Jan 31, 2008

டாடா கன்சல்டன்ஸி நிறுவனமும் ஊதிய வெட்டும்

தனது ஊதிய வெட்டு என்னும் நடவடிக்கையால் டி.சி.எஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மட்டுமன்று மென்பொருள் துறையில் இருக்கும் பெரும்பான்மையானவர்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

டி.சி.எஸ் நிறுவனம் 2008 ஆம் ஆண்டின் மூன்றாவ‌து காலாண்டில்(அக்டோப‌ர்‍ முத‌ல் டிச‌ம்ப‌ர் வ‌ரை)ஆயிர‌த்து முந்நூற்று முப்ப‌த்தொரு கோடிக‌ள் இலாப‌ம் ஈட்டியிருக்கிற‌து. இருந்த‌ போதும் இலக்காக நிர்ண‌யிக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ருவாயை அடைய‌ இய‌ல‌வில்லை என்று ஊதிய‌த்தைக் குறைத்திருக்கிறார்க‌ள்.

டிசிஎஸ்ஸில் ம‌ட்டுமில்லாது பொதுவாக‌ அனைத்து மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ளிலும் ச‌ம்ப‌ள‌த்தில் இர‌ண்டு கூறுக‌ள் இருக்கும். அடிப்ப‌டை,வீட்டு வாட‌கைப் ப‌டி, ம‌ருத்துவ‌ப் ப‌டி போன்று மாறாத‌ கூறு ஒன்றும், 'வேரிய‌பிள் பே' என்று மாறக் கூடிய‌ ஒரு கூறும் உண்டு.

இர‌ண்டாவ‌து கூறு நிறுவ‌னத்தின் வ‌ருமான‌த்தை பொறுத்து மாறும்ப‌டியாக‌ இருக்கும்.இதில்தான் வெட்டு விழுந்திருக்கிற‌து.

டால‌ர் ம‌திப்பு வீழ்ச்சிய‌டைவ‌த‌னால் நிறுவ‌ன‌ங்க‌ள் த‌ன் வ‌ருவாயை இழ‌ந்து வ‌ருவ‌தாக‌த் தெரிவிக்கின்ற‌ன‌. ஒரு இந்திய‌ நிறுவ‌ன‌த்தின் ப‌ணியாள‌ர் வெளிநாட்டு நிறுவ‌ன‌த்திற்காக‌ ப‌ணியாற்றும் போது வெளிநாட்டு நிறுவ‌ன‌ம் ப‌ணியாள‌ரை அனுப்பிய‌ நிறுவ‌ன‌த்திற்கு டால‌ரில் ப‌ண‌ம் கொடுக்கும்.

ஒரு ப‌ணியாள‌ருக்கு ஒரு நாளைக்கு 100 டால‌ர்க‌ள் என்று க‌ண‌க்கிட்டால் ஒரு ஆண்டுக்கு முன்பாக கிடைத்த‌ தொகை 4500 இந்திய‌ ரூபாய்க‌ள்.(அப்பொழுது 1 டால‌ர்=45 ரூபாய்).
இது இப்பொழுது ரூ.3900 ஆக‌ மாறி இருக்கும். ஒரு ப‌ணியாள‌ருக்கு ஒரு நாளைக்கு 600 ரூபாயை இந்திய‌ நிறுவ‌ன‌ம் இழ‌க்கிற‌து.

இது பெரும் இழ‌ப்பாக‌த் தெரிந்தாலும், இந்திய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ஒரு ஆளை வைத்துச் செய்வ‌தாகச் சொல்லி, மூன்று ஆட்க‌ளை ப‌ணிக்கு அம‌ர்த்தியிருக்கின்ற‌ன‌. ஆளுக்கு 15 டாலர்க‌ளை ச‌ம்ப‌ளமாக‌ கொடுத்துவிட்டு, 55 டால‌ர்க‌ளை நிறுவ‌ன‌ம் வைத்துக் கொள்வ‌து ந‌ட‌ந்து வ‌ந்த‌து.

இன்று அதே மூன்று பேர்க‌ளை வைத்து அந்த‌ப் ப‌ணியை முடித்தால் 45 டால‌ர்க‌ள் கொடுக்க‌ வேண்டியிருக்கும். கிடைத்து வ‌ந்த‌ 55 டால‌ரின் ம‌திப்பு குறைந்துவிட்ட‌து. இந்த இழப்பை சரி கட்டுவதற்காக அவ‌ர்க‌ளுக்கு சில‌ வ‌ழிக‌ள் இருக்கின்ற‌ன‌.

மூன்று பேரை இர‌ண்டு பேர் ஆக்குவ‌து, கொடுக்கும் ச‌ம்ப‌ள‌த்தில் வெட்டு போன்ற‌வை சில‌ முறைக‌ள்.

அல்ல‌து வெளிநாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளிட‌ம் 100 டால‌ர் வாங்கிய‌த‌ற்கு ப‌திலாக‌ 125 டால‌ர்க‌ள் வாங்குவ‌து. இதில் பேராப‌த்து காத்திருக்கிற‌து. ஏற்க‌ன‌வே அமெரிக்க‌ப் பொருளாதார‌ம் வீழ்ச்சிய‌டைந்து வ‌ரும் நிலையில் த‌ங்க‌ளுடைய‌ மென்பொருள் சார்ந்த‌ ப‌ணிக‌ளுக்காக‌ இவ்வ‌ள‌வு தொகையினை செல‌விட‌ வேண்டுமா என‌ அமெரிக்க‌ நிறுவ‌ன‌ங்க‌ள் நினைக்க‌லாம்.

அல்ல‌து அதே ப‌ணியினை 75 டால‌ர் க‌ண‌க்கில் முடித்துக் கொடுக்க‌ சீனா,பிரேசில் போன்ற‌ நாடுக‌ளின் சாப்ட்வேர் நிறுவ‌ன‌ங்க‌ள் காத்திருக்கும் போது அவ‌ர்க‌ளை நாட‌லாம்.

மூன்று பேரை இர‌ண்டு பேர் ஆக்குவ‌தும், ச‌ம்ப‌ளத்திற்கு க‌டிவாளமிடுவ‌தும் மிக‌ விரைவில் தொட‌ங்கும். இதுவரை வார‌த்திற்கு நாற்ப‌து ம‌ணி நேரப் ப‌ணி என்ப‌து நாற்ப‌தெட்டு ம‌ணி நேர‌மாக‌லாம். அத‌ற்காக‌ ச‌னிக்கிழ‌மை வேலை நாளாக‌லாம்.

வேலையிழ‌ப்பு என்ப‌து த‌ற்ச‌ம‌ய‌த்தில் ப‌ய‌ப்ப‌டும‌ள‌விற்கு இல்லை என்றே தோன்றுகிற‌து. இதுவ‌ரையிலும் இந்திய‌ மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ள் அமெரிக்க‌ நிறுவ‌ன‌ங்க‌ளுக்காக‌வே பெரும்பாலும் ப‌ணி புரிந்திருக்கின்றன. இன்ன‌மும் ஐரோப்பிய‌ ச‌ந்தையில் பெரும் வெற்றிடம் இருக்கிறது. இந்தியாவின் பிற‌ நிறுவ‌ன‌ங்க‌ள்(உற்ப‌த்தி,விற்பனை) மென்பொருளைப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில் ஆர்வ‌ம் காட்டுமேயானால் இந்திய‌ச் ச‌ந்தையும் மிக‌ப்பெரிதாக‌ இருக்கும்.

என்னைப் பொறுத்த‌வ‌ரைக்கும் இன்னும் ப‌த்தாண்டுக‌ளுக்கு மென்பொருள் துறை ந‌ன்றாக‌ இருக்கும். ஆனால் இந்திய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் உல‌க‌ அள‌வில், குறிப்பாக‌ சீன மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ளை எப்ப‌டி எதிர் கொள்ள‌ப் போகின்ற‌ன‌ என்ப‌திலும் அமெரிக்கா த‌விர்த்த‌ பிற‌ நாட்டுச் ச‌ந்தைக‌ளை எவ்வாறு பிடிக்க‌ப் போகின்ற‌ன‌ என்ப‌திலும் இருக்கிற‌து.

Jan 25, 2008

கடுப்பும் ம‌ருந்தும்.

என் நீண்ட நாள் நண்பருக்கு கடுப்பு வலி வந்துவிட்டது. எனக்கும் இந்த கடுப்புக்கும் நீண்ட தூரம். வருவதே இல்லை.

நண்பர் கடுப்பில் என்னோடு இன்னும் சில பதிவர்களையும் காய்ச்சியிருந்தார் என்றாலும், நான் இரண்டாவதாக காய்ச்சப்பட்டிருந்தேன். முதலாவதாக ஒருவரை திட்ட, அதற்கு அவர் ஒரு பதில் பதிவை எழுத எட்டிப்பார்த்த எனக்கு ஜன்னி வந்துவிடும் போலாகிவிட்டது.

நண்பரின் கடுப்பு இன்னமும் அதிகம் ஆகியிருக்கக் கூடும் என்பதால் நான் நண்பருக்கு வைத்தியம் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.

1)'பொதுப்புத்தியில் இருந்து வெளியில் வரவும்' என்று சொன்னால் கூட‌ உள்ளூர வெளியில் வருவது என்பது எல்லோருக்குமே இயலாதது. என்றாலும், எனக்கு சிரமம் இன்னமும் அதிகம். அதற்காக எல்லா விஷயங்களிலும் மொத்தமாக பேசுவேன் என்று முடிவு செய்ய வேண்டியதில்லை.

அதே சமயம் ரஜினி கண்ணாடியை சுழற்றும் போது விசிலடிப்பதையும், விஜயகாந்த் பட இன்டர்வெல்லில் யாராவது 'நோஞ்சான்' கிடைத்தால் குத்து விட்டு என் பலத்தை பரிசோதிக்க நினைத்துக் கொளவதையும் இன்று வரை என்னால் நிறுத்த முடிவதில்லை. இது எல்லாம் தவிர்த்தவன் தான் கவிதை எழுதலாம்(நுட்பமான கவிதை)என்று சொன்னால், என‌க்கு லைச‌ன்சு வேண்டாம்.

2) இன்டெல்க்சுவ‌லாக‌ ந‌ட‌ந்து கொள்வ‌திலும் அத‌னை நிரூபிப்ப‌திலும் பெரும் சிர‌மம் இருக்கிற‌து. 'போக்கிரி' அது தெலுங்கு ஆக‌ட்டும் அல்ல‌து த‌மிழ் ஆக‌ட்டும், பார்த்துவிட்டு ஒரு கூட்ட‌ம் மிக‌ச் ச‌ந்தோஷ‌மாக‌ வெளிவ‌ரும். எதிரில் இருக்கும் பிலிம் சொசைட்டியில் 'சினிமா பார‌டைஸோ' பார்த்துவிட்டு ப‌த்துப் பேர்க‌ள் க‌ப்ப‌ல் முழுகிப் போன‌தைப் போல‌ வெளிவ‌ருவார்க‌ள். என்னை இன்ட‌லெக்சுவ‌ல் ஆக்குவ‌த‌ற்கு நானும் என் க‌ப்ப‌லை மூழ்க‌டிக்க‌ வேண்டியிருக்கும்.

3) நான்தான் சிற‌ந்த‌வ‌ன், நான் புக‌ழ‌த் த‌குதி கொண்ட‌வ‌ன் ஒருவ‌னுமில்லை என்று நான் சொல்லிக் கொண்டு திரிவ‌தால் என்ன‌ ப‌ல‌ன் வ‌ந்துவிட‌ப்போகிற‌து என்று புரிய‌வில்லை. இன்ட‌லெக்சுவ‌ல் ஆன‌ பிற‌கு ந‌ம்மை விட‌ உய‌ர்ந்த‌வ‌ர்க‌ளையோ அல்ல‌து ச‌ம‌மான‌வ‌ர்க‌ளையோ பாராட்டக் கூடாது. ந‌ம்மை விட‌ சிறிய‌வ‌ர்க‌ளை வேண்டுமானால் மேதாவித்த‌ன‌த்தோடு பாராட்ட‌லாம். இல்லையா? ஆளைவிடுங்க‌ சாமி.

4) ப‌டைப்பை ம‌ட்டும் உள்வாங்கிக் கொண்டு ப‌டைப்பாளியின் ஆளுமையை தூர‌ எறிந்துவிடுவ‌தில் என‌க்கு ந‌ம்பிக்கையில்லை. ப‌டைப்பின் வ‌ழியாக‌ ப‌டைப்பாளியின் ஆளுமையை உண‌ர்வ‌தையும் பிடித்திருக்கும் ப‌ட்ச‌த்தில் சிலாகிப்ப‌தையும் ஒரு இல‌க்கிய‌ செய‌ல்பாடாக‌வே நான் உணார்கிறேன்.

5) அடிவ‌ருடித்த‌ன‌ம் என்ப‌தும், ஆளுமையை உண‌ர்ந்து கொள்வ‌தும் இரு வேறுபட்ட செயல்பாடுகள் என்ப‌த‌னை த‌னியாக‌ விள‌க்க‌ வேண்டிய‌தில்லை என்று நினைக்கிறேன்.

6) நான் ஜெய‌மோக‌ன் குறித்து ஆளுமையை புரிந்து கொள்ளும் க‌ட்டுரையாக‌வே எழுத‌ முற்ப‌ட்டதும், ச‌ற்று 'மெல்ட்' ஆகியிருப்ப‌தும் நான் உண‌ர்ந்த‌ விஷ‌ய‌ங்க‌ளே. இன்னமும் இதனை த‌னிம‌னித‌ துதி,ஜெய‌மோக‌ன் கொடி என்ற‌ வார்த்தைக‌ளுக்குள் நீங்க‌ள் அல்ல‌து வேறு சில‌ அறிவாள‌ர்க‌ள் அட‌க்க‌லாம். அப்ப‌டிச் செய்யும் போது நான் புன்ன‌கைத்துக் கொண்டிருப்ப‌தாக‌ நினைத்துக் கொள்ளவும்.

க‌டைசியாக‌...

7) என்னை சொங்கி என்று வர்ணித்துக் கொண்டதற்கு நீங்கள் கடுப்பாக வேண்டியதில்லை. அதனை வெளியே நிரூபிக்க வேண்டாம் என்றுதான் புகைப்படத்தை அனுப்பவில்லை. சென்னை சங்கமத்தில் என்னைப் பார்த்த கவிஞர் ஒருவர் 'உங்க மூஞ்சிக்கு பொண்ணு கிடைக்கறது கொஞ்சம் கஷ்டம்தான்' என்று சொன்னார். இந்த வாக்கினை இதுவ‌ரை நிச்ச‌ய‌ம் நீங்க‌ள் கேட்டிருக்க‌ மாட்டீர்க‌ள் என்ப‌தாலும், உங்க‌ள் பெண் ர‌சிகைக‌ளின் க‌ண‌க்கு என‌க்கும் தெரியும் என்ப‌தாலும் ஒரு முறை சிரித்துவிட்டு க‌டுப்பைக் குறைக்க‌வும்.

சுக்கு காபியும் ந‌ல்ல‌தொரு ம‌ருந்து. துபாயில் சுக்கு காபி கிடைக்க‌ ஆண்ட‌வ‌னை பிரார்த்திக்கிறேன்.

Jan 24, 2008

ஜெயமோகனோடு ஐந்து நிமிடங்கள்

புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகன் அவர்களை இந்த முறை சந்தித்தது இரண்டாவது முறை. முதல் முறை சந்தித்தது 2005 ஆம் ஆண்டு கண்காட்சியில். அந்தச் சமயம் இன்றிருப்பதை விட நான் பொடியனாக இருந்த காரணத்தால் ஓரமாக நின்று கொண்டேன்.

இவ்வாண்டு கொஞ்ச‌ம் தைரிய‌ம் வ‌ந்திருந்த‌து. ந‌ண்ப‌ர் வெங்க‌ட்டிட‌ம் 'சிங்க‌ம் வ‌ந்திருக்கு...போய் பேசுவோமா?'என்றேன்.


ஜெயமோகனோடு நணபர் வெங்கட்.

சில‌ரிட‌ம் ந‌ம்முடைய‌ வீர‌ பிர‌தாப‌ங்க‌ளை நாசூக்காக‌ சொல்லிவிட‌ முடியும். ஜெ.விட‌ம் அது ப‌லிக்காது. அதனால் 'பிலாக் எழுதறது உண்டு சார்' என்பதோடு நிறுத்திக் கொண்டேன்.

'அப்படியா..நல்ல விஷயம்...ஆனா பிலாக்ல‌ எழுத‌ற‌து எல்லாம் ந‌ம் எழுத்தை கூராக்கும்ன்னு சொல்ல‌ முடியாது. இப்போ ஒரு கதை/கட்டுரை உயிர்மைக்கு அனுப்ப‌றீங்க. மனுஷ்ய புத்திரன் ப‌ப்ளிஷ் ப‌ண்ண‌லைன்னா நம்ம எழுத்துல ஏதோ மிஸ் ஆகுதுன்னு யோசிப்போம். பிலாக்கில் அதுக்கு வாய்ப்பே இல்லை.இல்லையா?' என்று சொல்லிவிட்டு க‌ண்க‌ளை உற்று நோக்கினார்.

இந்த‌ அள‌வுக்கு க‌ண்க‌ளை நேருக்கு நேராக‌ பார்த்து பேசும் ம‌னித‌ரை நான் இதுவரை ச‌ந்தித்த‌தில்லை என்ப‌தால் க‌ண்களை பார்க்கும் தைரியமில்லாதவனாய்‌ த‌லையை அடிக்க‌டி குனிந்து கொண்டேன்.இந்தக் கண்களுக்கு கத்தி தேவலாம்.

'தொகுப்பு எப்போ வ‌ருது‌'

'இந்த‌ புக்பேர்ல‌ வ‌ந்துடும் சார்'

'ஆமாம்...க‌விதை அங்க‌ ஒண்ணு இங்க‌ ஒண்ணு வ‌ந்தா பெரிசா தெரியாது. தொகுப்பு ஒரு ந‌ல்ல‌ பிரேக் த‌ரும். க‌வ‌னம் கிடைக்கும்'.சிரித்துக் கொண்டு த‌லையை குனிந்து கொண்டேன்.

'உங்க கூட பேசியிருக்கேன்.முன்னாடி'.

'இப்போ எல்லாம் லெட்ட‌ர்ஸ், போன்க்கு எல்லாம் ச‌ரியா ப‌தில் சொல்ல‌ முடிய‌ற‌தில்ல‌...அசோக‌ வ‌ன‌ம்ன்னு ஒரு நாவ‌ல் எழுதிட்டு இருக்கேன்..3000 ப‌க்க‌ம்...'

அத‌ற்குள் ஷாஜி ஏதோ ஜெ.விட‌ம் பேசினார்.


ஷாஜி(வலப்பக்கம் நிற்பவர்)

'இவர் ஷாஜி...பெரிய இசை விமரிசகர்...'

'தெரியுமே சார்..சொல்லில் அடங்காத இசை ஷாஜி..டைம்ஸ் ஆப் இந்தியால ஒரு கட்டுரை ரீசண்ட்டா பார்த்தேன்' என்றேன்.

'ஆமா இளையராஜாவை பத்தி...பயந்துட்டே எழுதியிருக்கார்' என்று சிரித்தார்.

மூன்றாயிர‌ம் என்ற‌ வார்த்தை எங்க‌ளுக்குள் ஒரு பேர‌திர்வை உண்டாக்கியிருந்த‌து. ஏழு நாட்கள், பதினான்கு நாட்களில் மிக‌ பிர‌மாதாமான‌ நாவல்களை முடிப்பவர்,இதனை வருடக்கணக்கில் எழுதுகிறார்.

'காடு' நாவ‌லை ப‌டித்து முடிக்க‌ என‌க்கு முப்ப‌த்தைந்து நாட்க‌ள் தேவைப்ப‌ட்ட‌து. மூன்றாயிர‌ம் ப‌க்க‌த்தை ப‌டிக்க‌ வேண்டுமானால் மூன்று வ‌ருட‌ங்க‌ளாவ‌து ஆக‌லாம். இதை எழுதுகிறார் என்று நினைக்கும் போது சிங்க‌ம் என்ற‌ ப‌டிம‌ம் டைனோச‌ராக‌ மாறிய‌து.

நான் சில‌ரிட‌ம் க‌வ‌னித்திருக்கிறேன். அவ‌ர்க‌ளாக‌ சொல்லியும் இருக்கிறார்க‌ள். த‌ன்னுடைய‌ தொகுப்பு த‌மிழ் இல‌க்கிய‌ வ‌ட்ட‌த்தில் பெரும் ச‌ல‌ன‌த்தை உண்டாக்கியிருப்ப‌தாக‌. அவர்களாக‌ச் சொல்லும் வ‌ரை என‌க்கு அப்ப‌டி ஒரு புத்த‌க‌ம் இருப்ப‌தே தெரியாது. சில‌ ம‌ணித்துளிக‌ளில் த‌ங்க‌ளுடைய‌ அறிவுரையையும் கொடுக்க‌ ஆர‌ம்பித்துவிடுவார்க‌ள். த‌ங்க‌ளுக்குத் தாங்க‌ளே ஒரு ஒளிவ‌ட்ட‌ம் பொருத்திக் கொண்டு.

ஆனால் எழுத்தை தவமாக நிகழ்த்தும், மொழியை தன் கட்டுப்பாட்டில் வைத்து ராஜபாட்டை நடத்தும் ஜெயமோகனால் எந்த‌‌ ப‌ந்தாவும் இல்லாம‌ல் இர‌ண்டு 'சொங்கி'பைய‌ன்க‌ளிட‌ம் எப்ப‌டி இவ்வ‌ள‌வு பொறுமையாக‌வும் அதே சமயம கவனத்தை தன் பேச்சில் வைத்தும் பேச‌ முடிகிற‌து என்று வியப்பாக‌ இருந்த‌து.

'மேன்ம‌க்க‌ள் மேன்ம‌க்க‌ள்தான்யா...'

Jan 17, 2008

கண்ணாடியில் நகரும் வெயில் - முதல் பிரசவம்* இதுவரை நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு "கண்ணாடியில் நகரும் வெயில்" என்ற பெயரில் உயிர்மை வெளியீடாக பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது(15,ஜனவரி 2008).

* எழுத்தாளர் சுஜாதா புத்தகத்தினை வெளியிட, ரோகிணி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

* கவிதை தொகுப்பு எந்த நாளில் வெளியாகும் என்னால் சரியாக கணிக்க இயலாததால் எவருக்கும் முன்பாகவே அறிவிக்க இயலவில்லை.
மன்னிக்கவும்.

* இத்தொகுப்பில் உயிர்மை,காலச்சுவடு,புதிய பார்வை,உன்னதம், தக்கை, அம்ருதா, திண்ணை.காம்,அந்திமழை.காம் உள்ளிட்ட இதழ்களில் வெளியான ஐம்பத்தேழு கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

* முதல் புத்தகம் என்பது முதல் பிரசவத்திற்கு இணையானது என்று சொல்வார்கள். அப்படித்தான்.

புகைப்ப‌ட‌ம் உத‌வி: ஹ‌ர‌ன் பிர‌ச‌ன்னா.

Jan 3, 2008

நிராக‌ரிப்பை போர்த்திக் கொண்ட‌வ‌னின் ம‌ர‌ண‌ம்தொடர்ச்சியான நிராகரிப்புகளாலும் துக்கத்தின் கசப்புகளாலும் கசங்கியிருந்தவனிடம் மரணத்தின் துர்வாசனை குறித்துப் பேச ஆரம்பிக்கிறார்கள். இரவின் தீராத படிகளில் விடியலை நோக்கி ஏன் நடப்பதில்லை என்று வின‌வுகிறார்க‌ள். பதில்களால் நிரம்பியிருக்கும் இந்த உலகின் காற்றிலிருந்து ஒரு பதிலை பறித்துத் தரச் சொல்கிறார்க‌ள்.
திற‌மைக‌ளை எடைபோடுப‌வ‌ர்க‌ளை நினைத்துப்பார்த்தான். இவ‌ர்க‌ளின் நீதிச‌பையில் வ‌ல்ல‌வ‌ர்க‌ள் நிர்மாணிக்க‌ப்ப‌டுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளோடு நீங்க‌ள் கொண்டிருக்கும் உற‌வின் நுட்ப‌த்தை பொறுத்து உங்க‌ளுக்கான‌ இட‌ம் நிர்ண‌யிக்கப் ப‌டுகிற‌து என‌ச் சொல்ல‌ நினைத்த‌வ‌ன் த‌ன்னிர‌க்கப் பேச்சாக‌ அமையும் என‌ சொற்க‌ளை சுருட்டி வைத்தான்.

மேதாவித்த‌ன‌ம் நிர‌ம்பியவனை யோசித்தான். நெருப்பின் கிளைக‌ளை எழுத்தின் வ‌டிவிலும் உள்வாங்கியவனாகவும், ம‌ர‌த்தின் அங்க அசைவுக‌ளில் வார்த்தைக‌ளை பிரித்து எடுப்ப‌வனாகவும் இருந்தான். எதிர்நிற்ப‌வ‌ன் மீதான‌ அல‌ட்சியப்பார்வையை எறிப‌வனாய் இருந்த அவன், பெண்ணின் முலை ரேகையில் ஊர்ந்து திரிந்தான். சிரித்துக் கொண்டு அடுத்த‌வள் குறித்து யோசித்தான்.

காத‌லை நிர‌ம்பாத‌ கிண்ண‌ங்க‌ளில் ஊற்றுப‌வ‌ளாக‌ இவ‌னிட‌ம் நெருங்கிய‌வ‌ள் தென்ப‌ட‌ ஆர‌ம்பித்தாள். அவளின் சிரிப்பின் துணுக்குக‌ளில் சிக்குண்டு வெளியேற இயலாம‌‌ல் அலைந்த‌ க‌ண‌ங்க‌ளை நினைத்தான். சொற்க‌ளின் இடுக்குக‌ளில் இருவ‌ரும் அம‌ர்ந்து பேசிய‌தை குத‌ப்ப‌த்துவ‌ங்கினான். துரோக‌த்தின் விஷ‌ முள்ளை கண் விழிக்குள் ஏற்றிய‌வ‌ளாய் உருமாறினாள். வார்த்தைக‌ளுக்கு ப‌ச்சை நிற‌ம் த‌ட‌வி அவ‌ள் குறித்துப் பேசினான்.

த‌ன் நினைவு சிதைந்த‌வ‌னாய், காய‌த்தில் குத‌ம்பி வ‌ரும் குருதியின் மீதாக‌ எச்சிலை த‌ட‌விய‌வ‌னாய், வேத‌னையின் பெருக்கெடுப்பில் க‌ண்ணீரை வெறுப்ப‌வ‌னாய், உல‌க‌ம் ஒதுக்கி வைக்கையில் பிச்சை கேட்டு நிற்ப‌வ‌னாய் தன்வ‌டிவ‌ம் பெற‌த்துவ‌ங்கினான்.

த‌ன் துக்க‌த்திற்கு வ‌டிவ‌மில்லை. க‌த‌ற‌லுக்கு எந்த‌ச் செவியும் ம‌டுப்ப‌தில்லை. நிராக‌ரிப்பை போர்த்திக் கொண்ட‌வ‌னின் ம‌ர‌ண‌ம் அர்த்த‌ம் பெறுவ‌தில்லை என்ற புள்ளியில் சிந்த‌னையை நிறுத்தினான்.

உல‌க‌ம் இருளால் சூழ்ந்திருந்தது. குரூர‌த்தின் ந‌க‌ங்க‌ள் கீறித்த‌ள்ளுவ‌த‌ற்கு த‌யாராக‌ இருக்கின்ற‌ன‌. ச‌தியின் ப‌ற‌வைக‌ள் ஆகாய‌ம் முழுவ‌துமாக‌ சுற்றித் திரிகின்ற‌ன‌. இர‌த்த‌ச் சுவை தேடிய‌லையும் க‌ழுகுக‌ள் தோள்க‌ளின் மீது அம‌ர்கின்ற‌ன‌.

வினாவெழுப்பிய‌வ‌ர்க‌ளைப் பார்த்து அழ‌ நினைத்தான். இவ‌னின் துக்க‌த்தை ம‌துக்கோப்பையில் பிடித்துக் கொள்வார்க‌ள். ச‌ந்தோஷ‌த்தின் சிற‌குக‌ளை அவ‌ர்க‌ளுக்கு அது த‌ரும். கோடையின் கொடூர சாலைகளில் ச‌ந்தோஷப் பாட‌லை இசைப்பார்க‌ள். இந்த‌ப்பாட‌லுக்கான‌ வ‌ரிக‌ளுக்காக‌ இவ‌னைத் தேடி வ‌ந்திருக்கிறார்க‌ள். ஞாப‌கத்தின் காய‌ங்க‌ளை ஆறிவிடாம‌ல் பார்த்துக் கொள்வ‌த‌ற்காக‌ இவ‌னை நெருங்கியிருக்கிறார்க‌ள்.

கொதிக்கும் சுடும‌ண‌லில் மென்பாத‌ங்க‌ள் வ‌த‌ங்கிப் போக‌ வ‌ழிதெரியாம‌ல் அலையும் பூனையென‌ இற‌க்க‌த்துவ‌ங்கினான்.
(வ‌டிவ‌மில்லாத‌ ஒரு வ‌டிவ‌ம்)