May 27, 2009

அகிம்சாவாதிகளுக்கு...உங்க‌ள் வாச‌க‌ன்

அன்புள்ள அகிம்சாவாதிகளுக்கு,

வணக்கம்.

வன்முறை தோற்கும் என திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள்.

நல்லது. மெத்தப்படித்த பெரு மேதைகள் சொன்னால் சரியானதாகத் தான் இருக்கும். ஆனால் தொடர்ச்சியாக உங்களின் எழுத்துக்களை தொடர்ச்சியாக வாசித்து உங்களுக்கு கடிதங்கள் எழுதிவரும் கூட்டத்திற்கு சில பதில்கள் வேண்டும்.

1) ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதும், கொல்லப்பட்டதற்கான சுவடுகள் இல்லாமல் அழிக்கப்பட்ட பிறகும் உங்கள் கண் முன்னால் புத்தனும், காந்தியும்தான் நிழலாடுகிறார்களா?

2) நீங்கள் சொல்லும் அகிம்சை போராட்டம் ஈழத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆயுதப் போராட்டம் கடந்த முப்பது ஆண்டுகளாகத்தான். ஈழத்தில் அகிம்சை போராட்டம் சாதித்தது என்ன?

3) நீங்கள் எந்த ஆயுதத்தை எடுக்கப் போகிறீர்கள் என்பது எதிரியின் நிலைப்பாட்டை பொறுத்தது அல்லவா?

4) வெள்ளைக் கொடி ஏந்தி வருபவனை கண்மூடிச் சுடுபவர்களும், தமிழ் சிசு என்றால் வயிற்றைக் கீறி வெளியில் எறியும் கொடியவர்களும் நிறைந்த எதிரி குழாமுக்கு முன்னால் எந்த கோஷத்தை எழுப்ப முயல்வீர்கள்?

5) இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும் ஈழ விடுதலைக்கும் சில அடிப்படை வித்தியாசங்கள் கூடவா இல்லை?

6) வெள்ளையன், இந்திய இனம் பூண்டோடு அழிவதற்காக எந்த‌ முயற்சிகளையாவது எடுத்தானா?

7) சிங்கள அரசாங்கம் தமிழினம் அடுத்த தலைமுறையில் இல்லாமல் போவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்ததும் அதை ஆயுத போராட்டம் ஓரளவுக்காவது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் நீங்கள் அறிந்துள்ளீர்களா?

8) இந்தியாவில் சுபாஷ் சந்திரபோஸூம் இன்னும் சில தீவிரவாத கொள்கை உடைய சுதந்திர போராட்ட வீரர்களை அழித்தெறிய வெள்ளையன் எந்த பலாத்கார நாடுகளிடம் இராணுவ உதவி பெற்றான்?

9) முப்பது ஆண்டுகளாக போராளிகளிடம் மண் தின்ற சிங்க‌ள பேரின‌வாத‌ அர‌சுக்கு, இந்தியா, சீனா, பாகிஸ்தான் ம‌ற்றும் ர‌ஷ்யா போன்ற‌ நாடுக‌ள் ஆயுத‌ உத‌வி வ‌ழ‌ங்கி அழித்தொழிக்க‌ முய‌ன்ற‌ போதும் நீங்க‌ள் வ‌லைப்ப‌திவு ந‌ட‌த்தி தின‌மும் குறைந்த‌ ப‌ட்ச‌ம் ஒரு க‌டித‌மாவது ப‌திவேற்றி வ‌ந்தீர்க‌ள். அப்பொழுது இது பற்றியெல்லாம் நீங்கள் கொஞ்ச‌மும் ச‌ட்டை செய்யாத‌து ஏன்?

10) அழிவ‌து த‌மிழின‌ம் என்ப‌தையெல்லாம் விட்டு விடலாம். ஏனெனில் எழுத்தாள‌னுக்கு, இன‌ம், மொழி எல்லாம் எல்லைக‌ள் இல்லை அல்ல‌வா? ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ "ம‌னித‌ர்க‌ள்" இர‌த்த‌ ச‌க‌தியில் புர‌ளுகிறார்க‌ள். நீங்க‌ள் அந்த‌ இன‌த்தின் பிர‌திநிதிக‌ள் அழிக்க‌ப்ப‌ட்ட‌து ச‌ரி என்ப‌தை நிர்மாணிக்கிறீர்க‌ள். இன‌ம் அழிவ‌தை மறைத்து திசை திருப்ப‌ ந‌ட‌த்தப்படும் அர‌சிய‌ல் நாட‌க‌ங்க‌ளுக்கும், உங்க‌ளின் எழுத்திய‌ல் நாட‌க‌ங்க‌ளுக்குமான‌ வித்தியாச‌ம் என்ன? டைமிங் பதிவு என்பதைத் தவிர.

இது எல்லாம் உங்க‌ளுக்கு உறைக்காது என்றாலும்,பதிலை எதிர்பார்த்து.

அன்புட‌ன்,
உங்க‌ள் வாச‌க‌ன்.