Feb 28, 2009

பிரபாகரன் - ஒரு வாழ்க்கை : புத்தகப் பார்வை

நூல் திற‌னாய்வு செய்வ‌து என்ப‌து கொஞ்ச‌ம் சிக்க‌லான‌ ப‌ணியாக‌வே தெரிகிற‌து. வாசித்துவிட்டு "தேறும்","தேறாது" என்பதில் ஒன்றைச் சொல்லிவிடுவது அல்ல‌து கொஞ்ச‌மாக‌ அதைப் ப‌ற்றி பேசி நிறுத்திக் கொள்வது ச‌ற்று எளிது அல்ல‌து உசித‌ம் கூட‌.

செல்ல‌முத்து குப்புசாமி எழுதியிருக்கும் 'பிரபாகரன் - ஒரு வாழ்க்கை'(வெளியீடு: கிழக்கு பதிப்பகம்)யை ஈழ‌ம் ப‌ற்றியெரிந்து கொண்டிருக்கும் இந்த‌ச் ச‌மய‌த்தில் வாசிக்க‌ நேர்ந்தது. புத்தகத்தைப் ப‌ற்றி ந‌ண்ப‌ர்க‌ளோடு பேசுவதோடு ம‌ட்டுமில்லாம‌ல் என‌க்கு 'ப‌ட்ட‌தை' எழுதிவிடுவ‌தும் ச‌ரி என்று தோன்றுகிற‌து.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்ட வாழ்க்கையை மிக எளிமையான, சார்பில்லாத நடையில் ஆவணப்படுத்தியிருக்கும் செல்லமுத்து குப்புசாமியின் முயற்சி இன்றைய தேதியில் மிக‌ முக்கிய‌மான‌ முய‌ற்சியாக‌ உண‌ர்கிறேன்.

புத்த‌க‌த்தில் இட‌ம் பெற்றிருக்கும் செய்தியும், அது ப‌ற்றிய‌தான‌ அல‌ச‌லும் ப‌டைப்பாளியின் ஆளுமையிலோ அல்ல‌து அவ‌ரோடான‌ த‌னிப்ப‌ட்ட‌ ந‌ட்பின் கார‌ண‌மாக‌வோ அட‌ங்கிக் போவ‌து நூல் விம‌ர்ச‌ன‌த்தின் அடிப்ப‌டை ப‌ல‌வீன‌ம் என்ப‌தால் இனி இந்த‌ப் ப‌த்தியில் குப்புசாமி ப‌ற்றி எழுத‌ப் போவ‌தில்லை.

தமிழக மக்களின் ஆழ்மனதில் அடி மட்டத்தில் ஈழம் குறித்தான கிளர்ச்சியான சிந்தனை உருவெடுக்கக் காரணமாக, சிங்கள அரசின் கொள்கை விளக்க அணியாக இந்திய அரசியல் க‌ட்சிக‌ள் செயல்ப‌டும் இந்த‌ நேர‌த்தில், வெளி வந்திருக்கும் இந்த‌ புத்த‌கத்திற்கு ஒரு முக்கிய‌மான வ‌ர‌லாற்று ப‌திவு.

காதலர் தினத்தை ஒட்டி வெளியான சில இதழ்களில் கூட‌ பிரபாகரன் - மதிவதனி காதல் பிரதானமாகச் சித்தரிக்கபடுகிறது. சில வார இதழ்கள் புலிகளையும், பிரபாகரனையும் இதுவரை இல்லாத அளவில் தங்கள் பக்கங்களில் நிரப்புகின்றன. இது வியாபார குயுக்தியா என்பது போன்ற விவாதங்கள் இந்த நேரத்தில் தேவையில்லை.

இன்றைய கொந்தளிப்பான சூழ்நிலையில் பிரபாகரனின் வாழ்க்கைப் பின்னணி குறித்த புதிரை விடுவித்து அந்தத் தனி நபரின் வாழ்வு குறித்து மட்டுமல்லாமல் அவர் அந்தச் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான புறச் சூழலையும் விருப்பு வெறுப்பின்றி பதிவு செய்யும் காரியம் அவசியம். அந்தப் பணியை இந்த நூல் செய்திருக்கிறது.

ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற‌ புத்தகக் கண்காட்சியில் விற்கக் கூடாது என்று காந்தி கண்ணதாசன் முயற்சியால் முட்டுக்கட்டை போடப்பட்ட நூல் இது.

இன்றைய சூழலில் விடுதலைப் புலிகளின் கடந்த காலத் தவறுகளைக் குறித்துப் பேசுவதற்குப் போதிய அவகாசம் இல்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழரசுக் கட்சியால் நிராகரிக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சிங்கள இனத்தின் ஆதிகத்தைப் பறைசாற்றும் இலங்கையின் 'தேசியக் கொடி' இன்றைக்கு வலுக்கட்டாயமாக அனைத்து தமிழர் வீடுகள் முன்பாகவும் சிங்கள இராணுவத்தினரால் ஊன்றப்படுகிறது.

அதை எதிர்க்கும் திராணியுள்ள கூட்டத்தையும், அந்தக் கூட்டத்திற்கான கொடியையும் வடிவமைத்த மனிதனைப் பற்றிய வாழ்க்கையை தொகுத்துத் தந்திருக்கிறது இந்த நூல். சராசரி இந்தியத் தமிழர்களை நோக்கி, அவர்களுக்கு பிரபாகரனின் போராட்ட வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் நோக்கில் இது உருவாக்கப்பட்டிருபதாகவே படுகிறது.

1991 க்குப் பிறகு இலங்கைத் தமிழர் என்றாலே தேசத் துரோகியாக அடையாளப்படுத்தப்படும் அபாயம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டதால் அந்தத் தீவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிலவும் இனப் பிரச்சினையின் பின்னணி பற்றி நமக்குத் தெரிந்திராத, மறைக்கப்பட்ட சம்பவங்கள் குறித்தான புரிதலை இந்த நூல் உண்டாக்குகிறது.

உண்மையில் பிரபாகரன் எப்படிக் குளிப்பார், எப்படி தேகப் பயிற்சி செய்வார் முதலிய பர்சனல் விவரங்களைத் தேடி இதை வாசித்தால் ஏமாந்து போக வாய்ப்புண்டு. 'பிரபாகரனின் வாழ்க்கை என்பது, ஒரு தனி மனித சரித்திரமல்ல, ஓர் இனத்தின் பெருங்கதை' எனக் கூறும் புத்தகத்தின் பின் அட்டை வரிகள் நூறு விழுக்காடு மெய்யானது.

ஒரு அரசுப் பணியாளரின் வருமானத்தில் வாழும், கடவுள் நம்பிக்கை மிகுந்த ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த செல்லப் பையன் உலகின் ஆகப் பெரிய கட்டுப்பாடான கொரில்லா இராணுவத்தைக் கட்டமைத்த கதை இது. கோயில் பூசாரியை சிங்களர்கள் உயிரோடு தீயிட்டுக் கொளுத்திய சம்பவத்தைத் தன் தந்தையும், அவரது நண்பர்களும் விசனத்தோடு பேசக் கேட்டு, "அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை?" என எதிர் வினாத் தொடுத்த நிகழ்வோடு துவங்குகிற நூலின் முதல் அத்தியாயம் பின் நவீனத்துவ நாவலைப் போல முன்னும் பின்னுமாகப் பயண‌ப்படுகிறது.

பல அடிப்படைக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வண்ணம்,தொய்வில்லாமல் நகர்கிறது.

- பிழைக்கப் போன இடத்தில் எதற்காக தனி நாடு கேட்கிறார்கள்?
அவர்கள் பிழைக்கப் போனவர்கள் இல்லை. நாடு கடத்தப்பட்டு இலங்கையில் வந்திறங்கிய விஜயன் என்ற இளவரசன் உருவாக்கிய சிங்கள இனம் இலங்கைத் தீவின் தென் பகுதியில் உருவாகும் முன்பே அங்கு வசித்த பூர்வ குடிகள்.

- அப்படியானால் இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்போர் யார்?
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியத்தில் காலங்க் காலமாக வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களைத் தவிர்த்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருந்து அன்றைய சிலோன் தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டு கண்டி மலையக் பகுதியில் தேயிலைத் தோட்டம் உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பிரிவினரே இந்திய வம்சாவழித் தமிழர். ஒரு காலத்தில் ஈழத் தமிழர்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் கூடுதலாக மிகப் பெரிய சிறுபான்மையினராக இலங்கை மண்ணில் விளங்கிய அவர்களது குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது வேறு கதை.

- அதனால் மட்டும் தனி நாடு கேட்டுப் போராடுவது நியாயமா?
தனி ஈழக் கோரிக்கை என்பது மலையகத் தமிழர்களையும், மலையகத்தையும் உள்ளடக்கியதல்ல. காந்தியவாதி தந்தை செல்வநாயகம் 1949 முதல் 1976 வரை ஒருங்கிணைந்த இலங்கைத் தீவில் சிங்கள மக்களைப் போலத் தாங்களும் சம அந்தஸ்துடையயவர்களாக நடத்தப்பட வேண்டும் என்று போராடியதும், அப்படி அவர்களை நடத்துவதாக ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட சிங்கள ஆட்சியாளர்கள் அந்த உடன்படிக்கையை பகிரங்கமாகக் கிழித்துப் போட்ட கதையெல்லாம் உண்டு. இறுதியாக ஸ்ரீலங்காவாக மாறிய சிலோன் ஒரு பவுத்த சிங்கள தேசமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து தனி நாடு தவிர வேறு வழியே இல்லை என்ற நிலைக்கு அந்த மனிதர் தள்ளப்பட்டார்.

- அதற்காக ஆயுதம் தாங்கிப் போராடுவது சரியா?

- ஏனைய ஆயுதப் போராட்டக் குழுக்களை அழித்தது பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கு மட்டுமா? அல்லது சகோதரச் சண்டைக்கு வேறு சில காரணங்கள் உண்டா?

- பூடான் தலைநகர் திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இடையே நிலவிய ஒற்றுமை அதன் பிறகு சிதைந்து போய், சகோதர இயக்கங்களை அழிக்கும் நிலை உருவானதற்கு தமிழக அரசியல் சூழலும், இந்திய உளவுத் துறையும் காரணமாக விளங்கினவா?

- ஆண்களுக்கு நிகராக பெண்களும் துப்பாக்கி தூக்கிப் போராடும் இயக்கமாக புலிகள் இயக்கத்தை பிரபாகரன் எப்படி மாற்றினார்?

- பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் இடையேயான காதலுக்கும், உமா மகேஸ்வரன் மற்றும் ஊர்மிளா இயையேயான தகாத உறவுக்குமான வேறுபாடு ஈழத் தமிழ் விடுதலைப் போராடத்தில் எத்தகைய திருப்பங்களை ஏற்படுத்தியது?

- ராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனாவும் செய்து கொண்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் எந்தப் பின்னணியில் உருவானது?

- சிங்கள இராணுவத்தின் அடக்குமுறையில் இருந்து தமிழர்களைக் காப்பதற்கு இலங்கை சென்றதும், ஈழத் தமிழர்கள் மாலை போட்டு ஆரத்தி எடுத்து வரவேற்றதுமான இந்திய அமைதிப் படை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபடத் தூண்டிய காரணங்கள் யாவை?

- பொது மன்னிப்பு வழங்கப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட புலிப் போராளிகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்காமல் அவர்களை அமைதிப் படை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் வரலாறு வேறு மாதிரி இருந்திருக்குமா?

- பச்சைத் தண்ணீர் கூடப் பருகாமல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றச் சொல்லி ஜெயவர்த்தனாவை நிர்ப்பந்திக்குமாறு இந்தியாவை நோக்கி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் உண்மையிலேயே இந்தியாவின் அகிம்சை முகமூடியைக் கிழித்தாரா அல்லது பிரபாகரன் உற்பத்தி செய்த இன்னுமொரு தற்கொலைப் போராளிதானா அந்த கண்ணாடி அணிந்த‌ இளைஞன்?

- அமைதிப் படையை அனுப்பி வைத்தும் அது எவ்வாறு ஆயிரக் கணக்கான பொதுமக்களின் மரணத்திற்குக் காரணமாக இருந்தது?
ராஜீவைப் பழி வாங்குவதற்காகக் கொன்றார்களா அல்லது இனி மேல் ஆட்சிக்கு வந்தால் அவர் ஏற்படுத்தப் போகும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக இல்லாமல் செய்தார்களா?

- இராஜீவ் காந்தி கொலை விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதா அல்லது சாதமாக அமைந்ததா?

- விடுதலைப் புலிகள் மீதான தடை அவர்களை உண்மையிலேயே பாதித்துள்ளதா? அப்படிப் பாதித்துள்ள பட்சத்தில் பாதிப்பு அரசியல் ரீதியாக இருந்ததா அல்லது இராணுவ ரீதியாகவா?

- உண்மையில் பிரபாகரன் பயங்கரவாதியா அல்லது விடுதலைப் போராளியா?

இந்தக் கேள்விகளை அறிவார்த்தமாகவும், வரலாற்று நோக்கிலும் அணுக இந்நூல் உதவும்.

"பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் கணக்கில் கொள்ளாமல் இலங்கையின் இனப் போராட்ட வரலாறையும் ஈழத் தமிழர் பிரச்சினையையும் புரிந்துகொள்ள முடியாது. உணர்ச்சிப் பூர்வமாக அல்லாமல், வரலாற்று நோக்கில் பிரபாகரனை அணுகுகிறது இந்நூல்," என்ற வாசகத்தை முன் அட்டையில் தாங்கி வந்திருக்கும் இந்தப் புத்தகம் 'இந்திய இறையாண்மைக்குக் குந்தகம்' விளைவிக்காமல் ஈழத் தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் சவாலான காரியத்தைச் செய்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகள் பலவற்றை நியாயப்படுத்தாமல் சம்பவங்களை மட்டும் பதிவு பண்ணுகிறது இந்தப் புத்தகம். புலிகளுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் கூட, இந்திய அரசின் அல்லது உளவுத் துறையின் பல சித்து வேலைகளைச் சொல்லாமல் விட்டிருக்கிறார் நூலாசிரியர். குறிப்பாக ராஜீவ் காந்தி கொலை பல மர்மங்கள் நிறைந்ததாகவே இன்று வரை தொடர்கிறது என்று குறிப்பிட்டு விட்டு நகர்கிறார். நிச்சயமாக அந்த மர்மங்களும், புதிர்களும் அவருக்குத் தெரியாததாக இருந்திருக்காது. சுப்பலட்சுமி ஜெகதீசன் முதல் சந்திராசுவாமி வரை இராஜீவ் கொலைச் சமயத்தில் ஊடகத்தில் அலசப்பட்ட பலரைப் பற்றிக் குறிப்பிடாமல் நகர்கிறது புத்தகம்.

அதே போல புலிகளையும், ஏனைய போராளிக் குழுக்களையும் வைத்து எம்ஜிஆருக்கும், கலைஞருக்கும் நடுவே தமிழகத்தில் நடந்த அரசியல் குறித்து எந்தக் குறிப்பும் தென்படவில்லை. இலங்கை இனப் பிரச்சினையை, அங்கு நிலவும் பேதத்தை மென்மேலும் சிக்கலாக்கியதில் இந்திய அரசின் பங்கு குறித்தி வெளிப்படையாக எதுவும் குறிப்பிடாமல் சாமர்த்தியமாக விடப்பட்டிருக்கிறது.

அதே நேரம் பிரபாகரனை வில்லனாகச் சித்தரிக்கும் வேலையை நூல் செய்யவில்லை. தமிழர்களுக்கு எதிரான சிங்களர்களின் அடக்குமுறைக்கு எதிரான நீண்ட நெடிய போராடத்தில் பிரபாகரனின் பங்கு குறித்தும், போராடத்தின் போக்கையும் அதன் வீரியத்தையும் அவர் மாற்றியமைத்ததைப் பற்றியும் விவரிக்கிறது.

மிக முக்கியமானது மட்டுமல்லாமல், மிகச் சாமர்த்தியமாக எழுதப்பட்டிருக்கும் நூல் இது என்பதற்கான பல காரணங்களில் ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். அது மறைந்த பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தி பற்றியது. பிரபாகரனைப் பற்றி என்ன எழுதினாலும், பேசினாலும் அதில் நிச்சயமாக ராஜீவின் பெயர் இடம் பெறும். ஒன்று பிரபாகரனை வில்லனாகவும், இராஜீவை கதாநாயகனாகவும் வர்ணிப்பார்கள். இல்லாவிடில் பிரபாகரனை நாயகனாகவும், இராஜீவை வில்லனாகவும் சித்தரிப்பார்கள்.

உண்மையில் இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்த வரை இராஜீவ் காந்தி வில்லனும் அல்ல, கதாநாயகனும் அல்ல. அவர் ஒரு அபிமன்யு. அப்படியான பிம்பத்தையே இந்தப் புத்தகம் உருவாக்கும். அதுதான் உண்மையாகவும் இருக்க வேண்டும்.

புத்தகத்தின் கதாநாயகன் பெயர் பிரபாகரன். வில்லன்மார்களின் பெயர்கள் - கொழும்பு ஆட்சி பீடத்தின் சிம்மாசனத்தை அலங்கரிப்பவர்களாக - மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. புனைவுகள் இல்லாமல், மிகுதியான அலங்கார வார்த்தைகள் இல்லாமல், வரலாற்று நோக்கில், சம்பவங்களின் கோர்வையாகத் வடிவமைக்கப்பட்டிருக்கும் பிரபாகரன் முக்கியான காலப் பதிவாக அமையும்.

நன்றி: அம்ருதா

Feb 5, 2009

நீங்கள் இறப்பதற்கான காரணங்கள்
அவ‌ள்
உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்
நீங்கள் பிரியத்தின் வெவ்வேறு வடிவங்களை உணர்த்திக் கொண்டிருக்கிறீர்கள்
அவ‌ள்
த‌ன் துக்க‌ங்க‌ளை ப‌கிர்ந்து
புதிர்க‌ளுக்கான‌ முடிச்சுக‌ளை காட்டுகிறாள்
நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்
அவளை அவளாகவே
உங்க‌ளை ஏற்றுக் கொள்ள‌ முடியாது என்கிறாள்
சிரிப்பதாக பாவித்த நீங்கள்
ஒரு பனிநனைத்த அதிகாலையில் 
அவ‌ளின் ப‌ட‌த்தை பார்த்து க‌த‌றிய‌ழுதீர்க‌ள்
பிற‌கு
த‌னித்த‌ ப‌ய‌ண‌த்தில்
சூரிய‌ன் முக‌த்தில் விழும் க‌ணத்தில் 
அழுது தீர்த்தீர்க‌ள்
நாட்க‌ள் க‌ழிய‌
உங்களை பிடிக்கும் என்கிறாள்
சொற்க‌ளை 
உங்க‌ளோடு புதைத்து 
கொஞ்சமாகச் சிரிக்கிறீர்க‌ள்
நேற்றுமில்லாத‌ இன்றுமில்லாத
த‌ருண‌த்தில்
உங்க‌ளின் அழ‌கின்மையை ப‌ட்டியலிட்டு
நீங்க‌ள்
க‌ட்டியிருந்த 
ஆளுமையை
சிதைக்கிறாள்
உங்களின் துக்கத்தை அறிந்தவளாய்
தான்
சொன்னவை எதுவும் பொருளற்றவை
த‌ன்
சிக்க‌ல்க‌ளின் வெற்று பிம்ப‌ங்கள் என்கிறாள்
நீங்க‌ள்
நிராக‌ரிக்க‌ எதுவுமில்லை
உண்மையின் வெம்மையில் க‌ச‌ங்க‌த் துவ‌ங்குகிறீர்க‌ள்
இந்த‌த் தார்ச்சாலையின் ம‌திய‌ வெயிலில்
வாகனத்தில் நசுங்குவது கூட
உங்களுக்கு
ஆசுவாசம் தரக்கூடும்
க‌ண்ணீரில் க‌ரைய‌த் துவ‌ங்கும்
உங்களைப் பார்த்து செருப்புத் தைப்ப‌வ‌ன்
வ‌ருத்த‌ப்பட்டிருக்கலாம்
உங்களுக்கு அடுத்தவரின் கருணை தேவையில்லை
உங்க‌ளின் துக்க‌ம் உங்க‌ளுக்கானது
இந்த‌க் க‌ண்ணீருக்கான‌ அர்த்த‌ம் முடிவ‌ற்றது
உற‌ங்க‌ச் செல்கிறீர்க‌ள்
இர‌வின் வெறுமை உங்க‌ளை விழிக்க‌ச் செய்கிறது.
அருகில் கிட‌க்கிற‌து ஒரு நைலான் க‌யிறு.

(த‌ற்கொலை செய்து கொண்ட‌ ந‌ண்ப‌ன் ம‌துவுக்கு)