Apr 29, 2008

விரல் நுனி விபரீதம் - ‍சைபர் குற்றங்கள்

சைபர் குற்றங்கள். இந்தச் சொல்லுக்கான சிக்கல்கள் கூடிக்கொண்டே இருக்கிறது. இந்தக் குற்றங்களை மேலோட்டமாக புரிந்து கொள்வதே சுவாரசியமானது. ஆயிரம் ரூபாய் கொடுத்து கம்ப்யூட்ட்ர் கோர்ஸ் படித்தவனால் செய்யப்படுபவை அல்ல இந்தக் குற்றங்கள். கம்ப்யூட்டரிலேயே கசங்கி மண்டையை உடைத்து "ரூட்" கண்டறிந்து மிக இலாவகமாக சைபர் குற்றங்களைச் செய்கிறார்கள் "கம்ப்யூட்டர் பிதாமகன்"கள். சுவரேறி, பூட்டு உடைத்து, கன்னக்கோல் போடுவதெல்லாம் தேவையே இல்லை. இருந்த இடத்தில் இருந்து நடத்தும் ஜகஜ்ஜாலங்கள்தான் சைபர் குற்றங்கள்.

பிரதமருக்கோ, முதலமைச்சருக்கோ மிரட்டல் இமெயில் 'கமுக்கமாக' அனுப்பிவிட்டு, யாரிடமும் அகப்படாமல் தப்பித்து விடலாம் என நினைத்துக் கொண்டிருப்பதுதான் மிக மட்டமான அல்லது குறைந்த பட்சமான இணையக் குற்றமாக இருக்க முடியும். ஒவ்வொரு கணிப்பொறிக்கென இருக்கும் பிரத்தியேக எண்ணை ஐ.பி.(இன்டர்நெட் புரொடோகால்) முகவரி என்கிறோம். அனுப்புகிற மெயிலில் ஒட்டிச் செல்லும் இந்த எண் எந்த ஊரில், எந்த இணைப்பிலிருந்து மெயில் வருகிறது என்ற தகவலை மிகத் துல்லியமாக காட்டிக் கொடுத்துவிடும்.

பின்னர் அந்த கணிப்பொறியின் மெமரியை சோதனையிட்டால் போதும். அனுப்பியவரின் கையில் விலங்கு விழ வேண்டியதுதான் பாக்கியாக இருக்கும். இந்த நுட்பத்திலும் தங்கள் வித்தையைக் காண்பித்து போலீஸ் கண்களில் மண் தூவுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் உல‌கின் பெரிய‌ சைப‌ர் குற்ற‌ங்க‌ளோடு இவ‌ற்றை ஒப்பிட்டால், ஈமெயில் குற்ற‌ங்க‌ள் எல்லாம் 'ஜுஜுபி'குற்றம்.

சாப்ட்வேர் வந்த புதிதில் ஒரு வங்கிக்கான புரோகிராம் எழுதிய கில்லாடி, அந்த வங்கியில் நடைபெறும் ஒவ்வொரு பணப்பரிமாற்றத்திற்கும் (அது கம்பெனிக்கு வரும் பணமாக இருக்கலாம் அல்லது கம்பெனியிலிருந்து வெளியில் செல்லும் பணமாக இருக்கலாம்)மிக மிகக் குறைந்த தொகையொன்று (1லிருந்து 5 பைசா என்ற அளவில்) தன் கணக்கிற்கு மாற்றும்படி எழுதிவிட்டார். தன்னுடைய ஒவ்வொரு பரிமாற்றத்திலும் 1 பைசா குறைகிறது என்பதை எந்த வாடிக்கையாளரும் கவனித்திருக்கவில்லை. இந்தக் கதை பல நாட்களுக்குத் தொடர்ந்து, அந்த வங்கி விழிக்கும் தருவாயில் கணக்கை சுத்தமாக மூடிவிட்டு மூட்டை கட்டிவிட்டார். இது ப‌ல‌ முறைக‌ளில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் ந‌ட‌ந்து, தற்பொழுது இத‌ன் பெய‌ர் ச‌லாமி தாக்குத‌ல்.

இப்படியான இணையக் குற்றங்களையும் அதை கண்டறிந்த விதங்களையும் கவனிக்கும் போது மிக அலாதியான "கிரைம் நாவல்" படிப்பதற்கு ஈடான அனுபவம் கிடைக்கிறது. உலகில் நடந்த மிகக் கொடூரமானது முதல் மிகக் காமெடியானது வரையிலான சில இணையக் குற்றங்களை பற்றி வாசிக்கப் போகிறீர்கள். மற்ற வகைக் குற்றங்களோடு இணையக் குற்றங்களை நம்மால் எந்த வகையிலும் ஒப்பிடமுடிவதில்லை.

ஒரு தனித்த உலகத்தில் மிகச் சிறந்த அறிவாளிகளால் செய்யப்படுபவை இந்தக் குற்றங்கள். இந்தக் குற்றங்கள் ஏன் நடைபெறுகின்றன என்று பார்க்கும் போது உளவியல் ரீதியாக மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்குவதோடு, நவீனத் தொழில் நுட்பத்தின் உச்சகட்ட வளர்ச்சி சமூகத்தின் போக்கில் உண்டாக்கியிருக்கும் முடிச்சுகள் நம்மை புதிரான இருள் உலகிற்குள் அழைத்துச் செல்கின்றன‌.

எந்த பெரிய விஷயத்தையும் மிக எளிதாக தாண்டிவிடும் கம்ப்யூட்டர், இணையம் என்ற மாய உலகத்தின் தற்போதைய மாபெரும் குற்றங்கள் கூட வருங்காலத்தில் சின்னக் குழந்தைகளின் திருடன் போலீஸ் விளையாட்டாக மாறிவிடலாம்.
---------
இணையத்தில் சாத்தியமாகக் கூடிய பல குற்றங்களை எனக்குப் புரிந்த அளவிற்கு- எங்கள் ஊரில் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு டிராக்டர் ஓட்டிக் கொண்டிருக்கும் விஜயகுமாரை மனதில் வைத்து- அவனுக்கு சைபர் குற்றம் என்றால் என்னவென்று புரியும் அளவிற்கு எழுத முயன்றிருக்கிறேன்.

இந்தக் கட்டுரைகள் இருபது பகுதிகளாக அந்திமழை.காம் இணையதளத்தில் வரத் தொடங்கியிருக்கின்றன. உங்களுடைய கருத்துக்களை vaamanikandan@gmail.com என்னும் மின்னஞ்சலில் தெரியப்படுத்தலாம்.

Apr 27, 2008

சரக்கடித்தவர்களிடம் சிக்கிக் கொண்டவனின் கதை

பெண்கள் வரிசையாக போதை தலைக்கேறி சாலையில் விழுந்து கிடப்பதை பார்த்ததுண்டா? ப்பூ இது ஒரு மேட்டரா என்பவர்கள் ஆண் விபச்சாரன்களை(இலக்கணப்படி இது சரியான வார்த்தைதானே?) விலை பேசி அழைத்துச் செல்லும் பெண்களை பார்த்ததுண்டா? இதுவும் ப்பூ மேட்டர் என்பவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டியதில்லை. இது ஆச்சரியமாகத் தெரிபவர்கள் ஒரு நாள் பஸ்ஸோ, டிரெயினோ ஏறி ஹைதராபாத் வந்து இறங்கி எனக்குச் சொல்லிவிடுங்கள். நான் இல்லையென்றாலும் ஒன்றும் பெரிய விஷயமில்லை. செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து மெகதிப்பட்டணம் வந்துவிடுங்கள். 49எம் பஸ் பிடித்தால் கடைசி நிறுத்தம் அதுதான்.

மெகதிப்பட்டணத்திலிருந்து நான்கு ரூபாய் கொடுத்தால் ஷேர் ஆட்டோக்காரன் பத்து பதினைந்து பேரில் உங்களையும் ஒருவராக வைத்து அமுக்கித் திணித்து தர்காவில் கொண்டு வந்து இறக்கிவிடுவான். தர்க்கா என்பது அந்த இடத்தின் பெயர். ஒரு பழைய காலத்து தர்க்கா அது. அவ்வப்போது சினிமா படப்பிடிப்பைத் தவிர்த்து பெரிதாக அந்த இடத்தில் ஒன்றுமில்லை.

கடந்த சனிக்கிழமை அலுவலகத்திற்குச் சென்று திரும்பி வரும் போது 'மப்பு' ஏற்றிக் கொண்ட பெண்களைப் பார்த்ததும் ஆட்டோவில் இருந்து இறங்கிக் கொண்டேன். இறங்கிய உடன் ஒரு சந்து இருக்கிறது. 'ப' வடிவம். இந்த 'ப'வை நீங்கள் மிகப் பெரிதாக கற்பனை செய்து கொள்ள வேண்டும். 'ப'வின் இரண்டு பக்கக் கோடும் சாலைகள். 'ப'வின் அடிப்பக்கக் கோடுதான் சாராயக் கடை. கடையா அது எவன் சொன்னான்? அது கடல். வெள்ளை வெளேரென்று அண்டாவிலும் பாட்டிலிலும் ஆண்களும் பெண்களுமாய் காசு வாங்கிக் கொண்டு ஊற்றி ஊற்றி கொடுக்க, ஆண்களும் பெண்களுமாய் வாங்கிக் கொண்டு அமர்ந்து கொள்கிறார்கள்.

எண்ணெயில் பொரியும் கொழுப்பு, முட்டையை உடைத்து அதன் மீது குடல் குண்டாமணி எல்லாம் போட்டு ஒரு ஐட்டம், மூக்கில் ஏறும் வாடையில் மண்டையோட்டில் ஒரு ஓட்டை விழுமளவுக்கான மீன் வறுவல், சில்லி சிக்கன்(அ)காக்கா, சில்லி பீப்...அட போங்கய்யா...எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது. இந்த 'சைட் டிஷ்' கடைகளும் 'ப'வின் அடிக்கோட்டு சாலையில்தான்.

ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே 'ஸ்தீலு' என்று எழுதப்பட்ட இரண்டு வரிசைகளில் பெண்கள் மட்டுமே சரக்கடிக்க முடியும். இங்கு ஒரு குட்டி 'லாங்குவேஜ் டியுஷனை' முடித்துக் கொள்ளலாம். தெலுங்கில் 'லு'வில் முடிந்தால் பன்மை. அது தெலுங்கு ஆனாலும் சரி, ஆங்கிலம் ஆனாலும் சரி. டிக்கெட் என்றால் ஒருமை, டிக்கெட்லு என்றால் பன்மை. ஸ்திரீ என்றால் பெண். ஸ்திரீலு என்றால் பெண்கள். சில சொற்கள் இப்படி 'லு' சேர்ந்து தமிழின் மோசமான கெட்டவார்த்தையாக இருக்கின்றன. அதெல்லாம் இங்கு சொல்ல முடியாது.

நான் சென்றிருந்த போது சண்டை எதுவும் இருக்கவில்லை. போதையேறிய பெண்களை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தேன். கடும் உழைப்பாளிகளாக இருக்கும் பெண்கள் என்பது அவர்களின் உடலமைப்பிலேயே தெரிந்தது. ஆண் பெண் என்ற வேறுபாடு எதுவும் பெரிதாக இல்லை. சில ஆண்கள் அருகிலிருக்கும் பெண்களின் மார்பையோ அல்லது தொடையை தடவிக் கொண்டிருந்தார்கள். பற்களில் கரையேறிக் கிடந்த அந்தப் பெண்கள் அதை ரசித்த மாதிரியும் தெரியவில்லை. தடுத்த மாதிரியும் தெரியவில்லை. இங்கு எந்தத் தடைகளும் யாருக்குமே இருக்கவில்லை. யார் விரும்புவதும் கிடைப்பதாக இருந்தது. போதை, உடல் எதுவாக இருப்பினும். எனக்கு கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது.

ஒரு ஆண் நூற்றைம்பது ரூபாய் கேட்டுக் கொண்டிருந்தான் இரண்டு பெண்களிடம். இரண்டு பேரை சமாளிப்பது கஷ்டம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். கொஞ்சம் தள்ளி ஒரு பெண்ணிடம் இரண்டு ஆண்கள். இரண்டு பேரும் என் வயதையொத்தவர்களாக இருப்பார்கள். அவளுக்கு ஐந்து வயது கூடுதலாக இருக்கும். எப்படியிருப்பினும் முப்பதிரண்டை தாண்டாது. அதிக நேரம் பேரம் நடக்கவில்லை. ஏதோ முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

அவள் முன்னதாக நடக்க இரண்டு ஆண்களும் அவளைத் தொடர்ந்தார்கள். ஒருவன் அவளின் பின்புறத்தை தட்டி தட்டி நடந்தான். முந்தின நாள் பெய்த மழையின் ஈரம் சாலைகளில் இருந்தது. இருள் திட்டுக்களாக விரவியிருந்தது. மிக இலாவகமாக நடந்து கொண்டிருந்தார்கள். அனேகமாக பழக்கப்பட்ட பாதையாக இருக்கும். எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. இருளும், அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்ற பயமும் எனக்குள் ஒருவிதமான பதட்டத்தை உண்டாக்கியிருந்தது.

அரைக் கிலோ மீட்டருக்கும் மேலாக நடந்தவர்கள் சட்டென்று ஒரு ஒற்றையடிப்பாதையில் நடக்கத் துவங்கினார்கள். அது சுடுகாடு. சில சமாதிகள் சிதிலமடைந்து கிடந்தன. இந்த இடத்தில் எப்படி பயமில்லாமல் அவர்கள் செயல்பட முடியும் என்று தோன்றியது. அவர்களுக்குத் தேவை மறைவிடமாக மட்டுமே இருந்தது. கொஞ்சம் தயங்கித் தயங்கித்தான் அவர்களை நோக்கி நகர்ந்தேன்.

இரண்டு ஆண்களும் தங்கள் ஆடையைக் கழட்டிவிட்டு அவளை அவசரப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவள் மெதுவாக இயங்கிக் கொண்டிருந்தாள் தன் புடவையை உயர்த்தும் போது நான் அவள் கண்களில் பட்டுவிட்டேன். என்னவோ அவள் அவர்களிடம் மெதுவாக சொன்னாள். அடுத்த கணம் மிக உக்கிரமாக என்னைத் துரத்த ஆரம்பித்தார்கள். எதற்காக அவர்கள் என்னைத் துரத்த வேண்டும்? நான் தவறு செய்ததாக நிரூபிக்கலாம். பணம் பறிப்பதற்காக இருக்கலாம் அல்லது அவர்களின் நிர்வாணத்தை பார்த்துவிட்டதற்காக இருக்கலாம். இந்த ஆராய்ச்சி இப்பொழுது தேவையா?

என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்களிடம் சிக்கினால் போதையில் என்னைக் கொன்றுவிடக் கூட முடியும். ஊரை விட்டு வெகு ஒதுக்குப் புறமாக இருக்கும் இந்த சுடுகாட்டில் என்ன உதவி எனக்கு கிடைத்துவிட முடியும்? கண்ணாடியை ஒரு கையிலும், சட்டையில் இருந்து பணம், செல்போன் விழுந்துவிடக் கூடாது என்று அவற்றை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு ஓடத் துவங்கினேன். ஈரத்தில் கால் பதிந்து ஒரு செருப்பு கழண்டு விட்டது. ஓடும் போது முட்களின் கீறலும், நெருஞ்சி முட்கள் பாதத்தில் பதிவதுமாக பெரும் வாதையை உண்டாக்கின. ஆனாலும் எனக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களின் சப்தம் தெளிவான போது அவர்கள் என்னை நெருங்கிவிட்டதை உணர முடிந்தது. எப்படி வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளட்டும் ஆனால் உயிரோடு விட்டுவிட்டால் போதும்.

இப்பொழுது கருவேல முள் ஒன்று வலது காலைக் கிழித்துவிட்டது. வெறியெடுத்து ஓடத் துவங்கினேன். வெகு தூரம் ஓடியிருக்கக் கூடும். கொஞ்ச நேரத்தில் சப்தம் குறைந்திருந்தது. திரும்பிப் பார்க்கலாம் என்று தோன்றியது. பின்புறமாக ஒருவருமில்லை. கால் கடுகடுத்தது. வியர்வை கசக்கயிருந்தது. செல்போன், பர்ஸ் என்னிடமே இருந்தது. நேற்றுதான் மெகதிப்பட்டணம் பஸ்ஸ்டாப்பில் ஒரு பெல்ட் வாங்கியிருந்தேன். நாற்பது ரூபாய். லாரி டயரைக் கிழித்து பாலிஷ் போட்டு விற்றான். இதை அப்பொழுதே கழட்டியிருந்தால் அவர்களை அடித்திருக்கலாம் என்ற குருட்டு தைரியம் வந்ததிருக்கிறது.

இப்பொழுது மூன்று பேரும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? பெல்ட்டைக் கழட்டிக் கொண்டு அடிக்கச் செல்லட்டுமா? கால் வலிக்கிறது. நீங்கள் சொல்லுங்கள்? வீட்டிற்கு போகட்டுமா? அவர்களோடு சண்டைக்கு போகட்டுமா?

Apr 25, 2008

சீர்லீடர்ஸ்-'பெருத்த மார்புகளும், சுழலும் இடுப்புகளும்

இந்தியாவின் கலாச்சாரம் என்பது போலித்தனங்களால் வடிவமைக்கப்பட்டது. இந்தப் போலித்தனங்களை அவ்வப்பொழுது யாரும் சலனமுறச் செய்யாமல் இருக்க தண்டல்காரர்கள் தடியெடுத்துக் கொண்டேயிருப்பார்கள். சிவசேனா, ஆர்.எஸ்.எஸ் என்ற அகண்டபாரதக்காரர்கள் மட்டுமில்லாது நம் ஊரைச் சார்ந்த ராமதாஸ் வரைக்கும் ஒரு பெரும் படை இதற்கு இருக்கிறது.

மகாராஷ்டிர அரசுதான் தற்போதைய தண்டல்காரன். ஐபிஎல் நடத்தும் கிரிகெட் போட்டிகளில் 'சீர்லீடர்ஸ்' எனப்படும் நடனக்குழுவிற்கு மும்பையில் தடை செய்யப் போகிறார்கள். மாநில உள்துறை இணையமைச்சருக்கு இந்தப் பெண்களின் 'பெருத்த மார்புகளும், சுழலும் இடுப்புகளும்' பெரும் தொந்தரவு செய்கிறதாம்.

நம் கலாச்சாரம் ஐந்தாயிரம் ஆண்டுகள் பாரம்பரிம் கொண்டது என்னும் வெற்று புளுகுமூட்டையைச் சுமந்து திரியும் இவர்கள்தான் உண்மையில் குப்பைகள். கலாச்சாரம் என்று இன்று நாம் கட்டியழும் எதுவுமே அடிப்படையான உண்மையைக் கொண்டவையில்லை. இவை இடைச் செருகல்கள். தங்களின் வசதிகேற்ப தங்களின் ஆதிக்கத் தன்மையை நிலைநிறுத்திக் கொள்ள அவ்வபொழுது சில குழுக்களால் வரையறுக்கப்பட்டவை.

தனக்கான விருப்பினை நிறைவேற்றிக் கொள்ள தனிமனிதனுக்கு எந்த சுதந்திரமுமில்லாத இந்தச் சமூகத்தில் எல்லாவிதமான செயல்பாடுகளிலும் தடைகள் இருக்கின்றன. தடைகளை மீறுபவர்கள் சமூகத்தின் குற்றவாளிகளாக கூண்டிலேற்றப்படுவார்கள்.

மனிதமனதின் ஆசைகள் வெறும் புறக்கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்தக் கூடியவை இல்லை. அவை மதிப்பீடுகளால்(வேல்யூஸ்) மனதினுள் உருவாக்கப்படும் மாற்றங்களின் மூலம் கட்டுப்படுத்தக் கூடியவை. ஆனால் நாம் கலாச்சாரம் என்று பேசித் திரிபவைகள் எதுவும் மதிப்பீடுகளைக் கொண்டவை இல்லை. வெறும் தடைகள். மற்றவர்களுக்குத் தெரியாமல் இங்கு மனிதன் செய்யும் தவறுகள் அனைத்திற்குமான அடிப்படைத் தூண்டல்கள் நம் போலித்தனங்கள்தான். (இவர்களின் பாஷையில் 'கலாச்சாரம்').

சரி மகாராஷ்டிராவிற்குச் செல்லலாம். பெண்களை போகப்பொருளாக மட்டுமே காட்சிப்படுத்தும் எத்தனையோ திரைக்காட்சிகளும், விளம்பரங்களும் வந்து கொண்டு இருக்கின்றன. ஒருவன் அணிந்திருக்கும் உள்ளாடையைப் பார்த்தும், ஒருவனின் வாசனைத் திரவியத்திலும் தூண்டப்பட்டு காமத்தில் திளைக்கும் பெண்கள் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தடவைகள் வரவேற்பறை வரைக்கும் வந்து செல்கிறார்கள். இவர்களின் கலாச்சாரத்தை இந்த விளம்பரங்கள் எதுவும் செய்யாமலிருக்கின்றன.

இவர்களின் கூறுகள் எல்லாவற்றிலும் ஆணாதிக்கம்தான் தொக்கி நிற்கின்றன.

இதே அமைச்சர் பெண்ணின் உடல் இந்த நடனங்களில் தவறுதலாக வணிகமயமாக்கப்படுகிறது என்று சொல்லியிருந்தால் ஒரு சலாம் அடித்திருக்கலாம். குடும்பத்தோடு பார்க்க முடியவில்லை என்றிருக்கிறார். (இந்த இடத்தில் உங்களுக்கு ஞாபகம் வரும் இந்திப்படப் பாடல் ஒன்றின் குலுக்கல் காட்சியை நினைத்துக் கொண்டு சிரித்துக் கொள்ளலாம்). ஒருவேளை குடும்பத்தோடு அமர்ந்து நீலப்படங்கள் மட்டும்தான் பார்ப்பார்களோ என்னவோ. நமக்கு ஏன் பொல்லாப்பு?

ஆயிரக்கணக்கான பார் பெண்களின் வாழ்வை அழித்த அரசு இந்த நடனத்தை தடை செய்வதில் வியப்பேதுமில்லை.

உடல் என்பது மனிதனின் காமத் தேடுதலை தூண்டிவிடுவதாக வைத்திருப்பதில் உங்கள் கலாச்சாரம் பெரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. பெருத்த மார்புகள் இந்திய ஆடவனின் மனதை களைத்தெறியும் அளவிற்கு வேறு தேசத்தில் களைப்பதில்லை. ஒரு அமைச்சரின் கண்களுக்கும் குலுங்கும் மார்புதான் தெரிகிறது என்பதுதான் உங்கள் கலாச்சாரத்தின் வெற்றி.(வேறு என்ன உனக்குத் தெரிகிறது என்கிறீர்களா?. அது சரி)

இங்கு கருப்புப் போர்வைகளால் ஆசைகளை மூடி வைக்க வேண்டியிருக்கிறது. போர்வையின் வெளிப்புறம் எதுவும் தெரிவதில்லை. ஆசையின் உஷ்ணக்காற்றும், வேட்கையின் வேட்டைக் கண்களும் வெளியே தெரியக்கூடாது. ஏனென்றால் இது ஆயிரக்கணக்கான ஆண்டின் பாரம்பரியம். போர்வைக்குள் நடக்கும் கொடூரங்கள், விகாரங்கள் எதுவும் வெளியே இருக்கும் கண்களுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும். தண்டல்காரன்கள் போர்வையை இழுத்து மூடிவிடும் பணியை பார்த்துக் கொள்வார்கள்.

அய்யா மகராசன்களா..கலாச்சாரம் என்று இங்கு எதுவுமேயில்லை. எல்லாம் வெற்று வார்த்தைகளும், போலித்தனமான பாவனைகளும்தான். முதலில் பொருளைப் புரிந்து கொண்டு இந்தச் சொல்லை புழங்கத் துவங்குங்கள். அதுவரை இந்தச் சொல்லுக்கு தடை விதியுங்கள்.

Apr 23, 2008

பிரியங்காவும் நளினியும்.

ஈரானிய அதிபர் ஸ்ரீலங்கா பயணிக்கிறார். இஸ்ரேல் அரசாங்கம் ராஜபக்சேவிற்கு ராணுவ ரீதியான பலமளிக்கவிருக்கிறது. ஜப்பான் தொடர்ச்சியாக, பேரினவாதத்திற்கு உறுதுணையாக நிதி ஆதாரங்களை அள்ளிக் கொடுக்கும். பாகிஸ்தான் தோள் கொடுக்க, சீனா களம் அமைக்க, இந்தியாவின் உளவு,ராணுவ ரீதியான உதவியுடன் தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கை அரசின் செயல்பாட்டிற்கு தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து சான்றிதழ் வழங்கும்.

தமிழன் செத்தழிவது சிட்டெறும்பு கடித்ததற்கும் குறைவான சுரணையை 'தமிழ்'உணர்வு மிக்க தமிழக அரசியல்வாதிகளுக்கு உண்டாக்குகிறது. கருணாநிதிக்கு ஸ்டாலினுக்கு முடிசூட்டுவதிலும், ஜெயலலிதாவிற்கு தான் தீவிரவாதத்திற்கு எதிரான இரும்புப் பெண்மணி என்னும் 'பிம்பத்தை' உருவாக்குவதிலுமே கவனமிருக்கிறது. விஜயகாந்த்- இவர் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தாலும்- இவரை அரசியல்வாதியாகவே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எந்தப் பிரச்சினையிலுமே 'கழுவிய மீனில் நழுவிய மீனாக' இருக்கும் இவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஸ்திரமான குரல் கொடுப்பார் என்னும் நம்பிக்கை எதுவுமில்லை.

ராமதாஸ், கருணாநிதிக்கு எந்த விதத்திலும் சளைத்தவரல்ல- தன் கட்சி, தன் குடும்பம் என்னும் கொள்கைகளில். மக்கள் செல்வாக்கினை முற்றுமாக இழந்து நிற்கும் வைகோ,திருமா, வலுவில்லாத நெடுமாறன் போன்றோரின் குரல்கள் செவிடன் காதில் ஊதிய சங்காக இருப்பது பெருந்துக்கம்.

பதினேழு வருடங்களாக கண்ணுக்குத் தெரியாத நளினி இன்றாவது பிரியங்கா வதேராவின் கண்களில் பட்டிருப்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம். இதில் எத்தனையோ அரசியல் பார்வை, முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஈழத்தின் மீதான புரையோடிப் போயிருக்கும் இந்திய மக்களின் வெறுப்பின் தடிமனை சற்றேனுக் குறைக்க உதவும். 'தமிழினத் தலைவர்' முதல்வராக இருக்கும் தமிழக அரசு இந்த நிகழ்வினை இத்தனை தூரம் மறைத்திருக்க வேண்டியதில்லை.ஒரு இனம் அழிந்து கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினை ராகுல் காந்தி பிரமதர் வேட்பாளரா இல்லையா என்பதனை விட முக்கியமானதாகவே படுகிறது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் போன்ற தமிழக காங்கிரஸ்காரர்களிடம் கேட்பதற்கு என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. தீவிரவாதத்தை நீங்கள் எதிர்ப்பதில் எந்த ஆட்சேபனையுமில்லை. ஆனால் பேரினக் குழு ஒன்று தமிழர்களை எந்தக் கருணையுமில்லாமல் நசுக்கிக் கொண்டிருப்பதற்கு உங்களின் தீர்வாக எதனை முன் வைக்கிறீர்கள்?
நீங்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு என்று சொல்லிக் கொண்டு வெளியிடும் ஒவ்வொரு அறிக்கையிலும் ஈழத்தில் வாழும்/செத்துக் கொண்டிருக்கும் சாமானிய தமிழனின் பிரச்சினைக்கு ஒரு வரியிலாவது குரல் கொடுங்கள்.

ஈழத்தில் தமிழனும், தீவிரவாதமும் வேறில்லை என்னும் பிம்பத்தை உலக அரங்கில் உருவாக்க ராஜபக்சே அரசாங்கம் கையாளும் உத்திகள் அவர்களுக்கு முழு வெற்றியைத் தந்து கொண்டிருப்பது உங்கள் கண்களுக்குத் தெரியாமல் இருக்கிறதா? அவர்கள் கொல்லும் ஒவ்வொரு அப்பாவித் தமிழனும் கூட அவர்களுக்கு ஒரு தீவிரவாதிதான். அவர்களின் அடிப்படை நோக்கம் தமிழனை அழிப்பதுதான்.

தமிழுணர்வுள்ள/மனிதாபிமானமுள்ள எந்த அரசியல்வாதிக்கும் இந்த இடத்திலிருந்து ஒரு கடமை இருக்கிறது. தீவிரவாதக் குழுவொன்றை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற போர்வையில் சாமானியத் தமிழர்களை தாக்கும் இலங்கை அரசின் போக்கினை தட்டிக் கேட்பதுமான, உலக நாடுகள் வழங்கும் எந்த சிறு உதவியும் மறைமுகமாக ஒரு இனத்தை அழிப்பதற்கான உதவிதான் என்பதை விளக்க வேண்டியதுமான கடமை.

குறிப்பிட்ட குழுவினை ஆதரிப்பதற்கும், வெறுப்பதற்கும், எதிர்ப்பதற்கும் எத்தனையோ காரணங்கள் தனிப்பட்ட ஒருவருக்கும், அரசாங்கத்திற்கும் இருக்கலாம். ஆனால் அந்த விருப்பு வெறுப்பு தீவுத்தமிழர்களின் வாழ்வினை சிதைப்பதில் எந்தப் பங்களிப்பையும் தருவதாக இருக்கக் கூடாது.

Apr 16, 2008

திபெத்தியர்களும், இந்திய 'சூடோ' கம்யூனிஸ்ட்களும்.

காங்கிரஸ் அரசிற்கு இந்த அளவு தைரியம் வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. திபெத் மக்கள் அமைதியாக போராட்டம் நடத்தினால் நாங்கள் தடுக்க முடியாது என்று சீன அரசுக்குத் தெளிவாக்கியிருக்கிறது. ஒரு சலாம். இதில் கூட அமெரிக்க அரசு சீனாவை எதிர்த்துப் பேசும் தைரியத்தை கொடுத்திருக்கலாம். அது பற்றிய பிரச்சினை இங்கு இல்லை.

மேற்கு வங்கத்தில் திபெத்திய ஆதரவு நடவடிக்கைகளுக்கு தடை விதித்து வழக்கம்போலவே தங்களின் ______தனத்தை காட்டியிருக்கும் மேற்கு வங்க அரசின் சீன சொம்படித்தனத்தைப் பற்றித்தான் எரிச்சல் வருகிறது. இந்தியா போன்ற சுரணையற்ற தேசத்தில் இருக்கும் கம்யூனிஸ்ட்கள் மட்டும் சுரணையுடையவர்களாக இருப்பார்கள் என்று நம்புவது எவ்வளவு மடத்தனமானது என்பது பற்றி அறிந்தேயிருக்கிறேன் என்றாலும் தங்களின் போலித்தனத்தை 'சூடோ'கம்யூனிஸ்ட்கள் என்றும் ஒத்துக் கொண்டதில்லை என்பது மட்டுமில்லை, விவஸ்தையற்ற முடிவுகள் எடுக்கவும் தயங்கியதில்லை என்பது வரலாறு.

ஐம்பதுகளின் முடிவில் சீன,இந்திய அரசின் உறவில் விரிசல் விழுந்து போருக்கான வெளிச்சம் படரத்துவங்கையில் இங்கு இருந்து கொண்டு தாங்கள் சீனாவிற்கு ஆதரவு என்று கொள்கை முழக்கம் செய்த பச்சோந்திகள் அல்லவா? இதற்காக நான் ஒன்றும் அகண்ட பாரதம் என்ற கொடி தூக்க வரவில்லை. அந்தக் குழாம் பற்றி இன்னொரு நாள் பேசலாம். அட கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா? அடுத்த வீட்டுக்காரன் தன் பொண்டாட்டியை அடிக்க வரும் போது "அந்த தேவிடியா கூட எனக்கு நேத்து சண்டை! அடி அவளை ங்கொக்கமக்கா!" என்று பேசும் புருஷனைப் போன்ற மகராசன்கள் எங்கள் தேசத்து கம்யூனிஸ்ட்கள்.

எனக்கு கம்யூனிஸம் மீது எந்த வெறுப்புமில்லை. இன்னும் சொல்லப் போனால் தன் சூழல், சமூகம், தம்மைச் சுற்றி வாழும் மக்களின் நிலை பற்றி சிந்திக்கும் எவருக்கும் கம்யூனிஸம் என்ற பெருங்கடலின் சிறு துளியில் கால் நனைத்திருப்பான். என் வெறுப்பு 'சூடோ'கம்யூனிஸ்ட்கள் மீதுதான்.

சீனாவில் கம்யூனிஸ ஆட்சி நடக்கிறது என்பதற்காகவே அந்த நாட்டின் நடவடிக்கைகளை ஆதரிப்பவர்கள் என்றால் கம்யூனிஸம் எந்த அளவு அங்கு நடைமுறையில் இருக்கிறது என்பது இங்கே இருப்பவர்களுக்குத் தெரிந்து இருக்கிறதா? அந்த இரும்புக் கதவிற்குள்ளான அடக்குமுறைகள் பற்றிய கவனிப்பு இவர்களுக்கு உண்டா? உண்மையைச் சொன்னால் ஒரு இழவும் கிடையாது. சிவப்பு ஜட்டி அணிந்தவன் கூட இவர்களுக்கு 'காம்ரேட்'. அவ்வளவுதான்.

இவர்கள் எதிர்த்துப் பேசும் தாராளமயமாக்கலுக்கு சீனாக்காரன் சிவப்புக் கம்பளம் விரித்து 10% பொருளாதார வளர்ச்சியில் நடை போடுகிறான். ஆனால் இதுவெல்லாம் இவர்களுக்கு ஒத்துக் கொள்ளாது.

எத்தனை கம்யூனிஸ்ட்கள் இன்று களத்தில் இறங்கி போராடுகிறார்கள். சராசரி மூன்றாம்தர அரசியல்வாதிகள்தான் இன்றைய பெரும்பாலான 'தோழர்கள்'. ஆனால் ஸ்டாலின் (இது வேற ஸ்டாலின்ங்க), மார்க்ஸ், லெனினை அடியொட்டி வந்தவர்கள் என்று வாய்ச்சவடாலைப் பாருங்கள். இவர்கள் ஆட்டம் போடும் மேற்கு வங்கத்தில்தானே நந்திகிராம் பல்லிளித்தது?. மக்களைப் பற்றிப் பேச இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது? சொல்ல முடியாது 'டாடா' சிவப்பு ஜட்டி அணிந்திருக்கலாம்.

இந்தியாவில் கம்யூனிஸம் பேசுவதற்கும், கம்யூனிஸ்டாக செயல்படுவதற்கு நிறையத் தேவை இருக்கிறது. பேச்சோடு நிறுத்திக் கொண்டு நான் கம்யூனிஸ்ட் என்று சொல்பவர்கள்தான் இங்கு அதிகம். உங்களின் பேச்சுக்கும், செயல்பாட்டிற்குமான இடைவெளி எத்தனை பெரியது என்று யோசித்ததுண்டா தோழர்களே?சமீப காலங்களில் தங்களின் தொடர் போராட்டங்களினால் பாட்டாளி வர்க்கம் அடைந்த பலன்களின் பட்டியல் என்று ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?

அந்தக் கருமாந்தரங்களை எல்லாம் விடுங்கள்.

சீனாக்காரன் அடித்துத் துரத்திய திபெத்திய மக்கள், நீங்கள் நந்திகிராமில் செய்தது போன்று அரிவாளோடு திரிகிறார்களா? அமைதியான தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்வதற்கு கூட அனுமதியாத நீங்கள், உங்களை நீங்கள் நசுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ள என்ன அருகதை இருக்கிறது.

உச்ச நீதிமன்றம் 'ஸ்டிரைக்' கூடாது என தடை விதித்தப் போது, போராட்டம் மக்களின் அடிப்படை உரிமை என்று கூச்சலிட்டீர்களே. இப்பொழுது நீங்கள் முடக்கும் போது என்ன ஆனது அடிப்படை உரிமை. எங்கள் ஊரில் ஒன்று சொல்வார்கள் "ஆள்காரன் குசு உட்டா அடிடா புடிடா...பண்ணாடி குசு உட்டா மணக்குது,மணக்குது". நீங்கள் எப்பொழுதுமே பண்ணாடிதானே. ஆள்காரனுக்கு பரிந்து பேசுவதாக நடிக்கும் பண்ணாடி.

கோபிச் செட்டிபாளையத்தில் 97 வயதில் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சி.சுப்பிரமணியம் என்ற பெரியவர் போன்ற வெகுசிலர் இன்னும் கம்யூனிஸ்டாக வாழும் காலத்தில்தான் போலிகள் பெருகியிருக்கிறார்கள். போலிகளின் கொடுமை என்னவென்றால் பாதிப்பேயில்லாதது போன்று பெரும்பாதிப்பை உண்டாக்கும். சாராயத்தில் பேட்டரித் தூளை கலப்பது போன்று.

ஒண்ணு சொல்லிக்கவா 'தோழர்ஸ்'? ஓவரா நடிக்காதீங்க...நம்பாம இருக்கிற நம்ம மக்கள் ரொம்ப நாளைக்கு அமைதியாவும் இருக்க மாட்டாங்க.

Apr 13, 2008

பெருமாள் முருகன் கவிதைகள்‍-துயரத்தை பொழியச் செய்பவை

(1)
இரவின் தனிமையில் சிந்தனையை ஒருங்காக்குதல் என்பது எனக்கு தவமாக இருக்கிறது. துக்கங்களா பிரியங்களா என்று புரிந்து கொள்ள முடியாத நீரூற்றுக்கள் மனவிடுக்குகளில் அலைந்து திரியும் அந்தக் கணங்கள் வாழ்வியல் அர்த்தங்களின் சிறு பிசிறுகளையாவது நமக்கு உணர்த்திவிடுகின்றன. பிர‌ப‌ஞ்ச‌த்தின் நுனியொன்றை தொட்டுவிட்ட‌தாக‌ அக‌ங்கார‌ம் கொண்ட அந்த இர‌வு ம‌றுநாள் வாழ்வோட்டத்தின் அசுர‌ வேக‌த்தில் சிதைந்து போவது வாடிக்கையாகிறது.

இந்தச் சிறு பிசிறு கசிந்து விடாமல் நமக்குள் தேக்கும் அனுப‌வ‌ம் சில அபூர்வமான க‌விதைக‌ளை வாசிக்கும் போது கிடைக்கிறது. தடித்த நாளொன்றைக் கவிந்த இரவில், மனச் சோர்வின் கனத்தில் சாவகாசமாக இதழில் பெருமாள் முருக‌னின் க‌விதைகளை வாசித்தேன்[காலச்சுவடு-மார்ச்'2008].

க‌ண்ணீர் க‌சியும் என் ஆழ்ம‌னதின் ந‌ர‌ம்புக‌ளை க‌விதை வ‌ரிக‌ளைத் த‌விர்த்து வேறெதுவும் மீட்டிட‌ முடியாது என்பதை ஒரு முறை உண‌ர முடிந்த தருணமது.

கவிதானுபவத்தின் அற்புத‌ங்க‌ளில் ஒன்றான கவிஞனுக்கும்,வாச‌க‌னுக்குமான‌ ஒத்த‌திர்வு எல்லா நேர‌ங்க‌ளிலும் இய‌ல்பாவ‌தில்லை. அபூர்வமாக அரங்கேறும் இந்த ஒத்ததிர்வில்தான் க‌விதைக‌ளின் பெருவெளிக்குள் வாச‌க‌ன் பயணிக்கிறான். இந்த‌ அற்புத‌க் க‌ண‌ங்களின் வாசிப்பனுபவம்தான் கவிதையின் மீதான வாசக தேடலயும், அடுத்த கட்டம் ஒன்றிற்கான நகர்வையும் வாசனுக்குள் உருவாக்குகின்றன‌. க‌விதையின் நுட்ப‌மான‌ ப‌ர‌ப்பில் அவன் த‌ன் துய‌ர‌த்தையும், ச‌ந்தோஷ‌த்தையும், காத‌லையும் இந்த‌க் க‌ண‌ங்க‌ளில் கொண்டாடுகிறான்.

வண்ணங்கள் விரிந்து/நட்சத்திரங்களெனச்/சிற்றழகாய் மினுங்கும்படி/நான் காப்பாற்றி வைத்திருக்கும்/பூக்கள்/கருகி உதிர்கின்றன/உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன.

'வ‌ண்ண ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள்'- த‌ந்தையின் க‌ன‌வுக‌ள் சிதைவதன் கொடூரத்தை காட்சியாக‌ முன்னிறுத்திய‌போது குற்ற‌வுண‌ர்வோடு எந்த‌ வினாடியும் நான் சித‌றி விட‌லாம் என்று ப‌த‌றினேன். நம் வாழ்வியல் முறைகளில் த‌ந்தைக்கும் ம‌க‌னுக்குமான‌ உற‌வு பெரும்பாலும் நுண்ணிய‌ இழைகளால் பின்ன‌ப்ப‌ட்டிருக்கிற‌து. கோபங்களில் வெடித்துச் சிதறுவதும், பிரியங்கள் நாசூக்காக மறைக்கப்படுவதும் எளிமைப்படுத்தவியலாத வனமாக மாற்றியிருக்கும் இவ்வுற‌வின் நுட்ப‌ங்க‌ளை இல‌க்கிய‌ங்க‌ளால் முழுமையாக‌ச் சொல்லிவிட‌ முடிவ‌தில்லை.

சிறு ச‌ல‌ன‌ங்க‌ளாலும், வெளிக்காட்டாத‌ அன்பின் துளிக‌ளாலும் அர்த்தமாகியிருக்கும் அந்த‌ உற‌வின் சிக்க‌ல்க‌ள் மிக‌ மெலிதாக இங்கு க‌விதையாகியிருக்கிற‌து.

த‌ந்தையின் துக்க‌ம் ப‌கிர‌ங்க‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் இக்க‌விதையோடு "குவிந்த கை" என்னும் க‌விதையினை என்னால் தொட‌ர்புப‌டுத்த‌ முடிகிற‌து. பிரிய‌த்தைச் சொல்லிச் செல்லும் பெருமாள் முருகன்,

அவன் வாய் திறப்புக்காகக் காத்திருக்கின்றன/பிரபஞ்சத்தின் விரல்கள் குவிந்து.

என்னும் வ‌ரிகளால் திடுக்கிட‌லை உண்டாக்குகிறார்‌. சு.ராவின் சொற்களில் சொல்ல‌ வேண்டுமானால் 'மூளைக்குள் ஆணி செருகும்' வித்தை. இந்த‌ வித்தை க‌விதைக்கு மிக‌ அவ‌சிய‌மான‌தாக‌ப் ப‌டுகிற‌து. வாச‌க‌னின் இந்த‌ அதிர்வு க‌விதையின் ப‌ல‌த்தை ப‌ன்ம‌ட‌ங்கு உய‌ர்த்திவிடுகிற‌து. நேர‌டி பொருள் தெறிக்காத‌ கார‌ண‌த்தில் வாச‌க‌ன் முழுமையான‌ க‌விதானுப‌வ‌ம் வேண்டி யோசிக்க‌த் துவ‌ங்குகிறான். தன் பொருள் ச‌ரியான‌தாக‌ இருக்குமா என்னும் த‌ய‌க்க‌த்தில் இன்ன‌மும் யோசிக்க‌ வேண்டியிருக்கிறது. இந்த புகைமூட்டம் உருவாக்கும் மனத்திற‌ப்பு க‌விதையின் சூட்சுமமாக‌ இருக்கிற‌து.
(2)
இதே கவிதையின் நுணுக்கத்தோடு தொடர்புடைய மற்றொரு கவிதை 'உத‌வி'. முதல் பத்தியில் காட்சியனுபவம் தெறிக்கும் கவிதை இரண்டாவது பத்தியில் தோல்விடையவதாகவே எனக்குப் படுகிறது. நீலக்கை நீண்டு திரும்பும் காட்சி மனதில் இன்னமும் இருப்பதாகச் சொல்வது தலைப்போடு சேர்த்து வாசிக்கையில் வேறொரு குறிப்புப் பொருளை உணர்த்துவதாகத் தோன்றினாலும் மற்ற கவிதைகளின் ஆழம் இதில் இல்லாததாக உணர்கிறேன். வெறும் ஆழ‌மில்லை என்ப‌தோடு நிறுத்திக் கொண்டால் ஆழ‌மின்மை என்ப‌த‌னை நிரூப‌ண‌ம் செய்யாம‌ல் த‌ர்க்க‌ ரீதியாக‌ இக்கூற்று தோல்வியடைவ‌தாக‌ அமைய‌லாம்.

நேரடியாக அணுகினால் இக்க‌விதையின் காட்சி அதிர்ச்சி த‌ருவ‌தாக‌ அமைகிற‌து. ஆனால் ச‌ற்று நிதானிக்கையில் 'திரும்பும்காட்சியே நிலைத்திருக்கிறது மனத்தில்' என்ற‌ வ‌ரிக‌ளால், அதுவ‌ரை க‌விதை உண்டாக்கிய‌ திசையிலிருந்து வேறொரு ய‌தார்த்த‌ போக்கிற்கு ம‌ன‌ம் திரும்புகிற‌து. இவ்விடத்தில், இந்த நொடியில் மனதில் உண்டாகும் வெற்றிடம் பெரும் சுமையாகிறது. திசைமாற்றும் இந்நுட்ப‌ம் இந்த‌க் க‌விதையில் அவ‌சிய‌மான‌தாக‌த் தோன்ற‌வில்லை. வாச‌க‌னாக‌ இக்க‌விதையை நான் தாண்டிவிடுகிறேன்.

'பொழுதாகும் கவலை'ய‌ற்ற‌ ச‌ந்நியாசி க‌ர‌டு/வெள்ளாட்டுக் குட்டி வ‌ரும் 'ச‌ந்நியாசி க‌ர‌டு' க‌விதையும்,'தாத்தாவின் கோவண வாலாய்த் தொங்கிக்கொண்டிருக்கும்' 'கொல்லிய‌ருவி' க‌விதையும் திரும்ப‌ முடியாத‌ நினைவுக‌ளுக்கு பாதைய‌மைக்கும் முக்கிய‌மான‌ க‌விதைக‌ள்.

எல்லோருக்கும் மீட்டெடுக்க முடியாத உலகமொன்றிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவ்வுலகிற்கும் நமக்குமான புள்ளிகளுக்கிடையேயான தொலைவு நகர்ந்து கொண்டேயிருக்கிறது. நெருங்க முடியாத புள்ளியாகிறது என்று உணர்ந்தாலும் அந்த உலகின் வசீகரம் நம்மை ஈர்த்துக் கொண்டுதானிருக்கிறது.

அவ்வழகியல் படைப்பாக மாறும் போது லெளகீகமாக அடைய முடியாத பிரதேசத்தின் நிழலில் கொஞ்ச நேரம் மனதினை நிலைநிறுத்துகிறது. இந்தச் சந்தோஷம் துக்கத்தின் கண்ணீருக்கு பொருள் தரும் சந்தோஷம். வாசிப்பில் கசியும் இந்தத் துக்கம் படைப்போடு வாசகனுக்கு உண்டாகும் பிரியத்தின் முதல் புள்ளி.

சிக்க‌லெதுவும‌ற்ற‌ வ‌ரிக‌ளில் நினைவுகளை இய‌ல்பாக‌ச் சுண்டிச் செல்லும் இக்க‌விதைக‌ள் இந்த‌ இர‌வின் த‌னிமையை துக்க‌ம் நிர‌ம்பிய‌தாக‌ மாற்றுகின்றன‌. துய‌ர‌த்தை அமில‌ ம‌ழையாக‌ பொழிய‌ச் செய்யும் இந்த‌க் க‌விதைக‌ளை நான் கொண்டாட‌ வேண்டும். இந்த‌ கொண்டாட்ட‌த்தின் நுனிக‌ளில் என் ச‌ந்தோஷ‌ம் ஒளிந்திருக்கிற‌து.