Wednesday, January 14 By: வா.மணிகண்டன்

ஓரு இரவின் அகாலத்தில் அந்த மரணம் நிகழ்ந்தது



ஓரு இரவின் அகாலத்தில்
அந்த மரணம் நிகழ்ந்தது

தூரப் ப‌றவை ஒன்று
உலகிற்கு அறிவித்த
அந்த மரணத்திற்கான‌
மெல்லிசை-
ஓய்ந்த மழையின்
சொட்டுதலில் இருந்தது.

அருகில் இருந்த‌வ‌ன் சப்த‌மிட்டுக் க‌தறினான்
சற்று த‌ள்ளி இருந்த‌வ‌ன் விசும்பினான்
தூரமாய் இருந்தவ‌ன் கணம் மெள‌ன‌மானான்.

கருகிய வாடையின்
ஈரச் சோகம்‍
க‌ட‌லில் க‌ரைந்த‌
இர‌வின் அகால‌த்தில்
அந்த‌ ம‌ரண‌ம் நிக‌ழ்ந்த‌து

நீர்த்தாரையில்-
நடந்த குழந்தையின்
கால்தடமாய் மறைந்த‌
ம‌ர‌ண‌ பிம்ப‌த்தின் க‌தையை
வெயிலின் புழுதிப் புய‌ல்
த‌னித்து புல‌ம்பிய‌து.

நாங்க‌ள்
பேசி
குடித்து
நடிகர்களின்
அந்தரங்கம் நினைத்து
நித்திரை கொண்டோம்.

சித‌றிக் கிட‌க்கும்
அன்பின் க‌ற்க‌ள்
நொறுங்க‌த் துவ‌ங்கும்
ஒரு இர‌வின் அகால‌த்தில்
இந்த‌ ம‌ர‌ண‌ம் நிக‌ழ்ந்த‌து.

நாளையும் நிக‌ழும்
நாளை ம‌று நாளும் நிக‌ழும்.

நாம்
ம‌ர‌ண‌க் க‌ண‌க்கை எழுதலாம்
கொஞ்ச‌ம் பேச‌லாம்
முடிந்தால்
மெள‌ன‌மாய் விச‌ன‌ப்ப‌டலாம்

எதுவுமில்லையென்றால்
___________ கொள்வோம்

பிற‌ந்த‌வ‌னுக்கு
தெரியாதா
சாவ‌தற்கும்
சாவ‌த‌ற்காய் வாழ்வ‌த‌ற்கும்.



[த‌மிழ‌னின் வ‌யிறு கிழிக்க‌ப்ப‌ட்டு, த‌மிழ‌ச்சிக‌ளின் நிர்வாண‌ங்க‌ள் சூறையாட‌ப்ப‌டும் இந்த‌ த‌ருண‌த்தில் நாற்ப‌து வ‌ரிக‌ளில் க‌விதை எழுதுவதைத் த‌விர‌ என்னால் வேறெதுவும் செய்ய இய‌ல‌வில்லை என்னும் வெட்க‌த்துட‌ன் ப‌திவு செய்கிறேன்]