கலாப்ரியா என்ற பெயர் மீது எனக்கு பள்ளிக் காலத்திலிருந்து ஒரு ஈர்ப்பு உண்டு. அவரது கவிதைளுடனான அறிமுகம் அதற்கு வெகு நாட்களுக்கு பிறகே எனக்கு உண்டானது.
என் கல்லூரி விழா ஒன்றிற்கு வந்திருந்த நா.முத்துக்குமார் "கலாப்ரியாவை படிங்க" என்று சப்பாத்தியும், கோழிக் குழம்புமாக மென்று கொண்டே சொன்னது ஞாபகம் இருக்கிறது.
அதன் பிறகாக கவிதைகளை வாசிக்கத் துவங்கிய நாட்களிலிருந்தே கலாப்ரியாவின் கவிதைகளில் இருக்கும் காட்சிகளின் கவித்துவம் பிரமிப்பூட்டக் கூடியதாக இருந்து கொண்டிருக்கிறது.
கலாப்ரியாவின் கவிதைகளின் நுண்ணடுக்குகளில் இருக்கும் உணர்ச்சிகளை எந்தவொரு வாசகனாலும் எளிதில் உள்வாங்க முடியும்.
அவரது பிரசுரமாகாத எண்ணற்ற கவிதைகளில் இரண்டு கவிதைகளை இணைக்கிறேன்.
கலாப்ரியாவில் இருக்கும் சோமசுந்தரத்தின் கவித்துவமான நகைச்சுவையுணர்வை கண்டு கொள்ள முடிவதற்கான வாய்ப்புள்ள கவிதைகள் இவை.
இன்னமிருக்கும் பிரசுரமாகாத கவிதைகளை அவரது வலைப்பதிவில் (www.kalapria.blogspot.com) தொடர்ந்து "உதிரிகள்" என்ற தொகுப்பில் வாசிக்கலாம்.
--------1--------------------
சாலையோரத்துக்
குளங்கள்
பவுர்ணமி நிலவில்
ஒளிந்து கொள்ள முடியாமல்
தத்தளிக்கின்றன
எலிமெண்டரி ஸ்கூல்
சினேகிதனை
எதிர் கொள்ள
நேர்ந்த பருவப்பெண் போல
==17.1.1995
-------------2-----------------
மேய்க்கிறவனின்
குரல் கேட்டு
குட்டையை விட்டு
நீங்குகின்றன
எருமைகள்
தாமரையிலையில்
சாணமிட்ட படி
==17.1.1995
1 எதிர் சப்தங்கள்:
கலாப்ரியாவை எனக்கும் பிடிக்கும். புகைப்படங்களோடு அவரது வலைமுகவரியைத் தந்தமைக்கு நன்றி நண்பரே :)
Post a Comment