Jan 31, 2009

மரணம் உண்டாக்கியிருக்கும் சலனம்

ஒரு சாமானியனின் மரணம் இதுவரை வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்டிருந்த மெளனத்தில் சலனத்தை உண்டாக்கியிருக்கிறது.

இந்த மரணமும் அதிமுக எத்தனை தொகுதியில் வெல்லும், திமுக தோற்குமா, மூன்றாவது அணி அமையுமா என்ற மூன்றாந்தர அரசியல் பேச்சுக்கு வழிவகுப்பதுதான் மிகக் கேவலமானதாக இருக்கிறது. முத்துக்குமாரின் மரணம் தமிழக அரசியலோடு நிற்க வேண்டிய ஒன்றல்ல.

கருணாநிதி இப்பொழுது மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் இருக்கிறார். அவர் தன் இரண்டு மகன்கள், ஒரு பேரன், ஒரு மகள், புதிதாக முளைக்கும் மூன்றாம் தலைமுறை பேரன் பேத்திகள் எல்லோருக்கும் பதவிகளைத் தேடித் தர வேண்டுமென்றால், காங்கிரஸின் வாலை விடக் கூடாது.

ஸ்டாலின், முத்துக்குமாரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கும் அதே சமயம் அன்பழகன் தான் சோனியா தர்பாரின் எடுபிடிகள் கூட்டம் என்பதை தன் தலைவனின் குரலாக ஒலிக்ப்பதுதான் இரட்டை வேடத்தின் சரியான புள்ளி.

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக தன்னெழுச்சியாக நிகழ்ந்த ஈழ உணர்வு போராட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டவர்களாக‌ சீமானும், அமீரும் பேச, எப்பொழுது தூண்டிலில் மீன் மாட்டும் என்று காத்திருந்த கருணாநிதியின் போலீஸ் அவர்களை கைது செய்ய, திரையுலகம் வீதிக்கு வர, ஊடகங்கள் சினிமாக்காரன்களின் முகத்தை படம் பிடித்து ஈழ விஷயத்தை கோட்டை விட்டார்கள்.

இப்படி திசை திருப்புவது கருணாநிதியின் கைங்கர்யமாக இருக்கலாம். அப்படியே இல்லயென்றாலும் திசை திருப்பும் வித்தை ஒன்றும் அவருக்கு புதிதில்லை. ஈழ விஷயத்தில் உணர்வுப்பூர்வமாக செயல்படுவதைக் காட்டிலும் அறிவுப் பூர்வமாக நடப்பதே இந்தச் சமயத்திற்கு உகந்தது.

கருணாநிதியின் நிலை இப்படியிருக்க, ஜெயலலிதாவோ எப்படியாவது கருணாநிதியை காங்கிரஸிடம் இருந்து ஓரம் கட்ட எல்லாவிதமான காய் நகர்த்தலிலும் ஈடுபடுகிறார்.

ஜெயலலிதாவுக்கு இன்றைய தேவைக்கு புலிகளை எதிர்ப்பதைவிடவும் மிக முக்கியமானது எல்லாம் கருணாநிதியின் தமிழின காவலர் என்ற முகமூடியைக் கிழிப்பதுதான். அது அற்புதமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. கருணாநிதியை வன்னிக்குச் செல்லச் சொல்லுங்கள், அவர் சொன்னால்தான் கேட்பார்கள், பழைய நண்பர்கள் என்றெல்லாம் உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்.

கருணாநிதி 'ஆம்' என்றால் காங்கிரஸ் ஒதுக்கிவிடும். 'இல்லை' என்றால் தமிழ்மக்கள் கேள்வி கேட்பார்கள்.

இவர்களின் இந்த சில்லரை அரசியலில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நேரு குடும்பத்தைத் தாண்டி யோசிக்கும் அளவிற்கு அறிவுடையவர்கள் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்ற "கொஞ்சம்" திராவிட சாய்வு உள்ள தலைவர்களும் பதவிக்காகவோ, தங்களின் தலைவிக்காகவோ கள்ள மெளனத்தில் ஆசனம் செய்கிறார்கள்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்த இனத்தை தனிமனித பகையை மட்டுமே மையமாக வைத்து வேரோடு அழிப்பது என்ற நோக்கோடு இந்திய அரசு பக்சே படைக்கு எல்லாவித உதவிகளையும் கள்ளத்தனமாக வழங்கி வருகிறது. இதே விதமான உதவிகளை சிங்கள அரசு சீனா, பாகிஸ்தானிடமும் இருந்தும் பெறுகிறது. சீனாவும் பாகிஸ்தானும் இந்த இன அழிப்புக்கு பின்னர் இலங்கையில் எந்தவிதமான முக்கியத்துவம் பெறப் போகின்றன என்பதைக் கூட உணராத அதிகாரிகள் நிறைந்ததா இந்திய‌ மத்திய அரசு.

இந்தியாவில் இன்னமும் பெரிய கொடுமை தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் ஈழம் பற்றி நிலவி வரும் எதிர்மறையான கருத்துகள். கிட்டத்தட்ட பெரும்பாலான மக்கள் ஒத்த கருத்தை கொண்டிருக்கிறார்கள்.

தமிழக மற்றும் இந்திய‌ ஊடகங்களின் ஒரு தலைபட்சமான எதிர்வினைகள் கடும் கண்டனத்துக்குள்ளாக வேண்டியவை. கலைஞர் தொலைக்காட்சிக்கும், ஹிந்து பேப்பருக்கும் சம்பவம் நடந்த நுங்கம்பாக்கம் பகுதியில் இருந்து செய்தி கொடுக்க ஒருவரும் இல்லாதது மிகப் பெரிய துக்கந்தான். அவர்களுக்கு ஒரு வரிச் செய்தியாகக் கூட வருவதற்கு தகுதியில்லாததாகிப் போனது இந்த மரணம். இந்த நேரத்திலும் "அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே மெளனவிரதம் நடத்த அனுமதி" என்பதை முக்கியச் செய்தியாக போட்டு தன் தமிழ் பாசத்தை காட்டியது கலைஞர் தொலைக்காட்சி.

பழ.நெடுமாறன், வைகோ, ராமதாசு,திருமா போன்ற இரண்டாம் மட்டத் தலைவர்கள் இதில் ஒன்றும் செய்து விடப் போவதில்லை. ராமதாசுக்கு அவரது மகன் காங்கிரஸ் அரசில் அமைச்சர் என்பது அவ்வப்போது மறந்து விடுகிறது. வைகோவுக்கு தன்னை நம்பி வந்தவர்களுக்காக கட்சி நடத்துவதற்கு கூட ஜெயலலிதாவின் ஆதரவு தேவை.

இத்தகைய அரசியல் நம்பகத்தன்மை உள்ளவர்களை நம்பி மக்கள் யாரும் அணி திரளப் போவதில்லை. ஒரு சரியான வழி நடத்தும் திறன் உள்ள தலைமை இல்லாதது தமிழகத்தில் எத்தகைய உணர்ச்சி கொந்தளிப்பும் பெரிய மாற்றத்தை கொண்டு வரப் போவதில்லை. முன்பு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இன்றைய போராட்டத்தோடு ஒப்பிட முடியாது. அன்றைய நிலையில் வழிநடத்திய தலைமை போன்று இன்று எதுவும் இல்லை. நல்ல தலைமை இல்லாத எந்த ஒரு போராட்டமும் நீர்த்துவிடலாம். மூன்று நாட்கள் அழுது மறக்கக் கூடிய மரணமில்லை இந்த மரணம்.

இந்த எதிர்மறையான கூற்றுக்கள் என்னுடைய கருத்துக்கள்தான் என்றாலும் அதைத் தவிர வேறொன்றும் யோசிக்க முடியாமல் இருக்கிறது.

இவர்களின் சண்டை, பணம், பதவி, அதிகாரம் என்ற மையங்களைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாதது. இவர்களை நம்புவதை விடவும் ஈழத்தவர்கள் சிங்களனை நம்பலாம்.

ஜெயலலிதா ஈழத்திற்கு தான் 'எதிரி' என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். கருணாநிதி இந்த‌ முத்திரையிலிருந்து தப்பிக்க முடியாமல் இருக்கிறார். அதுதான் வித்தியாசம்.

Jan 20, 2009

சென்னை சங்கமம்‍ - கவிதைச் சங்கமம்.

சென்னை சங்கமம் மூன்றாவது ஆண்டாக ஜனவரி 15 ஆம் நாள் கவிதைச் சங்கமத்தை நடத்தியது. இந்த ஆண்டு நிகழ்வுக்கு "கவிக்குற்றாலம்" என்ற பெயரைச் சூட்டியிருந்தார்கள்.

நவீன கவிதை, திராவிட கவிதை, மரபுக்கவிதை என்ற பாகுபாடு இருக்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் இருந்தும் 126 கவிஞர்களின் பெயரை பெருமொத்தமாக பட்டியலில் இணைத்திருந்தார்கள்.

சர்.பிட்டி.தியாகராயர் அரங்கின் வெளியில், வந்திருந்த கவிஞர்களின் பெயர்களை பதிவு செய்யச் சொல்லியும், அவர்கள் வாசிக்கவிருந்த கவிதையின் ஒரு பிரதியை வாங்கியும் வைத்துக் கொண்டிருந்தார் தென்பாண்டியன்.

ஒன்பது மணி வாக்கில் ஆரம்பிப்பதாக இருந்த அரங்கம் கிட்டத்தட்ட பதினொன்றரை வாக்கில் தொடங்கி வைக்கப்பட்டது. கனிமொழி துவக்கி வைப்பதாக இருந்த அரங்கத்தை அவர் வராததால் இளையபாரதி துவக்கி வைத்தார்.

கவிஞர் கலாப்ப்ரியா தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கின் மேடையில் க‌விஞ‌ர்க‌ள் விக்ர‌மாதித்ய‌ன், சுகுமார‌ன், எஸ்.வைத்தீஸ்வ‌ர‌ன் அமர்ந்திருந்த‌ன‌ர். திராவிட‌ எழுத்தாள‌ர் க‌விப்பித்த‌ன், இளைய‌பார‌தி ம‌ற்றும் நிக‌ழ்ச்சி அமைப்பாள‌ர் முத்த‌மிழ் விரும்பியும் உட‌ன் அம‌ர்ந்திருந்தன‌ர். ப‌வா.செல்ல‌த்துரை நிக‌ழ்வை ஒருங்கிணைத்தார்.கலாப்ரியா நீண்ட உரை ஒன்றினை நிகழ்த்தினார். இளையபாரதி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் இருக்கும் சங்கடங்களை பதட்டத்துடனும், கோபமாகவும் பட்டியலிட்டார்.

எந்த வரிசையில் கவிதை வாசிக்க அழைத்தார்கள் என்று தெரியவில்லை. காலை நிகழ்வில் 26 கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள். பின்னர் மதிய உணவு இடைவேளை. அரங்கத்திலேயே ஏற்பாடு செய்திருந்தார்கள். அசைவ‌ம் அஞ்ச‌ப்ப‌ரில் இருந்தும், சைவ‌ம் ச‌ர‌வ‌ண‌ பவ‌னில் இருந்து வ‌ந்திருந்த‌தாம்.

அரை ம‌ணி இடைவெளிக்குப் பிற‌கு அடுத்த‌ அம‌ர்வு இருக்கும் என்ற‌வ‌ர்க‌ள் இர‌ண்டு ம‌ணி நேர‌ம் ஆகியும் துவ‌க்காம‌ல் இருப்ப‌வ‌ர்க‌ளை க‌டுப்பேற்றினார்கள். ம‌திய‌ நிக‌ழ்வுக்கும் க‌னிமொழியின் வ‌ர‌வுக்காக‌ காத்திருந்த‌தாக‌ பேசிக்கொண்டார்க‌ள். ஆனாலும் அவ‌ர் வ‌ர‌வில்லை.

கூட்ட‌த்தில் இருந்த‌வ‌ர்க‌ளின் அழுத்த‌ம் தாங்க‌முடியாம‌ல் க‌னிமொழி வ‌ராமலே மதிய நிகழ்வினை ஆர‌ம்பித்தார்க‌ள். தான்தான் அடுத்த‌ க‌விதை வாசிக்க‌ வேண்டும் என்று கீழே இருந்த‌ ஒவ்வொருவ‌ரும் எஸ்.எம்.எஸ் அனுப்பியும், தொலைபேசியிலும் அழைத்து க‌ழுத்தை நெருக்கிய‌தாக‌ அமைப்பாள‌ர்க‌ள் வ‌ருந்தினார்க‌ள்.

காலையிலும், மாலையிலும் த‌லா இர‌ண்ட‌ரை ம‌ணி நேரத்தை வீண‌டித்த‌தை த‌விர்த்திருந்தால் யாரும் காலில் சுடுத‌ண்ணீரை ஊற்றிய‌து போல‌ குதித்திருக்க‌ மாட்டார்க‌ள் என்று நினைக்கிறேன்.அப்படியிருந்தும் சில கவிஞர்கள் காத்திருந்துவிட்டு கவிதை வாசிக்காமலேயே கிளம்பிவிட்டனர். பட்டியலில் பெயர் இல்லாத கவிஞர்கள் சிலர் இடையிடையே மேடையேறியது, பாக்கெட்டில் கவிதையை பதினாறாக மடித்து வைத்து மேடையில் ஏறி 'ஸ்டைலாக' எடுத்து படித்தது குறித்தெல்லாம் நண்பர்கள் சிலர் 'செம டென்ஷன்' ஆனார்கள்.

சில 'கவிஞர்கள்' தட்டையான வார்த்தைகளை கவிதை என்று மேடையேற்றினார்கள். மிகக் கொடுமையாக இருந்தது. நவீன கவிதைகளுக்கு மட்டும் மேடையில் இடம் தர வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் நல்ல கவிதைகளுக்கு மட்டும் இடம் என்பதை அமைப்பாளர்கள் உறுதிப்படுத்தலாம். நல்ல கவிதை என்ற நிர்ணயம் எப்படி செய்வது என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் பள்ளி ஆண்டு மலர் கவிதைகளை வாசிப்பதற்கும், கேட்பதற்கும் சென்னை சங்கமத்தில் கூடத் தேவையில்லை.

கடந்த‌ இரண்டு ஆண்டுகளாக‌ நடைபெற்ற கவிதைச் சங்கமத்தின் கவிதைகளை "நூறு பூக்கள் மலரட்டும்" என்ற பெயரில் தொகுப்பு நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு தவறு, ராஜா சந்திரசேகரின் கவிதை முகுந்த் நாகராஜனின் கவிதைகளுக்குள்ளாக வந்திருந்தது.

ஆதவன் தீட்சண்யா கவிஞர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் இருந்த 'சர்வாதிகார தொனி'க்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்தார். அமைப்பாளர்கள் எதுவும் பதில் சொன்னதாக நினைவில் இல்லை.

இந்த கவிதைச் சங்கமம் மிக நல்ல முயற்சி. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கான நோக்கம் திசை மாறுவதாக உணர முடிகிறது.

நான் திருமணத்திற்கு பிறகாக வேணியோடு கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது. முக்கியமான நவீன‌ கவிஞர் ஒருவர் எங்களிடம், "இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எந்த நிகழ்ச்சிக்கு வேண்டுமானாலும் இரண்டு பேரும் சேர்ந்து போகலாம். இதைவிட வேறெதுவும் 'போர்' அடிக்காது" என்றார். ஆனால் அவ‌ர் தீர்க்க‌த்த‌ரிசி. நிக‌ழ்ச்சி தொட‌ங்குவ‌த‌ற்கு முன்பாக‌வே இதைச் சொன்னார்.

Jan 14, 2009

ஓரு இரவின் அகாலத்தில் அந்த மரணம் நிகழ்ந்ததுஓரு இரவின் அகாலத்தில்
அந்த மரணம் நிகழ்ந்தது

தூரப் ப‌றவை ஒன்று
உலகிற்கு அறிவித்த
அந்த மரணத்திற்கான‌
மெல்லிசை-
ஓய்ந்த மழையின்
சொட்டுதலில் இருந்தது.

அருகில் இருந்த‌வ‌ன் சப்த‌மிட்டுக் க‌தறினான்
சற்று த‌ள்ளி இருந்த‌வ‌ன் விசும்பினான்
தூரமாய் இருந்தவ‌ன் கணம் மெள‌ன‌மானான்.

கருகிய வாடையின்
ஈரச் சோகம்‍
க‌ட‌லில் க‌ரைந்த‌
இர‌வின் அகால‌த்தில்
அந்த‌ ம‌ரண‌ம் நிக‌ழ்ந்த‌து

நீர்த்தாரையில்-
நடந்த குழந்தையின்
கால்தடமாய் மறைந்த‌
ம‌ர‌ண‌ பிம்ப‌த்தின் க‌தையை
வெயிலின் புழுதிப் புய‌ல்
த‌னித்து புல‌ம்பிய‌து.

நாங்க‌ள்
பேசி
குடித்து
நடிகர்களின்
அந்தரங்கம் நினைத்து
நித்திரை கொண்டோம்.

சித‌றிக் கிட‌க்கும்
அன்பின் க‌ற்க‌ள்
நொறுங்க‌த் துவ‌ங்கும்
ஒரு இர‌வின் அகால‌த்தில்
இந்த‌ ம‌ர‌ண‌ம் நிக‌ழ்ந்த‌து.

நாளையும் நிக‌ழும்
நாளை ம‌று நாளும் நிக‌ழும்.

நாம்
ம‌ர‌ண‌க் க‌ண‌க்கை எழுதலாம்
கொஞ்ச‌ம் பேச‌லாம்
முடிந்தால்
மெள‌ன‌மாய் விச‌ன‌ப்ப‌டலாம்

எதுவுமில்லையென்றால்
___________ கொள்வோம்

பிற‌ந்த‌வ‌னுக்கு
தெரியாதா
சாவ‌தற்கும்
சாவ‌த‌ற்காய் வாழ்வ‌த‌ற்கும்.[த‌மிழ‌னின் வ‌யிறு கிழிக்க‌ப்ப‌ட்டு, த‌மிழ‌ச்சிக‌ளின் நிர்வாண‌ங்க‌ள் சூறையாட‌ப்ப‌டும் இந்த‌ த‌ருண‌த்தில் நாற்ப‌து வ‌ரிக‌ளில் க‌விதை எழுதுவதைத் த‌விர‌ என்னால் வேறெதுவும் செய்ய இய‌ல‌வில்லை என்னும் வெட்க‌த்துட‌ன் ப‌திவு செய்கிறேன்]

Jan 5, 2009

கிளிநொச்சி

சில்க்கூர் என்ற இடம் ஹைதராபாத்தில் இருக்கிறது.மெகதிப்பட்டணத்தில் இருந்து No:288 பஸ் பிடித்தால் பத்து ரூபாய் டிக்கெட். வெங்கடாசலபதி கோயில் இருக்கிறது. "விசா"பாலாஜி என்ற சிறப்பு பெயர் கொண்ட மகராசன். பாலாஜியிடம் வேண்டிக்கொண்டு பதினோரு சுற்று சுற்றினால் விசா கிடைத்துவிடுமாம். அப்புறமாக வந்து நூற்றியெட்டு சுற்றுப் போட்டு நேர்த்திக் கடனை தீர்த்துக் கொள்ளலாம்.

சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் ஐ.டி. மக்களின் கூட்டம் அள்ளும். உண்டியல் கிடையாது. தட்டில் காசு போடும் வழக்கமும் கிடையாது. ஐந்து ரூபாய் கொடுத்து கோயிலின் வரலாற்று புத்தகத்தை வாங்குமாறு தமிழ் பார்ப்பனர்கள் தெலுங்கிலும், ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அறிவிப்பார்கள்.

ஓராண்டுக்கு முன்னதாகச் சென்ற போது திமுக ஆளும் தமிழகத்தில் கோயில்கள் அழிக்கப்பட்டதாகவும், கருணாநிதிதான் இத்தனைக்கும் காரணம் என்றெல்லாம் பரப்புரையில் பின்னியெடுத்தார்கள்.

எதுவுமே தெரியாத கொல்ட்டி மக்கள் பல்லை இளித்துக் கொண்டிருப்பதை பார்த்தால் விஷயம் தெரிந்தவர்களுக்கு எரிந்து கொண்டு வரும். உச்சபட்சமாக தமிழ்நாட்டிலிருந்து வருபவர்கள், இந்தப் புத்தகத்தை தமிழக எல்லை வரை படித்துச் செல்லலாம். எல்லை தாண்டியதும் புத்தகத்தை எடுத்துச் செல்ல பயமாக இருந்தால் ரயிலிலேயே போட்டுவிடலாம் என்று 'அட்வைஸ்' செய்து கொண்டிருந்தார்கள்.

வெளியாட்கள் கேட்டால் நிச்சயமாக தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொள்வார்கள். எனக்கும் பற்றில் கொண்டு வந்தது. ஒரு ஐயரிடம் சொன்னேன். "உங்கவா ஆட்சிக்கு வர வரைக்கும் நீங்க அந்தப் பக்கம் வந்துடாதீங்கோ!கொளுத்திடுவா. கொலைகாரப்பசங்க!". அதற்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க "டூ யுவர் டூட்டி" என்றார்.

====

மிகச் சமீபத்தில் சென்ற போதும் கலைஞருக்கும், திமுக ஆட்சிக்கும் அதே வர்ணனைகள்தான். ஆனால் எனக்கு எந்தக் கோபமும் வரவில்லை. தமிழினத் தலைவரின் மீது எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் கடந்த ஓராண்டில் அடியோடு கலைந்து போயிருக்கிறது.

====

கிளிநொச்சியில் ஒருவர் கூட இல்லையாம். வீட்டையும், வாழ்ந்த ஊரையும் விட்டு அவர்கள் எங்கே சென்றிருக்கிறார்கள்? சொந்த நாட்டில் அகதிகள் ஆக்கப்பட்ட அவர்களுக்கு உலக்த்தமிழ் மக்களின் தலைவரான உங்களின் பதில் என்ன?

முன்னகர்ந்து கொண்டிருக்கும் சிங்கள இராணுவம் ஒருவேளை அவர்களை சுற்றி வளைத்தால் அரங்கேறப் போகும் கொடூர, குரூர நிகழ்வுகளுக்கு கவிதை எழுதுவதை தவிர்த்து உங்களின் எதிர் வினை என்னவாக இருக்கும்? 

இந்திய அரசின் மெளனத்திற்கான பொருள் குறித்து தமிழர்கள் எழுப்பும் வினாவிற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்?

=====

இது எல்லாம் பெரிய மனுஷங்க விஷயம். நமக்கு எதுக்கு வம்பு? பேசாமல் "இணைந்த குடும்பம்" வெளியிடும் மசாலா  படங்களை பார்த்துவிட்டு ஈழச் செய்தியே படிக்காமல் இருந்துவிடலாம். மொத்தமாக ஈழத்தை சுத்தம் செய்துவிட்டுச் சொல்லுங்கள். இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவான் என் சுரணையற்ற பயந்தாங்கொள்ளி தமிழன்.