May 28, 2007

இழக்காதே: என் பார்வை

சமீபத்தில் செல்லமுத்து குப்புசாமி எழுதிய 'இழக்காதே' புத்தகத்தை வாசிக்கும் சந்தப்பம் வாய்த்தது.

வாழ்வியலின் பல பரிமாணங்களில் பொருளாதாரம் சார்ந்த கருத்துக்களுக்கு மிக முக்கியமான இடமுண்டு. அந்த வகையில் இந்தப் புத்தகத்தை தமிழில் கவனிக்க வேண்டிய பங்களிப்பு என்று கூறுவேன்.

நூலின் ஆரம்பே ஒரு நாவல் படிப்பதைப் போல நம்மைக் கட்டிப் போடுகிறது. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒரு உணவக பிசினஸ் ஆரம்பிக்கிறார்கள். (தன் வலைப்பக்கத்தின் பெயரில் அதற்கு INDIA NEXT என்று பெயர் சூட்டியிருக்கிறார் குப்புசாமி. சென்டிமென்ட் காரணமாக இருக்கலாம்) கம்பெனி, பங்குகள், முதலாளி, நிர்வாகி என்ற பாத்திரங்களைப் பற்றி புரிந்து கொள்ள அந்த உதாரணம் உதவுகிறது.

அடுத்த அத்தியாயத்தில் பங்குச் சந்தையின் கட்டமைப்பு, செயல்பாடு பற்றி எளிமையாக விவரிக்கிறார். BSE சந்தையை ஒட்டன்சத்திரம் கார்கறி மார்க்கெட்டுக்கு நிகராகயிருக்கிறார்(தாராபுரத்து மவராசன் :)). பங்குச் சந்தையைப் பற்றி விவரித்த பிறகு சென்செக்ஸ் குறியீடுகள் பற்றிய அத்தியாயம் வருகிறது. அதைத் தொடர்ந்து IPO பற்றி அலசுகிறார்.

அதற்குப் பிறகு புத்தகம் சூடு பிடிக்கிறது. கதை என்று நினைத்துப் படிக்க ஆரம்பித்த விஷயம் படு ஆழமாக சப்ஜெக்ட்டுக்குள் சென்று விடுகிறது. பங்கு முதலீடு செய்வதற்கு நிறுவனத்தின் மதிப்பு என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். அதற்கு முன்னர் பணத்தின் மதிப்பை அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் பணவீக்கம், வட்டி என்னும் எட்டாவது அதிசயம், நஷ்டம் தவிர் என்ற மூன்று அத்தியாயங்களைக் கொடுத்திருக்கிறார். அதற்கு முன்னதாக முதலீட்டாளருக்கும், சூதாடிகளுக்கும் என்ன வேறுபாடு என்பதைக் காண்கிறோம். பங்கு முதலீடு செய்வதாகக் கூறும் பெரும்பாலானவர்கள் சூதாடிகளாக இருக்க வாய்ப்புண்டு என்கிறார்.

"பங்குச்சந்தையின் கட்டமைப்பு, அதன் இயக்கம் போன்றவைகள் இத‌ற்கு முந்தைய பகுதிகளில்.

கிரிக்கெட் ஆட்டத்தில், "22 அடி இடைவெளியில் மூன்று குச்சிகளை நட்டு வைத்திருப்பார்கள். இரு மட்டையாளர்கள் இருப்பார்கள்.ஒருவர் பந்து வீசுவார்; மற்ற 10 பேர் ஃபீல்டிங்செய்வார்கள்' என்று விதிமுறைகளைப் பற்றிச்சொல்லப்படும் விளக்கம் போல, பங்குச்சந்தையின்விதிமுறைகள் பற்றிய விளக்கங்கள்தான் இதுவரை கண்டவை. எந்தப் பந்தைத் தடுத்து ஆடுவது? எதை அடித்துநொறுக்குவது? எதைத் தொடாமல் விக்கெட்கீப்பரிடம் போக விடுவது? இது மாதிரியான ஆட்ட நுணுக்கங்களைப் போல பங்குச்சந்தைக்கான நுணுக்கங்கள் சிலவற்றை இந்தப் பகுதியிலே வரும்ஆறு அத்தியாயங்களிலும் சொல்லிச் சென்றிருக்கிறார்.

பங்குகளில் முதலீடு செய்யும்முன் அவற்றை எதன்அடிப்படையில் தேர்ந்தெடுப்பது என்ற புரிதலுக்கான பகிர்தலே இவை" இதைச் சொல்லும் போதே ஒரு உற்சாகம் பிறக்கிறது. இதற்கு மேல் விரிவாக அவற்றைப் பற்றி எழுதுவது சாத்தியமில்லை. வாசித்துப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

மொத்தப் புத்தகத்தின் பொருளடக்கம் கீழே.
1. பங்கு ஓர் எளிய விளக்கம்
2. பங்குச்சந்தை எப்படிச் செயல்படுகிறது?
3. குறியீடுகள் - SENSEX மற்றும் பிற
4. முதன்மைச் சந்தை பொது வெளியீடுகள்(IPO இன்னபிற)
5. முதலீட்டாளர் Vs சூதாடி
6. பணவீக்கம்
7. வட்டி என்னும் எட்டாவது அதிசயம்
8. நஷ்டம் தவிர்
9. பங்குகளை ஆராய்வோம்!
10. நீங்கள் வாங்கியது நல்ல நிறுவனமா?
11. சில முக்கியமான எண்கள்
12. மதிப்புப் பங்குகள் Vs வளர்ச்சிப் பங்குகள்
13. அடிப்படை ஆய்வுகள் Vs டெக்னிக்கல் ஆய்வுகள்
14. ஈவுத்தொகை (டிவிடென்ட்)
15. போனஸ், ஸ்பிலிட், ரைட்ஸ் வெளியீடுகள்
16. ராகுல் திராவிட் முதலீட்டுத் தத்துவம்
17. ஆர்பிட்ரேஜ் எனும் ஆயுதம்
18. இழப்பைத் தவிர்க்கும் வழிகள்!
19. திருவாளர் சந்தை
20. கம்பெனி நிர்வாகமும் அதன் கண்ணியமும்
21. தவிர்க்க வேண்டிய தவறுகள்
22. போர்ட்ஃபோலியோ பரவலாக்கம்
23. உளவியலும் பங்குச்சந்தையும்
24. அறிவை அகலமாக்கு!
25. பொருளாதாரமும் பங்கு முதலீடும்
26. தகவல் அறிய

"ஷேர் மார்க்கெட் தொடர்பான அத்தனை நுணுக்கங்களையும் எளிமையாகப் புரிய வைக்கிறது. பங்குச்சந்தை பற்றி ஓரளவுக்கு அடிப்படை தெரிந்தவர்கள், இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டு, படுகுழிகளில் விழுந்து நஷ்டம் அடையாமல் இருக்க இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்." காமதேனு ஆன்லைன் புத்தக நிலையம் மேற்சொன்ன அறிமுகத்தைக் கொடுக்கிறது. அதை நான் வழி மொழிகிறேன்.

ஒரு எம்.பி.ஏ. பாடத்திட்டத்தில் கூட போதிக்கப்படாத பல நடைமுறைப் பாடங்களை 'இழக்காதே' சுமந்து வந்திருக்கிறது. அதற்காக பாராட்ட விழைகிறேன். பதிப்பகத்தாரையும், எழுத்தாளரையும்.

கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடான இந்த நூலை http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=bus&itemid=292 ஆன்லைனிலும் ஆர்டர் செய்யலாம்.

நான் இலக்கியம் சாராத புத்தகம் ஒன்றை யாருக்காவது பரிசளிக்க விரும்பினால், இந்த நூல் முன்னுக்கு நிற்கும் என்பது மட்டும் நிச்சயம். குப்புசாமியைக் கேட்டால் வாழ்க்கைக்குப் பயன்படும் எல்லாமே இலக்கியம் என்று சொன்னாலும் சொல்வார்.