Mar 23, 2007

பறக்கும் குழந்தை

பறக்கும் குழந்தை

எங்கே தொடங்கியது இந்தக் கனவு?

முடிவில்லாமல்
என் மேல் விழுந்துகொண்டிருக்கின்றன
குழந்தைகளின் ஆடைகள்

பால் மனம் பெருகும் ஆடைகள்
சின்ன உடல்கள் மேல்
ஒரு சருகுபோல் புரளும் ஆடைகள்
பிஞ்சுக் கைகள் தனக்குத் தானே
எப்போதும் இழுத்து விளையாடும் ஆடைகள்
அம்மாக்களால் ஒருபோதும் சீர்திருத்த முடியாத
ஆயிரம் வினோத வாசனையுள்ள ஆடைகள்

எப்போதும் பாதியில் நின்றுவிடும்
என் பேருந்திலிருந்து கை தவறி விழுந்துவிட்ட
ஒரு குழந்தையின் ஆடையை ஒரு நாள்
நான் துரத்திச் செல்ல ஆரம்பித்தேன்

ஒரு இறகு போல
பறக்க ஆரம்பித்த ஆடை
ஒரு பறவை போல
காற்றில் நீந்த ஆரம்பித்தது

ஆடைக்குள்ளிருந்து
இரண்டு பிஞ்சுக்கால்களும்
இரண்டு பிஞ்சுக் கைகளும்
நீண்டுவருவதை
சாம்பல் நிற வெளிச்சத்தில் கண்ட
சக பறவைகள் மனம் அதிர்ந்தன
அவை என் போலவே பைத்தியம் கொண்டு
பறக்கும் குழந்தையை பின் தொடர்கின்றன.

நான் ஒரு பறக்கும் குழந்தையை
நிலத்தின் வழியாக துரத்திச் செல்கிறேன்

நான் விழித்தெழும்போது
அந்தக் குழந்தை
தனது சொந்த வீட்டிற்கு
பாதுகாப்பாக திரும்பிவிட்டிருக்கும்

செல்வி

Mar 14, 2007

மனுஷ்ய புத்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இன்று (மார்ச் 15) பிறந்த நாள் கொண்டாடும் என் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

(1)
மீன் தொட்டியில்
எல்லா நீரையும் வடித்த பிறகு
மீன்கள்தம் பனித்த
உறைந்த கண்களால்
வெறுமனே
ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருகின்றன

ஒரு மீன்
துள்ளுகிறது.

சும்மா
துள்ளுகிறது.

யாரும் பதட்டமடையத் தேவையில்லை.
எனக்கு உறுதியாகத் தெரியும்
ஒரே ஒரு மீன்தான்
துள்ளுகிறது.

(2)
உன் கண்கள்
இங்கே எதையுமே
பார்ப்பதில்லை

ஒழுங்குகளை
ரகசியங்களை
பலவீனங்களை
எப்போதும் கசிந்துகொண்டிருக்கும்
காயங்களை

ஒன்றையும்
அவை உற்றுப் பார்ப்பதில்லை.
உன் கண்கள்
கண்களை மட்டுமே
சந்திக்கின்றன.