Jan 31, 2009

மரணம் உண்டாக்கியிருக்கும் சலனம்

ஒரு சாமானியனின் மரணம் இதுவரை வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்டிருந்த மெளனத்தில் சலனத்தை உண்டாக்கியிருக்கிறது.

இந்த மரணமும் அதிமுக எத்தனை தொகுதியில் வெல்லும், திமுக தோற்குமா, மூன்றாவது அணி அமையுமா என்ற மூன்றாந்தர அரசியல் பேச்சுக்கு வழிவகுப்பதுதான் மிகக் கேவலமானதாக இருக்கிறது. முத்துக்குமாரின் மரணம் தமிழக அரசியலோடு நிற்க வேண்டிய ஒன்றல்ல.

கருணாநிதி இப்பொழுது மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் இருக்கிறார். அவர் தன் இரண்டு மகன்கள், ஒரு பேரன், ஒரு மகள், புதிதாக முளைக்கும் மூன்றாம் தலைமுறை பேரன் பேத்திகள் எல்லோருக்கும் பதவிகளைத் தேடித் தர வேண்டுமென்றால், காங்கிரஸின் வாலை விடக் கூடாது.

ஸ்டாலின், முத்துக்குமாரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கும் அதே சமயம் அன்பழகன் தான் சோனியா தர்பாரின் எடுபிடிகள் கூட்டம் என்பதை தன் தலைவனின் குரலாக ஒலிக்ப்பதுதான் இரட்டை வேடத்தின் சரியான புள்ளி.

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக தன்னெழுச்சியாக நிகழ்ந்த ஈழ உணர்வு போராட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டவர்களாக‌ சீமானும், அமீரும் பேச, எப்பொழுது தூண்டிலில் மீன் மாட்டும் என்று காத்திருந்த கருணாநிதியின் போலீஸ் அவர்களை கைது செய்ய, திரையுலகம் வீதிக்கு வர, ஊடகங்கள் சினிமாக்காரன்களின் முகத்தை படம் பிடித்து ஈழ விஷயத்தை கோட்டை விட்டார்கள்.

இப்படி திசை திருப்புவது கருணாநிதியின் கைங்கர்யமாக இருக்கலாம். அப்படியே இல்லயென்றாலும் திசை திருப்பும் வித்தை ஒன்றும் அவருக்கு புதிதில்லை. ஈழ விஷயத்தில் உணர்வுப்பூர்வமாக செயல்படுவதைக் காட்டிலும் அறிவுப் பூர்வமாக நடப்பதே இந்தச் சமயத்திற்கு உகந்தது.

கருணாநிதியின் நிலை இப்படியிருக்க, ஜெயலலிதாவோ எப்படியாவது கருணாநிதியை காங்கிரஸிடம் இருந்து ஓரம் கட்ட எல்லாவிதமான காய் நகர்த்தலிலும் ஈடுபடுகிறார்.

ஜெயலலிதாவுக்கு இன்றைய தேவைக்கு புலிகளை எதிர்ப்பதைவிடவும் மிக முக்கியமானது எல்லாம் கருணாநிதியின் தமிழின காவலர் என்ற முகமூடியைக் கிழிப்பதுதான். அது அற்புதமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. கருணாநிதியை வன்னிக்குச் செல்லச் சொல்லுங்கள், அவர் சொன்னால்தான் கேட்பார்கள், பழைய நண்பர்கள் என்றெல்லாம் உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்.

கருணாநிதி 'ஆம்' என்றால் காங்கிரஸ் ஒதுக்கிவிடும். 'இல்லை' என்றால் தமிழ்மக்கள் கேள்வி கேட்பார்கள்.

இவர்களின் இந்த சில்லரை அரசியலில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நேரு குடும்பத்தைத் தாண்டி யோசிக்கும் அளவிற்கு அறிவுடையவர்கள் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்ற "கொஞ்சம்" திராவிட சாய்வு உள்ள தலைவர்களும் பதவிக்காகவோ, தங்களின் தலைவிக்காகவோ கள்ள மெளனத்தில் ஆசனம் செய்கிறார்கள்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்த இனத்தை தனிமனித பகையை மட்டுமே மையமாக வைத்து வேரோடு அழிப்பது என்ற நோக்கோடு இந்திய அரசு பக்சே படைக்கு எல்லாவித உதவிகளையும் கள்ளத்தனமாக வழங்கி வருகிறது. இதே விதமான உதவிகளை சிங்கள அரசு சீனா, பாகிஸ்தானிடமும் இருந்தும் பெறுகிறது. சீனாவும் பாகிஸ்தானும் இந்த இன அழிப்புக்கு பின்னர் இலங்கையில் எந்தவிதமான முக்கியத்துவம் பெறப் போகின்றன என்பதைக் கூட உணராத அதிகாரிகள் நிறைந்ததா இந்திய‌ மத்திய அரசு.

இந்தியாவில் இன்னமும் பெரிய கொடுமை தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் ஈழம் பற்றி நிலவி வரும் எதிர்மறையான கருத்துகள். கிட்டத்தட்ட பெரும்பாலான மக்கள் ஒத்த கருத்தை கொண்டிருக்கிறார்கள்.

தமிழக மற்றும் இந்திய‌ ஊடகங்களின் ஒரு தலைபட்சமான எதிர்வினைகள் கடும் கண்டனத்துக்குள்ளாக வேண்டியவை. கலைஞர் தொலைக்காட்சிக்கும், ஹிந்து பேப்பருக்கும் சம்பவம் நடந்த நுங்கம்பாக்கம் பகுதியில் இருந்து செய்தி கொடுக்க ஒருவரும் இல்லாதது மிகப் பெரிய துக்கந்தான். அவர்களுக்கு ஒரு வரிச் செய்தியாகக் கூட வருவதற்கு தகுதியில்லாததாகிப் போனது இந்த மரணம். இந்த நேரத்திலும் "அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே மெளனவிரதம் நடத்த அனுமதி" என்பதை முக்கியச் செய்தியாக போட்டு தன் தமிழ் பாசத்தை காட்டியது கலைஞர் தொலைக்காட்சி.

பழ.நெடுமாறன், வைகோ, ராமதாசு,திருமா போன்ற இரண்டாம் மட்டத் தலைவர்கள் இதில் ஒன்றும் செய்து விடப் போவதில்லை. ராமதாசுக்கு அவரது மகன் காங்கிரஸ் அரசில் அமைச்சர் என்பது அவ்வப்போது மறந்து விடுகிறது. வைகோவுக்கு தன்னை நம்பி வந்தவர்களுக்காக கட்சி நடத்துவதற்கு கூட ஜெயலலிதாவின் ஆதரவு தேவை.

இத்தகைய அரசியல் நம்பகத்தன்மை உள்ளவர்களை நம்பி மக்கள் யாரும் அணி திரளப் போவதில்லை. ஒரு சரியான வழி நடத்தும் திறன் உள்ள தலைமை இல்லாதது தமிழகத்தில் எத்தகைய உணர்ச்சி கொந்தளிப்பும் பெரிய மாற்றத்தை கொண்டு வரப் போவதில்லை. முன்பு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இன்றைய போராட்டத்தோடு ஒப்பிட முடியாது. அன்றைய நிலையில் வழிநடத்திய தலைமை போன்று இன்று எதுவும் இல்லை. நல்ல தலைமை இல்லாத எந்த ஒரு போராட்டமும் நீர்த்துவிடலாம். மூன்று நாட்கள் அழுது மறக்கக் கூடிய மரணமில்லை இந்த மரணம்.

இந்த எதிர்மறையான கூற்றுக்கள் என்னுடைய கருத்துக்கள்தான் என்றாலும் அதைத் தவிர வேறொன்றும் யோசிக்க முடியாமல் இருக்கிறது.

இவர்களின் சண்டை, பணம், பதவி, அதிகாரம் என்ற மையங்களைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாதது. இவர்களை நம்புவதை விடவும் ஈழத்தவர்கள் சிங்களனை நம்பலாம்.

ஜெயலலிதா ஈழத்திற்கு தான் 'எதிரி' என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். கருணாநிதி இந்த‌ முத்திரையிலிருந்து தப்பிக்க முடியாமல் இருக்கிறார். அதுதான் வித்தியாசம்.