May 27, 2009

பனி ஊசியில் நீங்கள் செய்யும் சில பரிசோதனைகள்


குரூரத்தின் கிளைகளுடைய‌
மரமொன்றில் வசித்துவரும்
உங்களிடம் பனி ஊசி ஒன்றிருக்கிறது.

வெளிக்காற்றில் உருகிவிடாத
அதை
உங்களிடம் அகப்படுபவர்களிடம்
பரிசோதிக்கிறீர்கள்-
அது
உருகுவ‌தில்லை
என்னும்
ஆண‌வத்தோடு.

முன்னொரு நாள் ஒருவனின் நகக் கண்ணில் நுழைத்தீர்கள்
பிறகு அவளது ஆசனவாயில் ஒருமுறை
நேற்று கிடைத்த‌வ‌னின் ஆணுறுப்பிலும் முய‌ன்று பார்த்தீர்க‌ள்.

உங்க‌ளுக்குத் தெரிந்திருக்க‌ வாய்ப்பில்லை-
மூன்று இர‌வுக‌ளாக‌
உற‌க்க‌ம் விழித்த‌வ‌னின்
சிவ‌ந்த‌ க‌ண்க‌ளை
நீங்க‌ள்
பாக்கி வைத்திருக்கும் வ‌ரை
அந்த‌ ஊசிக்கு
ஆயுள்
என்று.

0 எதிர் சப்தங்கள்: