கவிஞர் அப்பாஸ் நேற்று( வெள்ளிக்கிழமை, 20 மார்ச்,2009)மரணம் அடைந்ததாக குறுஞ்செய்தியை தாராகணேசனும், மின்னஞ்சலை நரனும் அனுப்பி இருந்தனர்.
முதலில் இறந்தவன்,ஆறாவது பகல்,வரைபடம் மீறி , வயலட் நிற பூமி ஆகிய கவிதை தொகுப்புகள் வந்திருக்கின்றன.(வேறு தொகுப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை).
எனக்குத் தெரிந்த வரையிலும் வயலட் நிற பூமி மிகப் பரவலாக பேசப்பட்ட தொகுதி.
வயலட் நிற பூமி தொகுப்பிலிருந்து எனக்கு பிடித்தமான கவிதை இது. இந்தக் கவிதை மென்மையான காதலை சத்தமில்லாமல் சொல்கிறது.
நாம் சந்தித்துக் கொண்ட வேளை
நடுக்கம் உன்னைப் பற்றிக் கொள்ள
தெரிந்தும் தெரியாதது போல் நீ
அலுவலகம் பற்றி. தாமதமாய் வரும்
பஸ் குறித்து
நாம் பேசிக் கொண்ட வேளை
நீண்டு அழைக்கும்
உன் விரல் பற்ற நினைத்து
பற்றாமல் நானும்
பேச்சு நின்று தடைபட்ட கணத்தில்
கண்களில் வழியும் ஜூவாலையில்
கருகி விலகும் மனதுடன் நீயும்
வரும் பகல் அறியாது
பிரிந்து விலகினோம்.
*இக்கவிதையின் ஆழம் புரிந்து கொள்ள எஸ்.எம்.எஸ், Chat என்று எதிர்பாலினரிடம் என்ன வேண்டுமானாலும் பேச முடியும் என்ற சுதந்திர உலகத்தில் இருந்து வெளி வருகிறேன்.