Feb 3, 2009

திராவிட அரசியலின் இறுதிப்புள்ளி

பெரியாரின் காலத்திலிருந்து திராவிட அரசியல் தமிழக வரலாற்றில் இடம் பிடிக்கிறது என்று சொல்ல முடியும் என்றாலும் அவரது காலத்துக்கு முன்பாகவே தமிழுணர்வு, நாத்திகம், தலித் அரசியல் போன்ற சில கூறுகளின் மூலமாக திராவிட அரசியல் தனக்கென வடிவம் பெற முயன்று கொண்டிருந்திருக்கிறது.

பெரியார் திராவிட கொள்கைகளுக்கான‌ பரிணாமத்தை கொடுக்க, அதற்கான அரசியல் உருவம் திராவிட முன்னேற்ற கழகத்தின் மூலமாக வலுப்பெற்றது. இந்த இரண்டு கூற்றுகளும் ஒரு நேர்கோட்டுப் பார்வை மட்டுமே. இவை தவிர்த்து எண்ணற்ற செயல்பாடுகளின் மூலம் திராவிட அரசியல் உறுதி பெற்றது. எங்கள் ஊர்பக்கம் உள்ள தி.மு.க அனுதாபிகள் நாவிதர்கள் கடைகளிலும், டீக்கடை பெஞ்ச்களிலும்தான் தி.மு.க வளர்ந்தது என்பார்கள்.

நாற்பதுளில் மிகத் தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு, நாத்திகம், திராவிட நாடு என்ற கொள்கைகள் அண்ணா காலத்திலேயே நீர்த்துப் போனது. பின்னர் கருணாநிதி தன்னை திராவிட கொள்கைகளை பின்பற்றுபவராக வெற்றிகரமாக நிறுவிக் கொண்டிருந்த போது அண்ணாவின் பெயரில் கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர் ,தன்னை கடவுள் நம்பிக்கை உடையவர் என்பதை வெளிப்படுத்த எந்த தயக்கமும் காட்டவில்லை. அவரது வழித் தோன்றல் ஜெயலலிதா தன்னை "பாப்பாத்தி" என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டார்.

கருணாநிதியும் தனது காற்றில் கரைந்த கொள்கைகளை இன்னமும் பிடித்திருப்பதாக பல வழிகளில் நிரூபிக்க முயன்று கொண்டிருக்கிறார். மஞ்சள் நிறத்தை அணிய ஆயிரம் காரணங்களைக் கூறினார். அவரது வாரிசுகள் கருணாநிதியின் "இமேஜை"க் காப்பாற்ற கடவுள் நம்பிக்கையையும் இன்ன பிற ஆரிய செயல்பாடுகளையும் வெளியுலகில் வெளிப்படையாக மறைக்கிறார்கள்.

ஒரு குட்டிக் கதை ஒன்று நினைவிற்கு வருகிறது. ஒரு அரசனை பழி வாங்க நினைத்த சோதிடன் ஒருவன், அவருக்கு மந்திர உடை அணிய வைப்பதாகக் கூறி ஒன்றும் அணிவிக்காமல் நிர்வாணமாக நகர்வலம் செல்லச் செய்தான். எதிர்பட்ட ஒவ்வொருவருக்கும் அரசன் நிர்வாணமாக செல்வது தெரிந்தாலும், தண்டனைக்கு பயந்து "ஆடை பிரமாதம்" என்றார்கள். அரசன் நினைத்துக் கொண்டான், தான் நிர்வாணமாக இருப்பது தனக்கு மட்டுந்தான் தெரியும் என்று. எனக்கு இந்தக் கதையை படிக்கும் போது கருணாநிதியின் திராவிட கொள்கைகள் மீதான பிடிப்பும், அதற்காக அவரது பிரதாபங்களும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.

வைகோ திராவிட கொள்கைகளை கொஞ்சம் பிடித்திருப்பதாகத் தெரிந்தாலும் (திராவிடக் கொள்கைகளில், சுயமரியாதையை தொலைத்தவர் இவர்) அவரது அரசியல் செயல்பாடு முக்கியத்துவமில்லாமல் போய்விட்டது.

"அண்ணாயிசம்","எம்ஜியாரிசம்", "காமராஜரிசம்" என எல்லாவற்றையும் கலந்து "மிளகு ரசம்" வைத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்த் கட்சியின் பெயரில் எதற்காக "திராவிடம்" என்ற ஒட்டியிருக்கிறது என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

இவர்களை எல்லாம் தவிர்த்து இன்னும் கொஞ்சம் அரசியல் ரீதியாக ஒட்டிக் கொண்டிருக்கும் கி.வீரமணிக்கு, கொள்கையை விட ஆட்சியில் இருக்கும் கட்சிதான் முக்கியம். அடுத்த முறை பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சியை பிடித்தால் அவர்களுக்கு ஜால்ரா தட்டவும் கொஞ்சமும் யோசிக்க மாட்டார். இப்படியான அரைகுறை "திராவிட" தலைவர்கள் டஜனுக்கும் மேலாக தமிழ்நாட்டில் உண்டு.

தலைவர்கள் கொள்கைகளை காற்றில் விட்டுவிட்டால் ஐம்பது ஆண்டுகாலமாக உருவம் பெற்ற கொள்கை அழிந்து விடுமா என்றால், இல்லை தான். ஆனால் தனிமனித வழிபாடு தனக்கான நிலையான இடம் பெற்றுவிட்ட தமிழகத்தில் தலைவன் எவ்வழியோ, விசிலடிச்சான் குஞ்சும் அவ்வழிதான்.

இந்த நிலையில் திராவிட கொள்கைகளில் அரசியல் ரீதியாக வலிமையானதாக எது இருக்கிறது என்று பார்த்தால் ஒன்று கூட இல்லை என்பதுதான் உண்மை. இன உணர்வு, மொழியுணர்வு, சாதி எதிர்ப்பு, சுய மரியாதை, கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு இவற்றில் ஒன்று கூட பெரும்பான்மை மக்களின் உணர்வுகளில் இல்லை.

இன்னமும் இவை முற்றாக அழிந்துவிடவில்லை. எங்காவது சில உணர்வாளர்கள் கூடுகிறார்கள். கொஞ்சம் பேசுகிறார்கள். சிலர் சலனம் உண்டாக்குகிறார்கள். ஆனால் அடுத்த தலைமுறைக்கு இவற்றை எடுத்துச் செல்வதற்கான வலிமையான தலைவர்களோ, இயக்கமோ தமிழ் மண்ணில் இல்லை என்பது சர்வ நிச்சயம்.

திராவிட கொள்கைகள் அழிந்து விடக் கூடாத கொள்கைகள் என்பதில்லை. கால ஓட்டத்தில் கட்டமைக்கப்பட்ட அரசியல் கூறுகளும், பண்பாட்டு கூறுகளும் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாவதும், ஒத்து வராத கொள்கைகள் முற்றாக அழிந்து போவதும் இயற்கை. அப்படியான ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

எந்தத் தலைவனும் இன்றைய தேதியில் தன்னை திராவிட உணர்வாளன் என்று அறிவித்துக் கொள்ள யோக்கிதை அற்றவன் என்பதை எந்தவித தயக்கமும் இல்லாமல் சொல்லலாம். ஆனால் அப்படி தன் கீரிடத்தை அசைய விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு தலைவனும். நம் தமிழ் சாதி அதையும் நம்பிக் கொண்டிருக்கிறது. கண்ணை மூடிக் கொண்டு.

இதன் விளைவு உடனடியாக தெரியாது.

அடுத்த தலைமுறையில் ஒருவனிடமும் இந்த உணர்வுகள் இல்லாத போது அப்படி ஒரு கொள்கை இருந்ததாக ஏதாவது நூலகத்தில், கரையான் அரித்த ஒரு புத்தகம் சொல்லிக் கொண்டிருக்கும்.