Apr 25, 2008

சீர்லீடர்ஸ்-'பெருத்த மார்புகளும், சுழலும் இடுப்புகளும்

இந்தியாவின் கலாச்சாரம் என்பது போலித்தனங்களால் வடிவமைக்கப்பட்டது. இந்தப் போலித்தனங்களை அவ்வப்பொழுது யாரும் சலனமுறச் செய்யாமல் இருக்க தண்டல்காரர்கள் தடியெடுத்துக் கொண்டேயிருப்பார்கள். சிவசேனா, ஆர்.எஸ்.எஸ் என்ற அகண்டபாரதக்காரர்கள் மட்டுமில்லாது நம் ஊரைச் சார்ந்த ராமதாஸ் வரைக்கும் ஒரு பெரும் படை இதற்கு இருக்கிறது.

மகாராஷ்டிர அரசுதான் தற்போதைய தண்டல்காரன். ஐபிஎல் நடத்தும் கிரிகெட் போட்டிகளில் 'சீர்லீடர்ஸ்' எனப்படும் நடனக்குழுவிற்கு மும்பையில் தடை செய்யப் போகிறார்கள். மாநில உள்துறை இணையமைச்சருக்கு இந்தப் பெண்களின் 'பெருத்த மார்புகளும், சுழலும் இடுப்புகளும்' பெரும் தொந்தரவு செய்கிறதாம்.

நம் கலாச்சாரம் ஐந்தாயிரம் ஆண்டுகள் பாரம்பரிம் கொண்டது என்னும் வெற்று புளுகுமூட்டையைச் சுமந்து திரியும் இவர்கள்தான் உண்மையில் குப்பைகள். கலாச்சாரம் என்று இன்று நாம் கட்டியழும் எதுவுமே அடிப்படையான உண்மையைக் கொண்டவையில்லை. இவை இடைச் செருகல்கள். தங்களின் வசதிகேற்ப தங்களின் ஆதிக்கத் தன்மையை நிலைநிறுத்திக் கொள்ள அவ்வபொழுது சில குழுக்களால் வரையறுக்கப்பட்டவை.

தனக்கான விருப்பினை நிறைவேற்றிக் கொள்ள தனிமனிதனுக்கு எந்த சுதந்திரமுமில்லாத இந்தச் சமூகத்தில் எல்லாவிதமான செயல்பாடுகளிலும் தடைகள் இருக்கின்றன. தடைகளை மீறுபவர்கள் சமூகத்தின் குற்றவாளிகளாக கூண்டிலேற்றப்படுவார்கள்.

மனிதமனதின் ஆசைகள் வெறும் புறக்கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்தக் கூடியவை இல்லை. அவை மதிப்பீடுகளால்(வேல்யூஸ்) மனதினுள் உருவாக்கப்படும் மாற்றங்களின் மூலம் கட்டுப்படுத்தக் கூடியவை. ஆனால் நாம் கலாச்சாரம் என்று பேசித் திரிபவைகள் எதுவும் மதிப்பீடுகளைக் கொண்டவை இல்லை. வெறும் தடைகள். மற்றவர்களுக்குத் தெரியாமல் இங்கு மனிதன் செய்யும் தவறுகள் அனைத்திற்குமான அடிப்படைத் தூண்டல்கள் நம் போலித்தனங்கள்தான். (இவர்களின் பாஷையில் 'கலாச்சாரம்').

சரி மகாராஷ்டிராவிற்குச் செல்லலாம். பெண்களை போகப்பொருளாக மட்டுமே காட்சிப்படுத்தும் எத்தனையோ திரைக்காட்சிகளும், விளம்பரங்களும் வந்து கொண்டு இருக்கின்றன. ஒருவன் அணிந்திருக்கும் உள்ளாடையைப் பார்த்தும், ஒருவனின் வாசனைத் திரவியத்திலும் தூண்டப்பட்டு காமத்தில் திளைக்கும் பெண்கள் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தடவைகள் வரவேற்பறை வரைக்கும் வந்து செல்கிறார்கள். இவர்களின் கலாச்சாரத்தை இந்த விளம்பரங்கள் எதுவும் செய்யாமலிருக்கின்றன.

இவர்களின் கூறுகள் எல்லாவற்றிலும் ஆணாதிக்கம்தான் தொக்கி நிற்கின்றன.

இதே அமைச்சர் பெண்ணின் உடல் இந்த நடனங்களில் தவறுதலாக வணிகமயமாக்கப்படுகிறது என்று சொல்லியிருந்தால் ஒரு சலாம் அடித்திருக்கலாம். குடும்பத்தோடு பார்க்க முடியவில்லை என்றிருக்கிறார். (இந்த இடத்தில் உங்களுக்கு ஞாபகம் வரும் இந்திப்படப் பாடல் ஒன்றின் குலுக்கல் காட்சியை நினைத்துக் கொண்டு சிரித்துக் கொள்ளலாம்). ஒருவேளை குடும்பத்தோடு அமர்ந்து நீலப்படங்கள் மட்டும்தான் பார்ப்பார்களோ என்னவோ. நமக்கு ஏன் பொல்லாப்பு?

ஆயிரக்கணக்கான பார் பெண்களின் வாழ்வை அழித்த அரசு இந்த நடனத்தை தடை செய்வதில் வியப்பேதுமில்லை.

உடல் என்பது மனிதனின் காமத் தேடுதலை தூண்டிவிடுவதாக வைத்திருப்பதில் உங்கள் கலாச்சாரம் பெரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. பெருத்த மார்புகள் இந்திய ஆடவனின் மனதை களைத்தெறியும் அளவிற்கு வேறு தேசத்தில் களைப்பதில்லை. ஒரு அமைச்சரின் கண்களுக்கும் குலுங்கும் மார்புதான் தெரிகிறது என்பதுதான் உங்கள் கலாச்சாரத்தின் வெற்றி.(வேறு என்ன உனக்குத் தெரிகிறது என்கிறீர்களா?. அது சரி)

இங்கு கருப்புப் போர்வைகளால் ஆசைகளை மூடி வைக்க வேண்டியிருக்கிறது. போர்வையின் வெளிப்புறம் எதுவும் தெரிவதில்லை. ஆசையின் உஷ்ணக்காற்றும், வேட்கையின் வேட்டைக் கண்களும் வெளியே தெரியக்கூடாது. ஏனென்றால் இது ஆயிரக்கணக்கான ஆண்டின் பாரம்பரியம். போர்வைக்குள் நடக்கும் கொடூரங்கள், விகாரங்கள் எதுவும் வெளியே இருக்கும் கண்களுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும். தண்டல்காரன்கள் போர்வையை இழுத்து மூடிவிடும் பணியை பார்த்துக் கொள்வார்கள்.

அய்யா மகராசன்களா..கலாச்சாரம் என்று இங்கு எதுவுமேயில்லை. எல்லாம் வெற்று வார்த்தைகளும், போலித்தனமான பாவனைகளும்தான். முதலில் பொருளைப் புரிந்து கொண்டு இந்தச் சொல்லை புழங்கத் துவங்குங்கள். அதுவரை இந்தச் சொல்லுக்கு தடை விதியுங்கள்.