Jan 24, 2008

ஜெயமோகனோடு ஐந்து நிமிடங்கள்

புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகன் அவர்களை இந்த முறை சந்தித்தது இரண்டாவது முறை. முதல் முறை சந்தித்தது 2005 ஆம் ஆண்டு கண்காட்சியில். அந்தச் சமயம் இன்றிருப்பதை விட நான் பொடியனாக இருந்த காரணத்தால் ஓரமாக நின்று கொண்டேன்.

இவ்வாண்டு கொஞ்ச‌ம் தைரிய‌ம் வ‌ந்திருந்த‌து. ந‌ண்ப‌ர் வெங்க‌ட்டிட‌ம் 'சிங்க‌ம் வ‌ந்திருக்கு...போய் பேசுவோமா?'என்றேன்.


ஜெயமோகனோடு நணபர் வெங்கட்.

சில‌ரிட‌ம் ந‌ம்முடைய‌ வீர‌ பிர‌தாப‌ங்க‌ளை நாசூக்காக‌ சொல்லிவிட‌ முடியும். ஜெ.விட‌ம் அது ப‌லிக்காது. அதனால் 'பிலாக் எழுதறது உண்டு சார்' என்பதோடு நிறுத்திக் கொண்டேன்.

'அப்படியா..நல்ல விஷயம்...ஆனா பிலாக்ல‌ எழுத‌ற‌து எல்லாம் ந‌ம் எழுத்தை கூராக்கும்ன்னு சொல்ல‌ முடியாது. இப்போ ஒரு கதை/கட்டுரை உயிர்மைக்கு அனுப்ப‌றீங்க. மனுஷ்ய புத்திரன் ப‌ப்ளிஷ் ப‌ண்ண‌லைன்னா நம்ம எழுத்துல ஏதோ மிஸ் ஆகுதுன்னு யோசிப்போம். பிலாக்கில் அதுக்கு வாய்ப்பே இல்லை.இல்லையா?' என்று சொல்லிவிட்டு க‌ண்க‌ளை உற்று நோக்கினார்.

இந்த‌ அள‌வுக்கு க‌ண்க‌ளை நேருக்கு நேராக‌ பார்த்து பேசும் ம‌னித‌ரை நான் இதுவரை ச‌ந்தித்த‌தில்லை என்ப‌தால் க‌ண்களை பார்க்கும் தைரியமில்லாதவனாய்‌ த‌லையை அடிக்க‌டி குனிந்து கொண்டேன்.இந்தக் கண்களுக்கு கத்தி தேவலாம்.

'தொகுப்பு எப்போ வ‌ருது‌'

'இந்த‌ புக்பேர்ல‌ வ‌ந்துடும் சார்'

'ஆமாம்...க‌விதை அங்க‌ ஒண்ணு இங்க‌ ஒண்ணு வ‌ந்தா பெரிசா தெரியாது. தொகுப்பு ஒரு ந‌ல்ல‌ பிரேக் த‌ரும். க‌வ‌னம் கிடைக்கும்'.சிரித்துக் கொண்டு த‌லையை குனிந்து கொண்டேன்.

'உங்க கூட பேசியிருக்கேன்.முன்னாடி'.

'இப்போ எல்லாம் லெட்ட‌ர்ஸ், போன்க்கு எல்லாம் ச‌ரியா ப‌தில் சொல்ல‌ முடிய‌ற‌தில்ல‌...அசோக‌ வ‌ன‌ம்ன்னு ஒரு நாவ‌ல் எழுதிட்டு இருக்கேன்..3000 ப‌க்க‌ம்...'

அத‌ற்குள் ஷாஜி ஏதோ ஜெ.விட‌ம் பேசினார்.


ஷாஜி(வலப்பக்கம் நிற்பவர்)

'இவர் ஷாஜி...பெரிய இசை விமரிசகர்...'

'தெரியுமே சார்..சொல்லில் அடங்காத இசை ஷாஜி..டைம்ஸ் ஆப் இந்தியால ஒரு கட்டுரை ரீசண்ட்டா பார்த்தேன்' என்றேன்.

'ஆமா இளையராஜாவை பத்தி...பயந்துட்டே எழுதியிருக்கார்' என்று சிரித்தார்.

மூன்றாயிர‌ம் என்ற‌ வார்த்தை எங்க‌ளுக்குள் ஒரு பேர‌திர்வை உண்டாக்கியிருந்த‌து. ஏழு நாட்கள், பதினான்கு நாட்களில் மிக‌ பிர‌மாதாமான‌ நாவல்களை முடிப்பவர்,இதனை வருடக்கணக்கில் எழுதுகிறார்.

'காடு' நாவ‌லை ப‌டித்து முடிக்க‌ என‌க்கு முப்ப‌த்தைந்து நாட்க‌ள் தேவைப்ப‌ட்ட‌து. மூன்றாயிர‌ம் ப‌க்க‌த்தை ப‌டிக்க‌ வேண்டுமானால் மூன்று வ‌ருட‌ங்க‌ளாவ‌து ஆக‌லாம். இதை எழுதுகிறார் என்று நினைக்கும் போது சிங்க‌ம் என்ற‌ ப‌டிம‌ம் டைனோச‌ராக‌ மாறிய‌து.

நான் சில‌ரிட‌ம் க‌வ‌னித்திருக்கிறேன். அவ‌ர்க‌ளாக‌ சொல்லியும் இருக்கிறார்க‌ள். த‌ன்னுடைய‌ தொகுப்பு த‌மிழ் இல‌க்கிய‌ வ‌ட்ட‌த்தில் பெரும் ச‌ல‌ன‌த்தை உண்டாக்கியிருப்ப‌தாக‌. அவர்களாக‌ச் சொல்லும் வ‌ரை என‌க்கு அப்ப‌டி ஒரு புத்த‌க‌ம் இருப்ப‌தே தெரியாது. சில‌ ம‌ணித்துளிக‌ளில் த‌ங்க‌ளுடைய‌ அறிவுரையையும் கொடுக்க‌ ஆர‌ம்பித்துவிடுவார்க‌ள். த‌ங்க‌ளுக்குத் தாங்க‌ளே ஒரு ஒளிவ‌ட்ட‌ம் பொருத்திக் கொண்டு.

ஆனால் எழுத்தை தவமாக நிகழ்த்தும், மொழியை தன் கட்டுப்பாட்டில் வைத்து ராஜபாட்டை நடத்தும் ஜெயமோகனால் எந்த‌‌ ப‌ந்தாவும் இல்லாம‌ல் இர‌ண்டு 'சொங்கி'பைய‌ன்க‌ளிட‌ம் எப்ப‌டி இவ்வ‌ள‌வு பொறுமையாக‌வும் அதே சமயம கவனத்தை தன் பேச்சில் வைத்தும் பேச‌ முடிகிற‌து என்று வியப்பாக‌ இருந்த‌து.

'மேன்ம‌க்க‌ள் மேன்ம‌க்க‌ள்தான்யா...'