Mar 31, 2009

பொருளாதார மந்தமும் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையும்

இன்பர்மேஷன் டெக்னாலஜிக்கு என்ன ஆகிறது? வேலையை விட்டு சிலரை அனுப்புகிறார்களாமே?சாஃப்ட் வேர் விழுகிறதா? விழுந்து விடுமா? விழுந்துவிட்டதா? எழுந்து விடுமா? எத்தனை கேள்விகள். இன்றைய நிலையில் எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் ஒரே பதில்தான்."தெரியாது".

இந்திய தேசத்தில் தொண்ணூறுகளில் ஐடி கொடி, டாலர்களும் யூரோக்களும் வீசிய காற்றில், கையில் பிடிக்க முடியாத அளவிற்கு பறக்கத் துவங்கியது. 
அதுவும் 2000 ஆம் ஆண்டிற்கு பிறகான இந்திய ஐடியின் வளர்ச்சி அபரிமிதமானது.  இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

 இந்திய ஐடி நிறுவனங்கள் செய்து வரும் ப்ராஜக்ட் வேலைகளில் அமெரிக்காவிலிருந்து 60% மும், பிரிட்டனிலிருந்து 18% மும், மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து 12% மும் வந்து கொண்டிருக்கிறது. உலகின் பிற‌ அனைத்து பகுதிகளில் இருந்தும் வரும் ஐடி ப்ராஜக்ட்களின் அளவு வெறும் 10% மட்டுமே. ஏன் மற்ற நாடுகளை இந்திய ஐ.டி நிறுவனங்கள் கண்டு கொள்ளவில்லை என்பதற்கான காரணங்கள் நிறைய இருந்தாலும், சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்ககாரன் கொட்டிக் கொடுக்கும் போது எதற்காக மற்றவர்கள் பின்னாடி அலைய வேண்டும் என்பதுதான். 

தங்களிடம் இருக்கும் ஆட்கள் செய்து முடிக்க முடியாத அளவுக்கு ப்ராஜக்ட்களை வைத்துக் கொண்டிருந்த இந்திய நிறுவனங்கள், தொடர்ச்சியாக‌ புதிய ஆட்களை வேலைக்கு எடுத்து வந்தன. ஐடி வல்லுனர்கள் எத்தனை இலட்சம் சம்பளமாக கேட்டாலும் கொடுப்பதற்கு நிறுவனங்கள் தயாராக இருந்தன. அந்த நிலை கொஞ்சமாக மாறத் துவங்கியது. காரணம்,  இந்தியாவில் குவிந்து கொண்டிருந்த ஐடி ப்ராஜக்ட்களின் அளவு  2008ன் இரண்டாவது பாதியில் இருந்து குறையத் துவங்கின.

2008 ஆம் ஆண்டு பிற்பகுதியில் அமெரிக்காவில் வீடுகளின் விலை வீழ்ச்சியடையத் துவங்கியது. வீட்டுக் கடன்களை அள்ளிக் கொடுத்திருந்த அமெரிக்க வங்கிகளுக்கு பணம் வந்து சேரவில்லை. நிதி நிறுவனங்கள் வீடுகளை ஜப்தி செய்து விற்றாலும் கொடுத்திருந்த கடனை விட குறைந்த மதிப்பில் வீடுகள் விற்கப்பட்டதால் வங்கிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.  இந்த Subprime Mortage crisis தான் Recession என்னும் பொருளாதார மந்த நிலையின் தொடக்கப் புள்ளி. 
 
அமெரிக்க பொருளாதார மந்தத் துவக்கத்தை இப்ப‌டியும் சொல்ல‌லாம்... மிக‌ப் பெரிய‌ சுத்திய‌ல் கொண்டு அமெரிக்காவில் உள்ள வீடுகளின் மதிப்பின் (Property value) த‌லையில் ஓங்கி ஒரு அடி அடித்தாகிவிட்ட‌து. அத‌ன் அதிர்ச்சி வ‌ட்ட‌,வ‌ட்ட‌மாக நகர்ந்து ஒவ்வொரு துறையாக‌ தாக்கத் துவங்கியது. முதலில் நிதி நிறுவனங்கள் அடுத்த‌தாக‌ ஆட்டோமொபைல், அடுத்த‌தாக‌ உற்ப‌த்தி.  இப்ப‌டி ப‌டிப்ப‌டியாக‌ ஆர‌ம்பித்த‌ பொருளாதார தாக்குத‌ல் அமெரிக்காவோடு நின்றிருக்க‌லாம். ஆனால் ஒவ்வொரு நாடும் தாங்களும் பொருளாதார‌ வீழ்ச்சியை ச‌ந்திப்ப‌தாக அடுத்தடுத்து க‌த‌ற‌த் துவ‌ங்கின‌.

அமெரிக்காவை தாண்டி ஏன் பிற நாடுகளும் பாதிக்கப்பட வேண்டும்? கார‌ணம் மிக‌ எளிது. தாராள‌மயமாக்க‌லும், த‌னியார் ம‌ய‌மாக்க‌லும் உல‌கில் துவ‌ங்கிய‌ போது கிட்ட‌த்த‌ட்ட‌ அனைத்து நாடுக‌ளும் இந்தக் கொள்கைகளை இரு கரம் விரித்து வரவேற்றன‌‌. க‌ம்யூனிஸ்ட் என்று அறிவித்துக் கொண்ட‌ சீன அரசு உட்பட.

அமெரிக்கர்க‌ளால், அவ‌ர்க‌ளிட‌ம் இருந்த‌ பொருளாதார‌ ச‌க்திக்கும், வாங்கும் திற‌னுக்கும் எத‌னை வேண்டுமானாலும் வாங்க‌ முடிந்த‌து. பொருட்களை வாங்கித் தள்ளினார்கள். த‌ன‌து ம‌க்க‌ளின் வாங்கும் வேட்கையை நிறைவேற்ற‌ பிற‌ நாட்டு பொருட்க‌ளை த‌ங்க‌ள் நாட்டில் விற்ப‌த‌ற்கு அமெரிக்கா அனும‌தித்த‌து.

சீனா போன்ற‌ நாடுக‌ள் தங்களின் பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் துவங்கின. அதே சமயம் த‌ங்க‌ளின் உற்ப‌த்தியை அதிக‌ரிக்க‌த் தேவையான‌ க‌ருவிக‌ளை ஜெர்ம‌னி போன்ற‌ நாடுக‌ளில் இருந்து இற‌க்கும‌தி செய்தன.  நிறுவ‌னங்க‌ளின் எண்ணெய் ப‌சிக்கு எண்ணெய் உற்ப‌த்தி செய்யும் ம‌த்திய‌ ஆசிய‌ நாடுக‌ள் தீனி போட்டன. இவ்வாறாக உலக நாடுகள் ஒன்றையொன்று சார்ந்து அசுர வேகத்தில் வளரத் துவங்கின. தகவல் தொடர்புகள் அனைத்தையும் சாத்தியமாக்கியது.

இந்த‌ வ‌ர்த்த‌க‌ம் ப‌ர‌ப்ப‌ர‌ப்படைந்ததால், நிறுவ‌ன‌ங்க‌ள் த‌ங்க‌ளை நிலை நிறுத்திக் கொள்ளவும், எதிர்கால‌ வ‌ள‌ர்ச்சியை நினைவில் வைத்தும் தங்க‌ளின் த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌த்திற்கான‌ செல‌வினை அதிக‌ரித்த‌ன‌. த‌ங்க‌ளின் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கான‌ இணைய‌த‌ளங்க‌ள், ஆன்லைனில் த‌ங்க‌ளின் பொருட்க‌ளை வாங்குவ‌த‌ற்கான‌ வ‌ச‌தி என்று தேவைக‌ள் பெருகப் பெருக‌, இந்திய‌ த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு பிராஜ‌க்ட்க‌ள் குவிய‌த் துவ‌ங்கின‌.

வளர்ந்த நாடுகள் த‌ங்க‌ள் நாடுக‌ளில் வைத்து ஐடி ப்ராஜக்ட்களை மேற்கொள்வ‌த‌ற்காக‌ ஒவ்வொரு தக‌வ‌ல் தொழில்நுட்ப‌ வ‌ல்லுன‌ருக்கும் நிறுவனங்கள் குறைந்த‌ப‌ட்ச‌ம் நான்காயிர‌ம் அமெரிக்க‌ டால‌ர்க‌ளை மாதச் ச‌ம்ப‌ள‌மாக‌ கொடுக்க‌ வேண்டி இருந்தது. இந்திய‌ ரூபாயில்  கிட்ட‌த்த‌ட்ட‌ இர‌ண்டு இல‌ட்ச‌ம். ப‌த்து வ‌ல்லுன‌ர்க‌ள் ப‌ணியாற்றினால் இருப‌து இல‌ட்சம் ரூபாய் அளவுக்கு சம்பளமாக மட்டுமே செலவு செய்ய வேண்டியிருந்தது.

இந்த‌ இட‌த்தில் இந்திய ஐடி நிறுவ‌ன‌ங்க‌ள் த‌ங்க‌ளிட‌ம் இருக்கும் ஆங்கில‌த் திற‌மையையும், ஐடி நிபுணர்களின் எண்ணிக்கையையும் காட்டி, இருபது இலட்ச ரூபாய் வேலையை ப‌தினைந்து இல‌ட்ச‌ ரூபாய்க்கு முடித்துத் த‌ருவ‌தாக‌ எடுத்துக் கொள்ள‌த் துவ‌ங்கின‌. ப‌த்து பேர் செய்யும் வேலையை, ப‌தினைந்து பேர்க‌ளை வைத்து செய்து கொடுத்த‌ன‌. இந்திய‌ வ‌ல்லுன‌ருக்கு ச‌ம்ப‌ள‌ம் ஐம்ப‌தாயிர‌ம் என்ற‌ ச‌ராச‌ரியில் கூட‌ ஏழ‌ரை இல‌ட்ச‌த்தில் காரிய‌த்தை முடித்த‌ன‌. இந்த‌ ப‌தினைந்து பேரில் ஓரிருவ‌ர் வேறு க‌ம்பெனிக்கு தாவி விடலாம் என்ப‌தால் 3,4 பேர்க‌ளை 'வெட்டியாக‌' அம‌ர்ந்து இருங்க‌ள், வேலை வ‌ந்தால் த‌ருகிறோம் என்று அவ‌ர்க‌ளுக்கும் ச‌ம்ப‌ள‌ம் கொடுத்து வ‌ந்த‌ன‌.

இன்ன‌மும் ஆறு அல்ல‌து ஏழு இல‌ட்சம் ரூபாய்கள் நிறுவ‌ன‌ங்க‌ளின் கைக‌ளில் இருந்த‌ன‌. வீட்டிற்கு கொண்டு போய் விடுவ‌த‌ற்கு டாக்ஸி, நிறுவ‌ன‌த்தில் ஏ.சி, காபி,டீ, ஸ்னாக்ஸ் என்று ப‌ணியாள‌ர்க‌ளை ராஜாவாக‌ வைத்துக் கொண்ட‌ன‌. அப்ப‌டியிருந்தும் நான்கு முத‌ல் ஐந்து இல‌ட்ச‌ங்க‌ளை மிச்ச‌ம் பிடித்து முத‌லாளிக‌ள் கொழுத்தார்க‌ள்.

இது ஒரு சின்ன‌க் க‌ண‌க்குத்தான். கோடிக்க‌ண‌க்கான‌ டாலர் ம‌திப்புள்ள‌ ப்ராஜ‌க்ட்க‌ள் இந்தியாவில் குவிந்த‌ன‌. இந்தியாவில் ஐடி நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ல‌ ல‌ட்ச‌ம் பேருக்கு வேலையும், கை நிறைய‌ ச‌ம்ப‌ள‌மும் கொடுத்த‌ன‌.
இந்திய ந‌டுத்த‌ர‌க் குடும்ப‌ங்க‌ள் த‌ன‌து ம‌க‌னையும் ம‌க‌ளையும் ஐடி நிபுண‌ராக்கி பெருமை ப‌ட்டுக் கொண்ட‌து. பெருந‌க‌ர‌ங்க‌ளின் மால்க‌ளும், ம‌ல்டிப்ள‌க்ஸ் தியேட்ட‌ர்க‌ளும் ஒரு சாராருக்கு ச‌ர்வ‌சாதார‌ண‌மான‌து.

இத‌ன் ம‌றைமுக‌ விளைவுக‌ள் இந்தியா முழுவ‌தும் எதிரொலித்த‌து. ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு இர‌த்தின‌க் க‌ம்ப‌ள‌ம் விரித்த இந்திய‌ அர‌சும் மாநில‌ அர‌சுக‌ளும் உள்நாட்டு க‌ட்ட‌மைப்புக‌ளை விரிவுப‌டுத்தின‌. கோடிக்க‌ண‌க்கான‌ வேலைக‌ள் உருவாக‌வும், கோடிக்க‌ண‌க்கான‌ ரூபாய்கள் புழ‌ங்கவும் துவ‌ங்கின‌.

இது உழைக்கும் வ‌ர்க்க‌த்தின் இர‌த்த‌த்தை உறிஞ்சும் முத‌லாளிக‌ளை உருவாக்கின‌ என்றாலும் ம‌க்க‌ளும் த‌ங்க‌ளின் உழைப்புக்கான‌ வ‌ருவாயை ஈட்டினார்க‌ள். ஆனால் எல்லாமே ஒரு ப‌குதியோடு நின்று விட்ட‌து. சேரியில் வாழ்ப‌வ‌ர்க‌ளோ, இன்னும் கீழ்ம‌ட்ட‌ ம‌க்க‌ளோ பெரிய‌ மாறுத‌ல் அடையவில்லை. இன்ன‌மும் சொல்ல‌ப்போனால் ச‌ம்பாதிப்ப‌வ‌னின் வ‌ருமான‌த்திற்கும், அத‌ற்கான‌ வாய்ப்பில்லாத‌வ‌னின் வருமான‌த்திற்குமான‌ வித்தியாச‌ம் மிக‌ப் பெரிதான‌து.

இந்த நிலையில்தான் Recession என்ற‌ பொருளாதார‌ ம‌ந்த‌ம் ஆர‌ம்ப‌மான‌து. உல‌கின் வ‌ள‌ர்ந்த‌ நாடுக‌ள் த‌ங்க‌ளின் பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சி சுருங்க‌த் துவ‌ங்குவ‌தை உண‌ர‌த் துவ‌ங்கின‌.

ம‌க்க‌ளின் வாங்கும் ச‌க்தி குறைந்த‌து. நிறுவ‌ன‌ங்க‌ள் த‌ங்க‌ளின் உற்ப‌த்தியை குறைத்தன. நஷ்டத்தை தவிர்ப்பதற்காக அதிக‌ப்ப‌டியான‌ ஊழியர்க‌ளை ப‌ணிநீக்க‌ம் செய்த‌தோடு, த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌த்திற்கான‌ செல‌வின‌ங்க‌ளை குறைத்த‌ன‌. இந்திய‌ ஐடி நிறுவ‌ன‌ங்கள் ப்ராஜக்ட்களின் வருகை குறைந்து திண‌ற‌த் துவ‌ங்கின‌. ச‌ம்ப‌ள‌ உய‌ர்வு நிறுத்தி வைப்பு, வேலை நீக்க‌ம் போன்ற‌வை தின‌ச‌ரி செய்திக‌ளாகின. ஐடி ம‌க்க‌ளை குறிவைத்து க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ அபார்ட்மெண்ட்க‌ள் பாதியில் நிறுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌ அல்ல‌து விலை குறைக்க‌ப்ப‌டுகிற‌து. 

இந்திய ஐடி ஜாம்பவான்களான டிசிஎஸ்,விப்ரோ போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயில் பெரும்பகுதியை அமெரிக்க வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அளித்த‌ ப்ராஜக்ட்கள் மூலமாக ஈட்டி வந்தன.  வீட்டுக் கடன்களில் சிக்கிய அமெரிக்க‌ வங்கிகள் விழத் துவங்கிய போது, இந்திய நிறுவனங்கள் தாங்கள் விழித்துக் கொண்டதாகவும், பிற நாடுகளில் த‌ங்க‌ளுக்கான‌ வாடிக்கையாள‌ர்க‌ளை தேட‌ப் போவ‌தாக‌வும் அறிவித்த‌ன. 

ஆனால் பிற நாடுகளில் புது வாடிக்கையாளரை தேடுவது அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை. அமெரிக்க‌ப் பொருளாதார‌ம் என்ற‌ பூத‌த்தின் உண்மையான‌ முக‌ம் மிக‌ விரைவாக‌ உண‌ர‌ப் ப‌ட்ட‌து. உலகின் முக்கியமான நாடுகள் ஏதாவது ஒரு விதத்தில் அமெரிக்க பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டிருந்தது. அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவோடு பிணைக்கப்பட்டிருந்த நாடுகளில் எல்லாம் உணரப்பட்டது.

இந்த‌ பொருளாதார‌ வீழ்ச்சி உலகின் எந்த‌த் துறையையும் விட்டு வைக்க‌வில்லை என்ப‌துதான் ஹைலைட். டெக்ஸ்டைல், சுற்றுலா, விமானபோக்குவரத்து, நிதி நிர்வாகம், கட்டடத்துறை என்ற எல்லாமே விழுந்த அடியை வாங்கிக் கொண்டன.

அமெரிக்கா உட்ப‌ட‌ ப‌ல‌ நாடுக‌ள் பில்லிய‌ன் க‌ண‌க்கில் ப‌ண‌த்தை வாரி இறைத்து ம‌க்களை பொருட்களை  வாங்க‌ச் சொல்கின்றன. மக்கள் பொருட்களை வாங்கத் துவங்கினால் தேவை அதிகரிக்கும், இதனால் உற்பத்தி அதிகரிக்கும் என்ற சிறு சூட்சம்தான் இது.
 
இது 1930க‌ளில் வ‌ந்த‌ பொருளாதார‌ ம‌ந்த‌த் த‌ன்மையை ஒட்டி அன்றைய‌ அமெரிக்க‌ அதிப‌ர் உருவாக்கிய‌ திட்ட‌ம். பால‌ங்க‌ளும், அணைக‌ளும் அர‌சின் உத‌வியால் க‌ட்ட‌ப்ப‌ட்டு வேலைவாய்ப்புக‌ள் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ஆனால் அன்றைய‌ கால‌க‌ட்ட‌த்தில் பிற‌ நாடுக‌ள் அமெரிக்காவை சார்ந்திராத‌தால் இந்த‌த் திட்ட‌ம் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து வெளிவர அமெரிக்காவிற்கு போதுமான‌தாக‌ இருந்த‌து.

ஆனால் இன்றைய‌ நிலையில் எத்த‌னை பில்லிய‌ன் டால‌ர்க‌ளை கொட்டினாலும் அது எலிப் பொறியில் ஊற்றிய‌ நீராக‌லாம் என்று வ‌ல்லுன‌ர்க‌ள் ச‌ந்தேகிக்கிறார்க‌ள். ஏனென்றால் அமெரிக்காவை எத்த‌னை நாடுக‌ள், எத்த‌னை துறைக‌ள், எத்த‌னை ம‌க்க‌ள் சார்ந்திருக்கிறார்க‌ள் என்ற‌ விவ‌ர‌ங்க‌ள் யாருக்குமே முழுமையாக‌ தெரியாது. 800 பில்லிய‌ன் டால‌ர், அடுத்த‌ 800 பில்லிய‌ன் டால‌ர் என்று கொட்டுகிறார்க‌ள்.

இதுவரை தாராளமயமாக்கலை ஊக்குவித்து வந்த அமெரிக்கா தன் நாட்டினை மட்டும் காத்துக் கொள்வதற்கான செயல்பாடுகளை தற்பொழுது மேற்கொள்கிறது. உதாரணமாக 'Buy America' என்ற கொள்கை. இதன்படி அமெரிக்க அரசின் நிதியுதவியை பெற்றுக் கொள்வதாக இருந்தால்,  கட்டட‌ங்களை கட்டும் நிறுவனங்கள் அமெரிக்காவின் இரும்பினை மட்டுமே தங்கள் கட்டடங்களில் பயன்படுத்த‌ வேண்டும். இது அமெரிக்காவிற்கு இரும்பு ஏற்றுமதி செய்யும் சீனாவை பாதிக்கும்.  இதே போன்றுதான் வரிச்சலுகை கொள்கையும். தனக்கு வரிச் சலுகை கிடைக்க வேண்டுமானால் அந்த நிறுவனம் தனது நிறுவனத்தில் வேலைக்கு வெளி நாட்டினைச் சார்ந்தவர்களை நியமிப்பதையும், இந்தியாவிற்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ தனது பணிகளை ஏற்றுமதி செய்வதையும் நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்தால்  மட்டுமே அந்த நிறுவனத்திற்கு வரிச் சலுகை கிடைக்கும்.இப்படி தன் தேசத்தை மட்டுமே பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை ஒபாமா நிறைவேற்றி வருவது குறித்து பிற நாடுகள் காதில் புகை விடுகின்றன.

ஒவ்வொரு நாடும் தன்னை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளும் (Protectionism) என்னும் கொள்கையை எதிர்த்தாலும், கமுக்கமாக அதைத்தான் மேற்கொள்கின்றன. 
 
சீனா  தன்னை பொருளாதார பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பெரும் தொகையை Simulation package ஆக வெளியிட்டிருக்கிறது. தனது நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் நுகர்வுத்திறன் தன்னை காப்பாற்றிவிடும் என்று நம்புகிறது. மக்கள் தொகையில் சீனாவிற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத தேசமான இந்தியாவின் அரசு அறிவித்திருக்கும் (Simulation Package) நிதியுதவி கடலை மிட்டாய் வாங்கக் கூட உதவாது என்று சொல்கிறார்கள். தேர்தலை மனதில் வைத்து 7% வளர்ச்சி சர்வசாதாரணம் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் புள்ளி விவரங்கள் 5.5% கூட கஷ்டம் என்கின்றன.

இந்த பொருளாதார மந்தம் இப்படியே தொடராது,  2009 இரண்டாம் பாதியில் மந்தம் குறைந்து ம‌றுப‌டியும் ஒரு வ‌ள‌ர்ச்சி வ‌ரும் என்பாரும், 2010ல் தான் என்பாரும், 2011 வ‌ரை கூட மந்தத் தன்மை நீளும் என்போரும் உண்டு. ஆனால் யாருக்குமே திட்ட‌வ‌ட்ட‌மான‌ ப‌தில் தெரியாது. அனைத்தும் வெறும் யூக‌ம் ம‌ட்டுமே.

ஆனால் நாளை இந்த‌ உல‌க‌ம் அழிந்து விட‌ப் போவ‌தில்லை. எல்லாமே ந‌ம்பிக்கை சார்ந்த‌ விஷ‌ய‌ம். ம‌க்க‌ளுக்கு நாளையே கூட‌ ந‌ம்பிக்கை வ‌ந்து பொருட்க‌ளை வாங்க‌த் துவ‌ங்கினால் நிறுவ‌ன‌ங்க‌ள் செழிப்படைய‌லாம். பழைய வளர்ச்சி கதை தொடங்கலாம் என்றாலும் அது இப்போதைக்கு அருகில் இருக்கிறதா என்பதுதான் விடையில்லாத வினா.

Mar 21, 2009

க‌விஞ‌ர் அப்பாஸ்

கவிஞர் அப்பாஸ் நேற்று( வெள்ளிக்கிழமை, 20 மார்ச்,2009)மரணம் அடைந்ததாக குறுஞ்செய்தியை தாராகணேசனும், மின்னஞ்சலை நரனும் அனுப்பி இருந்தனர்.

முதலில் இறந்தவன்,ஆறாவது பகல்,வரைபடம் மீறி , வயலட் நிற பூமி ஆகிய கவிதை தொகுப்புகள் வந்திருக்கின்றன.(வேறு தொகுப்புக‌ள் ஏதேனும் இருக்கிற‌தா என்று தெரிய‌வில்லை).

என‌க்குத் தெரிந்த‌ வ‌ரையிலும் வய‌ல‌ட் நிற‌ பூமி மிக‌ப் ப‌ர‌வ‌லாக‌ பேச‌ப்ப‌ட்ட‌ தொகுதி.

வய‌ல‌ட் நிற‌ பூமி தொகுப்பிலிருந்து என‌க்கு பிடித்த‌மான‌ க‌விதை இது. இந்தக் கவிதை மென்மையான காதலை சத்தமில்லாமல் சொல்கிறது. 

நாம் ச‌ந்தித்துக் கொண்ட‌ வேளை
ந‌டுக்க‌ம் உன்னைப் ப‌ற்றிக் கொள்ள
தெரிந்தும் தெரியாத‌து போல் நீ
அலுவ‌ல‌க‌ம் ப‌ற்றி. தாம‌தமாய் வ‌ரும் 
ப‌ஸ் குறித்து
நாம் பேசிக் கொண்ட‌ வேளை
நீண்டு அழைக்கும் 
உன் விர‌ல் ப‌ற்ற நினைத்து 
ப‌ற்றாம‌ல் நானும்
பேச்சு நின்று த‌டைப‌ட்ட‌ க‌ண‌த்தில்
க‌ண்க‌ளில் வ‌ழியும் ஜூவாலையில்
க‌ருகி வில‌கும் ம‌ன‌துட‌ன் நீயும்
வ‌ரும் ப‌க‌ல் அறியாது
பிரிந்து வில‌கினோம்.

*இக்கவிதையின் ஆழம் புரிந்து கொள்ள எஸ்.எம்.எஸ், Chat என்று எதிர்பாலினரிடம் என்ன வேண்டுமானாலும் பேச முடியும் என்ற சுதந்திர உலகத்தில் இருந்து வெளி வருகிறேன்.

Mar 17, 2009

உப்பு : ரமேஷ் பிரேம்

ரமேஷ் பிரேம் தமிழ் இலக்கியத்தில் உருவாக்கி வைத்திருக்கும் தடம் சாதாரணமாக தாண்டிச் செல்ல முடியாதது. 

படைப்பு ரீதியாக- தமிழ் சிற்றிதழ் உலகில் இந்த இரட்டையர்களின் வீரியமான இயக்கம், நவீன தமிழ் இலக்கியத்தோடு அடிப்படையான பரிச்சயம் உள்ள வாசகனுக்கும் தெரிந்து இருக்கும்.  

ரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் "உப்பு" கவிதைத் தொகுப்பை வாசித்து முடிக்க கொஞ்ச நாட்கள் பிடித்தன. தொகுப்பில் பல கவிதைகள் சிறப்பானவை. ஒரே ஒரு கவிதையை மட்டும் வாசிப்பதே ஒரு நாளைக்கான‌ ஆழ்ந்த வாசிப்பனுபவத்தை கொடுப்பதாகச் சொல்ல முடியும். 

எறும்புகளுக்கு தற்கொலை செய்து
கொள்ளத் தெரிவதில்லை 
எனக்குத் தெரிந்த எறும்பொன்று 
மூன்று முறை தோல்வி கண்டது 
எதேச்சையாக ஒரு நாள் 
என்னைக் கடித்தபோது
தன் இறுதி முடிவுக்கான வழியை 
அறிந்து கொண்டது.  

இந்தக் கவிதையில் எளிமையான பகுதி இறுதி நான்கு வரிகள். புரிந்து கொள்ள குழம்ப வேண்டியதில்லை. ஆனால் ஆரம்ப வரிகள் புனைவான வரிகள். எறும்புகள் தற்கொலை செய்து கொள்ளுமா? இருக்கலாம். தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று என்ன நிச்சயம். இந்தக் குழப்பங்கள் ரமேஷ் பிரேமின் கவிதைகள் முழுவதுமாக உண்டு. 

இந்த அனுபவத்திற்காகத்தான் கவிதையைத் தேடும் கையில் ஒரு தீக்குச்சியோடு கவிதையின் பெரும் வனத்தின் இருளுக்குள் வாசகன் அலைந்து கொண்டிருக்கிறான் என்று நான் சொல்வேன்.  

கவிதையைப் பற்றி எழுதும் போது எழுதுபவன் முக்கியமாகச் செய்ய வேண்டியது எந்த‌ இடத்திலும் அவன் என்ன அந்தக் கவிதையில் புரிந்து கொண்டான் என்று சொல்லாமல் இருப்பது. அது வாசகனுக்கான களம். அவன் புரிந்து கொள்ளுதலில்தான் அந்தக் கவிதைக்கும் வாசகனுக்குமான உறவு அமைகிறது. இந்த அடிப்படையை முந்தைய பத்தியில் மீறுவதற்கான சரியான காரணத்தை சொல்லத் தெரியவில்லையென்றாலும் உப்பு போன்ற தொகுப்பில் அதைச் செய்வது பெரிய தவறாகத் தோன்றவில்லை. 

எளிமையான கவிதைகள் எனக்கு வெகுவாக பிடிக்கின்றன‌. எந்தச் சிக்கலும் இல்லாமல் காட்சிப்படுத்தும் கவிதைகள், சொற்களைத் திருகாத, வாசகனை குழம்பச் செய்யாத கவிதைகள் என்று இவைகளைச் சொன்னாலும், சிக்கலான கவிதைகளும் பிடிக்கின்றன. சிக்கலோ, எளிமையோ பிடிப்பது என்று சொல்வது "கவிதைகளை" மட்டும் தான்.

திருகலான, எளிமையான என இரண்டு வகையான கவிதைகளும் விரவிக்கிடக்கும் இந்த தொகுப்பில் சில கவிதை வரிகளை சுட்டிக் காட்ட வேண்டும். மேலும் கவிதைப் புத்தகத்தை பற்றி எழுதும் போது , ப‌ல கவிதைகளை சில பத்திகளுக்கூடாக செருகி விடுவதுதான் தமிழ் கூறும் நல்லுலகின் மரபும் வழக்கமும்.

மிக எளிமையான கவிதையொன்று

கனவில் வந்த அப்பா
நான் அதிகமாகக் குடிப்பதாகக் 
குறைபட்டுக் கொண்டார் 
தனக்கு சாராயம் வைத்துப் 
படையலிடாததையும் 
நாசூக்காகச் சொல்லிவிட்டுப் போனார்  

எளிமையான அதேசமயம் மிக நுணுக்கமான கவிதை இது. தமிழ்ச் சமூகத்தில் தந்தைக்கும் மகனுக்குமான உறவு கொண்டிருக்கும் பரிமாணங்கள் நுட்பமானவை. அப்பாவோடு சேர்ந்து 'பியர்' குடிக்கும் ஒரு வகை, எதிரில் அமர்வதற்குக் கூட தயங்கும் ஒரு வகை, சால்னா கடையில் இருந்து அப்பாவை தூக்கி வரும் வகை. தந்தை மகன் உறவினை மையமாக்கிய, பரவலாக பேசப்பட்ட(தமிழ்க் கவிதையில் 'பரவலாக பேசப்படுவது' என்பது ஓரிரண்டு கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்படுவை. தமிழ் படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைத்தால் அதற்கு யாரும் பொறுப்பல்ல) கவிதைகளை எண்ணிவிட முடியும். 

இந்தக் கவிதை கொண்டு வரும் காட்சியும், அதில் தந்தை மகனுக்குமான உறவின் அடிப்படையும், இந்தச் சமூகத்தில் இந்தக் குடும்பம் எப்படியிருந்திருக்கும் என்ற பெரும்பான்மையான கேள்விகளுக்கு இந்தக் கவிதையின் ஐந்து வரிகள் துல்லியமாக பதிலைக் கொண்டு வந்துவிடலாம். கவிதைகள் ஒவ்வொன்றாக எழுதி அதைப் பற்றி நான்கு வரிகளைச் சொல்லி இதுதான் 'உப்பு' என்ற வடிவத்தில் எழுதிவிடக்கூடாது என்ற வைராக்கியம் 
இருந்தாலும் பாழாய்ப்போன மனம் அப்படித்தான் போகும் போலிருக்கிறது.  

பொதுவாக நான் இந்தக் கவிதைகளை வாசித்த‌ வரையில் சொன்னால், ஸுடோக்கூ போன்றது இந்தக் கவிதை தொகுப்பு. கொஞ்சம் யோசிக்க வேண்டும், சொற்களையும் வரிகளையும் பொருத்த வேண்டும், வாசிப்பவனின் வாழ்வின் ஒரு அனுபவத்தோடோ அல்லது காட்சியோடோ கவிதையை இணைக்க வேண்டும். மிகச் சிறந்த கவிதானுபவம் கிடைக்க இதுதான் இந்தத் தொகுப்பின் சூட்சமம்,  

இந்த மழை எனக்கு வேண்டாம் 
விருப்பம் இருந்தால் 
எனது சமாதி மீது பொழியட்டும். 

வாழ்வின் கசகசப்பும், தீராத வன்மமும் கசடுகளாக கவிதையின் வடிவங்களில் திரிந்து கொண்டிருக்கும் இந்தத் தொகுப்பிலிருந்து, வலிகள் கவிதைகளாக கசிந்து கொண்டிருக்கின்றன. இந்த வலிகளை கொண்டாட்டங்களாக மாற்றிவிடும் பெரும் வித்தைக் காரர்கள் ரமேஷ் பிரேம் என்பது எனக்குள் உண்டாகியிருக்கும் பிம்பம்.

வாழ்க்கையின் வலிகளையும், துக்கங்களையும் பாட எனக்குக் கவிஞன் தேவையில்லை. என் அமத்தா அவற்றை சொல்லிவிடக்கூடும் கண் கசக்கலிலும், அழுத பின் சிந்தும் மூக்குச் சளியிலும். 

என்னைப் போலவே துக்கங்களை அனுபவித்த கவிஞன், என்னைப் போலவே துயரங்களில் கசங்கிய கவிஞன், அந்தத் துயரங்களை சொற்களின் கொண்டாட்டமாக மாற்றித் தருவான், அந்தக் கொண்டாட்டத்தின் கண்ணீர்க் கசிவில் என் வாழ்வின் துளிகளைக் கண்டறிவேன். அந்தக் கணம் நான் அந்தக் கவிதைகளைக் கொண்டாடுவேன்.  

இந்தக் கணம் நான் 'உப்பு' கவிதைகளைக் கொண்டாடுகிறேன். 

தொகுப்பில் உள்ள மேலும் இரண்டு கவிதைகள்:  

ஒவ்வொரு தீக்குச்சிகளாக உரசி
விரல்கள் சுடும்வரை எரியவிடுவது 
சிறுவயதிலிருந்து பழக்கம் 

அபூர்வமாக சில சமயம் 
எரியும் சுடரில் யாரோ 
பார்ப்பது தெரியும்
முகமற்ற பார்வை 
======== 
கவிதைக்குள் வராத 
எந்தவொன்றும் உலகில் இல்லை

உன்னை நான்
முத்தமிட்டு உயிர்பெற்ற‌ 
எனது காலத்தின் 
முதற்கணத்தை தவிர.  

குறிப்பு 1: இந்தத் தொகுப்பில் குறை எதுவுமில்லையா என்று கேட்டால் என் பதில் இருக்கிறது. ஏன் சொல்லவில்லை என்றால் சொல்லத் தேவையில்லை என்று தோன்றியது.  

குறிப்பு 2: தமிழ் நாட்டின் கலக எழுத்தாளரின் படைப்புகள் எல்லாம் ரமேஷ் பிரேமின் கைங்கரியம் என்று எழுத்தாளர் மாலதி மைத்ரி தனது வலைப்பதிவில்(பார்வை - மீள் பார்வை) எழுதியிருக்கிறார்.