முதல் விமானப் பயணம், முதன்முதலாக அமெரிக்க டாலர்கள் கைக்கு வருகிறது.(இது பயணப்படி). அப்படி இப்படியென்றாலும் எனக்கும் உள்ளூர கொஞ்சம் வருத்தமாக இருந்தது. பரவசத்தை மீறிய ஒரு துக்கம் என்றாலும் பொருந்தும்.
கோலாம்பூரில் வந்து சேர்ந்து அங்கிருந்து பினாங். வந்து பெட்டியை கீழே வைத்தவுடன் பெருந்தூக்கம் ஒன்று தாக்கியது. மாலையில் உண்வுக்காகச் சென்ற போது காசிம் முஸ்தபா ரெஸ்டாரண்ட் வாசலில் புரோட்டா மாவு பிசைந்து கொண்டிருந்தார்கள். ஹைதராபாத்தில் கூட புரோட்டா எளிதில் கிடைக்காது. இரண்டு புரோட்டா 1.60 வெள்ளி. நம்ம கணக்கில் ஒரு வெள்ளி பதின்மூன்று சொச்சம் ரூபாய்கள். கடையில் இருக்கும் கீழக்கரை மக்களோடு கொஞ்சம் அளவளாவி அருகில் இருக்கும் புகிட் ஜம்புல் என்ற ஷாப்பிங் காம்ப்ளக்சில் தசாவதாரத்திற்கு கழுத்தை கொடுத்து அசின் அலம்பலில் வெந்து போய் வெளியே வரும் போது அட நம்ம ஊரு என்ற மனநிலை வந்துவிட்டது.
வல்லினம் நவீன் ஜிடாக்கில் பேசும் போது மலேசிய இலக்கியம் பரவலாக கவனம் பெறவில்லை என்றார். இன்னொரு நண்பர் மலேசியாவில் கார்த்திகேசு, பீர் முகம்மது தவிர்த்து இலக்கியத்தில் தீவிரமாக இயங்கும் ஆட்களை எனக்குத் தெரியவில்லை என்றார்.
எனக்கு வேறு பெயர்கள் அறிமுகமில்லை. நான் வந்த நாளிலிருந்தே யாராவது இலக்கிய நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்று இந்தியாவில் இருக்கும் நண்பர்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
சென்ற வாரம் ஜெட்டி கடற்கரையில் தனியாகச் சுற்றிக் கொண்டிருந்தேன். மலேசியாவில் கத்தி வைத்து பணம் பறிப்பார்கள் என்று சொன்ன நண்பரை நினைத்துக் கொண்டு பயத்துடன் திரிந்து கொண்டிருந்தேன். பினாங் ஒரு கடற்கரை நகரம். தீவும் கூட. இன்று பினாங்கை மலேசியாவுடன் இணைப்பதற்கான பாலம் இருக்கிறது. அன்று கடல் மட்டுமே இணைப்பாக இருந்திருக்கும். அதனால்தான் துறைமுகம் இருக்கும் ஜெட்டி என்ற இடம் அந்தக் காலத்தில் செழித்து இருந்திருக்கிறது. கட்டங்கள் அதை பறை சாற்றுகின்றன. அந்தக்காலத்தின் கட்டங்களை இன்னமும் பாதுகாக்கிறார்கள். 1700களின் இறுதியில் கட்டப் பட்டிருக்கும் கார்ன் வாலிஸ் கடற்கரை கோபுரம் இன்னமும் இருக்கிறது.
துறைமுகத்தின் எதிரில் "தி கொழும்பு கமர்சியல் கம்பெனி" என்ற பெயர் பலகையை ஒரு பாழடைந்த கட்டடத்தில் பார்த்தேன்.அதற்கு குறைந்தது நூறு வருடங்கள் இருக்கக்கூடும்.அந்தக் காலத்தில் தமிழன் பணி செய்திருப்பான். இந்தியாவில் அவனது சொந்த ஊரிலும் சுற்றுவட்டாரத்திலும் அவன் மலேசியாவில் கப்பல் கம்பெனியில் பணிபுரிவதாக பேசிக் கொண்டிருந்திருப்பார்கள்.
நாகூர் தர்கா ஷெரீப் என்ற தர்க்கா நானூறு வருடங்கள் பழமையானதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
தமிழனுக்கும் மலேசியாவிற்குமான இணைப்பு இன்னும் கூட பழமையானது என்றாலும் பத்து நாட்களில் என்னால் நானூறு வருடங்களைத்தான் நெருங்க முடிந்திருக்கிறது.
லிட்டில் இந்தியா என்ற ஒரு இடம். இதுவும் அதே ஜெட்டி பகுதியில்தான். காரைக்குடி மெஸ்களும், தமிழ்த் திரைப்பாடல்கள் ஒலிக்கும் கேசட் கடைகளும், அண்ணாச்சி மளிகைக்கடைகளும் நிரம்பியிருக்கின்றன. கடுகு எண்ணெய் வாடையில்லாத ஒரு இடம் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
ஒரு புத்தக்கடை தென்பட்டது. வைரமுத்துவும் ரமணிச் சந்திரனும் நிரம்பியிருக்கிறார்கள்.2.30 வெள்ளி கொடுத்தால் இந்த வார விகடன் வாங்கலாம். "வேற புக்ஸ் எல்லாம் கிடைக்காதா சார் என்றேன். வைரமுத்துவோட வைகறை மேகங்கள் படிங்க. ரொம்ப நல்லா இருக்கும்" என்றார்.
எனக்கு ஒரு சந்தேகம். தமிழகத்தில் சில கடைகளில் நவீன இலக்கிய புத்தகங்கள் எல்லாம் கிடைக்காது. ஜோதிடம், ஆன்மிகம் தொடங்கி, உதயமூர்த்தி வழியாக, ரமணிச் சந்திரனிலும், வைரமுத்துவிலும் நின்று விடுவார்கள். தபூ சங்கர் அல்லது பா.விஜய்க்கு கொஞ்சம் இடம் இருக்கலாம். நான் மலேசியாவில் நுழைந்த கடை இது போன்ற கடையா?
இல்லையென்றால் நவீனின் வினாவிற்கு பதில் கிடைத்திருக்கிறது எனக்கு.