May 29, 2009

உயிர் க‌சியும் ம‌ர‌ம்

இப்போதைக்கு பெங்களூரு வாசம்.

எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை என்றாலும், இருக்கும் வரைக்கும் "நம்ம ஊரு" என்ற நெனப்போடு சுற்றிக் கொள்ளலாம். கொஞ்சம் மழை, கொஞ்சம் வெயில், வெட்டப்படாமல் தப்பித்து இன்றோ நாளையோ என்று ஐ.டி ஊழியரை போல பயந்து கொண்டிருக்கும் அகன்ற மரங்கள் என்று எல்லாமே எனக்கு ஹைதராபாத்தை விட வித்தியாசமாக இருக்கின்றன.

அமச்சி ஊரிலிருந்து வந்திருக்கிறார். நைலான் பெல்ட் கட்டில் ஒன்று வாங்க வேண்டும். தொள்ளாயிரம் ரூபாய் என்றார்கள். குறைத்துக் கேட்கலாம் என்று எழுநூற்றைம்பது என்றேன். எடுத்துக் கொடுத்து விட்டார்கள். பெருமையாக அப்பாவிடம் சொன்னேன். நானூறுதானே நம் ஊரில் என்றார். எந்த விதத்திலும் நான் புத்திசாலி என்று நினைத்து விடாமல இருக்குமாறு இந்த உலகம் பார்த்துக் கொள்கிறது.

மூன்றாண்டுகளுக்கு முன்பாக எதற்காக எழுத வேண்டும் என்ற நண்பரிடம், "ஆத்ம திருப்தி" க்கு என்று பொய் சொல்லி பெருமைப் பட்டுக் கொண்டேன். என் பெயரை கொஞ்சம் பேருக்கு தெரியும் என்பதில் வரும் கர்வமும், என‌க்கும் எழுத வரும் என்ற பெருமையும்தான் எழுதுவ‌த‌ற்கான‌ அடிப்ப‌டையாக‌ இருந்த‌து.

பின்ன‌ர் அந்த‌ நோக்க‌ம் ப‌ல்வேறு திசைக‌ளில் சுற்றி வ‌ந்து கொண்டிருக்க‌, இந்த‌ சுற்ற‌லின் போக்கிலேயே எழுதுப‌வ‌னின் வேக‌ம் இருக்கிற‌து.

என்னைப் பொறுத்த‌வ‌ரைக்கும் க‌விதை என்ப‌து கையெழுத்துப் ப‌ழ‌க்க‌ம் போன்ற‌து. தொட‌ர்ந்து எழுத‌ வேண்டும். இல்லையென்றால் இதுவ‌ரையிலும் வ‌டித்த‌ அமைப்பு சிதைந்து வேறொரு வ‌டிவ‌த்துக்கு வ‌ந்துவிட‌லாம். புதுவ‌டிவ‌ம் வெற்றிய‌டைய‌லாம் அல்ல‌து தோல்விய‌டைய‌லாம்.

ஸ்ரீநேச‌ன் என்ன‌வெல்லாம் தோன்றுகிறதோ அதை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டேயிருங்க‌ள் அது க‌விதையாக‌ இல்லாவிடினும் ப‌ர‌வாயில்லை என்றார். அதுவெல்லாம் "எச‌வாக‌வில்லை".

ஆறு மாதங்களாக எதுவுமே எழுதவில்லை.நான் எழுதாததால் ஒன்றுமே மாறிவிடப்போவதில்லை. யாராவது எங்காவது எதையாவது எழுதிக் கொண்டிருப்பார்கள். எவராவது அதைப் படித்து எழுதியவரின் பெயரை உச்சரிப்பார்கள்.

எழுதுவ‌து என்ப‌து தொட‌ர்ச்சியான‌ உழைப்பு. வாசிப்பும், எழுத்தும் தொட‌ர்ந்து இருந்தால் ம‌ட்டுமே சாத்திய‌ம்.

க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ ப‌திவிட்ட‌வை எல்லாம் ஏற்க‌ன‌வே எழுதிய‌ ப‌ழைய‌ க‌விதைக‌ள். நேற்று முன் தின‌ம் ஒரு க‌விதை எழுத‌ முடிந்த‌து. இது புதுசு!



உயிர் க‌சியும் ம‌ர‌ம்

மரம் ஒன்றை
வெட்டியெறிகிறார்கள்.

குழ‌ந்தையின் க‌ழுத்தை பிளேடால் அறுக்கிறார்கள் என்றேன்
கிழ‌வியை கோடாரியால் பிள‌க்கிறார்க‌ள் என்றாய்

குழ‌ந்தையின் க‌ழுத்தை பிளேடால் அறுப்ப‌தும்
கிழ‌வியை கோடாரியால் பிள‌ப்ப‌தும்
உனக்கும் எனக்கும் புதிதாக‌ தோன்றாத‌தால்
வேறொன்றை யோசிக்க வேண்டிய நிர்பந்தம்
நமக்கு.

அவசரமாக எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

வெட்ட‌ப்படும் மரமொன்று
நாம் த‌னித்திருக்கும் மாலையை
ஆக்கிர‌மிக்க‌ விரும்பாத
இருவ‌ருமே
பேச்சை மாற்ற முயல்கிறோம்.

முத்த‌ம் ப‌ற்றி நான் ஆர‌ம்பிக்கிறேன்
ஸ்ப‌ரிச‌ம் ப‌ற்றி நீ.

வெளிச்ச‌ம்
வ‌டிய
இழந்த குஞ்சுகளையும்
கூடுகளையும்
தேடும்
ப‌ற‌வைக‌ளின்
ப‌த‌ட்ட‌ம்
ந‌ம் த‌னிமையை க‌லைக்கிற‌து.

இன்று
இந்த‌ மாலையை
இந்த‌ இட‌த்தை
விரைந்து கட‌க்க‌ பிரார்த்திக்கிறோம்.

நேர‌மாவதாக சொல்கிறாய்
நானும் ஆய‌த்த‌மாகிறேன்.

முத்த‌ம் இல்லாத‌
இந்த‌ மாலையில்
இற‌ந்து கொண்டிருக்கும்
இந்த‌ மர‌த்தை
பார்த்துவிட்டு ந‌க‌ர்கிறோம்.

ந‌ம் முத்த‌ங்க‌ளின்
சாட்சி
உயிர்
க‌சிந்து கொண்டிருக்கிற‌து.

2 எதிர் சப்தங்கள்:

பாலகுமார் said...

//எந்த விதத்திலும் நான் புத்திசாலி என்று நினைத்து விடாமல இருக்குமாறு இந்த உலகம் பார்த்துக் கொள்கிறது.//

உங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு..

anujanya said...

வாவ், கவிதை ரொம்பப் பிடிக்கிறது மணி. அவ்வப்போதாவது எழுதிக் கொண்டிருங்கள்.

அனுஜன்யா