
ராஜ மார்த்தாண்டன் விபத்தில் மரணித்ததாக மின்னஞ்சலும், குறுஞ்செய்திகளும் வந்தன.
ராஜ மார்த்தாண்டன் அவர்களை ஒரு முறை சென்னையில் சந்தித்திருக்கிறேன். நண்பர் மெய்யருள் அறிமுகப்படுத்தினார்.தான் அதிகம் மது அருந்துவதால் தன் உடல்நிலை சீரழிந்து இருப்பதாகவும், அதிகம் பேச முடியாமைக்கு வருந்துவதாகவும் தெரிவித்தார். பிறகு அவரது உடல் நிலை சீராகி இருப்பதாக ஜெயமோகன் தனது கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார்.
பிறகு ராஜ மார்த்தாண்டன் அவர்களை பார்த்ததில்லை. கவிதை வாசிக்கும் போதே விமர்சனங்களையும் வாசிப்பது பார்வையை விசாலமாக்கும் என்ற முடிவில், கவிதை விமர்சனக் கட்டுரைகளையும், புத்தகங்களையும் வாசிக்கத் துவங்குகையில் ராஜ மார்த்தாண்டன் எழுத்தின் மீதான பரிச்சயம் உண்டானது.
‘தமிழ் புதுக்கவிதை வரலாறு' ‘கொங்குதேர் வாழ்க்கை தொகுதி இரண்டு' இரண்டும் பேசப்பட்ட தொகுதிகள். ராஜ மார்த்தாண்டன் கவிதைகள் எழுதியிருந்தாலும், கவிதை விமர்சகராகவே தனது பெயரை நிலைப்படுத்தியிருக்கிறார்.
இருபது ஆண்டுகளாக அவர் தினமணி ஆசிரியர் குழுவில் பணியாற்றியிருக்கிறார். தற்சமயம் காலச்சுவடில் பணியாற்றினார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராஜ மார்த்தாண்டனுக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு அறுபதாவது ஆண்டு விழா நடத்தியது.
இன்று காலை(ஜூன் 06, 2009) நாகர்கோவிலில் நடந்த விபத்தில் மரணித்திருக்கிறார்.