Apr 25, 2007

வலம்புரி: பாலைவனச் சிற்றோடை.

வலம்புரி சிறுபத்திரிக்கை இரண்டு மாதங்களாக மின்னஞ்சல் மூலமாகக் கிடைக்கிறது. குவைத் நாட்டின் பாலைக்குயில்கள் என்ற தமிழர் அமைப்பு நடத்தும் பத்திரிக்கை.

சிறு பத்திரிக்கைக்கென கட்டுக்களும், இறுக்கமான மொழியமைவும் தேவையென்ற கூற்றுக்களில் எனக்கு நம்பிக்கையில்லை. சிறுபத்திரிக்கை காட்டாற்று வெள்ளம். எப்படி வேண்டுமானாலும் அதன் திசை இருக்கலாம். படைப்பாளியின் சுதந்திர வெளி அது. இந்த அந்தர வெளியில் வாசகன், படைப்பவனின் மனநிலையில் ஒன்றியும் பயணிக்கலாம் முற்றாக எதிராகவும் நிற்கலாம். ஏன் அது இல்லை. இது ஏன் இப்படி இருக்கிறது என்றால், தயங்காமல் சொல்லுவான் சிறுபத்திரிக்கைக் காரன். "இது இப்படித்தான். விருப்பம் என்றால் படி" என.

படைப்பாளியைத் தாண்டி படைப்புக்கான முக்கியத்துவம் தருகின்ற இந்த'கெத்து' வலம்புரிக்கு வரவேண்டும் என்பது என் விருப்பம். பதினாறு பக்கங்களில் சில பகுதிகளை மிக முக்கியமானவைகளாக‌க் கருதுகிறேன். தேவதேவனின் கவிதைகளும், வைக்கம் பஷீரின் சிறுகதை மொழிபெயர்ப்பும் என் பார்வையில் மிக‌ப் பாராட்ட‌த்த‌க்க‌ன‌.

புறநானூற்றுப் பாடல் ஒன்றும் பொருளோடு வந்திருக்கிறது. பெண்மொழி பகுதியும் குறிப்பிட வேண்டிய பகுதி. என் கருத்தாக இங்கு ஒன்றைச் சொல்லவேண்டுமானால், இன்னமும் அழுத்தமான பெண்மொழிக்கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

குறையாகச் குறிப்பிட்டால், எழுத்துப் பிழைகள். இரண்டு இதழ்களே வந்த நிலையில் குறைகளை பிரம்மாண்டப் படுத்த வேண்டியதில்லை. ஆனால், குறைந்த பக்கங்கள் மட்டுமே இருப்பதனால், எழுத்துப் பிழைகளில் நண்பர்கள் கவனமோடு இருக்கலாம்.

க‌விதையின் சொற்கள் குறையும் போது, கவிதையின் செறிவு கூடுவது, நல்ல கவிதையின் அடையாளங்களில் ஒன்று. மிகக் குறைந்த பக்கங்களில் வரும் பத்திரிக்கை மிகச்செறிவானதாக வருவது, நல்ல பத்திரிக்கையின் அடையாளங்களில் ஒன்று. அதனை வலம்புரி நெருங்கி இருப்பதாக உணர்கிறேன்.

தூரப் பிரதேசத்தில், சிறு குழுவால், எவ்வித பொருள் சார்ந்த பலனும் எதிர்பாராமல் தொடங்கப்பட்ட இம்முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவர்கள் வெற்றிகரமாக தொடர்ந்து இயங்குவதற்கான வலிமையையும், உற்சாகத்தையும் தமிழும், வாசகர்களும் தருவார்கள் என நம்புகிறேன்.

த‌மிழ்ச் சிறுப‌த்திரிக்கை ஒன்று, மின்ன‌ஞ்ச‌லில் உல‌வுவ‌து, அனேக‌மாக‌ இதுவாக‌த்தான் இருக்கும். இன்னும் செறிவான‌ ப‌டைப்புக‌ளோடு இவ‌ர்க‌ள் அடைவ‌த‌ற்கான‌ வாச‌க‌ர் கூட்ட‌ம் மிக‌ப் பெரிதாக‌ இருக்கிற‌து.

வாழ்த்துக்க‌ள்.

Apr 17, 2007

வெர்ஜீனியா: லோகநாதன்.

எங்கள் ஊரான கரட்டடிபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் என்ற பேராசிரியர் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்திருக்கிறார். எங்கள் ஊரைச் சேர்ந்த நண்பர்களும், என் தம்பியும் அழைத்துச் சொன்ன போது, இழப்பு பெரிதாகத் தெரியவில்லை. அந்த நிகழ்வின் மீது ஒரு இளக்காரமான பார்வை கூட இருந்தது. மற்றுமொரு சாவு என்ற ரீதியில்.

முழுமையாகச் செய்தியை உணரும் போது அதன் வெப்பம் புரிகிறது. தொடர்ச்சியாக அந்த வீட்டின் நிலை குறித்து பலரும் தொலைபேசியில் விவரிக்கும் போது, கோரத்தை அணுவணுவாக உள்ளேற்றிக் கொள்ள முடிகிறது.

எங்கள் ஊருக்குத் துரும்பையும் எடுத்துப் போட்டாரா என எனக்குள் எழுந்த கேவலமான, வலுவற்ற வினா ஒளிந்து கொள்ளத் துவங்குகிறது. அடிப்படையான மனிதாபிமானம் தாண்டி, சமூகத்தின் வக்கிரப்புத்தி நடுக்கம் கொள்ளச் செய்கிறது.

இதே விதமான மோசமான மன அழுத்தமும், அதன் விளைவாக நிகழ்ந்தேறும் கொடூரமான காட்சிகளுக்குமான காரணங்கள் எங்கேயிருக்கின்றன? மனித மனம் ரத்தம் பார்க்க அத்தனை விருப்பு கொண்ட வஸ்துவா?

லோகநாதன் அவர்களைப் பார்த்ததில்லை. அவருடைய தந்தையாரைப் பார்த்திருக்கிறேன். அவரது தந்தையாரின் முகம், எனக்குள் துன்பத்தைக் கூட்டுகிறது.

மனிதனாகவோ, தமிழனாகவோ, இந்தியனாகவோ அல்லது ஒரே கிராமத்தைச் சார்ந்தவனாகவோ துககத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன். உடனடியாக தாக்கத்தை உணர்ந்து கொள்ளாத குற்றவுணர்வுடன்.

எழுதிவிட முடியாத ஒரு கவிதை

ஒவ்வொரு கணமும்
கனக்கிறது
* * *
உடைக்கவே முடியாத
மெளனம்.

மின்னல் முறிவது போல்
வந்து செல்லும்
முத்தத்தின் ஞாபகமிச்சங்கள்.

மடங்கிய காகித நுனிக்குள்
சிக்கியிருக்கும்
குங்குமத் துகள்.


*****
யாராலும் எழுதிவிட முடியாத
ஒரு கவிதை இன்னும் இருக்கிறது.

Apr 16, 2007

பிரியாணி: குறுந்தகவல்.

மன்னிக்கனும். தொடர்ச்சியாக பிரியாணி ப‌ற்றி எழுதுவதற்கு. ஒரு குறிப்பொன்று கிடைத்தது.

பிரியாணியின் தொட‌க்க‌ம் குறித்த‌ வ‌ர‌லாற்றுக் குறிப்பு.

அர‌பு நாடுக‌ளின் ப‌டைவீர‌ர்க‌ள் போர்க‌ளுக்குச் செல்லும் போது, ஆடு இன்ன பிற‌‌ வில‌ங்குகளையும் தங்களோடு ஓட்டிச் செல்வார்க‌ளாம். அவ‌ற்றின் மீது பொதிக‌ளாக‌ அரிசியும், கோதுமையும் இருக்கும்.

அங்க‌ங்கு உட‌ன் வ‌ரும் வில‌ங்குக‌ளைக் கொன்று ச‌மைப்ப‌துண்டு.க‌றியோடு சேர்த்து அரிசியை வேக‌வைத்தால் அது "பிரியாணி", க‌றியோடு கோதுமை என்றால் அது "ஹ‌லீம்".

மீத‌மாகும் ஆட்டின் உறுப்புக‌ளை இர‌வு முழுவ‌தும் வேக‌வைத்து உண்டால் அது பாயா/ந‌ஹ‌ரி.

இந்த உணவுமுறைக்கு அடிப்ப‌டையான‌ கார‌ண‌ம் வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ உட‌ல்திற‌னோடு இருக்க‌ வேண்டுமென்ப‌து.

இப்ப‌டி உருவான‌ பிரியாணி, ஹைத‌ராபாத்திற்கென‌ சிற‌ப்பாக‌ அமைய‌க் கார‌ண‌ம், ச‌ல‌ர்ஜ‌ங்(Salar Jang), விஹார் அல் உம‌ரா(Viqar ul umrah) போன்ற‌ ராஜ‌ வ‌ம்ச‌ நிஜாம்மார்கள்.

த‌ங்க‌ளின் அர‌ச‌வை ச‌மய‌ற்கார‌ர்க‌ளை ஊகுவித்து சிற‌ப்பான வாச‌னைப் பொருட்க‌ள், விலையுய‌ர்ந்த‌ உண‌வுப்பொருட்க‌ளைச் சேர்த்து, தனியான சமையல் வழிமுறையைப் பின்பற்றி, பிரியாணியை ஒரு வ‌ழி செய்திருக்கிறார்க‌ள். இப்படியான பிரியாணி, ஹைத‌ராபாத் பிரியாணி ஆகிவிட்ட‌து.

பிரியாணி ச‌மைக்கும் போது ச‌மைய‌லுக்குப் ப‌ய‌ன்ப‌டும் பாத்திர‌ங்க‌ள், க‌ர‌ண்டிக‌ள் கூட செப்பால் ஆன‌வையாக‌ இருக்கும். அந்த‌ அளவிற்கு க‌வ‌னம் கொடுக்கிறார்கள்.

ஹ‌லீம், ர‌ம‌லான் மாத‌த்தில் ம‌ட்டும் கிடைக்கும் ஒரு வ‌ஸ்து. கறியோடு கோதுமை சேர்த்து நைய‌ப்புடைத்து கூழ் போலாக்கி, பெரிய செப்புப் பாத்திரத்தில் வெகு நேர‌ம் கொதிக்க‌ வைத்துக் கொடுப்பார்க‌ள்.

பாயா சென்னை வ‌ரைக்கும் வ‌ந்துவிட்ட‌து. எங்க‌ள் ஊர்ப்ப‌க்க‌ம்(கோபி) எல்லாம் பாயா என்றால் தெரியாது.

இங்கு வ‌ந்து சென்றால் ஒன்றை நிச்ச‌ய‌ம் நீங்க‌ள் சொல்லிச் செல்வீர்கள். "ஹைத‌ராபாத்ல‌ நல்லா சாப்பிடுறாங்க‌".

(த‌க‌வல் நன்றி: ஹைத‌ராபாத் பிரியாணி ஹ‌வுஸ் :))

Apr 13, 2007

வெவகாரமா ஒரு சேதி சொல்லு ராசா.

எங்க ஊரு பக்கம் ஒரு பழக்கம். ஒரு பழக்கமில்ல ஓராயிரம் பழக்கம். எங்க ஊருல மட்டுமில்லாம உலகம் பூரா அங்கங்க ஆயிரமாயிரம் பழக்கம்.அதுல ஒண்ணு கதை சொல்லுறது. பாட்டி வடை சுட்ட கதை, காக்கா தண்ணி குடிச்ச கதையெல்லாம் எழவு எவனுக்கு வேணும்?

'அப்படி'ப்பட்ட கதையெல்லாம் கேட்டு இருக்கீங்களா? என்ர வயசுப் பசங்களக் கேட்டுப்பாருங்க. கதையே சொல்லத்தெரியாது, இந்த லட்சணத்துல வெவகாரமா ஒண்ணச் சொல்லி அத மொகஞ் சுளிக்காத மாதிரி சொல்லத் தெரியுமா?

எங்க தாத்தன் பொழப்பு கெட்ட நேரமெல்லாம் யோசிச்ச கதைக, அவஞ்சோட்டு ஆளுங்க அமுக்கமாப் பேசுன கதைக எல்லாஞ் செத்துப் போச்சா?
*****
"ம‌றைவாய் சொன்ன‌ க‌தைகள்". ந‌ம்ம கி.ராவும், க‌ழ‌னியூர‌னும் கேட்ட‌ க‌தைக‌, சுத்தி சுத்தி சேர்த்த‌ க‌தைக.

நூறுக‌தைக. அத்த‌னையும் வெவ‌கார‌மான‌ க‌தைக‌,சுளுவாவும் இருக்குது, சொகமாவும் இருக்குது.

நூறு க‌தைக‌ளும் அம்ச‌மா இருக்குதான்னு கேட்டா இல்லைன்னுதான் சொல்ல‌ணும். அம்ப‌த‌றுப‌து க‌தைக‌ அட்ட‌காச‌ம், இருவ‌து க‌தை ந‌ல்லா இருக்குது. மீதிக் க‌தைக‌ த‌ப்பிப் போச்சு.

ஒரு க‌தைய சுருக்க‌மாச் சொல்லுட்டா?
ஒரு ராசாகிட்ட‌ ஒரு வேல‌க்கார‌ன், அச‌ப்புல‌ ராசா மாதிரியே இருக்கான். எல்லோருக்கும் ஆச்ச‌ரிய‌ம‌னா ஆச்ச‌ரிய‌ம். ராசாவுக்கு ஒரு ச‌ந்தேக‌ம், ந‌ம்ம‌ அப்ப‌ன் தான் ஏதோ வெவகார‌ம் பண்ணி இருக்கான்னுட்டு. வேலக்காரன‌ கூப்புட்டு வில்ல‌ங்க‌மா சிரிச்சுட்டு கேட்டாரு. உங்க‌ ஆத்தா இங்க‌ வேலை செஞ்சாளான்னு, வேல‌க்கார‌ன் சொன்னாமா, "இல்ல‌ ராசா. எங்க‌ப்பன் தான் அர‌ண்ம‌னைல வேல‌ செஞ்சான்"ன்னு. புரியுதா சேதி?

இப்ப‌டித்தான் பாத்துக்குங்க‌. சில‌ க‌தைக ம‌ற‌ச்சு ம‌ற‌ச்சு பேசுனா, சில‌ க‌தைக ப‌ச்சையா பேசுது. உங்க‌ தாத்த‌னும்,என்ர‌ தாத்த‌னும் லேசுப்ப‌ட்ட‌வ‌னுக‌ இல்ல‌. அது ம‌ட்டும் தெளிவா தெரியுது. பாட்டிக‌ளையும் சேத்துக்குங்க‌.
*********
இல‌க்கிய‌ப்பூர்வ‌மாக‌வோ அல்ல‌து வ‌ர‌லாற்றுப் பார்வையிலோ நோக்கும் போது, இந்த‌ப் புத்த‌க‌த்தின் தொகுப்பாளர்க‌ளிருவ‌ரும் செய்த காரியம் மிக முக்கியமானது. இத்த‌கைய‌ அழிவின் விளிம்பு நிலை இல‌க்கிய‌க் கூறுக‌ளை ஆவ‌ண‌ப்ப‌டுத்தியிருப்பது பாராட்டுக்குரிய‌து. சிறப்பாக வடிவமைத்திருக்கும் உயிர்மை ப‌திப்ப‌க‌த்திற்கும் வாழ்த்துக்க‌ள்.

க‌தைக‌ளைச் சொல்லிவிடுவ‌தோடு ம‌ட்டுமில்லாம‌ல், அந்த‌க் க‌தையினை சொல்லும் போக்கிலேயே, அந்த‌க் கால‌க‌ட்ட‌ம், வாழ்விய‌ல் முறைக‌ள், பெண்க‌ளின் நிலை போன்ற‌வ‌ற்றை சொல்லிச் செல்கிறார்க‌ள்.

இத்த‌கைய க‌தைகள் ச‌மூக‌த்தில் அங்குமிங்குமாக‌ உல‌வி வ‌ந்த‌ போதிலும், எழுத்து வ‌டிவ‌மாக‌ ஆவ‌ண‌ப்ப‌டுத்தி முன் வைக்க‌ தைரிய‌மும், க‌தையின் அச‌ல் த‌ன்மை மாறாம‌ல் ம‌றுவ‌டிவாக்க‌ம் செய்ய‌ திற‌மையும் அவ‌சிய‌ம்.
அனுப‌வ‌ப்ப‌ட்ட‌ எழுத்தாள‌ர்களான கி.ராவும், கழனியூரனும் இந்த‌ இர‌ண்டு அம்ச‌த்திலும் எந்த‌க் குறையும் வைக்க‌வில்லை.
******
பாலிய‌ல் க‌தைகள் நாட்டுப்புற பாலியல் கதைகள் ம‌ற்ற‌ எந்த‌ இல‌க்கிய‌க‌ வ‌கைக்கும் எந்த‌ வித‌த்திலும் குறைந்த‌வைய‌ல்ல‌ என்ப‌த‌னை மீண்டும் ஒரு முறை அழுத்த‌மாக‌ப் புரிந்து கொள்கிறேன்.

Apr 12, 2007

ஹைதராபாத் தம் பிரியாணி.

ஹைதராபாத் தம் பிரியாணி பற்றி இங்கு வருவதற்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். பிரியாணியுடனான ஹைதராபாதின் உறவுக்கு அடிப்படையே இந்நகரத்திற்கு பூர்வாங்கமாக மேற்காசிய நாடுகளுடனான தொடர்பு.

இதனை இப்பொழுதும் நேரடியாகவே உணரமுடியும். கட்டிடங்களின் மேற்காசிய அம்சங்களைத் தவிர்த்து, பிலிம் கிளப்புகளில் ஏதேனும் ஈரானிய படங்கள் திரையிடும் நாட்களில் (மட்டும்) குவியும் பல இசுலாமிய பெண்களின் சாயல் ஈரானிய திரைப்பட நடிகைகளின் சாயலை ஒத்திருப்பதை கவனித்திருக்கிறேன். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான ஒப்பீடே என்ற போதும் என் வயதுக்கேற்ற ஒப்பீடு என எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஹைதராபாத் வந்து செல்பவர்கள் ஏதேனும் ஒரு கடையில் பிரியாணி உண்டுவிட்டு ஹைதராபாத் பிரியாணி சுவையே இல்லை‍; மசாலவே இல்லை என்றால் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆம்பூரிலிருந்து வந்து கடை வைப்பவன் எல்லாம் ஆம்பூர் பிரியாணி ஸ்பெசலிஸ்ட் என குருட்டாம்போக்கில் நினைப்பது போலாகிவிடும்.

பவார்ச்சி, பிஷ்லேண்ட்,பாரடைஸ் மற்றும் ஹைதராபாத் பிரியாணி ஹவுஸ் போன்ற சில கடைகளைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்குகிறது, ஹைதராபாத் பிரியாணி உண்ணும் கலை.

முதலில் துண்டாக்கப்பட்ட வெங்காயத்தின் மீது எலுமிச்சைச் சாறு பிழிந்து கொள்ள வேண்டும். அதன் மீது உப்பு, உப்புத் தூள் மேலாக‌ மிளகுத்தூள். தமிழ்நாட்டு பிரியாணி போல மசாலா அரிசியோடு முழுவதுமாக கலந்து இருக்காது. பிரியாணியின் உட்புறமாக இருக்கும் மசாலாவை நாம்தான் கலந்து கொள்ள வேண்டும். கார‌ம் ச‌ற்று தூக்க‌லாக‌ இருக்கும்.

முத‌லிலேயே க‌வ‌ன‌மாகுங்க‌ள். இல்லையென்றால் மூக்கில் குற்றால‌ அருவிதான். எத்த‌னை டிஷ்யூத் தாளும் செல்லுப‌டியாகாது.

சரிபாதியாக பிரியாணியை பிரித்துக் கொண்டு, முதலில் குருமாவுடனும், அடுத்த தயிர் பச்சடியுடனும் குழைத்து அடிக்க வேண்டியதுதான்.

இரண்டு வாய் சோற்றுக் கவளத்திற்குப் பின்னர் ஒரு வெங்காயக் கடியும், அடுத்த இரண்டு வாய் கவளத்திற்குப் பின்னர் கறி ஒரு கடியும் 'சிம்பிள் பார்முலா'.

இந்த‌ சூட்சும‌ம் வெகு நாட்க‌ளாக‌த் தெரிய‌வில்லை. டாப்ஸ்ட‌ர் என்ற‌ ஒரு அரேபிய உண‌வு விடுதியில் ஒரு இசுலாமிய‌ப் பெரிய‌வ‌ர் சொல்லித் த‌ந்தார். கொஞ்ச‌ம் விலை அதிக‌ம் என்றாலும் சுவை அற்புத‌ம்.

நேற்று (11.10.2007) பிர‌ம்மாண்ட‌ விள‌ம்ப‌ர‌ ப‌ல‌கை ஒன்று சாய்ந்து, டாப்ஸ்டரை ந‌சுக்கிய‌து ம‌ட்டுமில்லாம‌ல், மூன்று பேரைக் கொன்றிருக்கிற‌து.

(குறிப்பு 1: த‌ம் பொருள் தெரியும்ம‌ல்ல‌வா? பிரியாணியை ஒரு பெரும் பாத்திர‌த்தில் மூடி அத‌ன் மீது அடுப்புத்த‌ன‌லைக் கொட்டிவிடுவார்க‌ள். வெப்ப‌த்தில் வெந்து த‌ணியும்.

குறிப்பு 2: ர‌மலான் மாத‌த்தில் மட்டும் இங்கு கிடைக்கும் ஹ‌லீம், எப்பொழுதும் கிடைக்க‌க் கூடிய‌ இரானிய ஃப‌லூடாவும் பிர‌சித்த‌ம்).