
கவிதை வாசிப்பு போதையை ஒத்ததாக இருக்கிறது. இங்கு 'கவிதை'யின் முன்னால் நல்ல என்ற சொல்லினை சேர்த்துப் படிக்கவும். கவிதையில் நல்ல கவிதை கெட்ட கவிதை என்ற பகுப்பினை உண்டாக்குவதற்கான உரிமையை எனக்கு யார் கொடுத்தார்கள் என்பது தருக்க ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய வினாதான்.
சில கவிதைகள் படித்து முடிக்கும் போது பெரும் தளர்ச்சியை உருவாக்கிவிடுகின்றன. இந்த தளர்ச்சி கவிதையை வலிந்து உருவாக்கியிருக்கும் தன்மையினால் வரும் தளர்ச்சி. தானும் எழுத வேண்டும் என்பதனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, வறட்டு அனுபவத்தோடு சொற்களை திரட்டி வரிகளை அமைத்துவிடுவதால் உருவாகும் தளர்ச்சி.
யாராலும் 'நானும் கவிதை எழுதியிருக்கிறேன்' என்று சொல்லி விட முடிகிறது. ஆனால் மனதில் தைக்கின்ற அனுபவங்களையும், காட்சிகளையும் அனுபவதிற்கும், எழுத்திற்குமான இடைவெளி குறைத்து எத்தனை பேரால் எழுத முடிகிறது என்பது பெரும் கேள்வி.
கவிதை என்ற பெயரால் தினமும் குறைந்தது இரண்டு சொற்க் கூட்டங்களையாவது தாண்டி வருகிறோம்.
அத்திபூத்தாற் போல சந்தோஷமான கவித்துவ அனுபவங்களும் கிடைத்துவிடுவதுண்டு.
-------------------
ராஜா சந்திரசேகரின் கவிதைகள் அத்திப் பூ வகை.
அவரின் கவிதைகள் தரும் அனுபவம் மனதிற்கு ஒரு வித திருப்தியை உண்டாக்குகின்றன.
மலைகளை வரைபவன்/ஏறிக்கொண்டிருக்கிறான்/கோடுகள் வழியே
என்ற கவிதையை உள்வாங்கிய நேரத்தில் எனக்கு அது எவ்வித சலனத்தையும் உருவாக்கவில்லை. பிறகொரு சமயமாக கவிதையின் கரங்கள் பெரும் நெருப்பின் கிளைகளுக்குள் என்னை அழைத்துச் சென்றன.
படைப்பாளியின் கனவுகளும், தீர்க்க முடியாத ஆசைகளும் சொல்லப்பட்ட கவிதையாக எனக்கு இது படுகிறது. ஆனால் படைப்பாளியைப் பற்றி மட்டுமே பேசும் கவிதை என்ற தீர்க்கமான எல்லைக்குள் அடக்க முடியாத வரிகள் இவை.
வரைபவன் என்பது ஒரு குறியீடு. இந்தக் குறியீட்டை நான் யாருக்கு வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்க முடிகிறது. அது படைப்பாளி, வாசகன், மாணவன் என்ற யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
தன் பணியின் மீதாக உண்டாகும் லயிப்போடு, அடைந்து விட முடியாத லட்சியம் ஒன்றினை நோக்கி விருப்பத்தோடு நகரும் தன்மையும் இக்கவிதையின் உயிர்ப்பாக இருக்கிறது.
படைப்பாளியை மீறி வாசகனை யோசிக்க வைக்கும் இந்த அம்சதிற்காகவே நான் இந்தக் கவிதையை கொண்டாடுவேன்.
இன்னுமொரு கவிதை. முந்தைய கவிதையோடு சற்றே தொடர்புடையது.
எல்லா கதவையும்/திறந்து வைத்திருக்கிறாள் சிறுமி/வரைந்த வீட்டில்
---------------
சிதையும் சொற்கள்/மறையும் சூரியன்/கவிதையில் உதிப்பது/அழகாய் இருக்கிறது/ஆனாலும்/சொற்களைச் சிதைக்கிறது/சுள்ளிப் பொறுக்கும் கிழவி/வீடு சேர வேண்டும்/என்ற யோசனை/
கிழவியைப் பின்தள்ளிப்/போகிறது ரயில்/சத்தலயம் பிசகாமல்
இந்தக் கவிதை என்னை ஈர்க்கவில்லை.மிக அற்புதமான காட்சி ஒளிந்திருக்கும் இந்தக்கவிதையில் சென்டிமெண்ட் துருத்திக் கொண்டிருக்கிறது.
சூரியன் மறைவது பழைய காட்சிதான் என்றாலும் சுள்ளி பொறுக்கும் கிழவியும், சத்தலயம் பிசகாத ரயிலும் கவிதையின் பரிணாமத்தை மாற்றுகின்றன.
ஆனால் கிழவிக்காக கவிஞன் வருத்தமடைவது தேவையில்லை எனப்படுகிறது. வெறும் காட்சிப்படுத்துதலோடு நிறுத்தியிருந்தால் படைப்பாளியின் பணி முடிந்திருக்கும்.
கிழவிக்காக வருந்துவதும், காட்சியை ரசிப்பதும், அடுத்த நிகழ்வு என்னவாக இருப்பது என்பதும் வாசகனின் ரசனையை பொறுத்து வடிவம் பெற வேண்டியது. கவிஞனுக்கு அங்கு அவசியமில்லை.
------------
அவருக்காக/நான் மன்னிப்புக் கேட்டேன்/
எனக்காக/யாராவது கேட்பார்கள்/தவறுகள் சுற்றித்திரியும்/பயமற்று.
இங்கு இயல்பான உண்மை ஒன்று கவிதையின் விரல்களைப் பற்றிகொண்டு மனதிற்குள் சுற்ற ஆரம்பிக்கிறது.
இந்த உலகின் பிரம்மாண்டத்தில் இருண்மையும்,இருளுமே பெரும்பான்மையாக வியாபித்திருக்கிறது. படைப்பாளி என்பவன் சிறு கை விளக்கை ஏந்திக் கொண்டு உண்மையைத் தேடி அலைபவனாக இருக்கிறான். அவன் உண்மையை அடையாளம் காண்கிறான் அல்லது இருளின் மீது சிறு வெளிச்சத்தை வீசச் செய்து வாசகனை உண்மையைக் கண்டறியச் சொல்கிறான்.
இக்கவிதையில் கவிஞன் நேரடியாக உண்மையைச் சொல்லிவிடுகிறான்.
மிகக் கச்சிதமாக அமைந்த கவிதை என்று இதனைச் சொல்வேன்.
---------------
மிகச் சிறந்த கவிதைகள் சிலவற்றையும், மிகச் சிறந்த கவிதைக்குரிய அம்சத்தோடு சுமாரான கவிதைகள் சிலவற்றையும் படைத்து வரும் ராஜா சந்திரசேகரின் கவிதைகளின் பெரும் பலமாக கவிதைகள் தரும் காட்சிகளும், விதமான அனுபவங்களும் இருக்கின்றன.
பெரும் பலவீனமாக கவிதையில் கவிஞன் பேசிவிடுவதாக இருக்கிறது.
அயற்சியூட்டாத இவரின் கவிதைகள் எனக்கு இதம் தருபவையாக இருக்கின்றன.