Jun 27, 2007

ஆத்ம‌ திருப்தி

தட்டானின் வாலை பிய்த்து
புல் செருகி பறக்கவிடுங்கள்
அதற்கு ராக்கெட் என்று பெயர்

பொன்வண்டின் கழுத்தில்
நூலினைக் கோர்த்து க‌ட்டி வையுங்கள்.
அடுத்த இரவில் வ‌ண்ண‌ முட்டைக‌ளிடும்

ஈர‌ம‌ண‌லில் கிட‌க்கும்
நாயின் மீது இரத்தம் தெறிக்க‌‌க் க‌ல்லெறியுங்கள்
வலியில் ஊளையிடும்

பெண்ணொருத்தி குளிக்கும் போது
அவ‌ளுக்குத் தெரியும்ப‌டியாக‌ எட்டிப்பாருங்க‌ள்.
அவ‌ள் திட்டுவ‌து காதில் விழ‌ட்டும்

கோழியின் க‌ழுத்தை
வட்டமாக திருகிக் கொல்லுங்க‌ள்
ர‌த்த‌ம் வெளியேறாத‌ க‌றி
சுவை மிக்க‌து.

தேடுங்கள்.

ஆத்ம‌திருப்தி எப்ப‌டி வேண்டுமானாலும்
கிடைக்கும்.

Jun 22, 2007

மனுஷ்ய புத்திரன் : நேர்காணல்-III

T.D. ராமகிருஷ்ணன் அவர்கள் மலையாள சஞ்சிகை ஒன்றிற்காக எடுத்த நேர்காணலின் இரண்டாம் பாகம் இது.

11. ஏன் தமிழ் எழுத்தாளர்களிடையே இந்த அளவுக்கு தனிப்பட்ட விரோதங்களும் குழுமனப்பான்மைகளும் நிலவுகின்றன?

தமிழ் இலக்கியத்தில் எட்டப்பட்டிருக்கும் பெரும் சாதனைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாதவர்களே திரும்பத் திரும்ப குழுச்சண்டைகளைப் பற்றியும் சச்சரவுகளைப் பற்றியும் பேசுகிறார்கள். உண்மையில் இந்தச் சச்சரவுகள் அனைத்தும் ஒரு தற்காலிகமான பொழுதுபோக்கு என்பதற்குமேல் அதில் இலக்கியச் சாரம் ஏதுமில்லை. இத்தகைய புகைச்சல்களும் வெறுப்புகளும் உலகெங்கிலும் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன.
அதன் வழியே அந்த மொழியின் இலக்கியப் போக்குகள் மதிப்பிடப்படுவதில்லை. மேலும் தமிழில் இந்த இலக்கியச் சச்சரவுகள் அதன் வளர்ச்சியை எந்த விதத்திலும் பாதித்ததுமில்லை. தனிமனித பிறழ்வுகள், தனிமனிதப் பிரச்சினைகளே தவிர இலக்கியப் பிரச்சினைகளே அல்ல. தற்செயலாக அவர்கள் எழுத்தாளர்களாக இருந்துவிட்டால்
அவை மொழியில் பதிவு செளிணியப்படுகின்றன. பலவீனமான எழுத்தாளர்களே சச்சரவுகளின் வெப்பத்தில் குளிர் காய்கிறார்கள். அவர்களின் நிலை மிகவும் பரிதாப மானது. அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது ஒரு கலவரம் நடக்கும்போது கடையில் இருக்கும் பொருள்களை திருடிக்கொண்டு ஓடுபவர்களுக்கு கிடைக்கும் ஆதாயத்திற்கு சமமானது. எனவே நீங்கள் தமிழ் இலக்கியத்தை சச்சரவுகளின் பரப்பாகப் பார்ப்பதை நான் கடுமையாக மறுக்கிறேன்.

12. தமிழ் இலக்கியத்தில் பெண்ணியத்தின் பாத்திரத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

அது ஒரு தரப்பு. வளர்ந்து வரும் வலுவான தரப்பு. அவர்கள் இருப்பும் மொழியும் திடமானது. கடந்த பத்தாண்டுகளில் எழுத வந்திருக்கும் பெண்களின் எண்ணிக்கையும் தீவிரமான வெளிப்பாடுகளும் பெண்ணிய எழுத்தின் மேல் பெரும் கவனத்தை உருவாக்கி இருக்கின்றன. அதில் பெரும்பாலானோர் தொடக்க கால கவிஞர்கள், எழுத்தாளர்கள். அவர்கள் ஆழமான, தனித்துவம் வாய்ந்த இலக்கியப் பிரதிகளை இனிமேல்தான் உருவாக்க வேண்டும். இப்போது நடந்துகொண்டிருப்பது ஒரு எதிர்கொள்ளல். ஒரு துவக்கப் புள்ளியின் பதட்டங்கள். ஆனால் இந்தப் புள்ளியிலிருந்து
ஒரு சிறப்பான இலக்கியப் போக்கு தமிழில் வளரும் என்பதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். இதில் மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் பல பெண் படைப்பாளிகள் இலக்கியம் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்குப் பதில் பெண்ணிய அரசியலின் சாய்மானங்களைப் பற்றிக்கொண்டு நிற்க விரும்புகிறார்கள். அரசியல் கருத்தாக்கங்களின் புரவலர்கள் ஒரு படைப்பை ஒரு நாளும் பாதுகாக்க முடியாது என்பதை பல பெண் படைப்பாளிகள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் தங்கள் படைப்பின் சவால்களை மொழிக்குள்ளும் வாழ்வினுள்ளும் தேடிச் சொல்லும்போதே இந்த யுகத்திற்கான பிரதிகளை உருவாக்க முடியும்.

13. தமிழில் ஆண் எழுத்தாளர்கள் பெண் எழுத்தாளர்களை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகிறதே.

இந்தக் கேள்வியை ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதிர்கொள்வதற்காக நான் மிகவும் கூச்சமடைகிறேன். இதுபோன்ற கேள்விகளை ஒரு எழுத்தாளனை நோக்கி எழுப்புவதற்கு நீங்களும் கூச்சமடைய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
என் நண்பரும் சிறுகதை எழுத்தாளருமான ஜீ. முருகன் ஒருமுறை எழுதினார், ‘பையன்களால் கேலி செய்யப்படும் பள்ளி மாணவிகள் தங்கள் அப்பாக்களிடம் அவர்களைப் பற்றி முறையிடுவதைப் போல சில பெண் எழுத்தாளர்கள் தங்கள் சக ஆண் எழுத்தாளர்களைப் பற்றி ஊடகங்களிடம் முறையிடுகிறார்கள் என்று.’

இதுபோன்ற பாலியல் துன்புறுத்தலுக்கு ஆண் எழுத்தாளர்களால் துன்புறுத்தப்படுவதாகச் சொல்லும் ஒரு பெண் எழுத்தாளர்கூட இதுவரை ஒரு ஆண் எழுத்தாளர் பெயரையும் எங்கும் சொல்லியதில்லை. அவர்களின் பெயர்கூட தெரியாத நிலையில் அவர்கள் எழுத்தாளர்கள் என்று எப்படி அறிந்துகொண்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

நம்முடைய சமூகத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுவது பரவலான
ஒன்று. அதிலும் அவர்கள் பொது வாழ்க்கையில் இருந்துவிட்டால் இந்தத்
துன்புறுத்தல்கள் இன்னும் அதிகமாகிவிடுகின்றன. இது ஒரு சமூகப் பிரச்சினை. துன்புறுத்தப்படும் பிற பெண்களோடு இணைந்து இப் பெண் எழுத்தாளர்கள் போராட வேண்டுமே அல்லாது தாங்கள் எழுத்தாளர்கள் என்பதற்காக தங்கள் மீதான துன்புறுத்தல்களுக்கு விசேஷ அந்தஸ்தையும் அடையாளத்தையும் கோரக் கூடாது. பொதுவாக தமிழில் பெண் எழுத்தாளர்கள் தொடர்பாக போலி சர்ச்சைகளை உருவாக்கும் பத்திரிகைகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை உற்சாகத்துடன் பிரசுரிக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளின் மூலமாக தங்களுடைய இலக்கிய அடையாளத்தை உயர்த்திக்கொள்ள யாராவது விரும்பினால் அது அவர்களுடைய
தனிப்பட்ட பிரச்சினை.

14. பொதுவாக எழுத்தாளர்களும் அறிவாளிகளும்தான் கருத்துச் சுதந்திரத்திற்காக குரல் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். தமிழில் அவ்வாறு நிகழாதது ஏன்?

கடந்த சில ஆண்டுகளில் தமிழில் பல முக்கியமான பிரச்சினைகளில் தமிழ்
எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். கூட்டறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள். பல்வேறு அரசு ஒடுக்குமுறை சம்பந்தமான உண்மை அறியும் குழுக்களில் பங்கேற்றிருக்கிறார்கள். மரண தண்டனை முதலான விஷயங்களுக்கெதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள். பொதுவாக எழுத்தாளர்களின்
கருத்துக்கள் மதிப்பீடுகளை வெகுசன ஊடகங்கள் பிரதிபலிப்பதில்லை என்பதால் வெகுசன அரசியல் இயக்கங்கள் அவற்றை முன்னிலைப்படுத்துவதில்லை என்பதால் தமிழ் எழுத்தாளர்கள் அபிப்ராயங்கள் இல்லாதவர்கள் என்று அர்த்தமல்ல.

15. தமிழில் ஆண் எழுத்தாளர்கள் ஆகட்டும், பெண் எழுத்தாளர்கள் ஆகட்டும் ஏன் விமர்சனங்களை சகித்துக்கொள்வதோ நேர்மறையாக எதிர்வினையாற்றுவதோ இல்லை?

கடந்த ஐம்பதாண்டுகளாக நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் நடந்திருக்கும்
விவாதங்களுக்கு கருத்தியல் சார்ந்த மோதல்களுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. இந்த மோதல்களில் சிலசமயம் தனிமனித கசப்புகள் இருந்திருக்கலாம். ஆனால் சி.சு. செல்லப்பா, க.நா.சு., பிரமிள், சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், அ. மார்க்ஸ், தமிழவன், ராஜ் கௌதமன், ஜெயமோகன் என எத்தனையோ விமர்சகர்கள் கோட்பாட்டு ரீதியிலும் அழகியல் பூர்வமாகவும் மிகத் தீவிரமான விமர்சனங்களையும் விவாதங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். அவை பற்றிய ஏராளமான பதிவுகள் தமிழ் சிறுபத்திரிகை வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பதிவுகளை நீங்கள் கவனித்தால்தான் தமிழில் இலக்கிய இயக்கம் என்பது கோட்பாடு சார்ந்த ஒரு தளத்தில் உருவாக்கப்பட்டதேயழிய அது வெறும் தனிமனித சச்சரவு அல்ல என்பது புரியும். இதுபோன்ற கற்பனைகளை களைய வேண்டுமென்றால் எங்களைப் படித்துப் பார்ப்பதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் கிடையாது.


16. குடும்பம் என்ற அமைப்பைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? குடும்பம் எழுத்தாளர்களின் சுதந்திரத்தை பாதிக்கிறதா?


குடும்பம் என்ற அமைப்பு தம்மளவில் நல்லதோ கெட்டதோ அல்ல. அதன்
குணாதிசயத்தை அதிலிருக்கும் மனிதர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். தவறான அதிகார வெறி கொண்ட மனிதர்கள் ஒடுக்குமுறையான குடும்பங்களையும், சுதந்திர உணர்வு கொண்டவர்கள் இணக்கமான குடும்பங்களையும் உருவாக்குகிறார்கள். எனவே இந்த அமைப்பு குறித்த பொத்தாம் பொதுவான அபிப்ராயங்களை நான் சொல்வதற்கு தயங்குகிறேன். எழுத்தாளனின் சுதந்திரம் என்பது ஒரு சிக்கலான பிரச்சினை. குடும்பம் மட்டுமல்ல சாதி, மதம், அரசியல் அமைப்பு, ஒழுக்க நியதிகள் அனைத்துமே கலைஞனின் சுதந்திரத்தை ஓரளவிற்கு கண்காணிக்கவே செய்கின்றன. இந்தக்
கண்காணிப்பை ஒரு எழுத்தாளன் எவ்வாறு மீறுகிறான், அதிலிருந்து எப்படித்
தப்பிச் செல்கிறான் என்பதுதான் கலையின் பிரச்சினை. மேலும் சுதந்திரம் என்பது கலையை உருவாக்குவதில்லை. போராட்டம்தான் உருவாக்குகிறது. வேறுவிதமாகச் சொன்னால் சுதந்திரத்தை நீங்கள் கலையின் மூலம்தான் அடைய முடியும்.

17. தமிழ்ச் சமூகம் பாலியல் சார்ந்த விஷயங்களில் ஒரு பாசாங்கான அணுகுமுறையைக் ஏன் கொண்டிருக்கிறது?

அது பழமையும் அல்லாத நவீனத்துவமுமில்லாத ஒரு சமூகத்தின் பாசாங்குகள். தமிழர்கள் இரண்டு யுகங்களுக்கிடையே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மரபு சார்ந்த ஒழுக்கவியல் மதிப்பீடுகளை ஒருபுறம் சுமக்கிறார்கள். இன்னொரு புறம் நவீன வாழ்க்கையின் எல்லையற்ற சுதந்திரங்களை கொஞ்சம் தொட்டுப்
பார்க்கிறார்கள். இது ஒரு தத்தளிப்பு. இந்தத் தத்தளிப்பு இரட்டை நிலையை
உருவாக்குகிறது. பாசாங்குகளை உருவாக்குகிறது. ஒரே நபர் பாலியல் சார்ந்த விஷயங்களை ஒடுக்குகிறவராகவும், மீறுகிறவராகவும் இருக்கிற அபத்தம் இதனால்தான் நிகழ்கிறது. பாலியல் சார்ந்த சுதந்திரம் என்பது பொதுவாக நமக்கு அறிமுகமாகி யிருக்கிறது. அது அனுபவமாக மாற இந்த சமூகத்தில் எவ்வளவோ மாறுதல்கள் நிகழவேண்டியிருக்கிறது.

18. நீங்கள் காதல், திருமணம் மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

நிறுவனங்கள் காதலை அழிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு காதலும் நிறுவனத்தை நோக்கி வளர்கின்றன. இந்த முரண்பாட்டில் எவ்வாறு ஒருவன் அல்லது ஒருத்தி தன்னுடைய காதலை தக்கவைத்துக் கொள்வது என்பது ஒரு சிக்கலான பிரச்சினை. நம்மால் திருமணம் போன்ற சமூக நிறுவனங்களை ஒழிக்க முடியாது. அதே சமயத்தில்
அந்த நிறுவனங்களை மேலும் காதலும் ஜனநாயகத் தன்மையும் கொண்டதாக எவ்வாறு மாற்றுவது என்பதைப் பற்றியே நான் சிந்திக்கிறேன்.

19. தமிழ் எழுத்தாளர்கள் ஏன் தலித் இலக்கியத்தை மைய நீரோட்டத்தில் அங்கீகரிக்க மறுக்கிறார்கள்?

எண்பதுகள் வரை தமிழில் பெருவாரியான எழுத்தாளர்கள் உயர் வகுப்பினரைச் சார்ந்தவர்கள். பெரும்பாலும் பிராமணர்கள். அந்தக் காலகட்டத்தில்கூட அவர்கள் தாங்கள் அறிந்த ஒரு வாழ்க்கையினை எழுதியிருக்கிறார்களே தவிர யாரும் சாதிய மனப்பான்மையினையோ பிறருக்கு எதிரான வெறுப்பையோ வெளிப்படுத்தியவர்கள் அல்ல. எண்பதுகளுக்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்தே பெருவாரியான படைப்பாளிகள் உருவாகி வந்திருக்கிறார்கள். இன்றும் இளம்தலைமுறை படைப்பாளி களில் உயர்சாதியினரைச் சார்ந்தவர்களைக் காண்பதே அரிது. அந்த அளவுக்கு இன்று நவீன இலக்கியப் பரப்பு முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த இளம் தலைமுறைப் படைப்பாளிகளால் நிரம்பியிருக்கிறது. ஒருவிதத்தில் சொல்லப் போனால் இவர்களே இன்று மைய நீரோட்ட படைப்பாளிகளாக இருந்து வருகிறார்கள். உண்மையில் இவர்களை அங்கீகரிக்கும் அளவிற்கு இலக்கிய அதிகாரம் படைத்த உயர்சாதி எழுத்தாளர்கள் யாரும் இல்லை.

20. நல்ல எழுத்து, மோசமான எழுத்து என்பதை நீங்கள் எந்த அளவுகோலின்படி வரையறுப்பீர்கள்?

நான் நல்ல எழுத்து, கெட்ட எழுத்து என்று வரையறுப்பது இல்லை. அவை
கருத்தியல் மற்றும் மதிப்பீடுகள் தொடர்பானவை. நான் இலக்கியத்தை அவற்றின் வழியே அணுகுவதில்லை. என்னைப் பொறுத்தவரை உயிருள்ள எழுத்து, செத்த எழுத்து என்ற இரண்டு பிரிவினைகள்தான் உள்ளன. நாம் வாழுகிற காலத்தின் உணர்வுகளையோ சிந்தனைகளையோ மொழியையோ பிரதிபலிக்காத புதுப்பிக்காத எழுத்துக்களை நான் செத்த எழுத்துக்கள் என்பேன். அவற்றைக் கொண்டாடுவதற்கான செத்த மூளைகள் இருக்கக் கூடும். உயிருள்ள எழுத்து என்பது ஒரு பண்பாட்டையே சலனமுறச் செய்வது, காலத்தின் மீது ஒரு குறுக்கீட்டை நிகழ்த்துவது, அனுபவத்தை
ஒரு ரகசிய விசையின் மூலம் முன்னோக்கிச் செலுத்துவது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இத்தகைய படைப்புகளை உருவாக்கியவர்களே அந்த மொழியின் பிரதானமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதி அத்தகைய ஒரு சக்தி. புதுமைப்பித்தனும் பிரமிளும் ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும்கூட
அத்தகைய சக்திகளே.

21. ‘வாசித்தலின் இன்பம்’ என்ற கருத்தாக்கம் வெகுசன எழுத்துக்களுக்கு
பயன்படுத்தப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?


எல்லா கலைப் பிரதிகளும் வாசித்தலின் இன்பத்தைக் கொடுக்கக்கூடியதாக
இருக்க வேண்டுமென்பதே என் குறிக்கோள். அந்த இன்பத்தை உருவாக்காத படைப்புகள் வாசகராலும் காலத்தாலும் கடுமையாக நிராகரிக்கப்பட்டுவிடும். அது எந்த வகையான எழுத்தாக இருந்தாலும் சரி, அதன் முதல் பயன்பாடு வாசகனை குதூகலமும் உவகையும் மனவிரிவும் கொள்ளச் செய்ய வேண்டும். ஒரு பிரம்மாண்டமான துயரத்தைக் குறித்த சித்தரிப்புக்கூட ஒரு வாசகனிடம் முதலில் ஏற்படுத்துவது துயரம் அல்ல. வாசிப்பின் வழியே அது முதலில் ஒரு உள்ளார்ந்த ரகசிய இன்பத்தை ஏற்படுத்துகிறது. அது அறிதலின் இன்பம். பிறகு அதிலிருந்தே அந்தப் பிரதி உருவாக்கும் துயரம் வாசகன் மேல் கவியத் தொடங்குகிறது. இது மிகவும் நுட்பமான, சிக்கலான ஒரு பிரச்சினை. வெகுசன எழுத்துக்கள் கேளிக்கைக்காக மட்டுமே எழுதப்படுகின்றன.
ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதில் கேளிக்கை என்ற அம்சம் இருப்பதே இல்லை. வெகுசன தளங்களில் பலவீனமான புத்திகூர்மையற்ற எழுத்தாளர்களே மலிவான கேளிக்கைகளைத் தொடர்ந்து உருவாக்கி வந்திருக்கிறார்கள். அந்தச் சக்கைகளை வேறு மாற்றுகள் இல்லாததால் வாசகர்கள் தொடர்ந்து சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழில் சுஜாதா இதற்கு ஒரு விதிவிலக்கு. வெகுசன எழுத்துக்
களை அதன் அசட்டுத்தனத்திலிருந்து முதலில் விடுவித்தவர் அவர்தான். வெகுசன எழுத்திற்கு நவீனத்துவத்தையும் உற்சாகத்தையும் தனித்துவமான பாணியையும் அவர் உருவாக்கினார். 50 ஆண்டு காலம் அவர் தொடர்ந்து இந்தப் புதுமையை உருவாக்குபவராக இருக்கிறார். சுஜாதாவின் எழுத்துக்கள் வாசிப்பின் இன்பத்தை பெருமளவிற்கு வாசகரிடம் உருவாக்கியவை.

22. உங்களுடைய அரசியல் என்ன? உங்கள் எழுத்தின் அரசியல் என்ன?

நான் அடிப்படையில் இடதுசாரி கொள்கைகளால் வார்க்கப்பட்டவன். பின்னர்
அவற்றின் ஏமாற்றங்களால் சற்றே மனங்கசந்து போனவன். கவிதையில் என்னுடைய அரசியல் என்பது நம்முடைய வாழ்வின் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நுண்ணதிகாரத்தின் வன்முறையை எதிர்கொள்வதாகும்.

23. இன்றைய மனித குலத்தின் பெரும் அபாயமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

மௌனம். அநீதிக்கெதிரான மௌனம்.

24. இந்துத்துவ பாஸிச சக்திகளை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

ஒரு எழுத்தாளன் என்ற முறையில் ஹிந்துத்தவ பாஸிச சக்திகளை மட்டுமல்ல, எல்லா அடிப்படை மதவாத சக்திகளையும் நான் எதிர்க்கிறேன். அவை மனித சமூகங்களுக்கிடையே தீராத பகையையும் துயரத்தையும் விளைவிக்கின்றன. இந்தியாவில் அத்வானி போன்றவர்கள் என்றால் உலக அளவில் ஜார்ஜ் புஷ்ஷ§ம் பின் லேடனும் மிகப் பெரிய மனித குல விரோதிகள் என்றே நான் குறிப்பிட விரும்புகிறேன். இவர்கள் வாழ்வுக்கும் கவிதைக்கும் எதிரானவர்கள்.

25. வன்முறை வன்முறைக்கே வித்திடும் என்ற வாதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வன்முறைக்கும் அகிம்சைக்கும் இடையே இன்று மனித குலம் தத்தளித்துக்
கொண்டிருக்கிறது. இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. வன்முறை ஒரு சூழல். நீங்கள் எந்தக் கணத்தில் அதன் ஒரு பகுதியாக மாறுகிறீர்கள் என்பதை நீங்கள் நிர்ணயிப்பதில்லை. ஆனால் எந்த நிலையிலும் வன்முறைக்கு நம் மனசாட்சியை இணங்கச் செய்யக்கூடாது. மனசாட்சி ஒரு கணம் அதற்கு இணங்கிவிட்டால் பிறகு என்றென்றும் நாம் கொலைகளையும் ரத்த வெள்ளத்தையும்
நிறுத்த முடியாது.

26. தமிழ் சமூகத்தின் மீது உலகமயமாதலின் தீவிரமான விளைவுகள் என்ன?

மூன்றாம் உலக நாடுகள் முழுக்க எது நடந்ததோ அதுதான் தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் நடக்கிறது. உள்ளூர் வளங்கள் அழிக்கப்படுதல், உள்ளூர் தொழில்கள் நசுக்கப்படுதல், உலகச் சந்தையின் ஒரு காலனியாக தமிழ் சமூகம் மாறுதல் இது ஒரு புறம் என்றால் சில புதிய தொழில் வாளிணிப்புகளும் அதையட்டிய பண்பாட்டு
மாற்றங்களும் இதன் இன்னொரு புறம். ஒருவிதத்தில் தேங்கிப்போன தமிழ்ப் பண்பாட்டு வாழ்க்கையின் மீது உலகமயமாதல் ஒரு புதிய உற்சாகத்தையும் நகர்வையும் உண்டாக்கியிருக்கிறது. ஆனால் இதன் ஆழமான விளைவுகள் நெடுங்காலத்திற்கு நம்மை பாதிக்கப் போகிறவை.

27. தமிழ் சினிமா, அரசியல், அதினாரம் மூன்றுக்குமான உறவை விளக்குங்கள்.

அதை பற்றிச் சொல்வதற்கு புதிதாக ஒன்றும் இல்லை. சினிமா நடிகர்கள் திரையில் பேசுகிற வசனங்கள் கொள்கை முழக்கங்களாகவும், அவர்களது நடத்தைகள் ரோல் மாடல்களாகவும் பாதிக்கப்படுகிற சமூகத்தில் நடிகர்கள் தலைவர்கள் ஆவதும் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் இயல்பான நிகழ்வுகள். தமிழகத்தில்
அரசியல் இயக்கங்கள் தோல்வியடைந்துவிட்டன. அவற்றிற்கு மக்களிடம் எவ்வித செல்வாக்கும் இல்லை. அரசியல் இப்போது சினிமாவைப் போல ஒரு கேளிக்கை. அதனால் இவை இரண்டும் சேர்ந்து அரசியல் அதிகாரத்தை உருவாக்கும்போது ஒட்டுமொத்த சமூகச் சூழலும் கேலியும் அபத்தமும் நிறைந்ததாக மாறிவிடுகிறது

Jun 21, 2007

அப்துல் கலாம்: மீண்டும் ஒரு முறை.

அப்துல்கலாம் மீண்டும் ஒரு முறை குடியரசுத்தலைவர் ஆகலாம் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

நாம் வாழ்ந்த காலகட்டத்தில் செயலூக்கம் மிக்க ஒரு குடியரசுத் தலைவர் என்று ஒருவர் இருந்தாரேயானால் அது அப்துல்கலாம் மட்டும்தான் என உறுதியாகச் சொல்வேன்.

தேச‌ம் முழுவ‌தும் ல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ சிறுவ‌ர்க‌ளிட‌ம் பேசியிருக்கிறார்.இது எல்லாம் ஒரு சாதனையா என்கிறீர்களா? அது சரி.

"அக்கினிக் குஞ்சொன்று க‌ண்டேன்; அதை ஆங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன்" என்ற‌ க‌விதை பொருந்தும். சிறுவ‌ர்க‌ளிட‌ம் விதைக்கும் க‌ருத்துக்க‌ள் உட‌ன‌டி ப‌ல‌ன் ஏதும் த‌ராத‌ போதும் அத‌ன் விளைவு அணைந்து போன‌தாக‌ அர்த்த‌மில்லை. கலாம் போன்ற துடிப்பான குடியரசுத் தலைவர் என்ற பட்டியல் இருந்தால் சொல்லுங்கள்.


இவ‌ர‌து சாத‌னைக‌ளை விள‌க்க‌ அல்ல‌ இந்த‌ப் ப‌திவு.

"வெற்றிக்கான‌ வாய்ப்பு உறுதியாகும் ப‌ட்ச‌த்தில் போட்டியிடுவ‌தாக‌ச் சொல்லியிருக்கிறார்". இதில் என்ன‌ த‌வ‌று இருந்து விட‌ப் போகிற‌து? . ஒரு குடிய‌ர‌சுத்த‌லைவ‌ராக‌ இருந்த‌வ‌ர், போட்டியிட்டு, தோல்வியோடு வெளியேறுவ‌தை விட‌, ஆத‌ர‌வில்லாத‌ ப‌ட்ச‌த்தில் போட்டியிலிருந்தே வில‌கிக் கொள்கிறேன் என்ப‌தில் எந்த‌ த‌வ‌றும் இருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை,

சோனியா ஏன் எதிர்க்கிறார் என்று குழ‌ப்ப‌மாக‌ இருக்கிற‌து. அவ‌ர‌து ப‌த‌வியேற்கும் ச‌ம‌ய‌த்தில் அவ‌ர‌து குடியுரிமை குறித்தான‌ வினாவொன்றை க‌லாம் எழுப்பிய‌தாலேயே சிங் அவ‌ர்க‌ளை பிர‌த‌மராக்கி 'தியாகி' ஆனார் என்ற‌ பேச்சு எழுந்ததே அது உண்மையாக‌ இருக்குமோ என‌த் தோன்றுகிற‌து? வேட்ப்பாளரை அறிவித்துவிட்டார்களாம். விலக்குவது மிகக் கடினம் அல்லவா? சரி.

ப‌த‌வி வெறி, பெண்க‌ளுக்கான‌ வாய்ப்பினை ம‌றுக்கும் ஆணாதிக்க‌ம் என்ற கூறுகளை எல்லாம் கலாம் மேல் பதிப்பதை வ‌ற‌ட்டுக் கூச்ச‌லென்று சொல்வேன். ப‌த‌வியைப் பிடித்துத் தொங்கும் சாதார‌ண‌ அர‌சிய‌ல்வாதியில்லை க‌லாம். பதவியும் பணமும் பொருட்டாக இருந்ததில்லை அவருக்கு.

ச‌ந்திர‌பாபு நாயுடு சொன்ன‌தைத் திரும்ப‌ச் சொல்வ‌தானால் "ம‌க்க‌ள் நேர‌டியாக‌ வாக்க‌ளிப்ப‌தென்றால் க‌லாம் வெற்றி குறித்து பிர‌ச்சினையேயில்லை."

ஆனால் பாழாய்ப்போன‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் அல்ல‌வா வாக்க‌ளிக்கிறார்க‌ள்?

நீங்க‌ள் ஆத‌ரவினைத் தெரிவிப்ப‌தானால் க‌லாமின் மின்ன‌ஞ்ச‌லுக்கு ஒரு மெயில் த‌ட்டிவிடுங்க‌ள். ந‌ம்மால் இய‌ன்ற‌து அது ம‌ட்டுமே.

Email: presidentofindia@rb.nic.in

Jun 11, 2007

வெர்னர் ஹெர்சாக்கின் "வொய்செக்"

நான் மிக ரசித்த ஜெர்மானிய படங்களுல் மிக முக்கியமானதாக கருதுவது, சோபியா (Shopiya Magdelana Scholl) என்ற பெண்‍, ஹிட்லர் காலத்தில் அரசுக்கெதிரான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டதற்காக, தன் அண்ணன், அவனது நண்பண் ஆகியோரோடு சேர்த்து சிரச்சேதம் செய்யப்பட்ட கதையான‌ 'தி பைனல் டேஸ்'.

அதன் பிறகு வெர்னர் ஹெர்சாக் (Werner Herzog) என்ற ஜெர்மானிய இயக்குனரின், 70களின் ஆரம்பத்தில் வெளியான Woyzeck (1979), Nosferatu the Vampyre (1979)ம‌ற்றும் 80களின் தொட‌க்க‌த்தில் வெளியான‌ Fitzcarraldo (1982) ஆகிய‌ படங்களை பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது.

இவ‌ற்றில் ஃபிட்ஸ்க‌ரால்டோ உல‌க அள‌வில் பேச‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ம் என்ற‌ போதிலும் எனக்கு வொய்செக் மிகப் பிடித்திருந்த்து. ம‌ற்ற‌ இர‌ண்டு பட‌ங்க‌ளில் இய‌ற்கையை பிர‌ம்மாண்டாக‌ காட்டியிருந்த‌ வெர்ன‌ர், வொய்செக்கில் ம‌னித‌ ம‌ன‌த்தினை க‌ண்ணாடியின் துல்லிய‌த்தோடு வ‌ர்ணித்திருந்தார்.
_________

வொய்செக், ராணுவ‌த்தில் சிப்பாயாக‌ இருக்கிறான். த‌ன் ம‌னைவிக்காக‌ நிறைய‌ ச‌ம்பாதிக்க‌ வேண்டும் என்ற‌ வெறியோடு அலையும் வொய்ச‌க், தன் கேப்ட‌னுக்கு ச‌வ‌ர‌ம் செய்வ‌து உட்ப‌ட‌ அனைத்து வித‌மான‌ ப‌ணிவிடைக‌ளையும் மேற்கொள்கிறான். உள்ளூர் ம‌ருத்துவ‌ன் ஒருவ‌னின் ஆராய்ச்சிக்காக‌ த‌ன்னை உட்ப‌டுத்திக்கொள்கிறான். ப‌ட்டாணி ம‌ட்டுமே உண்டு வாழ‌ச்சொல்லும் ம‌ருத்துவ‌னின் க‌ட்ட‌ளையாளும், மிக‌த் தீவிர‌ சிந்த‌னையாளும் அவ‌னைச் சுற்றிலும் ஓசைக‌ள் கேட்டுக் கொண்டேயிருப்ப‌தாக‌ உணர‌த்துவ‌ங்குகிறான். நகரத்தின் மையத்திலிருந்து எழும் புகை அவனைத் தொடர்ந்து துரத்தி வதைப்பதாக பயப்படுகிறான். அவ‌னது செய‌ல்பாடுக‌ள் முற்றிலுமாக‌ நிலை குலையத் துவ‌ங்குகின்ற‌ன‌. இதே ச‌ம‌ய‌த்தில் அவ‌ன‌து ம‌னைவி, ஆண்டர்ஸ் என்னும் 'டிரம்' இசைக்க‌ருவி வாசிப்ப‌வ‌னோடு காத‌ல் கொள்கிறாள்.

வொய்செக்கிட‌ம், அவ‌னது கேப்டனும், ம‌ருத்துவ‌னும் "உன் சூப்பில் யாரேனுமுடைய தாடி முடி கிட‌ந்த்ததா? இல்லையெனிலும் ஒரு ஜோடி இத‌ழ்க‌ளில் கிடைக்கக் கூடும்" என்கிறார்க‌ள். அதிர்ச்சிய‌டையும் வொய்செக், த‌ன் ம‌னைவியிட‌ம் விசாரிக்கிறான்.

த‌ன‌க்குத்தானே பித‌ற்றித்திரியும் அவ‌னிட‌ம், ஆன்ட்ர்ஸ் தான் ஒரு ஆண் என்று அவளின் தொடைகள் அழகாக இருப்பதாகவும் பேச‌, கோப‌த்தின் உச்ச‌ நிலைக்குச் செல்கிறான். ஆண்ட‌ர்ஸோடு, அவ‌ன‌ ம‌னைவி ஒரு விடுதியில் ந‌ட‌ன‌மாடிக்கொண்டிருப்ப‌தை க‌வ‌னித்துவிடும் வொய்செக்கின் காதுக‌ளில் "நிறுத்தாதே" என்ற‌ அவ‌ள‌து சொற்க‌ள் விழுகின்ற‌ன. தொட‌ர்ச்சியாக‌ அதே சொற்க‌ளைத் திரும்ப‌ திரும்ப‌ உச்ச‌ரிக்கிறான்.

த‌ன் ம‌னைவியை த‌னியாக‌ அழைத்துச் சென்று ந‌திக்க‌ரையில் கொலை செய்துவிட்டு நடன விடுதிக்குச் செல்கிறான். அங்கு "கேட்டி" என்ற‌வ‌ளோடு வெறித்த‌ன‌மாக‌ ந‌ட‌ன‌மாடுகிறான். அவ‌ள், அவ‌ன்து க‌ர‌ங்க‌ளில் இருக்கும் இர‌த்த‌ம் குறித்து விசாரிக்கிறாள். ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் அவ‌ளோடு சேர்ந்து கொள்ள‌, மூர்க்க‌மாக‌ வெளியேறி தான் வீசிய‌ க‌த்தியை ந‌திக்க‌ரையில் தேடுகிறான். அத‌னை எடுத்து ந‌திக்குள் வீசிய‌ பிற‌கு, ந‌ம்பிக்கையில்லாம‌ல் மீண்டும் எடுதது வீசுகிறான். ந‌தியின் உட்புற‌மாக‌ ந‌க‌ர்ந்து காணாம‌ல் போகிறான்.

ம‌றுநாள் காலையில், ந‌கர‌த்தின் காவ‌ல‌ர்க‌ள் "மிக‌ அழ‌கான‌ கொலை. ந‌ம் வாழ்நாளில் க‌ண்டிராத‌ கொலை" என்று வ‌ர்ணிக்கிறார்க‌ள்.
_________

இந்த‌ப்ப‌ட‌ம் ப‌தினெட்டு நாளில் எடுத்து முடிக்க‌ப்ப‌ட்ட‌து.
__________

இந்த‌ப்ப‌ட‌த்தின் மைய‌ இழை ஒரு ஆண், பெண்ணின் மீது வைத்திருக்கும் அள‌வுக்கு மீறிய‌ அன்பின் வெளிப்பாடுதான். அன்பினை வெளிப்ப‌டுத்த‌த் தெரியாத‌ ப‌ரிதாப‌த்திற்குரிய‌தான‌ க‌தாபாத்திர‌மாக‌ Klaus Kinski அற்புத‌மாக‌ ந‌டித்திருப்பார். த‌ன் இய‌லாமையை எந்த‌ இட‌த்திலும் ம‌றுக்காத‌ க‌தாபாத்திர‌ம். வொய்செக்கின் ம‌னைவியாக‌ Eva Mattes. தான் செய்வ‌து த‌வறென்று உண‌ர்கிறாள். அட‌க்க‌விய‌லாத‌ காம‌ம் ஒரு பேயைப் போல‌ துர‌த்துகிற‌து அவ‌ளை.

பெண்ணின் ம‌ன‌த்த‌ள‌த்தில் இருக்கும் வெவேறு ந‌ட்பு அடுக்குக‌ளும் த‌ன‌க்குத் தெரிந்தாக‌ வேண்டும் என்ற‌ ஆசை அந்த‌ த‌ள‌ங்க‌ளிள் எந்த‌த் த‌ள‌த்திலும் தான் இருந்தாலும் ஒரு ஆணுக்கு இருக்கிற‌து. அது குறித்தான‌ த‌க‌வ‌ல்க‌ள் தெரிய‌வ‌ராத‌ போது, அவற்றை ம‌ர்ம‌ங்க‌ளாக‌ உணர‌த்துவ‌ங்குகிறான். தான் ம‌ற்ற‌வ‌ர்க‌ளோடு போட்டியிட‌ இய‌லாத‌வ‌னோ என்ற‌ தாழ்வுண‌ர்ச்சி வ‌ரும்போது, எப்ப‌டியாவ‌து வென்றுவிட‌ முனைப்பு காட்டும் ம‌ன‌ம் எந்த‌க் காரிய‌த்தையும் செய்துவிட‌த் துணிகிற‌து.

வில‌கி இருந்து ம‌கிழ்ச்சிய‌டையும் ச‌ந்தோஷ‌த்தை தொட்டுப்பார்க்க‌ முய‌ல்வ‌தில்லை.
_______________

Jun 10, 2007

ம‌னுஷ்ய‌ புத்திரன்: நேர்காண‌ல்-II

1. நவீன தமிழ் இலக்கியத்தின் சமகால போக்குகள் குறித்து கூறுங்கள்

நவீன தமிழ் இலக்கியம் எப்போதும் பல்வேறு பாதைகளையும் திசைவெளிகளையும் கொண்டதாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஒரு புதிய அலை நவீன தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் தீவிரமான சலனங்களை ஏற்படுத்தி வந்திருப்பதை நாங்கள் பார்க்கிறோம். நவீனத்துவம் உருவாக்கிய இலக்கியப் பிரதிகளும் விமர்சனங்களும் எண்பதுகள் வரை தமிழில் கோலோச்சின. புதுமைப்பித்தன், கு.ப.ரா., ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கு. அழகிரிசாமி, அசோகமித்திரன்,
தி. ஜானகிராமன்,ஆதவன்,வண்ணதாசன், வண்ணநிலவன் போன்ற நவீனத்துவத்தின் உச்சங்களைத் தொட்ட படைப்பாளிகளின் சாதனைகளைத்தான் அதுவரை தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் வரும் இளம் படைப்பாளிகள் மேல் பெரும் நிழலாக விழுந்துகொண்டு இருந்தது. அந்த நிழல்களைச் சார்ந்தே மொத்த தமிழ் இலக்கியமும் நகர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் எண்பதுகளுக்குப் பிறகு தமிழ் இலக்கியம் பெரும் உடைவுகளின் மாற்றங்களின் விளைநிலமாக மாறிவிட்டது என்று கூறலாம். இலக்கியம் குறித்த அதுவரையிலான நம்பிக்கைகளும் ஒழுங்குகளும் தீவிரமாகக் கலைத்துப் போடப்பட்டன. மேஜிக்கல் ரியலிச, பின்நவீனத்துவப் படைப்புகள் சார்ந்த அறிமுகமும் அதுகுறித்த விவாதங்களும் புதிய படைப்பியல் சார்ந்த கேள்விகளை எழுப்பின. தமிழில் நவீனத்துவம் சார்ந்த பெரும் படைப்பாளிகள் இயங்கிய காலகட்டத்திலேயே நவீனத்துவம் உருவாக்கும் எல்லைகளை மீறிய, அவற்றில் சிறிய உடைப்புகளை ஏற்படுத்திய படைப்பாளிகளாகபுனைகதையில் மௌனி, லா.சா. ராமமிர்தம், நகுலன் ஆகியோரும் கவிதையில் பிரமிளும் செயல்பட்டனர். இவர்கள் எண்பதுகளில் உருவாகிய புதிய அலைக்கு ஒருவிதத்தில் மானசீகமான முன்னோடிகள் என்றும் கூறலாம். ஜெயமோகனும், எஸ். ராமகிருஷ்ணனும் கோணங்கியும் சாரு நிவேதிதாவும் புதிய கதை மொழியினைத்தீவிரமாகப் பரிட்சித்துப் பார்த்த முதன்மையான படைப்பாளிகளாக உருவெடுத்தனர். இவர்கள் தங்களுக்குப் பின்வந்த அத்தனை இளம் கதைசொல்லிகளையும் பாதித்தனர் என்றால் அது மிகையில்லை. நகல்களும் போலி செளிணிதல்களும் ஒருபுறம் நடந்தபோதும்,இன்னொரு புறம் தமிழ்க் கதையை விதம்விதமான வேடிக்கைகளின் பரிசோதனைகளின் களமாக இவர்கள் மாற்றினர். இவர்களோடு செயல்பட்ட படைப்பு மற்றும் கோட்பாடு சார்ந்த பலர் பின்னர் இலக்கியத்திலிருந்தே முற்றாக விலகிச் சென்றனர். சில்வியா,நாகார்ஜுனன் என்று காணாமல் போனவர்களின் ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. புனைகதையில் நிகழ்ந்த இத்தகைய வெளிப்படையான உடைப்புகள் எதுவும் நவீன கவிதையில் நிகழவில்லை. கோட்பாட்டுவாதிகளால் தமிழ்க் கவிதை தீவிரமாககுறுக்கீடு செய்யப்படாததும் அதன் நீண்ட மரபும் அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் தமிழ்க் கவிதை மிகத் தீவிரமாக நகர்ந்துகொண்டே இருக்கிறது.

நவீன கவிதையின் துவக்கக் காலத்தில் கோலோச்சிய உருவகம், படிமம் போன்றவை பிற்காலக் கவிஞர்களால் பெரும் சுமைகளெனக் கருதப்பட்டு உதறப்பட்டன. கவிதை மேலும் மேலும் நேரடித் தன்மையையும் தமிழ் வாழ்வின் யதார்த்தத்தை நெருங்கிச்செல்வதாகவும் மாற்றமடைந்தது.
90களை இலக்கியத்தில் அரசியல் இயக்கங்களின் காலகட்டம் எனலாம். குறிப்பாக தலித்தியமும் பெண்ணியமும் பெரும் விவாதப் பொருளாக இக்காலகட்டத்தில் மாறின. இலக்கியத்தில் இப்போக்குகள் தீவிரமாக வெளிப்பட்டன. தமிழில் குரலற்றவர்கள் முதன்முதலாக தங்களின் குரல்களை இலக்கியத்தில் பதிவு செய்தார்கள்.அதுவரை நவீன தமிழ் இலக்கியம் என்பது உயர்சாதியிலிருந்து வந்தவர்களாலேயே பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு வந்தது.

புதிதாக கல்வியும் அரசியல் வலிமையும் பெற்ற சமூகப் பிரிவினர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அவமானங்களையும் சமூக தளத்தில் எதிர்த்துப் போராடியது போலவே இலக்கியத்திலும் உக்கிரமான குரல்களை எழுப்பினர். புனைகதைகள் பெண்ணியத்தின் போக்குகள் பெரிய அளவிற்கு உருவாகாத போதும் ஒரு புதிய தலைமுறை பெண் கவிஞர்கள்தமிழில் தனித்த அடையாளங்களுடன் உருவாகினர். அவர்களின் இலக்கியப் பிரதிகளைச் சுற்றி இடையறாத சர்ச்சைகளும் கேள்விகளும் தொடர்ந்து எழுப்பப்பட்டன. தலித்தியமும் பெண்ணியமும் தமிழ் இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திய அமைதியின்மைகள் படைப்பின் புதிய சாத்தியப்பாடுகளை இன்று திறந்துவிட்டுள்ளன.

இன்றைய காலகட்டத்தில் சற்றே மந்தமான ஒரு சூழல் நிலவுவதாகத் தோன்றுகிறது. இன்று இளைய தலைமுறையினரிடம் பெரும் நம்பிக்கைக்குரிய குரல்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. படைப்பு ரீதியான செயல்பாடுகளைவிட ஊடகம் சார்ந்த செயல்பாடுகள் எழுத்தாளர்களின் முக்கிய பணியாக மாறிவருகிறது. இலக்கியத்தை ஆதாரமான இலட்சியமாகக் கொண்ட தலைமுறை அல்ல இது. 90களில் உற்சாகமாக விவாதிக்கப்பட்ட கோட்பாடுகள் இன்று பலவீனமடைந்துவிட்டன. சமூகத்தில் லட்சியவாதம் எல்லா இடங்களிலும் மடிந்துவிட்டதுபோல் இலக்கியத்திலும் மடிந்துவருகிறது. நான் அவநம்பிக்கையை பிரதிபலிக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில்இலக்கியம் சார்ந்த கேள்விகள் எவை என்பது குறித்து ஒரு குழப்பமான இடத்தை வந்து சேர்ந்திருக்கிறோம்.

2. தமிழ் கலாச்சார வெளியில் இலக்கியம் விளிம்பு நிலையில் இருப்பதற்கு குறிப்பான காரணங்கள் எதுவும் உண்டா?

அந்தக் காரனங்கள் எங்களது ஒரு நூற்றாண்டு அரசியல் வரலாற்றோடுதொடர்புடையவை. மிகவும் வெளிப்படையானவையும் கூட. திராவிட இயக்க அரசியல் ஒரு விழிப்புணர்வு இயக்கமாக தமிழில் உருவான போதும் அது தமிழில் மரபின் சாதகமான அம்சங்களை நிராகரித்துவிட்டது. அது மட்டுமல்ல அதுநவீனத்துவத்திற்கும் எதிரானதாக இருந்தது. அதேபோல இடதுசாரி இயக்கங்கள் இங்கு ஒரு சிந்தனாபூர்வமான அறிவுலக மறுமலர்ச்சியைக் கொண்டு வருவதற்கு பதில் உள்ளீடற்ற அரசியல் இயக்கமாக மாறிவிட்டன. திராவிட இயக்கத்தினரைவிட மிகக் கடுமையான போக்குகளை நவீனத்துவத்திற்கு எதிராக இடதுசாரிகள்மேற்கொண்டனர். அவர்களால் நவீன தமிழ் இலக்கியத்தில் உருவான புதியபோக்குகளை புரிந்துகொள்ளவோ உள்வாங்கவோ முடியவில்லை. அவை தனிமனித கலையின் சீரழிவுகள் என வாதாடினர். இவ்வாறு திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கம் இரண்டுமே வெகுசன தளத்திலிருந்து நவீன இலக்கியம் அகற்றப்படுவதில் முக்கியப் பங்காற்றின.

திராவிட இயக்கம் ஊடகங்களிலும் கல்வி அமைப்புகளிலும் நவீன இலக்கியப் போக்குகஷீமீ பிரதிபலிக்கப்படாமல் போனதில் பெரும் பங்காற்றியிருக்கிறது. ஒரு சமூகம், ஊடகங்களாலும் கல்வி அமைப்புகளாலும்தான்பயிற்றுவிக்கப்படுகிறது. அவையுடனான தொடர்பிலிருந்து நவீன இலக்கியம் துண்டிக்கப்பட்ட பிறகு அவை விளிம்பு நிலைக்குத் தஷீமீளப்படுவது மிகவும் ஒரு இயற்கையான நிகழ்வு. தமிழில் அதுதான் நடந்தது. பிறகு போலியான முற்போக்கு கோஷங்கள் சிந்தனையின் தளத்தையும் பண்பாட்டுக் களனை சினிமாவின் கேளிக்கையும்கைப்பற்றிக் கொண்டுவிட்டன. உண்மையில் இவை இரண்டும் ஒன்றே என்றுகூட சொல்லலாம். எங்கும் காயடிக்கப்பட்ட சமூகத்தின் சிந்தனையும் மொழியும் கோலோச்சின. நவீன நாடகம், நவீன இலக்கியம், நவீன சினிமா அனைத்தும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு, வெகுசன கலைகளும் அரசியலும் தமிழர்களின் சமூகப் பண்பாட்டு வாழ்க்கையினை கைப்பற்றிக் கொண்டது. உண்மையில் தமிழின் பிரம்மாண்டமான இலக்கிய மரபையும் செழுமையையும் இன்று தூசுகளும் கரித்தூள்களும் கவிந்துகொண்டிருக்கின்றன. இந்தக் காட்சி மிகப் பெரிய மனச்சுமையைஏற்படுத்துவதாக இருக்கிறது.

3. சமூக அரசியல் இயக்கங்களில் தமிழ் எழுத்தாளர்கள் ஏன் பங்கேற்க மறுக்கிறார்கள்?

எந்த சமூகத்தில் அல்லது எந்தக் காலகட்டத்தில் எழுத்தாளர்கள் இத்தகைய இயக்கங்களில் பங்கேற்கிறார்கள் என்பதை நீங்கள் யோசித்துப் பாருங்கள். ஒரு எழுத்தாளனின் சமூக இருப்பை எந்த சமூகம் அங்கீகரிக்கிறதோ, எந்தப் பண்பாட்டு வாழ்க்கையில் ஒரு கலைஞனின் குறுக்கீடுகள் சாத்தியப்படுகிறதோ அங்குதான் அவனது அரசியல் பங்கேற்பு சாத்தியமாகிறது. தமிழில் துரதிர்ஷ்டவசமாக அரசியலில்போலி மேதைகளும் போலி அறிஞர்களும் போலி சிந்தனாவாதிகளும் போலிகலைஞர்களும் முக்கியத்துவம் பெற்றனர்.

சிலசமயம் அதிகாரத்தையும் பெற்றனர். ஒரு இயக்கத்தில் கலைஞர்களோ சிந்தனாவாதிகளோ இல்லாமல் இருப்பது ஒரு பிரச்சினையல்ல. அது ஒரு வெற்றிடம் அல்லது இடைவெளி. அந்த இடைவெளியை எந்த நேரமும் யாராவது ஒரு சிந்தனையாளனோ கலைஞனோ நிரப்பக்கூடும். ஆனால் போலிகள் அந்த இடத்தில் அமர்ந்து இருப்பது மிகவும் ஆபத்தானது.

அவர்கள் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். சமூகத்தின் கலை மற்றும் அறிவு சார்ந்த மதிப்பீடுகளை அவர்கள்தான் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். இத்தகைய போலிகளால் அரசியல் இயக்கத்திலிருந்தும், சமூக இயக்கத்திலிருந்தும் அசலான கலைஞர்களும், சிந்தனாவாதிகளும் தொடர்ந்து அகற்றப்பட்டனர். அவர்களுக்கான கதவுகள் மூடப்பட்டன. எழுத்தாளர்களின் அபிப்ராயங்கள் முக்கியமல்ல. அவை சிலநூறு பேர்களுக்காகச் சொல்லப்படுபவை. அபிப்ராயங்களைஒரு சினிமா நடிகனோ, ஒரு சினிமா பாடலாசிரியனோ அல்லது ஒரு வெகுசன எழுத்தாளனோ மட்டுமே சொல்ல முடியும். தீவிரமான எழுத்தாளர்கள் சிந்தனையாளர் களின் பெயர்கள் கூட வெகுசன தளத்தில் இயங்குபவர்களுக்குத் தெரியாது. இந்தப் பிரம்மாண்டமான இடைவெளிக்குள் எழுத்தாளர்களின் அரசியல் பங்கேற்பு என்பதுஒரு கற்பனையான விஷயம்தான்.

4. திராவிட அரசியல் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய பாதிப்பு என்ன?

திராவிட இயக்கம் உண்மையில் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்து அசலாக எதையும் பெற்றுக்கொள்ளவும் இல்லை. நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அது எதையும் கொடுக்கவும் இல்லை. உண்மையில் அது மரபைக் கொஞ்சம் சுரண்டியது. நவீனத்துவத்தை இருட்டறைக்கு அனுப்பியது. இதுதான் திராவிட இயக்கத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்குமான தொடர்பு. அது உருவாக்கிய இலக்கியப் பிரதிகள் அனைத்தும் அவை உருவான காலத்திலேயே ஈசல்களைப் போல மடிந்துவிட்டன. உண்மையில்அவை இலக்கியப் பிரதிகளே அல்ல. மேடைச் சொற்பொழிவுகளை உருவாக்கின. சொற்பொழிவுகள் காற்றில் கரைவது இயற்கையான விஷயம். இன்று இலக்கியம் சார்ந்த விவாதங்களில் இடதுசாரிகளை ஒரு தரப்பாக எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் திராவிட இயக்கத்திற்கு அப்படிப்பட்ட ஒரு இடம்கூட கிடையாது.

5. ஒரு கவிஞனின் அல்லது கவிதையின் சமூகப் பாத்திரம் என்னவென்று கருதுகிறீர்கள்?

இந்தக் கேள்வி சமூகத்தையும் கவிதையையும் எதிர்நிலையில் நிறுத்துகிறது. அந்த வகையில் இந்தக் கேள்வியை நான் அர்த்தமற்றது என்று சொல்வேன். புராதன பழங்குடிகள் இயற்கையை எவ்வாறு மந்திரங்களை உருவாக்கினார்களோ அதேபோல் தான் வாழ்க்கையை நோக்கி நானும் சொற்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்.என்னைப் பொறுத்தவரை சமூகம் என்பது ஒரு அரசியல்ரீதியான கற்பனை. மனிதர்களை ஒரு கூட்டமாக ஒரு மந்தையாக சில பொதுநலன்களுக்கும் ஒழுங்குகளுக்கும் உட்பட்டவர்களாக உருவகிக்க விரும்புபவர்கள்தான், சமூகம் என்ற கற்பனையை தொடர்ந்து உருவாக்குகிறார்கள். அவர்களே இந்தக் கவிதை சமூகத்திற்கு என்ன பங்காற்றுகிறது, இந்தக் கவிஞனுக்கும் சமூகத்திற்கும் என்ன உறவு என்று கேட்கிறார்கள்.நீங்கள் சமூகம் என்று உருவாக்குகிற கற்பனையை கலைப்பதுதான் என்னுடையகவிதையின் பணியாகக் கருதுகிறேன். இந்தக் கற்பனை ஒரு புகைமூட்டம். இந்தப் புகைமூட்டத்தைக் கடந்து ஆழம் காணமுடியாத இருளில் உறைந்த மனித இதயங்களைத் தொடவே இந்தச் சொற்களை உருவாக்குகிறேன். அவ்வாறு தொடுவதன் மூலம் அவர்களுக்கு எது நடந்ததோ அவற்றிற்கு புதிய அர்த்தங்களையும் சொற்களையும்என் கவிதையின் மூலம் கொடுக்கிறேன். வேறுவிதமாகச் சொன்னால் நம்முடைய மதங்கள், அரசியல் இயக்கங்கள், ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் மனிதர்களின் சொற்களைத் தொடர்ந்து கொலை செய்கின்றன. அவற்றை அர்த்தமற்றதாக்குகின்றன. எப்போது உங்கள் சொற்கள் கொல்லப்படுகின்றனவோ அப்போது நீங்கள் உங்கள்அனுபவத்திலிருந்தே அந்நியப்படுத்தப்பட்டுவிடுகிறீர்கள்.

ஒரு கலைஞனின் வேலை உங்கள் அனுபவத்தை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பதுதான். உங்கள் சொற்களை உங்களுக்கு மீட்டுக்கொடுப்பதுதான். கவிதையின் சமூகப் பணி அல்லது பாத்திரம் என்று நான் இதைத்தான் கூற விரும்புகிறேன். வெளிப்படையான சமூக அரசியல் கடமைகளை கலைஞனிடம் நிர்ப்பந்திப்பவர்கள் அவனுடைய ஆதாரமானசெயல்பாட்டை அழிக்கவே விரும்புகிறார்கள்.

6. ஒரு கவிதை எழுதும் அனுபவத்தை உங்களால் விவரிக்க முடியுமா?

அது ஒரு காதலின் வெவ்வேறு தருணங்களுக்கு நிகரானது. சிலசமயம் அது ஆழ்ந்த மனநெகிழ்ச்சி. சிலசமயம் உக்கிரத்தின் நடனம். சிலசமயம் கசகசப்பும் எரிச்சலும். சிலசமயம் அது ஆழ்ந்த மௌனம். சிலசமயம் அது ஒரு நீண்ட உரையாடல். எழுதும்போது எப்போதும் ஒரேவிதமான நிலைகள் நமக்குக் கிடைப்பதில்லை. அது உண்மையில் ஹ்ருதயத்தின் முரண்பட்ட விதிகளாலும் தாளகதிகளாலும் ஆனது.அந்த அனுபவத்தின் பொதுஅம்சமாக ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லலாம், அது எப்போதும் ஒரு கனவின் அல்லது பித்துநிலையின் மங்கலான ஒரு பேதநிலையினை உருவாக்குகிறது. அந்த மங்கியக் காட்சிகளை பதற்றத்துடன் பின்தொடர்ந்து செல்வதுதான் எழுத்து சார்ந்த என்னுடைய அனுபவம்.

7. உங்கள் வாழ்க்கையில் கவிதை எதுவாக இருக்கிறது?

அதை ஒரு வழிமுறை என்று நான் கூறுவேன். இந்த உலகில் மனிதர்கள் வெவ்வேறு விதமான பாதைகளில் தங்களைக் கொண்டு செலுத்துகிறார்கள். என்னுடைய உபாயம்கவிதை. நான் அதற்குள் பறவைக்காக காத்திருக்கும் ஒரு வேடனைப் போல எப்போதும் காத்திருக்கிறேன். அந்தக் காத்திருப்பு முடிவற்றது. உண்மையில் கவிதை எனது கண்களை ஒரு வேட்டைக்காரனின் கண்களாக மாற்றிவிட்டது. அது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் படிமங்களாகவும் குறியீடுகளாகவும் காட்சிகளாகவும் மாற்றி கைப்பற்றமுனைகிறது. ஒருவிதத்தில் இது ஒரு கோணல்தான். ஆனால் இந்தக் கோணலிலிருந்து கலையின் எல்லா சாத்தியங்களும் தொடங்குகின்றன.

8. நவீன தமிழ்க் கவிதை ஏன் எப்போதும் அந்தரங்கமான தொனியிலேயே அமைந்திருக்கிறது?

அதற்கு ஒரு மரபு இருக்கிறது. அது மிகத் தொன்மையான காலத்திலிருந்தேஇலக்கியப் பிரதிகளையும் மனித அனுபவத்தையும் அகம், புறம் என்றுதான் பிரிக்கிறது. ஆனால் இந்தப் பிரிவினை நவீன யுகத்தில் ஒரு கொச்சையான அரசியல் பிரிவினையாக மாறிவிட்டது. தனிமனிதனை பேசுகிறவர்கள், சமூகத்தை பேசுகிறவர்கள் என்றகற்பனையான பிரிவினைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இது முழுக்க முழுக்க ஒரு பொய்யான பிம்பம். தமிழில் எழுதுபவர்களில் அரசியல் கோஷங்கள் எழுதுவதற்காக இன்குலாபை சமூகக் கவிஞர் என்றும், நவீன இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ஞானக்கூத்தனை தனிநபர்வாதம் பேசுபவர் என்றும் சொன்னால் அதைவிட வேறு அபத்தம் ஒன்றும் இல்லை. உண்மையில் பிரமிள், ஞானக்கூத்தன், நகுலன், கலாப்ரியாபோன்ற மூத்த தலைமுறை நவீன கவிஞர்கள் தமிழ் வாழ்க்கையின், தமிழ்ச் சமூகத்தின் பல பக்கங்களை முதன்முதலாக இலக்கியப் பரப்பிற்குஷீமீ கொண்டுவந்தார்கள். நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட போது புரட்சிகர சமூகக் கவிஞர்கள் அனைவரும் தன் மௌனத்தின் எலி வலைக்குள் பதுங்கிக்கொண்டபோது தனிமனித துயரங்களையும்அந்நியமாதலையும் தீவிரமாக எழுதிய ஆத்மாநாம் தான் அதை எதிர்த்து கவிதைகள் எழுதினார். இன்றளவும் ஆத்மாநாம் நெருக்கடிநிலை போது எழுதிய அரசியல் கவிதைகள்தான் தமிழின் முதன்மையான அரசியல் கவிதைகளாக இருக்கின்றன.

தமிழகத்தில் ஜெயலலிதா அரசு சட்டவிரோத ஆட்சியை தீவிரமாக நடத்தியபோது அதை எதிர்த்து ‘அரசி’ நெடுங்கவிதையை எழுதினேன். அது வாசர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றது. ஆனால் நான் அதிகாரபூர்வமான அரசியல் கவிஞன் அல்ல. உண்மையில் தனிமையின் இருட்டை மிக அதிகமாக எழுதிய கவிஞர்களில் நானும் ஒருவன். ஆனால் ஜெயலலிதா அரசிற்கெதிரான முதல் கவிதையை நான்தான்பதிவு செய்தேன். உண்மையில் நவீன கவிஞர்களின் சமூகப் பற்றை கேள்வி கேட்பவர்கள் தங்களுடைய இலக்கியம் சார்ந்த பலவீனங்களை அரசியல் முகமூடிகளால் மறைத்துக் கொஷீமீபவர்கள் மட்டுமே.

9. நீங்கள் தமிழின் மிக முக்கியமான இலக்கிய இதழான உயிர்மையின் ஆசிரியராக இருக்கிறீர்கள். இந்த அனுபவத்தைக் கொஞ்சம் விளக்க முடியுமா?

ஒரு பத்திரிகையாளனாக அது ஒரு வெற்றிகரமான சவால். ஒரு வாசகனாக மகிழ்ச்சியூட்டும் ஒரு அனுபவம். ஒரு எழுத்தாளனாக அது ஒரு தண்டனை. உண்மையில் மூன்று ஆண்டில் தமிழில் வாசகர்களால் மிகவும் கொண்டாடப்படுகிற ஒரு இதழாக உயிர்மை தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது. தமிழின் தீவிரமான படைப்பாளிகளில் பெரும்பாலானோர் உயிர்மையில் தொடர்ந்து பங்களித்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இடையிலான மன வேற்றுமைகளை உயிர்மை பொருட்படுத்தியதே இல்லை. அதில் பங்கேற்கிற ஒவ்வொருவரையும் அது தன்னுடைய பத்திரிகை என உணரச் செய்வதுதான் உயிர்மையின் வெற்றி. அதன் ஆசிரியருக்கு பொறுப்புகள் உண்டே தவிர அதிகாரம் சார்ந்த செயல்பாடுகள் இல்லை. அவருக்கு அதன்வழியே தன்னை முன்னிலைப்படுத்தக்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. நான் என்னுடைய கவிதைகளைச் சார்ந்து வாழ்பவன். அந்த வகையில் உயிர்மைக்கான பொறுப்புகளை கவனத்துடன் நிறைவேற்றுபவனாகவும் அது இயல்பாக உருவாக்கக்கூடியஅதிகாரத்திலிருந்து என்னை விலக்கிக்கொள்பவனாகவும் இருந்து வந்திருக்கிறேன். எழுத்தாளர்களுடனும் வாசகர்களுடனும் இடையறாத உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் பெரும் அனுபவத்தை உயிர்மை எனக்குக் கொடுத்திருக்கிறது.
அதுதான் அதன்வழியே நான் அடையும் அனுபவமும் ஆதாயமும்.

10.தமிழ் பெண் கவிஞர்களான சல்மா மற்றும் லீனா மணிமேகலை இங்கே கேரளாவில் வெளிவந்த நேர்கணால்களில் உயிர்மை பெண்களுக்கு எதிரான ஒரு பத்திரிகை மற்றும் உயர்சாதி மனோபாவத்தை வெளிப்படுத்தும் பத்திரிகை என்ற ரீதியில் அபிப்ராயத்தைபதிவு செய்திருக்கிறார்களே, இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

மேற்சொன்ன இருவருமே என்னால் இலக்கிய ரீதியாக வழி காட்டப்பட்டவர்கள். இலக்கியத்தின் சவால்களை அவர்களிடம் நான் வலியுறுத்தியபோது அதை எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களிலும் அரசியலிலும் தஞ்சம் தேடி ஓடிப் போனவர்கள். அவர்களுக்கு வாசிப்புப் பழக்கமோ, இலக்கியம் சார்ந்த பயிற்சியோ இருந்ததில்லை. இதுபோன்ற நபர்கள் ஒரு மொழியின் இலக்கியச் செயல்பாடுகள் குறித்து இன்னொருமொழியில் அபிப்ராயம் சொல்ல வருவதுதான் தமிழின் அவலங்களில் ஒன்று.

*****************
மனுஷ்ய புத்திரனின் இந்தப் பேட்டி மலையாள பத்திரிக்கை ஒன்றிற்காக பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்தவர் T.D.ராமகிருஷ்ணன். இதன் மற்றொரு பகுதியை அடுத்த பதிவாக பதிக்கிறேன்.
*****************

Jun 2, 2007

நீ இல்லையென்ற‌ வெறுமை

நீ இல்லாத என் உல‌கத்தில் எதுவும் மாறப்போவதில்லை.

உனக்கான என் துக்கம்
ஏதாவது ஒரு நிலத்தில் அழலாம்
உனக்கான என் பிரியம்
என் விரல்களைப் பற்றி புலம்பலாம்
உன்னோடு பகிர்ந்து கொள்ள சேர்த்த சொற்களை
என்ன செய்வதென்று தெரியாம‌ல் போக‌லாம்
உன் பதிலுக்கான என் கேள்விகள்
செல்வதற்கான இடம் தெரியாமல் திணறலாம்.

உன்னோடு பேசாத தினம் அழிந்து விடப்போவதில்லை.

என்றாலும்
நீ இல்லையென்ற‌ வெறுமையை என்ன‌ செய‌வ‌தென்று யோசிக்கிறேன்.

Jun 1, 2007

பிசாசுகள் வாழும் விடுதியில் வாழ்கிறேன்.

பிண அமைதி
மரண ஓலம்
எது எப்பொழுது என்று தெரியாத‌
பிசாசுகள் வாழும் விடுதியில் வாழ்கிறேன்.

மின்சார‌ம் இல்லாத
இந்த ம‌யான‌ இர‌வில்
மர‌ண‌ ஓலம் கேட்கிறது

எலும்புக‌ள் உருக
க‌ண்க‌ளைத் திறக்காமல் கிடக்கிறேன்.

இந்த படுக்கையில்
வியர்வைக்குள‌மாக‌
க‌ச‌ங்கிய‌ ஈர‌த்துணியாக
அல்லது
பிறரின் சொற் கூட்டமாக‌
மாறிவிடுவேன்.

இந்தப் பிசாசுகளை மட்டுமல்ல-
எல்லாவற்றையும்
விட்டுச்செல்கிறேன்.

இனி
அலுப்பு இல்லை
வெறுப்பு இல்லை
முக‌த்தைச் சுளித்து
இவைகளை
ச‌லித்துக் கொள்ள‌ வேண்டிய அவசியமில்லை

சந்தோஷமில்லை.
துக்கமுமில்லை.

மோன‌நிலையா
அவ‌ஸ்தையா‍

புரியாத‌ ச‌ம‌ய‌த்தில்
மின்விசிறி சுழ‌ன்று
சில்லிட‌ச் செய்கிற‌து.