதையை இன்னொரு முறை வாசிக்கச் செய்கிறது.

புதிய வார்த்தைகளை(வழக்கத்தில் இல்லாத) கவிதைக்குள் சரியான இடத்தில் பயன்படுத்துகிறார். இவரது கவிதைகளை வாசிக்கும் போது ஒரு முறை நாஞ்சில் நாடன் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. இன்றைய கவிஞர்கள் "500 சொற்களையே திரும்ப திரும்ப உபயோகப்படுத்தி கவிதைகளை எழுதிவிடுகிறார்கள். புதிய சொற்களுக்கான தேடல் இல்லை".

சில கவிதைகளில் புதிய வார்த்தைகளையும் திருகல் மொழியையும் கொஞ்ச ஓவர் டோஸாக கொடுத்து சிதைப்பதிலும் நதியலைக்கு நிகர் அவரே.

சித்தார்த்:
இவரது வாசிப்பனுபவத்தையே பெரும்பாலும் பதிவிடுகிறார். பிறமொழி இலக்கியத்திலிருந்து மாற்று சினிமா பழம்பெரும் தமிழிலக்கியம் என்ற பரந்துபட்ட வாசகர். எழுத்து என்பது தொடர்ச்சியான வாசிப்புடன் கூடிய உழைப்பு. இவர் வாசிப்பதோடு நின்றுவிடுகிறார். மாதம் ஒரு பதிவு என்பதே கூட பெரும் விஷயமாக இருக்கிறது. ஆனால் எழுதிய பதிவுகள் பெரும்பாலும் முக்கியமானவை.

மணல்வீடு ஹரி பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார்: "மணி நமக்கு முன்னாடி எழுதினவங்கள படிக்கறதே முடியாம கிடக்கு, அத படிச்சாவே போதும், நான் எல்லாம் என்னத்த எழுதறது?"

சித்தார்த் மனதில் எழுதுவது பற்றிய எண்ணம் எதுவாக இருக்கும் என்று தெரியவில்லை.

வா மு கோமு :
கொங்கு மண்டலத்தின் கவனிக்கத்தகுந்த இளம் படைப்பாளி. கலாச்சாரம் கருமாந்திரம் என்று நாம் கட்டமைத்து வைத்திருக்கும் ஒவ்வொரு கூறையும் கேள்விக்குள்ளாக்கும் படைப்புகளை மிக வீரியமாக உருவாக்கும் எழுத்தாளர். தன் எழுத்தில் இவர் உருவாக்கியிருக்கும் கட்டற்ற தன்மையே இவரது எழுத்துக்கான பலம்.

கவிஞி கமலா எழுதிய கவிதைகள் இறக்கை வாசர்களிடம் மிகப் பிரபலம். அதே கவிஞி இணையத்தளத்திலும் பிரவேசிப்பதே சந்தோஷமான விஷயமாக இருக்கிறது.

=================
இன்னும் முகுந்த் நாகராஜன், கென், மண்குதிரை, அனுஜன்யா, நந்தா, யாத்ரா, முபாரக், தமிழ்மகன், கரையோரம், தமிழ்நதி, குழலி, முத்து(தமிழினி), அய்யனார், ஜ்யோவ்ராம் சுந்தர், சிதைவுகள், வேடிக்கை, குசும்பன், சென்ஷி, இளவஞ்சி, உண்மைத்தமிழன் போன்ற பதிவுகள் நான் தொடர்ந்து வாசிப்பவை. (மனுஷ்யபுத்திரன், சாருநிவேதிதா, எஸ்.ரா,ஜெ.மோ வை இங்கு குறிப்பிடலாமா என்று தெரியவில்லை)

என்ன பிடித்தது, ஏன் பிடித்தது என்பதெல்லாம் தனிப்பட்ட விஷயம். ஒவ்வொருவரும் வாசிப்பதன் மூலமாகவே உணர வேண்டும். பிடித்ததா இல்லையா என்பதை வேண்டுமானால் குறிப்பிடலாம். அதைக் கூட தவிர்ப்பது உத்தமம்.
==================
என் பதிவுக்கு கவுண்ட்டர் இல்லை. யார் படிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் அல்லது யாரும் படிக்கவில்லை என நம்பிக்கை இழக்கக் கூடாது என்று எனக்காக சொல்லிக் கொண்டு கவுண்ட்டர் வைக்கவில்லை.

பதிவு எழுதத் துவங்கிய காலத்திருந்து ஒரு வருடத்திற்கும் அல்லது சற்றே அதிகமான காலத்திற்கும் எப்படியாவது கொஞ்சம் பேரைக் கவர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பின்னர் அதைத் தொலைத்துவிட்டேன். பின்னூட்டம் வந்தால் பதிலிட வேண்டும் என்ற அடிப்படை நியதியைக் கூட பல சமயங்களில் பின்பற்றுவதில்லை. முப்பதுக்கும் சற்றே அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். கூகிள் ரீடரில் நூற்றியருபது சொச்சம் பேர் வாசிக்கிறார்கள் என்பதும் மிகச் சமீமபாய் தெரியும். "பரவாயில்லையே" என்றிருந்தது.

தோன்றும் போது எழுதுகிறேன். இந்த தான்தோன்றித்தனம் சுதந்திரத்தை தருகிறது. எழுதி பதிவில் ஏற்றிய பின்பு புலம்பிவிட்ட ஒரு ஆயாசம் கிடைக்கிறது. இந்த ஆயாசம் யாருமில்லாத பெருவெளியில் காற்றிடமும் வெளிச்சத்திடமும் புலம்பும் ஆயாசம்.

எனது எழுத்து அவருக்கு சுவாரஸியம் என்று குறிப்பிட்ட நண்பர் சென்ஷிக்கு நன்றி.

Jul 1, 2009

உங்களுக்கு சர்க்கரை வராமலிருக்கக் கடவது.

போன வார ப்ளட் டெஸ்டில்
அப்பாவுக்கும் சர்க்கரை வந்துவிட்டது
அம்மாவுக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவே இருக்கிறது
அமத்தா
சித்தி
மாமா
என்று வகை தொகையில்லாமல்
சர்க்கரை இருப்பதால்
உனக்கும் வந்துவிடலாம் என்கிறார்கள்
இன்சுலின் ஊசி என்றால் பயமாக இருக்கிறது
தினமும் ஒரு ஊசி-
நினைத்தால்
நடுக்கம் வருகிறது.
ஒரு வாரமாக ஜாகிங் போகிறேன்
உடம்பு இளைத்திருக்கிறது
குதிங்காலில் வலி
அநேக தினங்களில்
எட்டுமணி வெயில் எட்டிப்பார்ப்பதால்
கறுத்திருக்கிறேன்
நான்கு காபி இரண்டாகி
இரண்டு ஸ்பூன் சர்க்கரை ஒன்றாகியிருக்கிறது
ஜிலேபி, லட்டு தொடப்போவதில்லை என்றிருக்கிறேன்.

சர்க்கரை ஒன்றும் பெரிய வியாதியில்லை.

எல்லாம் சரி.
என்றாலும்
உங்களுக்கு எதற்கு சொல்ல வேண்டும்?

நாளை
நான் எழுதவில்லை என்றால்
சோம்பேறி என்று சொல்லாமல்
பாவம் நோயாளி என்று பரிதாபப்படுங்கள்.

உங்களுக்கு சர்க்கரை வராமலிருக்கக் கடவது.

ஆமென்.

லிபரான் கமிஷன் - கமிஷன்களின் இன்னொரு அத்தியாயம்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு குறித்தான சம்பவங்களைப் பற்றி விசாரிப்பதற்கான லிபரான் கமிஷனின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. மூன்று மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் படி அன்றைய நடுவண் அரசால் அமைக்கப்பட்ட(16 டிசம்பர், 1992) இந்த கமிஷன், நாற்பத்தெட்டு முறைகள் கெடு நீடிக்கப்பட்டு, எட்டு கோடி ரூபாய்கள் செலவில், பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகாக நேற்று (ஜூன் 30,2009) தனது ஆயிரக்கணக்கான பக்கங்களிலான அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.

அறிக்கையை பற்றி லிபரானோ, உள்துறை அமைச்சரோ அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்களைப் பற்றி எதுவும் வெளியில் சொல்லவில்லை. அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போதுதான், அறிக்கையில் உள்ள தகவல்கள் வெளிவரும் என்று மேற்குறிப்பிட்ட இருவரும் தெரிவித்திருக்கிறார்கள் என்ற போதிலும், சில தினப்பத்திரிக்கைகளில் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

எதிர்பார்த்த செய்திகள்தான். பி.வி.நரசிம்மராவ் அரசு மசூதி தகர்ப்பை தடுக்கவில்லை. கல்யாண்சிங் உத்தரபிரதேச முதலமைச்சராக இந்த நிகழ்வை வேடிக்கை பார்த்தார். அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் அயோத்தியில் இருந்து தகர்ப்பினை வழிநடத்தினார்கள். சங் பரிவாரத்தின் அசோக் சிங்காலுக்கு இடிப்பில் மிக முக்கிய பங்களிப்பு இருக்கிறது. உமாபாரதி மசூதி தகர்ப்பின் போது மிகுந்த உற்சாகத் துள்ளலில் இருந்தார்.

வாரம் ஒரு முறை ரோட்டோர டீக்கடையில் தினத்தந்தியோ, தினகரனையோ கடந்த பதினேழு வருடங்களாக வாசித்து வரும் எந்த ஒரு சாமானியனுக்கும் இந்தத் தகவல்கள் தெரிந்திருக்கும்.இந்தத் தகவல்களை வெளியிட மெத்தப்படித்த அறிவாளிகள் நிறைந்த ஒரு குழு , பதினேழு வருடங்களாக, 399 முறை கூடி, எட்டுக் கோடி ரூபாய்கள் செலவு செய்து ஆயிரம் பக்கங்களில் வெளியிட வேண்டும் என்றால் இந்தியாவின் குற்றவியல் விசாரணை குறித்த திறன் எந்த அளவிற்கு சந்தேகத்திற்குரியது என்பது தெளிவாகும்.

இதில் இன்னொரு நகைப்பிற்குரிய செய்தி, அறிக்கை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டியதாம். லிபரானுக்கு, கமிஷனில் பணியாற்றிய வழக்கறிஞர் ஒருவருக்கும் உருவான பிரச்சினைகளின் காரணமாக, வழக்கறிஞர் விலகிக் கொள்ள அறிக்கை தாமதமாகியிருக்கிறது. Ego clash??

நாட்டின் கவனத்தை ஈர்க்கும் எந்தச் செய்தியானாலும், அதை விசாரிக்க ஒரு நீதிபதியை வைத்து விசாரணைக் கமிஷனை அமைத்துவிடும் பழக்கத்தை இந்திய அரசாங்கம் முதலில் கைவிட வேண்டும். முக்கியத் தலைவர் கொலையில் தொடங்கி, கலவரம், குண்டு வெடிப்பு வரை எதுவானாலும் அரசாங்கத்தின் இந்தப் பழக்கம் தொடர்கிறது.

ஒரு வயது மூத்த நீதிபதி, அவருக்கு ஒரு பரிவாரம், கோடிகளில் பணம், குறைந்த பட்சம் பதினைந்து ஆண்டுகள் என்று இழுத்தடித்து தனது முடிவை கமிஷன் தெரிவிக்கும் வேளையில், அந்த நிகழ்வு, மறக்கப்பட்டதாக, முடிவு வெளி வரும் காலகட்டத்தில் அவ்வளவு முக்கியத்துவமில்லாததாக மாறிவிடுகிறது.அதே நேரம், கமிஷன் சுட்டிக் காட்டும் குற்றவாளிகள், மரணம் அடைந்தோ, வயது முதிர்ந்து பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றோ இருக்கிறார்கள்.

குற்றவாளிகள் தங்கள் வாழ்வில் பதவிகளை அனுபவித்து, சொத்துச் சேர்த்து, ஓய்வு பெற கமிஷன் அமைக்கப்படும் தினத்திற்கும் அறிக்கை வெளியாகும் இடைப்பட்ட பதினைந்து ஆண்டு காலம் போதுமானதாக இருக்கிறது.

விசாரணைக் கமிஷன்களின் முடிவுகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றனவா என்றால் அதுவும் கிடையாது.

சார்புத் தன்மை, அரசியல் சாயங்கள் என்று பெரும்பாலான விசாரணைக் கமிஷன்களுக்கு எந்த நம்பகத்தன்மையும் கிடையாது. பிறகு எதற்காக விசாரணைக்கமிஷன்கள்? மிகச் சுலபமான பதில், உடனடியாக எழும் கேள்விகளில் இருந்து அரசாங்கம் பதில் சொல்லாமல் தப்பித்துக் கொள்ள ஒரு தற்காலிக அல்லது நீண்ட கால உபாயமாக விசாரணைக் கமிஷன்கள் அமைகின்றன.

உதாரணமாக சீக்கியர்கள் மீதாக டெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்களை விசாரிப்பதற்கு மட்டுமென்று அஹூஜா கமிஷன், மிஸ்ரா கமிஷன், நானாவதி கமிஷன் உள்ளிட்ட ஏகப்பட்ட கமிஷன்கள் அமைக்கப்பட்டன. இந்த கமிஷன்களின் முடிவுகள் எங்கே? கமிஷனின் முடிவுகள் மீதான நடவடிக்கைகள் என்ன என்றால் யாருக்கும் எதுவும் தெரியப்போவதில்லை.

கமிஷன்களின் நடைமுறைகளில் இருக்கும் ஏகப்பட்ட குளறுபடிகளைத் தவிர்த்துப் பார்த்தாலும், அறிக்கை வெளியிடப்படும் கால கட்டங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக தள்ளி வைக்கப்படுவதும் அல்லது சகாயமான சமயங்களில் வெளியிடுவதும் நடைபெற்று பல்லிளிக்கின்றன.

இந்தியாவில் குற்றவியல் விசாரணைகளை துரிதப்படுத்துவதும், விசாரணை முறைகள் மனித உரிமை மீறலின்றி நடைபெறுவதாகவும் மாற்றியமைக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

அறுபது ஆண்டுகளுக்கு பிறகாக கமாண்டோ படைகளுக்கான பயிற்சி மையங்கள் மண்டல அளவில் திறக்கப்படுவது எவ்வளவு காலம் தாழ்த்திய செயலோ அதற்கு கொஞ்சம் சளைத்ததல்ல விசாரணைக்கமிஷன்களை அமைப்பதும் அதன் முடிவுக்கு காத்திருப்பதுமான விசாரணை முறைகளை மாற்றியமைக்காமல் இருப்பது.

என்னைப் பொறுத்த வரைக்கும் விசாரணைக்கமிஷன் என்ற வார்த்தை அரசாங்கத்தின் அகராதியிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படல் வேண்டும்.