Oct 30, 2007

ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்.

நரேஷ் தற்கொலை செய்து கொள்வான் என்று எனக்கு முன்பே தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரமாக செய்து கொள்வான் என்றுதான் தெரியவில்லை.

ஒரு வெளிநாட்டு வங்கியில் அவன் கடன் வாங்கியிருந்தான். இந்த‌ விஷயம் எனக்குத் தெரியும். எனக்கு மட்டுமில்லாமல் இந்தத் தெருவில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும். அதை வங்கி என்றும் சொல்ல முடியாது. நிதி நிறுவனம் மாதிரிதான். எப்படியாவது செல்போன் எண்ணைக் கண்டுபிடித்து ஒரு பெண் மிக நைச்சியமாக பேசுவாள். கொஞ்சம் ஏமாந்த சோனகிரியாக சிக்கிக் கொண்டால், ஆளுக்குத் தகுந்த மாதிரி கடன் தருவார்கள். கடன் தருவது என்பதை விட தலையணை வைத்து அமுக்குவது என்று சொல்லலாம். கடனைக் கொடுத்துவிட்டு கழுத்தில் துண்டு போட்டு மிரட்டி வாங்கும் வகையறா. நரேஷ் அவர்களிடம் மூன்று மாதம் முன்பாக பதினெட்டாயிரம் ரூபாய் கடனாக‌ வாங்கினான்.

மூன்று வயதில் ஒரு பையன், ஒரு வயதில் ஒரு பெண்தான் நரேஷ் குடும்பம். மனைவி ஏதோ மில்லுக்கு வேலைக்கு போகிறாள். குழந்தைகளை அவளின் அம்மா வீட்டில் விட்டிருக்கிறார்களாம்.

கடன் வாங்கி ஒரு மாதம் வட்டி சரியாகக் கட்டிவிட்டான் போலிருக்கிறது. அடுத்த மாதத்தில் இருந்து அக்கப்போர்தான். காலையில் பல் துலக்குகிறார்களோ இல்லையோ, கழுத்தில் மப்ளர் மாதிரியான துண்டை போட்டுக்கொண்டு ஏஜென்ஸிக்காரர்கள் வந்துவிடுகிறார்கள். வங்கி பணம் கொடுப்பதோடு சரி. வசூலிக்கும் பொறுப்பு ஏஜன்ஸிக்கு.

கந்துவட்டிக்காரர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை இந்த ஏஜன்ஸிக்காரர்கள். அந்த வீதி அகலறும்படி கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள். ப‌த்து நிமிட‌த்தில் கூட்ட‌ம் சேர்த்தும் விடுவார்க‌ள்.டிவியைத் தூக்குவோம், பிரிட்ஜை தூக்குவோம் என்று ஆர‌ம்பித்த‌வ‌ர்க‌ள் இப்பொழுது எல்லாம் ஆளைத் தூக்குவோம் என்றுதான் பேசுகிறார்க‌ள்.

இவ‌ர்க‌ளோடு ஒரு மாதம் இழ‌வெடுத்த‌ க‌ண‌வ‌னும்,ம‌னைவியும் அத‌ன்பிற‌கு ஒவ்வொரு நாளும் விடிந்தும் விடியாம‌லும் முக‌த்தை தொங்க‌ப்போட்டுக் கொண்டு வீதியில் யாரிட‌மும் பேசுவ‌தில்லை. தேற்றுப‌வ‌ர்க‌ளும் ஒருத்த‌ரும் இல்லை என்ப‌தும் கார‌ண‌ம். "ப‌தினெட்டாயிர‌ம் கூட‌ க‌ட்ட‌ கையாலாக‌த‌வ‌னுக்கு எதுக்கு பொண்டாட்டி புள்ளை" என்று சைக்கிள் க‌டை மாரிய‌ப்ப‌ன் பேசிய‌தாக‌வும் அத‌ற்கு ம‌ட்டும் ந‌ரேஷின் ம‌னைவி அவ‌னோடு ச‌ண்டைப் போட்ட‌தாக‌வும் சொன்னார்க‌ள்.

இந்த ச‌னிக்கிழ‌மை காலை ப‌தினோரு ம‌ணிக்கு எல்லாம் ந‌ரேஷ் தூக்கில் தொங்கிவிட்டான். வீதியே திர‌ண்டு விட்ட‌து. இப்பொழுது ஆளாளுக்கு ப‌ரிதாப‌ப் ப‌ட்டார்க‌ள். ந‌ரேஷின் ம‌னைவி க‌த‌றிக் கொண்டிருந்தாள். குழந்தைகளும் பாட்டி வீட்டில் இருந்து வந்துவிட்டார்கள். கூட்டத்தில் எல்லோரும் நிதி நிறுவ‌ன‌ம் ப‌ற்றி பேசிக் கொண்டிருந்தார்க‌ள்.

இதுதான் ச‌மய‌ம் என்று பேச நான் ஆர‌ம்பித்தேன். இர‌ண்டு பிள்ளைக‌ளை வைத்துக் கொண்டு ந‌ரேஷின் ம‌னைவி வாழ்நாள் முழுவ‌தும் க‌ஷ்ட‌ப்ப‌ட‌ வேண்டியிருக்கும். ஏதாவ‌து செய்தால் தேவ‌லாம் என்று ஆர‌ம்பித்தேன்.
ந‌ரேஷின் ச‌ட‌ல‌த்தை வைத்துக் கொண்டு போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ அவ‌னின் ம‌னைவி உட்ப‌ட‌ பெரும்பாலானோர் ஒத்துக் கொண்ட‌ன‌ர். சடலத்தை புதைத்துவிட்டு அப்புறம் கவனிக்கலாம் என்று சொன்னவர்களையும் கூட்டத்தில் யாரோ வாயை அடைத்துவிட்டார்கள்.

ப‌ட்டேல் சாலையில் இருக்கும் நிறுவ‌ன‌த்திற்கு ஆம்புலன்ஸில் சடலத்தை எடுத்துக் கொண்டு போன‌ போது நிறுவ‌ன‌த்தை மூடி இருந்தார்க‌ள். ஏற்க‌ன‌வே த‌க‌வ‌ல் தெரிந்து சில‌ர் வீட்டிற்கு கிள‌ம்பிவிட்ட‌தாக‌வும், சில‌ர் அலுவலகத்திற்குள் அம‌ர்ந்து கொண்டு வெளியில் பூட்டிக் கொண்ட‌தாக‌வும் சொன்னார்க‌ள்.

எது எப்ப‌டியோ உட‌ன் வ‌ந்த‌வ‌ர்க‌ள் க‌ண்ணாடி பெய‌ர்ப்ப‌ல‌கைக‌ள், பூச்செடிக‌ள் என‌ அனைத்தையும் நொறுக்க‌ ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள். உள்ளுர் தொலைக்காட்சி, போலீஸ் என அந்த இடம் ப‌ர‌ப‌ர‌ப்பாகிவிட்ட‌து. இது சற்றே 'சென்ஸிடிவ்' விஷ்யம் என்பதாலும், கூட்டத்தைமிரட்டினால் விபரீதம் ஆகிவிடலாம் என்பதாலும்,போலீஸூம் கூட்ட‌த்தை விட்டுவிட்டார்க‌ள். அந்தக் கட்டிடமே ஒரு வழிக்கு வந்திருந்தது.

மூன்று மணி நேரத்திற்குப் பின்பாக நிதி நிறுவ‌ன‌த்தின் ஆட்க‌ள் போலீஸ் ப‌ந்தோப‌ஸ்துட‌ன் வ‌ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் நடந்த தவறுகளுக்கு ம‌ன்னிப்பு கேட்ப‌தாக‌வும், நரேஷ் குடுமபத்துக்கு ப‌த்து இல‌ட்ச‌ம் வ‌ரை ப‌ண‌ம் த‌ருவ‌தாக‌வும் பேரம் பேசினார்க‌ள்.

இரண்டு மணி நேர பேச்சு வார்த்தைக்குப் பிறகு‌ இரு குழ‌ந்தைக‌ளுக்கும் த‌லா ஏழ‌ரை இல‌ட்சம் ரூபாயை நிர‌ந்த‌ர‌ நிதியில் வைக்க‌ வேண்டும் என்றும், ந‌ரேஷின் ம‌னைவி பெய‌ரில் ஐந்து இலட்ச‌ம் ரூபாய் த‌ர வேண்டும் என்றும்‌ முடிவு எட்ட‌ப்ப‌ட்ட‌து. சாவை மீறிய‌ ச‌ந்தோஷ‌ம் எல்லோருக்கும் ப‌ட‌ர‌த்துவ‌ங்கிய‌து.
_____________
நான் இந்த‌த் தெருவிற்கு குடி வ‌ந்து எட்டு மாத‌ங்க‌ள் ஆகிற‌து. திரும‌ண‌ம் ஆகாத‌வ‌னுக்கு வீடு த‌ருவ‌தில்லை என்ற‌ அம‌லாக்க‌ப்ப‌டாத‌ ச‌ட்ட‌த்தின் கீழ் எல்லோரும் ம‌றுத்துவிட‌, ந‌ரேஷின் வீட்டு ஓன‌ர் ம‌ட்டும் அவ‌ர்க‌ளின் அருகில் இருந்த‌ ஒரு போர்ஷ‌னைக் கொடுத்துவிட்டார். ஆஸ்பெஸ்டாஸ் கூரைதான் என்றாலும் மின்சார‌ வ‌ச‌தி இருக்கிற‌து. நான் ட்யூப்லைட் வைத்துக் கொள்ள‌வில்லை.

க‌க்கூஸ் என‌க்கும், ந‌ரேஷ் வீட்டிற்கும் த‌னித்த‌னி. ஆனால் பாத்ரூம் ஒன்றுதான். காலையில் ஐந்திலிருந்து ஆறு ம‌ணி வ‌ரைக்கும் த‌ண்ணீர் வ‌ரும். வாளிகளில் பிடித்து நிர‌ப்பி வைத்துக் கொள்ள‌வேண்டும். ஏமாந்துவிட்டால் குளிப்ப‌த‌ற்கு ம‌ட்டும‌ன்று வேறு எத‌ற்குமே த‌ண்ணீர் இருக்காது. ச‌னி,ஞாயிறு ஊருக்குப் போனால் தண்ணீருக்கு வேண்டியே ஞாயிறு இர‌வு வ‌ந்து சேர்ந்துவிடுவேன்.

இரண்டு மாதங்களில் என‌க்கும் ந‌ரேஷின் ம‌னைவிக்கும் ப‌ழ‌க்க‌ம் வ‌ந்துவிட்ட‌து. ப‌ழ‌க்க‌ம் என்றால் உங்க‌ள் ம‌ன‌தில் என்ன‌ தோன்றுகிற‌தோ அந்த‌ப் பழ‌க்க‌ம்தான். கொஞ்ச‌ நாட்க‌ளில் எல்லாம் ந‌ரேஷ் க‌ண்டுபிடித்துவிட்டான் போலிருக்கிற‌து. அவ‌ளைத் திட்டியிருக்கிறான்.
இதை நரேஷ் வெளியில் யாரிட‌மும் சொல்வ‌தில்லை. என்னிட‌ம் கூட‌ காட்டிக் கொள்ள‌வில்லை. தினமும் காலையில் நானும் அவனும் தண்ணீர் பிடிக்கும் போது வழக்கம் போலவே தான் பேசினான். அவ‌ள் என்னிட‌ம் சொன்ன‌ போதெல்லாம் அவ‌னைக் க‌ண்டு கொள்ள‌ வேண்டாம் என்று தைரிய‌மூட்டி என் தேவையை நிறைவேற்றிக் கொண்டேன்.

வெளியிலும் சொல்ல‌த் துணிவில்லாத‌வ‌ன்,முரட்டுத் தனமாக அவளையோ என்னையோ மிரட்டத் தெரியாதவன், அவ‌னாக‌வே வாழ்க்கையை முடித்துக் கொண்டான்.

எல்லோரும் கடனுக்காக இறந்தான் என்று நினைக்கிறார்க‌ள். நான் என்னால் இற‌ந்தான் என்று நினைக்கிறேன். இற‌ந்த‌வ‌னைத் த‌விர்த்து யாராலும் கார‌ண‌ம் க‌ண்ட‌றிய‌ முடியாது என்ப‌தால் நீங்க‌ளும் ஒரு கார‌ண‌த்தை க‌ண்டுபிடித்துக் கொள்ளுங்க‌ள். கார‌ண‌ம‌ற்ற‌ சாவு மிக‌க் கொடூரமானதும், துக்க‌க‌ர‌மான‌தும் இல்லையா?

நன்றி: ஆனந்த விகடன்

Oct 21, 2007

ஞாநி: கண்டனக் கூட்டம்.

ஓ போடும் ஞாநி, கலைஞரின் முதுமை குறித்து ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முக்கியமான எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்த கூட்டத்தை 'தீம்புனல்' அமைப்பு, வாணிமஹாலில் அக்டோபர் 21 ஆம் நாளில் நடத்தியது.

எழுத்தாளர்கள் மார்க்ஸ், அரசு, பிரபஞ்சன், சி.மகேந்திரன், அறிவுமதி, மனுஷ்ய புத்திரன், இமையம், தமிழச்சி, சல்மா, ரவிக்குமார், டி.எஸ்.எஸ்.மணி, கரிகாலன் மற்றும் பத்திரிக்கையாளர் பன்னீர் செல்வம் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

இளையபாரதி தொகுத்தளித்தார்.

தமிழச்சி பேசும் போது ஞாநியின் கட்டுரையில் பொதிந்திருந்த சாதீயப்பார்வையை முன் வைத்தார். மார்க்ஸ் தனது ஆவேசமான பேச்சில் பார்ப்பனீய ஆதிக்கம் இன்னும் ஊடகங்களில் விரவிக்கிடப்பது குறித்துப் பேசினார். பேச்சினை முடிக்கும் சமயமாக காலச்சுவடு இதழில் பெரியார் குறித்தான தரக்குறைவான விமர்சனம் வந்ததையும், அச்சமயத்தில் கனிமொழியும் காலச்சுவடின் ஆசிரியர் குழுவில் இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

டி.எஸ்.எஸ் மணி மிக உரக்கமாகவும் ஆவேசமாகவும் பேசியதில் பெரும்பாலான கருத்துக்கள் என்னவென்று புரியவில்லை. சல்மா ஞாநியை, ஒருமையில் விளித்து 'டிபிகல்' அரசியல் மேடையாக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டார். நல்லவேளையாக அவருக்குப் பின்னால் பேசியவர்கள் அந்த வழிமுறையைப் பின்பற்றவில்லை.

ரவிக்குமார், கலைஞர் சட்டப்பேரவையில் மிகத்துல்லியமாக விமர்சனங்களை கவனிப்பது குறித்தும் அவரது ஞாபக ஆற்றல் குறித்தும் பேசினார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த நூறாவது நாளில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனம் ஆட்சி குறித்தான தன் பார்வைகளை முன் வைத்த போது, அ.தி.மு.க உறுப்பினர் செங்கோட்டையன் குறுக்கிட்டு அவையின் நேரத்தை வீணடிப்பதாகப் பேசினாராம். ஏதோ கோப்புகளை கவனித்துக் கொண்டே குறிப்பு எழுதிக் கொண்டிருந்த கலைஞர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 'செயிண்ட் ஜார்ஜ்' கோட்டையை பற்றி புகழ்ந்தால் செங்கோட்டைக்கு ஏன் பொறுக்கவில்லை என நகைச்சுவையாக தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.

சி.மகேந்திரன், கலைஞர் கைது செய்யப்பட்ட போது நிகழ்த்தப்பட்ட உபாதைகள் ஞாநியின் கண்களுக்குத் தெரியவில்லை என்பது குறித்தான வினாவை எழுப்பி சூடேற்றினார். தோழர் ஜீவா குறித்து தான் படம் எடுக்கப்போவதாக எழுதிய கட்டுரையையும் முடிவாக பெரியாரின் படத்திற்கு பணம் கொடுத்த கலைஞர், ஜீவா படத்திற்கு பணம் தரமாட்டாரா என எழுதி, இடதுசாரிகளுக்கு கொம்பு சீவ முயன்ற ஞாநியின் 'பெருந்தன்மை'யையும் குறிப்பிட்டார்.

அறிவுமதி பேசும் போது பாழாய்ப்போன நண்பன் ஒருவன் என்னை தொலைபேசியில் அழைத்தான். வெளியே சென்று அவனோடு பேசிவிட்டு அரங்கிற்குள் வரும் போது ஞாநியைக் கண்டிக்கும் வகையில் இணையத்தில் வெளிந்த கட்டுரை குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் எந்தத்தளம் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும் இணையத்தளங்கள் கவனிக்கப்படுகின்றன என்ற சந்தோஷம் எனக்கு இருந்தது.

மனுஷ்ய புத்திரன், உயிர்மை தலையங்கத்தில் கலைஞரின் அரசு குறித்தான விவரங்களை எல்லாம் சேகரித்து, உயிர்மை பதிப்பகத்தின் நூல்களை அரசாங்கம் நூலகங்களுக்காக வாங்கக்கூடாது என்ற புகார்களை சில எதிரிகள் அரசுக்கு அனுப்பி வைத்த போதும் எந்தத் தடங்கலும் இல்லாமல் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டது எனவும், தமிழக அரசியல் சூழலில் கலைஞரின் ஆட்சி தவிர்த்த வேறு ஆட்சிகளில் இத்தகைய ஜனநாயக முறையை நினைத்துக் கூட பார்க்க இயலாது என்றும் குறிப்பிட்டார்.

பிரபஞ்சன் தன் வழக்கமான நகைச்சுவை கலந்த பேச்சில் பட்டாசைக் கொளுத்தினார். கோவை ஞானிதான் அசல் ஞானி என்றும், ஓ பக்க ஞாநி 'அஞ்ஞானி' என்றும் தான் ஏற்கனவே சொல்லியிருப்பதை ஞாபகப்படுத்தினார். ஓ பக்கத்தில் இருக்கும் முகங்கள் சமூகத்தால் தூக்கியெறியப்பட்ட சுப்பிரமணிய சாமி, சோ போன்றோரின் முகம் என்றும் இவர்களின் பின்பாக ஒளிந்து கொண்டு, ஞாநி பூனையை போல் 'மியாவ்' என்று கத்துவதாகவும் பேசினார்.

இறுதியாக பத்திரிக்கையாளர் பன்னீர்செல்வம் பேசினார்.

ஞாநி, ஆனந்த விகடனோடு சேர்த்து காலச்சுவடு குறித்தான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டது நான் எதிர்பார்க்காத ஒன்று.

பார்வையாளர்களில் பிரான்சிஸ் கிருபா, மணா, பத்ரி, தேவி பாரதி போன்ற எனக்குத் தெரிந்த சில முகங்களையும் பார்க்க முடிந்தது.

பார்ப்பனீயம் என்பது சகித்துக் கொள்ளவியலாத ஒன்று என்பதனை தொடர்ச்சியான நிகழ்வுகள் உணர்த்துவது மன நிறைவைத் தருகின்றது.

Oct 16, 2007

என் த‌ற்கொலைக்கான‌ வாக்குமூல‌ம்

இந்தக் காரணத்திற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள். நான் சொல்லும் காரணம் நம்பும்படியாக இருந்தால் நான் தற்கொலை செய்து கொண்டேன் என்று நம்புங்கள். இல்லையென்றால் எனக்கு தெரியப்படுத்தவும்.

என்ன சொல்லி அழுவது என் கதையை? எந்தப் பெண்ணும் என்னைக் காதலிப்பதில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். நான் ஒன்றும் அபிஷேக் பச்சன் இல்லைதான். அட ஐஸ்வர்யா ராய் வேண்டாம். குறைந்தபட்சம் என் அளவிற்கு பிரியங்கா சோப்ராவாவது திரும்பிப் பார்க்கலாம் இல்லையா? ம்ஹூம். கீழ் வீட்டுக்கு பாத்திரம் கழுவ வரும் விஜயா கூட பார்ப்பதில்லை.

இரண்டு மூன்று நாட்கள் கட்டையனோடு போனில் பேசினேன். கட்டையன் அவனாக போன் செய்ய மாட்டான். கஞ்சப்பயல். நான் செய்தால் மணிக்கணக்கில் மொக்கை போடுவான். அதுவும் இந்த முறை அறிவுரை வேறு. தமிழ்நாட்டில்தான் யார் வேண்டுமானாலும் அறிவுரை கொடுப்பார்களே. அதுவும் நொந்து கிடப்பவனிடம்தான் வண்டி வண்டியாய் கொட்டுவார்கள்.

கட்டையனின் அறிவுரை பெரிதாக ஒன்றுமில்லை. காதலி இல்லை என்றாலும் வருத்தப்படக் கூடாது என்றும், பொழுது போவதே தெரியாமல் 'கடலை' போடுவதற்கு தோழிகளை தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான்.

இப்படி எல்லாம் சொன்னால் கூட கட்டையனை மன்மதன் என்று நினைத்துக் நீங்கள் ஏமாற வேண்டாம். இவன் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் மாங்காய் என்பதுதான் என்னைப் பற்றிய அவன் எண்ணம். நேரம் காலம் பார்க்காமல் உடற்பயிற்சி செய்கிறேன் என்று உடம்பை மட்டும்தான் ஏற்றியிருக்கிறான். அதுவும் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம், நான், சந்திரசேகர ஆசாத், தனேஷ், கட்டையன் நான்கு பேரையும் நூற்றி இருபத்தைந்தாம் எண் அறையில் அடைத்து வைத்திருந்தார்கள்.

தனேஷ்,நான்,ஆசாத் மூன்று பேரும் கிழக்கு மேற்காக படுத்துக் கொள்ள, கட்டையன் மட்டும் வடக்கு தெற்காக படுத்திருந்தான். கொஞ்ச நாளில் தன்னால் வடக்கு தெற்காக படுக்க முடியாது என்றும் பேய்க்கனவு வருகிறதென்றும் சொன்னான். மற்ற இரண்டு பேரும் மறுத்துவிட, நான் திருவளத்தானாகிவிட்டேன்.

அடக்கடவுளே. பேய்க்கனவு எல்லாம் ஒன்றுமில்லை. இந்த குண்டன் தனேஷ் இருக்கிறான் பாருங்க‌ள். சொன்னால் சிரிக்க‌க் கூடாது. ச‌னிய‌ன் உள்ளாடை போடாம‌ல் லுங்கி க‌ட்டித் தூங்குகிறான். வ‌ட‌க்கு தெற்காக‌ ப‌டுத்த‌ க‌ட்டைய‌ன் வெறுப்பேறி பேய், பிசாசை எல்லாம் சொல்லி என்னை மாட்டிவிட்டான். நான் என்ன‌ செய்வ‌து என்று தெரியாம‌ல் ஒரு வ‌ருட‌ம் 'பேய்க்க‌ன‌வோடு'தான் உற‌ங்கினேன். அந்த‌ச் ச‌ம‌யங்க‌ளில் எல்லாம் ந‌டு ராத்திரியில் 'எக்ச‌ர்சைஸ்' செய்து க‌ட்டைய‌ன் பெருமூச்சுவிடுவான். என‌க்கு எரிச்ச‌லாக‌ வ‌ந்தாலும் அட‌க்கிக் கொண்டு ப‌டுத்துக் கிட‌ப்பேன்.

உட‌ம்புதான் க‌ழுமுண்ட‌ராய‌ன் மாதிரி. யாராவ‌து கொஞ்ச‌ம் ச‌த்த‌மாக‌ பேசினால் போதும் ந‌டுங்கி விடுவான். எதையோ சொல்ல‌ ஆர‌ம்பித்து எங்கேயோ வ‌ந்துவிட்டேன். கதை சொல்லும் போது பேச்சு மாறினால் கொஞ்ச‌ம் எடுத்துச் சொல்லுங்க‌ள்.

'கட‌லை' போடுவ‌த‌ற்கென்று பெண்ணை தயார் செய்வ‌து ந‌ல்ல‌தாக‌ப் ப‌ட்டாலும் எப்ப‌டி ஆர‌ம்பிப்ப‌து என்றெல்லாம் ஒன்றும் விளங்க‌வில்லை. ந‌ல்ல‌ வேளையாக‌ வித்யா ஏதோ சான்றித‌ழ் தேர்வு எழுதுகிறாளாம். வித்யாவும் என் அலுவ‌ல‌கம்தான். த‌மிழைக் கொலை செய்து பேசுவாள். அவ‌ளின் அப்பா சென்னையில் ப‌ணிபுரிவ‌தால் த‌மிழ் பேசுவ‌தாக‌ சொல்லியிருக்கிறாள்.

ப‌வ்ய‌மாக‌ ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். "தேர்வுக்கு என் வாழ்த்துக்க‌ள். ந‌ன்றாக‌ எழுத‌வும்". அடுத்த‌ மூன்று நிமிட‌த்தில் என‌க்கு அழைப்பு. வித்யாதான். அடேய‌ப்பா. 'ர‌த்த‌ம் சுல்லுன்னு ஏறுச்சுடா மாப்ள' என்று ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சொல்லி கேள்விப்ப‌ட்டிருக்கிறேன். ஆனால் அப்பொழுதுதான் என‌க்கு முத‌ன்முத‌லாக‌ ஏறிய‌து.

அவ‌ள் கேட்ட‌ கேள்வி கொஞ்ச‌ம் வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்த‌துதான் என்றாலும் முழ‌ம் ஏறினால் ஜாண் ச‌றுக்குவ‌து ச‌க‌ஜ‌ம்தானே. "இந்த நெம்பர்ல இருந்து எஸ்.எம்.எஸ் வ‌ந்துச்சு. இது யாரோட‌ நெம்ப‌ர்ன்னு தெரிய‌ல‌" என்றாள்.
கொஞ்சம் வழிந்து கொண்டே "உங்களுக்கு விஷ் பண்ணலாம்ன்னு நான் தான்".

"தேங்க்ஸ் எ லாட்" என்றாள். முத்தொன்பது வினாடிகளில் பேச்சை முடித்துக் கொண்டோம். கொஞ்சம் அதிகமாக வழிந்துவிட்டேனோ என்று சந்தேகமாக இருந்தாலும், முத்தொன்பது வினாடியில் வழிவதை அவளால் கண்டறிய முடியாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

அவ‌ள் என்ன‌மோ சொல்லி இருக்க‌ட்டும் ஆனால் அவ‌ள் என‌க்கு போன் செய்துவிட்டாள். அதுதான் முக்கிய‌ம். இது வேறு யாராக‌ இருந்தாலும் அவ‌ள் போன் செய்திருப்பாள் என்று சொல்லி என்னை வெறுப்பேற்றாதீர்க‌ள்.
ராத்திரி ரூம்மேட் வேறு இல்லை. நான் மட்டும் தனியாக இருக்கிறேன்.

க‌ற்ப‌னைக் குதிரை ஓட‌ ஆர‌ம்பித்துவிட்ட‌து. க‌ற்ப‌னைக் குதிரை சுமாராக‌ ஓடும் ஜ‌ப்ஷா வ‌கைக் குதிரை இல்லை. ந‌ல்ல‌ அரேபிய‌க் குதிரை. த‌றிகெட்டு ஓடுகிற‌து. இழுத்துப் பிடித்தால் என்னையும் இழுத்துவிடும் போலிருக்கிற‌து. ஓட‌ட்டும் என்று விட்டுவிட்டேன்.

ஒரே இர‌வில், க‌ல்யாண‌ம் வ‌ரைக்கும் போய்விட்டேன். இந்த‌ இட‌த்தில் ஒரு ஸீன் சொல்லியே தீர‌ வேண்டும். வெங்க‌ல‌ ராவ் பார்க்கில் என் ம‌டி மீது த‌லை வைத்து ப‌டுத்துக் கொண்டிருந்தாள். நான் அந்த‌ நில‌வை பார் எவ்வ‌ள‌வு அழ‌காக‌ இருக்கிற‌து என்றேன். இதை எங்க‌ள் தாத்தா கால‌த்தில் என்.டி.ஆர் காரு சொல்லிவிட்டார் என்றார். வேறு என்ன‌தான் சொல்வ‌து என்று தெரிய‌வில்லை. முத்த‌ம் கொடுக்க‌ முய‌ன்றேன். ஆனால் இத‌ற்கு மேல் சொல்வ‌த‌ற்கு என‌க்கு வெட்க‌மாக‌ இருக்கிற‌து.

எப்ப‌டி உற‌ங்கினேன் என்றே தெரிய‌வில்லை. விடிந்த‌ போது ச‌னிக்கிழ‌மை. இன்றுதான் தேர்வெழுதுகிறாள். ம‌திய‌ம் வ‌ரைக்கும் நான் ந‌க‌த‌தைக் க‌டித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது ஒரு குதிரை ஸ்லோமோஷ‌னில் ஓடுகிற‌து. அவ‌ள் பாஸ் செய்தாள் அனுப்ப‌ வேண்டிய‌ மெஸேஜ், தோல்விய‌டைந்தாள் அனுப்ப‌ வேண்டிய‌ மெஸேஜ் என்றெல்லாம் ஓடுகிற‌து.

மூன்று ம‌ணிக்கு மதுபாவுவை தொலைபேசியில் அழைத்தேன். அவ‌ன் வித்யாவோடு தேர்வு எழுதினான். எடுத்த‌வுட‌ன் வித்யா எவ்வ‌ள‌வு ம‌திப்பெண் என்றால் ந‌ன்றாக‌ இருக்காது என்ப‌தால் அவன் ம‌திப்பெண்ணை எல்லாம் கேட்க‌ வேண்டிய‌தாயிற்று. எவ்வ‌ள‌வு சொன்னான் என்று ம‌ற‌ந்துவிட்ட‌து. அவ‌ன் ம‌திப்பெண் என‌க்கெத‌ற்கு? கூட‌ வேறு யார் எல்லாம் தேர்வு எழுதினார்க‌ள் என்று கேட்டேன். அத‌ற்கு ஒரு பட்டிய‌லைச் சொன்னான். செள்ம்யா என்ன‌ ம‌திப்பெண், ம‌கேஷ் எவ்வ‌ள‌வு என்றெல்லாம் கேட்டுவிட்டு ச‌ந்தேக‌ம் வ‌ராத‌ ச‌ம‌ய‌மாக‌ வித்யா மதிப்பெண்ணை கேட்டுவிட்டேன்.

தொண்ணூற்று இர‌ண்டு வாங்கியிருக்கிறாள். அவ‌ள் ம‌ன‌தில் வேறு எந்த‌ப் பைய‌னும் இல்லை என்று முடிவு செய்து கொண்டேன். யாராவ‌து இருந்திருந்தால் அவ‌னை நினைத்துக் கொண்டிருப்பாள். இந்த‌ அள‌வுக்கு ம‌திப்பெண் வாங்க் முடியாது இல்லையா. ம‌னோ த‌த்துவ‌விய‌ல் குறித்த‌ என் அறிவை நினைத்து என‌க்கே பெருமையாக‌ இருக்கிற‌து.

ந‌ன்றாக‌ யோசித்து "என‌க்குத் தெரியும். நீ அறிவாளியென்று. வாழ்த்துக்க‌ள். ட்ரீட் எப்பொழுது" என்று கேட்டு அனுப்பிவிட்டேன். பிற‌குதான் யோசித்தேன். இப்பொழுது கூட‌ 'ட்ரீட்' கேட்டு என் தின்னி புத்தியைக் காட்டிவிட்டேன் என்று.

அடுத்த‌ மூன்று நிமிட‌ம் அமைதியாக‌ இருந்தேன். மூன்று நிமிட‌த்திற்கு பின்ன‌ரும் அவ‌ளிட‌மிருந்து அழைப்பு வ‌ர‌வில்லை. ஒரு எஸ்.எம்.எஸ்சூம் வ‌ர‌வில்லை. ஒற்றை வார்த்தையில் வித்யாவை மெசேஜ் அனுப்ப‌ வை என்று ந‌ட‌ந்து போகும் போது தென்ப‌ட்ட‌ கோயிலில் எல்லாம் சாமி கும்பிட்டேன். ஒரு பிள்ளையார் என்னைபார்த்து சிரிப்ப‌து போல் இருந்த‌து. எட்டு ரூபாய் கொடுத்து தேங்காய் உடைப்ப‌தாக‌ வேண்டிக் கொண்டேன். இப்பொழுது வ‌யிற‌ன் அதிகமாக‌ சிரிக்கிறான்.

நேர‌ம் அதிக‌மாகிக் கொண்டிருந்தது ஆனாலும் பதில் வரவில்லை. ச‌னிக்கிழ‌மை ஆறு ம‌ணிக்கு அவ‌ள் சினிமாவிர்கு போயிருக்க‌ வாய்ப்பிருக்கிற‌து. எப்ப‌டி எஸ்.எம்.எஸ் அனுப்புவாள்? ஆனால் 'தேங்கஸ்' என்று ஒற்றை வார்த்தை கூட‌வா அனுப்ப‌ முடியாது? ஒரு வேளை செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டுப் போய் இருந்தால்? யாருமில்லாத சமயத்தில் எப்படியாவது நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொள்ளவேண்டுமல்லவா? அதுதானே மனித இயல்பு.

ஒன்பது மணி, ப‌த்து ம‌ணி, ப‌தினொரு ம‌ணி ஆன‌து. ஆனால் ஒன்றும் உருப்ப‌டியாக‌ இல்லை. பேண்ட் பாக்கெட்டில் வைப்ப‌தை விட‌, செல்போனை ச‌ட்டைப்பையில் வைத்தால் இத‌ய‌த்திற்க‌ருகில் இருக்கும் என்று வைத்துக் கொண்டேன். அப்பொழுதும் ஒன்றும் ந‌ட‌க்க‌வில்லை.

அடுத்த‌ நாள் க‌ட்டைய‌னிட‌ம் சொன்னேன். "டேய்! நீதான்னு தெரிஞ்சுமாடா அவ‌ ரிப்ளை ப‌ண்ணுவா?" என்றான் சிரித்துக் கொண்டே. என் பீலீங்ஸ் என‌க்கு. ம‌ன‌சுக்குள் அவ‌னுக்கு சாப‌ம் விட்டேன்.

திங்க‌ட்கிழ‌மை வித்யாவிட‌ம் கேட்டுவிட்டேன். பிஸியில் ம‌ற‌ந்துவிட்டாளாம். நான் ம‌ன‌முறிந்துவிட்டேன். இருப‌த்தைந்து வ‌ய‌து பெண் இர‌ண்டே நாளில் காத‌லிக்க‌ வேண்டும் என‌ நினைப்ப‌து ச‌ரியில்லைதான் என்றாலும், என் காத‌லின் வீரிய‌ம் அப்ப‌டி. நான் என்ன செய்வது?

க‌ம்பெனியிலிருந்து வீட்டிற்கு போகும் போது த‌ற்கொலை செய்து கொள்வ‌தாக‌ முடிவு செய்து கொண்டேன். 'கார்டினால்'என்ற தூக்க மாத்திரையில் ப‌த்து விழுங்கிவிட்டேன். செவ்வாய்க்கிழ‌மை காலையில் நான் இற‌ந்துவிட்ட‌தாக‌ பேசிக் கொண்டார்க‌ள்.

என் தற்கொலைக்கான இந்த‌க் கார‌ண‌ம் உங்க‌ளுக்கு ந‌ம்பும்ப‌டியாக‌ இருக்கிற‌தா? இல்லையெனில் சொல்லவும். ந‌ம்பும்ப‌டியான‌ இன்னொரு கார‌ண‌த்தை நான் யோசித்து சொல்கிறேன்.

Oct 12, 2007

செங்கமலமும் இலக்கியமும்-ஒரு இலக்கிய விவகாரம்

அக்டோபர் காலச்சுவடு இதழில் ஆசிரியர் கண்ணன் எழுதியுள்ள பத்தி இது.
-----
இலக்கிய அவதூறுகளில் சில கோபத்தையும் சில அருவருப்பையும் ஏற்படுத்தக்கூடியவை. சமீபத்தில் என் பெயர் குறிப்பிட்டு எழுதப்பட்ட ஒரு 'படைப்பை'ப் புரட்டிப் பார்த்தபோது, இரண்டாம் உணர்வே ஏற்பட்டது. அவதூறுப் படைப்புகளை எழுதுவதில் பெண் எழுத்தாளர்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதன் உதாரணம் இந்தப் 'படைப்பு'. பால் சமத்துவம் எந்நிலையிலும் வரவேற்கப்பட வேண்டியதுதான்.

அந்தப் 'படைப்பாளியை' ஓரிருமுறைகள் சந்தர்ப்பவசமாகச் சந்தித்திருக்கிறேன். முதல்முறை இவர் உலகக் கவிஞர் ஒருவருடன் மேற்கொண்டிருந்த பயணத்தில் இடையீடாக வீட்டிற்கு வந்திருந்தபோது. பின்னர் ஒருமுறை மதுரைக் கடைத் தெருவில். மூன்றாம்முறை, தனது திட்டங்கள் கடைசிவரை தனக்கே தெரியாதபடி செயல்படும் நண்பர், ஒரு பயணத்தின்போது முன் அறிவிப்பில்லாமல் என்னை அப்'படைப்பாளி' வீட்டு வாசலில் இறக்கியபோது. மூன்றுமுறையும் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசியதில்லை. கடிதம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி, தொலைபேசித் தொடர்பு எதுவும் எப்போதும் இருந்ததில்லை. ஓரிருமுறை அவர் காலச்சுவடுக்கு அனுப்பிய 'படைப்புகள்' அவற்றிற்கு உரிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றன. தமது படைப்புகளுக்கு இடமளிக்காத ஒரு தளத்தின்மீது எழுத்தாளர்கள் வருத்தம் கொள்ளலாம். ஆனால், எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. காலச்சுவடுமீது சில எழுத்தாளர்கள் 'பிளாக் மெயில்' ரக முயற்சிகளை மேற்கொள்வது ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

இந்தப் 'படைப்பு' என் பெயர் கொண்ட ஒரு கதாபாத்திரத்திற்கும் கதாசிரியருக்குமான அல்லது கதைசொல்லிக்குமான உறவையும் ஊடலையும் புனைகிறது. மேற்படி கதையில் என் பெயர் இடம் பெற்றிருப்பது வெறும் கற்பனை என்று ஒதுக்குவோம். பத்திரிகையாளர் எனத் தொழிற் பெயர் இடம் பெறுவதையும் மறந்துவிடுவோம். மேற்படி 'படைப்பாளி'க்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை? ஏன் உங்களைத் திட்டிக்கொண்டே இருக்கிறார்? என்று சில நண்பர்கள் தில்லியிலிருந்து குமரிவரை அவ்வப்போது என்னை விசாரிப்பது இப்'படைப்பாளி'யின் மனப்பிராந்துக்கு ஆதாரமாக உள்ளது. சதா பாதாளச் சாக்கடை முன் நிற்பதுபோல முகபாவம் காட்டும் அப்'படைப்பாளி'யோடு எனக்கு ஒவ்வாமையைத் தவிர வேறு எந்த உணர்வும் ஏற்பட்டது இல்லை. ஆர்.எஸ்.எஸ். அரசாங்கம் ஏற்பட்டால், அதன் சென்சார் போர்டில் பணியாற்றத் தகுதியான ஆச்சாரமான கருத்துகள்கொண்ட இந்தப் 'படைப்பாளி', இங்கு 'முற்போக்கு' வட்டாரத்தில் உலாவுவது தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.

கதையில் இவ்வாறு ஒரு கூற்று வருகிறது "நேரடியா படுக்க வர்றியா"னு கேட்பதே யோக்கியம் என்று. தமது படைப்புகள் வழி தமது ஆற்றாமையை வெளிப்படுத்தும் படைப்பாளிகள், தமது கதாபாத்திரத்தின் சில அறிவுறுத்தல்களையும் பின்பற்றுவது நல்லது.

மேற்படி கதை வெளிவந்த 'புதிய பார்வை' இணை ஆசிரியர் மணா அவ்விதழ் வெளிவந்து சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு என்னைத் தொடர்பு கொண்டார். அவர் குரலில் பதற்றமும் வலியும். மேற்படி சிறுகதையின் உள்சரடுகள் அவரது கவனத்திற்குத் தாமதமாகவே வந்திருக்கின்றன. தெரிந்தும் என்னிடம் ஏன் கூறவில்லை என்று என்னைக் கடிந்துக்கொண்டார். உதவி ஆசிரியர்கள் அச்சிறுகதையை வெகுளித்தனமாகத் தேர்வு செய்துவிட்டார்கள் என்று வருத்தம் தெரிவித்தார். 'புதிய பார்வை' இதழ் ஏப்ரல் 1-15, 2007இல் இக்குறிப்பு இடம்பெற்றுள்ளது.

சில இதழ்களுக்கு முன் 'புதிய பார்வை'யில் வெளிவந்த ஒரு சிறுகதை, சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியவாதிகள் மத்தியில் சலனத்தை உருவாக்கியிருக்கிறது. காரணம் - குறிப்பிட்ட சிறுகதையில் பாத்திரத்தின் பெயராகக் கருதப்பட்ட ஒரு பெயர் குறிப்பாக ஒருவரைச் சுட்டுகிற விதத்தில் எழுதப்பட்டிருப்பதுதான். படைப்பாளியின் படைப்புச் சுதந்திரத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் பேரிலேயே அதைப் பிரசுரித்திருந்தோம். ஆனால் தனிப்பட்ட ஒருவர் மீதான விமர்சனத்திற்கு அந்தச் சிறுகதை வடிவத்தைப் பயன்படுத்தியிருப்பதைப் பிறகே உணர்ந்தோம். தனிப்பட்ட தாக்குதல்களும் மோசமான வசைகளும் அவ்வப்போது நவீனமாக நிகழ்கிற தமிழ் இலக்கியச் சூழலில் - 'புதிய பார்வை'யைப் பொறுத்தவரை - கடந்த இரண்டாண்டுகளாக அதைக் கவனத்துடன் தவிர்த்துவந்திருக்கிறோம். எழுதப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க -வார்த்தைகளின் மூலமாக வலியைப் பரப்பும் பிறாண்டல்களுக்கு இடமளிப்பது திரும்பத் திரும்பக் குழுவாதத்தையே கௌரவப்படுத்துவதாக அமையும் என்றிருந்த கவனத்தை மீறி, தனிப்பட்ட தாக்குதலை மையமாகக்கொண்ட சிறுகதையை வெளியிட்டதற்காக வருத்தத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

'புதிய பார்வை' குறிப்பு வெளிவந்த பிறகு ஒரு பன்மொழி எழுத்தாளர் நவீன சரோஜாதேவி ரகக் கதைகளும் டௌன்லோட் கட்டுரைகளும் எழுதி விண்புகழை எட்டியிருப்பவர் - பலருக்கும் கிளுகிளுப்போடு குறுஞ்செய்தி அனுப்பிவந்ததாக அறிந்தேன். காக்கை உகக்கும் பிணம்.

சின்னக்ளூ: அந்தப் 'படைப்பாளியின்' பெயர் 'தி'யில் ஆரம்பித்து 'மா'வில் முடியும். இந்தக் கண்டுபிடிப்பிற்கெல்லாம் பரிசு கிடையாது.

Oct 11, 2007

என்ன‌ கொடுமை சார் இது?

என்னால் துளி கூட‌ நம்பமுடியவில்லை. மாதம் நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் வல்லுநருக்கு, ரோட்டில் குழந்தையை வைத்து பிச்சை எடுக்கும் பெண் மீது காதல் வந்திருக்கிறது என்றால் நீங்கள் மட்டும் நம்பவா போகிறீர்கள். ஆனால் நீங்கள் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை.

காதல் எனக்கு இல்லை. என் 'ரூம் மேட்' வெங்க‌ட் என்கிற வெங்கடாசத்திற்கு. என்னை விட இரண்டு வயது இளையவர். ஹைதராபாத் வந்து ஐந்து மாதம்தான் ஆகிறது. பெங்களூரிலிருந்து நான் பணிபுரியும் கம்பெனிக்கு வேலையை மாற்றிக் கொண்டு வந்த போது, ஹைதராபாத்தை மேய்ந்து கொண்டிருக்கும் என் தொலைபேசி எண்னை அவரது சொந்தக்கார அம்மிணி கொடுத்திருக்கிறார். அந்த அம்மிணி ஏற்கனவே எனக்குத் தோழி.

அதுவரை தடிமாடு கணக்காக வேலைக்குப் போவதும், ஞாயிற்றுக் கிழமையானால் நல்ல கடையாகத் தேடி கோழி பிரியாணியை வஞ்சகம் இல்லாமல் தின்பதுமாகச் சுற்றிக் கொண்டிருந்த எனக்கு பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த சந்தோஷம். ஆனால் இந்தக் கடவுளுக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லை. இந்த உலகில் இருக்கும் இருநூற்றம்பது கோடி பெண்களில் ஒருத்தி கூட என்னோடு சேர்ந்து சுற்றும் வழியைச் செய்வதில்லை.

வெஙகட், சாண்டில்யன்,கல்கி என்று வாசித்துவிட்டு இ.பா,கரிச்சான் குஞ்சு வழியாக ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணனில் 'டேரா' போட்டிருக்கும் காஞ்சிச் சிங்கம். தூங்கக்ப்போகும் போது இல‌ட்சிய‌வாத‌ம் பேசிக் மொக்கை போடும் போதெல்லாம் நான் பேசாம‌ல் இருந்துவிடுவேன். வெளிநாட்டுக்கார‌னுக்கு சலாம் போட்டுவிட்டு டால‌ரையோ, யூரோவையோ எண்ணி ச‌ட்டைக்குள் போடும் ஆசாமிக‌ளின் இல‌ட்சிய‌ம் மேல் எல்லாம் என‌க்கு ந‌ம்பிக்கையில்லை. ஏன் என்றால் நானும் அதே வகைய‌றாதான்.'ம‌ர‌த்த‌ ஜென்ம‌ம்'என்று ஒருவன் சொன்னான்.

நானும், வெங்க‌ட்டும் மெக‌திப்ப‌ட்ட‌ண‌த்தில் ஒரு வீட்டை வாட‌கைக்கு எடுத்துக் கொண்டோம். அலுவ‌ல‌க‌ம் இருக்கும் இட‌ம் பேக‌ம்பேட். 49 எம் ப‌ஸ் பிடித்தால் போதும். அரைமணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக அலுவலகம் வந்து விடலாம். அதுவும் ஆந்திர‌ அர‌சாங்க‌ம், வேலைய‌ற்ற‌ இளைஞ‌ர்க‌ளுக்கென்று ஒரு திட்ட‌த்தில் நிறைய‌ 'மினிப‌ஸ்'க‌ளை இய‌க்குகிற‌து. இருப‌து பேர் அம‌ர‌க்கூடிய‌ வ‌ண்டியில் அறுப‌து பேரைத் திணித்துக் கொள்வார்க‌ள். மெக‌திப்ப‌ட்ட‌ண‌த்திலேயே இட‌ம் பிடித்து அம‌ர்ந்துவிட்டால் த‌ப்பித்துக் கொள்ள‌லாம். இல்லையென்றால் எவ‌னாவ‌து பான் போட்டு முக‌த்திற்கு முன்னாடியே பேசுவான். தெறிக்கும் எச்சில் சார‌லைத் துடைத்துக் கொண்டே வ‌ர‌ வேண்டியிருக்கும். இந்த‌ எரிச்ச‌லை போக்குவ‌த‌ற்காக‌ நான் அடிக்க‌டி முணுமுணுக்கும் பாட‌ல் 'அந்திம‌ழை பொழிகிற‌து'.

வெங்க‌ட் ஹைதராபாத் வ‌ந்த‌ நாளிலிருந்தே, தீவிர‌வாதிக‌ளுக்கு குண்டு வெடித்துப் பார்ப்ப‌துதான் பொழுதுபோக்காக‌ இருக்கிற‌து. நாங்கள் இருவரும் க‌வ‌லையே ப‌டுவ‌தில்லை. சென்ற‌முறை லும்பினி பார்க்கில் 7.55க்கு குண்டு வெடித்த‌து. 9.00 ம‌ணிக்கு ஹைத‌ராபாத் பிரியாணி ஹ‌வுஸில் மூக்கு பிடிக்க‌ தின்று கொண்டிருந்தோம்.

நான்தான் க‌ஞ்ச‌த்த‌ன‌ப்ப‌ட்டு ஒரு பைக் வாங்க‌வில்லையென்றால், வெங‌க‌ட்டும் அப்ப‌டித்தான். இர‌ண்டு பேரும் நாம் காந்தியை போல‌ 'எளிமையாக‌' வாழ்வோம் என்று தேற்றிக் கொள்வோம். ம‌ன‌சுக்குள் சிரித்துக் கொள்வேன், த‌மிழில் எப்ப‌டி மோச‌மான‌வ‌ற்றையும், ந‌ல்ல‌ வார்த்தைக‌ளை வைத்து மொழுகிவிட‌ முடிவ‌தை நினைத்து.

ப‌த்து நாட்க‌ளுக்கும் முன்ன‌தாக‌ மினிப‌ஸ்ஸில் வ‌ரும் போது, ப‌த்து ரூபாயை எடுத்து ப‌ஞ்ச‌குட்டாவில் பிச்சை எடுத்த‌வ‌ளுக்குக் கொடுத்தார். என‌க்கு விய‌ர்த்துவிடும் போலாகிவிட்ட‌து.

'பாவ‌ங்க‌. பாருங்க‌ குழ‌ந்தையை வைத்துக் கொண்டு எப்ப‌டி அழுகிறாள்' என்றார். க‌ம்பெனிக்கு ஏற்க‌ன‌வே தாம‌த‌மாகிவிட்ட‌ க‌டுப்பில் இருந்தேன். பேசாம‌ல் அலுவ‌ல‌கத்திற்கு வ‌ந்துவிட்டோம். இர‌வில்தான் யோசித்தேன் வெங்க‌ட்டின் பெரிய‌ ம‌னம் குறித்து.

அடுத்த‌ நாளும் ப‌த்து ரூபாய் கொடுத்தார். வ‌ண்டியை விட்டு கீழே இற‌ங்குங்க‌ள் என்று இற‌க்கினேன். எதுக்கு அவ‌ளுக்கு தின‌மும் ப‌த்து ரூபாய் என்றேன். அவ‌ள் தின‌மும் ஒவ்வொரு வண்டியாகச் சென்று அழுவ‌தாகவும், குழந்தையை வேறு சுமந்து திரிகிறாள். மாத‌ம் முந்நூறு ரூபாயில் ஒன்றும் ஆகிவிட‌ப்போவ‌தில்லை என்றார். 'யோவ்..உன‌க்கு பைத்திய‌மா' என்று அவ‌ளைக் காண்பித்தேன். சிக்ன‌ல் விழுந்து வ‌ண்டிக‌ள் நிற்கும் போது அழுகிறாள். ம‌ற்ற‌ நேர‌ங்க‌ளில் இன்னொரு பிச்சைக்காரியுட‌ன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். இருபத்தைந்து வயதிருக்கும். சற்று உய்ரமாக இருந்தாள். அவளின் சாமுதிரிகா ல்ட்சணம் பற்றியெல்லாம் என்னால் சொல்ல முடியாது. வேண்டுமானால் ஹைராபாத் வந்து பார்த்துக் கொள்ளுங்கள்.

மெதுவாக‌ எங்க‌ளிட‌ம் வ‌ந்த‌வ‌ள், என்னை ஏதோ ஒரு ஜ‌ந்துவைப்போல‌ பார்த்தாள். வெங்க‌ட்டை பார்த்து சிரித்தாள். என‌க்கு என்ன‌ நட‌க்கிற‌து என்று புரிய‌வில்லை. அவ‌ளிட‌ம் அடித்த‌ நாற்ற‌மும், ப‌ல்லில் ப‌டிந்திருந்த‌ க‌றையும் வெறுப்பை அதிக‌மாக்கின‌.

இர‌வு அறையில் பேசினோம்.

'ஒரு சின்ன‌ விஷ‌ய‌ம்'

'சொல்லுங்க'

'வீட்ல‌ பொண்ணு பார்க்க‌ ஆர‌ம்பிச்சுட்டாங்க‌'

'சூப்ப‌ர் வெங‌ட்'

'இல்லைங்க‌ நான் இன்னைக்கு காலையில் பார்த்தோமே அந்த‌ப்பொண்ணை க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க ஆசைப்ப‌டுறேன்'.

'யாரு? ந‌ம்ம‌ க‌ம்பெனியா?'

'இல்லை. ப‌ஞ்ச‌குட்டாவில்"

என‌க்கு அந்தச் சமயத்தில் கூட‌ அவ‌ள் பெண் என்ற‌ நினைப்பே வ‌ரவில்லை.

'ப‌ஞ்ச‌குட்டாவில் யாரையுமே பார்க்க‌வில்லையே'.

'விளையாட‌தீங்க‌. அந்த‌ப் பிச்சை எடுக்கிற‌ பெண்தான்'.

இந்த‌ இட‌த்தில் நீங்க‌ள் இருந்தால் என்ன‌ செய்திருப்பீர்க‌ள்? என‌க்குள் பெரும் பூக‌ம்ப‌ம் வ‌ந்துவிடும் போலாகிவிட்டது. அநேக‌மாக‌ ஜ‌ன்னி வ‌ந்துவிட‌க்கூடும்.பல்லை நறநறத்ததில் விழுந்துவிடும் போலிருந்தது. அந்த ஆளின் வார்த்தையை கவனியுங்கள். நான் விளையாடுகிறேனாம்.

அவ‌ளுக்கு இத‌ற்கு முன்பாக‌வே பார‌டைஸில் பிரியாணி பார்ச‌ல் வாங்கிக் கொடுத்த‌தெல்லாம் சொன்னார். பார‌டைஸில் பிரியாணி என்ன விலை தெரியுமா?நூற்றிருப‌த்தைந்து ரூபாய். இனி என‌க்கு சொல்வ‌த‌ற்கு ஒன்றுமே இருக்க‌வில்லை. ஆனாலும் கூட‌ப்ப‌ழ‌கிய‌ தோஷ‌த்திற்கு பேசாம‌ல் இருக்க‌ முடிய‌வில்லை.

அவ‌ள் வீட்டில்(?) எந்த‌ப்பிர‌ச்சினையும் வ‌ராது என்றாலும், உங்கள் வீட்டில் பிர‌ச்சினை எதுவும் வ‌ராதா என்றேன். அவ‌ளை குளிக்க‌ வைத்து மேக்க‌ப் போட்டு ச‌ரிக்க‌ட்டிவிடுவ‌தாக‌ச் சொன்ன‌தும், த‌லையில் க‌ல்லைத் தூக்கிப் போட்டு கொன்றுவிட‌லாம் போன்று இருந்த‌து. நீங்கள் ஹைதராபாத் வந்து ஒரு வேளை அவ‌ளை நேரில் பார்த்தால் உங்க‌ளுக்கும் வெங்க‌ட் மேல் இப்ப‌டித்தான் கோப‌ம் வ‌ரும். அவ‌ள் குளித்து, அழுக்கைப் போக்கி, நாற்ற‌த்தை த‌ணித்து, எண்ணெய் ப‌டாத‌ த‌லையில் சிண்டு எடுத்து, அதை விட‌ மிக‌ முக்கியமாக, ப‌ல்லின் க‌றையை போக்கி.... நினைத்தாலே த‌லை சுற்றிய‌து.

'வெங்க‌ட், இது எல்லாம் ஒத்து வ‌ராது. க‌லைவாணியோ, ச‌ங்கீதாவையோ பாருங்க‌ள் அல்ல‌து ந‌ம்ரிதா மொக‌ந்தியிட‌மாவ‌து பேசிப்பாருங்க‌ள். ஒரிசாக்காரி. கொஞ்ச‌ம் உய்ர‌மாக‌, குதிரை மாதிரி ந‌ட‌க்கிறாள். எப்ப‌டியாவ‌து வீட்டில் ச‌ம்ம‌த‌ம் வாங்கிவிட‌லாம்' என்றெல்லாம் பேசினேன்.

செவிட‌ன் காதில் ச‌ங்கு ஊதிய‌து போலாகிவிட்ட‌து. இவ‌ர்க‌ளின் காத‌ல் உட‌ல் பார்த்து வ‌ருவ‌தில்லையாம். உடலைப் பார்த்தால்தான் வ‌ந்திருக்காதே என்று நான் சொன்ன‌தும் கூட‌ செ.கா.ஊ.ச‌ங்கு தான். தின‌மும் இந்த‌க்காத‌ல் க‌தையின் அரிப்பு அதிக‌மாகிக் கொண்டே போகிற‌து.

இங்கு இருந்தால் ஒன்று நான் செத்துவிடக்கூடும் அல்லது கொலைகாரனாகி விடக்கூடும் என்பதால் இர‌ண்டு நாள் ஊருக்குப் போய்விட்டு வ‌ந்துவிட‌லாம் என்று முடிவு செய்தேன். என்ன ரொமான்ஸ் நடக்கப்போகிறதோ என திகிலாக இருந்தது. ஊரிலிருந்து திரும்பி வ‌ந்த‌ பிற‌குதான் வெங்க‌ட் ஒன்ற‌ரை மாத‌ங்க‌ளாக‌ தாய்லாந்தில் இருப்ப‌து ப‌ற்றி யோசித்தேன்.

அப்ப‌டியானால் வெங்கட்டின் இந்த‌க் காத‌ல் விவ‌கார‌ம் எல்லாம்? என‌க்கு குழ‌ப்ப‌மாக‌ இருந்த‌து. சுரேஷிட‌ம் பேசினேன். இப்படி வெங்கட் பஞ்சகுட்டா பிச்சைக்காரியை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக எனக்கு ஒரு எண்ண‌ம் வ‌ந்த‌து என்று. அவன் சிரித்துக் கொண்டே அது உன் ம‌ன‌'விஸ்கி' என்றான். எத்த‌னை நாளைக்குத்தான் 'பிராந்தி'யை உப‌யோக‌ப்ப‌டுத்துவ‌து என்று 'விஸ்கியை' உப்யோகப் படுத்தினானாம்.

எனக்கு இன்னும் ச‌ரியாக விள‌ங்க‌வில்லை. க‌தையாக‌ எழுத‌ட்டுமா என்றேன். உன் உள் ம‌ன‌ ஆசைக‌ளை நீ தீர்த்துக் கொள்ளும் 'Wish fulfillment' க‌தையாக‌ இருக்கும்டா என்றான்.

அப்ப‌டியானால் என‌க்கு அந்த‌ப்பெண்ணின் மீது ஆசையா? அட‌க்க‌ட‌வுளே. இப்பொழுதுதான் 'சென்னை 6000028' ப‌ட‌ம் பார்த்தேன். 'என்ன‌ கொடுமை சார் இது?'.

Oct 10, 2007

(எனக்குத் தெரிந்த‌)ஒரு நடிகையின் கதை

பரம ரகசியம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ரகசியம் என்பதை எழுதி வைத்தால் எல்லோருக்கும் தெரிந்துவிடாதா என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான். ஒரு விஷயம் ஊரில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டாலும் கூட ஒரே ஒருவனுக்கு மட்டும் தெரியாமல் மறைத்தால் அதுவும் ரகசியம்தானே. இதுவும் அப்படியான ரகசியம்தான்.

இந்த விஷயத்தை நீங்கள் எல்லோரும் தெரிந்து வைத்தாலும் கூட பரவாயில்லை. உங்களுக்குத் தெரிந்த விஷயம் தீப்திக்கு ம‌ட்டும் தெரிந்துவிடக் கூடாது.

தீப்தி என்னுடன் ப‌டித்த‌வ‌ள்தான். த‌ற்பொழுது ந‌டிகையாகிவிட்டாள். ந‌டிகை என்றால் டிவி சீரிய‌லில் இல்லை. திரைப்ப‌ட‌ங்க‌ளில் நடித்து முக்கியமான வாரப்பத்திரிக்கைகளின் நடுப்பக்கங்களை அலங்கரிக்கும் சினிமா நடிகை. ஆனால் தீப்தி என்ற‌ பெய‌ரில் இல்லை. உங்க‌ள் மேல் ந‌ம்பிக்கை இருக்கிற‌துதான் என்றாலும், தீப்தியின் த‌ற்போதைய‌ பெய‌ரை உங்க‌ளிட‌ம் சொல்ல எனக்கு விருப்ப‌மில்லை. இந்த‌க் க‌தையை முடிக்கும் போது உங்களில் சிலர் தீப்தி யார் என்று க‌ண்டுபிடித்து விடும் வாய்ப்பிருக்கிற‌து.

நான் எட்டாவது படிக்கும் போது நாங்கள் படித்த சசி அண்ணன் டியூசனில் தீப்தியும் சேர்ந்தாள். நாங்கள் காட்டுப் பள்ளிக்கூடத்தில் வெறும் காலோடு கில்லி ஆடிவிட்டு காலையில் அம்மா கொடுத்த‌ எட்டணாவிற்கு இலந்தப் பொடி வாங்கிக் கொண்டு புழுதியப்பியபடி டியூசனுக்கு வருவோம். காலையிலேயே நாக்கையும், ஆசையையும் அடக்க முடியாமல் ஏதாவது வாங்கித் தின்றிருந்தால், சாயந்தரமாக் ஏதாவது தின்ன வேண்டும் என்றிருக்கும் போது யாரிடமாவது 'துளியூண்டு' பொடி வாங்கி நக்கிக் கொள்வோம்.

தீப்தி எங்களை மாதிரி இல்லை. அமலா மெட்ரிகுலேஷனுக்கு ஆட்டோவில் போய்த் திரும்புவாள். பள்ளி முடிந்து வந்தவுடன், கைகால் கழுவி, துணி மாற்றி, தலை சீவி, பவுடர் அடித்து 'ஜம்' என்று டியூசனுக்கு வருவாள். சில நாட்களுக்கு ஜாதிமல்லி பூ வைத்துக் கொண்டு வருவாள். அந்த மல்லிப்பூ வாசமும், பவுடரின் நறுமணமும் எனக்கு மிகப்பிடித்ததாக இருக்கும்.

அவளோடு பேசுவதற்கான தைரியத்தைக் கூட எங்களுக்கும் அவளுக்கும் இருந்த வித்தியாசங்கள் தடுத்து வந்தன. அவள் எங்களோடு சேர்ந்தால் பன்றிக் குட்டிகளோடு பசு சேர்ந்து சுற்றுவதைப் போல ஆகிவிடும். 'கருவாயன்' குமார் எல்லாம் தெரிந்தவன் போல நடந்து கொள்வான், எங்களோடு திரியும் போது எருமை மாதிரி இருந்தாலும், பெண்களைப் பார்த்தவுடன் பெரிய மனுஷத்தனத்தை அவிழ்த்து விடுவான். 'ஆய்ஷ்மன் பவ' என்று சமஸ்கிருத வார்த்தையை தெரிந்து வைத்துக் கொண்டு அலம்பல் செய்து கொண்டு திரிந்தான். தீப்தியிடம், இந்த மந்திரத்தை நோட்டுகளில் எல்லாம் எழுதி வைத்தால் நன்றாக படிப்பு வரும் என்று சொன்னான். அவளும் எழுதிக் கொண்டாள். கருவாயன் ஹீரோவைப் போல‌ சுற்றித் திரிந்தான். அவனை விடவும் நான் கொஞ்சம் சிவப்புதான். இருந்தாலும் என்னுடன் அவள் பேசவே இல்லை.

கொஞ்ச நாளில் 'கருவாயன்'குமார் பெரிய அண்ணன், 'கூளையன்' சரவணன் சின்ன அண்ணன், தீப்தி தங்கை என்று உறவு முறை அமைத்துக் கொண்டு, அவர்கள் தனிக்குழுவாக அமர்ந்து படித்து ஒப்பித்து பார்த்துக் கொள்வார்கள். கருவாயனுக்கும், கூளையனுக்கும் கையெழுத்து வேறு அழகாக இருக்கும். என் கையெழுத்தை பார்த்து 'கோழி குப்பையை கிளறிய‌து' போல இருப்பதாக ராமசாமி வாத்தியார் குட்டு வைப்பார். இது வேறு எனக்கு எரிச்சலாக இருக்கும். மற்ற பையன்கள் இந்த விவாகாரத்தை எல்லாம் கண்டுகொள்ளவில்லையென்றாலும் எனக்கு காதில் புகை வந்து கொண்டிருந்தது.

பிரகாஷ் என்னிடம் வந்து 'டேய் அவுங்க மூணு பேரும் லவ்ஸ் பண்ணிக்கிறாங்களாமாடா' என்றான். அந்தச் ச‌மயத்தில் 'லவ்ஸ்'ன் அர்த்தம் 'கெட்ட வார்த்தை'தான். 'போடா..அவுங்க அண்ணன் தங்கச்சிடா' என்று சொன்னேன். இதைச் சொல்வது எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் பிரகாஷ் ஏதோ சொல்லிவிட்டு போய்விட்டான். இதன் பிறகு எப்படியாவது அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் இருந்தது.

என் எட்ட்ணா இலந்தப் பொடியை கருவாயனுக்கும், கூளையனுக்கும் கொடுக்க ஆரம்பித்தேன். நான் தீப்தி கூடப் பழகத்தான் இவர்களுக்கு வாங்கித்தருகிறேன் என்பதை கருவாயன் எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டான். 'எங்க கூட நீ பிரண்டா இருந்துக்கலாம். ஆனா எங்க தங்கச்சி கூட நீ சேரக் கூடாது. ஏன்னா நாங்கதான் அவளை நல்லபடியா பார்த்துக்கணும்ன்னு குமார் சொல்லி இருக்கான்' என்று கூளைய‌னை தூதாக‌ அனுப்பி சொல்ல‌ச் சொன்னான். எனக்கு வந்த கோபத்திற்கு கூளையன் பல்லைத் தட்டிவிட வேண்டும் போலிருந்தது. வேறு விஷ்யமாக இருந்தால் என் பொடியை எல்லாம் 'கக்குங்கடா' என்று சண்டை போட்டிருக்கலாம். இதற்கு சண்டையும் போட முடியாது. தீப்தியிடம் உனக்காகத்தான் சண்டை போட்டோம் என்று பாசமாக பேசி என்னை வில்லனாக்கிவிடுவார்கள்.

கால்பரீட்சை விடுமுறை சமயத்தில் எப்படியோ தீப்திக்கு நண்பனாகிவிட்டேன். எப்படி ஆனேன் என்று இப்பொழுது யோசித்தால் ஞாபகம் வரவில்லை. தீப்தியின் அம்மா பேங்க் வேலை, அப்பா கரண்ட் ஆபிஸில் வேலை என்பதால் இரண்டு பேரும் பகல் நேரத்தில் இருக்கமாட்டார்கள்.

கருவாயனும், கூளையனும் 'சீன் பாத்' எடுக்க வாய்க்காலுக்கு போய்விடுவார்கள். 'சீன் பாத்' கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெண்கள் மார்பை மறைக்கும்படி பாவாடையைக் கட்டிக் கொண்டு வாய்க்காலில் குளிப்பதை வேடிக்கை பார்ப்பது. வயலில் வேலை செய்யும் பெண்கள்தான் குளிப்பார்கள். எனக்கும் போக ஆசையாக இருக்கும் என்றாலும் தீப்தி கூட பேசுவதற்காக நான் போக மாட்டேன்.

சரி இதுவா முக்கியம்? ப்ள்ஸ் ஒன் படிக்கும் போது தீப்தியின் பக்கத்து வீட்டுக்கு அவர்களின் தூரத்துச் சொந்தக்காரக் குடும்பம் குடி வந்தது. மாமா என்று சொன்னாள். அவர்களின் மகன் படு அசிங்கமாக இருந்தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே அவள் 'பெரிய மனுஷி' ஆகிவிட்டாள் என்று எங்களோடு பழகுவதை குறைத்துக் கொண்டாள்.

ஆனால் அவர்களின் மாமா குடும்பம் வந்த பிறகு அந்த வீட்டீற்கு போகும் போதும், வரும் போதும், பொதுக் குழாயருகில் கிரிக்கெட் விளையாடும் போது பார்த்துச் சிரிப்பாள். கொஞ்ச நாட்களுக்குள்ளாக‌ தீப்தி வீட்டில் அடிக்கடி பெரும் சண்டை நடக்க ஆரம்பித்தது. பிளஸ் டூ பாதி வருடம் கழிந்த பிறகு தீப்தியின் அம்மா தீயில் கருகிப் போனார். நான் தகவல் தெரிந்து ஓடி பார்க்கும் போது, அவரை உடம்பில் துணியில்லாமல் வாழையிலை மீது படுக்க வைத்திருந்தார்கள்.

தீப்தி அழுது கொண்டிருந்தாள். நான் அதுவரை நிர்வாணமாக ஒரு பெண்ணையும் பார்த்ததில்லை என்பதால் வருத்தத்தை மீறி காமப்பார்வை பார்த்தேன். எனக்கு நான் தவறு செய்வதாகத் தோன்றியது. ஆனால் நகராமல் நின்று கொண்டிருந்தேன்.

மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற மூன்று நாட்களில் தீப்தியின் அம்மா இற்ந்துவிட்டார். தீப்தி அவளின் மாமா பையனைக் காதலித்திருக்கிறாள். இருவரும் அவர்கள் வீட்டிற்கு தெரியாமல் சென்று பாரியூர் கோவிலில் திருமணம் செய்திருக்கிறார்கள். அந்தப்பையனின் அம்மா நடத்தை சரியில்லாதவர் என்று சொன்னார்கள். அவளின் குடும்பமே 'தறிகெட்ட' குடும்பமாம். இதனால் தீப்தியின் அம்மா இவ‌ர்களின் காதலை எதிர்த்திருக்கிறார். அதையும் மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டது தெரிந்ததும் மனமுடைந்து தீயிட்டுக் கொளுத்திக் கொண்டாராம்.

ஆனால் வேறு மாதிரியும் ஒரு பேச்சு இருக்கிறது. தீப்திக்கு எப்படியாவது தன் அண்ணன் மகனை திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என அவளின் அம்மா முயன்றிருக்கிறார். இதனை தீப்தியும், அவளது அப்பாவும் எதிர்த்திருக்கிறார்கள். பேச்சுவார்த்தை முற்றிப் போய் தீப்தியின் அப்பா கன்னத்தில் அறைந்திருக்கிறார். இதனால் கோபம் வந்து தீயீட்டுக் கொண்டாராம். இந்தக் இரண்டு கதைகளையும் "விருமாண்டி" பட ஸ்டைலில் இன்னொரு நாள் சொல்கிறேன்.

இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தீப்தியும் அவரது அவளது அப்பாவும் சென்னை சென்றுவிட்டார்கள். தீப்தி ப்ளஸ் டூ தேர்வு கூட எழுதியிருக்கவில்லை. நாடகமாக இருந்தால் கதையின் இந்த இடத்தில் திரை விழ வேண்டும். திரை விலகும் போது, தீப்தி அஜீத் அல்லது விஜய்யுடன் ஆட்டம் போட்டிருக்க வேண்டும். ஆனால் க‌தை இங்கு முடிய‌வில்லை.

தீப்தியின் அம்மா இரண்டு கதையிலும் வருவது போல தானாக கொளுத்திக் கொள்ளவில்லை. தீப்திதான் கொளுத்தினாள். சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வாங்கித்தருவதாக அவளின் மாமா சொன்ன போது தீப்தியின் அம்மா தெரிவித்த மறுப்புக்கான தண்டனைதான் இது.

இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும். எப்படி உனக்கு தெரியும் என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். கேட்டாலும் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

Oct 1, 2007

என் பிரச்சினை எனக்கு

எனக்கு இருக்கும் தொந்தரவுகளிலேயே பெரும் தொந்தரவு படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுவதுதான். எனக்கு பத்து வயதாக இருந்திருந்தால் இதைப்பற்றி நான் வருந்தியிருக்கமாட்டேன். உங்களுக்கும் இது பெரிய விஷயமாக இருக்காது. ஆனால் எனக்கு இந்த ஏப்ரல் வந்தால் முப்பத்தி நான்கு வயது முடிகிறது.

தொட்டில்பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்ற பழமொழி எனக்கு இந்த விவகாரத்தில் முழுவதுமாகப் பொருந்துகிறது. ஐந்து அல்லது ஆறு வயது வரைக்கும் நான் அப்பாவிடமும், தம்பி அம்மாவிடமும் படுத்துக் கொள்வது வழக்கம். நான் படுக்கையை நனைக்கும் போதெல்லாம் அப்பாவையும் நனைத்து வைப்பதால், அப்பா தன் லுங்கியை மாற்றிக் கொள்வார். எனக்கும் வேறு ட்ரவுசரை மாற்றிவிட்டு கீழே பாய் போட்டு படுத்துக் கொள்வோம். மறுநாள் காலையிலேயே நான் நனைத்த மெத்தையை வெயிலில் காய வைப்பார்கள்.

எனக்கு பத்து வயதாகும் போது அப்பா தினமும் பாதி இரவில் எழுந்து தூக்கம் கெடுவது குறித்து சலிப்படைந்திருக்க வேண்டும். நான் அம்மாவிடமும், தம்பி அப்பாவிடமும் இடம் மாறிக் கொண்டோம். த‌ம்பி உற‌க்க‌த்தில் உதைப்ப‌தாக‌ அப்பா அவ்வ‌ப்போது புல‌ம்பி இருக்கிறார். இருந்தாலும் அடுத்த‌ ஐந்து வ‌ருடங்களுக்கு பெரிய‌ மாற்ற‌மிருக்க‌வில்லை. இந்த‌ ஐந்து வ‌ருடங்களும் அம்மா த‌ன் புட‌வையை நடு இரவில் மாற்றிக் கொண்டிருந்தார்.

ப‌தினைந்து வ‌யதிற்குள்ளாக என் விவகாரம் உற‌வின‌ர்க‌ளுக்கு எல்லாம் தெரிந்துவிட்ட‌து. கூட்ட‌மாக‌ இருக்கும் போது பேசுவதற்கான விஷயத்திற்கு பற்றாக்குறை வரும் போதெல்லாம் என் குறைதான் அவ‌ர்களுக்கு சிரிப்புக்கான‌ பொருள். அதுவும் அம்மாவின் தாய்மாம‌ன் இருக்கிறார் பாருங்க‌ள். அழிச்சாட்டிய‌ம் செய்வார்.

தூங்குவ‌த‌ற்கு முன்னால் 'அதில்' த‌வளையைக் க‌ட்டி வையுங்க‌ள். சிறுநீர் க‌ழிக்கும் போதெல்லாம் த‌வ‌ளை ஈர‌ம் க‌ண்ட‌ உற்சாக‌த்தில் துள்ளிக் குதிக்கும், ப‌ய‌த்திலேயே நிறுத்திவிடுவான் என்பார். என‌க்கு உண்மையாக‌வே செய்துவிடுவார்க‌ளோ என்ற‌ ப‌ய‌ம் தொற்றிக் கொள்ளும். வெட்கமும் வேறு வ‌ந்துவிடும். இத்த‌னை பெண்க‌ள் முன்பாக‌ இப்ப‌டி பேசுகிறாரே என்ற‌ கோப‌த்தில் கிணற்று மேட்டில் அம‌ர்ந்து அழுது கொண்டே அவ‌ரை திட்டிக் கொண்டிருப்பேன்.

அப்பொழுது பார்த்து அம‌த்தாக் கிழ‌வி கிணற்று மேட்டுக்கு வ‌ந்துவிடும்.(அம்மாவின் அம்மா). "எஞ்சாமீ...இங்க‌ வ‌ந்து பொக்குன்னு அழுவுது பாரு...உங்க‌ப்பாரு கிட‌க்குறான்...அவுனுந்தான் க‌ண்ணால‌த்து வ‌ரைக்கும் ப‌டுக்கையில‌ ஒண்ணுக்கு போனான்" என்று சொல்லி என்னைச் சமாதானப்படுத்தும். என‌க்கும் கொஞ்ச‌ம் ஆறுத‌லாக‌ இருக்கும். என்னை ச‌மாதான‌ம் செய்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது நான் கிண‌ற்று மேட்டில் த‌னியாக‌ அழுத‌தாக‌ப் ப‌ரிதாப‌மாக அமத்தா சொல்லும் போது, என‌க்கே என் மேல் சுய‌பச்சாதாப‌ம் வ‌ந்துவிடும். பொத்துக் கொண்டு அழுகை வரும். கூட்டமாக இருப்பதால் கஷ்டப்பட்டு கண்ணீரை அடக்கிக் கொள்வேன். அடுத்த‌ க‌ணமே அப்பாரு தன்‌ கிண்ட‌லை ஆர‌ம்பித்துவிடுவார்.

குதிரை முடியை எடுத்து 'அதன்' மீது க‌ட்டி வைத்தால் சிறுநீர் க‌ழிப்ப‌தை நிறுத்திவிடுவான் என்று சொல்லி 'கெக்க‌பிக்கே' என‌ச் சிரிப்பார். அது உண்மையா அல்லது பொய்யா என்று ஒருவருக்கும் தெரியாது. அவ‌ர் ச‌ரியான‌ குதிரைப் பிரிய‌ர். உல‌கின் அத்த‌னை நோய்க்கும் குதிரையிட‌ம் ம‌ருந்து இருப்ப‌தாக‌ ந‌ம்புவார். குதிரை முடி விவ‌கார‌த்தை அவ‌ர் சொன்ன‌வுட‌ன் அம்மாவும் ந‌ம்பிக்கையில் 'அப்ப‌டியா மாமா?' என்பார். என‌க்கு வ‌ந்த‌ கோப‌ம் இருக்கிற‌தே, அடுத்த‌ முறை அப்பாரு வ‌ரும் விழாக்களுக்கு வ‌ர‌வே கூடாது என்று முடிவு செய்து கொள்வேன். ஆனால் என் கையில் ஒன்றுமே இருக்காது. அடுத்த‌ முறை வ‌ரைக்கும் என் ப‌டுக்கை ப‌ழ‌க்க‌ம் எந்த‌ மாற்ற‌முமில்லாம‌ல் தொட‌ரும். அப்பாரையும் ச‌ந்திக்க‌ வேண்டி வ‌ரும்.

என‌க்கு என்ன‌ செய்வ‌து என்றே தெரிய‌வில்லை. சோம‌சுந்த‌ர‌ம் டாக்ட‌ரிட‌ம் அழைத்துச் சென்றார்க‌ள். இது மன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌து என்றும் வ‌யதாகும் போது ச‌ரியாகிவிடும் என்று சொல்லிவிட்டார். என‌க்கு கொஞ்ச‌ம் அறிவுரை சொன்னார். என‌க்கு ஒன்றுமே காதில் விழ‌வில்ல‌. அருகில் நின்று சிரித்துக் கொண்டிருந்த‌ ம‌லையாள‌ ந‌ர்ஸ் மீதுதான் கோப‌ம் வ‌ந்து கொண்டிருந்து. வெளியே வ‌ரும்போது 'ஞான் பார்க்கட்டா?' என்று அம்மாவிட‌ம் கேலியாக‌க் கேட்டாள். நான் த‌ற்கொலையே தேவ‌லாம் என்று நினைத்துக் கொண்டேன்.

ப‌த்தாம் வ‌குப்பின் விடுமுறைச் ச‌ம‌ய‌த்தில் தொட‌ர்ச்சியாக‌ ஒரு ப‌த்து நாள் ப‌டுக்கையில் சிறுநீர் க‌ழிக்க‌வில்லை. பெரும் வெற்றிவீரனாக‌ உல‌வ‌ ஆர‌ம்பித்தேன். சிறு சிறு வெற்றிக‌ளை எல்லாம் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் த‌ம்பட்ட‌ம் அடித்துக் கொள்ளும் நான் இந்த‌ வெற்றியை ம‌ட்டும் நானே கொண்டாடும்ப‌டி ஆகிவிட்ட‌து. அம்மாவுக்கு என் 'வெற்றி' குறித்து அப்ப‌டியொரு ச‌ந்தோஷ‌ம்.

அன்று ம‌திய‌ம் மொட்டை வெயிலில் கிரிக்கெட் விளையாடினேன். கைகால் எல்லாம் ப‌ய‌ங்க‌ர‌ வ‌லி. சிறுநீர் க‌ழிக்க‌ வேண்டும் போலிருந்த‌து. சாக்க‌டையில் நான் இந்த‌ப்ப‌க்க‌மும், லாரிக்கார‌ர் பைய‌ன் செந்தில் அந்த‌ப்பக்க‌மும் நின்று சிறுநீர் க‌ழித்தோம். பாதி க‌ழிக்கும் போதுதான் தெரிந்தது,எல்லாமே க‌ன‌வென்று. என் லுங்கி ந‌னைந்து போயிருந்த‌து. மெதுவாக‌ எழுந்து விள‌க்கைப் போட்ட‌தும் அம்மா விழித்துவிட்டார். 'அட‌க் கிறுக்கா!' என்று சிரித்துக் கொண்டார். நான் நொந்துவிட்டேன்.

இப்ப‌டி அவ்வ‌ப்போது ப‌டுக்கையை ந‌னைப்ப‌து அடுத்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்குத் தொட‌ர்ந்து க‌ல்லூரிக்கும் வ‌ந்துவிட்டேன். இப்பொழுதும் என் ப‌ழ‌க்க‌ம் தொட‌ர்கிற‌து என்றாலும், நான் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை. இர‌வில் நான் எழும்போதெல்லாம் அறையில் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எதைப்ப‌ற்றியும் க‌வ‌லைப்ப‌டாம‌ல் உற‌ங்குவார்க‌ள். நான் பொறுமையாக‌ லுங்கியை மாற்றிக் கொண்டு, ஈர‌ லுங்கியிலேயே பாயை சுத்த‌மாக‌ துடைத்துவிட்டு, துவைத்த‌ லுங்கியின் க‌த‌க‌த‌ப்பிலும் சோப்பு ந‌றும‌ண‌த்திலும் உற‌ங்கிவிடுவேன். ந‌ல்ல வேளையாக‌ க‌ல்லூரியில் என் விவ‌கார‌ம் யாருக்கும் தெரிய‌வில்லை. தெரிந்திருந்தால் ப‌ட்ட‌ப்பெய‌ர் வைத்து சாக‌டித்திருப்பார்க‌ள்.

க‌ல்லூரியும் முடித்து வேலைக்குப் போகும் போதும் நான் மாறியிருக்க‌வில்லை.ஆனால் இன்னும் அதிக‌மான‌ சுத‌ந்திர‌ம் கிடைத்த‌து. த‌னி அறையில் நான் க‌வ‌லையே ப‌ட‌ வேண்டிய‌தில்லாம‌ல் இருந்த‌து. அவ்வ‌ப்போது ந‌ள்ளிர‌வில் எழுவ‌துதான் எரிச்ச‌லை உண்டாக்கும். ஆனால‌ அது ப‌ர‌வாயில்லை. என்ன‌தான் இப்பிர‌ச்சினை என‌க்கு தொந்த‌ர‌வாக‌ இருந்தாலும், பகல் வேலையில் க‌ளைத்துப் போன‌ நாட்க‌ளில் என் ஊர் சாக்க‌டையில் சிறுநீர் க‌ழிப்ப‌து போன்ற‌ க‌ன‌வுக‌ளின் மூல‌மாக‌ ப‌டுக்கையில் சிறுநீர் க்ழிப்ப‌தும், தொட‌ர்ந்து வ‌ரும் லுங்கியின் க‌த‌க‌த‌ப்பும், சோப்புத்தூளின் ந‌றும‌ண‌மும் என்னைக் க‌வ‌ர்வ‌தாக‌வே இருக்கின்ற‌ன‌.

இருப‌த்தொன்ப‌து வ‌ய‌தில் க‌ல்யாண‌ம் ந‌ட‌க்கும் போதுதான் அனைத்து எதிர்கால‌க் க‌ன‌வுக‌ளையும் மீறி இந்த‌ விவ‌கார‌ம் ப‌யமாக‌த் துருத்திக் கொண்டிருந்த‌து. ஆனால் இத‌ற்காக‌ க‌ல்யாண‌ம் வேண்டாம் என்று சொல்வ‌து என்னைப் போன்ற‌ ஒரு 'வீரனுக்கு' (நானாக‌ அவ்வ‌பொழுது சொல்லி என்னை உற்சாக‌மூட்டிக்கொள்வேன்.)அழ‌கில்லை என்ப‌தால் ச‌ம்ம‌திட்துவிட்டேன்.

ஷ‌ர்மிளாவுக்கு என் விவ‌கார‌த்தைச் சொல்ல‌வில்லை. ஆணாதிக்க‌ ம‌ன‌ப்பான்மை உள்ள‌ என்னால் இதை வெளிப்ப‌டையாக‌ ஒத்துக் கொள்ள‌முடிய‌வில்லை. திரும‌ண‌த்திற்குப் பிற‌கு மூன்று நான்கு ஆண்டுக‌ள் என‌க்கு பிர‌ச்சினையில்லை. ந‌ந்துவும் பிற‌ந்துவிட்டான். அவ‌ன் எனக்கும், ஷர்மிக்கும் இடையில் ப‌டுத்துக் கொள்வான். அவ‌னுக்கு நாப்கின் அணிவிக்காம‌ல் ப‌டுக்க‌ வைப்ப‌தில்லை.

ப‌ழைய‌ வ‌ழ‌க்க‌ப்ப‌டி இன்று எதேச்சையாக என் க‌ன‌வில் சாக்க‌டை வ‌ந்துவிட்ட‌து. விழித்துப் பார்க்கும் போது ந‌னைந்து கிட‌ந்தேன். ஷ‌ர்மிளாவுக்கு இது தெரிந்தால் என‌க்கு அவ‌மான‌மாகிவிடும். ம‌னைவிதான் என்றாலும் என‌க்கு அவ‌ளிட‌ம் சொல்ல‌ வெட்க‌மாக‌ இருக்கிற‌து. அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ நந்துவின் நாப்கினை க‌ழ‌ட்டி குப்பைக் கூடையில் எறிந்துவிட்டு, ஷ‌ர்மியை எழுப்பினேன். கொஞ்ச‌ நேர‌ம் முன்பாக ந‌ந்து சிணுங்கிய‌தாக‌வும் நாப்கினை நான் தான் க‌ழ‌ட்டி படுக்க வைத்தேன் என்றும், இப்பொழுது அவ‌ன் மீண்டும் சிறுநீர் க‌ழித்துவிட்ட‌தாக‌வும் சொன்னேன்.

சோம்ப‌ல் முறித்து எழுந்த‌வ‌ளிட‌ம், 'நீ ப‌டுத்துக்கடா செல்ல‌ம், நான் பாக்கிறேன்' என்று சொன்னேன். அவ‌ளுக்கு ச‌ந்தேக‌ம் வ‌ந்திருக்குமா என்று தெரிய‌வில்லை.

இதை எழுதுவ‌தற்காக‌ டேபிள் மீது அம‌ரும் போது இந்த இரவு நேர‌த்தில் அப்ப‌டி என்ன‌ அவ‌ச‌ர‌மாக‌ எழுதுகிறீர்கள் என்றாள். க‌தை எழுதுவ‌தாக‌ச் சொன்ன‌தும் நாளை காலையில் ப‌டிக்கிறேன் என்று சொன்னாள். நான் எப்படியாவது மறைத்துவிடுவேன். நீங்கள் இதைப் ப‌டித்துவிட்டு ஷ‌ர்மியிட‌ம் சொல்லிவிடாதீர்க‌ள்.ப்ளீஸ்.