Dec 30, 2008

தேவதச்சன் கவிதை ஒன்று

கவிதை, வாசிக்கிற ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு விதமான‌ அனுபவத்தை கொடுக்கும் போது அந்த கவிதானுபவம் மிக சுவாரசியமானதாகிறது.

தேவதச்சன் தனது பெரும்பான்மையான கவிதைகளில் இந்த வித்தையை மிக இலாவகமாக கையாண்டிருப்பார்.

இந்தக் கவிதை சட்டென்று எனது மனக்கூட்டின் படிகட்டு ஒன்றில் அமர்ந்து கொண்டது.

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.


தொகுப்பு: கடைசி டைனோசர்

Sep 2, 2008

ஒரு துப்பாக்கியின் பெய‌ர்


உயிர்மை.காம்மின்(http://www.uyirmmai.com/) "உயிரோசையில்" வெளியான கவிதைகள். நான் ரொமாண்டிக் ஆக மாறுவதற்கு சற்று முன்பாக எழுதிய கவிதைகள் இவை :)

1)ஓய்வெடுக்கும் கடவுள்
முடிந்த பகலின் எச்சங்கள்
சிதறிக்கிடக்கும்
இந்த இரவில்
உறிஞ்ச வேண்டிய சிகரெட் ஒன்று மிச்சமிருக்கிற‌து.
குப்பியில் தீராமலிருக்கிறது கொஞ்சம் மது.
நீங்கள்இரவொன்றை கொண்டாடாமல் கழிக்கிறீர்கள்.
கணமொன்றை விசனத்தில் தீர்க்கிறீர்கள்.
வினாடியின் நீட்சியை கவலையில் தோய்க்கிறீர்கள்.
நானோ
தன் சூட்சுமங்களை
ஆணியில் அறைந்து
ஓய்வெடுக்கும்
கடவுளாகிறேன்.
மழையின் உற்சாகம் கரைந்து கொண்டிருக்கும்
வெளியில்-
பிளாஸ்டிக் பாட்டிலில்
அடைத்துக் குலுக்கிய
நீராக தத்தளிக்கிறது.

நீங்கள் எது என்பீர்கள்
நான் தெரியாது என்பேன்.

2) ஒரு துப்பாக்கியின் பெய‌ர்
கெளசிக்
துப்பாக்கி வாங்கியிருப்பதாகச்
சொன்னான்
இஸ்ரேலியத் தயாரிப்பான
அது
சமயத்தில் நூற்றியிருபது குண்டுகளை
தேக்கிக் கொள்ளும்.
வினாடிக்கு
740 மீட்டர் வேகத்தில்
குண்டு சீறும்.
மொத்த எடை
3100 கிராம்.
ஸ்ரீலதாவின் குடும்பத்தை
தீர்க்கப் போகிறானாம்.
சிரித்தேன்.
'நீ_______' என்றான்.
அவன் சொன்னானா
நான் மறந்தேனா
என்பதில் பிரச்சினையில்லை.
இப்பொழுது
துப்பாக்கியின்
பெயர்
நினைவில் இல்லை.

3)குண்டு வெடித்த நகரத்திலிருந்து
என் தட்டில் மீதமிருந்த பிரியாணி
இன்று விற்கப்பட்ட
கடைசி பிரியாணியாகிறது
நான் தவறவிட்ட பேருந்து
நிறுத்தப்பட்ட
பேருந்துகளில் கடைசியாகிறது
சற்று முன்பாக கேட்ட ஓசை
வெடித்தகுண்டுகளில் கடைசியாக இருக்கிறது
கூர்க்கா விசிலூதும் தெருவில் இன்று
நாய்கள் மட்டுமே விளையாடுகின்றன
விமானங்கள் பறந்து கொண்டிருக்கும்
நகரத்தின் வானில்
ஒரு
பறவை மட்டும் பாய்கிறது
லாரிச் சத்தம் இல்லாத அதிசய இரவின் துவக்கத்தில்
பயந்து அடங்குகிறது ஊர்.
டி.வி. அணைந்த அறைக்குள் எனக்கு
துணையிருக்கிறது
அவசரமாக விழுங்கி முடித்த
பிரியாணி வாடை.

4) மெளனத்தின் விஷம்
நேற்று நிகழ்ந்த மரணத்தையொத்திருக்கிறது
இந்த எதிர்பாராத மழை
இந்த எதிர்பாராத பிரியம்
இந்த இதழ் உலர்ந்த முத்தம்

இன்று நிகழும் கொலையை முடிவு செய்கிறது
இந்த கோடையின் புழுக்கம்
இந்த இரவின் மெளனம்
இந்த கணத்தின் பதட்டம்

நாளை நிகழவிருக்கும் தற்கொலையை உறுதியாக்குகிறது
இந்த சொல்லின் வன்மம்
இந்த மெளனத்தின் விஷம்
இந்த துரோகத்தின் சிரிப்பு.
ஓவியம்: ராஜன் புதியேடம்

Aug 26, 2008

தீராப்பிரியங்களில்...நட்சத்திரங்கள்
மழையாக உதிரும்
இந்நாளில்
உன் வருகையைக் கொண்டாடுகிறேன்.

இந்நகரின்
அடர் மலர்களிருந்து
உன் பாதைக்கான
நிறங்களை
முடிவு செய்கிறேன்.

முகம் தெரியா
பறவையின்
மென்னொலியில்
உனக்கான
பாடலை
இசைக்கச் செய்து

இன்று உலகிற்கு
அறிவிக்கிறேன்‍ -

தீராப்பிரியங்களில்
உறைந்து கிடக்கும்
என்
தீராத சொற்கள்
உனக்கானவை
என.

Aug 24, 2008

கலாப்ரியா - இரண்டு விடுபட்ட கவிதைகள்


கலாப்ரியா என்ற பெயர் மீது எனக்கு பள்ளிக் காலத்திலிருந்து ஒரு ஈர்ப்பு உண்டு. அவரது கவிதைளுடனான‌ அறிமுகம் அதற்கு வெகு நாட்களுக்கு பிறகே எனக்கு உண்டானது.

என் கல்லூரி விழா ஒன்றிற்கு வந்திருந்த நா.முத்துக்குமார் "கலாப்ரியாவை படிங்க" என்று சப்பாத்தியும், கோழிக் குழம்புமாக மென்று கொண்டே சொன்னது ஞாபகம் இருக்கிறது.

அதன் பிறகாக கவிதைகளை வாசிக்கத் துவங்கிய நாட்களிலிருந்தே கலாப்ரியாவின் கவிதைகளில் இருக்கும் காட்சிகளின் கவித்துவம் பிரமிப்பூட்டக் கூடியதாக இருந்து கொண்டிருக்கிறது.

க‌லாப்ரியாவின் க‌விதைகளின் நுண்ணடுக்குக‌ளில் இருக்கும் உண‌ர்ச்சிக‌ளை எந்த‌வொரு வாச‌க‌னாலும் எளிதில் உள்வாங்க‌ முடியும்.

அவரது பிரசுரமாகாத எண்ணற்ற கவிதைகளில் இரண்டு கவிதைகளை இணைக்கிறேன்.

கலாப்ரியாவில் இருக்கும் சோமசுந்தரத்தின் கவித்துவமான நகைச்சுவையுணர்வை கண்டு கொள்ள முடிவதற்கான வாய்ப்புள்ள கவிதைகள் இவை.

இன்னமிருக்கும் பிரசுரமாகாத கவிதைகளை அவரது வலைப்பதிவில் (www.kalapria.blogspot.com) தொடர்ந்து "உதிரிகள்" என்ற தொகுப்பில் வாசிக்கலாம்.

--------1--------------------
சாலையோரத்துக்
குளங்கள்
பவுர்ணமி நிலவில்
ஒளிந்து கொள்ள முடியாமல்
தத்தளிக்கின்றன
எலிமெண்டரி ஸ்கூல்
சினேகிதனை
எதிர் கொள்ள
நேர்ந்த பருவப்பெண் போல

‍‍==17.1.1995

-------------2-----------------
மேய்க்கிறவனின்
குரல் கேட்டு
குட்டையை விட்டு
நீங்குகின்றன
எருமைகள்
தாமரையிலையில்
சாணமிட்ட படி

==17.1.1995

Aug 23, 2008

சாரு நிவேதிதாவும் வெட்டி அலம்பலும்

தமிழ் இலக்கிய உலகில் நடைபெறும் இலக்கிய ரீதியான செயல்பாடுகளை நான் அவ்வப் பொழுது குழும மின்னஞ்சலாக அனுப்புவது வழக்கம். சுஜாதா நினைவுக் கூட்டம், களரி‍ இறக்கை இணைந்து நடத்திய கூத்துக் கலைஞர்களுக்கான விழா, மணல் வீடு பற்றிய குறிப்பு, சில புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள், ஆதவன் தீட்சண்யாவின் கடிதம் போன்றவற்றை. என்னிடம் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள் இருப்பதால் நண்பர்கள் கேட்கும் போதெல்லாம் இதை செய்து வந்திருக்கிறேன்.

இந்த முறை மிக மோசமான அனுபவம் எனக்கு.

==========

மணிகண்டனின் முதல் கடிதம்

Vaa.Manikandan writes:

வணக்கம்.
உயிர்மையின் இணையதளம் www.uyirmmai.com உயிரோசை என்னும் வார இதழ் , உயிர்மை பதிப்பகத்தின் புத்தகங்கள் மற்றும் மனுஷ்ய புத்திரனின் வலைதளம் என்னும் பகுதிகளோடு இயங்குகிறது.

நவீன தமிழ் இலக்கியத்தின் இன்னொரு முகம் தங்களின் பார்வைக்கு.


நன்றி.
வா.மணிகண்டன்

* * *

சாருவின் பதில் கடிதம்

On 8/22/08, charunivedita wrote:

திரு மணிகண்டன் அவர்களுக்கு ,

நீங்கள் யார் ? எதற்காக எனக்கு இந்த அறிவிப்பை அனுப்பித் தொந்தரவுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்குகிறீர்கள் ? என்னுடைய இணையதளமான www.charuonline.com இல் உயிர்மை இணையதளம் பற்றிய விளம்பரம் வருவது உங்களுக்குத் தெரியுமா இல்லையா ?

அது கூடத் தெரியாமல் எனக்கு ஏன் இந்த அறிவிப்பை அனுப்பி இருக்கிறீர்கள் ? இனிமேல் நீங்கள் மெயில் அனுப்பும் போது யாருக்கு எதற்காக அனுப்புகிறோம் என்ற தெளிவுடன் அனுப்புங்கள்.

பின் குறிப்பு: இந்த அறிவிப்பை என் நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும் அனுப்பி விட்டீர்களா ? இல்லையெனில் உடனே அனுப்பி வையுங்கள்.


சாரு


* * *

மணிகண்டனின் இரண்டாவது கடிதம்


திரு. சாரு நிவேதிதா அவர்களுக்கு ,


தற்போதைக்கு நான் வெட்டிப் பயல். மன்னிக்கவும். அது ஒரு குழும மின்னஞ்சல். முகவரிப் புத்தகத்தில் உள்ள பல முகவரிகளில் இதுவும் ஒன்று. மொத்தமாக தேர்ந்தெடுக்கும் போது உங்களுடையதும் வந்துவிட்டது.

ஓ! உங்களுக்கு ஒரு இணையதளம் இருக்கிறது அல்லவா ? மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரு காலத்தில் அதன் வாசகன் நான். வெறும் கடிதங்களும் , கேள்வி பதில்களும் மட்டுமே நிறைந்த ஒரு ' பாலைவனமாக ' மாறிய பிறகு அதனை நான் திறப்பதேயில்லை என்பதால் நான் உயிர்மை பற்றிய குறிப்பை பார்க்கவில்லை.

நீங்கள் இந்த சமூகத்தின்பால் கோபமும் , வெறியும் மிக்க ஒரு எழுத்தாளன் என்பதை நான் அவ்வப் பொழுது மறந்துவிடுவது என் குற்றமே. அதை எந்தவிதமான தயக்கமுமில்லாமல் வெளிப்படுத்தும் வெளிப்படையான மனிதர் வேறல்லவா ? ஒரு நான்கு வரி மின்னஞ்சல் குறிப்பு தங்களுக்கு மன உளைச்சலைத் தந்துவிட்டது.

பிரான்ஸ் போன்ற நாடுகளைப் போன்று பிறரை எந்தவிதத்திலும் துன்புறுத்தாத நாட்டில் நான் பிறந்திருக்க வேண்டும். சுரணையற்ற இந்தியாவில் அதுவும் எழுத்தாளனை கொண்டாடாவிட்டாலும் பராவாயில்லை... அவனை துன்புறுத்தி அதில் இன்பம் துய்க்கும் மானங்கெட்ட தமிழகத்தில் பிறந்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். இனி தங்களின் மின்னஞ்சலை என் முகவரி புத்தகத்திலிருந்தே எடுத்துவிடுகிறேன்.

யாருக்கு அனுப்பும் போது எதற்காக அனுப்புகிறேன் என்ற மிக முக்கியமான விஷயத்தை என் மர மண்டைக்கு உணர்த்தியதை என் வாழ்நாள் முழுமைக்குமாக மறக்கமாட்டேன்.

பின்னுக்கு பின் குறிப்பு: இது நான் குறிப்பிட்டது போன்ற குழும மின்னஞ்சல் என்பதால் அவருக்கும் ஒரு அறிவிப்பு சென்றிருக்கும். இதுதான் இந்த டெக்னாலஜியின் கொடுமை. ஒரு பைசா செலவில்லாமல் என்னால் பலரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்க முடிகிறது. அவருக்கும் அவரது மன உளைச்சலுக்காக மன்னிப்பு கோரி ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிடுகிறேன்.

நன்றி

வா.மணிகண்டன்.

======

1. நான்கு வரி மின்னஞ்சல் அவருக்கு மன உளைச்சலைத் தந்துவிட்டது.

2. அவரைப் பற்றிய அவரது எழுத்து பற்றிய குறிப்பு இல்லாத மெயில் அவருக்கு மன உளைச்சலைத் தருமா?

3.இதை கிரிமினல்களும்,இலக்கியச் சூழலும் என்ற தலைப்பில் தனது வலைப்பதிவில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.

4. இதில் கிரிமினல்த்தனம் எங்கே இருந்து வந்தது?

5. ஒரு இணையதளத்தில் பகிரங்கமாக உள்ள (charunivedita@charuonline.com)என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடிதப் போக்குவரத்து கூடாது என்று சொல்வதற்கு அவருடையதாகவே இருப்பினும் அவருக்கு உரிமை கிடையாது.

6. இரண்டாவது கடிதத்தில் நான் அவரை கலாய்த்திருப்பதற்கு காரணம், தன் கோபத்தை வெளிப்படுத்துவதாக எழுதியிருப்பதும், தன் வலைப்பதிவை தமிழ் பேசத் தெரிந்த ஒவ்வொருவனும் வாசித்துக் கொண்டிருக்கிறான் என்று தெறித்த தொனியும்தான்.

7. திரு.சாரு, கிரிமினல் என்ற சொல்லை உபயோகப்படுத்தும் முன் அதற்கான பொருளைத் தெரிந்து சொல்லுங்கள்.

8. அப்படியே நான் கிரிமினலாக இருந்தாலும் நீங்கள் என்னைப் பார்த்துச் சொல்வதை நான் விரும்பவில்லை.

9. எனக்கு அருவெறுப்பாகவும் என் மீதே எனக்கு கோபமாகவும் இருக்கிறது. உங்களுக்கு எல்லாம் மின்னஞ்சல் அனுப்பியதை நினைத்தால்.

Jul 12, 2008

வல்லினம் சிற்றிதழ்

வல்லினம் என்ற சிற்றிதழ் வருகிறது என்பது தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் வாசித்ததில்லை. சென்ற வாரத்தில் கே.பாலமுருகன்**, சந்திக்க வந்திருந்த போது வல்லினம் இதழ் ஒன்றை கொடுத்தார்.

வல்லினம் மார்ச்-மே'2008 கவிதை சிறப்பிதழாக வந்திருக்கிறது.

வல்லினத்தில் தொடர்ச்சியாக இடமளிக்கப்படும் ஆக்கங்கள் பற்றி எனக்கு எந்த அறிவும் இல்லை என்பதால் அது பற்றி சொல்வதற்கில்லை. கையில் இருக்கும் இந்த இதழில் இடம் பெற்றிருக்கும் படைப்புகள் பற்றி எனக்கான சில கருத்துகள் உண்டு

தலையங்கத்திற்கு அடுத்து வரும் முதல் படைப்பு பா.அ.சிவத்தின் நேர்காணல். அவர்தான் வல்லினத்தின் துணை ஆசிரியர். ஆசிரிய‌ரின் ப‌டைப்பே இதழில் முக்கிய‌த்துவ‌த்துட‌ன் இட‌ம் பெறுவ‌து நெருட‌லாக‌ இருந்த‌தது. சில‌ க‌ருத்துக்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌வை என்றாலும் இல‌க்கிய‌ முக்கிய‌த்துவ‌மான‌து இல்லை. எந்த‌வித‌மான‌ இய‌க்க‌ங்க‌ளுக்கும் தேவையில்லை போன்ற‌ இல‌க்கிய‌த்தில் ஏற்க‌ன‌வே பேச‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளால் நிரம்பியிருப்ப‌தாக‌ இருந்த‌து. சிற்றித‌ழ் நேர்காண‌ல்க‌ள், இடைநிலை/வெகுஜன‌ ஊடக‌ நேர்காண‌ல்க‌ளில் இருந்து வேறு புள்ளியில் இய‌ங்குவ‌தாக‌ உக்கிர‌த்த‌ன்மையுட‌ன், முக்கிய‌மான‌ ஒரு விவாத‌ப் பொருளை தீவிர‌மாக‌ அல‌சுவ‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்று ந‌ம்புகிறேன்.
இந்த‌ நேர்காண‌ல் அப்ப‌டியில்லை.
க‌ட்டுரைக‌ளில் ந‌வீனின் நிக‌ழ்கால‌த்தின் குர‌ல், மஹாத்ம‌னின் இருண்ட‌ பாதை இர‌ண்டும் குறிப்பிட‌ வேண்டிய‌ க‌ட்டுரைக‌ள்.ரெ.கார்த்திகேசு எழுதியிருக்கும் தேவராஜூலு கவிதைகள் குறித்தான "என் பார்வையில்" கட்டுரையில் ரெ.கா, கவிதைகளை பகுப்பாய்வு செய்யும் முறை கவனத்திற்குரியது.

ஜெய‌ந்தி ச‌ங்க‌ரின் சீன‌க்க‌விதைக‌ள் சிறு அறிமுக‌ம் சீன‌க் க‌விதைக‌ள் ப‌ற்றிய‌ முக்கிய‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளை கோர்வையாக‌ த‌ரும் க‌ட்டுரை. ஆனால் மொழிபெய‌ர்ப்பு க‌விதைக‌ள் பெரும்பான்மையான‌ மொழிபெய‌ர்ப்புக்க‌விதைகளைப் போன்றே வ‌ற‌ட்சியாக‌ இருக்கின்ற‌ன‌. வாங் ப்யூ நாம் என்ற‌ ம‌லேசிய‌க் க‌விஞ‌ரின் க‌விதையின் மொழிபெய‌ர்ப்பு ச‌ராச‌ரிக்கும் மேலான‌ மொழிபெய‌ர்ப்பு. ம‌ற்ற‌ இரு க‌விதைக‌ளின் சொற்தேர்வும், க‌ட்ட‌மைப்பும் மோச‌மாக‌ இருக்கின்ற‌ன‌.

ல‌தாவின் க‌விதைக‌ள் என‌க்கு பிடித்திருந்த‌ன‌. "நாம்.இடையில்" என்ற‌ க‌விதையின் வ‌டிவ‌த்தில் முய‌ன்று பார்த்திருக்கும் புதுமையை பாராட்ட‌ வேண்டியிருக்கிற‌து. இக்க‌விதையின் முற்றுப்புள்ளிக‌ள் கொஞ்ச‌ம் அய‌ற்சியூட்ட‌க் கூடிய‌வை என்றாலும் சிற்றித‌ழ்களை இந்த‌ வ‌கையான‌ ப‌ரிசோத‌னை முய‌ற்சிக‌ளின் க‌ள‌மாக பயன்படுத்த வேண்டியது படைப்பாளிக்கு முக்கியம்.

கவிதைகளின் தேர்வு குறிப்பிடப்பட வேண்டும். பெரும்பான்மையான‌ கவிதைகள் மிக நன்றாக வந்திருக்கின்றன.

தோழி,பாலமுருகன்,சிவம்,தேவராஜன்,மஹாத்மன்,தேவராஜூலு, பூங்குழலி வீரன்,அகிலன்,லதா,கருணாகரன், பச்சைபாலன்,ம.நவீன், சந்துரு, பத்தாங்கட்டை பத்துமலை ஆகியோர் பங்களித்திருக்கிறார்கள். நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளிகள்.அது இவர்களின் தொடர்ச்சியான இயக்கத்தை பொறுத்து இருக்கிறது. நிகழ் கவிதைகள் என்று ஐந்து கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. நிகழ் என்பது கவிஞரின் பெயரா என்று தெரியவில்லை.

கட்டுரைகளில் நான் குறிப்பிட்ட கட்டுரைகளை தவிர்த்து இதழில் உள்ள கவிதைகள் குறித்தான பிற‌ கட்டுரைகள் யாவும் கவிதை வரிகளை உள்ளே நிரப்பி எழுதப்பட்ட கட்டுரைகள். சிற்றிதழில் பிரசுரிக்க வேண்டிய அவசியமில்லாதவை அவை.

லத்தீப் முகையதீன் என்ற மலேசியக் கவிஞரின் கவிதைகளை எம்.ஏ.நுஃமான் மொழிபெயர்த்திருக்கிறார். இது இந்த இதழ் படைப்புகளில் உச்சகட்டம் என்பேன். "யார்தான் நம்புவார்கள்" என்ற ஒரு கவிதை.

அச்சத்தினால் இரவு கிழிக்கப்பட்ட பிறகு
விடிவு வரப்போகிறது என்பதை
யார்தான் நம்புவார்

சந்தேக நெருப்பினால்
உலகம் எரிந்து சாம்பலான பின்னர்
பூக்கள் மலரப்போகிறது என்பதை
யார்தான் நம்புவார்

துரோகத்தினால்
இதயம் மூழ்கடிக்கப்பட்ட பின்னர்
காதல் மலரப் போகிறது என்பதை
யார்தான் நம்புவார்.

இத‌ழை புர‌ட்டும் போது இத‌ழில் ப‌ங்க‌ளிப்ப‌வ‌ர்க‌ள் அல்ல‌து இத‌ழின் ஆக்க‌ம் குறித்த‌ பொருள‌ட‌க்க‌ம் இல்லை. இது ப‌டைப்புக்கு ம‌ட்டுமே முக்கிய‌த்துவ‌ம‌ளிப்ப‌து என்ற‌ ஆசிரிய‌ர் குழுவின் முடிவால் இருக்க‌லாம். அப்ப‌டியில்லையெனில் அடுத்த‌ இத‌ழில் ப‌ரிசீலிக்க‌லாம். இது குறிப்பிடும்ப‌டியான‌ குறையில்லை என்றாலும் 64 ப‌க்க‌ங்க‌ள் உள்ள‌ இத‌ழில் பொருள‌ட‌க்க‌ம் ஒரு தேவையானதாக இருக்கலாம்.

வடிவமைப்பும், அச்சாக்கமும் மிக நேர்த்தியாக அமைந்திருக்கும் இந்த ஒரு அம்சத்தில் சிற்றிதழுக்கான இலக்கணத்தை மீறியிருக்கிறது.

ம‌லேசியாவின் தீவிர‌ இல‌க்கிய‌ம் த‌மிழக‌த்தில் க‌வ‌னிக்க‌ப்ப‌டுவ‌தில்லை என்ற‌ ந‌வீனின் வ‌ருத்த‌த்தை முந்தைய‌ க‌ட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தேன். ம‌லேசியாவில் மிக‌த் தீவிர‌மான‌ இல‌க்கிய‌ க‌ள‌ப்ப‌ணிக‌ள் எவ்வாறிருக்கின்றன என்பது குறித்த ஐயம் எனக்கு இருக்கிற‌து. மிக‌ முக்கிய‌மான‌ புத்த‌க‌ங்க‌ள் வாசிப்பு, அது குறித்தான‌ விவாத‌ங்க‌ள், த‌ற்கால‌ இல‌க்கிய‌ப் போக்கின் மீதான‌ க‌வ‌ன‌ம் போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளை இத‌ழ்க‌ளைத் த‌விர்த்து க‌ருத்த‌ர‌ங்குக‌ள், விவாத‌ அர‌ங்குக‌ள், வாச‌க‌ர் வ‌ட்ட‌ம் மூலமாக தீவிர‌மாக‌ முன்னெடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மிருப்ப‌தாக‌ உணர்கிறன். கோலால‌ம்பூர் தாண்டிய‌ இந்த‌ இய‌க்க‌ம் ம‌லேசியா முழுவ‌துமாக‌ செயல்ப‌டுவ‌தும் அவ‌சிய‌ம். வ‌ல்லின‌ம் இத‌ற்கான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் இய‌ங்க‌லாம். இத‌ழுக்கு அவ‌ர்க‌ள் எடுத்திருக்கும் சிர‌த்தை, அத‌ற்கான‌ த‌குதி அவ‌ர்க‌ளுக்கு இருப்ப‌தாக‌வே உணர்த்துகிற‌து.

Contact: na_vin82@yahoo.com.sg/ Phone: 006-016-3194522

****************************

** பாலமுருகன் மிக தீவிரமாக இலக்கியத் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மலேசிய சிறுகதை எழுத்தாளர். அநங்கம் என்னும் சிற்றிதழை நடத்துகிறார். அவரைப் பற்றி விரைவில் எழுதுகிறேன்.

நாமம் என்ற ஒரு சொல்.

நாமம் என்ற சொல் முதல் மூன்று வரிகளில் இருந்தால் தமிழ்மணத்தில் திரட்டப்படாது என்று சொல்கிறார்களே அப்படியா?

விலக்கப்பட்ட வார்த்தைகள், ஏற்றுக் கொள்ளப்பட்ட வார்த்தைகள் என்ற பட்டியல் தயாரிப்பதற்கு ஏதேனும் அளவுகோல் இருக்கிறதா? நாமம் என்பதை நாமம் என்று சொல்லாமல் எப்படிச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? பெண்ணிய மொழிகளிலும், தலித்திய மொழிகளிலும் உள்ள வீச்சிற்கு அடிப்படைக் காரணமே அந்த மொழியின் கட்டமைப்புதான் என்றால் ஏற்றுக் கொள்வீர்கள் தானே?

எந்தச் சொல்லையும் யாரும் விலக்கி வைக்க வேண்டியதில்லை. கால ஓட்டத்தில் உதிரக் கூடிய யாவும் உதிரப் போகின்றன. நாம் யார் எல்லாவற்றையும் முடிவு செய்வதற்கு? புறநானூற்றிலும் முந்தைய இலக்கியப்படைப்புகளிலும் இருந்த எத்தனை சொற்கள் இன்றைக்கு புழக்கத்தில் இருக்கின்றன?

சொற்கள் மட்டுமில்லை. கலாச்சாரத்தின் எந்தக் கூறும் இப்படித்தான் அமைய வேண்டும் என்று கட்டமைக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தமிழ்மணத்தில் சூடான இடுகை என்பதே ஒரு பொதுஜன ஊடகத்தின் மலிவான விளம்பர யுக்தி. அந்த யுக்திக்கு தக்கவாறு தமிழ்மணத்தில் இயங்கும் படைப்பாளியை வளையச் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை.

நீங்க‌ள் சொல்வ‌து போல‌ த‌மிழ்ம‌ண‌ம் இலாப‌ நோக்கின்றி செய‌ல்படும் த‌ள‌ம் அத‌ன் முடிவுக‌ள் இப்ப‌டித்தான் இருக்க‌ வேண்டும் என்று வ‌ழிகாட்ட‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை என்று. ந‌ன்றி. வேறு என்ன‌ சொல்ல‌ முடியும் எங்க‌ளால்?

Jul 9, 2008

சில உதவாக்கரை குறிப்புகள்

இந்தக் கட்டுரையை எப்படித் துவங்குவது என்று தெரியவில்லை என்பது பழைய ஸ்டைலாக இருக்கிறது. சொல்வதற்கான சில விஷயங்கள் தொண்டைக்குழி வரை அடைத்துக் கிடக்கலாம். அதே சமயத்தில் எதைச் சொல்லப் போகிறோம் எந்த வரிசையில் சொல்லப் போகிறோம் என்று தெரியாத சமயங்களில் இந்த பழைய வரியோடு ஆரம்பிக்கலாம். நானே குழப்பமாக இருக்கும் போது நான் சொல்வதை கேட்கும் தண்டனை இந்தக் கட்டுரையின் முற்றுப்புள்ளி வரை நகர்பவருக்கு கிடைப்பதை நினைத்தால் இதோடு நிறுத்திக் கொள்வது உத்தமம்.
___

இந்த‌ பினாங் ந‌க‌ர‌த்திற்கு வ‌ந்து ஒரு மாத‌ம் ஆகிற‌து. ஒரு ப‌ட்டாம் பூச்சியொன்று த‌னித்து ப‌ற‌ந்து கொண்டிருக்கும் போது அத‌ற்கென்று சோக‌ம் இருக்கும் என்ப‌தை நினைத்திருப்பேனா என்று தெரிய‌வில்லை. இந்த‌ பினாங் ந‌க‌ர‌த்தின் நெருக்க‌டியில்லாத‌ போக்குவ‌ர‌த்தும், அக‌ண்ட‌ சாலைக‌ளும் ஒரு வ‌ன‌த்தையொத்திருக்கின்ற‌ன‌. ஒரு ம‌ழை பெய்து கொண்டிருக்கும் இர‌வில், இருப‌த்தேழு வ‌ருட‌ங்க‌ளில் முத‌ன் முறையாக நான் அவ‌ச‌ர‌ வாழ்விய‌ல் முறைக்கு இய‌ந்திர‌மாக‌ மாறியிருப்ப‌தை உண‌ர‌ முடிகிற‌து. எந்த‌த் திக்குமில்லாம‌ல் காற்றில் அலைவுறும் ப‌ட்டாம்பூச்சியாக‌ என்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு சுய‌ ப‌ச்சாதாப‌ம்.

காட்டுமன்னார் கோவிலில் இன்று ந‌ட‌க்கும் த‌ன் அண்ண‌னின் திரும‌ண‌த்திற்கு போக‌ முடியாம‌ல் ஒரு நாள் விடுப்பில் சென்று பினாங் நகரில் அழுது கொண்டிருக்கும் ராஜ‌ப்பாவை நினைத்து கொஞ்ச‌ம் ப‌ரிதாப‌ம் கொள்கிறேன். அவ‌ர‌து நிலையை எந்த‌வித‌த்திலும் மாற்றிவிட‌ முடியாம‌ல் நானாக‌ என்னை ம‌னிதாபிமான‌ம் மிக்க‌வ‌னாக‌ க‌ருதிக் கொள்ளும் பாசாங்கு.

அலுவ‌ல‌க‌ம் முடித்து வ‌ரும் போது ஒரு பெரும் பாறை த‌லை மீது அழுந்திக் கொண்டிருக்கிற‌து.நாளை மேற்கொள்ள வேண்டிய பணிகளின் சுமை. இது ஒரு போதையை ஒத்திருப்ப‌தாக‌ நினைத்து என்னை ஆறுத‌ல் ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும். இல்லையென்றால் இது என்னை எப்ப‌டி வேண்டுமானாலும் த‌க‌ர்த்துவிட‌ முடியும்.

இப்ப‌டி பாசாங்குக‌ளாலும் போலி பாவ‌னைக‌ளாலும் என்னைச் சுற்றிலும் வ‌லை பின்னிக் கொண்டிருக்கிறேன். இந்த‌ச் சில‌ந்தி வ‌லையின் பின்ன‌ல் மிக‌ வேக‌மாக‌ இருக்கிற‌து. நான் என்னை சிக்க‌ வைத்துக் கொள்ளாம‌ல் ந‌க‌ர்ந்து கொண்டேயிருக்க‌ வேண்டும்.
____

ப‌டைப்பாளி என்ற‌ சொல் குறித்தான‌ விவாத‌ம் ஒன்று தொட‌ங்கிய‌து. ந‌ம‌க்கு தெரியாத‌ வ‌ய‌தில் புக‌ழ் மீதான‌ ஆசையில் எழுத‌ ஆர‌ம்பித்து அந்த‌ புக‌ழின் போதையில் எழுதிக் கொண்டிருக்கிறோம். எந்தவிதமான‌ எழுத்தையும் வாசிப்ப‌த‌ற்காக‌ ஒருவன் இருந்து கொண்டிருப்பான். நூறு ச‌த‌வீத‌ம் இந்த‌ உல‌கினால் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ எழுத்து என்ற‌ எதுவுமே இருக்க‌ முடியாது. ஒரு த‌னி ம‌னித‌ன் வேண்டுமானால் ஒரு எழுத்தை முற்றாக‌ நிராக‌ரித்திருக்க‌லாம். அருகில் இருப்ப‌வ‌ன் அதே எழுத்தை கொண்டாடிக் கொண்டிருப்பான்.

இந்த‌க் கொண்டாட்ட‌த்தின் ம‌ய‌க்க‌ம் உருவாக்கும் பாசாங்கு "ப‌டைப்பாளி".
தோலுரித்துப் பார்த்தால் ஒன்றுமில்லாத‌ பிம்ப‌ம் அது.

த‌ன் காலில் இருந்து உதிரும் ம‌க‌ர‌ந்த‌த் தூளின் மீதான எந்த‌வித‌மான‌ க‌வ‌ன‌மும் இல்லாத‌ ப‌ட்டாம்பூச்சியாக‌ இருப்ப‌வ‌னை ம‌ட்டுமே ப‌டைப்பாளி என‌லாம். த‌ன் படைப்புகளின் மீதும் தன் பெயரின் மீதும் க‌வன‌த்தை க‌ட்ட‌மைக்க‌ எத்த‌னை வித‌மான‌ அர‌சிய‌ல் நிக‌ழ்த்த‌ வேண்டியிருக்கிற‌து.
__

உயிர் எழுத்து, ஜூலை இத‌ழில் வ‌ந்த‌ க‌ட்டுரை(ஒரு தும்பி அலைந்து கொண்டிருக்கிற‌து) குறித்தான இர‌ண்டு முக்கிய‌மான‌ எதிர்வினைக‌ள் ஒன்று க‌லாப்ரியாவிட‌மிருந்தும் ம‌ற்றொன்று பாவ‌ண்ண‌னிட‌ம் இருந்தும்.

மிக‌ வெறுமையான‌ ம‌ன‌தோடு திரியும் க‌ண‌த்தில் வ‌ந்த‌ இர‌ண்டு எதிர்வினைக‌ளும் த‌மிழின் முக்கியமான‌ ப‌டைப்பாளுமைக‌ளிட‌ம் இருந்து வ‌ந்திருக்கிற‌து. பாவ‌ண்ண‌னுக்கு அனுப்பிய‌ ப‌திலில் "காலை நேர‌ ஏறுவெயிலில் அலைந்து வ‌ந்த‌வ‌னுக்கு க‌ம்ம‌ங்கூழ் கிடைத்த‌து போன்றிருக்கிற‌து" என்று அனுப்பினேன். ப‌ழமையான‌ உவ‌மைதான் என்றாலும் ச‌ரியாக‌ பொருந்துகிற‌து.
__

இந்த‌ நாட்க‌ளில் ச‌மூக‌ம் சார்ந்து ப‌தினாறு வ‌ய‌க‌ளில் எழும் கோப‌ம், வெறி போன்ற‌ உண‌ர்வுக‌ளும், சுய‌ம் சார்ந்து எழும் அதீத‌ காம‌ம், குரூர‌ம் போன்ற‌ உண‌ர்வுக‌ளும் ம‌ழுங்கி மென்ப‌ற்றுத‌லுக்காக‌ ம‌ன‌ம் திரிந்து கொண்டிருக்கிற‌து. வீட்டில் பெண்பார்ப்ப‌தாக‌ச் சொல்கிறார்க‌ள்.
____

Jul 6, 2008

ஒரு தும்பி அலைந்து கொண்டிருக்கிறது

உயிர் எழுத்து ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது.

ஹைதராபாத்தில் எனது அலுவலகம் நகர எல்லைக்கு வெளிப்புறமாக மாற்றப்பட்டதில் இருந்து மாதத் துவக்கத்தில் வரும் முதல் இதழாக உயிர் எழுத்து இருந்து கொண்டிருக்கிறது. பொதுவாக மதிய நேரத்தில் வரும் தபாலை கையொப்பமிட்டு வாங்கியவுடன் அலுவலகத்தில் அவசரஅவசரமாக கவிதைகளை ஒரு புரட்டு புரட்டுவது என்பது தூக்கத்தில் இருப்பவன் சூடாக மசால் டீ குடித்து தெளிவாவது போல.

உயிர் எழுத்தில் கதை, கட்டுரைகளுக்கு இணையாக கவிதைகளுக்கு இடம் இருந்து வந்திருக்கிறது. இதுவரை வந்திருக்கும் இதழ்களை மொத்தமாக பார்க்கும் போது ஒவ்வொரு இதழிலும் பத்துக்கும் குறையாத கவிஞர்களும், சராசரியாக இருபதுக்கும் அதிகமான கவிதைகளும் இடம் பெறுகின்றன. இதுவ‌ரை அறிய‌ப்ப‌டாத‌ த‌மிழின் இள‌ம் க‌விஞ‌ர்க‌ளுக்கு உயிர் எழுத்து அமைத்துக் கொடுத்திருக்கும் இட‌ம் முக்கிய‌மானது.

சுதிர் செந்திலிட‌ம் ஒரு முறை ய‌தேச்சையாக‌ ஒரே இத‌ழில் ப‌த்துக் க‌விஞ‌ர்க‌ள் இட‌ம் பெறுவ‌து என்ப‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌விஞ‌ன் க‌வ‌ன‌ம் பெறாம‌ல் போவ‌த‌ற்கான‌ வாய்ப்பாக அமைந்துவிடலாம் என்றேன். அத‌ற்கு அவ‌ர் உயிர் எழுத்து பிரசுரம் ஆகும் கவிதைகளுக்கு ம‌திப்பெண் இடுவ‌தை விரும்ப‌வில்லை. இன்றைய‌ சூழ‌லில் க‌விஞ‌ன் இய‌ங்குவ‌த‌ற்கான‌ 'பிளாட்பார்ம்' தேவைப்ப‌டுகிறது. அதை உயிர் எழுத்து அமைத்துத் த‌ரும் என்றார்.

அந்த‌ப் ப‌தில் என‌க்கு அப்பொழுது திருப்திய‌ளிக்க‌வில்லை. வேறொரு ந‌ண்ப‌ர் பிறிதொரு ச‌ம‌ய‌த்தில் ஐம்ப‌து க‌விதைக‌ளுக்குள்ளும் ந‌ல்ல‌ க‌விதையும் ந‌ல்ல‌ க‌விஞ‌னும் அடையாள‌ம் காண‌ப்ப‌டுவார்க‌ள் என்றார். இது ஏற்றுக் கொள்ள வேண்டியதான கூற்று. இந்த‌க் கூற்றினை முன்ன‌வ‌ரின் கூற்றோடு பொருத்திக் கொள்ள‌ முடிகிற‌து.

இன்றைய‌ த‌மிழ்க் க‌விதையில்- மேற்கொள்ளப்படும் ப‌ரீட்சார்த்த‌ முய‌ற்சிக‌ளுக்கும், கவிஞனின் தொட‌ர்ச்சியான‌ இய‌க்க‌த்திற்கும் இட‌ம் தேவைப்ப‌டுகிற‌து. ஆனால் தமிழில் இந்தவிதமான முயற்சிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன.

வேறு எந்த‌ ஊட‌கத்திலும்- நான் குறிப்பாக‌ சொல்ல‌ விரும்புவ‌து இணைய‌ ஊட‌கம்,க‌விதை வ‌ருவ‌தை விட‌வும், இத‌ழ்க‌ளில்- இல‌க்கிய‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இத‌ழ்க‌ளில் அச்சு வ‌டிவ‌த்தில் த‌ன‌து க‌விதை வெளியாவ‌து க‌விஞ‌னுக்கு உற்சாக‌மூட்ட‌க் கூடிய‌தாக‌ இருக்கிற‌து. இந்த‌ உற்சாக‌த்தை, வெகுவான கவிஞர்களுக்கு, வெளியாகியிருக்கும் உயிர் எழுத்தின் ப‌ன்னிரெண்டு இத‌ழ்க‌ளும் அளித்து வ‌ந்திருக்கின்ற‌ன.

(2)

ஒரு வாச‌க‌னாக‌, வாசிக்கும் போது என‌க்குள் அதிர்ச்சியையோ, ச‌ந்தோஷ‌த்தையோ, துக்க‌த்தையோ,கேவ‌ல் அல்ல‌து விசும்ப‌லையோ அது எதுவாக‌ இருப்பினும் அதை ச‌ற்றே ஆழ‌மாக‌ உண்டாக்கிய‌ சில‌ க‌விதைக‌ளை ம‌றுவாசிப்பு செய்து கொள்வ‌து இக்கட்டுரையின் நோக்க‌மாக‌ இருக்கிற‌து.

க‌விதையில் அங்கததத்தை கொண்டுவ‌ருவ‌து என்ப‌தை ச‌ற்று க‌டின‌மான‌ அம்சமாக‌ உணர்கிறேன். க‌விதையில் துக்க‌த்தை, த‌ன் துயர‌த்தை, புல‌ம்ப‌லை சொல்வ‌து சுல‌ப‌மான‌து. அந்தச் சுலபத்தில் ச‌ற்று சிக்க‌ல் என்ப‌து "நாவ‌ல்டி" எனப்ப‌டும் உண்மைத்த‌ன்மையோடு க‌விதையை வெளிப்ப‌டுத்துவ‌து.இந்த‌ Novelty இல்லாத‌தால்தான் பெரும்பாலான‌ துக்க‌த்தைப் பாடும் க‌விதைக‌ள் வ‌ற‌ட்சித் த‌ன்மையுடைய‌தாக‌ இருக்கின்ற‌ன.

தமிழ் மனம் மிகைப்படுத்துதலில் துவண்டு கொண்டிருக்கும் மனம். தன் எந்தவிதமான‌ உணர்ச்சியை வெளிப்படுத்தவும் மிகைப்படுத்தும் நடிப்பினை நாடிச் செல்கிறது. இந்த நடிப்பு படைப்புகளில் வெளிப்படும் போது அதன் மொத்தச் சாயத்தையும் நுட்பமான வாசகன் வெளுக்கச் செய்து நிராகரிப்பான்.

அங்க‌தத்தில் ந‌டிப்ப‌த‌ற்கான‌ அவ‌சிய‌ம் அதிக‌ம் இல்லாம‌ல் இருப்ப‌தால் அவை சிறப்பாக‌ வெளிப்ப‌டுவ‌த‌ற்கான‌ வாய்ப்புக‌ள் அதிக‌ம்.ஆனால் எதை அங்க‌தமாக‌ச் சொல்ல‌ப் போகிறோம் என்ப‌தும், சொல்ல‌ப்ப‌டும் முறையை தேர்ந்தெடுப்பதிலும் சிர‌மம் இருக்கிற‌து.

இசையின் "கிரீட‌ங்க‌ளை ம‌ட்டும் தாங்கும் த‌லைக்கார‌ன்" (ஜூலை 2007) மேலோட்ட‌மாக‌ அங்க‌த‌ம் தொனிக்கும் க‌விதை என்றாலும், வ‌லிய‌ அதிகார‌ மைய‌த்தை த‌க‌ர்க்கப்ப‌த‌ற்கான‌ கேள்வியை த‌ன்னுள் கொண்டிருக்கும் க‌விதையாக, ச‌ராச‌ரி ம‌னித‌ வாழ்வின் அப‌த்த‌த்தை ப‌ற்றி பேசும் கவிதையாக இருக்கிறது. நுண்ணதிகாரங்கள் நம் நகங்களுக்குள் ஊசியைச் செலுத்திக் கொண்டேயிருக்கின்றன. அதிகாரப் புகை சூழ்ந்திருக்கும் இவர்களின் பாவனைகளையும் ஆட்ட‌ங்களையும் ஒவ்வொருவரும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த‌ ஆட்ட‌த்தை, அதிகாரத்தை அப்ப‌ட்ட‌மாக‌ பேசும் க‌விதை இது.

க.ஜான‌கிராம‌ன் தன் க‌விதைக‌ளில் இய‌ல்பாக‌ அங்க‌த‌த்தை சொல்லிச் செல்லும் க‌விஞ‌ர். அவ‌ரின் "விளையாட்டு"(ஜூலை 2007) க‌விதையை எதிர்பாராத மழை பெய்த ஞாயிற்றுக் கிழமையின் மாலையில் ஒரு பூங்காவில் ப‌டித்துவிட்டு கொஞ்ச‌ நேர‌ம் த‌னியாக‌ சிரித்துக் கொண்டிருந்தேன்.

ராணிதில‌க்கின் க‌விதைக‌ள், இய‌ல்பான‌ காட்சிய‌மைப்பினூடாக‌வோ அல்ல‌து கூற்றுக‌ளினூடாக‌வோ சென்று வாசகனுக்குள் பெரும் திடுக்கிட‌லை உருவாக்கக் கூடிய‌வை. த‌மிழின் வ‌ச‌ன‌க‌விதைகளில் அவ‌ர் செய்து பார்க்கும் சோத‌னை முய‌ற்சிக‌ளின் மீது என‌க்கு பெரும் ஈர்ப்பு இருக்கிற‌து. "ஒரு செடியிட‌ம் ம‌ன்றாடுதல்"(ஜூலை,2007) க‌விதையில் நான் பெற்ற திடுக்கிடச் செய்யும் வாசிப்ப‌னுப‌வ‌ம் ம‌ற‌க்க‌விய‌லாத‌தாக‌ இருக்கிற‌து.

தொட‌ர்ச்சியாக‌ க‌விதை,சிறுக‌தை என‌ இய‌ங்கிக் கொண்டிருக்கும் எஸ்.செந்தில்குமாரின் க‌விதைக‌ளில் இருக்கும் கதையம்சத்தில் என‌க்கு விருப்பம் அதிகம்.

சாமிக‌ளுக்கு வ‌ண‌க்க‌ம். க‌தையில் க‌விதையிருக்க‌லாமா? க‌விதையில் க‌தை இருக்க‌லாமா? என்னும் ச‌ண்டைக்குள் என்னை இழுத்து மிதிக்க‌ வேண்டாம். இது என‌க்கு பிடித்திருக்கிற‌து.

அக்டோப‌ர் 2007 இத‌ழில் வெளியான‌ இவரது "ஒரு ப‌ழ‌த்தைப் போல‌" க‌விதை, சூரிய‌னை ப‌ற‌வை கொத்தி எடுத்துச் சென்றுவிடும் க‌விதை.

இது போன்ற வினோத காட்சிய‌மைப்புக‌ளை விசுவல் மீடியா எனப்படும் காட்சி ஊடகங்களில் இன்றைய தேதிதகளில் காண முடிகிறது. கவித்துவமான காட்சியமைப்புகளை அமைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு தொடர்ந்து நெருக்குதலை உண்டாக்கிக் கொண்டேயிருக்கிறது. படைப்புகளில் முயன்று பார்க்கப்பட்ட மேஜிகல் ரியலிசம், சர்ரியலிசம் போன்ற‌ பல்வேறு உத்திகளும் அழகியல் இயக்கங்களும் தற்போது காட்சி ஊடகங்களிலும் தங்களை நிர்மாணித்துக் கொள்கின்றன.

செந்தில்குமாரின் இந்தக் கவிதை வாசகனை குழப்பச் செய்வதில்லை. மாறாக எளிமையான‌ தன்வ‌டிவ‌மைப்பில் ஒரு குறுங்கதையை கொண்டு வருகிறது. இந்த நேர்த்தி இந்த‌க் க‌விதைக்கான‌ த‌னி இட‌த்தை உறுதிப்ப‌டுத்துகிற‌து.

மார்ச் 2008 இத‌ழில் வெளியான‌ க‌.அம்ச‌ப்பிரியாவின் "நூல‌க‌ ஆணைக் குழுவின் முத‌ல் ப‌க்க‌த்தில் வ‌சிக்கும் க‌விஞ‌ன்" என்ற‌ க‌விதையும் அத‌ன் வ‌டிவ‌மைப்பில் க‌விஞ‌ன் முய‌ன்றிருக்கும் வித்தியாச‌த்திற்காக‌ என‌க்குப் பிடித்திருக்கிற‌து.

வாச‌க‌னை க‌விதைக்குள் வ‌ர‌ச் செய்ய‌ கைக்கொள்ள‌ வேண்டிய‌ பிர‌ய‌த்த‌னத்தை க‌விஞ‌ன் மேற்கொள்ள‌ வேண்டிய‌தில்லை என்ற‌ கூற்றில் என‌க்கு ஒப்புத‌லில்லை. ந‌ல்ல‌ க‌விதை தானே எழுதிக்கொள்ளும் என்பதான 'பழைய சரக்கிற்கும்' இத‌ற்கும் பெரிய‌ வித்தியாச‌மில்லை. வாசகனை தன் கவிதைக்குள் கொண்டு வரும் பொறுப்பு கவிஞனுக்கே உரித்தானது என்பேன்.

அந்த வகையில் கவிஞர்கள் கவிதையின் வடிமைப்பு உத்திகளில் உருவாக்கும் மாற்றங்களில் வாசகனை கவிதைக்குள் கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.

(3)

க‌ட‌வுளை எந்த‌ வ‌டிவ‌த்திலும் க‌விதைக்குள் பொருத்திவிடுவ‌து க‌விதையை ப‌டிப்ப‌த‌ற்கு உற்சாக‌மாக‌ இருக்கிற‌து. க‌ட‌வுள் மது அருந்துவதிலிருந்து, க‌ஞ்சா போதையில் சாலையோர‌ம் வீழ்ந்து கிட‌ப்ப‌து வ‌ரை க‌ட‌வுளின் சாமானிய‌ முக‌ங்க‌ள் ச‌லிப்பு உண்டாக்காத‌வை. அவை நம்மை ஈர்க்க கூடிய முகங்களாக இருக்கின்றன. நம் படிமங்களை, மனத் தொன்மங்களை சிதைத்து கடவுளை நம்மோடு உலவச் செய்வதில் கவிஞனுக்கு கிடைக்கும் திருப்தி வேறொரு வடிவத்தில் வாசகனுக்கும் கிடைக்கிறது.

மார்ச்'2008 இத‌ழில் கோசின்ரா, தூர‌ன் குணா க‌ட‌வுளை வைத்து எழுதியிருந்த‌ க‌விதைக‌ள் குறிப்பிட‌ப் ப‌ட‌ வேண்டிய‌வை. குறிப்பாக கோசின்ராவின் க‌ட‌வுளை கல்லால் அடித்துக் "கொல்வ‌த‌ற்கான‌ ஆணை".

ஜனவரி'2008 இதழில் ஆதவன் தீட்சண்யா எழுதியிருந்த "அப்ரூவராகிய கடவுளும் அபயமளித்த நந்தனும்" என்ற கவிதையில் கடவுள் இடம்பெறுகிறார். முந்தைய கவிதைகளில் இருந்து வித்தியாசமான தளத்தில் இக்கவிதையில் கடவுள் இருக்கிறார்.

மார்ச்'2008 பொன்.இள‌வேனில் எழுதிய "இன்றைய‌ கிழ‌மை" க‌விதை சோப்பு குமிழியொன்றை ஒத்திருக்கிறது. இந்தக் கவிதை த‌ன‌து பாதத்தை எந்த தளத்தின் மீதும் ஊன்றவில்லை. அது மிதந்து கொண்டிருக்கிறது. கவிதையின் பொருள் பற்றிய கவனம் எனக்கு இல்லை. கவிதை கொண்டிருக்கும் அந்த‌ர‌த்த‌ன்மை அளிக்கும் வாசிகப்ப‌னுப‌வமே அத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம்.

அக்டோபர் 2007 இத‌ழில் வெளியான‌ த‌யாநிதியின் "நீரிழிவு மைய‌ப் ப‌க‌ற்பொழுதின் காட்சிக‌ள்" காட்சிக‌ளை எவ்வித‌மான‌ த‌ன்முனைப்பும் இல்லாம‌ல் இலாவ‌க‌மாக‌ வெளிப்ப‌டுத்திக் கொண்டிருந்த‌து‍ ‍- க‌டைசி நான்கு வ‌ரிக‌ள் வ‌ரை. க‌டைசி நான்கு வ‌ரிக‌ளில் அமைந்துவிட்ட‌ ஒரு வித‌ நாட‌கீய‌த்த‌ன்மை, க‌விதையை கீழே எறிந்த‌ பிர‌மையை உருவாக்கிய‌து.

ராஜா ச‌ந்திர‌சேக‌ரின் "சுதந்திரம்"(பிப்ர‌வ‌ரி 2008). இங்கு இய‌ல்பான உண்மை ஒன்று க‌விதையின் விர‌ல்க‌ளைப் ப‌ற்றிகொண்டு ம‌ன‌திற்குள் சுற்ற‌ ஆர‌ம்பிக்கிற‌து.

இந்த‌ உல‌கின் பிர‌ம்மாண்ட‌த்தில் இருண்மையோ அல்லது,இருளோ எங்கும் வியாபித்திருக்கிற‌து. ப‌டைப்பாளி என்பவன் விள‌க்கை ஏந்திக் கொண்டு உண்மையைத் தேடி அலைப‌வ‌னாக‌ இருக்கிறான். அவ‌ன் உண்மையை அடையாள‌ம் காண்கிறான் அல்ல‌து இருளின் மீது சிறு வெளிச்ச‌த்தை வீச‌ச் செய்து வாச‌க‌னை உண்மையைக் க‌ண்ட‌றிய‌ச் சொல்கிறான். இக்க‌விதையில் க‌விஞ‌ன் நேர‌டியாக‌ உண்மையைச் சொல்லிவிடுகிறான். மிக‌க் க‌ச்சிதமாக‌ அமைந்த‌ க‌விதை என்று இத‌னைச் சொல்வேன்.

இந்தச் சில கவிதைகளைத் த‌விர்த்து இற‌க்கை ராச‌மைந்த‌னின் "அவ‌ன்",(டிசம்பர் 2007) ய‌வ‌னிகா ஸ்ரீராமின் "இர‌த்த‌ ருசியும் க‌ர‌ப்பான் பூச்சியும்"(டிச‌ம்ப‌ர்'2007), சுதிர் செந்திலின் ம‌ர‌ண‌ம் ப‌ற்றிய‌ ஏழு க‌விதைக‌ளில் ஏழாவ‌து க‌விதை(பிப்ரவரி 2008), ல‌க்ஷ்மி ம‌ணிவ‌ண்ண‌னின் "ஆண் துற‌வி"(பிப்ர‌வ‌ரி 2008), இள‌ங்கோ கிருஷ்ண‌னின் "ஒரு பாறாங்க‌ல்லை நேசிப்ப‌து ப‌ற்றி"(ந‌வ‌ம்ப‌ர் 2007), அனிதாவின் "யாருமற்ற விடியல்" (பிப்ரவரி 2008), எஸ்.தேன்மொழியின் "ப‌ருவ‌ம்"(அக்டோப‌ர் 2007).இவ்வாறு எழுதிக் கொண்டு செல்வ‌து ப‌ட்டிய‌லாகிவிடலாம்.

மிக முக்கியமான கவிதைகள் நிறைய இருக்கின்றன.

எதிர்மறை விமர்சனத்திற்கு உட்படுத்துவதற்கான வாய்ப்புள்ள கவிதைகள் குறித்தான வினா எழும் போது அந்த வகையான கவிதைகள் உயிர் எழுத்தில் இருப்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அவற்றைக் குறிப்பிட நான் விரும்பவில்லை. அதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று, இந்தக் கட்டுரை முதலிலேயே குறிப்பிட்டது போல வாசக மனதில் நிலைத்து நிற்கும் கவிதைகளை பற்றியது.

தேவதச்சன் என்னிடம் ஒரு முறை கேட்டார். உன் கவிதைகளுக்கான உத்வேகமான எதிர்வினைகள் எத்தனை இதுவரை எதிர்கொண்டிருக்கிறாய் என. என்னிடம் பதில் இல்லை. அவரே சொன்னார். கவிதைகள் மெளனமானவை. அவை எதிர்வினைகளை எதிர்பார்ப்பதில்லை. எழுதப்பட்ட நாளிலிருந்து பத்து வருடங்கள் அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து கவிதையின் ஒரு வரியை ஒரு வாசகன் சுட்டிக் காட்டக் கூடும். அதுதான் அந்தக் கவிதையின் வெற்றியாக இருக்கும் என்று.

இந்த வகையான கவிதைகள் உயிர் எழுத்தில் தொடர்ந்து வந்திருக்கின்றன என்பதைச் சொல்ல முடியும்.

(4)

ப‌ன்னிரெண்டு இத‌ழ்க‌ளில் இத்த‌னை க‌விஞ‌ர்க‌ள் ப‌ங்கேற்றிருப்ப‌து மிக முக்கியமான ஒன்று. க‌ல்யாண்ஜி, க‌லாப்ரியா தொட‌ங்கி புதிதாக‌ எழுத‌வ‌ரும் க‌விஞ‌ர்க‌ள் வ‌ரை வெவ்வேறு த‌ள‌ங்க‌ளில் இய‌ங்கும் க‌விஞ‌ர்க‌ளுக்கான‌ இட‌ம் அளிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

உயிர் எழுத்தின் முக்கியமான செயல்பாடுகளாக இன்றைய‌ க‌விஞ‌னின் ப‌ல்வேறு ம‌ன‌வோட்டங்க‌ளை வாச‌க‌ வ‌ட்ட‌த்தில் முன் வைத்த‌து, சில‌ முக்கிய‌மான‌ மொழிபெய‌ர்ப்புக‌ளை தொட‌ர்ச்சியாக‌ வெளியிட்ட‌து குறிப்பாக‌ ஷ்யாம் சுதாக‌ரின் மலையாள‌க் க‌விதைக‌ள்(ஜ‌ன‌வ‌ரி 2008), த‌மிழின் முக்கிய‌மான‌ ச‌மகால‌ ஆளுமைக‌ள் வ‌ரிசையில் க‌விதையில் த‌ன‌க்கென‌ இட‌ம் ப‌தித்திருக்கும் தேவ‌தேவன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரின் படத்தை முக‌ப்பு அட்டையில் பிர‌சுரித்து ம‌ரியாதை செய்த‌து போன்றவற்றை குறிப்பிட‌ விரும்புகிறேன்.

ப‌டைப்புக‌ள் எவ்வித‌ அடையாள‌ங்க‌ளுக்குள்ளும் வ‌ர‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை என்ற‌ போதிலும் மொத்த‌மான‌ பார்வையில் த‌லித்திய‌ம், பெண்ணியம் போன்ற‌‌ வ‌கைப்பாடுகளில் க‌விதைக‌ள் அமையாத‌து என்பதனை குறையாக‌ச் சொல்ல முடியும்.ஒரு குறிப்பிட்ட‌ இய‌க்க‌த்தை ம‌ட்டுமே மிக‌ உத்வேக‌த்துட‌ன் முன்னெடுக்கும் ப‌ணியை சிற்றித‌ழ்க‌ள் மேற்கொள்ளும் போது, ப‌ர‌வலான் செய‌ல்பாடுக‌ளுக்கும் சில‌ திட்ட‌வ‌ட்ட‌மான‌ இய‌க்க‌ங்க‌ளுக்கும் இட‌ம் அமைக்க‌ வேண்டிய‌ பொறுப்பு இடைநிலை இத‌ழ்க‌ளுக்கு இருக்கிற‌து.

க‌விதைக‌ள் த‌விர்த்து விக்ர‌மாதித்ய‌ன் ந‌ம்பியின் ஒரு க‌விதை, ஒரு க‌விஞ‌ன், ஒரு உல‌க‌ம் க‌ட்டுரையும் அத‌ற்கான‌ ராஜ‌ மார்த்தாண்ட‌ன், பொதிகைச் சித்த‌ரின் எதிர்வினைக‌ளும் ந‌வீன‌ க‌விதையுல‌கு குறித்தான் முக்கியமான‌ உரையாட‌லுக்கான‌ தொட‌க்க‌ப் புள்ளியாக‌ அமைகின்ற‌ன‌. இது போன்ற‌ க‌விதை குறித்தான‌ உரையாட‌லும், விவாத‌மும் தொட‌ர்ச்சியாக‌ மேற்கொள்ள‌ப்பட‌ வேண்டும். இது த‌மிழ்க் க‌விதையின் அடுத்த‌ க‌ட்ட‌ ந‌க‌ர்வுக்கு முக்கிய கார‌ணியாக‌ அமையும்.

ஓராண்டில் க‌விதை சார்ந்த‌ இய‌ங்குத‌லில் உயிர் எழுத்து அழுத்த‌மாக‌வே த‌ட‌ம் ப‌தித்திருக்கிற‌து. தொட‌ர்ந்து வ‌லிமையுட‌ன் இய‌ங்கும் என்ற‌ ந‌ம்பிக்கை எழுவ‌தும் இய‌ல்பாகிற‌து.


நன்றி: உயிர் எழுத்து-ஜூலை2008

Jul 5, 2008

கவிஞர் சுகுமாரன்

தமிழகத்தில் கவிதைகள் வாசிப்பவர்கள் எண்ணிக்கை என்னவாயிருக்கும்? எந்தப் பாகுபாடும் வேண்டாம். தினப்பத்திரிக்கையின் பெட்டிக்குள் வரும் மூன்று வரிகளில் தொடங்கி, நான் உச்சகட்டம் என்று கொண்டாடும் நவீன கவிதைகள் வரை. தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் முயன்று பார்க்கும் வடிவம் கவிதையாக இருக்கிறது.

எனக்கு கவிதை மீது எப்படி ஈடுபாடு வந்தது என்று நண்பர் ஒருவர் கேட்டார். இந்த வினா பொது இடத்தில் எந்த முக்கியத்துவமும் அற்றது. ஆனால் பதிவு செய்வதால் எந்த இழப்பும் வரப்போவதில்லை. எம்.டெக் பிராஜக்ட் விஷயமாக சென்னை வந்திருந்த போது சனி,ஞாயிறுகளில் அதுவரை நான் எழுதி வைத்திருந்தவற்றை கவிதைகள் என்ற நினைப்பில் தூக்கிக் கொண்டு யாரையாவது பார்க்கப் போவது என்பதை ஒரு பணியாக வைத்திருந்தேன்.

அறிவுமதி,பா.விஜய்,விவேகா,சினேகன் என்ற திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் இருந்த பட்டியல் அது. மயிலாப்பூரில் குளம் அருகில் அலைந்து கொண்டிருந்த போது, தமிழச்சியின்(அப்பொழுது தங்கபாண்டியன் என்று அவர் எழுதவில்லை) "எஞ்சோட்டுப் பெண்" மதிப்புரை விழாவில் மனுஷ்ய புத்திரன் அவர்களை சந்தித்தேன். அடுத்த வாரம் வீட்டிற்கு வருவதாக முகவரி வாங்கிக் கொண்டேன். அடுத்த ஞாயிறன்று அவர் இல்லத்திற்கு சென்ற போது அவர் பொதுவாக விசாரித்துவிட்டு என்ன கவிதைகள் படித்திருக்கிறீர்கள் என்றார். சிற்பியின் "சர்ப்பயாகம்", "கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்", "இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல" என்று பெருமையாகச் சொன்னேன்.

எந்த எதிர்வினையுமின்றி எனக்கு மூன்று கவிதைப் புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். "நவீன தமிழ்க் கவிதை அறிமுகம்","பசுவய்யாவின் 107 கவிதைகள்" மற்றும் சுகுமாரனின் "கோடைகாலக் குறிப்புகள்".

நவீன தமிழ்க் கவிதை அறிமுகம் புத்தகத்தில் ஒவ்வொரு கவிதையும் ஏதாவது விதத்தில் தாக்கத்தை உண்டாக்குவதாக இருந்தன. அந்தக் கவிதைகளின் வரிகளை என்னால் வரி பிசகாமல் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சுகுமாரனின் "சாகத்தவறிய மறுநாள்" கவிதையை வாசித்த போது உருவான பதட்டத்தையும், துக்கத்தையும், வெற்றிடத்தையும் இன்னும் இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகும் துல்லியமாக நினைவு கூற முடியும்.

அதே இரவில் கோடைகாலக் குறிப்புகளை வாசித்து முடிக்க முடிந்தது. இதுவரை நான் எழுதியவைகளை நிராகரிக்க வேண்டியதன் அவசியமும், நான் பயணிக்க வேண்டிய தொலைவும் தென்பட்ட இரவு அது.

"கண்ணாடியில் நகரும் வெயில்" முன்னுரையில் என் கவிதைக்கான தடத்தை பதித்து வைத்திருப்பவர்களாக சுகுமாரன், மனுஷ்ய புத்திரன், ஆத்மாநாமை குறிப்பிட்டிருக்கிறேன்.
_____

சுகுமாரனின் கவிதைகள் ஒரு மையத்தை வைத்து சுழல்வதாக இருக்கின்றன. அவை கவித்துவத்துவத்துக்காக எந்த பாசாங்கும் இல்லாதவை. மொழியமைப்பில் சுகுமாரன் செய்து பார்த்திருக்கும் பரிசோதனை முயற்சிகளும் அதில் அடைந்திருக்கும் வெற்றியும் அவருக்குப் பின் வந்த பல கவிஞர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதித்திருக்கிறது.

ஒரே சொல்லை திரும்ப திரும்ப வெவ்வேறு வடிவமைப்பில் பதிவு செய்து தன் கவிதைக்கான பொருளை அழுந்தச் சொல்லும் சுகுமாரனின் தனித்த வடிவம் கவிதையில் நெகிழ்ந்து இருக்கக் கூடிய இசைத்தன்மையை உண்டாக்குவதை கவனிக்க முடியும். இறுக்கமான கவிதைகளை உடைப்பதில் வெற்றியடைந்த தமிழ்க் கவிஞர்களில் சுகுமாரன் முக்கியமானவர்.

கவிதைகளில் அவர் தொட்டு பார்த்திருக்கும் தளங்களும், கையாண்டிருக்கும் படிமங்களும் குறிப்பிடத்தக்கவை. "யூக்கலிப்டஸ் மரங்களுக்குப் பின்னால் அறுபட்ட தலை" என சூரியனை குறிப்பிடுவது மிகச் சிறந்த உதாரணம்.

கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக(சிறு இடைவெளிகள் தவிர்த்து)தமிழ் இலக்கிய வெளியில் கவிதை, கட்டுரை என்ற தளங்களில் சுகுமாரன் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

நீண்டகாலமாக இயங்கிவரும் படைப்பாளியின் படைப்புகளில் இயல்பாக இருக்கக் கூடிய மாற்றத்தை இவரது கவிதைகளில் புரிந்து கொள்ள முடியும். வன்முறை, சுயம் சார்ந்த துக்கம், தவிப்பு, கோபம் போன்றவற்றால் ஆகியிருந்த சுகுமாரனின் தொடக்க கால கவிதைகள் இன்று அடைந்திருக்கும் கனிவான தன்மை வரைக்கும் தான் பயணம் செய்த தடத்தில் தொடர்ந்து தன்னை உருமாற்றி வந்திருக்கின்றன.

இது கவிதையின் பயணமாக இல்லாமல் படைப்பாளியின் வயது,ஆளுமை சார்ந்த பயணமாகவும் இருக்கிறது. பூமியை வாசிக்கும் சிறுமி தொகுப்பினை முழுமையாக வாசிக்கும் வாசகனால் இந்த இடைவெளியில் பயணம் செய்ய முடியும்.
__

சுகுமாரன் அவர்களை முதன் முதலில் சந்தித்தது ஊட்டி நித்யா கவிதையரங்கில். அதற்கு முன்னதாக தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் எனது கவிதைகள் குறித்தான அவரது வெளிப்படையான விமர்சனங்கள் எனக்கு மிக முக்கியமானவை. நித்யா கவிதையரங்கில் எனது சில கவிதைகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின. அரங்கிற்கு வெளியே சுகுமாரன் ஒரு சிகரெட்டை உறிஞ்சியவாறே எனது கருத்தைக் கேட்டார். "இருபத்தாறு வயதிலேயே விமர்சனம் வரக்கூடாது என்று நினைத்தால் நான் எத்தனை நாளானாலும் கவிஞனாக‌ முடியாது" என்றேன். அது கொஞ்சம் நானாகவே ஆறுதல் படுத்திக் கொள்வதற்கான வார்த்தைகள். அப்பொழுது எனது கவிதைகள் பற்றி சுகுமாரன் முன் வைத்த கருத்துக்கள் மிக ஆழமானவை. அவற்றை நித்யா கவிதை அரங்கு பற்றிய பதிவுகளில் பதிவு செய்கிறேன்.
___

சுகுமாரனின் "பூமியை வாசிக்கும் சிறுமி"க்கு "சிற்பி" விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.
---

சுகுமாரன் கவிதைகள்:http://pesalaam.blogspot.com/2008/05/blog-post_11.html
http://www.andhimazhai.com/news/viewmore.php?id=3176

Jun 28, 2008

மலேசியா

மலேசியா வந்து பத்து நாட்கள் ஆகியிருக்கிறது. காலையில் விசா கைக்கு வந்தவுடன் மாலையிலேயே கிளம்புவதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் பயணச்சீட்டையும் கொடுத்துவிட்டார்கள். அம்மா போனில் அழ ஆரம்பித்துவிட்டார். ஹைதராபாத்தில் இருந்து நான் தனியாகச் செல்கிறேன் என்று வருத்தம்.

முதல் விமானப் பயணம், முதன்முதலாக அமெரிக்க டாலர்கள் கைக்கு வருகிறது.(இது பயணப்படி). அப்படி இப்படியென்றாலும் எனக்கும் உள்ளூர கொஞ்சம் வருத்தமாக இருந்தது. பரவசத்தை மீறிய ஒரு துக்கம் என்றாலும் பொருந்தும்.

கோலாம்பூரில் வ‌ந்து சேர்ந்து அங்கிருந்து பினாங். வ‌ந்து பெட்டியை கீழே வைத்த‌வுட‌ன் பெருந்தூக்கம் ஒன்று தாக்கிய‌து. மாலையில் உண்வுக்காக‌ச் சென்ற‌ போது காசிம் முஸ்த‌பா ரெஸ்டார‌ண்ட் வாச‌லில் புரோட்டா மாவு பிசைந்து கொண்டிருந்தார்க‌ள். ஹைத‌ராபாத்தில் கூட‌ புரோட்டா எளிதில் கிடைக்காது. இர‌ண்டு புரோட்டா 1.60 வெள்ளி. ந‌ம்ம‌ க‌ண‌க்கில் ஒரு வெள்ளி ப‌தின்மூன்று சொச்ச‌ம் ரூபாய்க‌ள். க‌டையில் இருக்கும் கீழ‌க்க‌ரை ம‌க்க‌ளோடு கொஞ்ச‌ம் அள‌வளாவி அருகில் இருக்கும் புகிட் ஜ‌ம்புல் என்ற‌ ஷாப்பிங் காம்ப்ள‌க்சில் த‌சாவதார‌த்திற்கு க‌ழுத்தை கொடுத்து அசின் அல‌ம்ப‌லில் வெந்து போய் வெளியே வ‌ரும் போது அட‌ ந‌ம்ம‌ ஊரு என்ற‌ ம‌ன‌நிலை வ‌ந்துவிட்ட‌து.

வ‌ல்லின‌ம் ந‌வீன் ஜிடாக்கில் பேசும் போது ம‌லேசிய‌ இல‌க்கிய‌ம் ப‌ர‌வ‌லாக‌ க‌வ‌ன‌ம் பெற‌வில்லை என்றார். இன்னொரு ந‌ண்ப‌ர் ம‌லேசியாவில் கார்த்திகேசு, பீர் முக‌ம்ம‌து த‌விர்த்து இல‌க்கிய‌த்தில் தீவிர‌மாக‌ இய‌ங்கும் ஆட்க‌ளை என‌க்குத் தெரிய‌வில்லை என்றார்.

என‌க்கு வேறு பெய‌ர்க‌ள் அறிமுக‌மில்லை. நான் வ‌ந்த‌ நாளிலிருந்தே யாராவ‌து இல‌க்கிய‌ நண்ப‌ர்க‌ளைச் ச‌ந்திக்க‌ வேண்டும் என்று இந்தியாவில் இருக்கும் ந‌ண்ப‌ர்க‌ளை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

சென்ற‌ வார‌ம் ஜெட்டி க‌ட‌ற்கரையில் த‌னியாக‌ச் சுற்றிக் கொண்டிருந்தேன். மலேசியாவில் கத்தி வைத்து பணம் பறிப்பார்கள் என்று சொன்ன நண்பரை நினைத்துக் கொண்டு பயத்துடன் திரிந்து கொண்டிருந்தேன். பினாங் ஒரு க‌ட‌ற்க‌ரை ந‌க‌ர‌ம். தீவும் கூட‌. இன்று பினாங்கை ம‌லேசியாவுட‌ன் இணைப்பத‌ற்கான‌ பால‌ம் இருக்கிற‌து. அன்று க‌ட‌ல் ம‌ட்டுமே இணைப்பாக‌ இருந்திருக்கும். அத‌னால்தான் துறைமுக‌ம் இருக்கும் ஜெட்டி என்ற இட‌ம் அந்த‌க் கால‌த்தில் செழித்து இருந்திருக்கிற‌து. கட்டங்கள் அதை பறை சாற்றுகின்றன. அந்த‌க்கால‌த்தின் க‌ட்ட‌ங்க‌ளை இன்ன‌மும் பாதுகாக்கிறார்க‌ள். 1700களின் இறுதியில் கட்டப் பட்டிருக்கும் கார்ன் வாலிஸ் கடற்கரை கோபுரம் இன்னமும் இருக்கிறது.

துறைமுகத்தின் எதிரில் "தி கொழும்பு க‌ம‌ர்சிய‌ல் க‌ம்பெனி" என்ற பெய‌ர் ப‌ல‌கையை ஒரு பாழ‌டைந்த கட்டடத்தில் பார்த்தேன்.அதற்கு குறைந்தது நூறு வ‌ருட‌ங்க‌ள் இருக்க‌க்கூடும்.அந்த‌க் கால‌த்தில் த‌மிழ‌ன் ப‌ணி செய்திருப்பான். இந்தியாவில் அவ‌ன‌து சொந்த‌ ஊரிலும் சுற்றுவ‌ட்டார‌த்திலும் அவ‌ன் ம‌லேசியாவில் க‌ப்ப‌ல் க‌ம்பெனியில் ப‌ணிபுரிவ‌தாக‌ பேசிக் கொண்டிருந்திருப்பார்கள்.

நாகூர் த‌ர்கா ஷெரீப் என்ற‌ த‌ர்க்கா நானூறு வ‌ருட‌ங்க‌ள் ப‌ழ‌மையான‌தாக‌ இருக்க‌லாம் என்று நினைக்கிறேன்.

தமிழ‌னுக்கும் ம‌லேசியாவிற்குமான‌ இணைப்பு இன்னும் கூட‌ ப‌ழ‌மையான‌து என்றாலும் ப‌த்து நாட்க‌ளில் என்னால் நானூறு வ‌ருட‌ங்க‌ளைத்தான் நெருங்க‌ முடிந்திருக்கிற‌து.

லிட்டில் இந்தியா என்ற‌ ஒரு இட‌ம். இதுவும் அதே ஜெட்டி ப‌குதியில்தான். காரைக்குடி மெஸ்க‌ளும், த‌மிழ்த் திரைப்பாட‌ல்க‌ள் ஒலிக்கும் கேச‌ட் க‌டைக‌ளும், அண்ணாச்சி ம‌ளிகைக்க‌டைக‌ளும் நிர‌ம்பியிருக்கின்ற‌ன‌. க‌டுகு எண்ணெய் வாடையில்லாத‌ ஒரு இட‌ம் என்ப‌து இத‌ன் கூடுத‌ல் சிற‌ப்பு.

ஒரு புத்த‌க்க‌டை தென்ப‌ட்ட‌து. வைர‌முத்துவும் ர‌ம‌ணிச் ச‌ந்திர‌னும் நிர‌ம்பியிருக்கிறார்க‌ள்.2.30 வெள்ளி கொடுத்தால் இந்த‌ வார‌ விக‌ட‌ன் வாங்க‌லாம். "வேற‌ புக்ஸ் எல்லாம் கிடைக்காதா சார் என்றேன். வைர‌முத்துவோட‌ வைக‌றை மேக‌ங்க‌ள் ப‌டிங்க‌. ரொம்ப‌ ந‌ல்லா இருக்கும்" என்றார்.

என‌க்கு ஒரு ச‌ந்தேக‌ம். த‌மிழ‌க‌த்தில் சில‌ க‌டைக‌ளில் ந‌வீன‌ இலக்கிய‌ புத்த‌க‌ங்க‌ள் எல்லாம் கிடைக்காது. ஜோதிட‌ம், ஆன்மிக‌ம் தொட‌ங்கி, உத‌ய‌மூர்த்தி வ‌ழியாக‌, ர‌ம‌ணிச் ச‌ந்திர‌னிலும், வைர‌முத்துவிலும் நின்று விடுவார்க‌ள். த‌பூ ச‌ங்க‌ர் அல்ல‌து பா.விஜ‌ய்க்கு கொஞ்ச‌ம் இட‌ம் இருக்க‌லாம். நான் ம‌லேசியாவில் நுழைந்த‌ க‌டை இது போன்ற‌ க‌டையா?

இல்லையென்றால் ந‌வீனின் வினாவிற்கு ப‌தில் கிடைத்திருக்கிற‌து என‌க்கு.

Jun 15, 2008

நித்யா கவிதை அரங்கு-2

முதல் அமர்வு முடிந்த பிறகு எனக்கு பசி அதிகமாகியிருந்தது. "ஹெட்மாஸ்டர்" ஜெயமோகன் மதிய உணவை முடித்துவிட்டு இரண்டரை மணிக்கு மீண்டும் அமர்வினை வைத்துக் கொள்ளலாம் என்றார். நான் ச‌ந்தோஷ‌மாக‌ சிரித்துக் கொண்டேன்.

சாம்பார், ரசம், மோர், பொரியலுடன் மதிய உணவு சூடாக, தயாராக இருந்தது. மதியம் ஒன்றரை மணிக்கும் இருந்த குளிருக்கு அந்த இதமான சூடு தேவையாக இருந்தது. நிர்மால்யா ஒவ்வொருவரிடமும் உணவு குறித்தான கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆந்திராவின் உப்புச் சப்பில்லாத பருப்பை குழைத்து, ஊறுகாய் அல்லது கோங்குராவை துணையாகக் கொண்டு விழுங்கிவிடும் எனக்கு சுவை பற்றிய நுணுக்கமான விஷயங்கள் தெரியாது. உப்புக் கட்டி ஒன்று கரையாமல் வாய்க்குள் போனால் மட்டுமே உணவில் உப்பு அதிகம் என்று முடிவு செய்யும் அளவிற்கு மட்டுமே என் சுவையறிதல் இருக்கும். எனக்கு இந்த உணவு பிடித்திருந்தது. ரசம்தான் குறிப்பாக. மற்றவர்களும் உணவு நன்றாக இருந்தததாக சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டு என் தீர்மானத்தை சரி என்றாக்கிக் கொண்டேன். சமையல் வல்லுநராகவும் இருக்கும் நாஞ்சில்நாடன் அவர்களும் நன்றாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். நான் ர‌ச‌த்தை ர‌வுண்ட் க‌ட்டி அடித்துக் கொண்டிருந்தேன். யுவ‌ன் ட‌ம்ள‌ரில் ஊற்றி குடித்துக் கொண்டிருந்தார்.

திற‌ந்த‌வெளியில் இர‌ண்டாம் அம‌ர்வு தொட‌ங்கிய‌து. என‌து க‌விதைக‌ளை வாசிக்க‌லாம் என்று ஜெய‌மோக‌ன் சொன்னார். ஆனால் ம‌லையாள‌த்தில் மொழிபெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ என‌து க‌விதைக‌ள் அப்பொழுது அர‌ங்கில் இருந்தவர்களிடம் இல்லை. நான் கொஞ்ச‌ம் 'கூல்' ஆனேன். முத‌ல் த‌மிழ்க் க‌விதையாக என்னுடைய‌தாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் அரங்கில் எதிர்வினை எப்ப‌டியிருக்குமோ என்ற‌ ப‌த‌ட்ட‌மே கார‌ண‌மாக‌ இருந்த‌து.

சுகுமார‌ன் அவ‌ர்க‌ளின் க‌விதைக‌ள் வாசிக்க‌ப்ப‌ட்டன.கவிதை வாசிக்கும் போது வெயில் அதிகமானதால் மீண்டும் உள்ளரங்கிற்குள் அமர்வு இடமாற்றப்பட்டது.

"இட‌வ‌ழுவ‌மைதி" முத‌லில் வாசிக்க‌ப்ப‌ட்ட‌ க‌விதை. இந்த‌க் க‌விதையில் அமைந்திருக்கும் க‌தைய‌ம்ச‌ம் ப‌ற்றி விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து. பி.பி.ராம‌ச்ச‌ந்திர‌ன் இந்தக் க‌விதையில் வாசக‌னுக்கான‌ ப‌ர‌ப்பு இல்லை என்றார்.

art of creation இல் வாச‌க‌னுக்கான‌ இட‌ம் தேவையா என்ற‌ வினா எழுப்ப‌ப‌ட்ட‌து. ஜெய‌மோகன், Statement என்ப‌து வெறும் சொல்லுத‌ல் என்ப‌தையும், Literary Statement என்ப‌து உண‌ர்த்துத‌ல் என்ப‌தையும் சில‌ உதார‌ண‌ங்க‌ளோடு முன் வைத்தார். Literary Statement இல் வாச‌க‌னுக்கான‌ இட‌ம் உருவாகிற‌து என்ப‌து குறிப்பிட‌ப்ப‌ட்ட‌து.

இத‌ன் தொட‌ர்ச்சியாக வாசிக்கப்பட்ட "முத‌லாவ‌து வார்த்தை" க‌விதையில் க‌விஞ‌னோடும், க‌விதையோடும் வாச‌க‌ன் த‌ன்னை இணைத்துக் கொள்வ‌து ப‌ற்றிய‌ க‌ருத்துக்க‌ளை யுவ‌ன் முன்வைத்தார். இந்தக் கவிதை குறித்தான விவாதத்திலும் வாசகன் இடம் பெற்றது முதல் கவிதையில் மேற்கொள்ளப்பட்ட விவாதத்திற்கும், இரண்டாவது கவிதையில் மேற்கொள்ளப்பட்ட விவாதத்திற்கும் ஒரு மென்சரடு தொடர்பினை உருவாக்கியது எனலாம்.

"நீரின்றி அமையாது" க‌விதை வாசிக்க‌ப்ப‌ட்ட‌ போது மொழியில் சுகுமார‌ன் ந‌ட‌த்தும் ஆவ‌ர்த்த‌ன‌ம் ப‌ற்றி விரிவாக‌ அல‌ச‌ப்ப‌ட்ட‌து. இந்த‌க் க‌விதையில் திர‌வ‌ம் அவ்வ‌டிவ‌த்தில் இய‌ங்கும் பொருட்க‌ளை உற‌வுக‌ளோடு இணைப்ப‌து ஆகிய‌ன‌ க‌வ‌ன‌ம் பெற்றன.

இந்தக் கவிதை வாசிக்கப்பட்ட போதும் இதன் பின்னர் "கனிவு" வாசிக்கப்பட்ட போதும், தமிழில் இருந்து மலையாளத்துக்கு செய்யப்பட்ட மொழிபெய‌ர்ப்பில் சில‌ குறைபாடுக‌ள் இருப்ப‌தாக ம‌லையாள‌க் க‌விஞ‌ர்க‌ள் குறிப்பிட்டார்க‌ள். குறிப்பாக‌ அன்வ‌ர் அலியும், பி.பி.ராம‌ச் ச‌ந்திர‌னும்.

"கொற்ற‌வை" நாவ‌லுக்கான‌ த‌ன் உழைப்பு, அந்நாவ‌லின் மொழிய‌மைப்பிற்கான‌ முய‌ற்சி ஆகிய‌வை ம‌லையாள‌ம் மீதான‌ த‌ன் பிடி ந‌ழுவிய‌த‌ற்கு கார‌ண‌ம் என்று ஜெய‌மோக‌ன் குறிப்பிட்டார்.

"க‌னிவு" க‌விதையில் "மிஞ்சிய‌து ச‌ரும‌ம்" என்ற‌ சொல்லாட‌ல் மிக‌ நீண்ட‌ நேர‌ம் பேச‌ப்ப‌ட்ட‌து.

அடுத்த‌ "எட்டுக்காலியும் நானும்" அக‌ம், புற‌ம் குறித்தான‌ உரையாட‌லுக்கான‌ திற‌வுகோலாக‌ அமைந்த‌து. த‌மிழில் புற‌ம் ப‌ற்றிய‌ க‌விதைக‌ள் இல்லை என்ப‌து க‌ல்ப‌ற்றா நாராயணனின் வாத‌ம். தமிழ் இல‌க்கிய‌த்தில் புற‌நானூறு த‌விர‌ வேறெதுவும் புற‌ம் ப‌ற்றிய‌தில்லை என்றும், புற‌நானூற்றிலும் முந்நூறு பாட‌ல்க‌ள் ம‌ட்டுமே புற‌ம் சார்ந்த‌வை என்று ஜெய‌மோக‌ன் குறிப்பிட்டார். வான‌ம்பாடிக் க‌விதைக‌ள் ப‌ற்றியும் அவை புற‌க்க‌விதைக‌ள் என்றும் இந்த‌ இட‌த்தில் குறிப்பிட‌ப்ப‌ட்ட‌து.

தேவ‌தச்ச‌ன் அக‌ம் என்ப‌து உள்நோக்குப் பார்வை என்று தொட‌ங்கி நீண்ட‌ க‌ருத்தை முன்வைத்தார். ம‌ணிமேக‌லையில் அக‌ம் இல்லை என்ப‌தும், ந‌வீன‌ க‌விதையில் அக‌ம், புற‌ம் என்று பேச‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை என்ப‌தும், ஜென் தத்துவ‌ங்க‌ளை ச‌மூக‌ப்பார்வையில் வைப்ப‌து அது க‌விதையின் அடுத்த‌ ந‌க‌ர்வாக‌ இருக்கும் என்ப‌தும் அவ‌ர‌து பேச்சின் சாராம்ச‌ம்.

இந்த‌ அம‌ர்வு என‌க்கு சில‌ முக்கிய‌மான‌ க‌விதையிய‌ல் ப‌ர‌ப்புக‌ளை அடையாள‌ம் காட்டிய‌தாக‌ உண‌ரத் துவ‌ங்கினேன். வாசிக்க‌ப்ப‌ட்ட‌ சுகுமார‌னின் க‌விதைக‌ளில் ப‌ல‌ என் ம‌ன‌தில் ப‌திந்திருந்த‌ க‌விதைக‌ள்‌. இந்த‌க் க‌விதைக‌ள் மீதான ஆழ‌மான‌ விம‌ர்ச‌ன‌ப்பார்வைக‌ளும், விவாத‌ங்க‌ளும் க‌விதைக‌ள் மீதான என் ம‌திப்பீடுக‌ளை சுய‌ம‌திப்பீடு செய்து கொள்ள‌த் தூண்டின. இது கொந்த‌ளிப்பு சார்ந்த‌ ம‌னநிலையை உருவாக்கின‌. இந்த‌ ம‌ன‌ரீதியான‌ கொந்த‌ளிப்பு நீண்டு கொண்டிருந்த‌து.

இந்த‌ அம‌ர்வு முடிந்த‌ பிற‌கு நாராய‌ண‌ குருகுல‌த்தைச் சுற்றியுள்ள‌ ம‌லைப்ப‌குதிக‌ளில் ந‌ட‌ந்துவிட்டு அடுத்த‌ அம‌ர்வினைத் தொட‌ங்க‌லாம் என்று அறிவிக்க‌ப்பட்ட‌து. ஜெய‌மோக‌ன் முன்பாக‌ ந‌ட‌ந்து கொண்டிருந்தார். நான், யுவ‌ன், சுகுமார‌ன் ஆகியோரோடு இணைந்து கொண்டேன். ஓரிட‌த்தில் அனைவ‌ரும் இணைந்து அந்த‌ ம‌லையின் கீழிற‌ங்கி ந‌ட‌ந்து ஊட்டி மேட்டுப்பாளைய‌ம் தொட‌ரூர்தி பாதை வ‌ழியாக‌ குருகுல‌த்தை அடைவ‌தாக‌த் திட்ட‌ம். இந்த நடையின் போது பரவலான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். நான் எத்தனை இடங்களில் காதை நீட்ட இயலுமோ அத்தனை இடங்களிலும் நீட்டிக் கொண்டிருந்தேன்.

குருகுல‌த்தை அடையும் ச‌ம‌ய‌த்தில் க‌ம்பிவேலியைத் தாண்டிக் குதிக்கும் போது யுவ‌ன் கீழே விழுந்தார். இதை இங்கு பதிவு செய்ய‌ வேண்டிய‌தில்லைதான். ஆனாலும் தொட‌ர் க‌ட்டுரையில் அடுத்த‌ ப‌குதி வ‌ரும் வ‌ரை ஒரு ப‌ன்ச் வேண்டாமா. அத‌ற்காக‌த்தான்.

மணல் வீடு - சிற்றிதழ் அறிமுகம்

சிற்றித‌ழ்க‌ள் உருவாக்கும் விவாத‌ங்க‌ளும், அத‌ன் விளைவுக‌ளும் ப‌டைப்புக‌ளை அடுத்த‌ த‌ள‌த்துக்கு ந‌க‌ர்த்தும் முக்கிய‌மான‌ கார‌ணிக‌ளாக‌ இருக்கின்ற‌ன‌. தீவிர‌ இல‌க்கிய‌த்தில் சிற்றித‌ழ்க‌ள் த‌விர்க்க‌ இய‌லாத‌வை. படைப்பியக்கத்தில் வெகுச‌ன‌ இத‌ழ்க‌ளும், இடைநிலை இத‌ழ்க‌ளும் செய்ய‌த் த‌ய‌ங்கும் அல்ல‌து செய்ய‌விய‌லாத‌ எவ்வித‌மான‌ முய‌ற்சிக‌ளையும் சிற்றித‌ழால் செய்துவிட‌ முடியும்.

மணல்வீடு முதல் இதழ் வெளிவந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. இதழ் வந்தவுடன் சில கவிதைகளை வாசித்துவிட்டு பதினைந்து நாட்களுக்குப் பிறகாக ஹரிகிருஷ்ணின் "நாயி வாயிச்சீல" என்ற சிறுகதையை வாசித்தேன். அர‌வாணி த‌ன் வாழ்வில் ச‌ந்திக்கும் அவ‌ல‌ங்க‌ளை துல்லியமாக ப‌திவு செய்திருக்கும் முக்கிய‌மான‌ சிறுக‌தை.

தொட‌ர்ந்து ம‌ற்ற ப‌குதிக‌ளையும் வாசிக்கும் போது ஒரு முழுமையான‌ சிற்றித‌ழாக‌ முத‌ல் இத‌ழில் த‌ன்னை ம‌ண‌ல் வீடு நிலை நிறுத்திக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

குறிப்பிட‌த்த‌க்க‌ பரிசோத‌னை முய‌ற்சிக‌ளாக‌ ராச‌மைந்த‌னின் "தெல்ல‌வாரியின் நாட்குறிப்பிலிருந்து", ஆதிர‌னின் "என்றார் க‌ட‌வுள்" ஆகிய‌ன‌ அமைந்திருக்கின்ற‌ன‌.

இசை,இள‌ஞ்சேர‌ல்,சுப்ரபார‌தி ம‌ணிய‌ன், கூத்த‌லிங்க‌ம், த‌.ந‌.விசும்பு, பெருமாள் முருக‌ன், இன்பா சுப்பிர‌ம‌ணிய‌ன், ந‌ரன், இன்குலாப் மற்றும் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ஆகியோரின் க‌விதைக‌ள் இட‌ம் பெற்றிருக்கின்றன‌. ந‌ர‌னின் "எறும்புக‌ள் ப‌ற்றிய‌ சில குறிப்புகள்", இசை ம‌ற்றும் இள‌ஞ்சேர‌ல் ஆகியோரின் கவிதைகள் என‌க்குப் பிடித்திருந்த‌ன‌.

பா.மீனாட்சிசுந்த‌ர‌த்தின் வ‌ச‌ன‌க‌விதைக‌ள் குறிப்பிடப் பட வேண்டியவை.

பாமா, ம‌திக‌ண்ண‌ன், செல்வ‌புவியர‌ச‌ன் ஆகியோரின் சிறுக‌தைக‌ள், வே.மு.பொதிய‌வெற்ப‌ன்,ஆதிர‌ன்-வ‌சுமித்ர‌ ஆகியோரின் ப‌டைப்புக‌ள் இட‌ம் பெற்றிருக்கும் இவ்வித‌ழின் வாசிப்ப‌னுவ‌ம் சில‌ த‌ள‌ங்களை தொட்டு வ‌ருவ‌தாக‌ அமைகிற‌து.

த‌லைய‌ங்க‌த்தில்,சிற்றித‌ழ் ம‌னித‌ மேம்பாட்டிற்கான‌ செய‌ல்த‌ள‌ங்க‌ளில் த‌னக்குரிய‌ ப‌ங்க‌ளிப்பைச் செய்ய‌ த‌யாராக‌ இருக்க‌ வேண்டும் என்று எழுதியிருப்ப‌து க‌வ‌னிக்க‌த் த‌க்கது.

சிற்றித‌ழின் ப‌டைப்புக‌ள் அப்ப‌டி அமைந்திருக்க‌லாம், இப்ப‌டி அமைந்திருக்க‌லாம் என்று க‌ருத்து சொல்வ‌தைப் போன்ற‌ பைத்திய‌கார‌த்த‌ன‌ம் வேறொன்று இருக்க‌ முடியுமா என்று தெரிய‌வில்லை.

சிற்றித‌ழ் த‌ன் பாதையை தானே அமைத்துக் கொள்ளும் ஓடை. அது ஏற்புக‌ளையும், நிராக‌ரிப்புக‌ளையும் பெரும்பாலும் பொருட்ப‌டுத்துவ‌தில்லை. அத‌ன் போக்கில் விட்டுவிடுவ‌து ந‌ல‌ம். ம‌ண‌ல் வீடு த‌ன‌க்கான‌ பாதையை அமைத்துக் கொள்வ‌தில் எந்த‌ச் சிர‌ம‌மும் இருப்ப‌தாக‌த் தோன்ற‌வில்லை.

தொட‌ர்புக்கு:
மு.ஹ‌ரிகிருஷ்ண‌ன்,
தொலைபேசி: 098946 05371
மின்னஞ்சல்: manalveedu@gmail.com

Jun 5, 2008

எண்ணூற்று அறுப‌து டிகிரி புரோட்டா மாவும் மோரு ராம‌சாமியும்

சென்ற வாரம் ஒருநாள் பாண்டியிடம் இருந்து போன் வந்தது ,ஈரோடு ரயில்நிலையத்திற்கு வெளியிலிருக்கும் குஜலி தள்ளுவண்டிக் கடையில் எண்ணூற்று அறுபது டிகிரி புரோட்டா மாவு வைத்திருப்பதாக. "எண்ணூற்று அறுபது டிகிரியை பிரபலப் படுத்தும் வேலையெல்லாம் எப்படி இருக்கிறது ?" என்றும் கேட்டான் பாண்டி. எண்ணூற்று அறுபது டிகிரியை பிரபலப் படுத்துவதற்கு என்ன செய்யலாம் ; என்ன செய்ய வேண்டும் ? வள்ளியாம்பாளையத்திலிருந்து நடராசனும் அதையே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பாலப்பாளையம் ரோட்டோரக் கடையில் எண்ணூற்று அறுபது டிகிரியைப் பார்த்ததாகவும் , இரண்டு பொட்டலம் வாங்கிக் கொண்டு வளையபாளையம் செல்வதாகவும் சொன்னார் சுப்பிரமணி. சுப்பிணிக்கோ அவ‌ன் ம‌னைவிக்கோ ச‌ப்பாத்தி சுடுவ‌தே பெரும்பாடு. புரோட்டா மாவை என்ன‌ செய்வார்க‌ள் என்ற‌ குழ‌ப்ப‌ம் இருக்கிற‌து. இங்கே கரட்டடிபாளையத்தில் உள்ள மூக்குத்தி மளிகைக் கடை போன்ற பிரபலமான மளிகைக்கடை அனைத்திலும் எண்ணூற்று அறுபது டிகிரி கிடைக்கிறது. புஷ்டி இட்லிமாவு , ஆர்.எஸ்.நெய்பால் வெண்ணெய் போன்ற வஸ்துகளின் இடையே ' புதிய வரவுகள் ' என்ற பகுதியில் எண்ணூற்று அறுபது டிகிரியை வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்த போது எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. மாவு ஐட்டங்களில் இட்லி மாவு முதல் ரவாதோசை , பருப்பு தோசை வரை அநேகமாக எல்லா மாவுமே பொட்டலம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதுவுமே ஈரோடு மாவட்ட‌ எல்லையை விட்டே தாண்டவில்லை.

ஈரோடு மாவட்டத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டு வருவதற்கு ஏன் பொட்டலம் செய்யப்பட வேண்டும்? இதில் பல பிரச்சினைகள் உள்ளன. முதலில் , அரைப்பதில் குறைபாடு. இல்லாவிட்டால் மாவுக்கான மூலப்பொருளே மூன்றாந்தரமாக இருக்கும். இது இரண்டுமே சரியாக இருந்தால் பொட்டலம் கட்டும் தாள் படு சாதாரணமாக இருக்கும். வெறுமனே பொட்டலத்தில் வந்து விட்டால் போதுமா ? அதை தமிழ்நாடு முழுவதும் - குறைந்த பட்சம் அவிநாசி , பரமத்தி வேலூர் புரோட்டாக்கடைகள் வட்டத்தில் அதை எப்படிக் கொண்டு சேர்ப்பது ? ஆர்.எஸ். நெய்ப்பாலுக்கு இணைதான் நம்முடைய அசோகா தோசை மாவு. ஆனால் அது கூட ஈரோட்டு எல்லையைத் தாண்டவில்லையே ?

ஆட்டாங்கல்லில் அரைத்தாலும், கிரைண்டரில் அரைத்தாலும் மாவு மாவுதான். எனவே மூக்குத்தி கடையில் புஷ்டி இட்லிமாவு , ஆர்.எஸ்.நெய்பால் வெண்ணெயோடும் எண்ணூற்று அறுபது டிகிரியைப் பார்த்த போது விசேஷமாக ஒன்றும் தோன்றவில்லை. மாறாக , அசோகா தோசை மாவும், நகு நகு ரவா மிக்ஸும் ஏன் அங்கு இல்லை என்ற விசனமே எனக்குள் ஏற்பட்டது.

இப்போது எண்ணூற்று அறுபது டிகிரியை சென்னைக்குக் கொண்டு சேர்க்க என்ன செய்யலாம் ? சரவணா ஸ்டோர்ஸ்க்கு இந்த பொட்டலத்தை அறிமுகப் படுத்தலாம். சரவணாவுக்கு தினசரி 100 பொட்டலங்கள் வந்து கொண்டிருக்கும். இதில் அவர்கள் புரோட்டா என்று கண்டதுமே பொட்டலத்தை எடுத்து ஓரத்தில் வைத்து விடுவார்கள். காரணம் ? புரோட்டா செய்வது எப்படி என வாடிக்கையாளர்களுக்கு விரிவாக விளக்க‌ வேண்டும்.

இங்கே குருமா புரோட்டா கலாச்சாரத்தைக் காப்போம் என்று சத்தம் போடுகிறவர்கள் வெறுமனே குருமாவை மட்டும் மணக்க வைத்தால் விட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். புரோட்டா நன்றாக இல்லாமல் குருமா எப்படி வளரும் ? இலக்கம்பட்டி பிரசிடெண்ட் நாராயணசாமி எல்லோராலும் கொண்டாடப் படுபவர். ஆனால் அவருக்குப் பிடித்த உணவு இட்லி சாம்பார். பிடித்த குழம்பு மீன் குழம்பு. பிடித்த ஊறுகாய் மாங்காயாக இருக்கலாம். இந்த ரீதியில்தான் கரட்டடிபாளையம் சமூகத்தின் சாப்பாட்டுத் தளத்தில் இயங்குபவர்கள் அத்தனை பேரும் இருக்கிறார்கள். ஒரு பால்வாடியின் டீச்சரை எடுத்துக் கொள்வோம்(இடுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டாம்). அவருக்குத் தெரிந்த சமையல்காரர்கள் நொண்டிக்கால் நாய்க்கார், சேட்டு. அதிக பட்சம் போனால் தொட்டிபாளையம் ராசு என்று சொல்லலாம். சமகால சமையலில் யாரைப் பிடிக்கும் என்று கேட்டால் அய்யங்கார் , கள்ளிப்பட்டி மணி என்பார். இப்படி இருந்தால் குருமா புரோட்டா கலாச்சாரம் எப்படி வளரும் ? சரவணாக்காரர்கள் எப்படி ஈரோடு மாவட்டத்திலிருந்து பொட்டலம் செய்யப்பட்ட பொட்டலத்தை எடுத்துப் பார்ப்பார்கள் ?

கொண்டலாம்பட்டியில் வசிக்கும் புலம் பெயர்ந்த வட ஆம்பூர் சமையல்காரர்கள் அனைவரும் - குறித்துக் கொள்ளுங்கள் , அனைவரும் ‍சேலத்து புரோட்டாக் கடைகளாலும் , சாப்பாட்டுச் சூழலாலும் மிகப் பெரும் அளவில் கவனிக்கப்படுகிறார்கள். 'அவர்களுக்கெல்லாம் புரோட்டா இரண்டாவது உணவாயிற்றே ?' என்று பதுங்கக் கூடாது.சேலத்தில் வாழும் சாப்பாட்டுப் பிரியர்களுக்கு கொத்துபுரோட்டாத்தானே பொது உணவு? அவிநாசியில் வாழும் கரட்டடிபாளையத்துக்காரர்கள் கொண்டலாம்பட்டியில் வாழும் புலம் பெயர்ந்த வட ஆம்பூர்காரர்களை விட பல நூறு மடங்கு வசதியான நிலையில் இருப்பவர்கள்தானே ? அந்தப் புலம் பெயர்ந்த வட ஆம்பூர்காரர்க‌ளுக்கு புரோட்டா எப்படியோ அப்படித்தானே அவிநாசியில் வாழும் கரட்டடிபாளையத்தார்களுக்கு இறால் குழம்பு? ஆனால் சாதித்தது என்ன ? பொங்கலும் தீபாவளியும் கொண்டாடுவார்கள்...இட்லி சாம்பாரோடு அதுதான் அந்த ஊர்க்காரர்களின் சாதனை.

கொண்டலாம்பட்டியில் உள்ள மளிகைக்கடையில் கடையில் க்யூவில் நின்று ஆச்சி சாம்பார் பொடியை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள் ; ருசி ஊறுகாயை நாக்கில் நக்குகிறார்கள் பார்க்கிறார்கள். இப்படிப் பட்ட அவல நிலையில் அந்நியர்கள் புரோட்டாக் குருமா கலாச்சாரத்தையும் புரோட்டாவையும் எப்படி மதிப்பார்கள் ? ஆனால் அதே கொண்டலாம்பட்டியில் நகரில் வையப்பமலையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் சமையல்காரர்ர் அரைக்கால்டிரவுசர் சண்முகம் அந்த ஊரின் மிக உயர்ந்த சமையல்காரர்கள் சங்கத்ததின் தலைவராக ஆகியிருக்கிறார். விரைவில் இவர் அறுசுவை அரசு ப‌ரிசோ , சாம்யல் சாக்ராவர்ட் விருதோ பெறுவார் என்பது என் யூகம்.

கும்தலக்கடி என்ற மசால் பொடி வேமாண்டம்பாளையத்திலிருந்து வருகிறது. வே.பாளையத்தில் புலம் பெயர்ந்து வாழும் வட ஆம்பூர்காரர்கள் தயாரிக்கும் மசால் பொடி. அந்த பொடியின் வாயிலாக நம்பியூர் சமூகம் முழுமைக்கும் வட ஆம்பூர்க்காரர்கள் தங்கள் திறமையை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்பொடியின் தீவிர அபிமானி நான். வே.பாளையத்திலிருந்து யார் வந்தாலும் எனக்காக இந்தப் பொடியின் பாக்கெட்களை வாங்கி வரச் சொல்லுவேன். இப்படி என் நண்பர் ஒருவர் கும்தலக்கடி அலுவலகத்துக்குச் சென்று பழைய பொடி பாக்கெட்களைக் கேட்ட போது அவருடைய தோற்றத்தை வைத்து அவர் கரட்டடிபாளையத்துக்காரர் என்று புரிந்து கொண்ட கும்தலக்கடியின் உரிமையாளர் "இந்தப் பாக்கெட்களெல்லாம் மோரு ராமசாமிக்குத்தானே?" என்று கேட்டாராம்.

என்னுடைய நண்பர் அதிர்ச்சியாகி "எப்படி இவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள் ?" என்று கேட்க , " அவருக்காகத்தான் இப்படி பழைய பாக்கெட்களை அவருடைய சில நண்பர்கள் வாங்கிச் செல்கிறார்கள்" என்று பதில் சொன்னாராம். கேட்பதற்கே உண்மையில் எனக்கு சந்தோஷமாக இருந்தது. (இந்த‌ இட‌த்தை எழுதும் போது என‌க்கு இத‌ய‌த்தில் ஒரு குட்டி டைம்பாம் வெடிக்கிற‌து)

தமிழகம் முழுவதும் புரோட்டாப் பிரியர்கள் பரவிக் கிடக்கிறார்கள். இந்த அளவுக்கு தமிழகம் முழுமையும் பரவிய ஒரு இனம் வேறு எதுவும் இருக்காது என்பது என் அனுமானம். தமிழகம் முழுவதும் எல்லா ஹோட்டல்களிலும் புரோட்டா மாஸ்டர்கள். தமிழகத்தின் மிக முக்கியமான புரோட்டா ஆய்வாளரான காசிபாளையம் கருப்பாயி கொத்துபுரோட்டா பிரியர். ஆனால் இதனாலெல்லாம் புரோட்டா கலாச்சாரத்துக்கோ ,நாட்டுக்கோழி குருமாவுக்கோ ஒரு பயனும் இல்லை. காரணம் , இவர்கள் யாருக்கும் புரோட்டாவின் சம கால ருசி பற்றி எதுவும் தெரியாது.

இத்தகைய விரோதமான ஒரு கலாச்சாரப் பின்னணியில் எண்ணூற்று அறுபது டிகிரியை எப்படி சரவணாவுக்கும் , சென்னைக்கும் கொண்டு சேர்ப்பது ? சரவணாவில் பொட்டலத்திலிருந்த்து கொஞ்சம் மாவு எடுத்து சில புரோட்டாவை செய்வார்கள். அப்படி புரோட்டா செய்து விட்டால் போதும். அதோடு எண்ணூற்று அறுபது டிகிரியை பிரபலப் படுத்தும் வேலையை நாம் நிறுத்தி விடலாம். சரவணா புரோட்டாக்களைத் தின்ற ராமாயக்கா கூறினார் , அதில் இருக்கும் அநேகம் ருசியைவிட விட எண்ணூற்று அறுபது டிகிரி பிரமாதமாக இருக்கிறதே என்று.

அதைத்தான் நான் ஒரு பத்து ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். எனவே , சரவணாவோடு ஒரு சென்னைக்காரர் மூலமாகத் தொடர்பு கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஏஜெண்ட் மூலமாக‌ அனுப்பினால் குப்பைக்குச் சென்று விடும். ஆக , உங்கள் கையில் எண்ணூற்று அறுபது டிகிரி ஒரு ஐந்து பொட்டலங்களாவது தேவை. "அனுப்பி வைக்கட்டுமா ?" என்று ராமாயக்காவிடம் கேட்டேன். திரும்பவும் அந்த கோமதிநாயஹம் கதைதான். என் நண்பர்கள் எல்லோரும் என்னுடைய நலம் விரும்பிகள். ஒரு பொட்ட்லமே போதும் என்று சொல்லி விட்டார் ராமாயக்கா. அந்த ஒரு பிரதியையே அரிசிமாவோடு கலந்து எடுத்து எல்லா இடங்களுக்கும் அனுப்பி வைப்பார் போலும். "ம்...உங்கள் தலை...நானே செய்து கொள்வேன் கொள்வேன்" என்றார். ம் , அதுவும் சரிதான்.

கொஞ்சம் சீரியஸாக யோசியுங்கள் , என்ன செய்யலாம் என்று...

Disc: இந்த‌க் க‌ட்டுரைக்கும் இந்த‌க் க‌ட்டுரைக்கும் எந்த‌ச் ச‌ம்ப‌ந்த‌முமில்லை. என்னை ந‌ம்புங்க‌ள் ப்ளீஸ்

May 30, 2008

இரண்டு கவிதைகள்


1) வெயிலின் கிளைக‌ளை ஓவிய‌மாக்குப‌வ‌ள்

ஆண்க‌ளால் நிர‌ம்பியிருக்கும்
பேருந்தில் ஏறியவள்
வெறித்து
கணங்களைக் கடத்தினாள்.

இர‌வின் ப‌க்க‌ங்க‌ளில் எழுதிய‌ க‌தைகளில்
மழைத்துளியின் க‌ன்ன‌ங்க‌ளில் வ‌ரைந்த‌ ஓவியங்களில்
காற்றின் இடைவெளிக‌ளில் நிர‌ப்பிய‌ க‌விதைகளில் -
நினைவுப் பந்தலிட்டு
வ‌சிக்கத் துவங்கிய
அவ‌ளுக்கும்
என‌க்குமிடையில்
நீ
வருகையில்

சொல்ல‌த்துவ‌ங்கினாள்
தான்
வெயிலின் கிளைக‌ளை
ஓவிய‌மாக்குப‌வ‌ள் என்று.

நன்றி: நெய்தல்
------
2) க‌விதையைக் கைவிடுத‌ல்

ம‌ர‌ண‌த்தின் க‌விஞ‌ன்
இரவின் பேரமைதியில்
கவிதை எழுதத் துவங்கினான்.

வேசி
மதுக்குப்பி
சிகரெட் துண்டு
கண்ணாடி மீன்கள்
சொற்களாகின.

முடிவுறாத வரிகளின்
விரல் பிடித்து நடந்தவன்
பெரும் வ‌ன‌த்தின்
இருளில்
க‌விதையைக் கைவிடுகிறான்.

அவ‌ன்-
திக்க‌ற்ற‌ பர‌ப்பில்
க‌விதையின்
துக்கத்தை நினைக்கையில்
பதட்டம் க‌விகிறது‍.

ந‌ட்ச‌த்திரவொளியில்
ந‌டுங்கும்
மயான‌மொன்றின் ப‌த‌ட்டம்.

நன்றி: வார்த்தை, மே'2008
---
ஓவியம்: ராஜன் புதியேடம்

May 29, 2008

ஆர்குட் பூதம்

ஆர்குட். கூகிள் நிறுவனம் நடத்தும் வலைதளத்தின் பெயர் இது. இணையத்தை உபயோகப்படுத்தும் இளைய தலைமுறையினரில் இந்த இணையத்தளத்தில் உறுப்பினராக இல்லாதவரை பார்ப்பது என்பது புற்று வளரும் அளவிற்கு தவம் செய்து சிவ பெருமானை தரிசிப்பதற்குச் சமம்.

இந்த‌த் தளத்தின் பயனாளர் தன்னைப் பற்றி சில குறிப்புகள், புகைப்படம் ஆகியவற்றை தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள பக்கத்தில் வைத்துக் கொள்வார். இவற்றை மற்ற யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். மற்றவரின் பக்கத்தைப் பார்த்து ஏதாவது ஒரு அம்சத்தில் கவரப்பட்டு அவரோடு நட்பு வளர்க்கலாம் என்று தோன்றினால், அவரின் பகுதிக்கு சென்று "ஹாய்" ,"நீங்கதான் அவரா?", "நாம் இருவரும் நண்பராக இருக்கலாமா?" என்று ஏதாவது ஒரு வாக்கியத்தில் ஆரம்பிப்பார்கள். இப்படி எழுதுவதற்கு 'ஸ்க்ரேப்' என்று பெயர்.

தனக்கு வந்திருக்கும் அந்தச் செய்தியை படித்த நபர், செய்தி கொடுத்தவரின் பக்கத்திற்கு வந்து அவரின் புகைப்படம், அவரைப்பற்றிய செய்திகளைப் பார்ப்பார். அவருக்கும் பிடித்துவிட்டால் அடுத்த சில நாட்கள் அல்லது மணிகளில் இருவரும் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். இது பெரும்பாலும் பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் நட்பளவிற்கு இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவரின் பகுதியில் அவர் எதாவது எழுதுவது அவரின் பக்கத்தைத் திறந்து இவர் எழுதுவது என்று தொடரும். 'ஸ்க்ரேப்' செய்யாத நாட்களில் இருவருக்கும் மண்டையே பிளந்துவிடலாம்.

இந்த இணையத்தளத்தில் குழுமங்களும் இருக்கின்றன. குழுமங்கள் என்பது யாராவது ஒருவர், ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி குழுமத்தை தொடங்குவார். உதாரணமாக "ரஜினி காந்த்". ரஜினியின் புகைப்படங்களை வைத்து அவரைப் சில குறிப்புகளையும் குழுமத்தை ஆரம்பிப்பவர் போட்டு வைப்பார். இக்குழுமம் கண்ணில்படும் யாராவது ரஜினி மீது ஈர்ப்பு உடையவராக இருந்தால் குழுமத்தில் இணைந்து விடுவார். முதலில் கொஞ்ச நாட்கள் அவரும் ரஜினி பற்றிதான் குழுமத்தில் பேசுவார். இணையாகவே அக்குழுமத்தில் உள்ள வேறொருவரின் பக்கத்தில் சென்று "அய்..நீங்களும் ரஜினி ரசிகரா? நானும்தான்" என்று ஆரம்பிப்பார். இப்படியாக புதிதாக சில ஆட்களின் நட்பு கிடைத்தவுடன் குழுமத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் அல்லது அவ்வப்போது எதையாவது எழுதலாம்.

இப்படியான குழுமங்கள் தென் அமெரிக்க எழுத்தாளர் மார்க்வெஸ் தொடங்கி நடிகை மும்தாஜ் வரைக்கும் இருக்கின்றன. மாடர்னிசம் தொடங்கி சைக்கோத்தனம் என்னும் வரை நீள்கிறது.

நல்ல விஷயம்தானே. நட்பு வட்டம் பெரிதாகிறது. சில பொதுவான விஷயங்களை விவாதிக்க முடிகிறது. இப்படி எல்லாம் நீங்கள் நினைத்தால் "ரொம்ப நல்லவராக" இருக்கிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். இத்தகைய தளங்களுக்கு 'கம்யூனிட்டி' தளங்கள் என்று பெயர். ஆர்குட் தவிர்த்து எண்ணற்ற கம்யூனிட்டி தளங்கள் செயல்படுகின்றன. இந்தியாவில் இணையத்தை உபயோகப்படுத்துபவர்கள் பெரும்பான்மையான நேரம் 'கம்யூனிட்டி' தளங்களில் செலவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சைபர் உலகத்தில் கீபோர்ட் மூலமாக உருவாக்கப்படும் சொற்களால் எதை வேண்டுமானாலும் செய்ய முயல்கிறார்கள். தான் டைப் செய்யும் எழுத்துக்களை நூலாக பிடித்து அடுத்தவரின் இதயத்தை நெருங்கிவிடுவதான பாவனைதான். மற்றபடி சைபர் உறவுகள் உடைந்து போவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஒரு உறவு உடைந்து போகும் பட்சத்தில் சில நாட்களின் மெளனத்திற்குப் பிறகு அல்லது உடனடியாக இன்னொரு அந்தரங்கமான உறவை பெற்றுவிட முடிகிறது.

தொண்ணூறு சதவிகிதம் ஆட்கள் எதிர்பாலின நட்பைத் தேடித்தான் உறுப்பினராக இருக்கிறார்கள் என்று என் நண்பன் சொல்கிறான். இன்னொரு செய்தியும் அவன் சொன்னதை கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒரு சைபர் உறவை ஒருவன்/ஒருத்தி உடைப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் போதே அவருக்கு வேறொரு விருப்பமான உறவு, தற்போதைய உறவை விட கவர்ச்சியான உறவு அமைந்துவிட்டதாகவும் சொல்கிறான் அல்லது ஒரே சமயத்தில் பல்வேறு தளங்களில் வெவ்வேறு உறவுகளை ஒருவர் பராமரிப்பதும், ஒரு உறவு குறித்தான தகவல்களை மற்ற உறவுகளுக்குத் தெரியாமல் வைத்திருப்பதும் நடக்கிறது என்கிறான். அவசியம் ஏற்பட்டு வேறொருவரோடான தன் சைபர் உறவு பற்றி மற்றவரிடம் பேசும் போது மேலோட்டமாக மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறார்கள்.

சில நண்பர்கள் ஆர்குட்டினை திறக்க முடியாத நாட்களை கை உடைந்தவர்கள் போல உணர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதையாவது யோசிக்க வேண்டும், அதை யாருடைய பக்கத்திலாவது எழுதிக் கொண்டிருக்க வேண்டும். இதனை ஒரு வித போதை என்று சொல்கிறார்கள்.

பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆர்குட்டை தடை செய்து வைத்திருக்கின்றன. ஆனால் பிராக்ஸி என்றொரு ஆயுதம் இருக்கிறது அதை வைத்து உள்நுழைந்து விடலாம். தடை செய்ய வேண்டும் என்று நினைத்து ஒரு குறிப்பிட்ட தளத்தை மட்டும் தடை செய்தல் என்பது இன்றைய சூழலில் முடியாத காரியம். ஆர்குட் அல்லது அதனையொத்த வேறு தளங்களால் உலகம் முழுவதும் நடக்கும் குற்றங்களில் சாம்பிளுக்கு ஒன்று மட்டும் இங்கே.

கெளசாம்பி, சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி கம்பெனியின் மும்பை கிளையில் பணிபுரிந்து கொண்டிருக்கையில் அவருக்கு ஆர்குட் அறிமுகமாகிறது. ஆர்குட்டோடு சேர்ந்து 28 வயதான மணீஷ் தாக்கூரும் அறிமுகமாகிறார்.

மணீஷை பற்றி கெளசாம்பியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் "விளையாட்டுத்தனமான, உண்மையாகவே கவனித்துக் கொள்கிற தனமையுள்ள அன்பாளன்...விளையாட்டாகட்டும், இசையாகட்டும்,படிப்பாகட்டும் அவன் ஆல்ரவுண்டர்". மணீஷின் ஆர்குட் பக்கத்தில் அவரைப் பற்றி கெளசாம்பி எழுதி வைத்திருக்கும் வாசகங்கள்தான் மேலே சொன்னது.

"நீங்கள் என்னோடு பழகும் போது சுவாரசியமாக உணர்வீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள். நல்ல நண்பர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி. நன்றி" மணீஷ் தன்னைப் பற்றி தன் பக்கத்தில் எழுதி வைத்துக் கொண்ட வாசகங்கள் இவை.

கெளசாம்பி, மணீஷ் இருவரும் ஆர்குட் மூலமாக பழகிய பின்னர், தொலைபேசி மூலமாகவும், சாட்டிங் மூலமாகவும் உறவை வளர்த்திருக்கிறார்கள். உறவின் உச்சகட்டமாக மும்பையின் ஒரு வசதியான் விடுதியில் அறை எடுத்திருக்கிறார்கள். பின்னர் என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யூகித்திருப்பீர்கள். நீங்கள் யூகித்த்தும் சரிதான். மர்மக் கதைகளில் வருவது போல விடுதிப் பணியாளர் காலையில் கதவைத் தட்டியிருக்கிறார். நீண்ட நேரம் தட்டியும் யாரும் திறக்காததால் கதவை உடைத்திருக்கிறார்கள். கழுத்திலும், தலையிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கெளசாம்பி இறந்து கிடந்திருக்கிறார்.

விசாரணையில் இருவரும் இதற்கு முன்னதாகவே மும்பையில் வேறு சில ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. காணாமல் போய்விட்ட மணீஷ்க்கு காவல்துறையினர் வலை விரித்திருக்கிறார்கள். மற்ற லாட்ஜ் கொலைகளில் இருந்து எந்த விதத்திலும் பெரிய வேறுபாடில்லாத இந்த சம்பவத்தின் முக்கியமான அம்சமே இருவருக்குமிடையிலான அறிமுகம் எப்படி ஏற்பட்டது என்பதுதான்.

இந்தக் கட்டுரையின் நோக்கம், ஆர்குட் என்பது தவறான இணையதளம் என்பதைக் குறிப்பிடுவதற்காக இல்லை. எந்தத் தொழில்நுட்பத்தையும் தவறாக பயன்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதனை சுட்டிக்காட்டுவதாகும்.

இன்டர்நெட் உலகத்தில் இரண்டு அறிமுகமற்ற மனிதர்கள் சந்தித்து எந்த விதமான உறவும் நிலைபெற்று அவர்களின் முடிவு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள்ளாக‌ கொலை வரைக்கும் சாத்தியம் என்பது பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட நினைத்து பார்த்திருக்க முடியாத விஷயம்.

ஒரு இணையதளம் மட்டுமே இருவருக்குமிடையிலான பாலமாகியிருக்கிறது. இருவரும் சொற்களை கீபோர்டில் தட்டி தட்டி நெருக்கமாகியிருக்கிறார்கள். இரண்டு மாத காலம் ஒன்றாக வேறு விடுதிகளிலும் தங்கியிருக்கிறார்கள். அறுபது நாட்களில் எல்லாம் முடிந்து உறவு முடிந்து ஆயுளும் முடிகிறது. எஸ் எம் எஸ்ஸின் அளவுதான் வாழ்க்கையும் என்பதும் நம் தலைமுறைக்கு சாத்தியப்பட்டிருக்கிறது.
--------

அந்திமழை.காம் தளத்தில் வெளிவரும் விரல்நுனி விபரீதம் தொடரின் ஏழாம் அத்தியாயம்.

May 28, 2008

ஒரு கவிதை - ஒரு சொல்

(1)
ஒரு கவிதை உதிரும் தருணத்தை வேறு எதனுடனும் ஒப்பிட முடியும் என்று தோன்றவில்லை. எந்தக் கவிதையும் தந்துவிட முடியாத ஒரு பரவச கணத்தை ஒருவனுக்கு அதிகாலை தெரு வெளிச்சம் தந்துவிடலாம் அல்லது வாழ்நாள் முழுவது தேடியலைந்த, சிலிர்ப்பூட்டக் கூடிய கணத்தை கவிதையின் ஒற்றை வரியோ அல்லது கவிதை வரிகளினூடாக ஒளிந்து கிடக்கும் மெளனமோ தந்துவிடலாம். கவிதையின் சூட்சுமம் இதில்தான் இருக்கிறது. இந்த சூட்சுமத்தை அவிழ்த்துவிடவே ஒவ்வொரு கவிதையும் முயன்று கொண்டிருப்பதாக எனக்குப் படும்.

க‌விதையில் இட‌ம்பெறாத‌ ஒவ்வொரு சொல்லும், இட‌ம் பெற்ற‌ சொற்க‌ளைக் காட்டிலும் முக்கிய‌மான‌வை. அவை க‌விதையில் ஏற்ப‌டுத்தும் வெற்றிட‌த்தில் - மெள‌ன‌த்தில் வாச‌க‌ன் த‌ன் ஆயாச‌த்தோடு ஓய்வெடுக்கிறான். த‌ன் எண்ண‌ங்க‌ளை அலைய‌விட்டு க‌விதைக்கான‌ வ‌ர்ணங்க‌ளைக் க‌ண்ட‌டைகிறான். இந்த வெற்றிட‌மும் மெள‌ன‌மும் க‌விதையில் உண்டாக்கும் ச‌ல‌ன‌மின்மையை, மெல்ல‌க் க‌ளைத்துவிடும் ப‌ணியை த‌ன் சொற்க‌ளின் மூல‌ம் க‌விஞ‌ன் மேற்கொள்கிறான். இந்த‌ச் ச‌ல‌ன‌மும், மெள‌ன‌முமே க‌விதையை உள்வாங்கும் வாச‌க‌னை அதிர்வுற‌வோ, ஆர‌வாரிக்க‌வோ, ஆன‌ந்த‌ம‌டைய‌வோ அல்ல‌து க‌ண்ணீர் க‌சிய‌வோ செய்கின்ற‌ன‌.

க‌விதையில் உண்டாகும்‌ ச‌ல‌னமின்மை, ச‌ல‌ன‌ம், மெள‌ன‌ம் என்ற‌ த‌ன்மைக‌ளின் க‌ல‌வையில் க‌விதை த‌ன‌க்கான‌ இட‌த்தை தானே பெற்றுக் கொள்கிற‌து.

(2)
க‌விதையில் சொற்க‌ளை தேர்ந்தெடுப்ப‌த‌ற்கு க‌விஞ‌ன் பெரும் பிர‌ய‌த்த‌ன‌ப் ப‌ட‌ வேண்டியிருக்கிற‌து. க‌விதையை ப‌டைத்த‌வ‌னின் எண்ண‌த்திற்கு முற்றிலும் முர‌ணான‌ ஒருவ‌ன் வாசிக்கும் போது், அந்த‌க் க‌விதையை முற்றாக‌ வேறொரு த‌ள‌த்தில், வேறொரு அர்த்த‌த்தில் அவனால் புரிந்து கொள்ள‌ முடியும். இது பெரும்பாலும் உரைந‌டையில் சாத்திய‌மில்லாத‌ அம்ச‌ம்.

இந்த‌ மாற்று த‌ள‌ம், மாற்றுப் பொருளை உருவாக்குவ‌த‌ற்கான‌ பொறுப்பு ப‌டைப்பாளியிட‌ம் இருக்கிற‌து.சொற்க‌ளைத் தேர்ந்தெடுப்ப‌திலும், க‌விதையில் அந்தச் சொற்களுக்கான‌ இட‌த்தை அளிப்ப‌திலும், சொற்க‌ளை வெட்டும் நுட்ப‌த்திலும் இந்தப்‌ பொறுப்பினை க‌விஞ‌ன் நிறைவேற்றுகிறான்.

க‌விதை(இந்த‌ச் சொல் போகிற‌ போக்கில் எழுத‌ப்ப‌ட்ட நிலாவினை பிடிக்கும் அல்ல‌து க‌ன்ன‌த்தை ம‌துக் கிண்ண‌த்தோடு ஒப்பிடும் சொற்கூட்ட‌ங்க‌ளை குறிப்பிட‌வில்லை என‌க் கொள்க‌.) த‌ன் சொற்க‌ளின் க‌ட்ட‌மைப்பின் கார‌ண‌மாக‌ இசைத் த‌ன்மையை உருவாக்குவ‌தாக‌, காட்சியொன்றை வெளிப்ப‌டுத்துவ‌தாக‌ அல்ல‌து க‌தையின் புனைவோடு அமைவ‌தாக‌ என‌ எப்ப‌டியும் வ‌டிவ‌ம் பெற‌லாம்.

க‌விதைக்கான‌ சொற்தேட‌லில் க‌விஞ‌ன் மிகுந்த‌ பொறுப்புண‌ர்ச்சியோடு செய‌ல்ப‌ட‌ வேண்டுமென்பேன். இங்கு க‌விதையை க‌விதையாக‌ வாசிப்ப‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை சொற்ப‌ம். இந்த‌க் கூற்றினை நான் புகாராக‌ ப‌திவு செய்ய‌வில்லை.

இந்த சொற்ப எண்ணிக்கையில் உள்ளவர்களில் க‌விஞ‌னை விட‌ க‌விதையை உக்கிர‌மான‌ பார்வையில் வாசிப்ப‌வ‌ன் உண்டு. அந்த வாசகனின் அறிவு, க‌விதைக்குள்ளான‌ க‌விஞ‌னின் அறிவை விட‌ அதிக‌ம். மூன்று மாத‌மாக‌ க‌விதையை உருவாக்க‌ செல‌வான‌ ப‌டைப்ப‌வ‌னின் உழைப்பை நிராக‌ரிக்க‌ அவ‌னுக்கு ஒரு சொல்லினை க‌ட‌ப்ப‌த‌ற்கான‌ நேர‌ம் ம‌ட்டுமே தேவைப்ப‌டுகிறது.

அந்த‌ வாச‌க‌னை க‌விதைக்குள்ளாக‌ கொண்டு வ‌ருவ‌தும் அவ‌னை க‌விதை ப‌ற்றி பேச‌ச் செய்வ‌தும் க‌விஞ‌ன‌து க‌ட‌மை.

சொற்தேர்வின் நுட்ப‌த்தோடுதான் க‌விதை எழுத‌ வேண்டும் என்ப‌தை வ‌லியுறுத்த‌ நான் வ‌ர‌வில்லை. ஆனால் க‌விதையின் அம‌ர‌த்துவ‌ம் சொற்க‌ளின் ப‌ய‌ன்பாட்டிலும் இருக்கிற‌து.

(3)

ந‌குல‌ன் ப‌ற்றிய‌ நாலு க‌விதைக‌ள் 'புதிய‌ பார்வை'யில் வாசிக்கும் போது நான்காவ‌து க‌விதையில் க‌விஞ‌ரின் சொற்பிர‌யோக‌ம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய‌து.

வ‌லி என்றாள் சுசிலா
திரும்ப‌ மெள‌னித்து
த‌ன் போர்வைக்குள்
அட‌ங்கினார் ந‌குல‌ன்

சுசிலாவின் ம‌றுநாள் ம‌ர‌ண‌த்தில்
அழுக‌ ம‌றுத்து
சாப்பிட‌ச் சென்றார்.

இந்த‌க் க‌விதையில் 'அழுக‌' என்ற‌ சொல்லினை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் என்ன‌ நேர்ந்த‌து? 'அழுக‌' என்ப‌து 'அழுகிப் போத‌ல்' என்ற‌ பொருளில் வ‌ர‌லாம். ஆனால் ந‌குல‌ன் காய்க‌றியா என்று தெரிய‌வில்லை.

'அழுவ‌த‌ற்கும்', 'அழுகுவ‌த‌ற்கும்' உள்ள‌ பெரும் வித்தியாச‌த்தின் நுணுக்க‌மில்லாத‌ க‌விதையொன்று வாசகனுக்கு அதிர்ச்சியை உண்டாக்குவ‌தில் விய‌ப்பில்லை.

வாய்மொழி வ‌ழக்கில் உள்ள‌ சொற்க‌ளை க‌விதைக்குள் கொண்டு வ‌ரும் போது க‌விஞ‌ன் கைக்கொள்ள‌ வேண்டிய‌ எச்ச‌ரிக்கையுண‌ர்வுக்கு இக்க‌விதை உதார‌ண‌மாகிற‌து.

நாஞ்சில் நாட‌ன் அவ‌ர்க‌ள் த‌மிழில் க‌விதையை அடுத்த‌ த‌லைமுறைக்கு கொண்டு செல்ல‌விய‌லும் என்ப‌தில் த‌ன‌க்கு பெரும் ச‌ந்தேக‌மிருப்ப‌தாக‌ச் சொன்னார். அத‌ற்கு அவ‌ர‌து கார‌ண‌ங்க‌ளில் பிர‌தான‌மான‌து த‌ற்கால‌க் க‌விஞ‌ர்க‌ள் மொழி மீது ஆளுமை இல்லாம‌ல் இருப்ப‌து. இதை ஏற்றுக் கொள்ள‌ வேண்டித்தானிருக்கிற‌து.

வெறும் இருநூற்றைம்ப‌து சொற்க‌ளைத் திரும்ப‌ திரும்ப‌ ப‌ய‌ன்ப‌டுத்தி க‌விதைக‌ளை வ‌டிவ‌மைப்ப‌தும், சொற்க‌ளின் பிர‌யோக‌த்தில் பெரும் ப‌ல‌வீன‌ர்க‌ளாக‌ இருப்ப‌தும் அடுத்த‌ த‌லைமுறை த‌மிழ்க் க‌விஞ‌ர்க‌ளின் குறைபாடு.

இந்த‌க் குறைபாடுக‌ள் உள்ள‌வ‌ர்க‌ள் க‌விதையை த‌ன்னோடு வைத்திருப்ப‌தும், கொஞ்ச‌ நாட்க‌ளாவ‌து வாசிப்புட‌ன் நிறுத்திக் கொள்வதும் ந‌ல்ல‌து.

இதை என‌க்கும் சேர்த்துச் சொல்கிறேன்.

May 12, 2008

நித்யா க‌விதை அர‌ங்கு : க‌.மோக‌ன‌ர‌ங்க‌ன் க‌விதைக‌ள்

1) பாற்கடல்

விதிக்கப்பட்டதற்கும்
கூடுதலாக ஒரு
நாழிகைக்கும் ஆசைப்படவில்லை.
மெய்யாகவே,
தாக மேலீட்டினால் தான்
அதுவும் கூட‌
ஒரு மிடறுதான் இருக்கும்
பதைத்து நீண்ட உன்
மெலிந்த கைகள்
நெறித்து நிறுத்த‌
விக்கித்துப் போனேன்
அறையின் நடுவே
கொட்டிக் கவிழ்ந்த கலயத்தினை
வெறித்த வண்ணம்
முணுமுணுக்கிறாய்
விதிக்கப் பட்டதற்கும்
குறைவாக ஒரு
நாழிகைக்கும் ஆசைப்படாததே
---
2) தவளையின் சங்கீதம்

என்
விழிக் கோணத்தின்
அரை வட்டப் பாதையில்
நூற்று எண்ப‌து
பாகைக‌ளுக்குள்ளாக‌
தோன்றி ம‌றையும்
காட்சிக‌ளின்
தொட‌ரோட்ட‌த்தில்
மித‌ந்து வ‌ருமொரு
ப‌ழுத்த‌ இலை மீது
அசையாம‌ல்
அம‌ர்ந்திருக்கும் த‌வ‌ளை
வித‌ந்தோதுகிற‌து
நேற்று நாளையென‌
ந‌ழுவிபோகும் நிமிஷ‌ங்க‌ளுக்கு
அடியில் எட்டாத‌
ஆழ‌த்தில்
அலையும்
த‌ற்க‌ண‌த்தின்
சிப்பியுள் திர‌ளும்
நித்திய‌த்துவ‌த்தை.
---

3) வ‌லிய‌றித‌ல்

பார்த்த‌
வ‌ண்ணமிருக்க‌
வெடித்த‌ நில‌த்தில்
விழுந்த‌ விதை
செடி
ம‌ர‌மென‌
பொழிந்த‌ ம‌ழைக்கு
த‌ழைந்த‌து
நிழ‌லுக்கு இற‌ங்கிய‌
ம‌ர‌ங்கொத்தி ஒன்று
க‌ழுத்தை வாகாய் சாய்த்து
நிறுத்தி
நிதானமாய்
துளையிடுகிற‌து
இத‌ய‌த்தை
குடையும‌ந்த‌
வ‌லி
அப்ப‌டியொன்றும் அதிக‌முமில்லை
அப்ப‌டியொன்றும் குறைவுமில்லை.
---

4)அருநிழ‌ல்

அன்பெனும் பிடிக்குள்
அக‌ப்ப‌ட்ட‌ ம‌லைய‌து
எவ்வ‌ள‌வு பெரிதோ
அவ்வ‌ள‌விற்கு க‌ன‌மில்லை
என்றாலும்
சிறுபொழுதும் தாம‌திக்க‌வோ
உட‌ன் சும‌ந்து ஏக‌வோ இய‌லாத‌
வ‌ழிந‌டைப் ப‌ய‌ணி
நான்
இற‌க்கி வைத்துப் போகிறேன்
ப‌த்திர‌மா ய‌தை
பாதையின் ம‌றுங்கே
திசைக‌ளோடி பிரிந்த‌ வ‌ழிக‌ள்
இருண்ட‌ பிற‌கு
என் பிராதுக‌ளையும், பிரார்த்த‌னைக‌ளையும்
காலத்தின் ப‌லிமுற்றத்தில்
கிட‌த்திவிட்டு
வெறும‌ கையோடு நான்
திரும்பும் காலில்
அடைக்க‌ல‌ம் த‌ரும்
அசையாத‌ அம்ம‌லையின்
அடிவ‌யிற்றுக் குகை
நிழ‌ல்.

May 11, 2008

நித்யா கவிதை அரங்கில் வாசிக்கப்பட்ட சுகுமாரன் கவிதைகள்.

1) இடவழுவமைதி

ஒரே பெயரில்
ஒரே இடத்தில்இரண்டு பேர் இருப்பது.
உசிதமல்ல என்றுணர்ந்த‌
பால்ய தினங்கள்
ஒரே வகுப்பில்
ஒரே பெயரில்
இரண்டு பேர் இருந்தோம்
முதலெழுத்தில் வித்தியாசம்
என்னுடையது 'என்'
அவனுடையது 'எஸ்'

அவனுக்கான பாராட்டு
சமயங்களில் எனக்கு
எனக்கான தண்டனை
சமயங்களில் அவனுக்கு

அடையாளம் பிரிக்க‌
பட்டப் பெயர்கள்
சூட்டப்பட்டோம்
அவன் உலக்கை
நான் ஊசி

காய்ச்சலில் விழுந்து
பள்ளிக்குப் போகாமல்
திரும்ப போன‌ நாளில்
எல்லோரும் கேட்டார்க‌ள்:

ம‌ல‌ம்புழை அணையில்
மூழ்கிய‌து நீயில்லையா?

வ‌ருகைப் ப‌திவுக்காக‌க்
கூப்பிட்ட‌போது
இர‌ண்டுமுறை எழுந்து 'உள்ளேன்' என்றேன்
அழைக்க‌ப்ப‌ட்ட‌து ஒருமுறை எனினும்.
---
2)முதலாவது வார்த்தை

எனது முதலாவது வார்த்தை
எந்த மொழியில் இருந்ததென்றோ
எந்த உணர்வால் கிளர்ந்ததென்றோ
எவ்வளவு குடைந்தும் நினைவில் இல்லை

இன்று எனக்கு
யோசிக்க பரிமாற பிழைக்க‌
மூன்று மொழிகள் தெரியும்
உபரியாக மெளனமும்

எனது கடைசி வார்த்தை
எந்த மொழியில் இருக்குமென்றோ
எந்த உச்சரிப்பில் கேட்குமென்றோ
எவ்வளவு முயன்றும் தீர்மானம் இல்லை

எதுவானாலும்
எனது நான்கு மொழிகளிலும் இல்லாததாக‌
இருக்கக் கடவது
எனது கடைசி வார்த்தை.
---
3) நீரின்றி அமையாது

திட‌மென்றால் இய‌ங்குவ‌து சிர‌ம‌ம்
ஆவியென்றால் அட‌ங்குவ‌து க‌டின‌ம்
என‌வே
திர‌வ‌ங்க‌ளால் பிணைத்தேன் உற‌வுக‌ளை

ஒவ்வொரு உற‌வுக்கும்
ஒவ்வொரு திர‌வ‌ம்

தாய்மைக்கு முலைப்பால்
ச‌கோத‌ர‌த்துவ‌த்துக்கு இர‌த்த‌ம்
காத‌லுக்கு உமிழ்நீர்
தோழ‌மைக்கு விய‌ர்வை
ப‌கைக்குச் சீழ்
தாம்ப‌த்ய‌துக்கு ஸ்க‌லித‌ம்
துரோக‌த்துக்குக் க‌ண்ணீர்

பிணைத்து முடிந்த‌தும் கை க‌ழுவினேன்
த‌ண்ணீரால்
மீண்டும்
அதே நீரால் பிணைத்தேன்
உன்னையும் என்னையும்

தெரியுமா உன‌க்கு?
உற‌வுக‌ளைப் பிணைக்க‌
த‌ண்ணீர் த‌விர‌ த‌ர‌மான‌ திர‌வ‌ம்
வேறில்லை

என் உற‌வுக‌ள் எல்லாம்
தண்ணீரால் ஆன‌வை

ஏனெனில்
நீரின்றி அமையாது உற‌வு.
---
4) க‌னிவு

நாள் க‌ண‌க்காய்
ப‌க்குவ‌ப்ப‌டாம‌ல் வெம்பும் கேள்வி
'உற‌வில் க‌னிவ‌து எப்ப‌டி?'

சொற்க‌ள் புகைந்த‌ ம‌ன‌தில்
வாழையானேன்
மிஞ்சிய‌து ச‌ரும‌ம்

ஸ்ப‌ரிச‌ங்க‌ளின் த‌விட்டுச் சூட்டில்
மாங்காயானேன்
எஞ்சிய‌து கொட்டை

உட‌ற்காய‌த்தில் சுண்ணாம்பு த‌கிக்க‌ப்
பலாவானேன்
மீந்த‌து பிசின்

இப்ப‌டி ப‌ழுப்ப‌து
இய‌ல்ப‌ல்ல‌

என‌வே
க‌னிய‌த் தொட‌ங்குகிறேன் இப்போது
ஒட்டுற‌வு இல்லாத‌ புளிய‌ம்பழ‌மாக‌
---
5) எட்டுக்காலியும் நானும்

எட்டுக்காலியும் நானும் ஒன்று
இருவ‌ரும் பிழைப்ப‌து
வாய் வித்தையால்

எட்டுக்காலிக்கு எச்சில்
என‌க்குப் பொய்

இருவ‌ரும் வ‌லைபின்னுகிறோம்
அது எச்சிலைக் கூட்டி
நான் உண்மையைக் குறைந்து

எட்டுக்காலி வ‌லை
ஜீவித‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம்
என‌து வ‌லை
ச‌ந்த‌ர்ப்ப‌ ஜீவித‌ம்

எட்டுக்காலிக்குத் தெரியும்
எச்சிலின் நீள‌மும் ஆயுளும்
என‌க்கும் தெரியும்
பொய்யின் த‌டுமாற்ற‌மும் அற்ப‌மும்

எட்டுக்காலியின் நோக்க‌ம் த‌க்க‌ வைத்த‌ல்
என‌வே
வ‌லை- ஒரு பாதுகாப்பு

என‌து தேவை த‌ப்பித்த‌ல்
என‌வே
பொய்- ஒரு பாத‌க‌ம்
வாய்வித்தைக்கார‌ர்க‌ள் இருவ‌ரும்
எனினும் எட்டுக்காலி
என்னைவிட‌ பாக்கிய‌சாலி

சொந்த‌ வ‌லையில் ஒருபோதும்
சிக்குவ‌தில்லை அது
---
தொகுப்பு: பூமியை வாசிக்கும் சிறுமி (உயிர்மை வெளியீடு)

May 7, 2008

ஊட்டி நித்யா க‌விதை அர‌ங்கு - 1

மார்ச் 25 ஆம் நாள் ஜெயமோகன் அவர்களிடம் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. உதகையில் மே 1,2,3 தேதிகளில் நடக்கும் நித்யா கவிதை அரங்கில் என்னைக் கலந்து கொள்ளச் சொல்லி. என் பெயரை கவிஞர் சுகுமாரன் பரிந்துரைத்திருக்கிறார்.

அந்தச் சமயத்திலிருந்தே ஒரு விதமான உற்சாக மனநிலைக்கு ஆளானேன். பெங்களூரு சென்று அங்கிருந்து ஊட்டி செல்வதென முடிவு செய்து கொண்டேன். மைசூர் வரை நன்றாக இருக்கும் சாலை, முதுமலைக்குப் பிறகாக இடுப்பை முறித்துவிடுகிறது. என் கெட்ட நேரம் சாதாரண அரசுப் பேருந்தில் சக்கரத்திற்கு மேலாக ஒரு மேடுடன் இருக்கும் கடைசிக்கு முந்தைய வரிசை இருக்கை.

கலந்து கொள்ளும் நண்பர்கள் யாருமே எனக்கு முன்னதாக அறிமுகம் இல்லையாகையால் சிறு தயக்கத்துடனேயே இருந்தேன். ஊட்டியில் குளிர் இருந்தது. ஹைதராபாத்தில் தோலை அரிக்கும் வெயிலில் இருந்தவனுக்கு அந்த குளிர் அதிகம்தான். ஊட்டியின் குளிரைப் பொருட்படுத்தாமல் காலையில் ஏழு மணிக்கெல்லாம் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் குளிர் நீரை முகத்தில் அறைந்துவிட்டேன். என்னையும் அறியாமல் முகம் வீங்கிவிட்டது. First Impression is the last impression அல்லவா? இப்படியே அனைவரும் வரும் வரை பெருத்த முகமுடன் இருந்தால் "மணிகண்டன் என்றவுடன் 'வீங்கிய முகமுடையவன்" என்ற எண்ணம் பிறருக்கு வந்துவிடும் என்று வருத்தமடையத் துவங்கிவிட்டேன்.

கெ.பி.வினோத் ஊட்டியில் முதலில் அறிமுகமானார். சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவர். 'நீங்க வருவீங்கன்னு ஜெ.மோ சொன்னார்' என்று தொடங்கி பல நாட்களாகத் தெரிந்தவர் போல பழக ஆரம்பித்துவிட்டார். கூட்டம் நடக்கும் போது இவர் எதுவும் பேசவில்லை.

வீரான்குட்டி, பிந்து கிருஷ்ணன், பி.ராமன், பி.பி.ராமச்சந்திரன்(இவர் ஹரிதகம்.காம் என்னும் முக்கியமான மலையாள இணையத்தளத்தை நடத்தி வ‌ருகிறார்)உள்ளிட்ட‌ ம‌லையாள‌க் க‌விஞ‌ர்க‌ளும், மோக‌ன‌ர‌ங்க‌னும் அதிகாலையிலேயே க‌ண்ணில் ப‌ட‌ ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள்.

மோக‌ன‌ர‌ங்க‌ன் காலையில் க‌ட்ட‌ன்சாயா குடித்த‌வுட‌ன் சிக‌ரெட் குடிப்ப‌த‌ற்காக‌ வெளியே அழைத்துச் சென்றார். "சிக‌ரெட் குடிக்க‌ மாட்டீங்க‌ இல்லையா?" என்று எப்ப‌டிக் க‌ண்டுபிடித்தார் என்று தெரிய‌வில்லை. இத‌ற்கு என்ன‌ பி.ஹெச்.டி செய்ய‌ வேண்டுமா என்ன?. முந்தைய கவிதை அரங்குகள், குற்றாலம் நிகழ்வுகள், பழைய கூட்டத்தின் சர்ச்சை போன்று ஒரு மேலோட்டமான பார்வையை எனக்கு கொடுத்தார்.

பின்ன‌ர் காலைச் சிற்றுண்டி. ம‌ணி(நிர்மால்யா என்ற‌ பெய‌ரில் இவ‌ர‌து மொழிபெய‌ர்ப்பை ப‌ற்றி ப‌ல‌ரும் அறிந்திருக்க‌க் கூடும்)தான் உண‌வு, உறைவிட‌ வ‌ச‌திக‌ளின் முழுப் பொறுப்பையும் ஏற்றிருந்தார். அவ்வ‌ப்பொழுது சூடாக‌ வ‌ந்து இற‌ங்கும் உண‌வு, டீ, நொறுக்குத் தீனி, இர‌வில் அத்த‌னை பேருக்கும் த‌லா இர‌ண்டு க‌ம்ப‌ளிக‌ள் என்று பிர‌மாதப் ப‌டுத்தியிருந்தார். அந்த‌ ப‌ருப்பு வ‌டைக்கு ஒரு ஓ போடுவேன்.

ஜெய‌மோக‌ன் த‌ன் குடும்ப‌த்தோடு வ‌ந்து சேர்ந்தார். பிற‌கு ஒவ்வொருவ‌ராக‌ வ‌ர‌ ஆர‌ம்பித்த‌தும் நாராய‌ண‌ குருகுல‌ம் க‌ளை க‌ட்ட‌த் துவ‌ங்கிய‌து.
தேவ‌த‌ச்ச‌ன், சுகுமார‌ன், எம்.யுவ‌ன், மகுடேஸ்வ‌ர‌ன், ராஜ‌ சுந்த‌ர‌ராஜ‌ன், மோக‌ன‌ர‌ங்க‌ன் ம‌ற்றும் வா.ம‌ணிக‌ண்ட‌ன் ஆகியோர் த‌மிழ் க‌விஞ‌ர்க‌ள்.

பி.ராம‌ன், பி.பி.ராம‌ச்சந்திர‌ன், செபாஸ்டின், எஸ்.ஜோச‌ப், வீரான்குட்டி, அன்வ‌ர் அலி, பிந்து கிருஷ்ண‌ன், விஷ்ணுபிர‌சாத் ஆகியோர் ம‌லையாள‌க் க‌விஞ‌ர்க‌ள். க‌ல்ப‌ற்றா நாராய‌ண‌ன் ச‌ற்று தாம‌தமாக‌ கூட்ட‌த்தில் க‌லந்து கொண்டார்.

பிரார்த்தனை அறையின் தரையில் மெத்தை போன்ற விரிப்பு வட்ட வடிவத்தில் போடப்பட்டிருந்தது. பெரும்பாலான மலையாளக்கவிஞர்கள் அறையின் இடது புறமாகவும், தமிழ்க் கவிஞர்கள் வலது புறமாகவும் அமர்ந்திருந்தனர். பார்வையாளர்களாகக் கலந்து கொண்டிருந்த பலரும் பின்புறமாக நாற்காலி அல்லது சோபாவில் அமர்ந்து கொண்டனர்.

கூட்ட‌த்தில் ஜெய‌மோக‌னை 'ஹெட் மாஸ்ட‌ர்' என்றார்க‌ள். கூட்டத்தின் துவக்கத்தில் பங்குபெற்ற ஒவ்வொருவ‌ரையும் த‌மிழ், ம‌லையாள‌ம் என‌ இரு மொழிக‌ளில் கூட்ட‌த்தின‌ருக்கு அறிமுக‌ப்ப‌டுத்தினார். அதுமட்டுமின்றி தமிழில் பேசப்படுவதை மலையாளத்திலும், மலையாளத்தில் பேசப்படுவதை தமிழிலும் தொடர்ச்சியாக சலிப்பில்லாமல் மொழிமாற்றம் செய்து கொண்டேயும் அவ்வப்பொழுது தனது கருத்துக்களையும் முன் வைத்துக் கொண்டுமிருந்தார். அவர் மொழிமாற்றம் செய்து கொண்டிருக்கும் போது இடையில் யாராவது பேசினால் அது தன்னை அதிகம் கத்தச் செய்து ஆற்றலை வீணடிக்கும் என்று சொல்லி அமைதிப்படுத்தினார்.

ம‌குடேஸ்வ‌ர‌ன், நாஞ்சில் நாடன், எம்.கோபாலகிருஷ்ணன்(சூத்ரதாரி), ராஜ சுந்தரராஜன் ஆகியோர் கூட்ட‌ம் துவ‌ங்கும் போது காரில் வ‌ந்து கொண்டிருப்ப‌தாக‌த் த‌க‌வல் வ‌ந்த‌து. த‌மிழினி வ‌ச‌ந்த‌குமாரும் அவ‌ர்க‌ளோடு இருப்ப‌தால் அவ‌ர் ஒவ்வொரு இட‌மாக‌ நிறுத்தி மெதுவாக‌த்தான் வ‌ந்து சேர்வார்க‌ள் என்று சொன்னார்க‌ள். ஆனால் விரைவாக‌வே வ‌ந்து சேர்ந்துவிட்டார்க‌ள்.

முத‌லில் பி.ராம‌ன் க‌விதைக‌ளை வாசிக்க‌ முடிவான‌போது சில‌ க‌விஞ‌ர்க‌ள் வ‌ந்து சேராத‌தால் பொதுவான சில‌ அம்ச‌ங்க‌ளைக் குறித்து விவாத‌ம் தொட‌ங்கிய‌து. ராம‌னின் இல‌க்கிய‌ப் பய‌ண‌த்தில் உண்டான‌ இடைவெளி, அது குறித்தான‌ கார‌ண‌ங்க‌ள் ப‌ற்றிய‌‌ பேச்சின் போது சுகுமார‌ன் வ‌ந்து சேர்ந்தார். சுகுமார‌னும் இதே விதமான‌ இடைவெளியைச் ச‌ந்தித்த‌வ‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. சுகுமார‌னின் ப‌த்து வ‌ருட‌ இடைவெளி என்ப‌தில் அவ‌ர் த‌னிம‌னித‌ன் சார்ந்த‌ ப‌டைப்புக‌ளில் இருந்து ச‌மூக‌, அர‌சிய‌ல் சார்ந்த‌ ப‌டைப்புக‌ளுக்கு மாறியிருப்ப‌து குறித்தும், முன்பு இருந்த எதிர்மறை, குற்றச்சாட்டுகள் நீங்கி கவிதையில் கனிவு,நிதானம் முக்கிய இடம் பெற்றிருப்பது குறித்தும் பேச‌ப்ப‌ட்ட‌து.

பி.ராம‌ன் த‌ன‌து க‌விதையில் மொழிய‌னுப‌வ‌ம் இல்லாத‌து குறித்து பேசினார். ஆனால் க‌விதையில் மொழிய‌னுப‌வ‌ம் இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை என்ப‌து மோக‌ன‌ர‌ங்க‌னின் க‌ருத்து. இது ப‌ற்றிய‌ விவாத‌த்தின் போது பி.பி.ராம‌ச்ச‌ந்திரன்(பி.ராமன் அல்ல) த‌ன‌து க‌விதைப் ப‌ய‌ண‌த்தில் க‌விதைக‌ளை ம‌ர‌பு, ந‌வீன‌ம் என்று தொட‌ர்ச்சியாக‌ மாற்றி மாற்றி எழுதி பெண்டுல‌ம் போன்று செல்வதையும், இது க‌விதை மீதாக‌ இய‌ல்பாக கவிஞனுக்கு வ‌ர‌க்கூடிய‌ ச‌லிப்பினை த‌விர்த்துவிட‌ உத‌வுவ‌தும் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.

க‌விதையில் நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌கு மீண்டு வ‌ந்து ஊக்க‌த்துட‌ன் இய‌ங்கிய‌வ‌ர்க‌ளாக‌ கே.ஜி.ச‌ங்க‌ர‌ப்பிள்ளை, ப‌சுவ‌ய்யா, தேவ‌த‌ச்ச‌ன் போன்ற‌வ‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளும், மீள‌ முடியாத‌வ‌ர்க‌ளாக‌ ஞான‌க்கூத்த‌ன், ந‌குல‌ன் போன்ற‌வ‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளும் குறிப்பிட‌ப்ப‌ட்டன.

கவிதையின் வடிவம் பற்றிய பேச்சில் ம‌னுஷ்ய‌ புத்திர‌ன் க‌விதையின் வ‌டிவ‌த்தில் மேற்கொண்ட‌ முய‌ற்சிக‌ள் ப‌ற்றியும் பேச‌ப்ப‌ட்ட‌து.

முத‌ல் அம‌ர்வு பி.ராம‌னின் க‌விதைக‌ள் த‌விர்த்து க‌விதை சார்ந்த‌ பிற‌ விஷ‌ய‌ங்க‌ளையும் (க‌விதையின் வ‌டிவ‌ம், பொய‌டிக் இஞ்சினீய‌ரீங் போன்ற‌) விரிவான‌ முறையில் அல‌சுவ‌தாக‌ அமைந்திருந்த‌தால் கிட்ட‌த்த‌ட்ட‌ மூன்று ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ நிக‌ழ்ந்த‌து.

இந்த‌ விவாத‌த்தில் க‌விதையைப் ப‌ற்றி எழுத‌ப்ப‌ட்ட‌ பெரும்பாலான‌ க‌விதைக‌ள் தோல்விய‌டைவ‌து ப‌ற்றி தேவ‌த‌ச்ச‌ன் பேசிய‌து, ப‌டிம‌ம், மெட்ட‌ப‌ர், அலிக‌ரி போன்ற‌வ‌ற்றையும், முறுக்க‌ப்ப‌ட்ட‌ க‌விதைக‌ளைத் தாண்டி நாம் இன்று அடைந்திருக்கும் எளிய‌ க‌விதைக‌ள் குறித்துமான‌ ஜெய‌மோக‌னின் பார்வை, க‌விதைக‌ள் அனுபவ‌ங்க‌ளைச் சொல்வ‌து அல்ல‌து அனுப‌வ‌ம் குறித்தான அபிப்பிராய‌ங்க‌ளைச் சொல்வ‌து என‌ இருவ‌கைக‌ளில் அமைவ‌து ப‌ற்றிய‌ யுவ‌னின் வாத‌ங்க‌ள் போன்ற‌வை மிக‌ முக்கிய‌மான‌ இட‌ங்க‌ளுக்கு விவாத‌த்தை ந‌க‌ர்த்திய‌து.

(தொட‌ர்ந்து எழுதுகிறேன்)

May 6, 2008

நித்யா கவிதை அரங்கில் வாசிக்கப்பட்ட எனது கவிதைகள்.

ஊட்டி நாராயண குருகுலத்தில் ஜெயமோகன் அவர்களால் 'நித்யா கவிதை அரங்கு' நடத்தப்பட்டது. இது ஜெயமோகன் நடத்திய‌ ஒன்பதாவது தமிழ் மலையாளக் கவிதை பரிமாற்ற உரையாடல்.

மே 1,2,3 ஆகிய‌ நாட்க‌ளில் ந‌டைபெற்ற‌ இவ்வ‌ர‌ங்கு குறித்த‌ என‌து பார்வையை விரைவில் ப‌திவு செய்கிறேன்.

அர‌ங்கில் வாசிக்க‌ப்பட்ட‌ த‌மிழ்க் க‌விதைகளை(தேவதச்சன், சுகுமாரன், ராஜ சுந்தரராஜன், எம்.யுவன், க.மோகனரங்கன், மகுடேஸ்வரன், வா.மணிகண்டன்) வ‌லைப்ப‌திவில் இடும் எண்ண‌ம் இருக்கிற‌து. என‌து க‌விதைக‌ள் த‌ற்ச‌ம‌ய‌ம் கைவ‌ச‌ம் இருப்ப‌தால் அவ‌ற்றை முத‌லில் இடுகிறேன். இவை 'கண்ணாடியில் நகரும் வெயில்' தொகுப்பில் உள்ள கவிதைகள்.

1. விரல்களில் உதிரும் சொற்கள்
நிசப்தம் விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன் விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன.

2. சுவரில் ஊர்ந்த கதைகள்
தன் நாவுகளால்
என் கண்ணீரையும்
அசைவற்ற விழிகளில்
நிர்வாணத்தின்
நெளிவுகளையும்
பதிவு செய்திருக்கிறது
-இந்தச் சுவர்.
இப்போது
படிமமாக்குகிறது.
சுண்ணாம்பினை
உதிர்த்து,
தனக்கான ஓவியங்களை.

3. விடைகளற்ற புதிர்கள்
இந்த ரயிலின்
பதினோறாவது பெட்டிக்கு
கீழாக
உடல் கத்தரித்துக் கிடக்கிறான்
பச்சைச் சட்டை அணிந்தவன்.

சிலர் முந்தைய ரயிலில் விழுந்திருக்கலாம் என்றனர்
சிலர் தண்டவாளத்தில் கால் சிக்கியிருக்கும் என்றனர்
சிலர் தற்கொலையாக இருக்கலாம் என்றனர்.

கொஞ்சம் பேர்கள் அவன் மீதும்
மிஞ்சியோர் அவன் குடும்பம் குறித்தும்
பரிதாபப்பட்டார்கள்.

ரயில்வே இழப்பீடு வழங்கக் கூடும் என்ற
சிவப்பு பனியன்காரர்
இந்த வாக்கியங்கள் யாவுமே
விடைகளற்ற புதிர்கள்
என்றபடி
செய்தித்தாளை புரட்டத் துவங்கினார்.

4. வினைல் காதல்
கலாமந்திர் விளம்பரப் பலகையில்
முதுகு காட்டிப் படுத்திருந்தாள் வினைல் பெண்.
இடுப்பில் சிறிய
மடிப்பிருந்தது.

மடிப்பில் ஊர்ந்த
விளக்கொளியின் இருள் எறும்பை
கரங்களை நீட்டித் தொட முயன்றேன்.

கூச்சமாக இருந்தது.

தாங்கிப் பிடித்த
கம்பி வழியாகச் சொன்னேன்.
வெம்மையான நிலம் குறித்துப்பேசும் போது
உன் விரல்களுக்கிடையேயான
பரப்பினை
நினைத்துக் கொள்வேன் என்று.

சிரித்துவிட்டு
மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

குழப்பத்தில்
அவசரமாக நகர்ந்தான்
சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தவன்.

5. பிரியம் படிந்த வாக்குமூலம்
இன்று -
குளிக்கும் போதும்
வலது காலின் பெருவிரலில்
ஒரு கல் தடுக்கிய நொடியும்
உன்னை நினைக்கவில்லை.

நினைத்ததை விட
நினைக்காத நேரத்தை
சொல்வது
எளிதெனக்கு.
----
த‌ழிழுக்கு மொழி மாற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ ம‌லையாள‌க் க‌விதைகளை(பி.ராமன், செபாஸ்டின், பி.பி.ராமசந்திரன், எஸ்.ஜோசப், அன்வர் அலி, வீரான்குட்டி, பிந்து கிருஷ்ணன், விஷ்ணுபிரசாத், கல்பற்றா நாராயணன்) ஜெய‌மோக‌ன் அவ‌ர்க‌ளின் த‌ள‌த்தில் வாசிக்க‌லாம்.
----
ஓவிய‌ம்: ராஜ‌ன் புதியேட‌ம்

May 5, 2008

மூன்று கவிதைகள்- உயிர்மை

(1)
தீப்தி அழுது கொண்டிருந்தாள்.
இரவுக்காட்சிக் கூட்டம் நகரச் சாலையை சலனமூட்டுகிறது.

இடப்பக்கச் சந்தில்
அலையும்
நாயொன்றின் நிழலசைவு
இரவின் தனிமையை நகர்த்த துவங்கியது.
ஜன்னலோர திரைச்சீலையை யாரோ மூடிக் கொண்டிருந்தார்கள்.

மஞ்சள் ஒளியில் நனைந்து கிடக்கும்
சாலையோரச் செடியிலையில்
தன் ஓவியத்தை தொடங்கினான்
மழைக்கடவுள்.
இன்று தீப்தி அழுது கொண்டிருந்தாள்.
-------------------------
(2)
வித்யாவிடம் பேசுவதற்கு ஏதாவது இருந்து கொண்டிருக்கிறது.
இல்லாத பெண்களின் ரகசியங்களை
ராஜேஷ் வைத்திருப்பான்.
அருண் வேலையைப் பற்றி பேசுவான்.
நிவேதிதாவின் பொய்கள் சுவாரஸியமானவை.

எனக்கு
இந்த டி.வி. பெண்ணிடம்
என்ன பேசுவதென்று தெரியவில்லை
உந்திச் சுழி வளையம் நன்றாயிருப்பதாக
முடித்துக் கொண்டேன்.
-----------
(3)
ஏணிக‌ளை வ‌ரிசையாக‌க் க‌ட்டி
அருவி மீது ஏற‌ முய‌ன்றேன்
கீழே விழுந்தால்
எலும்பும் மிஞ்சாது என்று
தாயுமான‌வ‌ன் சொன்னான்.

உச்சியை அடையும் க‌ண‌ம்
விழ‌த்துவ‌ங்கினேன்.

எப்ப‌டி
எலும்பு மிஞ்சிய‌து என்றும்
இலை
சுழ‌ன்று
விழும்
தேவ‌த‌ச்ச‌ன் க‌விதையையும்
யோசித்துக் கொண்டிருந்தேன்.

இட்லி வாங்கி வ‌ர‌ச் செல்வ‌தாக‌
தாயுமான‌வ‌ன்
கிள‌ம்பிச் சென்றான்.
-----------
நன்றி: உயிர்மை, மே'2008.
ஓவியம்: ராஜன் புதியேடம்.

Apr 29, 2008

விரல் நுனி விபரீதம் - ‍சைபர் குற்றங்கள்

சைபர் குற்றங்கள். இந்தச் சொல்லுக்கான சிக்கல்கள் கூடிக்கொண்டே இருக்கிறது. இந்தக் குற்றங்களை மேலோட்டமாக புரிந்து கொள்வதே சுவாரசியமானது. ஆயிரம் ரூபாய் கொடுத்து கம்ப்யூட்ட்ர் கோர்ஸ் படித்தவனால் செய்யப்படுபவை அல்ல இந்தக் குற்றங்கள். கம்ப்யூட்டரிலேயே கசங்கி மண்டையை உடைத்து "ரூட்" கண்டறிந்து மிக இலாவகமாக சைபர் குற்றங்களைச் செய்கிறார்கள் "கம்ப்யூட்டர் பிதாமகன்"கள். சுவரேறி, பூட்டு உடைத்து, கன்னக்கோல் போடுவதெல்லாம் தேவையே இல்லை. இருந்த இடத்தில் இருந்து நடத்தும் ஜகஜ்ஜாலங்கள்தான் சைபர் குற்றங்கள்.

பிரதமருக்கோ, முதலமைச்சருக்கோ மிரட்டல் இமெயில் 'கமுக்கமாக' அனுப்பிவிட்டு, யாரிடமும் அகப்படாமல் தப்பித்து விடலாம் என நினைத்துக் கொண்டிருப்பதுதான் மிக மட்டமான அல்லது குறைந்த பட்சமான இணையக் குற்றமாக இருக்க முடியும். ஒவ்வொரு கணிப்பொறிக்கென இருக்கும் பிரத்தியேக எண்ணை ஐ.பி.(இன்டர்நெட் புரொடோகால்) முகவரி என்கிறோம். அனுப்புகிற மெயிலில் ஒட்டிச் செல்லும் இந்த எண் எந்த ஊரில், எந்த இணைப்பிலிருந்து மெயில் வருகிறது என்ற தகவலை மிகத் துல்லியமாக காட்டிக் கொடுத்துவிடும்.

பின்னர் அந்த கணிப்பொறியின் மெமரியை சோதனையிட்டால் போதும். அனுப்பியவரின் கையில் விலங்கு விழ வேண்டியதுதான் பாக்கியாக இருக்கும். இந்த நுட்பத்திலும் தங்கள் வித்தையைக் காண்பித்து போலீஸ் கண்களில் மண் தூவுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் உல‌கின் பெரிய‌ சைப‌ர் குற்ற‌ங்க‌ளோடு இவ‌ற்றை ஒப்பிட்டால், ஈமெயில் குற்ற‌ங்க‌ள் எல்லாம் 'ஜுஜுபி'குற்றம்.

சாப்ட்வேர் வந்த புதிதில் ஒரு வங்கிக்கான புரோகிராம் எழுதிய கில்லாடி, அந்த வங்கியில் நடைபெறும் ஒவ்வொரு பணப்பரிமாற்றத்திற்கும் (அது கம்பெனிக்கு வரும் பணமாக இருக்கலாம் அல்லது கம்பெனியிலிருந்து வெளியில் செல்லும் பணமாக இருக்கலாம்)மிக மிகக் குறைந்த தொகையொன்று (1லிருந்து 5 பைசா என்ற அளவில்) தன் கணக்கிற்கு மாற்றும்படி எழுதிவிட்டார். தன்னுடைய ஒவ்வொரு பரிமாற்றத்திலும் 1 பைசா குறைகிறது என்பதை எந்த வாடிக்கையாளரும் கவனித்திருக்கவில்லை. இந்தக் கதை பல நாட்களுக்குத் தொடர்ந்து, அந்த வங்கி விழிக்கும் தருவாயில் கணக்கை சுத்தமாக மூடிவிட்டு மூட்டை கட்டிவிட்டார். இது ப‌ல‌ முறைக‌ளில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் ந‌ட‌ந்து, தற்பொழுது இத‌ன் பெய‌ர் ச‌லாமி தாக்குத‌ல்.

இப்படியான இணையக் குற்றங்களையும் அதை கண்டறிந்த விதங்களையும் கவனிக்கும் போது மிக அலாதியான "கிரைம் நாவல்" படிப்பதற்கு ஈடான அனுபவம் கிடைக்கிறது. உலகில் நடந்த மிகக் கொடூரமானது முதல் மிகக் காமெடியானது வரையிலான சில இணையக் குற்றங்களை பற்றி வாசிக்கப் போகிறீர்கள். மற்ற வகைக் குற்றங்களோடு இணையக் குற்றங்களை நம்மால் எந்த வகையிலும் ஒப்பிடமுடிவதில்லை.

ஒரு தனித்த உலகத்தில் மிகச் சிறந்த அறிவாளிகளால் செய்யப்படுபவை இந்தக் குற்றங்கள். இந்தக் குற்றங்கள் ஏன் நடைபெறுகின்றன என்று பார்க்கும் போது உளவியல் ரீதியாக மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்குவதோடு, நவீனத் தொழில் நுட்பத்தின் உச்சகட்ட வளர்ச்சி சமூகத்தின் போக்கில் உண்டாக்கியிருக்கும் முடிச்சுகள் நம்மை புதிரான இருள் உலகிற்குள் அழைத்துச் செல்கின்றன‌.

எந்த பெரிய விஷயத்தையும் மிக எளிதாக தாண்டிவிடும் கம்ப்யூட்டர், இணையம் என்ற மாய உலகத்தின் தற்போதைய மாபெரும் குற்றங்கள் கூட வருங்காலத்தில் சின்னக் குழந்தைகளின் திருடன் போலீஸ் விளையாட்டாக மாறிவிடலாம்.
---------
இணையத்தில் சாத்தியமாகக் கூடிய பல குற்றங்களை எனக்குப் புரிந்த அளவிற்கு- எங்கள் ஊரில் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு டிராக்டர் ஓட்டிக் கொண்டிருக்கும் விஜயகுமாரை மனதில் வைத்து- அவனுக்கு சைபர் குற்றம் என்றால் என்னவென்று புரியும் அளவிற்கு எழுத முயன்றிருக்கிறேன்.

இந்தக் கட்டுரைகள் இருபது பகுதிகளாக அந்திமழை.காம் இணையதளத்தில் வரத் தொடங்கியிருக்கின்றன. உங்களுடைய கருத்துக்களை vaamanikandan@gmail.com என்னும் மின்னஞ்சலில் தெரியப்படுத்தலாம்.

Apr 27, 2008

சரக்கடித்தவர்களிடம் சிக்கிக் கொண்டவனின் கதை

பெண்கள் வரிசையாக போதை தலைக்கேறி சாலையில் விழுந்து கிடப்பதை பார்த்ததுண்டா? ப்பூ இது ஒரு மேட்டரா என்பவர்கள் ஆண் விபச்சாரன்களை(இலக்கணப்படி இது சரியான வார்த்தைதானே?) விலை பேசி அழைத்துச் செல்லும் பெண்களை பார்த்ததுண்டா? இதுவும் ப்பூ மேட்டர் என்பவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டியதில்லை. இது ஆச்சரியமாகத் தெரிபவர்கள் ஒரு நாள் பஸ்ஸோ, டிரெயினோ ஏறி ஹைதராபாத் வந்து இறங்கி எனக்குச் சொல்லிவிடுங்கள். நான் இல்லையென்றாலும் ஒன்றும் பெரிய விஷயமில்லை. செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து மெகதிப்பட்டணம் வந்துவிடுங்கள். 49எம் பஸ் பிடித்தால் கடைசி நிறுத்தம் அதுதான்.

மெகதிப்பட்டணத்திலிருந்து நான்கு ரூபாய் கொடுத்தால் ஷேர் ஆட்டோக்காரன் பத்து பதினைந்து பேரில் உங்களையும் ஒருவராக வைத்து அமுக்கித் திணித்து தர்காவில் கொண்டு வந்து இறக்கிவிடுவான். தர்க்கா என்பது அந்த இடத்தின் பெயர். ஒரு பழைய காலத்து தர்க்கா அது. அவ்வப்போது சினிமா படப்பிடிப்பைத் தவிர்த்து பெரிதாக அந்த இடத்தில் ஒன்றுமில்லை.

கடந்த சனிக்கிழமை அலுவலகத்திற்குச் சென்று திரும்பி வரும் போது 'மப்பு' ஏற்றிக் கொண்ட பெண்களைப் பார்த்ததும் ஆட்டோவில் இருந்து இறங்கிக் கொண்டேன். இறங்கிய உடன் ஒரு சந்து இருக்கிறது. 'ப' வடிவம். இந்த 'ப'வை நீங்கள் மிகப் பெரிதாக கற்பனை செய்து கொள்ள வேண்டும். 'ப'வின் இரண்டு பக்கக் கோடும் சாலைகள். 'ப'வின் அடிப்பக்கக் கோடுதான் சாராயக் கடை. கடையா அது எவன் சொன்னான்? அது கடல். வெள்ளை வெளேரென்று அண்டாவிலும் பாட்டிலிலும் ஆண்களும் பெண்களுமாய் காசு வாங்கிக் கொண்டு ஊற்றி ஊற்றி கொடுக்க, ஆண்களும் பெண்களுமாய் வாங்கிக் கொண்டு அமர்ந்து கொள்கிறார்கள்.

எண்ணெயில் பொரியும் கொழுப்பு, முட்டையை உடைத்து அதன் மீது குடல் குண்டாமணி எல்லாம் போட்டு ஒரு ஐட்டம், மூக்கில் ஏறும் வாடையில் மண்டையோட்டில் ஒரு ஓட்டை விழுமளவுக்கான மீன் வறுவல், சில்லி சிக்கன்(அ)காக்கா, சில்லி பீப்...அட போங்கய்யா...எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது. இந்த 'சைட் டிஷ்' கடைகளும் 'ப'வின் அடிக்கோட்டு சாலையில்தான்.

ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே 'ஸ்தீலு' என்று எழுதப்பட்ட இரண்டு வரிசைகளில் பெண்கள் மட்டுமே சரக்கடிக்க முடியும். இங்கு ஒரு குட்டி 'லாங்குவேஜ் டியுஷனை' முடித்துக் கொள்ளலாம். தெலுங்கில் 'லு'வில் முடிந்தால் பன்மை. அது தெலுங்கு ஆனாலும் சரி, ஆங்கிலம் ஆனாலும் சரி. டிக்கெட் என்றால் ஒருமை, டிக்கெட்லு என்றால் பன்மை. ஸ்திரீ என்றால் பெண். ஸ்திரீலு என்றால் பெண்கள். சில சொற்கள் இப்படி 'லு' சேர்ந்து தமிழின் மோசமான கெட்டவார்த்தையாக இருக்கின்றன. அதெல்லாம் இங்கு சொல்ல முடியாது.

நான் சென்றிருந்த போது சண்டை எதுவும் இருக்கவில்லை. போதையேறிய பெண்களை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தேன். கடும் உழைப்பாளிகளாக இருக்கும் பெண்கள் என்பது அவர்களின் உடலமைப்பிலேயே தெரிந்தது. ஆண் பெண் என்ற வேறுபாடு எதுவும் பெரிதாக இல்லை. சில ஆண்கள் அருகிலிருக்கும் பெண்களின் மார்பையோ அல்லது தொடையை தடவிக் கொண்டிருந்தார்கள். பற்களில் கரையேறிக் கிடந்த அந்தப் பெண்கள் அதை ரசித்த மாதிரியும் தெரியவில்லை. தடுத்த மாதிரியும் தெரியவில்லை. இங்கு எந்தத் தடைகளும் யாருக்குமே இருக்கவில்லை. யார் விரும்புவதும் கிடைப்பதாக இருந்தது. போதை, உடல் எதுவாக இருப்பினும். எனக்கு கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது.

ஒரு ஆண் நூற்றைம்பது ரூபாய் கேட்டுக் கொண்டிருந்தான் இரண்டு பெண்களிடம். இரண்டு பேரை சமாளிப்பது கஷ்டம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். கொஞ்சம் தள்ளி ஒரு பெண்ணிடம் இரண்டு ஆண்கள். இரண்டு பேரும் என் வயதையொத்தவர்களாக இருப்பார்கள். அவளுக்கு ஐந்து வயது கூடுதலாக இருக்கும். எப்படியிருப்பினும் முப்பதிரண்டை தாண்டாது. அதிக நேரம் பேரம் நடக்கவில்லை. ஏதோ முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

அவள் முன்னதாக நடக்க இரண்டு ஆண்களும் அவளைத் தொடர்ந்தார்கள். ஒருவன் அவளின் பின்புறத்தை தட்டி தட்டி நடந்தான். முந்தின நாள் பெய்த மழையின் ஈரம் சாலைகளில் இருந்தது. இருள் திட்டுக்களாக விரவியிருந்தது. மிக இலாவகமாக நடந்து கொண்டிருந்தார்கள். அனேகமாக பழக்கப்பட்ட பாதையாக இருக்கும். எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. இருளும், அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்ற பயமும் எனக்குள் ஒருவிதமான பதட்டத்தை உண்டாக்கியிருந்தது.

அரைக் கிலோ மீட்டருக்கும் மேலாக நடந்தவர்கள் சட்டென்று ஒரு ஒற்றையடிப்பாதையில் நடக்கத் துவங்கினார்கள். அது சுடுகாடு. சில சமாதிகள் சிதிலமடைந்து கிடந்தன. இந்த இடத்தில் எப்படி பயமில்லாமல் அவர்கள் செயல்பட முடியும் என்று தோன்றியது. அவர்களுக்குத் தேவை மறைவிடமாக மட்டுமே இருந்தது. கொஞ்சம் தயங்கித் தயங்கித்தான் அவர்களை நோக்கி நகர்ந்தேன்.

இரண்டு ஆண்களும் தங்கள் ஆடையைக் கழட்டிவிட்டு அவளை அவசரப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவள் மெதுவாக இயங்கிக் கொண்டிருந்தாள் தன் புடவையை உயர்த்தும் போது நான் அவள் கண்களில் பட்டுவிட்டேன். என்னவோ அவள் அவர்களிடம் மெதுவாக சொன்னாள். அடுத்த கணம் மிக உக்கிரமாக என்னைத் துரத்த ஆரம்பித்தார்கள். எதற்காக அவர்கள் என்னைத் துரத்த வேண்டும்? நான் தவறு செய்ததாக நிரூபிக்கலாம். பணம் பறிப்பதற்காக இருக்கலாம் அல்லது அவர்களின் நிர்வாணத்தை பார்த்துவிட்டதற்காக இருக்கலாம். இந்த ஆராய்ச்சி இப்பொழுது தேவையா?

என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்களிடம் சிக்கினால் போதையில் என்னைக் கொன்றுவிடக் கூட முடியும். ஊரை விட்டு வெகு ஒதுக்குப் புறமாக இருக்கும் இந்த சுடுகாட்டில் என்ன உதவி எனக்கு கிடைத்துவிட முடியும்? கண்ணாடியை ஒரு கையிலும், சட்டையில் இருந்து பணம், செல்போன் விழுந்துவிடக் கூடாது என்று அவற்றை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு ஓடத் துவங்கினேன். ஈரத்தில் கால் பதிந்து ஒரு செருப்பு கழண்டு விட்டது. ஓடும் போது முட்களின் கீறலும், நெருஞ்சி முட்கள் பாதத்தில் பதிவதுமாக பெரும் வாதையை உண்டாக்கின. ஆனாலும் எனக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களின் சப்தம் தெளிவான போது அவர்கள் என்னை நெருங்கிவிட்டதை உணர முடிந்தது. எப்படி வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளட்டும் ஆனால் உயிரோடு விட்டுவிட்டால் போதும்.

இப்பொழுது கருவேல முள் ஒன்று வலது காலைக் கிழித்துவிட்டது. வெறியெடுத்து ஓடத் துவங்கினேன். வெகு தூரம் ஓடியிருக்கக் கூடும். கொஞ்ச நேரத்தில் சப்தம் குறைந்திருந்தது. திரும்பிப் பார்க்கலாம் என்று தோன்றியது. பின்புறமாக ஒருவருமில்லை. கால் கடுகடுத்தது. வியர்வை கசக்கயிருந்தது. செல்போன், பர்ஸ் என்னிடமே இருந்தது. நேற்றுதான் மெகதிப்பட்டணம் பஸ்ஸ்டாப்பில் ஒரு பெல்ட் வாங்கியிருந்தேன். நாற்பது ரூபாய். லாரி டயரைக் கிழித்து பாலிஷ் போட்டு விற்றான். இதை அப்பொழுதே கழட்டியிருந்தால் அவர்களை அடித்திருக்கலாம் என்ற குருட்டு தைரியம் வந்ததிருக்கிறது.

இப்பொழுது மூன்று பேரும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? பெல்ட்டைக் கழட்டிக் கொண்டு அடிக்கச் செல்லட்டுமா? கால் வலிக்கிறது. நீங்கள் சொல்லுங்கள்? வீட்டிற்கு போகட்டுமா? அவர்களோடு சண்டைக்கு போகட்டுமா?