Apr 23, 2008

பிரியங்காவும் நளினியும்.

ஈரானிய அதிபர் ஸ்ரீலங்கா பயணிக்கிறார். இஸ்ரேல் அரசாங்கம் ராஜபக்சேவிற்கு ராணுவ ரீதியான பலமளிக்கவிருக்கிறது. ஜப்பான் தொடர்ச்சியாக, பேரினவாதத்திற்கு உறுதுணையாக நிதி ஆதாரங்களை அள்ளிக் கொடுக்கும். பாகிஸ்தான் தோள் கொடுக்க, சீனா களம் அமைக்க, இந்தியாவின் உளவு,ராணுவ ரீதியான உதவியுடன் தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கை அரசின் செயல்பாட்டிற்கு தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து சான்றிதழ் வழங்கும்.

தமிழன் செத்தழிவது சிட்டெறும்பு கடித்ததற்கும் குறைவான சுரணையை 'தமிழ்'உணர்வு மிக்க தமிழக அரசியல்வாதிகளுக்கு உண்டாக்குகிறது. கருணாநிதிக்கு ஸ்டாலினுக்கு முடிசூட்டுவதிலும், ஜெயலலிதாவிற்கு தான் தீவிரவாதத்திற்கு எதிரான இரும்புப் பெண்மணி என்னும் 'பிம்பத்தை' உருவாக்குவதிலுமே கவனமிருக்கிறது. விஜயகாந்த்- இவர் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தாலும்- இவரை அரசியல்வாதியாகவே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எந்தப் பிரச்சினையிலுமே 'கழுவிய மீனில் நழுவிய மீனாக' இருக்கும் இவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஸ்திரமான குரல் கொடுப்பார் என்னும் நம்பிக்கை எதுவுமில்லை.

ராமதாஸ், கருணாநிதிக்கு எந்த விதத்திலும் சளைத்தவரல்ல- தன் கட்சி, தன் குடும்பம் என்னும் கொள்கைகளில். மக்கள் செல்வாக்கினை முற்றுமாக இழந்து நிற்கும் வைகோ,திருமா, வலுவில்லாத நெடுமாறன் போன்றோரின் குரல்கள் செவிடன் காதில் ஊதிய சங்காக இருப்பது பெருந்துக்கம்.

பதினேழு வருடங்களாக கண்ணுக்குத் தெரியாத நளினி இன்றாவது பிரியங்கா வதேராவின் கண்களில் பட்டிருப்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம். இதில் எத்தனையோ அரசியல் பார்வை, முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஈழத்தின் மீதான புரையோடிப் போயிருக்கும் இந்திய மக்களின் வெறுப்பின் தடிமனை சற்றேனுக் குறைக்க உதவும். 'தமிழினத் தலைவர்' முதல்வராக இருக்கும் தமிழக அரசு இந்த நிகழ்வினை இத்தனை தூரம் மறைத்திருக்க வேண்டியதில்லை.ஒரு இனம் அழிந்து கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினை ராகுல் காந்தி பிரமதர் வேட்பாளரா இல்லையா என்பதனை விட முக்கியமானதாகவே படுகிறது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் போன்ற தமிழக காங்கிரஸ்காரர்களிடம் கேட்பதற்கு என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. தீவிரவாதத்தை நீங்கள் எதிர்ப்பதில் எந்த ஆட்சேபனையுமில்லை. ஆனால் பேரினக் குழு ஒன்று தமிழர்களை எந்தக் கருணையுமில்லாமல் நசுக்கிக் கொண்டிருப்பதற்கு உங்களின் தீர்வாக எதனை முன் வைக்கிறீர்கள்?
நீங்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு என்று சொல்லிக் கொண்டு வெளியிடும் ஒவ்வொரு அறிக்கையிலும் ஈழத்தில் வாழும்/செத்துக் கொண்டிருக்கும் சாமானிய தமிழனின் பிரச்சினைக்கு ஒரு வரியிலாவது குரல் கொடுங்கள்.

ஈழத்தில் தமிழனும், தீவிரவாதமும் வேறில்லை என்னும் பிம்பத்தை உலக அரங்கில் உருவாக்க ராஜபக்சே அரசாங்கம் கையாளும் உத்திகள் அவர்களுக்கு முழு வெற்றியைத் தந்து கொண்டிருப்பது உங்கள் கண்களுக்குத் தெரியாமல் இருக்கிறதா? அவர்கள் கொல்லும் ஒவ்வொரு அப்பாவித் தமிழனும் கூட அவர்களுக்கு ஒரு தீவிரவாதிதான். அவர்களின் அடிப்படை நோக்கம் தமிழனை அழிப்பதுதான்.

தமிழுணர்வுள்ள/மனிதாபிமானமுள்ள எந்த அரசியல்வாதிக்கும் இந்த இடத்திலிருந்து ஒரு கடமை இருக்கிறது. தீவிரவாதக் குழுவொன்றை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற போர்வையில் சாமானியத் தமிழர்களை தாக்கும் இலங்கை அரசின் போக்கினை தட்டிக் கேட்பதுமான, உலக நாடுகள் வழங்கும் எந்த சிறு உதவியும் மறைமுகமாக ஒரு இனத்தை அழிப்பதற்கான உதவிதான் என்பதை விளக்க வேண்டியதுமான கடமை.

குறிப்பிட்ட குழுவினை ஆதரிப்பதற்கும், வெறுப்பதற்கும், எதிர்ப்பதற்கும் எத்தனையோ காரணங்கள் தனிப்பட்ட ஒருவருக்கும், அரசாங்கத்திற்கும் இருக்கலாம். ஆனால் அந்த விருப்பு வெறுப்பு தீவுத்தமிழர்களின் வாழ்வினை சிதைப்பதில் எந்தப் பங்களிப்பையும் தருவதாக இருக்கக் கூடாது.

3 எதிர் சப்தங்கள்:

நந்தா said...

மணிகண்டன் உங்களது கோபமும், உணர்வுகளும் நியாயமானவையே. ஒத்துப் போக முடிகிறது.

http:blog.nandhaonline.com

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வணக்கம் திரு.வா.மணிகண்டன்,

உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். அதே உணர்வுதான் எனக்குள்ளும் வெந்துகொண்டு இருக்கிறது. நல்ல பதிவு.

என்னுடைய உணர்வுகளை கீழ்கண்ட சுட்டிகளில் பாருங்கள்,

http://jothibharathi.blogspot.com/2007/12/blog-post_20.html

http://jothibharathi.blogspot.com/2008/01/blog-post_04.html

http://jothibharathi.blogspot.com/2008/02/blog-post_7174.html

http://jothibharathi.blogspot.com/2008/02/blog-post_10.html

http://jothibharathi.blogspot.com/2008/03/blog-post.html

http://jothibharathi.blogspot.com/2008/02/blog-post_16.html

அன்புடன்,
ஜோதிபாரதி.

பொய்யன் said...

நளினி & பிரியங்கா சந்திப்பை தொடர்ந்து.....

நேரு குடும்பத்தின் தயாளமும் கருணை உள்ளமும் மன்னிக்கும் மகத்தான மனப்பாங்கும் திரும்பின திசையெல்லாம் பேசப்படுகிறது.

அந்த பேச்சொலி அலைகளுக்குள், இந்திய அமைதிப் படை இழைத்த கொடுமையும் கற்பழிப்பும் மறைக்கப்படுகிறது.

இதன் பெயர்தான் நுண்ணரசியல்