May 30, 2008

இரண்டு கவிதைகள்


1) வெயிலின் கிளைக‌ளை ஓவிய‌மாக்குப‌வ‌ள்

ஆண்க‌ளால் நிர‌ம்பியிருக்கும்
பேருந்தில் ஏறியவள்
வெறித்து
கணங்களைக் கடத்தினாள்.

இர‌வின் ப‌க்க‌ங்க‌ளில் எழுதிய‌ க‌தைகளில்
மழைத்துளியின் க‌ன்ன‌ங்க‌ளில் வ‌ரைந்த‌ ஓவியங்களில்
காற்றின் இடைவெளிக‌ளில் நிர‌ப்பிய‌ க‌விதைகளில் -
நினைவுப் பந்தலிட்டு
வ‌சிக்கத் துவங்கிய
அவ‌ளுக்கும்
என‌க்குமிடையில்
நீ
வருகையில்

சொல்ல‌த்துவ‌ங்கினாள்
தான்
வெயிலின் கிளைக‌ளை
ஓவிய‌மாக்குப‌வ‌ள் என்று.

நன்றி: நெய்தல்
------
2) க‌விதையைக் கைவிடுத‌ல்

ம‌ர‌ண‌த்தின் க‌விஞ‌ன்
இரவின் பேரமைதியில்
கவிதை எழுதத் துவங்கினான்.

வேசி
மதுக்குப்பி
சிகரெட் துண்டு
கண்ணாடி மீன்கள்
சொற்களாகின.

முடிவுறாத வரிகளின்
விரல் பிடித்து நடந்தவன்
பெரும் வ‌ன‌த்தின்
இருளில்
க‌விதையைக் கைவிடுகிறான்.

அவ‌ன்-
திக்க‌ற்ற‌ பர‌ப்பில்
க‌விதையின்
துக்கத்தை நினைக்கையில்
பதட்டம் க‌விகிறது‍.

ந‌ட்ச‌த்திரவொளியில்
ந‌டுங்கும்
மயான‌மொன்றின் ப‌த‌ட்டம்.

நன்றி: வார்த்தை, மே'2008
---
ஓவியம்: ராஜன் புதியேடம்

May 29, 2008

ஆர்குட் பூதம்

ஆர்குட். கூகிள் நிறுவனம் நடத்தும் வலைதளத்தின் பெயர் இது. இணையத்தை உபயோகப்படுத்தும் இளைய தலைமுறையினரில் இந்த இணையத்தளத்தில் உறுப்பினராக இல்லாதவரை பார்ப்பது என்பது புற்று வளரும் அளவிற்கு தவம் செய்து சிவ பெருமானை தரிசிப்பதற்குச் சமம்.

இந்த‌த் தளத்தின் பயனாளர் தன்னைப் பற்றி சில குறிப்புகள், புகைப்படம் ஆகியவற்றை தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள பக்கத்தில் வைத்துக் கொள்வார். இவற்றை மற்ற யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். மற்றவரின் பக்கத்தைப் பார்த்து ஏதாவது ஒரு அம்சத்தில் கவரப்பட்டு அவரோடு நட்பு வளர்க்கலாம் என்று தோன்றினால், அவரின் பகுதிக்கு சென்று "ஹாய்" ,"நீங்கதான் அவரா?", "நாம் இருவரும் நண்பராக இருக்கலாமா?" என்று ஏதாவது ஒரு வாக்கியத்தில் ஆரம்பிப்பார்கள். இப்படி எழுதுவதற்கு 'ஸ்க்ரேப்' என்று பெயர்.

தனக்கு வந்திருக்கும் அந்தச் செய்தியை படித்த நபர், செய்தி கொடுத்தவரின் பக்கத்திற்கு வந்து அவரின் புகைப்படம், அவரைப்பற்றிய செய்திகளைப் பார்ப்பார். அவருக்கும் பிடித்துவிட்டால் அடுத்த சில நாட்கள் அல்லது மணிகளில் இருவரும் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். இது பெரும்பாலும் பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் நட்பளவிற்கு இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவரின் பகுதியில் அவர் எதாவது எழுதுவது அவரின் பக்கத்தைத் திறந்து இவர் எழுதுவது என்று தொடரும். 'ஸ்க்ரேப்' செய்யாத நாட்களில் இருவருக்கும் மண்டையே பிளந்துவிடலாம்.

இந்த இணையத்தளத்தில் குழுமங்களும் இருக்கின்றன. குழுமங்கள் என்பது யாராவது ஒருவர், ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி குழுமத்தை தொடங்குவார். உதாரணமாக "ரஜினி காந்த்". ரஜினியின் புகைப்படங்களை வைத்து அவரைப் சில குறிப்புகளையும் குழுமத்தை ஆரம்பிப்பவர் போட்டு வைப்பார். இக்குழுமம் கண்ணில்படும் யாராவது ரஜினி மீது ஈர்ப்பு உடையவராக இருந்தால் குழுமத்தில் இணைந்து விடுவார். முதலில் கொஞ்ச நாட்கள் அவரும் ரஜினி பற்றிதான் குழுமத்தில் பேசுவார். இணையாகவே அக்குழுமத்தில் உள்ள வேறொருவரின் பக்கத்தில் சென்று "அய்..நீங்களும் ரஜினி ரசிகரா? நானும்தான்" என்று ஆரம்பிப்பார். இப்படியாக புதிதாக சில ஆட்களின் நட்பு கிடைத்தவுடன் குழுமத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் அல்லது அவ்வப்போது எதையாவது எழுதலாம்.

இப்படியான குழுமங்கள் தென் அமெரிக்க எழுத்தாளர் மார்க்வெஸ் தொடங்கி நடிகை மும்தாஜ் வரைக்கும் இருக்கின்றன. மாடர்னிசம் தொடங்கி சைக்கோத்தனம் என்னும் வரை நீள்கிறது.

நல்ல விஷயம்தானே. நட்பு வட்டம் பெரிதாகிறது. சில பொதுவான விஷயங்களை விவாதிக்க முடிகிறது. இப்படி எல்லாம் நீங்கள் நினைத்தால் "ரொம்ப நல்லவராக" இருக்கிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். இத்தகைய தளங்களுக்கு 'கம்யூனிட்டி' தளங்கள் என்று பெயர். ஆர்குட் தவிர்த்து எண்ணற்ற கம்யூனிட்டி தளங்கள் செயல்படுகின்றன. இந்தியாவில் இணையத்தை உபயோகப்படுத்துபவர்கள் பெரும்பான்மையான நேரம் 'கம்யூனிட்டி' தளங்களில் செலவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சைபர் உலகத்தில் கீபோர்ட் மூலமாக உருவாக்கப்படும் சொற்களால் எதை வேண்டுமானாலும் செய்ய முயல்கிறார்கள். தான் டைப் செய்யும் எழுத்துக்களை நூலாக பிடித்து அடுத்தவரின் இதயத்தை நெருங்கிவிடுவதான பாவனைதான். மற்றபடி சைபர் உறவுகள் உடைந்து போவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஒரு உறவு உடைந்து போகும் பட்சத்தில் சில நாட்களின் மெளனத்திற்குப் பிறகு அல்லது உடனடியாக இன்னொரு அந்தரங்கமான உறவை பெற்றுவிட முடிகிறது.

தொண்ணூறு சதவிகிதம் ஆட்கள் எதிர்பாலின நட்பைத் தேடித்தான் உறுப்பினராக இருக்கிறார்கள் என்று என் நண்பன் சொல்கிறான். இன்னொரு செய்தியும் அவன் சொன்னதை கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒரு சைபர் உறவை ஒருவன்/ஒருத்தி உடைப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் போதே அவருக்கு வேறொரு விருப்பமான உறவு, தற்போதைய உறவை விட கவர்ச்சியான உறவு அமைந்துவிட்டதாகவும் சொல்கிறான் அல்லது ஒரே சமயத்தில் பல்வேறு தளங்களில் வெவ்வேறு உறவுகளை ஒருவர் பராமரிப்பதும், ஒரு உறவு குறித்தான தகவல்களை மற்ற உறவுகளுக்குத் தெரியாமல் வைத்திருப்பதும் நடக்கிறது என்கிறான். அவசியம் ஏற்பட்டு வேறொருவரோடான தன் சைபர் உறவு பற்றி மற்றவரிடம் பேசும் போது மேலோட்டமாக மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறார்கள்.

சில நண்பர்கள் ஆர்குட்டினை திறக்க முடியாத நாட்களை கை உடைந்தவர்கள் போல உணர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதையாவது யோசிக்க வேண்டும், அதை யாருடைய பக்கத்திலாவது எழுதிக் கொண்டிருக்க வேண்டும். இதனை ஒரு வித போதை என்று சொல்கிறார்கள்.

பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆர்குட்டை தடை செய்து வைத்திருக்கின்றன. ஆனால் பிராக்ஸி என்றொரு ஆயுதம் இருக்கிறது அதை வைத்து உள்நுழைந்து விடலாம். தடை செய்ய வேண்டும் என்று நினைத்து ஒரு குறிப்பிட்ட தளத்தை மட்டும் தடை செய்தல் என்பது இன்றைய சூழலில் முடியாத காரியம். ஆர்குட் அல்லது அதனையொத்த வேறு தளங்களால் உலகம் முழுவதும் நடக்கும் குற்றங்களில் சாம்பிளுக்கு ஒன்று மட்டும் இங்கே.

கெளசாம்பி, சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி கம்பெனியின் மும்பை கிளையில் பணிபுரிந்து கொண்டிருக்கையில் அவருக்கு ஆர்குட் அறிமுகமாகிறது. ஆர்குட்டோடு சேர்ந்து 28 வயதான மணீஷ் தாக்கூரும் அறிமுகமாகிறார்.

மணீஷை பற்றி கெளசாம்பியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் "விளையாட்டுத்தனமான, உண்மையாகவே கவனித்துக் கொள்கிற தனமையுள்ள அன்பாளன்...விளையாட்டாகட்டும், இசையாகட்டும்,படிப்பாகட்டும் அவன் ஆல்ரவுண்டர்". மணீஷின் ஆர்குட் பக்கத்தில் அவரைப் பற்றி கெளசாம்பி எழுதி வைத்திருக்கும் வாசகங்கள்தான் மேலே சொன்னது.

"நீங்கள் என்னோடு பழகும் போது சுவாரசியமாக உணர்வீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள். நல்ல நண்பர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி. நன்றி" மணீஷ் தன்னைப் பற்றி தன் பக்கத்தில் எழுதி வைத்துக் கொண்ட வாசகங்கள் இவை.

கெளசாம்பி, மணீஷ் இருவரும் ஆர்குட் மூலமாக பழகிய பின்னர், தொலைபேசி மூலமாகவும், சாட்டிங் மூலமாகவும் உறவை வளர்த்திருக்கிறார்கள். உறவின் உச்சகட்டமாக மும்பையின் ஒரு வசதியான் விடுதியில் அறை எடுத்திருக்கிறார்கள். பின்னர் என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யூகித்திருப்பீர்கள். நீங்கள் யூகித்த்தும் சரிதான். மர்மக் கதைகளில் வருவது போல விடுதிப் பணியாளர் காலையில் கதவைத் தட்டியிருக்கிறார். நீண்ட நேரம் தட்டியும் யாரும் திறக்காததால் கதவை உடைத்திருக்கிறார்கள். கழுத்திலும், தலையிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கெளசாம்பி இறந்து கிடந்திருக்கிறார்.

விசாரணையில் இருவரும் இதற்கு முன்னதாகவே மும்பையில் வேறு சில ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. காணாமல் போய்விட்ட மணீஷ்க்கு காவல்துறையினர் வலை விரித்திருக்கிறார்கள். மற்ற லாட்ஜ் கொலைகளில் இருந்து எந்த விதத்திலும் பெரிய வேறுபாடில்லாத இந்த சம்பவத்தின் முக்கியமான அம்சமே இருவருக்குமிடையிலான அறிமுகம் எப்படி ஏற்பட்டது என்பதுதான்.

இந்தக் கட்டுரையின் நோக்கம், ஆர்குட் என்பது தவறான இணையதளம் என்பதைக் குறிப்பிடுவதற்காக இல்லை. எந்தத் தொழில்நுட்பத்தையும் தவறாக பயன்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதனை சுட்டிக்காட்டுவதாகும்.

இன்டர்நெட் உலகத்தில் இரண்டு அறிமுகமற்ற மனிதர்கள் சந்தித்து எந்த விதமான உறவும் நிலைபெற்று அவர்களின் முடிவு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள்ளாக‌ கொலை வரைக்கும் சாத்தியம் என்பது பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட நினைத்து பார்த்திருக்க முடியாத விஷயம்.

ஒரு இணையதளம் மட்டுமே இருவருக்குமிடையிலான பாலமாகியிருக்கிறது. இருவரும் சொற்களை கீபோர்டில் தட்டி தட்டி நெருக்கமாகியிருக்கிறார்கள். இரண்டு மாத காலம் ஒன்றாக வேறு விடுதிகளிலும் தங்கியிருக்கிறார்கள். அறுபது நாட்களில் எல்லாம் முடிந்து உறவு முடிந்து ஆயுளும் முடிகிறது. எஸ் எம் எஸ்ஸின் அளவுதான் வாழ்க்கையும் என்பதும் நம் தலைமுறைக்கு சாத்தியப்பட்டிருக்கிறது.
--------

அந்திமழை.காம் தளத்தில் வெளிவரும் விரல்நுனி விபரீதம் தொடரின் ஏழாம் அத்தியாயம்.

May 28, 2008

ஒரு கவிதை - ஒரு சொல்

(1)
ஒரு கவிதை உதிரும் தருணத்தை வேறு எதனுடனும் ஒப்பிட முடியும் என்று தோன்றவில்லை. எந்தக் கவிதையும் தந்துவிட முடியாத ஒரு பரவச கணத்தை ஒருவனுக்கு அதிகாலை தெரு வெளிச்சம் தந்துவிடலாம் அல்லது வாழ்நாள் முழுவது தேடியலைந்த, சிலிர்ப்பூட்டக் கூடிய கணத்தை கவிதையின் ஒற்றை வரியோ அல்லது கவிதை வரிகளினூடாக ஒளிந்து கிடக்கும் மெளனமோ தந்துவிடலாம். கவிதையின் சூட்சுமம் இதில்தான் இருக்கிறது. இந்த சூட்சுமத்தை அவிழ்த்துவிடவே ஒவ்வொரு கவிதையும் முயன்று கொண்டிருப்பதாக எனக்குப் படும்.

க‌விதையில் இட‌ம்பெறாத‌ ஒவ்வொரு சொல்லும், இட‌ம் பெற்ற‌ சொற்க‌ளைக் காட்டிலும் முக்கிய‌மான‌வை. அவை க‌விதையில் ஏற்ப‌டுத்தும் வெற்றிட‌த்தில் - மெள‌ன‌த்தில் வாச‌க‌ன் த‌ன் ஆயாச‌த்தோடு ஓய்வெடுக்கிறான். த‌ன் எண்ண‌ங்க‌ளை அலைய‌விட்டு க‌விதைக்கான‌ வ‌ர்ணங்க‌ளைக் க‌ண்ட‌டைகிறான். இந்த வெற்றிட‌மும் மெள‌ன‌மும் க‌விதையில் உண்டாக்கும் ச‌ல‌ன‌மின்மையை, மெல்ல‌க் க‌ளைத்துவிடும் ப‌ணியை த‌ன் சொற்க‌ளின் மூல‌ம் க‌விஞ‌ன் மேற்கொள்கிறான். இந்த‌ச் ச‌ல‌ன‌மும், மெள‌ன‌முமே க‌விதையை உள்வாங்கும் வாச‌க‌னை அதிர்வுற‌வோ, ஆர‌வாரிக்க‌வோ, ஆன‌ந்த‌ம‌டைய‌வோ அல்ல‌து க‌ண்ணீர் க‌சிய‌வோ செய்கின்ற‌ன‌.

க‌விதையில் உண்டாகும்‌ ச‌ல‌னமின்மை, ச‌ல‌ன‌ம், மெள‌ன‌ம் என்ற‌ த‌ன்மைக‌ளின் க‌ல‌வையில் க‌விதை த‌ன‌க்கான‌ இட‌த்தை தானே பெற்றுக் கொள்கிற‌து.

(2)
க‌விதையில் சொற்க‌ளை தேர்ந்தெடுப்ப‌த‌ற்கு க‌விஞ‌ன் பெரும் பிர‌ய‌த்த‌ன‌ப் ப‌ட‌ வேண்டியிருக்கிற‌து. க‌விதையை ப‌டைத்த‌வ‌னின் எண்ண‌த்திற்கு முற்றிலும் முர‌ணான‌ ஒருவ‌ன் வாசிக்கும் போது், அந்த‌க் க‌விதையை முற்றாக‌ வேறொரு த‌ள‌த்தில், வேறொரு அர்த்த‌த்தில் அவனால் புரிந்து கொள்ள‌ முடியும். இது பெரும்பாலும் உரைந‌டையில் சாத்திய‌மில்லாத‌ அம்ச‌ம்.

இந்த‌ மாற்று த‌ள‌ம், மாற்றுப் பொருளை உருவாக்குவ‌த‌ற்கான‌ பொறுப்பு ப‌டைப்பாளியிட‌ம் இருக்கிற‌து.சொற்க‌ளைத் தேர்ந்தெடுப்ப‌திலும், க‌விதையில் அந்தச் சொற்களுக்கான‌ இட‌த்தை அளிப்ப‌திலும், சொற்க‌ளை வெட்டும் நுட்ப‌த்திலும் இந்தப்‌ பொறுப்பினை க‌விஞ‌ன் நிறைவேற்றுகிறான்.

க‌விதை(இந்த‌ச் சொல் போகிற‌ போக்கில் எழுத‌ப்ப‌ட்ட நிலாவினை பிடிக்கும் அல்ல‌து க‌ன்ன‌த்தை ம‌துக் கிண்ண‌த்தோடு ஒப்பிடும் சொற்கூட்ட‌ங்க‌ளை குறிப்பிட‌வில்லை என‌க் கொள்க‌.) த‌ன் சொற்க‌ளின் க‌ட்ட‌மைப்பின் கார‌ண‌மாக‌ இசைத் த‌ன்மையை உருவாக்குவ‌தாக‌, காட்சியொன்றை வெளிப்ப‌டுத்துவ‌தாக‌ அல்ல‌து க‌தையின் புனைவோடு அமைவ‌தாக‌ என‌ எப்ப‌டியும் வ‌டிவ‌ம் பெற‌லாம்.

க‌விதைக்கான‌ சொற்தேட‌லில் க‌விஞ‌ன் மிகுந்த‌ பொறுப்புண‌ர்ச்சியோடு செய‌ல்ப‌ட‌ வேண்டுமென்பேன். இங்கு க‌விதையை க‌விதையாக‌ வாசிப்ப‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை சொற்ப‌ம். இந்த‌க் கூற்றினை நான் புகாராக‌ ப‌திவு செய்ய‌வில்லை.

இந்த சொற்ப எண்ணிக்கையில் உள்ளவர்களில் க‌விஞ‌னை விட‌ க‌விதையை உக்கிர‌மான‌ பார்வையில் வாசிப்ப‌வ‌ன் உண்டு. அந்த வாசகனின் அறிவு, க‌விதைக்குள்ளான‌ க‌விஞ‌னின் அறிவை விட‌ அதிக‌ம். மூன்று மாத‌மாக‌ க‌விதையை உருவாக்க‌ செல‌வான‌ ப‌டைப்ப‌வ‌னின் உழைப்பை நிராக‌ரிக்க‌ அவ‌னுக்கு ஒரு சொல்லினை க‌ட‌ப்ப‌த‌ற்கான‌ நேர‌ம் ம‌ட்டுமே தேவைப்ப‌டுகிறது.

அந்த‌ வாச‌க‌னை க‌விதைக்குள்ளாக‌ கொண்டு வ‌ருவ‌தும் அவ‌னை க‌விதை ப‌ற்றி பேச‌ச் செய்வ‌தும் க‌விஞ‌ன‌து க‌ட‌மை.

சொற்தேர்வின் நுட்ப‌த்தோடுதான் க‌விதை எழுத‌ வேண்டும் என்ப‌தை வ‌லியுறுத்த‌ நான் வ‌ர‌வில்லை. ஆனால் க‌விதையின் அம‌ர‌த்துவ‌ம் சொற்க‌ளின் ப‌ய‌ன்பாட்டிலும் இருக்கிற‌து.

(3)

ந‌குல‌ன் ப‌ற்றிய‌ நாலு க‌விதைக‌ள் 'புதிய‌ பார்வை'யில் வாசிக்கும் போது நான்காவ‌து க‌விதையில் க‌விஞ‌ரின் சொற்பிர‌யோக‌ம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய‌து.

வ‌லி என்றாள் சுசிலா
திரும்ப‌ மெள‌னித்து
த‌ன் போர்வைக்குள்
அட‌ங்கினார் ந‌குல‌ன்

சுசிலாவின் ம‌றுநாள் ம‌ர‌ண‌த்தில்
அழுக‌ ம‌றுத்து
சாப்பிட‌ச் சென்றார்.

இந்த‌க் க‌விதையில் 'அழுக‌' என்ற‌ சொல்லினை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் என்ன‌ நேர்ந்த‌து? 'அழுக‌' என்ப‌து 'அழுகிப் போத‌ல்' என்ற‌ பொருளில் வ‌ர‌லாம். ஆனால் ந‌குல‌ன் காய்க‌றியா என்று தெரிய‌வில்லை.

'அழுவ‌த‌ற்கும்', 'அழுகுவ‌த‌ற்கும்' உள்ள‌ பெரும் வித்தியாச‌த்தின் நுணுக்க‌மில்லாத‌ க‌விதையொன்று வாசகனுக்கு அதிர்ச்சியை உண்டாக்குவ‌தில் விய‌ப்பில்லை.

வாய்மொழி வ‌ழக்கில் உள்ள‌ சொற்க‌ளை க‌விதைக்குள் கொண்டு வ‌ரும் போது க‌விஞ‌ன் கைக்கொள்ள‌ வேண்டிய‌ எச்ச‌ரிக்கையுண‌ர்வுக்கு இக்க‌விதை உதார‌ண‌மாகிற‌து.

நாஞ்சில் நாட‌ன் அவ‌ர்க‌ள் த‌மிழில் க‌விதையை அடுத்த‌ த‌லைமுறைக்கு கொண்டு செல்ல‌விய‌லும் என்ப‌தில் த‌ன‌க்கு பெரும் ச‌ந்தேக‌மிருப்ப‌தாக‌ச் சொன்னார். அத‌ற்கு அவ‌ர‌து கார‌ண‌ங்க‌ளில் பிர‌தான‌மான‌து த‌ற்கால‌க் க‌விஞ‌ர்க‌ள் மொழி மீது ஆளுமை இல்லாம‌ல் இருப்ப‌து. இதை ஏற்றுக் கொள்ள‌ வேண்டித்தானிருக்கிற‌து.

வெறும் இருநூற்றைம்ப‌து சொற்க‌ளைத் திரும்ப‌ திரும்ப‌ ப‌ய‌ன்ப‌டுத்தி க‌விதைக‌ளை வ‌டிவ‌மைப்ப‌தும், சொற்க‌ளின் பிர‌யோக‌த்தில் பெரும் ப‌ல‌வீன‌ர்க‌ளாக‌ இருப்ப‌தும் அடுத்த‌ த‌லைமுறை த‌மிழ்க் க‌விஞ‌ர்க‌ளின் குறைபாடு.

இந்த‌க் குறைபாடுக‌ள் உள்ள‌வ‌ர்க‌ள் க‌விதையை த‌ன்னோடு வைத்திருப்ப‌தும், கொஞ்ச‌ நாட்க‌ளாவ‌து வாசிப்புட‌ன் நிறுத்திக் கொள்வதும் ந‌ல்ல‌து.

இதை என‌க்கும் சேர்த்துச் சொல்கிறேன்.

May 12, 2008

நித்யா க‌விதை அர‌ங்கு : க‌.மோக‌ன‌ர‌ங்க‌ன் க‌விதைக‌ள்

1) பாற்கடல்

விதிக்கப்பட்டதற்கும்
கூடுதலாக ஒரு
நாழிகைக்கும் ஆசைப்படவில்லை.
மெய்யாகவே,
தாக மேலீட்டினால் தான்
அதுவும் கூட‌
ஒரு மிடறுதான் இருக்கும்
பதைத்து நீண்ட உன்
மெலிந்த கைகள்
நெறித்து நிறுத்த‌
விக்கித்துப் போனேன்
அறையின் நடுவே
கொட்டிக் கவிழ்ந்த கலயத்தினை
வெறித்த வண்ணம்
முணுமுணுக்கிறாய்
விதிக்கப் பட்டதற்கும்
குறைவாக ஒரு
நாழிகைக்கும் ஆசைப்படாததே
---
2) தவளையின் சங்கீதம்

என்
விழிக் கோணத்தின்
அரை வட்டப் பாதையில்
நூற்று எண்ப‌து
பாகைக‌ளுக்குள்ளாக‌
தோன்றி ம‌றையும்
காட்சிக‌ளின்
தொட‌ரோட்ட‌த்தில்
மித‌ந்து வ‌ருமொரு
ப‌ழுத்த‌ இலை மீது
அசையாம‌ல்
அம‌ர்ந்திருக்கும் த‌வ‌ளை
வித‌ந்தோதுகிற‌து
நேற்று நாளையென‌
ந‌ழுவிபோகும் நிமிஷ‌ங்க‌ளுக்கு
அடியில் எட்டாத‌
ஆழ‌த்தில்
அலையும்
த‌ற்க‌ண‌த்தின்
சிப்பியுள் திர‌ளும்
நித்திய‌த்துவ‌த்தை.
---

3) வ‌லிய‌றித‌ல்

பார்த்த‌
வ‌ண்ணமிருக்க‌
வெடித்த‌ நில‌த்தில்
விழுந்த‌ விதை
செடி
ம‌ர‌மென‌
பொழிந்த‌ ம‌ழைக்கு
த‌ழைந்த‌து
நிழ‌லுக்கு இற‌ங்கிய‌
ம‌ர‌ங்கொத்தி ஒன்று
க‌ழுத்தை வாகாய் சாய்த்து
நிறுத்தி
நிதானமாய்
துளையிடுகிற‌து
இத‌ய‌த்தை
குடையும‌ந்த‌
வ‌லி
அப்ப‌டியொன்றும் அதிக‌முமில்லை
அப்ப‌டியொன்றும் குறைவுமில்லை.
---

4)அருநிழ‌ல்

அன்பெனும் பிடிக்குள்
அக‌ப்ப‌ட்ட‌ ம‌லைய‌து
எவ்வ‌ள‌வு பெரிதோ
அவ்வ‌ள‌விற்கு க‌ன‌மில்லை
என்றாலும்
சிறுபொழுதும் தாம‌திக்க‌வோ
உட‌ன் சும‌ந்து ஏக‌வோ இய‌லாத‌
வ‌ழிந‌டைப் ப‌ய‌ணி
நான்
இற‌க்கி வைத்துப் போகிறேன்
ப‌த்திர‌மா ய‌தை
பாதையின் ம‌றுங்கே
திசைக‌ளோடி பிரிந்த‌ வ‌ழிக‌ள்
இருண்ட‌ பிற‌கு
என் பிராதுக‌ளையும், பிரார்த்த‌னைக‌ளையும்
காலத்தின் ப‌லிமுற்றத்தில்
கிட‌த்திவிட்டு
வெறும‌ கையோடு நான்
திரும்பும் காலில்
அடைக்க‌ல‌ம் த‌ரும்
அசையாத‌ அம்ம‌லையின்
அடிவ‌யிற்றுக் குகை
நிழ‌ல்.

May 11, 2008

நித்யா கவிதை அரங்கில் வாசிக்கப்பட்ட சுகுமாரன் கவிதைகள்.

1) இடவழுவமைதி

ஒரே பெயரில்
ஒரே இடத்தில்இரண்டு பேர் இருப்பது.
உசிதமல்ல என்றுணர்ந்த‌
பால்ய தினங்கள்
ஒரே வகுப்பில்
ஒரே பெயரில்
இரண்டு பேர் இருந்தோம்
முதலெழுத்தில் வித்தியாசம்
என்னுடையது 'என்'
அவனுடையது 'எஸ்'

அவனுக்கான பாராட்டு
சமயங்களில் எனக்கு
எனக்கான தண்டனை
சமயங்களில் அவனுக்கு

அடையாளம் பிரிக்க‌
பட்டப் பெயர்கள்
சூட்டப்பட்டோம்
அவன் உலக்கை
நான் ஊசி

காய்ச்சலில் விழுந்து
பள்ளிக்குப் போகாமல்
திரும்ப போன‌ நாளில்
எல்லோரும் கேட்டார்க‌ள்:

ம‌ல‌ம்புழை அணையில்
மூழ்கிய‌து நீயில்லையா?

வ‌ருகைப் ப‌திவுக்காக‌க்
கூப்பிட்ட‌போது
இர‌ண்டுமுறை எழுந்து 'உள்ளேன்' என்றேன்
அழைக்க‌ப்ப‌ட்ட‌து ஒருமுறை எனினும்.
---
2)முதலாவது வார்த்தை

எனது முதலாவது வார்த்தை
எந்த மொழியில் இருந்ததென்றோ
எந்த உணர்வால் கிளர்ந்ததென்றோ
எவ்வளவு குடைந்தும் நினைவில் இல்லை

இன்று எனக்கு
யோசிக்க பரிமாற பிழைக்க‌
மூன்று மொழிகள் தெரியும்
உபரியாக மெளனமும்

எனது கடைசி வார்த்தை
எந்த மொழியில் இருக்குமென்றோ
எந்த உச்சரிப்பில் கேட்குமென்றோ
எவ்வளவு முயன்றும் தீர்மானம் இல்லை

எதுவானாலும்
எனது நான்கு மொழிகளிலும் இல்லாததாக‌
இருக்கக் கடவது
எனது கடைசி வார்த்தை.
---
3) நீரின்றி அமையாது

திட‌மென்றால் இய‌ங்குவ‌து சிர‌ம‌ம்
ஆவியென்றால் அட‌ங்குவ‌து க‌டின‌ம்
என‌வே
திர‌வ‌ங்க‌ளால் பிணைத்தேன் உற‌வுக‌ளை

ஒவ்வொரு உற‌வுக்கும்
ஒவ்வொரு திர‌வ‌ம்

தாய்மைக்கு முலைப்பால்
ச‌கோத‌ர‌த்துவ‌த்துக்கு இர‌த்த‌ம்
காத‌லுக்கு உமிழ்நீர்
தோழ‌மைக்கு விய‌ர்வை
ப‌கைக்குச் சீழ்
தாம்ப‌த்ய‌துக்கு ஸ்க‌லித‌ம்
துரோக‌த்துக்குக் க‌ண்ணீர்

பிணைத்து முடிந்த‌தும் கை க‌ழுவினேன்
த‌ண்ணீரால்
மீண்டும்
அதே நீரால் பிணைத்தேன்
உன்னையும் என்னையும்

தெரியுமா உன‌க்கு?
உற‌வுக‌ளைப் பிணைக்க‌
த‌ண்ணீர் த‌விர‌ த‌ர‌மான‌ திர‌வ‌ம்
வேறில்லை

என் உற‌வுக‌ள் எல்லாம்
தண்ணீரால் ஆன‌வை

ஏனெனில்
நீரின்றி அமையாது உற‌வு.
---
4) க‌னிவு

நாள் க‌ண‌க்காய்
ப‌க்குவ‌ப்ப‌டாம‌ல் வெம்பும் கேள்வி
'உற‌வில் க‌னிவ‌து எப்ப‌டி?'

சொற்க‌ள் புகைந்த‌ ம‌ன‌தில்
வாழையானேன்
மிஞ்சிய‌து ச‌ரும‌ம்

ஸ்ப‌ரிச‌ங்க‌ளின் த‌விட்டுச் சூட்டில்
மாங்காயானேன்
எஞ்சிய‌து கொட்டை

உட‌ற்காய‌த்தில் சுண்ணாம்பு த‌கிக்க‌ப்
பலாவானேன்
மீந்த‌து பிசின்

இப்ப‌டி ப‌ழுப்ப‌து
இய‌ல்ப‌ல்ல‌

என‌வே
க‌னிய‌த் தொட‌ங்குகிறேன் இப்போது
ஒட்டுற‌வு இல்லாத‌ புளிய‌ம்பழ‌மாக‌
---
5) எட்டுக்காலியும் நானும்

எட்டுக்காலியும் நானும் ஒன்று
இருவ‌ரும் பிழைப்ப‌து
வாய் வித்தையால்

எட்டுக்காலிக்கு எச்சில்
என‌க்குப் பொய்

இருவ‌ரும் வ‌லைபின்னுகிறோம்
அது எச்சிலைக் கூட்டி
நான் உண்மையைக் குறைந்து

எட்டுக்காலி வ‌லை
ஜீவித‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம்
என‌து வ‌லை
ச‌ந்த‌ர்ப்ப‌ ஜீவித‌ம்

எட்டுக்காலிக்குத் தெரியும்
எச்சிலின் நீள‌மும் ஆயுளும்
என‌க்கும் தெரியும்
பொய்யின் த‌டுமாற்ற‌மும் அற்ப‌மும்

எட்டுக்காலியின் நோக்க‌ம் த‌க்க‌ வைத்த‌ல்
என‌வே
வ‌லை- ஒரு பாதுகாப்பு

என‌து தேவை த‌ப்பித்த‌ல்
என‌வே
பொய்- ஒரு பாத‌க‌ம்
வாய்வித்தைக்கார‌ர்க‌ள் இருவ‌ரும்
எனினும் எட்டுக்காலி
என்னைவிட‌ பாக்கிய‌சாலி

சொந்த‌ வ‌லையில் ஒருபோதும்
சிக்குவ‌தில்லை அது
---
தொகுப்பு: பூமியை வாசிக்கும் சிறுமி (உயிர்மை வெளியீடு)

May 7, 2008

ஊட்டி நித்யா க‌விதை அர‌ங்கு - 1

மார்ச் 25 ஆம் நாள் ஜெயமோகன் அவர்களிடம் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. உதகையில் மே 1,2,3 தேதிகளில் நடக்கும் நித்யா கவிதை அரங்கில் என்னைக் கலந்து கொள்ளச் சொல்லி. என் பெயரை கவிஞர் சுகுமாரன் பரிந்துரைத்திருக்கிறார்.

அந்தச் சமயத்திலிருந்தே ஒரு விதமான உற்சாக மனநிலைக்கு ஆளானேன். பெங்களூரு சென்று அங்கிருந்து ஊட்டி செல்வதென முடிவு செய்து கொண்டேன். மைசூர் வரை நன்றாக இருக்கும் சாலை, முதுமலைக்குப் பிறகாக இடுப்பை முறித்துவிடுகிறது. என் கெட்ட நேரம் சாதாரண அரசுப் பேருந்தில் சக்கரத்திற்கு மேலாக ஒரு மேடுடன் இருக்கும் கடைசிக்கு முந்தைய வரிசை இருக்கை.

கலந்து கொள்ளும் நண்பர்கள் யாருமே எனக்கு முன்னதாக அறிமுகம் இல்லையாகையால் சிறு தயக்கத்துடனேயே இருந்தேன். ஊட்டியில் குளிர் இருந்தது. ஹைதராபாத்தில் தோலை அரிக்கும் வெயிலில் இருந்தவனுக்கு அந்த குளிர் அதிகம்தான். ஊட்டியின் குளிரைப் பொருட்படுத்தாமல் காலையில் ஏழு மணிக்கெல்லாம் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் குளிர் நீரை முகத்தில் அறைந்துவிட்டேன். என்னையும் அறியாமல் முகம் வீங்கிவிட்டது. First Impression is the last impression அல்லவா? இப்படியே அனைவரும் வரும் வரை பெருத்த முகமுடன் இருந்தால் "மணிகண்டன் என்றவுடன் 'வீங்கிய முகமுடையவன்" என்ற எண்ணம் பிறருக்கு வந்துவிடும் என்று வருத்தமடையத் துவங்கிவிட்டேன்.

கெ.பி.வினோத் ஊட்டியில் முதலில் அறிமுகமானார். சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவர். 'நீங்க வருவீங்கன்னு ஜெ.மோ சொன்னார்' என்று தொடங்கி பல நாட்களாகத் தெரிந்தவர் போல பழக ஆரம்பித்துவிட்டார். கூட்டம் நடக்கும் போது இவர் எதுவும் பேசவில்லை.

வீரான்குட்டி, பிந்து கிருஷ்ணன், பி.ராமன், பி.பி.ராமச்சந்திரன்(இவர் ஹரிதகம்.காம் என்னும் முக்கியமான மலையாள இணையத்தளத்தை நடத்தி வ‌ருகிறார்)உள்ளிட்ட‌ ம‌லையாள‌க் க‌விஞ‌ர்க‌ளும், மோக‌ன‌ர‌ங்க‌னும் அதிகாலையிலேயே க‌ண்ணில் ப‌ட‌ ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள்.

மோக‌ன‌ர‌ங்க‌ன் காலையில் க‌ட்ட‌ன்சாயா குடித்த‌வுட‌ன் சிக‌ரெட் குடிப்ப‌த‌ற்காக‌ வெளியே அழைத்துச் சென்றார். "சிக‌ரெட் குடிக்க‌ மாட்டீங்க‌ இல்லையா?" என்று எப்ப‌டிக் க‌ண்டுபிடித்தார் என்று தெரிய‌வில்லை. இத‌ற்கு என்ன‌ பி.ஹெச்.டி செய்ய‌ வேண்டுமா என்ன?. முந்தைய கவிதை அரங்குகள், குற்றாலம் நிகழ்வுகள், பழைய கூட்டத்தின் சர்ச்சை போன்று ஒரு மேலோட்டமான பார்வையை எனக்கு கொடுத்தார்.

பின்ன‌ர் காலைச் சிற்றுண்டி. ம‌ணி(நிர்மால்யா என்ற‌ பெய‌ரில் இவ‌ர‌து மொழிபெய‌ர்ப்பை ப‌ற்றி ப‌ல‌ரும் அறிந்திருக்க‌க் கூடும்)தான் உண‌வு, உறைவிட‌ வ‌ச‌திக‌ளின் முழுப் பொறுப்பையும் ஏற்றிருந்தார். அவ்வ‌ப்பொழுது சூடாக‌ வ‌ந்து இற‌ங்கும் உண‌வு, டீ, நொறுக்குத் தீனி, இர‌வில் அத்த‌னை பேருக்கும் த‌லா இர‌ண்டு க‌ம்ப‌ளிக‌ள் என்று பிர‌மாதப் ப‌டுத்தியிருந்தார். அந்த‌ ப‌ருப்பு வ‌டைக்கு ஒரு ஓ போடுவேன்.

ஜெய‌மோக‌ன் த‌ன் குடும்ப‌த்தோடு வ‌ந்து சேர்ந்தார். பிற‌கு ஒவ்வொருவ‌ராக‌ வ‌ர‌ ஆர‌ம்பித்த‌தும் நாராய‌ண‌ குருகுல‌ம் க‌ளை க‌ட்ட‌த் துவ‌ங்கிய‌து.
தேவ‌த‌ச்ச‌ன், சுகுமார‌ன், எம்.யுவ‌ன், மகுடேஸ்வ‌ர‌ன், ராஜ‌ சுந்த‌ர‌ராஜ‌ன், மோக‌ன‌ர‌ங்க‌ன் ம‌ற்றும் வா.ம‌ணிக‌ண்ட‌ன் ஆகியோர் த‌மிழ் க‌விஞ‌ர்க‌ள்.

பி.ராம‌ன், பி.பி.ராம‌ச்சந்திர‌ன், செபாஸ்டின், எஸ்.ஜோச‌ப், வீரான்குட்டி, அன்வ‌ர் அலி, பிந்து கிருஷ்ண‌ன், விஷ்ணுபிர‌சாத் ஆகியோர் ம‌லையாள‌க் க‌விஞ‌ர்க‌ள். க‌ல்ப‌ற்றா நாராய‌ண‌ன் ச‌ற்று தாம‌தமாக‌ கூட்ட‌த்தில் க‌லந்து கொண்டார்.

பிரார்த்தனை அறையின் தரையில் மெத்தை போன்ற விரிப்பு வட்ட வடிவத்தில் போடப்பட்டிருந்தது. பெரும்பாலான மலையாளக்கவிஞர்கள் அறையின் இடது புறமாகவும், தமிழ்க் கவிஞர்கள் வலது புறமாகவும் அமர்ந்திருந்தனர். பார்வையாளர்களாகக் கலந்து கொண்டிருந்த பலரும் பின்புறமாக நாற்காலி அல்லது சோபாவில் அமர்ந்து கொண்டனர்.

கூட்ட‌த்தில் ஜெய‌மோக‌னை 'ஹெட் மாஸ்ட‌ர்' என்றார்க‌ள். கூட்டத்தின் துவக்கத்தில் பங்குபெற்ற ஒவ்வொருவ‌ரையும் த‌மிழ், ம‌லையாள‌ம் என‌ இரு மொழிக‌ளில் கூட்ட‌த்தின‌ருக்கு அறிமுக‌ப்ப‌டுத்தினார். அதுமட்டுமின்றி தமிழில் பேசப்படுவதை மலையாளத்திலும், மலையாளத்தில் பேசப்படுவதை தமிழிலும் தொடர்ச்சியாக சலிப்பில்லாமல் மொழிமாற்றம் செய்து கொண்டேயும் அவ்வப்பொழுது தனது கருத்துக்களையும் முன் வைத்துக் கொண்டுமிருந்தார். அவர் மொழிமாற்றம் செய்து கொண்டிருக்கும் போது இடையில் யாராவது பேசினால் அது தன்னை அதிகம் கத்தச் செய்து ஆற்றலை வீணடிக்கும் என்று சொல்லி அமைதிப்படுத்தினார்.

ம‌குடேஸ்வ‌ர‌ன், நாஞ்சில் நாடன், எம்.கோபாலகிருஷ்ணன்(சூத்ரதாரி), ராஜ சுந்தரராஜன் ஆகியோர் கூட்ட‌ம் துவ‌ங்கும் போது காரில் வ‌ந்து கொண்டிருப்ப‌தாக‌த் த‌க‌வல் வ‌ந்த‌து. த‌மிழினி வ‌ச‌ந்த‌குமாரும் அவ‌ர்க‌ளோடு இருப்ப‌தால் அவ‌ர் ஒவ்வொரு இட‌மாக‌ நிறுத்தி மெதுவாக‌த்தான் வ‌ந்து சேர்வார்க‌ள் என்று சொன்னார்க‌ள். ஆனால் விரைவாக‌வே வ‌ந்து சேர்ந்துவிட்டார்க‌ள்.

முத‌லில் பி.ராம‌ன் க‌விதைக‌ளை வாசிக்க‌ முடிவான‌போது சில‌ க‌விஞ‌ர்க‌ள் வ‌ந்து சேராத‌தால் பொதுவான சில‌ அம்ச‌ங்க‌ளைக் குறித்து விவாத‌ம் தொட‌ங்கிய‌து. ராம‌னின் இல‌க்கிய‌ப் பய‌ண‌த்தில் உண்டான‌ இடைவெளி, அது குறித்தான‌ கார‌ண‌ங்க‌ள் ப‌ற்றிய‌‌ பேச்சின் போது சுகுமார‌ன் வ‌ந்து சேர்ந்தார். சுகுமார‌னும் இதே விதமான‌ இடைவெளியைச் ச‌ந்தித்த‌வ‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. சுகுமார‌னின் ப‌த்து வ‌ருட‌ இடைவெளி என்ப‌தில் அவ‌ர் த‌னிம‌னித‌ன் சார்ந்த‌ ப‌டைப்புக‌ளில் இருந்து ச‌மூக‌, அர‌சிய‌ல் சார்ந்த‌ ப‌டைப்புக‌ளுக்கு மாறியிருப்ப‌து குறித்தும், முன்பு இருந்த எதிர்மறை, குற்றச்சாட்டுகள் நீங்கி கவிதையில் கனிவு,நிதானம் முக்கிய இடம் பெற்றிருப்பது குறித்தும் பேச‌ப்ப‌ட்ட‌து.

பி.ராம‌ன் த‌ன‌து க‌விதையில் மொழிய‌னுப‌வ‌ம் இல்லாத‌து குறித்து பேசினார். ஆனால் க‌விதையில் மொழிய‌னுப‌வ‌ம் இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை என்ப‌து மோக‌ன‌ர‌ங்க‌னின் க‌ருத்து. இது ப‌ற்றிய‌ விவாத‌த்தின் போது பி.பி.ராம‌ச்ச‌ந்திரன்(பி.ராமன் அல்ல) த‌ன‌து க‌விதைப் ப‌ய‌ண‌த்தில் க‌விதைக‌ளை ம‌ர‌பு, ந‌வீன‌ம் என்று தொட‌ர்ச்சியாக‌ மாற்றி மாற்றி எழுதி பெண்டுல‌ம் போன்று செல்வதையும், இது க‌விதை மீதாக‌ இய‌ல்பாக கவிஞனுக்கு வ‌ர‌க்கூடிய‌ ச‌லிப்பினை த‌விர்த்துவிட‌ உத‌வுவ‌தும் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.

க‌விதையில் நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌கு மீண்டு வ‌ந்து ஊக்க‌த்துட‌ன் இய‌ங்கிய‌வ‌ர்க‌ளாக‌ கே.ஜி.ச‌ங்க‌ர‌ப்பிள்ளை, ப‌சுவ‌ய்யா, தேவ‌த‌ச்ச‌ன் போன்ற‌வ‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளும், மீள‌ முடியாத‌வ‌ர்க‌ளாக‌ ஞான‌க்கூத்த‌ன், ந‌குல‌ன் போன்ற‌வ‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளும் குறிப்பிட‌ப்ப‌ட்டன.

கவிதையின் வடிவம் பற்றிய பேச்சில் ம‌னுஷ்ய‌ புத்திர‌ன் க‌விதையின் வ‌டிவ‌த்தில் மேற்கொண்ட‌ முய‌ற்சிக‌ள் ப‌ற்றியும் பேச‌ப்ப‌ட்ட‌து.

முத‌ல் அம‌ர்வு பி.ராம‌னின் க‌விதைக‌ள் த‌விர்த்து க‌விதை சார்ந்த‌ பிற‌ விஷ‌ய‌ங்க‌ளையும் (க‌விதையின் வ‌டிவ‌ம், பொய‌டிக் இஞ்சினீய‌ரீங் போன்ற‌) விரிவான‌ முறையில் அல‌சுவ‌தாக‌ அமைந்திருந்த‌தால் கிட்ட‌த்த‌ட்ட‌ மூன்று ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ நிக‌ழ்ந்த‌து.

இந்த‌ விவாத‌த்தில் க‌விதையைப் ப‌ற்றி எழுத‌ப்ப‌ட்ட‌ பெரும்பாலான‌ க‌விதைக‌ள் தோல்விய‌டைவ‌து ப‌ற்றி தேவ‌த‌ச்ச‌ன் பேசிய‌து, ப‌டிம‌ம், மெட்ட‌ப‌ர், அலிக‌ரி போன்ற‌வ‌ற்றையும், முறுக்க‌ப்ப‌ட்ட‌ க‌விதைக‌ளைத் தாண்டி நாம் இன்று அடைந்திருக்கும் எளிய‌ க‌விதைக‌ள் குறித்துமான‌ ஜெய‌மோக‌னின் பார்வை, க‌விதைக‌ள் அனுபவ‌ங்க‌ளைச் சொல்வ‌து அல்ல‌து அனுப‌வ‌ம் குறித்தான அபிப்பிராய‌ங்க‌ளைச் சொல்வ‌து என‌ இருவ‌கைக‌ளில் அமைவ‌து ப‌ற்றிய‌ யுவ‌னின் வாத‌ங்க‌ள் போன்ற‌வை மிக‌ முக்கிய‌மான‌ இட‌ங்க‌ளுக்கு விவாத‌த்தை ந‌க‌ர்த்திய‌து.

(தொட‌ர்ந்து எழுதுகிறேன்)

May 6, 2008

நித்யா கவிதை அரங்கில் வாசிக்கப்பட்ட எனது கவிதைகள்.

ஊட்டி நாராயண குருகுலத்தில் ஜெயமோகன் அவர்களால் 'நித்யா கவிதை அரங்கு' நடத்தப்பட்டது. இது ஜெயமோகன் நடத்திய‌ ஒன்பதாவது தமிழ் மலையாளக் கவிதை பரிமாற்ற உரையாடல்.

மே 1,2,3 ஆகிய‌ நாட்க‌ளில் ந‌டைபெற்ற‌ இவ்வ‌ர‌ங்கு குறித்த‌ என‌து பார்வையை விரைவில் ப‌திவு செய்கிறேன்.

அர‌ங்கில் வாசிக்க‌ப்பட்ட‌ த‌மிழ்க் க‌விதைகளை(தேவதச்சன், சுகுமாரன், ராஜ சுந்தரராஜன், எம்.யுவன், க.மோகனரங்கன், மகுடேஸ்வரன், வா.மணிகண்டன்) வ‌லைப்ப‌திவில் இடும் எண்ண‌ம் இருக்கிற‌து. என‌து க‌விதைக‌ள் த‌ற்ச‌ம‌ய‌ம் கைவ‌ச‌ம் இருப்ப‌தால் அவ‌ற்றை முத‌லில் இடுகிறேன். இவை 'கண்ணாடியில் நகரும் வெயில்' தொகுப்பில் உள்ள கவிதைகள்.

1. விரல்களில் உதிரும் சொற்கள்
நிசப்தம் விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன் விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன.

2. சுவரில் ஊர்ந்த கதைகள்
தன் நாவுகளால்
என் கண்ணீரையும்
அசைவற்ற விழிகளில்
நிர்வாணத்தின்
நெளிவுகளையும்
பதிவு செய்திருக்கிறது
-இந்தச் சுவர்.
இப்போது
படிமமாக்குகிறது.
சுண்ணாம்பினை
உதிர்த்து,
தனக்கான ஓவியங்களை.

3. விடைகளற்ற புதிர்கள்
இந்த ரயிலின்
பதினோறாவது பெட்டிக்கு
கீழாக
உடல் கத்தரித்துக் கிடக்கிறான்
பச்சைச் சட்டை அணிந்தவன்.

சிலர் முந்தைய ரயிலில் விழுந்திருக்கலாம் என்றனர்
சிலர் தண்டவாளத்தில் கால் சிக்கியிருக்கும் என்றனர்
சிலர் தற்கொலையாக இருக்கலாம் என்றனர்.

கொஞ்சம் பேர்கள் அவன் மீதும்
மிஞ்சியோர் அவன் குடும்பம் குறித்தும்
பரிதாபப்பட்டார்கள்.

ரயில்வே இழப்பீடு வழங்கக் கூடும் என்ற
சிவப்பு பனியன்காரர்
இந்த வாக்கியங்கள் யாவுமே
விடைகளற்ற புதிர்கள்
என்றபடி
செய்தித்தாளை புரட்டத் துவங்கினார்.

4. வினைல் காதல்
கலாமந்திர் விளம்பரப் பலகையில்
முதுகு காட்டிப் படுத்திருந்தாள் வினைல் பெண்.
இடுப்பில் சிறிய
மடிப்பிருந்தது.

மடிப்பில் ஊர்ந்த
விளக்கொளியின் இருள் எறும்பை
கரங்களை நீட்டித் தொட முயன்றேன்.

கூச்சமாக இருந்தது.

தாங்கிப் பிடித்த
கம்பி வழியாகச் சொன்னேன்.
வெம்மையான நிலம் குறித்துப்பேசும் போது
உன் விரல்களுக்கிடையேயான
பரப்பினை
நினைத்துக் கொள்வேன் என்று.

சிரித்துவிட்டு
மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

குழப்பத்தில்
அவசரமாக நகர்ந்தான்
சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தவன்.

5. பிரியம் படிந்த வாக்குமூலம்
இன்று -
குளிக்கும் போதும்
வலது காலின் பெருவிரலில்
ஒரு கல் தடுக்கிய நொடியும்
உன்னை நினைக்கவில்லை.

நினைத்ததை விட
நினைக்காத நேரத்தை
சொல்வது
எளிதெனக்கு.
----
த‌ழிழுக்கு மொழி மாற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ ம‌லையாள‌க் க‌விதைகளை(பி.ராமன், செபாஸ்டின், பி.பி.ராமசந்திரன், எஸ்.ஜோசப், அன்வர் அலி, வீரான்குட்டி, பிந்து கிருஷ்ணன், விஷ்ணுபிரசாத், கல்பற்றா நாராயணன்) ஜெய‌மோக‌ன் அவ‌ர்க‌ளின் த‌ள‌த்தில் வாசிக்க‌லாம்.
----
ஓவிய‌ம்: ராஜ‌ன் புதியேட‌ம்

May 5, 2008

மூன்று கவிதைகள்- உயிர்மை

(1)
தீப்தி அழுது கொண்டிருந்தாள்.
இரவுக்காட்சிக் கூட்டம் நகரச் சாலையை சலனமூட்டுகிறது.

இடப்பக்கச் சந்தில்
அலையும்
நாயொன்றின் நிழலசைவு
இரவின் தனிமையை நகர்த்த துவங்கியது.
ஜன்னலோர திரைச்சீலையை யாரோ மூடிக் கொண்டிருந்தார்கள்.

மஞ்சள் ஒளியில் நனைந்து கிடக்கும்
சாலையோரச் செடியிலையில்
தன் ஓவியத்தை தொடங்கினான்
மழைக்கடவுள்.
இன்று தீப்தி அழுது கொண்டிருந்தாள்.
-------------------------
(2)
வித்யாவிடம் பேசுவதற்கு ஏதாவது இருந்து கொண்டிருக்கிறது.
இல்லாத பெண்களின் ரகசியங்களை
ராஜேஷ் வைத்திருப்பான்.
அருண் வேலையைப் பற்றி பேசுவான்.
நிவேதிதாவின் பொய்கள் சுவாரஸியமானவை.

எனக்கு
இந்த டி.வி. பெண்ணிடம்
என்ன பேசுவதென்று தெரியவில்லை
உந்திச் சுழி வளையம் நன்றாயிருப்பதாக
முடித்துக் கொண்டேன்.
-----------
(3)
ஏணிக‌ளை வ‌ரிசையாக‌க் க‌ட்டி
அருவி மீது ஏற‌ முய‌ன்றேன்
கீழே விழுந்தால்
எலும்பும் மிஞ்சாது என்று
தாயுமான‌வ‌ன் சொன்னான்.

உச்சியை அடையும் க‌ண‌ம்
விழ‌த்துவ‌ங்கினேன்.

எப்ப‌டி
எலும்பு மிஞ்சிய‌து என்றும்
இலை
சுழ‌ன்று
விழும்
தேவ‌த‌ச்ச‌ன் க‌விதையையும்
யோசித்துக் கொண்டிருந்தேன்.

இட்லி வாங்கி வ‌ர‌ச் செல்வ‌தாக‌
தாயுமான‌வ‌ன்
கிள‌ம்பிச் சென்றான்.
-----------
நன்றி: உயிர்மை, மே'2008.
ஓவியம்: ராஜன் புதியேடம்.