May 29, 2009

உயிர் க‌சியும் ம‌ர‌ம்

இப்போதைக்கு பெங்களூரு வாசம்.

எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை என்றாலும், இருக்கும் வரைக்கும் "நம்ம ஊரு" என்ற நெனப்போடு சுற்றிக் கொள்ளலாம். கொஞ்சம் மழை, கொஞ்சம் வெயில், வெட்டப்படாமல் தப்பித்து இன்றோ நாளையோ என்று ஐ.டி ஊழியரை போல பயந்து கொண்டிருக்கும் அகன்ற மரங்கள் என்று எல்லாமே எனக்கு ஹைதராபாத்தை விட வித்தியாசமாக இருக்கின்றன.

அமச்சி ஊரிலிருந்து வந்திருக்கிறார். நைலான் பெல்ட் கட்டில் ஒன்று வாங்க வேண்டும். தொள்ளாயிரம் ரூபாய் என்றார்கள். குறைத்துக் கேட்கலாம் என்று எழுநூற்றைம்பது என்றேன். எடுத்துக் கொடுத்து விட்டார்கள். பெருமையாக அப்பாவிடம் சொன்னேன். நானூறுதானே நம் ஊரில் என்றார். எந்த விதத்திலும் நான் புத்திசாலி என்று நினைத்து விடாமல இருக்குமாறு இந்த உலகம் பார்த்துக் கொள்கிறது.

மூன்றாண்டுகளுக்கு முன்பாக எதற்காக எழுத வேண்டும் என்ற நண்பரிடம், "ஆத்ம திருப்தி" க்கு என்று பொய் சொல்லி பெருமைப் பட்டுக் கொண்டேன். என் பெயரை கொஞ்சம் பேருக்கு தெரியும் என்பதில் வரும் கர்வமும், என‌க்கும் எழுத வரும் என்ற பெருமையும்தான் எழுதுவ‌த‌ற்கான‌ அடிப்ப‌டையாக‌ இருந்த‌து.

பின்ன‌ர் அந்த‌ நோக்க‌ம் ப‌ல்வேறு திசைக‌ளில் சுற்றி வ‌ந்து கொண்டிருக்க‌, இந்த‌ சுற்ற‌லின் போக்கிலேயே எழுதுப‌வ‌னின் வேக‌ம் இருக்கிற‌து.

என்னைப் பொறுத்த‌வ‌ரைக்கும் க‌விதை என்ப‌து கையெழுத்துப் ப‌ழ‌க்க‌ம் போன்ற‌து. தொட‌ர்ந்து எழுத‌ வேண்டும். இல்லையென்றால் இதுவ‌ரையிலும் வ‌டித்த‌ அமைப்பு சிதைந்து வேறொரு வ‌டிவ‌த்துக்கு வ‌ந்துவிட‌லாம். புதுவ‌டிவ‌ம் வெற்றிய‌டைய‌லாம் அல்ல‌து தோல்விய‌டைய‌லாம்.

ஸ்ரீநேச‌ன் என்ன‌வெல்லாம் தோன்றுகிறதோ அதை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டேயிருங்க‌ள் அது க‌விதையாக‌ இல்லாவிடினும் ப‌ர‌வாயில்லை என்றார். அதுவெல்லாம் "எச‌வாக‌வில்லை".

ஆறு மாதங்களாக எதுவுமே எழுதவில்லை.நான் எழுதாததால் ஒன்றுமே மாறிவிடப்போவதில்லை. யாராவது எங்காவது எதையாவது எழுதிக் கொண்டிருப்பார்கள். எவராவது அதைப் படித்து எழுதியவரின் பெயரை உச்சரிப்பார்கள்.

எழுதுவ‌து என்ப‌து தொட‌ர்ச்சியான‌ உழைப்பு. வாசிப்பும், எழுத்தும் தொட‌ர்ந்து இருந்தால் ம‌ட்டுமே சாத்திய‌ம்.

க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ ப‌திவிட்ட‌வை எல்லாம் ஏற்க‌ன‌வே எழுதிய‌ ப‌ழைய‌ க‌விதைக‌ள். நேற்று முன் தின‌ம் ஒரு க‌விதை எழுத‌ முடிந்த‌து. இது புதுசு!உயிர் க‌சியும் ம‌ர‌ம்

மரம் ஒன்றை
வெட்டியெறிகிறார்கள்.

குழ‌ந்தையின் க‌ழுத்தை பிளேடால் அறுக்கிறார்கள் என்றேன்
கிழ‌வியை கோடாரியால் பிள‌க்கிறார்க‌ள் என்றாய்

குழ‌ந்தையின் க‌ழுத்தை பிளேடால் அறுப்ப‌தும்
கிழ‌வியை கோடாரியால் பிள‌ப்ப‌தும்
உனக்கும் எனக்கும் புதிதாக‌ தோன்றாத‌தால்
வேறொன்றை யோசிக்க வேண்டிய நிர்பந்தம்
நமக்கு.

அவசரமாக எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

வெட்ட‌ப்படும் மரமொன்று
நாம் த‌னித்திருக்கும் மாலையை
ஆக்கிர‌மிக்க‌ விரும்பாத
இருவ‌ருமே
பேச்சை மாற்ற முயல்கிறோம்.

முத்த‌ம் ப‌ற்றி நான் ஆர‌ம்பிக்கிறேன்
ஸ்ப‌ரிச‌ம் ப‌ற்றி நீ.

வெளிச்ச‌ம்
வ‌டிய
இழந்த குஞ்சுகளையும்
கூடுகளையும்
தேடும்
ப‌ற‌வைக‌ளின்
ப‌த‌ட்ட‌ம்
ந‌ம் த‌னிமையை க‌லைக்கிற‌து.

இன்று
இந்த‌ மாலையை
இந்த‌ இட‌த்தை
விரைந்து கட‌க்க‌ பிரார்த்திக்கிறோம்.

நேர‌மாவதாக சொல்கிறாய்
நானும் ஆய‌த்த‌மாகிறேன்.

முத்த‌ம் இல்லாத‌
இந்த‌ மாலையில்
இற‌ந்து கொண்டிருக்கும்
இந்த‌ மர‌த்தை
பார்த்துவிட்டு ந‌க‌ர்கிறோம்.

ந‌ம் முத்த‌ங்க‌ளின்
சாட்சி
உயிர்
க‌சிந்து கொண்டிருக்கிற‌து.

May 28, 2009

ப்ரனீதா வேறு ஊருக்குச் செல்கிறாள்


ம‌ழை பெய்து
தெளிந்திருந்த‌ வான‌த்தில்
மூன்று ப‌ற‌வைக‌ள்
ப‌ற‌ந்து சென்று கொண்டிருந்தன.

ப்ர‌னீதா
வேறு ஊருக்குச் செல்வ‌தாக‌ச் சொன்னாள்.
கார‌ண‌ம் எதுவும் சொல்ல‌வில்லை.

புன்ன‌கை
க‌ண்ணீர்
துக்க‌ம்
எதுவுமில்லாமல்
மெள‌ன‌மாயிருந்தேன்.

ந‌னைந்திருந்த‌ செடியில்
இலைக‌ளை ப‌றித்துக் கொண்டிருந்தவள்-
நேர‌மாகிவிட்ட‌து
என்று
ந‌க‌ர‌த் துவ‌ங்கினாள்.

மூன்று ப‌ற‌வைக‌ள்
இருந்த‌ இட‌த்தில்
மேக‌த்திட்டு
வ‌ந்திருந்த‌து.

May 27, 2009

அகிம்சாவாதிகளுக்கு...உங்க‌ள் வாச‌க‌ன்

அன்புள்ள அகிம்சாவாதிகளுக்கு,

வணக்கம்.

வன்முறை தோற்கும் என திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள்.

நல்லது. மெத்தப்படித்த பெரு மேதைகள் சொன்னால் சரியானதாகத் தான் இருக்கும். ஆனால் தொடர்ச்சியாக உங்களின் எழுத்துக்களை தொடர்ச்சியாக வாசித்து உங்களுக்கு கடிதங்கள் எழுதிவரும் கூட்டத்திற்கு சில பதில்கள் வேண்டும்.

1) ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதும், கொல்லப்பட்டதற்கான சுவடுகள் இல்லாமல் அழிக்கப்பட்ட பிறகும் உங்கள் கண் முன்னால் புத்தனும், காந்தியும்தான் நிழலாடுகிறார்களா?

2) நீங்கள் சொல்லும் அகிம்சை போராட்டம் ஈழத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆயுதப் போராட்டம் கடந்த முப்பது ஆண்டுகளாகத்தான். ஈழத்தில் அகிம்சை போராட்டம் சாதித்தது என்ன?

3) நீங்கள் எந்த ஆயுதத்தை எடுக்கப் போகிறீர்கள் என்பது எதிரியின் நிலைப்பாட்டை பொறுத்தது அல்லவா?

4) வெள்ளைக் கொடி ஏந்தி வருபவனை கண்மூடிச் சுடுபவர்களும், தமிழ் சிசு என்றால் வயிற்றைக் கீறி வெளியில் எறியும் கொடியவர்களும் நிறைந்த எதிரி குழாமுக்கு முன்னால் எந்த கோஷத்தை எழுப்ப முயல்வீர்கள்?

5) இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும் ஈழ விடுதலைக்கும் சில அடிப்படை வித்தியாசங்கள் கூடவா இல்லை?

6) வெள்ளையன், இந்திய இனம் பூண்டோடு அழிவதற்காக எந்த‌ முயற்சிகளையாவது எடுத்தானா?

7) சிங்கள அரசாங்கம் தமிழினம் அடுத்த தலைமுறையில் இல்லாமல் போவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்ததும் அதை ஆயுத போராட்டம் ஓரளவுக்காவது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் நீங்கள் அறிந்துள்ளீர்களா?

8) இந்தியாவில் சுபாஷ் சந்திரபோஸூம் இன்னும் சில தீவிரவாத கொள்கை உடைய சுதந்திர போராட்ட வீரர்களை அழித்தெறிய வெள்ளையன் எந்த பலாத்கார நாடுகளிடம் இராணுவ உதவி பெற்றான்?

9) முப்பது ஆண்டுகளாக போராளிகளிடம் மண் தின்ற சிங்க‌ள பேரின‌வாத‌ அர‌சுக்கு, இந்தியா, சீனா, பாகிஸ்தான் ம‌ற்றும் ர‌ஷ்யா போன்ற‌ நாடுக‌ள் ஆயுத‌ உத‌வி வ‌ழ‌ங்கி அழித்தொழிக்க‌ முய‌ன்ற‌ போதும் நீங்க‌ள் வ‌லைப்ப‌திவு ந‌ட‌த்தி தின‌மும் குறைந்த‌ ப‌ட்ச‌ம் ஒரு க‌டித‌மாவது ப‌திவேற்றி வ‌ந்தீர்க‌ள். அப்பொழுது இது பற்றியெல்லாம் நீங்கள் கொஞ்ச‌மும் ச‌ட்டை செய்யாத‌து ஏன்?

10) அழிவ‌து த‌மிழின‌ம் என்ப‌தையெல்லாம் விட்டு விடலாம். ஏனெனில் எழுத்தாள‌னுக்கு, இன‌ம், மொழி எல்லாம் எல்லைக‌ள் இல்லை அல்ல‌வா? ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ "ம‌னித‌ர்க‌ள்" இர‌த்த‌ ச‌க‌தியில் புர‌ளுகிறார்க‌ள். நீங்க‌ள் அந்த‌ இன‌த்தின் பிர‌திநிதிக‌ள் அழிக்க‌ப்ப‌ட்ட‌து ச‌ரி என்ப‌தை நிர்மாணிக்கிறீர்க‌ள். இன‌ம் அழிவ‌தை மறைத்து திசை திருப்ப‌ ந‌ட‌த்தப்படும் அர‌சிய‌ல் நாட‌க‌ங்க‌ளுக்கும், உங்க‌ளின் எழுத்திய‌ல் நாட‌க‌ங்க‌ளுக்குமான‌ வித்தியாச‌ம் என்ன? டைமிங் பதிவு என்பதைத் தவிர.

இது எல்லாம் உங்க‌ளுக்கு உறைக்காது என்றாலும்,பதிலை எதிர்பார்த்து.

அன்புட‌ன்,
உங்க‌ள் வாச‌க‌ன்.

பனி ஊசியில் நீங்கள் செய்யும் சில பரிசோதனைகள்


குரூரத்தின் கிளைகளுடைய‌
மரமொன்றில் வசித்துவரும்
உங்களிடம் பனி ஊசி ஒன்றிருக்கிறது.

வெளிக்காற்றில் உருகிவிடாத
அதை
உங்களிடம் அகப்படுபவர்களிடம்
பரிசோதிக்கிறீர்கள்-
அது
உருகுவ‌தில்லை
என்னும்
ஆண‌வத்தோடு.

முன்னொரு நாள் ஒருவனின் நகக் கண்ணில் நுழைத்தீர்கள்
பிறகு அவளது ஆசனவாயில் ஒருமுறை
நேற்று கிடைத்த‌வ‌னின் ஆணுறுப்பிலும் முய‌ன்று பார்த்தீர்க‌ள்.

உங்க‌ளுக்குத் தெரிந்திருக்க‌ வாய்ப்பில்லை-
மூன்று இர‌வுக‌ளாக‌
உற‌க்க‌ம் விழித்த‌வ‌னின்
சிவ‌ந்த‌ க‌ண்க‌ளை
நீங்க‌ள்
பாக்கி வைத்திருக்கும் வ‌ரை
அந்த‌ ஊசிக்கு
ஆயுள்
என்று.

May 8, 2009

ஆந்திர‌ அர‌சிய‌ல்: இதி சாலா ஹாட் ம‌ச்சி!

ஊறுகாய் அல்லது கோங்குரா சட்னியை வெறும் சாதத்தில் பிசைந்து மூக்கில் காரம் ஏற சாப்பிட்டால்தான் ஆந்திரக்காரர்களுக்கு சாப்பாடு, சாப்பாடு மாதிரி இருக்கும். உணவு என்றில்லை, இங்கு சினிமா, அரசியல் என்று அனைத்துமே காரமாகத்தான் இருக்கிறது. சினிமாவில் ஹீரோ தன் ஷூ காலில் வற மிளகாயை மிதித்து வில்லன் முகத்தில் ஓங்கி உதைக்க வேண்டும் அல்லது ஒரே படத்தில் முன்னூறு பேர்களையாவது படம் முடிவதற்குள் வெட்டியோ, சுட்டோ சாகடிக்க வேண்டும். இத்தகைய படங்களைத்தான், ஹீரோ அணிந்த உள்ளாடை உட்பட அனைத்தையும் காப்பியடித்து தமிழில் 'போக்கிரி' போன்ற‌ படங்களை எடுக்கிறார்கள்.

அரசியல் காரம் அதை விட அதிகம். தேர்தல் சூடு ஆந்திராவில் பொறி பறக்கிறது. தமிழகத்தைப் போன்ற கூட்டணி குழப்பம் எல்லாம் பெரிதாக எதுவும் இல்லை. காங்கிரஸ் ஒரு இசுலாமியக் கட்சியுடன்(எம்.ஐ.எம்) கூட்டணி வைத்திருக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி(டி.ஆர்.எஸ்) மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட்களை இணைத்து ஒரு கூட்டணி அமைத்து 'மெகா கூட்டணி' என்று பெயர் சூட்டியிருக்கிறது. புதிதாக உருவாகி இருக்கும் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் தனித்து நிற்கிறது. தமிழகத்தை போலவே, பா.ஜ.கவை எல்லோருமே கழட்டி விட்டிருக்கிறார்கள்.

இந்த அரசியல் அரங்கில் சில‌ காமெடி காட்சிக‌ளும் உண்டு. என்.டி.ராம‌ராவை அவ‌ர‌து க‌டைசி கால‌த்தில் திரும‌ண‌ம் செய்து கொண்ட‌ ல‌ட்சுமி சிவ‌ பார்வ‌தி ஒரு க‌ட்சியை ந‌ட‌த்துகிறார். அனேக‌மாக‌ ப‌திவு செய்து சின்ன‌ம் பெற்ற 'ஒரு ந‌ப‌ர்' க‌ட்சி ஆந்திராவில் இதுவாக‌த்தான் இருக்க‌ முடியும். ந‌டிகை விஜ‌ய‌சாந்தி த‌னிக் க‌ட்சி தொட‌ங்கி கொஞ்ச‌ம் நாட்க‌ளில் தாக்கு பிடிக்க‌ முடியாம‌ல் தெலுங்கானா ராஷ்டிரிய‌ ச‌மிதியில் ஐக்கிய‌மாகியிருக்கிறார்.

வழக்கத்தை விடவும் இந்தத் தேர்தலில் மேக்கப் போட்ட சினிமா முகங்கள் அரசியல் மேடைகளில் அதிகமாக வலம் வருகின்றன. சிரஞ்சீவி த‌ன் க‌ட்சி ஊர்வ‌ல‌ங்க‌ளில் தொடையைத் த‌ட்டி எதிர் க‌ட்சியின‌ருக்கு ச‌வால் விட‌, அவ‌ர‌து த‌ம்பியும் ஆந்திர‌ க‌தாநாய‌க‌னுமான‌ ப‌வ‌ன் க‌ல்யாண் மீசையை முறுக்கி அடுத்த‌வ‌ர்க‌ளை மிரட்டுகிறார். காங்கிரஸ் ஆளும் இந்த மாநிலத்தின் முத‌ல‌மைச்ச‌ரான‌ ராஜ‌சேக‌ர‌ ரெட்டி 'ப‌ற‌க்கும் முத்த‌ங்களை' கூட்ட‌த்தின‌ருக்கு கொடுத்து சூடு கிளப்புகிறார்.

இந்த இரு அணியினரும் அட்டகாசம் செய்ய, ச‌ந்திர‌பாபு நாயுடுவுக்கு என்ன‌ செய்வ‌து என்று பெரும் குழ‌ப்பம். இதுவ‌ரைக்கும் இவரிடம் விறைத்துக் கொண்டு நின்ற‌ என்.டி.ராம‌ராவின் வாரிசுக‌ளான‌ ம‌கன்கள் பால‌கிருஷ்ணா,ஹ‌ரி கிருஷ்ணா(இவ‌ருக்கு சிம்ர‌ன் ஜோடியாக‌ ந‌டித்து ஆந்திர‌வாலாக்க‌ளுக்கு சிரிப்பூட்டினார்), பேரன்கள் ஜூனிய‌ர் என்.டி.ஆர், க‌ல்யாண் ராம் என்ற‌ சினிமா ந‌ட்ச‌த்திர வாரிசுகளிடம் கெஞ்சிக் கூத்தாடி, க‌ள‌மிற‌க்கி ச‌ண்டைக்கு தயாராகிவிட்டார்.

சந்திரபாபு என்.டி.ஆரின் குடும்பத்துக்கு வெளியாள் இல்லை. என்.டி.ஆரின் மகளைத் திருமணம் செய்திருக்கிறார். என்.டி.ஆர் லட்சுமி சிவபார்வதி திருமணம் நடந்த சமயத்தில், கோபமடைந்த சந்திரபாபு, எம்.எல்.ஏக்களை திரட்டி, கட்சியைத் தன்னால்தான் காப்பாற்ற முடியும் என்று முதலமைச்சர் ஆனார். தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக முதல்வராகவும் இருந்தார்.

என்.டி.ஆரின் இன்னொரு மகளான புரண்டேஸ்வரி தற்பொழுது காங்கிரஸில் மத்திய அமைச்சராக இருக்கிறார். இவர், யாரும் சந்திரபாபு நாயுடுவை நம்ப வேண்டாம் என்றும், அவர் ஒரு துரோகி என்றும், தன் சகோதரர்கள் அவரை நம்பக் கூடாது என்றும் அடிக்கடி அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் யாரும் பெரிதாக சட்டை செய்வதாக தெரியவில்லை. குடும்பமே தெலுங்கு தேசம் என்றாலும் இந்த 'சின்னம்மா' தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நிற்கிறார். குடும்பமே திரண்டு அந்தத் தொகுதியில் ஆதரவளிக்கிறது.

இவையெல்லாம் இப்படியிருக்க, ந‌டிகை ரோஜாவின் அல‌ப்ப‌ல் தான் ஆந்திர அரசியலின் 'டாப்ட‌க்கர்' வ‌கைய‌றா. பெண்க‌ளை கூட்ட‌ம் சேர்த்துக் கொண்டு ஒயின்ஷாப்க‌ளை அடித்து நொறுக்குவ‌து, மேடைக‌ளில் எதிர்க‌ட்சியின‌ரின் அந்த‌ர‌ங்க‌க‌ளை வ‌கை தொகையில்லாம‌ல் கிழித்து தொங்க‌விடுவ‌து என்று தொட‌ர்ச்சியாக‌ ப‌த்திரிக்கைக‌ளில் த‌ன் முக‌த்தை வ‌ர‌ வைத்துக் கொண்டிருந்த‌வ‌ரை தெலுங்கு தேச‌ம் இந்த‌ முறையும் வேட்பாள‌ராக்கியிருக்கிற‌து.

தெலுங்கு தேசம் என்.டி.ஆரின் வாரிசுகளை களமிறக்க, (ஜூனியர் என்.டி.ஆர் செல்லுமிடங்களில் எல்லாம் பெண்கள் கூட்டம் அள்ளுகிறது என்று ஆந்திர பத்திரிக்கைகள் எழுதுகின்றன), பிரஜா ராஜ்ஜியம் கட்சியே நடிகரால் நடத்தப்பட, காங்கிரஸ் மட்டும் அரிதாரமில்லாத முகங்களை வைத்துக் கொண்டிருப்பதற்கு விரும்பவில்லை.

'இது தாண்டா போலீஸ்', 'எவனாயிருந்தா எனக்கென்ன‌' போன்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த படங்களின் கதாநாயகன் டாக்டர்.ராஜசேகரை பயன்படுத்த காங்கிரஸ் முயன்றது. அவரும் ஆளுங்கட்சியின் ஆதரவிருப்பதாக நினைத்துக் கொண்டு ஆந்திராவின் உட்பகுதியில் நடந்த ஒரு கூட்டத்தில் சிரஞ்சீவி குறித்து எக்குத்தப்பாக பேசிவிட்டார். அடுத்த நாள் அதிகாலையில் ஹைதராபாத் வந்த அவரது காரை, சிரஞ்சீவியின் ரசிகர்கள், ஏர்போர்ட்டில் துவங்கி அவரது வீடு வரைக்கும் துரத்தி துரத்தி அடித்தார்கள். கட்டுகளோடு மருத்துவமனையில் படுத்திருந்த அவரை சிரஞ்சீவி சென்று பார்த்து மன்னிப்புக் கேட்டார். இது சிரஞ்சீவிக்கு 'ரொம்ப நல்லவர்' என்ற பட்டத்தை வாங்கிக் கொடுப்பதற்கான அனைத்து முகாந்திரங்களையும் அமைத்துக் கொடுத்தது. உஷாரான காங்கிரஸ், ராஜசேகரை அதற்கு பிறகு முன்னிலைப்படுத்தவில்லை. கனவு நாயகனான மகேஷ் பாபு மட்டுமே இப்பொழுது காங்கிரஸில் இருக்கும் முக்கியமான நடிகர்.

சினிமாக்காரர்கள் கிடைக்கவில்லை என்ற நிலையில் வலைவிரித்த காங்கிரஸிடம் அசாரூதின் என்ற மீன் சிக்கிக் கொண்டது. இசுலாமியர்கள் அதிகம் இருக்கும் ஒரு தொகுதியில் நிற்க வைக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், இப்பொழுது அவர் உத்தரப்பிரதேசத்தில் நிற்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் ஹைதராபாத்தை குறி வைத்ததாக தெரிகிறது. பரம்பரைச் சொத்தாக ஹைதராபாத்தை வைத்துக் கொண்டிருக்கும் எம்.ஐ.எம் அந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்கும் என்று தோன்றவில்லை.

ஆந்திரப் பிரதேசத்தை மூன்று மண்டலங்களாக பிரிக்கலாம். ஸ்ரீகாகுளம், மசூலிப்பட்டணம் உள்ளிட்ட 'கோஸ்டல் ஆந்திரா', வெடி குண்டு தயாரிப்பதே குடிசைத் தொழிலாக இருக்கும் கடப்பா, கர்நூல் உள்ளிட்ட 'ராயலசீமா', விஜயவாடா உள்ளிட்ட கிருஷ்ணா நதி பாயும் வளமான 'ஆந்திரா'. இவை தவிர்த்த வறண்ட பகுதியான தெலுங்கானா. இந்தத் தெலுங்கானாவில் தான் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன. அறுபது ஆண்டுகளாக தெலுங்கானாவை ஆளுங்கட்சிகள் எதுவுமே கண்டு கொள்ளவில்லை என்றுதான் இந்தப் பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி இந்தப் பகுதி மக்கள் போராடுகிறார்கள்.

வறுமைக்கும், செல்வத்துக்குமான வித்தியாசம் தமிழகத்தை விட ஆந்திராவில் அதிகம். அமெரிக்காவில் டாலர்களை சம்பாதிக்கும் இந்தியர்களிலும், எம்.எஸ் போன்ற‌ உயர்கல்வி படிக்கும் இந்தியர்களிலும் விகிதாச்சார அடிப்படையில் ஆந்திரர்களே அதிகம். இன்னொரு பக்கத்தில் திரைப்பட நட்சத்திரங்களை பார்த்து உருகும் மக்களின் எண்ணிக்கை ஆந்திராவில் மிக அதிகம்.இதனால்தான் ஆந்திர கட்சிகளின் கூட்டங்களில் சினிமாத்தன்மை மிக அதிகமாக இருக்கிறது. சினிமாவில் கதாநாயகன் பேசும் மிக ஆக்கிரோஷமான வசனங்களை கூச்சமே இல்லாமல் அரசியல் மேடைகளில் பேசுகிறார்கள். மக்களும் மிக ஆரவாரமாக கை தட்டுகிறார்கள்.

ஊழல் குற்றச்சாட்டுகளும் வாரிசு அரசியலும் ஆந்திர அரசியலின் மிகச் சாதாரணமான காட்சிகள்.சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜூவின் ஊழலில் இவருக்கு தொடர்பு இருப்பதாக அவரும், அவருக்கு தொடர்பு இருப்பதாக இவரும், சந்திரபாபுவும், ரெட்டியும் மாற்றி மாற்றி தூற்றிக் கொள்கிறார்கள். சந்திரபாபுவின் குடும்பம் பால்பண்ணை போன்ற பிசினஸ்களை கோடிக் கணக்கில் செய்து கொண்டிருப்பதாகவும், ராஜசேகர ரெட்டியின் குடும்பத்துக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமும், மீடியா பிசினஸ்களும் இருப்பதாக அறிக்கைகள் வருவது சர்வசாதாரணம். யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அரசியல்வாதி என்றால் ஆயிரம் கோடி என்பது சாதாரண தொகை என்ற மனநிலை மக்களுக்கு எப்பவோ வந்திருக்கிறது. ரெட்டியின் மகன் ஜெகன் இந்தத் தேர்தலில் லோக்சபாவிற்கு போட்டியிடுகிறார். சந்திரபாபுவின் மகன் லோகேஷ் இதுவரைக்கும் மேடையேறவில்லை. அன்புமணி எந்த‌ மேடையேறி மத்திய அமைச்சர் ஆனார்?

கொள்கை, சேவை என்ற‌ சொற்க‌ளை ம‌ட்டுமே உச்ச‌ரித்துக் கொண்டு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெய் பிர‌காஷ்நாராயண் 'லோக் ச‌ட்டா' க‌ட்சியை ந‌ட‌த்தி வ‌ருகிறார். அவ‌ர் கட்சி வெல்ல‌ வேண்டும், குறைந்தபட்சம் அவர்(ஜெ.பி) மட்டுமாவது வெல்லட்டும் என்று நிறைய‌ நப‌ர்க‌ள் பேசுவ‌தைக் கேட்க‌ முடிகிற‌து. ஆனால் 12 ச‌தவீத‌ வாக்குக‌ளுக்கு மேல் அவரது கட்சிக்கு ஏன் வ‌ருவ‌தில்லை என்றுதான் தெரிய‌வில்லை. த‌மிழக‌த்தின் த‌ர‌ம் தாழ்ந்த‌ அர‌சிய‌லுக்கு எந்த‌ வ‌கையிலும் ஆந்திர‌ அரசிய‌ல் குறைந்த‌த‌ல்ல‌ என்ப‌தால் ப‌ண‌ம், வ‌ன்முறை, ஆள் ப‌லம் போன்ற‌ வ‌ஸ்துக‌ளை மீறி முழுக்கை ச‌ட்டை, ஷூ அணிந்து சாதுவாக, தொடர்வண்டிகளில் வாக்கு சேக‌ரிக்கும் ஜெ.பி எல்லாம் ஜெயிப்ப‌து மிக‌ச் சிரம‌மான‌ விஷ‌ய‌ம் தான்.

அதிமுக மதச்சார்பற்ற கட்சி

இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தமிழக காங்கிரஸின் ஒரே 'விடிவெள்ளியுமான' ராகுல் காந்தியார் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் அதிமுகவுடனான கூட்டணிக்கான வாய்ப்புகள் இருப்பதாக கோடிட்டு காட்டியிருக்கிறார்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் எதற்காக இந்த செய்திகள்? யாரை குழப்புவதற்கு? "ஆறு மணிநேர உண்ணாவிரத தலைவர்" கலைஞரின் தூண்டுதலில் திமுக காங்கிரஸே இந்த தகிடுதத்தங்களை கிளப்பியிருக்கிறதா அல்லது திமுக வை கை கழுவ ராஜபக்ஷேவின் அக்கா மகள் சோனியா முடிவு செய்திருக்கிறாரா?

காங்கிரஸ் திமுக கூட்டணியை தமிழக மக்கள் இந்த தேர்தலில் துரத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் தென்பட ஆரம்பித்துவிட்டன.இதுவரை கொஞ்சம் ஒளிவட்டத்தோடு இருந்த விஜயகாந்த்தை இரு தலைவர்களும் கண்டு கொள்வதாகக் கூட காட்டிக் கொள்ளாத நிலையில் போட்டி வழக்கம் போலவே இரு முனை ஆகியிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு கூடும் கூட்டமும், அம்மையாரின் 'நேற்று முளைத்த' ஈழத் தமிழர் ஆதரவு கோஷமும் திமுக கூடாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கின்றன‌.

திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அடி வாங்குமென்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் காங்கிரஸின் "ராஜபக்ஷே அடி வருடித்தனம்" என்பது சொல்ல வேண்டியதில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ்‍ அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக கிளப்பி விட்டால், அதிமுகவை வெல்ல வைத்து காங்கிரஸோடு அவர்கள் கூட்டணி அமைத்து நம்மை முட்டாளாக்குவதற்கு பதிலாக, திமுகவையாவது ஜெயிக்க வைக்கலாம் என்று ந‌டுநிலை வாக்காள‌ர்க‌ள் நினைக்க‌லாம். த‌மிழ‌க‌த்தில் காங்கிர‌ஸ் தோற்றாலும் கூட‌ திமுக‌ வென்று ம‌த்தியில் காங்கிர‌ஸ் அர‌சு அமைய‌ திமுக‌ ஆத‌ர‌வ‌ளிக்க‌லாம்.

அல்ல‌து ராகுல் காந்தியும், ஷீலாவும் பேசிய‌து முழு உண்மையாக‌ அமையுமானால்தான் ப‌ய‌ம் தொற்றிக் கொள்கிற‌து.

"த‌னி ஈழ‌ம் அமைப்பேன்" என்று வாய்க்கு வாய் சொல்லிவிட்டு, வாக்குக‌ளையும் பெற்று விட்டு, ம‌த்தியில் காங்கிர‌ஸோடு ஜெய‌ல‌லிதா கை கோர்த்தால்.....

ஏமாளிக‌ள் த‌மிழ‌க‌ ம‌க்களும் ஈழத் தமிழர்கள் ம‌ட்டும‌ல்ல‌. எந்த‌க் கூட்ட‌ணிக்காக‌ த‌ன் "த‌மிழின‌ த‌லைவ‌ர்" என்ற‌ அடைமொழியை கூட‌ க‌ருணாநிதி இழ‌ந்தாரோ அவ‌ரும், திமுக‌ வும் கூட‌ மிக‌ப் பெரும் ஏமாளிக‌ள் ஆக‌க் கூடும்.

"ஜால்ரா ம‌க்க‌ள் க‌ட்சி" ராம‌தாஸுக்கு வெட்க‌ம், மான‌ம் எதுவும் இல்லை என்ப‌தால் மீண்டும் த‌ன் ம‌க‌னை ம‌ந்திரியாக்கி, "எந்திர‌ன்" ப‌ட‌ப் பெட்டியை காடுவெட்டி குருவை வைத்து தூக்க‌ச் சொல்வார்.

த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் த‌லையில் மிள‌காய் அரைத்துக் கொண்டே இருப்பார்க‌ள். இவ‌ர்க‌ளும் அவ்வ‌ப்போது 'பீல்' ப‌ண்ணி ம‌ற‌ந்து போவார்க‌ள்.