Dec 28, 2007

இரவினை கவ்வித் திரியும் கரும்பூனை

தனித்த இரவொன்றில் வேகுவதாகச் சொன்னேன்
உற்றுப் பார்த்தீர்கள்.

காரணம் தெரியாமல் கசங்குவதாகப் புலம்பினேன்
சிகரெட் பற்ற வைத்தீர்கள்.

வெறுமை கொடூரமானது என்றேன்
புகையினை அலாதியாக வெளியேற்றினீர்கள்.

வறண்ட கழிவறையில் அலையும் எறும்பு
நானென்றேன்.

சிரித்துக் கொண்டிருந்தீர்கள்-
தன் இரவினை
இலாவகமாக
கவ்வித் திரியும்
கரும்பூனையொன்றினை பார்த்துக் கொண்டே.

Dec 27, 2007

மர‌ண‌ங்க‌ளை ருசிக்கிறார்க‌ள்-பென‌சிர் பூட்டோ கொல்ல‌ப்ப‌ட்டார்

பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவி பெனசிர் பூட்டோ ராவல்பிண்டி ஊர்வலத்தில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.

ஜனவரி 8 இல் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தில் இந்நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.

நாடு திரும்பிய உடனேயே நடைபெற்ற முந்தைய தாக்குதலில் நூலிழையில் அவர் உயிர்தப்பியது குறிப்பிடத்தக்கது.

ராணுவ‌மோ,தீவிர‌வாத‌க்குழுவோ யார் செய்திருப்பினும் க‌ண்டிக்க‌த்த‌க்க‌து. மர‌ண‌ங்க‌ளை ருசிக்கிறார்க‌ள்.

Dec 23, 2007

மோடி விட்ட குத்து அன்டோனியோ மொய்னோ கொஞ்சம் பாவம்தான்!

இந்திய‌ ஊடக‌ங்க‌ளுக்கு ராட்ச‌ச‌னாக‌ காட்சிய‌ளிக்கும் மோடி ப‌ட்டாசு வெடித்து ப‌ட்டையைக் கிள‌ப்பியிருக்கிறார். மொத்த‌முள்ள 182 தொகுதிக‌ளில் 117 தொகுதிக‌ள் மோடியின் ச‌ட்டைப் பைக்குள் விழுந்திருக்கின்ற‌ன‌.

அம்மாவும் ம‌க‌னும் சேர்ந்து மோடியை கொலைக‌ளின் வியாபாரி என்று ஊர் ஊராக‌ச் சொல்லித் திரிந்த‌து எடுபடாம‌ல் போயிருக்கிற‌து. ஆனால் இர‌ண்டு பேரும் க‌ஷ்ட‌ப்ப‌ட்ட‌து முற்றாக‌ வீண் என்று சொல்ல‌ முடியாது. சென்ற‌ முறையை விட‌ ப‌த்துத் தொகுதிக‌ள் அதிக‌ம் பெற்றிருக்கிறார்க‌ள். ராகுல்ஜிதான் காங்கிர‌ஸைக் காப்பாற்ற வந்திருக்கும் ஆபத்பாந்தவன் என்று காங்கிரஸார் தைரியமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

பிரிய‌ங்காவையும் சேர்த்திருந்தால் இன்ன‌மும் இர‌ண்டு, மூன்று தொகுதிக‌ளும் அவ‌ர‌து ம‌கனையும் சேர்த்திருந்தால் கூடுத‌லாக‌ ஓரிர‌ண்டு தொகுதிகளும் கிடைத்திருக்க‌லாம். பேசாம‌ல் ராகுல் திரும‌ண‌ம் செய்து கொள்வ‌தும் உசித‌ம்.

மோடி உத்த‌மனா என்றால் நான் இல்லையென்றுதான் சொல்வேன். உத்த‌ம‌னில்லைதான். ஆனால் அர‌சிய‌லில் த‌னிம‌னித‌ அர‌சிய‌லை முன்னெடுக்கும் மோடி போன்ற‌வ‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டுவ‌த‌ற்கு ம‌த்தியில் அர‌சாங்க‌த்தை கையில் வைத்திருக்கும் குடும்ப‌ம் த‌ங்க‌ளின் சாத‌னைக‌ளையோ, கொள்கைக‌ளையோ முன்னிறுத்துவ‌த‌ற்கு இலாய‌க‌ற்று தனி ஒருவ‌னின் ப‌ல‌வீன‌ங்க‌ளை ம‌ட்டுமே சாடுவ‌து என்ப‌த‌ன் முடிவு இதுவாக‌த்தான் இருக்க‌விய‌லும்.

பெரும்பான்மை ம‌க்க‌ளை த‌ன‌து ஜால‌ங்க‌ளால் க‌ட்டி வைக்க‌த் தெரிந்த‌ மோடிக்கு இந்துதுவா கொள‌கையை முன்னெடுக்க‌ ந‌ல்ல‌ வாய்ப்பினை எடுத்துக் கொடுத்த‌தே சோனியாவும் ராகுலும்தான். எனக்கு ஒரு பெரிய டவுட் இருக்குங்க. ராகுல் என்ன அத்தனை பெரிய அரசியல் வித்தகரா? நூறு வருடக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவதற்கு?அவுங்க‌ உட்க‌ட்சி விடுங்க‌.

ம‌த‌த்தை முன்வைத்து அர‌சிய‌ல் செய்யும் காங்கிர‌ஸின் திட்ட‌ம் இன்னொருமுறை ப‌ல்லிளித்திருக்கிற‌து. தேசிய‌வாத‌ம், தீவிர‌வாத‌ம் போன்ற‌ மேம்போக்கான‌, ம‌க்க‌ளை கிள‌ர்ந்தெழ‌ச் செய்ய‌க்கூடிய‌ வித்தைக‌ளை மோடி ம‌ஸ்தான் அழ‌காக‌ அர‌ங்கேற்றியிருக்கிறார்.

குஜ‌ராத் எப்பொழுதுமே ப‌டித்த‌வ‌ர்க‌ளும் வ‌ச‌தியான‌வ‌ர்க‌ளும் நிறைந்த‌ மாநில‌ம்தான். அது வீழ்ச்சியில் இருந்ததில்லை. "குஜ‌ராத் முன்னேறுகிற‌து" என்ற‌ பாஜ‌கவின் வாத‌த்தை காங்கிர‌ஸ் திட்ட‌மிட்டிருந்தால் நொறுக்கியிருக்க‌ இய‌லும்.

நேரு குடும்ப‌ம் இல்லையென்றால் கட்சியில்லை என்ப‌வ‌ர்க‌ள் தங்கள் ஜால்ராவை தொட‌ர்ந்து கொண்டேயிருக்க‌ட்டும்.

ராஜ‌ஸ்தான்,குஜ‌ராத் ஆகிய‌ மாநில‌ங்க‌ளில் பாஜ‌க‌வையும், மேற்கு வ‌ங்காள‌ம்,கேரளாவில் 'தோழ‌ர்'களையும், த‌மிழ‌க‌த்தில் 'திராவிட'ர்க‌ளையும் அசைக்க‌க் கூட‌ முடியாது.

ந‌ல்ல‌வ‌னோ கெட்ட‌வ‌னோ மோடியை அரியாச‌ன‌த்தில் ஏற்றியிருக்கிறார்க‌ள் குஜ‌ராத்திக‌ள். அவ‌ர‌து அடுத்த‌ குறி எதுவாக‌ இருக்கும் என்ப‌து எல்லோருக்குமே தெரிந்த‌ ஒன்றுதான். அத்வானிக்கு இந்நேர‌ம் ஜுரக் காய்ச்ச‌ல் வ‌ந்திருந்தால் கூட‌ ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ ஒன்றுமில்லை.

Dec 17, 2007

மொக்கையான சோகக் கதை.

ஒரு திருடனின் கையை உடைப்பது என்பது சாதாரண விஷயமா அதுவும் என்னைப் போன்ற நோஞ்சானுக்கு. நான் குடியிருக்கும் ஒண்டிக் குடித்தன வீட்டிற்கு எதிர்புறமுள்ள வீட்டில்தான் திருட்டு நடந்தது. அந்த வீட்டு அம்மிணி சாயந்திரமானால் வாக்கிங் போவார். அரை மணி நேரம்தான். ஆனால் 'பங்க்சுவல்' பிரியா என்று சொல்லலாம். ஐந்தரை மணிக்கு கிளம்பி ஆறு மணிக்கு வந்துவிடுவார்.

என்னைப் போன்ற ஒரு சோப்பலாங்கியை எதிர் வீட்டில் வைத்துக் கொண்டு இப்படி நேரம் கடைப்பிடிப்பது எனக்கு பெரிய 'இன்சல்ட்'.இதையெல்லாம் அவர்களிடம் பேச முடியுமா? சைட் அடிப்பதோடு நிறுத்திக் கொள்வேன். இந்த 'பங்க்சுவல்' விஷயத்தை வைத்தே திருடர்கள் தங்களின் ஆட்டத்தை காட்டிவிட்டார்கள். ஐந்தரை மணிக்கு உள்ளே புகுந்து ஆறு மணிக்கு எல்லாம் கதையை முடித்துவிட்டார்கள். அரசு ஊழியரின் வீட்டில் இரண்டு லட்சம் அபேஸ் என்று அடுத்த நாள் 'ஈநாடு' பத்திரிக்கையில் செய்தி 'ஒஸ்துந்தி'.

திரும்பி வந்த அம்மிணி கையும் ஓடாமல் காலும் ஓடாமல், போலீஸ் சைரன் போல‌ அலற ஆரம்பித்துவிட்டது. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எல்லாம் 'செம ஹாட்' விவகாரம் கிடைத்துவிட்டது. கஷ்டப்பட்டு தங்களின் ஆர்வத்தை மறைத்து சோகமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டார்கள். 'சுத்த கூர்கெட்ட திருடன்'கள் என்று நினைத்துக் கொண்டேன். அதே பகுதியில் இருக்கும் ஏதாவது சாப்ட்வேர் ஆசாமியின் வீட்டை உடைத்திருக்கலாம். பத்தோ,பன்னிரெண்டோ வாங்கி குருவி சேர்ப்பது மாதிரி சேர்க்கும் அரசு ஊழியர் வீட்டிலா திருட வேண்டும்?

நானும் சோக‌த்தைக் காட்டிக் கொண்டு நின்ற‌ போது, ஒரு ஆள் வீட்டிற்குள் ஒளிந்திருப்ப‌தாக‌ ச‌த்த‌ம் போட்டார்க‌ள். ஆனால் உள்ளே போவ‌த‌ற்கு அத்த‌னை பேருக்கும் த‌ய‌க்க‌ம். க‌த்தி வைத்திருப்பான், க‌ட‌ப்பாரை வைத்திருப்பான் என்று சொல்லிக் கொண்டே நின்றார்க‌ள். என‌க்கு ஒரு குருட்டு தைரிய‌ம் வ‌ந்தது. ஒளிந்திருப்ப‌வ‌ன் நிச்சய‌ம் ப‌ய‌ந்திருப்பான் அப்ப‌டியே பிடித்தாலும் என்னை அடித்தால் ம‌ற்ற‌வ‌ர்கள் பிடித்துக் கொள்வார்க‌ள் என்றும் நினைத்துக் கொண்டு ந‌க‌ர்ந்தேன். என்ன ஆனாலும் சரி, க‌ழுத்தில் வ‌யிற்றில் கத்தி ப‌டாம‌ல் பார்த்துக் கொள்ள‌ வேண்டும் என்று அந்த‌ நேர‌த்தில் சாமி கும்பிட்டேன்.

கீழ் வீட்டுச் சிட்டு மான‌ஸா இதை எல்லாம் பார்த்த‌து கூட‌ என் தைரிய‌த்திற்கு கார‌ண‌மாக‌ இருக்கும் என்று நினைக்கிறேன். நான் அறைக்குள் சென்ற‌ போது பேசாம‌ல் அட‌ங்கிவிட்டான். க‌ன்ன‌த்தில் ஓங்கி ஒரு அறை விட்டேன். என்ன‌ நினைத்தேன் என்று தெரிய‌வில்லை, கையைத் திருகி குத்திய‌தில் அவ‌ன் கையும் முறிந்துவிட்ட‌து. ம‌ற்ற‌ விவ‌கார‌ங்க‌ளை ம‌க்க‌ள் பார்த்துக் கொண்டார்க‌ள்.
---------------------------------------
கடந்த ஞாயிற்றுக்கிழமையில் ஒரு மிகச் சுவாரசியமான நிகழ்வின் விளைவாக எனது செல்போன் தொலைந்து விட்டது (அல்லது) பறிக்கப்பட்டது.

இரவு 10 மணிக்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணி உண்டு முடித்த களைப்போடு 'மசாப் டேங்க்' மேம்பாலத்தின் கீழாக நடந்து வந்தேன். பஞ்சாரா ஹில்ஸ்க்கும், மெகதிப்பட்டணத்திற்கும் இடையில் இந்தப் பகுதி இருக்கிறது. கொஞ்சம் இருட்டாக இருந்தது. பாலத்தின் கீழாக ஆட்களின் நடமாட்டமும் இல்லை. இரண்டு கதாநாயகர்கள்(தெலுங்கு சினிமாக்களில் பெரும்பாலும் கதாநாயகன் திருடுபவனாக வருவதுண்டு) இரு சக்கர வாகனத்தில் வந்து என் பின்னந்தலையில் தட்டினார்கள்.

யாரோ தெரிந்தவர்களாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு திரும்பினேன். நமக்கு யார் இங்கே தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்று என் கொஞ்சூண்டு மூளை சுதாரிப்பதற்குள் கையில் வைத்திருந்த செல்போனை 'லவட்டி'விட்டார்கள். அந்த இழவெடுத்த செல்போனிலிருந்து நீல நிற குட்டி விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். அது அவர்களுக்கு வசதியாக போய்விட்டது. நானாவது பாக்கெட்டில் வைத்து தொலைந்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் வண்டி நகர ஆரம்பித்துவிட்டது. ரஜினி அளவிற்கு இல்லையென்றாலும் குறைந்த பட்சம் அவரது மருமகனாரின் துணிச்சலை வெளிக்காட்டும் விதமாக எட்டி பின்னாலிருந்தவனின் சட்டையைப் பிடித்தேன், கீழே விழுந்து முட்டியைக் கிழித்துக் கொண்டதுதான் மிச்சம்.

ரோந்து போலீஸாரிடம் 4,500 ரூபாய் மதிப்புள்ள செல்போன் போய்விட்டதாகச் சொன்னேன். வண்டி எண்ணைக் குறித்தீர்களா என்றார்கள். என் கொஞ்சூண்டு மூளை பாவம் அதை பற்றி அப்பொழுது நினைக்கவில்லை போலிருக்கிறது. சாப்ட்வேரில் இருக்கிறீர்களா என்றவர்கள் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கொடுத்தார்கள். சரி அய்யா என்று சொல்லிவிட்டு, டெட்டால் ஊற்றிக் கழுவிய புண்ணோடு அந்தக் கதாநாயகர்களுக்கு கொஞ்சம் சாபம் கொடுத்துவிட்டு கடைசியாக ஹிந்திச் சேனலில் வந்த பிரியங்கா சோப்ராவுடன் டூயட் பாடியவாறு தூங்கிப் போனேன்.
----------------------
ஒரு திருட‌னின் கையை உடைத்த‌வ‌னுக்கு இவ‌ர்க‌ளைப் எட்டிப் பிடிக்க‌ முடிய‌வில்லை என்கிறீர்க‌ளா? அட‌ நீங்க‌ வேற‌. நான் எல்லாம் க‌தாநாய‌க‌னாக‌வா முடியும்? இப்ப‌டி அவ்வ‌ப்போது க‌தாநாய‌க‌ன் மாதிரி நினைத்துக் கொள்வ‌து ம‌ட்டும்தான். அப்ப‌டி திருட்டு ந‌ட‌ந்த‌ வீட்டில் நான் க‌தாநாய‌க‌ன் ஆவ‌தாக‌ நினைத்துக் கொண்டு ந‌ட‌ந்த‌ ச‌ம‌ய‌த்தில்தான் என் செல்போனை 'ஆட்ட‌ய‌'போட்டுவிட்டார்க‌ள். நான் க‌தாநாய‌க‌ன் ஆனால் என்னைய‌வே 'ஆட்ட‌ய‌' போட்டுவிடுவார்க‌ள். நென‌ப்புல‌ இதுவ‌ரைக்கும் க‌தாநாய‌க‌னாக‌ இருந்துவிட்டேன். இனிமேல் நென‌ப்பு கூட‌ ஆகாது போல் இருக்கு. என்ன‌ சொல்றீங்க?

Nov 19, 2007

வண்ணக் கைகுட்டை விற்பவன்-தக்கை கவிதைகள்

வண்ணக் கைகுட்டை விற்பவன்
எதேச்சையாக உதறிக் காட்டினான்.

துணியிலிருந்து
வண்ணப் பூக்கள் உதிர்ந்தன.
சிறகை அசைக்கப் பழகிய குருவிகள்தடுமாறிப் பறந்தன.
மலை உருண்டு விழவும்
நதியொன்று அவ்விடத்தைக் க‌ட‌ந்தது.

சில தலைவர்கள் முழங்கத் துவங்கினார்கள்
நடிகர்களையும்
சில‌ ந‌டிகைகளையும் உதிர‌ச் செய்து
புதிய‌ உல‌க‌ம் ப‌டைக்கத் துவங்கினான்.

நினைவு வந்தவனாய்
கைக்குட்டைகளை கவனிக்கையில்
நிறமிழந்து
வெளுப்பாகியிருந்தன அவை.

உதறுவதை நிறுத்தி
விம்ம‌த் துவ‌ங்கினான்.

ஆயிரம் ஆண்டுகளாக
அவ‌ன் விம்முவ‌தாக‌
இந்த ஓவிய‌த்தைப் பார்ப்பவர்கள்
சொல்லிச் செல்கிறார்க‌ள்.
----
மழை ஓய்ந்த இரவின் அமைதியை
யாரும் கொண்டாடுவதில்லை.

மழை ஓய்ந்த இரவில் கதைகள் தோன்றுகின்றன‌
மழை ஓய்ந்த இரவில் கவிதைகள் எழுதுகிறார்கள்
மழை ஓய்ந்த இரவில் சாராயம் அர்த்தம் கொள்கிறது

நகரம் தன்னை கழுவிக் கொள்ளும்
இந்த இரவின் வெறுமையில்
இந்த இரவின் நிசப்தத்தில்
இந்த‌ இர‌வின் அகால‌த்தில்

மரணத்தைக் கடக்கிறார்கள்.

கொண்டாட வேண்டிய‌ ம‌ர‌ண‌த்தை.

நன்றி: தக்கை, நவம்பர் 2007.

Nov 15, 2007

மரணம்‍-இரு கவிதைகள்

கைவிட‌ப்ப‌டுத‌லின் க‌ரிப்பு
நிராக‌ரிப்பின் வேத‌னை
புற‌க்க‌ணிப்பின் துக்க‌ம்
த‌விர்க்க‌ப்ப‌ட்ட‌ பிரிய‌ம்

கார‌ண‌ம்
எதுவுமில்லை ந‌ண்ப‌ர்க‌ளே.

எந்த‌ச் சிக்க‌லும‌ற்ற‌
ம‌ர‌ண‌த்திற்கு
ஆய‌த்த‌மாகிறேன்.

மின் விசிறியில்
த‌னித்து அலையும்
காகித‌த்தையொத்த‌
எளிய‌தொரு
மர‌ண‌த்திற்கு.
--------

ந‌ண்ப‌ர்களே
சப்தங்களைக் குறையுங்க‌ள்
அதிகார‌த்தின் சொடுக்கினை நிறுத்துங்க‌ள்
உங்க‌ள்
கொண்டாட்ட‌ங்க‌ளுக்கு ஓய்வ‌ளியுங்க‌ள்

சிரிப்பொலிக‌ளை
சிறு அழுகைக்கு பின்
எழுப்ப‌லாம்.

உற்சாகப் பிளிறலை
சில விநாடிகள்
ஒத்தி வைக்கலாம்.

மர‌ண‌ம் அர‌ங்கேறும்
இக்க‌ண‌த்தை-
நிசப்த‌த்தின் க‌ர‌ங்க‌ளுக்குள்
ஒப்ப‌டைத்து
உயிர் பிரியும் ஓசையை
ரசிக்கலாம்.

ந‌ண்ப‌ர்களே
சப்தங்களைக் குறையுங்க‌ள்.

Nov 4, 2007

ஜெயலலிதா அம்மையாரின் தேசபக்தி வாழ்க!!

நாட்டில் ஊடுருவிக் கிடக்கும் தீவிரவாதம் குறித்தான தங்கள் கவலை என்னைப் போன்றவர்களை புல்லரிக்க செய்கிறது அம்மையாரே.

கலைஞருக்கு எவ்வளவு தெனாவெட்டு இருந்தால் ஒருவர் இறக்கும் போது இரங்கல் கவிதை வாசிப்பார்? அதுவும் ஈழத்தைச் சேர்ந்த ஒருவரின் இறப்புக்காக...

இது போன்று நடைபெறும் மாபெரும் தவறுகளைச் சுட்டிக்காட்டி தாங்கள், சுப்பிரமணிய சாமியார், சோ போன்ற‌ நாட்டுப்பற்றாளர்கள் குரல் கொடுப்பதால்தான் தமிழகத்தில் ஏதாவது மூலையில் தான் உண்டு தன் சோலியுண்டு இருக்கும் சுப்பன் கூட, ஈழம் பற்றி பேசுவதே தவறு என்று வாயைக் கட்டிக் கொண்டு அமைதியாக இருக்கிறான்.

சாமானியனுக்கு அடுத்த வீட்டுக்காரன் சாகும்போது வாயை மூடிக் கொள்ள வேண்டும் என்ற பயத்தை உண்டாக்குவது எனபது எவ்வளவு பெரிய திறமை? திறம்படச் செய்கிறீர்கள் பற்றாளர்களே.

தங்கள் சமூகத்திற்கு ஒரு விண்ணப்பம்: தங்களுக்கு பிறரின் போராட்ட முறையோ, அணுகுமுறையோ பிடிக்கவில்லை என்னும் போது எதிர்த்துப் பேசுங்கள், அறிக்கை வெளியிடுங்கள், போராட்டங்களை நடத்துங்கள். யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை.

ஆனால் போராளிக‌ள் யாருக்காக‌ போராடுகிறார்க‌ளோ அந்த‌ ம‌க்க‌ளைப் ப‌ற்றி நினைப்ப‌து கூட‌ த‌வறு என்றும், அதுவே தேச‌விரோத‌க் குற்ற‌ம் என்ப‌து போன்ற‌துமான‌ தோற்ற‌ங்க‌ளை த‌ய‌வு செய்து தமிழகத்தில் உருவாக்காதீர்க‌ள்.

ஏற்க‌ன‌வே இந்திய‌ ஊட‌க‌ங்க‌ளுக்கு ஈழ‌த்த‌மிழ‌ர் பிர‌ச்சினை ஏதோ பெயர் தெரியாத ஆப்பிரிக்க‌ நாட்டு பிரச்சினைக்குச் ச‌ம‌மான‌து. பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ ஊட‌க‌ங்க‌ளுக்கு, ஈழ விவகாரம் என்பது செய்திப்ப‌ற்றாக்குறை வ‌ரும் போது நிரப்புவதற்கு தேவைப்ப‌டும் ஒரு விவாகார‌ம் என்ற‌ நிலையில், உற‌வுக‌ளை இழ‌ந்துவிட்டு தீவில் க‌த‌றிக் கொண்டிருக்கும் த‌மிழ‌னையும், த‌ன் வேர்க‌ளை வெட்டுக் கொடுத்து உல‌கின் ஏதோ ஒரு மூலையில் உயிர் வளர்க்கும் ச‌கோத‌ரர்க‌ளையும் அந்நிய‌ப்ப‌டுத்தும் போக்கினை கைவிடுங்க‌ள்.

இந்திய‌ அர‌சோ, ஊட‌க‌மோ தீவுத்த‌மிழ‌னுக்கு ஒரு உத‌வியும் செய்யாத‌ போதும், த‌மிழ‌க‌த்தை தாண்டிய‌ மாநில‌ங்க‌ளில் இது ஒரு ஊறுகாய் விவ‌கார‌மாக‌ இருந்த‌ போதும், குறைந்த‌ ப‌ட்ச‌ம் த‌மிழ்நாட்டிலாவ‌து சில‌ர் குர‌ல் கொடுத்துக் கொண்டிருக்க‌ட்டும். அவ‌ர்க‌ளால் எதுவுமே இய‌லாத‌ போது சில சொட்டுக்கள் க‌ண்ணீரையாவ‌து சிந்த‌ட்டும்.

அவனையும் மிர‌ட்டி த‌ன‌க்குள்ளாகவே த‌ன் துக்க‌ங்க‌ளை புதைத்துக் கொள்பவனாக‌ மாற்றாதீர்க‌ள். நீங்க‌ள் அர‌சிய‌ல் செய்வ‌த‌ற்கு எத்த‌னையோ விஷ‌ய‌ங்க‌ள் ம‌லிந்து கிட‌க்கின்ற‌ன‌. த‌மிழ‌க‌த்தில் வாக்குரிமை இல்லாத‌ இன்னொரு த‌மிழ‌னின் உயிரை வைத்து அரசிய‌லாக்காதீர்க‌ள்.

இந்த‌ விவ‌கார‌த்தில் 'க‌ன்ன‌ட‌த்து பாப்பாத்தி' என்று த‌ங்க‌ளை நிரூபிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை அம்மையாரே.

Nov 2, 2007

என் ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்கிறேன்.

தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் மற்றும் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். வாகைக்குமரன் ஆகியோர்கள் வீர மரணம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த துக்கத்தையும் அளிக்கிறது.

உலகெங்கும் வாழும் தமிழர்களோடு என் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன். ஈழச் சகோதரர்களுக்கு என் ஆறுதல்கள் உரித்தாகுக.

ம‌ர‌ண‌ம் ஏற்க‌விய‌லாத‌ துன்ப‌ம் என்ற‌ போதிலும் த‌மிழ்ச் ச‌கோத‌ர‌ர்க‌ள் ஈழ‌த்தில் த‌ங்க‌ளின் ந‌ம்பிக்கையையும், போராட்ட‌ குண‌த்தையும் இம்மிய‌ள‌வும் இழ‌ந்துவிட‌க்கூடாது என‌ விரும்புகிறேன்.

விழும் ஒவ்வொரு வீர‌னும் வேறொரு வ‌டிவ‌த்தில் எழுவ‌துதான் போரின் வெற்றி சூட்சும‌ம் ந‌ண்ப‌ர்க‌ளே.

வீரவணக்கம் தோழர்களே.

Nov 1, 2007

எனக்கு பிரமச்சாரி ராசி

எங்கள் பள்ளியில் ஒரு கலைநிகழ்ச்சி. பெண்கள் எட்டிக் கூட பார்க்காத எங்கள் பாலைவனத்திற்கும் வேறு பள்ளி பெண்கள் குவிவார்கள் என்றால் எப்படி எங்களை எல்லாம் கையில் பிடிப்பது? எங்களுக்கு எல்லாம் அப்பொழுது அரும்பு மீசை மெதுவாக எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்த பருவம். புதிய கதாநாயகர்கள் தமிழ் சினிமாவில் நுழைந்து கொண்டிருந்தார்கள்.
என்னைப்போன்ற பையன்களும் எங்களை அவர்களுக்கு இணையாக நினைத்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தோம். எல்லோரும் கதாநயகர்கள் ஆன சமயத்தில் எனக்கும் அதற்கான தருணம் வந்தது.கலைநிகழ்சியில் நடனமாடிய அவளைப் பார்த்து.தூணின் மீது சாய்ந்து கரங்களை கட்டிக் கொண்டு லுக் விடுவது, மெலிதாக சிரித்துக் கொள்வது, 'நீ அழகன்டா' என நினைத்துக் கொள்வது என ஒரே மயக்கம். சினிமா நடிகர் செந்தில் தோற்றார் போங்கள்.
அப்போது நான் என்ன படித்துக் கொண்டிருந்தேன் என்பதனைச் சொல்லவில்லையே? ஒன்பதாம் வகுப்பு.(யாரோ பிஞ்சில பழுத்த கேஸ்னு சொல்வது கேட்கிறது) அந்த நடனக் குழு அமலா ஸ்கூல் என்று தெரிந்துவிட்டது. ஆனால் என்ன பெயர்,என்ன படிக்கிறாள் என்பதெல்லாம் தெரியாதே! அதற்கென்ன? அதைவிடுத்தால் வேறு என்ன பெரிய வெட்டி முறிக்கும் வேலை காத்துக் கிடக்கிறது?
அதுவரை அந்தப் பள்ளி ஒன்று இருப்பது தெரியும் அவ்வளவுதான். அவள் வந்து நடனமாடிச் சென்ற பின்னர் பின்னர் அந்தப் பள்ளியில் படிப்பவர்களை விட எனக்கு நிறையச் செய்திகள் தெரியும். அத்தனை விஷயங்களை சேர்த்து வைத்துக் கொண்டேன். அப் பள்ளியின் முதல்வர் பெயர், அவளின் எட்டாம் வகுப்பு தமிழ் டீச்சர் பையன் எங்கள் பள்ளி மாணவன் என்ற விவரம் எல்லாம் தெரிந்து வைத்து என்ன செய்தேன் என்று தெரியவில்லை.
எனக்கு 4.30 க்கு பள்ளி முடியும். ஆனால் அவளுக்கு 3.30க்கு. தவியாய் தவித்துவிட்டேன். நான் போவதற்கு முன்பாக அவள் சென்றுவிடுவாள் என்றுதான். முதல் வேலையாக அவளின் பள்ளி அருகே தங்கி இருக்கும் ஏதாவது ஒருவனை நண்பனாகப் பிடித்தால் தேவலாம் என்று தோன்றியதால்,பல்குமார் என்று செல்லமாக அழைக்கப்பட்ட சக்திக்குமாரை பிடித்துக் கொண்டேன்.
அவன் வீடு இதன் பிறகு எனக்கு போதிமரம் ஆகிப் போனது. நல்ல வேலையாக அவளுக்கு சனிக்கிழமை பள்ளி இருக்கும். எனக்கு விடுமுறை அல்லது ஒரு மணிவரைதான். அடித்து பிடித்து சென்றுவிடுவேன் போதிமரம் நோக்கி. தவமாய் தவமிருந்து பல்லுக்கு என் தேவதையை காட்டிவிட்டேன்.
பல் சொன்னது எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. "அவள் எனக்கு பேமிலி பிரன்ட். அவுங்க வீட்டில தான் நான் எப்பவுமே இருப்பேன். கவலைப் படாதே அவளை நீ கல்யாணம் பண்ணுற, நான்தான் உனக்கு துணை மாப்பிள்ளை. ஆனால் சர்ச்ல துணை மாப்பிள்ளை இருப்பாரான்னு தெரியலை" எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி. அவனே சொன்னான். அனிதாவுக்கு கல்யாணம் சர்ச்சுலதாண்டா நடக்கும் என்று. கிறிஸ்தவப் பெண் என்பதால் கொஞ்சம் அதிர்ச்சி ஆனேன். ஆனால் காதலுக்குத்தான் கண் இல்லையே. தலைவரே தொடர்ந்தார். "இது எல்லாம் சகஜம்டா.இப்போ எல்லாம் ஒரு முறை சர்ச்சிலயும் அப்புறம் கோவில்லையும் கல்யாணம் பண்ணி வைப்பார்கள். நீ உங்க வீட்ட பார்த்துக்க, அவுங்க வீட்டுக்கு நான் பொறுப்பு." என்னை பிஞ்சில் பழுத்தவன் என்று நினைத்த பெருமக்களே, பல்லனை என்ன நினைப்பீர்கள்?
நான் பறக்க ஆரம்பித்துவிட்டேன். எப்படியாவது அவள் வீட்டுக்குப் போகவேண்டும் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்து அவர்கள் வீட்டில் என்னை மிகவும் பிடித்துப் போய்விட வேண்டும். ஆனால் எப்பொழுது போகலாம் என்பதைப் பல்தான் தெரிவிக்க வேண்டும். நச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன். அவன் இந்த சனிக்கிழமை போகலாம் என்று சொல்லி ஐடியா ஒன்று கொடுத்தான்.
"என் வீட்டுக்கு வந்து விடு. இருவரும் கிளம்பிப் போகலாம். நான் முன்னதாகப் போய்விடுவேன் சிறிது நேரம் கழித்து நீ அந்தப் பக்கமாக வா. நான் உன்னை அழைப்பேன்"
"சைக்கிள் பெல் அடிக்கட்டுமாடா?" இது நான்.
"உனக்கு அறிவே இல்லைடா. ஐயோ உன்னை எல்லாம் எப்படி தேத்தறதுனு தெரியலை. பெல் அடிச்சா அவுங்க வீட்டில சந்தேகம் வந்துடும். நீ அங்க வா மத்தது எல்லாம் நான் பார்த்துக்கிறேன்"
எப்பொழுது சனிக்கிழமை வரும் என்று தவிப்புடனே திரிந்தேன். காலையில் அம்மா அப்பா அலுவலகம் சென்றவுடன் அப்பாவுடைய ஷேவிங் செட்டை தேடிப் பிடித்து எடுத்தேன். ஆனால் ஷேவ் செய்யும் அளவுக்கு தாடி மீசை எல்லாம் இல்லை. எசகு பிசகாக இழுத்ததில் ஒரு அழமான கீறல். இரத்தம் ஒழுக ஆரம்பித்துவிட்டது. அது குறித்து பிறிதொரு நாளில் கவிதை எழுதினேன்.
"எப்படியென்றே தெரியாமல்
கோணலாய்ப் பிடித்து
இழுத்துக் கிழித்த வடு
இன்னும் இருக்கிறது.
உனக்கு
மீசையில்லாத நடிகர்
பிடிக்கும்
என்றசெய்தியால்".
அந்த பல்லவராயன் தான் ஒரு நாள் சொன்னான். ஷாருக்கானை அனிதாவுக்கு மிக பிடிக்கும் என்று.
முகம் நிறைய கோகுல் சேன்டல் பவுடரைப் பூசிக் கொண்டு-அப்பிக் கொண்டு என்பது பொருத்தமாக இருக்கும். முதன் முறையாக டக் பண்ணிக் கொண்டு அதுவும் அரைஞான்கயிறை பேண்ட் மீது 'பெல்ட்'க்கு பதிலாக போட்டுச் சென்றேன். சைக்கிள் மிதித்த வேகத்தில் வியர்வை வழிந்து, பவுடர் கரைந்து அழகு கூடிக் கொண்டே வந்தது.
அதற்கும் காரணமிருக்கிறது. அவன் வரச் சொன்ன நேரம் நான்கு மணி. நான் சாப்பிட்டவுடன் 1.30 க்கெல்லாம் கிளம்பிவிட்டேன். வெய்யில் கருக்கி எடுத்தது. என்னை பார்பதற்காக 'வப்புஸ்'(பப்ஸை என் அமத்தா அப்படிதான் சொல்வார்) எல்லாம் வாங்கி வந்திருந்த அமத்தாவிடம் நண்பன் வீட்டுக்கு படிப்பதற்குச் செல்வதாக சொல்லிச் சென்றேன். அமத்தா பாவமாக ஒரு பார்வை பார்த்தார்.
பல்லு வீட்டில் இல்லை. சரி அவன் சொன்ன நேரத்தில் இருப்பான் என்று நினைத்தேன். ஆனால் அவன் வருவதாக இல்லை. அனிதா வீட்டின் முன்பாக இரவு எட்டு மணி வரைக்கும் அலைந்து கொண்டிருந்தேன். ஒன்பதாவது படிக்கும் பொடியன் என்று யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நான் கொடுத்த 'பில்ட் அப்' இருக்கிறது பாருங்கள். சீதையை சிறை எடுக்க வந்த ராவணன் என்ற நினைப்பில் சந்தனக் கடத்தல் வீரப்பன் அளவிற்கு அல்லது அதற்கும் அதிகமாக திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை.
அடுத்த நாள் பொறுமையாக வந்து, பல்லன் என்னிடம் கேட்டான் "ஏண்டா அங்கு வரவில்லை" என்று. தூக்கி வாரிபோட்டது. ஆனால் அடிக்கவோ திட்டவோ தைரியமில்லை. இவன் இல்லை என்றால் என் காதலை கரையான் அரித்துவிடக்கூடும். அவனே தொடந்தான் "சரி அவளின் வீட்டுப் பக்கத்தில் ஒருவன் இருக்கிறான். எனக்கு நண்பன் தான். அவனைப் பிடித்தால் காரியம் ஆகும்". அது பல்லவராயனாக இருந்தால் என்ன, காத்தவராயனாக இருந்தால் என்ன? எனக்கு காரியம் ஆனால் போதும்.
இப்பொழுதே சந்தித்து விடலாம். "அவனுக்கு ஐஸ் போடணும்டா. டைரி மில்க் வாங்கிக்க"
"நானே டைரி மில்க் சப்பிட்டதில்லை டா"
"அதனால? லவ் சக்ஸஸ் ஆகணுமில்ல? வாங்கு டா!" கிட்டத்தட்ட உத்தரவிட்டான். என்ன இருந்தாலும் நம்ம ஆளுக்குதானே என்று திருப்திபட்டுக் கொண்டேன்.
டைரி மில்க் வாங்கிக் கொண்டு வசந்தைப் பார்க்கப் போனோம்(வசந்த்- புதுத் தூதுவரின் பெயர்). அப்பொழுது அவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அறிமுகப் படுத்திய பல் கிளம்பும்போது சொன்னது "நான் கொஞ்சம் பிஸி.உன் ஆளை அவனிடம் காண்பித்துவிடு. மத்ததெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்.நான் தெளிவா சொல்லிவிட்டேன்"
"டேய் ப்ளீஸ்டா நீயும் இருடா"
"கவலைப் படாதடா. இவன் நம்ம பையன். வசந்த் வரட்டுமா?"
வசந்த்தின் அப்பா என் ஊரில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிகிறார் என்பதால் நம்பிக்கை கூடியது. நம்பிக்கை கூடியதற்கான காரணம் இப்போது யோசித்தால் புலப்படவில்லை.
சரியாக அரைமணி நேரம் ஆகியும் யாரும் வரவில்லை. அவனுக்கு பொறுமையில்லை. "அண்ணா(இதுதான் முதலும் கடைசியுமாக அவன் சொன்ன‌ அண்ணா) அனிதாதானே? நான் பார்த்துக்கிறேன். நீங்கள் தைரியமாக வீட்டிற்கு போங்க" என்றான். எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் அவனே தொடர்ந்து பேசினான். "அவுங்க பேர் அனிதா.எட்டாவது படிக்கிறாங்க. அப்பா டீச்சர். அம்மா வீட்டில்தான் இருக்காங்க‌" என வரலாறு ஒப்பித்தான். சரி என்று தூதுவரிடம் இரண்டு டைரி மில்க் கொடுத்தேன். ஒன்று உனக்கு மற்றொன்று அனிதாவுக்கு.
என் பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது முதல் எழுத்தை தவிர்த்தால் அடுத்த மூன்று எழுத்துக்களும் அனி என இருக்கும். என் பெயரில் அனி என்னும் மூன்று எழுத்தை மட்டும் அழுத்தமாக எழுதுவது என எல்லாம் அலும்பல் செய்தேன்.
அடுத்த நாள் வஸந்திடம் கேட்டேன். டைரி மில்க் வாங்கிக் கொண்டாளா என்று. முதலில் முறைத்ததாகவும் பின்னர் வாங்கிக் கொண்டதாகவும் சொன்னான்.
"பல்லுக்கு அனிதா ரொம்ப பழக்கமா வஸந்த்?"
"அப்படியா சொன்னான் அவன் கதை விடுறான்.நம்பாதே"எப்படியாவது வஸந்தாவது கிடைத்தானே. நிறைய டைரி மில்க் அதுவும் இரண்டு இரண்டாக கொடுக்க வேண்டி இருந்தது.
ஒரு நாள் வஸந்துடன் பேசிக் கொண்டிருக்கும் போது "உன் ஆள் வருது பார்" என்றான்.
"அது அனிதாவோட பிரண்டுடா"
"என்கிட்டயேவா.அதுதான் அனிதா"
"அடப் பாவி நான் சொன்னது வேறடா"
"ஓ! அப்ப அது ஷீபாவா இருக்கும்" என்றான். அந்த தோரணையில் அத்தனை இளக்காரம் இருந்தது. இப்பொழுதாக இருந்தால் எட்டு சக்கர லாரியின் பின்பக்கமாக வைத்து நசுக்கி இருப்பேன். ஐயோ! என் பெயரில் இருந்த மூன்று எழுத்து மட்டும் சிதற ஆரம்பித்தது.
ஒன்னும் கவலைப்படாதே. நான் அனிதாகிட்டதான் சொல்லி இருக்கேன். அனிதாவையே காதலி.
"டேய் நீ என்னடா சொல்றது. என்னோட காதல் தெய்வீகக் காதல்.ஆளை எல்லாம் மாத்த முடியாது.ஷீபாவைத்தான் காதலிப்பேன் உதவ முடியுமா முடியாதா?"
"யோசிக்கலாம்" பெரிய மனுஷர் சொன்னர். பிறகு கண்டு கொள்ளவே இல்லை.
நானாக முயல வேண்டியதாகி விட்டது. அவள் டியூஷனுக்கு வரும்போது நண்பர்களிடம் சொல்லி வைத்து என் பெயரை சத்தம் போட்டு கத்தச் சொல்வது, டூயட் படத்தில் வரும் "சித்தத்தினால்" கவிதையை மனனம் செய்வது, எப்பவாவது அமலா ஸ்கூலில் பேச்சுப் போட்டியோ கவிதை போட்டியோ வராதா?(நமக்குதான் டான்ஸ் எல்லாம் வராதே)என்று வ‌ருந்திக் கிடப்ப‌து,
77 எண் பதித்த(அவள் வண்டி எண்) டி.வி.எஸ் 50 ஐ சைக்கிளில் துரத்துவது, அவளின் அப்பா பெயர் வண்டியின் பின்புறம் எழுதி இருக்கும். அதனை வைத்து தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அடிக்கடி ரிங் கொடுப்பது, தனி ஒரு நோட் வைத்து கவிதை எழுதுவது என பலவிதங்களில் முயன்றும் வெற்றி பெற முடியவில்லை.
எல்லவற்றையும் விட காமெடி(எனக்கு டிராஜடி) அவளுக்கு இப்படி ஒருவன் அவளைக் காதலித்தான் என்பதாவது தெரியுமா என்பதுதான்.
எனக்கு காதலர் தினம் இப்படித்தான் இருக்கிறது. எனக்கு பிரமச்சாரி ராசி.

Oct 30, 2007

ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்.

நரேஷ் தற்கொலை செய்து கொள்வான் என்று எனக்கு முன்பே தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரமாக செய்து கொள்வான் என்றுதான் தெரியவில்லை.

ஒரு வெளிநாட்டு வங்கியில் அவன் கடன் வாங்கியிருந்தான். இந்த‌ விஷயம் எனக்குத் தெரியும். எனக்கு மட்டுமில்லாமல் இந்தத் தெருவில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும். அதை வங்கி என்றும் சொல்ல முடியாது. நிதி நிறுவனம் மாதிரிதான். எப்படியாவது செல்போன் எண்ணைக் கண்டுபிடித்து ஒரு பெண் மிக நைச்சியமாக பேசுவாள். கொஞ்சம் ஏமாந்த சோனகிரியாக சிக்கிக் கொண்டால், ஆளுக்குத் தகுந்த மாதிரி கடன் தருவார்கள். கடன் தருவது என்பதை விட தலையணை வைத்து அமுக்குவது என்று சொல்லலாம். கடனைக் கொடுத்துவிட்டு கழுத்தில் துண்டு போட்டு மிரட்டி வாங்கும் வகையறா. நரேஷ் அவர்களிடம் மூன்று மாதம் முன்பாக பதினெட்டாயிரம் ரூபாய் கடனாக‌ வாங்கினான்.

மூன்று வயதில் ஒரு பையன், ஒரு வயதில் ஒரு பெண்தான் நரேஷ் குடும்பம். மனைவி ஏதோ மில்லுக்கு வேலைக்கு போகிறாள். குழந்தைகளை அவளின் அம்மா வீட்டில் விட்டிருக்கிறார்களாம்.

கடன் வாங்கி ஒரு மாதம் வட்டி சரியாகக் கட்டிவிட்டான் போலிருக்கிறது. அடுத்த மாதத்தில் இருந்து அக்கப்போர்தான். காலையில் பல் துலக்குகிறார்களோ இல்லையோ, கழுத்தில் மப்ளர் மாதிரியான துண்டை போட்டுக்கொண்டு ஏஜென்ஸிக்காரர்கள் வந்துவிடுகிறார்கள். வங்கி பணம் கொடுப்பதோடு சரி. வசூலிக்கும் பொறுப்பு ஏஜன்ஸிக்கு.

கந்துவட்டிக்காரர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை இந்த ஏஜன்ஸிக்காரர்கள். அந்த வீதி அகலறும்படி கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள். ப‌த்து நிமிட‌த்தில் கூட்ட‌ம் சேர்த்தும் விடுவார்க‌ள்.டிவியைத் தூக்குவோம், பிரிட்ஜை தூக்குவோம் என்று ஆர‌ம்பித்த‌வ‌ர்க‌ள் இப்பொழுது எல்லாம் ஆளைத் தூக்குவோம் என்றுதான் பேசுகிறார்க‌ள்.

இவ‌ர்க‌ளோடு ஒரு மாதம் இழ‌வெடுத்த‌ க‌ண‌வ‌னும்,ம‌னைவியும் அத‌ன்பிற‌கு ஒவ்வொரு நாளும் விடிந்தும் விடியாம‌லும் முக‌த்தை தொங்க‌ப்போட்டுக் கொண்டு வீதியில் யாரிட‌மும் பேசுவ‌தில்லை. தேற்றுப‌வ‌ர்க‌ளும் ஒருத்த‌ரும் இல்லை என்ப‌தும் கார‌ண‌ம். "ப‌தினெட்டாயிர‌ம் கூட‌ க‌ட்ட‌ கையாலாக‌த‌வ‌னுக்கு எதுக்கு பொண்டாட்டி புள்ளை" என்று சைக்கிள் க‌டை மாரிய‌ப்ப‌ன் பேசிய‌தாக‌வும் அத‌ற்கு ம‌ட்டும் ந‌ரேஷின் ம‌னைவி அவ‌னோடு ச‌ண்டைப் போட்ட‌தாக‌வும் சொன்னார்க‌ள்.

இந்த ச‌னிக்கிழ‌மை காலை ப‌தினோரு ம‌ணிக்கு எல்லாம் ந‌ரேஷ் தூக்கில் தொங்கிவிட்டான். வீதியே திர‌ண்டு விட்ட‌து. இப்பொழுது ஆளாளுக்கு ப‌ரிதாப‌ப் ப‌ட்டார்க‌ள். ந‌ரேஷின் ம‌னைவி க‌த‌றிக் கொண்டிருந்தாள். குழந்தைகளும் பாட்டி வீட்டில் இருந்து வந்துவிட்டார்கள். கூட்டத்தில் எல்லோரும் நிதி நிறுவ‌ன‌ம் ப‌ற்றி பேசிக் கொண்டிருந்தார்க‌ள்.

இதுதான் ச‌மய‌ம் என்று பேச நான் ஆர‌ம்பித்தேன். இர‌ண்டு பிள்ளைக‌ளை வைத்துக் கொண்டு ந‌ரேஷின் ம‌னைவி வாழ்நாள் முழுவ‌தும் க‌ஷ்ட‌ப்ப‌ட‌ வேண்டியிருக்கும். ஏதாவ‌து செய்தால் தேவ‌லாம் என்று ஆர‌ம்பித்தேன்.
ந‌ரேஷின் ச‌ட‌ல‌த்தை வைத்துக் கொண்டு போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ அவ‌னின் ம‌னைவி உட்ப‌ட‌ பெரும்பாலானோர் ஒத்துக் கொண்ட‌ன‌ர். சடலத்தை புதைத்துவிட்டு அப்புறம் கவனிக்கலாம் என்று சொன்னவர்களையும் கூட்டத்தில் யாரோ வாயை அடைத்துவிட்டார்கள்.

ப‌ட்டேல் சாலையில் இருக்கும் நிறுவ‌ன‌த்திற்கு ஆம்புலன்ஸில் சடலத்தை எடுத்துக் கொண்டு போன‌ போது நிறுவ‌ன‌த்தை மூடி இருந்தார்க‌ள். ஏற்க‌ன‌வே த‌க‌வ‌ல் தெரிந்து சில‌ர் வீட்டிற்கு கிள‌ம்பிவிட்ட‌தாக‌வும், சில‌ர் அலுவலகத்திற்குள் அம‌ர்ந்து கொண்டு வெளியில் பூட்டிக் கொண்ட‌தாக‌வும் சொன்னார்க‌ள்.

எது எப்ப‌டியோ உட‌ன் வ‌ந்த‌வ‌ர்க‌ள் க‌ண்ணாடி பெய‌ர்ப்ப‌ல‌கைக‌ள், பூச்செடிக‌ள் என‌ அனைத்தையும் நொறுக்க‌ ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள். உள்ளுர் தொலைக்காட்சி, போலீஸ் என அந்த இடம் ப‌ர‌ப‌ர‌ப்பாகிவிட்ட‌து. இது சற்றே 'சென்ஸிடிவ்' விஷ்யம் என்பதாலும், கூட்டத்தைமிரட்டினால் விபரீதம் ஆகிவிடலாம் என்பதாலும்,போலீஸூம் கூட்ட‌த்தை விட்டுவிட்டார்க‌ள். அந்தக் கட்டிடமே ஒரு வழிக்கு வந்திருந்தது.

மூன்று மணி நேரத்திற்குப் பின்பாக நிதி நிறுவ‌ன‌த்தின் ஆட்க‌ள் போலீஸ் ப‌ந்தோப‌ஸ்துட‌ன் வ‌ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் நடந்த தவறுகளுக்கு ம‌ன்னிப்பு கேட்ப‌தாக‌வும், நரேஷ் குடுமபத்துக்கு ப‌த்து இல‌ட்ச‌ம் வ‌ரை ப‌ண‌ம் த‌ருவ‌தாக‌வும் பேரம் பேசினார்க‌ள்.

இரண்டு மணி நேர பேச்சு வார்த்தைக்குப் பிறகு‌ இரு குழ‌ந்தைக‌ளுக்கும் த‌லா ஏழ‌ரை இல‌ட்சம் ரூபாயை நிர‌ந்த‌ர‌ நிதியில் வைக்க‌ வேண்டும் என்றும், ந‌ரேஷின் ம‌னைவி பெய‌ரில் ஐந்து இலட்ச‌ம் ரூபாய் த‌ர வேண்டும் என்றும்‌ முடிவு எட்ட‌ப்ப‌ட்ட‌து. சாவை மீறிய‌ ச‌ந்தோஷ‌ம் எல்லோருக்கும் ப‌ட‌ர‌த்துவ‌ங்கிய‌து.
_____________
நான் இந்த‌த் தெருவிற்கு குடி வ‌ந்து எட்டு மாத‌ங்க‌ள் ஆகிற‌து. திரும‌ண‌ம் ஆகாத‌வ‌னுக்கு வீடு த‌ருவ‌தில்லை என்ற‌ அம‌லாக்க‌ப்ப‌டாத‌ ச‌ட்ட‌த்தின் கீழ் எல்லோரும் ம‌றுத்துவிட‌, ந‌ரேஷின் வீட்டு ஓன‌ர் ம‌ட்டும் அவ‌ர்க‌ளின் அருகில் இருந்த‌ ஒரு போர்ஷ‌னைக் கொடுத்துவிட்டார். ஆஸ்பெஸ்டாஸ் கூரைதான் என்றாலும் மின்சார‌ வ‌ச‌தி இருக்கிற‌து. நான் ட்யூப்லைட் வைத்துக் கொள்ள‌வில்லை.

க‌க்கூஸ் என‌க்கும், ந‌ரேஷ் வீட்டிற்கும் த‌னித்த‌னி. ஆனால் பாத்ரூம் ஒன்றுதான். காலையில் ஐந்திலிருந்து ஆறு ம‌ணி வ‌ரைக்கும் த‌ண்ணீர் வ‌ரும். வாளிகளில் பிடித்து நிர‌ப்பி வைத்துக் கொள்ள‌வேண்டும். ஏமாந்துவிட்டால் குளிப்ப‌த‌ற்கு ம‌ட்டும‌ன்று வேறு எத‌ற்குமே த‌ண்ணீர் இருக்காது. ச‌னி,ஞாயிறு ஊருக்குப் போனால் தண்ணீருக்கு வேண்டியே ஞாயிறு இர‌வு வ‌ந்து சேர்ந்துவிடுவேன்.

இரண்டு மாதங்களில் என‌க்கும் ந‌ரேஷின் ம‌னைவிக்கும் ப‌ழ‌க்க‌ம் வ‌ந்துவிட்ட‌து. ப‌ழ‌க்க‌ம் என்றால் உங்க‌ள் ம‌ன‌தில் என்ன‌ தோன்றுகிற‌தோ அந்த‌ப் பழ‌க்க‌ம்தான். கொஞ்ச‌ நாட்க‌ளில் எல்லாம் ந‌ரேஷ் க‌ண்டுபிடித்துவிட்டான் போலிருக்கிற‌து. அவ‌ளைத் திட்டியிருக்கிறான்.
இதை நரேஷ் வெளியில் யாரிட‌மும் சொல்வ‌தில்லை. என்னிட‌ம் கூட‌ காட்டிக் கொள்ள‌வில்லை. தினமும் காலையில் நானும் அவனும் தண்ணீர் பிடிக்கும் போது வழக்கம் போலவே தான் பேசினான். அவ‌ள் என்னிட‌ம் சொன்ன‌ போதெல்லாம் அவ‌னைக் க‌ண்டு கொள்ள‌ வேண்டாம் என்று தைரிய‌மூட்டி என் தேவையை நிறைவேற்றிக் கொண்டேன்.

வெளியிலும் சொல்ல‌த் துணிவில்லாத‌வ‌ன்,முரட்டுத் தனமாக அவளையோ என்னையோ மிரட்டத் தெரியாதவன், அவ‌னாக‌வே வாழ்க்கையை முடித்துக் கொண்டான்.

எல்லோரும் கடனுக்காக இறந்தான் என்று நினைக்கிறார்க‌ள். நான் என்னால் இற‌ந்தான் என்று நினைக்கிறேன். இற‌ந்த‌வ‌னைத் த‌விர்த்து யாராலும் கார‌ண‌ம் க‌ண்ட‌றிய‌ முடியாது என்ப‌தால் நீங்க‌ளும் ஒரு கார‌ண‌த்தை க‌ண்டுபிடித்துக் கொள்ளுங்க‌ள். கார‌ண‌ம‌ற்ற‌ சாவு மிக‌க் கொடூரமானதும், துக்க‌க‌ர‌மான‌தும் இல்லையா?

நன்றி: ஆனந்த விகடன்

Oct 21, 2007

ஞாநி: கண்டனக் கூட்டம்.

ஓ போடும் ஞாநி, கலைஞரின் முதுமை குறித்து ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முக்கியமான எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்த கூட்டத்தை 'தீம்புனல்' அமைப்பு, வாணிமஹாலில் அக்டோபர் 21 ஆம் நாளில் நடத்தியது.

எழுத்தாளர்கள் மார்க்ஸ், அரசு, பிரபஞ்சன், சி.மகேந்திரன், அறிவுமதி, மனுஷ்ய புத்திரன், இமையம், தமிழச்சி, சல்மா, ரவிக்குமார், டி.எஸ்.எஸ்.மணி, கரிகாலன் மற்றும் பத்திரிக்கையாளர் பன்னீர் செல்வம் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

இளையபாரதி தொகுத்தளித்தார்.

தமிழச்சி பேசும் போது ஞாநியின் கட்டுரையில் பொதிந்திருந்த சாதீயப்பார்வையை முன் வைத்தார். மார்க்ஸ் தனது ஆவேசமான பேச்சில் பார்ப்பனீய ஆதிக்கம் இன்னும் ஊடகங்களில் விரவிக்கிடப்பது குறித்துப் பேசினார். பேச்சினை முடிக்கும் சமயமாக காலச்சுவடு இதழில் பெரியார் குறித்தான தரக்குறைவான விமர்சனம் வந்ததையும், அச்சமயத்தில் கனிமொழியும் காலச்சுவடின் ஆசிரியர் குழுவில் இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

டி.எஸ்.எஸ் மணி மிக உரக்கமாகவும் ஆவேசமாகவும் பேசியதில் பெரும்பாலான கருத்துக்கள் என்னவென்று புரியவில்லை. சல்மா ஞாநியை, ஒருமையில் விளித்து 'டிபிகல்' அரசியல் மேடையாக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டார். நல்லவேளையாக அவருக்குப் பின்னால் பேசியவர்கள் அந்த வழிமுறையைப் பின்பற்றவில்லை.

ரவிக்குமார், கலைஞர் சட்டப்பேரவையில் மிகத்துல்லியமாக விமர்சனங்களை கவனிப்பது குறித்தும் அவரது ஞாபக ஆற்றல் குறித்தும் பேசினார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த நூறாவது நாளில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனம் ஆட்சி குறித்தான தன் பார்வைகளை முன் வைத்த போது, அ.தி.மு.க உறுப்பினர் செங்கோட்டையன் குறுக்கிட்டு அவையின் நேரத்தை வீணடிப்பதாகப் பேசினாராம். ஏதோ கோப்புகளை கவனித்துக் கொண்டே குறிப்பு எழுதிக் கொண்டிருந்த கலைஞர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 'செயிண்ட் ஜார்ஜ்' கோட்டையை பற்றி புகழ்ந்தால் செங்கோட்டைக்கு ஏன் பொறுக்கவில்லை என நகைச்சுவையாக தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.

சி.மகேந்திரன், கலைஞர் கைது செய்யப்பட்ட போது நிகழ்த்தப்பட்ட உபாதைகள் ஞாநியின் கண்களுக்குத் தெரியவில்லை என்பது குறித்தான வினாவை எழுப்பி சூடேற்றினார். தோழர் ஜீவா குறித்து தான் படம் எடுக்கப்போவதாக எழுதிய கட்டுரையையும் முடிவாக பெரியாரின் படத்திற்கு பணம் கொடுத்த கலைஞர், ஜீவா படத்திற்கு பணம் தரமாட்டாரா என எழுதி, இடதுசாரிகளுக்கு கொம்பு சீவ முயன்ற ஞாநியின் 'பெருந்தன்மை'யையும் குறிப்பிட்டார்.

அறிவுமதி பேசும் போது பாழாய்ப்போன நண்பன் ஒருவன் என்னை தொலைபேசியில் அழைத்தான். வெளியே சென்று அவனோடு பேசிவிட்டு அரங்கிற்குள் வரும் போது ஞாநியைக் கண்டிக்கும் வகையில் இணையத்தில் வெளிந்த கட்டுரை குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் எந்தத்தளம் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும் இணையத்தளங்கள் கவனிக்கப்படுகின்றன என்ற சந்தோஷம் எனக்கு இருந்தது.

மனுஷ்ய புத்திரன், உயிர்மை தலையங்கத்தில் கலைஞரின் அரசு குறித்தான விவரங்களை எல்லாம் சேகரித்து, உயிர்மை பதிப்பகத்தின் நூல்களை அரசாங்கம் நூலகங்களுக்காக வாங்கக்கூடாது என்ற புகார்களை சில எதிரிகள் அரசுக்கு அனுப்பி வைத்த போதும் எந்தத் தடங்கலும் இல்லாமல் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டது எனவும், தமிழக அரசியல் சூழலில் கலைஞரின் ஆட்சி தவிர்த்த வேறு ஆட்சிகளில் இத்தகைய ஜனநாயக முறையை நினைத்துக் கூட பார்க்க இயலாது என்றும் குறிப்பிட்டார்.

பிரபஞ்சன் தன் வழக்கமான நகைச்சுவை கலந்த பேச்சில் பட்டாசைக் கொளுத்தினார். கோவை ஞானிதான் அசல் ஞானி என்றும், ஓ பக்க ஞாநி 'அஞ்ஞானி' என்றும் தான் ஏற்கனவே சொல்லியிருப்பதை ஞாபகப்படுத்தினார். ஓ பக்கத்தில் இருக்கும் முகங்கள் சமூகத்தால் தூக்கியெறியப்பட்ட சுப்பிரமணிய சாமி, சோ போன்றோரின் முகம் என்றும் இவர்களின் பின்பாக ஒளிந்து கொண்டு, ஞாநி பூனையை போல் 'மியாவ்' என்று கத்துவதாகவும் பேசினார்.

இறுதியாக பத்திரிக்கையாளர் பன்னீர்செல்வம் பேசினார்.

ஞாநி, ஆனந்த விகடனோடு சேர்த்து காலச்சுவடு குறித்தான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டது நான் எதிர்பார்க்காத ஒன்று.

பார்வையாளர்களில் பிரான்சிஸ் கிருபா, மணா, பத்ரி, தேவி பாரதி போன்ற எனக்குத் தெரிந்த சில முகங்களையும் பார்க்க முடிந்தது.

பார்ப்பனீயம் என்பது சகித்துக் கொள்ளவியலாத ஒன்று என்பதனை தொடர்ச்சியான நிகழ்வுகள் உணர்த்துவது மன நிறைவைத் தருகின்றது.

Oct 16, 2007

என் த‌ற்கொலைக்கான‌ வாக்குமூல‌ம்

இந்தக் காரணத்திற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள். நான் சொல்லும் காரணம் நம்பும்படியாக இருந்தால் நான் தற்கொலை செய்து கொண்டேன் என்று நம்புங்கள். இல்லையென்றால் எனக்கு தெரியப்படுத்தவும்.

என்ன சொல்லி அழுவது என் கதையை? எந்தப் பெண்ணும் என்னைக் காதலிப்பதில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். நான் ஒன்றும் அபிஷேக் பச்சன் இல்லைதான். அட ஐஸ்வர்யா ராய் வேண்டாம். குறைந்தபட்சம் என் அளவிற்கு பிரியங்கா சோப்ராவாவது திரும்பிப் பார்க்கலாம் இல்லையா? ம்ஹூம். கீழ் வீட்டுக்கு பாத்திரம் கழுவ வரும் விஜயா கூட பார்ப்பதில்லை.

இரண்டு மூன்று நாட்கள் கட்டையனோடு போனில் பேசினேன். கட்டையன் அவனாக போன் செய்ய மாட்டான். கஞ்சப்பயல். நான் செய்தால் மணிக்கணக்கில் மொக்கை போடுவான். அதுவும் இந்த முறை அறிவுரை வேறு. தமிழ்நாட்டில்தான் யார் வேண்டுமானாலும் அறிவுரை கொடுப்பார்களே. அதுவும் நொந்து கிடப்பவனிடம்தான் வண்டி வண்டியாய் கொட்டுவார்கள்.

கட்டையனின் அறிவுரை பெரிதாக ஒன்றுமில்லை. காதலி இல்லை என்றாலும் வருத்தப்படக் கூடாது என்றும், பொழுது போவதே தெரியாமல் 'கடலை' போடுவதற்கு தோழிகளை தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான்.

இப்படி எல்லாம் சொன்னால் கூட கட்டையனை மன்மதன் என்று நினைத்துக் நீங்கள் ஏமாற வேண்டாம். இவன் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் மாங்காய் என்பதுதான் என்னைப் பற்றிய அவன் எண்ணம். நேரம் காலம் பார்க்காமல் உடற்பயிற்சி செய்கிறேன் என்று உடம்பை மட்டும்தான் ஏற்றியிருக்கிறான். அதுவும் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம், நான், சந்திரசேகர ஆசாத், தனேஷ், கட்டையன் நான்கு பேரையும் நூற்றி இருபத்தைந்தாம் எண் அறையில் அடைத்து வைத்திருந்தார்கள்.

தனேஷ்,நான்,ஆசாத் மூன்று பேரும் கிழக்கு மேற்காக படுத்துக் கொள்ள, கட்டையன் மட்டும் வடக்கு தெற்காக படுத்திருந்தான். கொஞ்ச நாளில் தன்னால் வடக்கு தெற்காக படுக்க முடியாது என்றும் பேய்க்கனவு வருகிறதென்றும் சொன்னான். மற்ற இரண்டு பேரும் மறுத்துவிட, நான் திருவளத்தானாகிவிட்டேன்.

அடக்கடவுளே. பேய்க்கனவு எல்லாம் ஒன்றுமில்லை. இந்த குண்டன் தனேஷ் இருக்கிறான் பாருங்க‌ள். சொன்னால் சிரிக்க‌க் கூடாது. ச‌னிய‌ன் உள்ளாடை போடாம‌ல் லுங்கி க‌ட்டித் தூங்குகிறான். வ‌ட‌க்கு தெற்காக‌ ப‌டுத்த‌ க‌ட்டைய‌ன் வெறுப்பேறி பேய், பிசாசை எல்லாம் சொல்லி என்னை மாட்டிவிட்டான். நான் என்ன‌ செய்வ‌து என்று தெரியாம‌ல் ஒரு வ‌ருட‌ம் 'பேய்க்க‌ன‌வோடு'தான் உற‌ங்கினேன். அந்த‌ச் ச‌ம‌யங்க‌ளில் எல்லாம் ந‌டு ராத்திரியில் 'எக்ச‌ர்சைஸ்' செய்து க‌ட்டைய‌ன் பெருமூச்சுவிடுவான். என‌க்கு எரிச்ச‌லாக‌ வ‌ந்தாலும் அட‌க்கிக் கொண்டு ப‌டுத்துக் கிட‌ப்பேன்.

உட‌ம்புதான் க‌ழுமுண்ட‌ராய‌ன் மாதிரி. யாராவ‌து கொஞ்ச‌ம் ச‌த்த‌மாக‌ பேசினால் போதும் ந‌டுங்கி விடுவான். எதையோ சொல்ல‌ ஆர‌ம்பித்து எங்கேயோ வ‌ந்துவிட்டேன். கதை சொல்லும் போது பேச்சு மாறினால் கொஞ்ச‌ம் எடுத்துச் சொல்லுங்க‌ள்.

'கட‌லை' போடுவ‌த‌ற்கென்று பெண்ணை தயார் செய்வ‌து ந‌ல்ல‌தாக‌ப் ப‌ட்டாலும் எப்ப‌டி ஆர‌ம்பிப்ப‌து என்றெல்லாம் ஒன்றும் விளங்க‌வில்லை. ந‌ல்ல‌ வேளையாக‌ வித்யா ஏதோ சான்றித‌ழ் தேர்வு எழுதுகிறாளாம். வித்யாவும் என் அலுவ‌ல‌கம்தான். த‌மிழைக் கொலை செய்து பேசுவாள். அவ‌ளின் அப்பா சென்னையில் ப‌ணிபுரிவ‌தால் த‌மிழ் பேசுவ‌தாக‌ சொல்லியிருக்கிறாள்.

ப‌வ்ய‌மாக‌ ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். "தேர்வுக்கு என் வாழ்த்துக்க‌ள். ந‌ன்றாக‌ எழுத‌வும்". அடுத்த‌ மூன்று நிமிட‌த்தில் என‌க்கு அழைப்பு. வித்யாதான். அடேய‌ப்பா. 'ர‌த்த‌ம் சுல்லுன்னு ஏறுச்சுடா மாப்ள' என்று ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சொல்லி கேள்விப்ப‌ட்டிருக்கிறேன். ஆனால் அப்பொழுதுதான் என‌க்கு முத‌ன்முத‌லாக‌ ஏறிய‌து.

அவ‌ள் கேட்ட‌ கேள்வி கொஞ்ச‌ம் வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்த‌துதான் என்றாலும் முழ‌ம் ஏறினால் ஜாண் ச‌றுக்குவ‌து ச‌க‌ஜ‌ம்தானே. "இந்த நெம்பர்ல இருந்து எஸ்.எம்.எஸ் வ‌ந்துச்சு. இது யாரோட‌ நெம்ப‌ர்ன்னு தெரிய‌ல‌" என்றாள்.
கொஞ்சம் வழிந்து கொண்டே "உங்களுக்கு விஷ் பண்ணலாம்ன்னு நான் தான்".

"தேங்க்ஸ் எ லாட்" என்றாள். முத்தொன்பது வினாடிகளில் பேச்சை முடித்துக் கொண்டோம். கொஞ்சம் அதிகமாக வழிந்துவிட்டேனோ என்று சந்தேகமாக இருந்தாலும், முத்தொன்பது வினாடியில் வழிவதை அவளால் கண்டறிய முடியாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

அவ‌ள் என்ன‌மோ சொல்லி இருக்க‌ட்டும் ஆனால் அவ‌ள் என‌க்கு போன் செய்துவிட்டாள். அதுதான் முக்கிய‌ம். இது வேறு யாராக‌ இருந்தாலும் அவ‌ள் போன் செய்திருப்பாள் என்று சொல்லி என்னை வெறுப்பேற்றாதீர்க‌ள்.
ராத்திரி ரூம்மேட் வேறு இல்லை. நான் மட்டும் தனியாக இருக்கிறேன்.

க‌ற்ப‌னைக் குதிரை ஓட‌ ஆர‌ம்பித்துவிட்ட‌து. க‌ற்ப‌னைக் குதிரை சுமாராக‌ ஓடும் ஜ‌ப்ஷா வ‌கைக் குதிரை இல்லை. ந‌ல்ல‌ அரேபிய‌க் குதிரை. த‌றிகெட்டு ஓடுகிற‌து. இழுத்துப் பிடித்தால் என்னையும் இழுத்துவிடும் போலிருக்கிற‌து. ஓட‌ட்டும் என்று விட்டுவிட்டேன்.

ஒரே இர‌வில், க‌ல்யாண‌ம் வ‌ரைக்கும் போய்விட்டேன். இந்த‌ இட‌த்தில் ஒரு ஸீன் சொல்லியே தீர‌ வேண்டும். வெங்க‌ல‌ ராவ் பார்க்கில் என் ம‌டி மீது த‌லை வைத்து ப‌டுத்துக் கொண்டிருந்தாள். நான் அந்த‌ நில‌வை பார் எவ்வ‌ள‌வு அழ‌காக‌ இருக்கிற‌து என்றேன். இதை எங்க‌ள் தாத்தா கால‌த்தில் என்.டி.ஆர் காரு சொல்லிவிட்டார் என்றார். வேறு என்ன‌தான் சொல்வ‌து என்று தெரிய‌வில்லை. முத்த‌ம் கொடுக்க‌ முய‌ன்றேன். ஆனால் இத‌ற்கு மேல் சொல்வ‌த‌ற்கு என‌க்கு வெட்க‌மாக‌ இருக்கிற‌து.

எப்ப‌டி உற‌ங்கினேன் என்றே தெரிய‌வில்லை. விடிந்த‌ போது ச‌னிக்கிழ‌மை. இன்றுதான் தேர்வெழுதுகிறாள். ம‌திய‌ம் வ‌ரைக்கும் நான் ந‌க‌த‌தைக் க‌டித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது ஒரு குதிரை ஸ்லோமோஷ‌னில் ஓடுகிற‌து. அவ‌ள் பாஸ் செய்தாள் அனுப்ப‌ வேண்டிய‌ மெஸேஜ், தோல்விய‌டைந்தாள் அனுப்ப‌ வேண்டிய‌ மெஸேஜ் என்றெல்லாம் ஓடுகிற‌து.

மூன்று ம‌ணிக்கு மதுபாவுவை தொலைபேசியில் அழைத்தேன். அவ‌ன் வித்யாவோடு தேர்வு எழுதினான். எடுத்த‌வுட‌ன் வித்யா எவ்வ‌ள‌வு ம‌திப்பெண் என்றால் ந‌ன்றாக‌ இருக்காது என்ப‌தால் அவன் ம‌திப்பெண்ணை எல்லாம் கேட்க‌ வேண்டிய‌தாயிற்று. எவ்வ‌ள‌வு சொன்னான் என்று ம‌ற‌ந்துவிட்ட‌து. அவ‌ன் ம‌திப்பெண் என‌க்கெத‌ற்கு? கூட‌ வேறு யார் எல்லாம் தேர்வு எழுதினார்க‌ள் என்று கேட்டேன். அத‌ற்கு ஒரு பட்டிய‌லைச் சொன்னான். செள்ம்யா என்ன‌ ம‌திப்பெண், ம‌கேஷ் எவ்வ‌ள‌வு என்றெல்லாம் கேட்டுவிட்டு ச‌ந்தேக‌ம் வ‌ராத‌ ச‌ம‌ய‌மாக‌ வித்யா மதிப்பெண்ணை கேட்டுவிட்டேன்.

தொண்ணூற்று இர‌ண்டு வாங்கியிருக்கிறாள். அவ‌ள் ம‌ன‌தில் வேறு எந்த‌ப் பைய‌னும் இல்லை என்று முடிவு செய்து கொண்டேன். யாராவ‌து இருந்திருந்தால் அவ‌னை நினைத்துக் கொண்டிருப்பாள். இந்த‌ அள‌வுக்கு ம‌திப்பெண் வாங்க் முடியாது இல்லையா. ம‌னோ த‌த்துவ‌விய‌ல் குறித்த‌ என் அறிவை நினைத்து என‌க்கே பெருமையாக‌ இருக்கிற‌து.

ந‌ன்றாக‌ யோசித்து "என‌க்குத் தெரியும். நீ அறிவாளியென்று. வாழ்த்துக்க‌ள். ட்ரீட் எப்பொழுது" என்று கேட்டு அனுப்பிவிட்டேன். பிற‌குதான் யோசித்தேன். இப்பொழுது கூட‌ 'ட்ரீட்' கேட்டு என் தின்னி புத்தியைக் காட்டிவிட்டேன் என்று.

அடுத்த‌ மூன்று நிமிட‌ம் அமைதியாக‌ இருந்தேன். மூன்று நிமிட‌த்திற்கு பின்ன‌ரும் அவ‌ளிட‌மிருந்து அழைப்பு வ‌ர‌வில்லை. ஒரு எஸ்.எம்.எஸ்சூம் வ‌ர‌வில்லை. ஒற்றை வார்த்தையில் வித்யாவை மெசேஜ் அனுப்ப‌ வை என்று ந‌ட‌ந்து போகும் போது தென்ப‌ட்ட‌ கோயிலில் எல்லாம் சாமி கும்பிட்டேன். ஒரு பிள்ளையார் என்னைபார்த்து சிரிப்ப‌து போல் இருந்த‌து. எட்டு ரூபாய் கொடுத்து தேங்காய் உடைப்ப‌தாக‌ வேண்டிக் கொண்டேன். இப்பொழுது வ‌யிற‌ன் அதிகமாக‌ சிரிக்கிறான்.

நேர‌ம் அதிக‌மாகிக் கொண்டிருந்தது ஆனாலும் பதில் வரவில்லை. ச‌னிக்கிழ‌மை ஆறு ம‌ணிக்கு அவ‌ள் சினிமாவிர்கு போயிருக்க‌ வாய்ப்பிருக்கிற‌து. எப்ப‌டி எஸ்.எம்.எஸ் அனுப்புவாள்? ஆனால் 'தேங்கஸ்' என்று ஒற்றை வார்த்தை கூட‌வா அனுப்ப‌ முடியாது? ஒரு வேளை செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டுப் போய் இருந்தால்? யாருமில்லாத சமயத்தில் எப்படியாவது நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொள்ளவேண்டுமல்லவா? அதுதானே மனித இயல்பு.

ஒன்பது மணி, ப‌த்து ம‌ணி, ப‌தினொரு ம‌ணி ஆன‌து. ஆனால் ஒன்றும் உருப்ப‌டியாக‌ இல்லை. பேண்ட் பாக்கெட்டில் வைப்ப‌தை விட‌, செல்போனை ச‌ட்டைப்பையில் வைத்தால் இத‌ய‌த்திற்க‌ருகில் இருக்கும் என்று வைத்துக் கொண்டேன். அப்பொழுதும் ஒன்றும் ந‌ட‌க்க‌வில்லை.

அடுத்த‌ நாள் க‌ட்டைய‌னிட‌ம் சொன்னேன். "டேய்! நீதான்னு தெரிஞ்சுமாடா அவ‌ ரிப்ளை ப‌ண்ணுவா?" என்றான் சிரித்துக் கொண்டே. என் பீலீங்ஸ் என‌க்கு. ம‌ன‌சுக்குள் அவ‌னுக்கு சாப‌ம் விட்டேன்.

திங்க‌ட்கிழ‌மை வித்யாவிட‌ம் கேட்டுவிட்டேன். பிஸியில் ம‌ற‌ந்துவிட்டாளாம். நான் ம‌ன‌முறிந்துவிட்டேன். இருப‌த்தைந்து வ‌ய‌து பெண் இர‌ண்டே நாளில் காத‌லிக்க‌ வேண்டும் என‌ நினைப்ப‌து ச‌ரியில்லைதான் என்றாலும், என் காத‌லின் வீரிய‌ம் அப்ப‌டி. நான் என்ன செய்வது?

க‌ம்பெனியிலிருந்து வீட்டிற்கு போகும் போது த‌ற்கொலை செய்து கொள்வ‌தாக‌ முடிவு செய்து கொண்டேன். 'கார்டினால்'என்ற தூக்க மாத்திரையில் ப‌த்து விழுங்கிவிட்டேன். செவ்வாய்க்கிழ‌மை காலையில் நான் இற‌ந்துவிட்ட‌தாக‌ பேசிக் கொண்டார்க‌ள்.

என் தற்கொலைக்கான இந்த‌க் கார‌ண‌ம் உங்க‌ளுக்கு ந‌ம்பும்ப‌டியாக‌ இருக்கிற‌தா? இல்லையெனில் சொல்லவும். ந‌ம்பும்ப‌டியான‌ இன்னொரு கார‌ண‌த்தை நான் யோசித்து சொல்கிறேன்.

Oct 12, 2007

செங்கமலமும் இலக்கியமும்-ஒரு இலக்கிய விவகாரம்

அக்டோபர் காலச்சுவடு இதழில் ஆசிரியர் கண்ணன் எழுதியுள்ள பத்தி இது.
-----
இலக்கிய அவதூறுகளில் சில கோபத்தையும் சில அருவருப்பையும் ஏற்படுத்தக்கூடியவை. சமீபத்தில் என் பெயர் குறிப்பிட்டு எழுதப்பட்ட ஒரு 'படைப்பை'ப் புரட்டிப் பார்த்தபோது, இரண்டாம் உணர்வே ஏற்பட்டது. அவதூறுப் படைப்புகளை எழுதுவதில் பெண் எழுத்தாளர்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதன் உதாரணம் இந்தப் 'படைப்பு'. பால் சமத்துவம் எந்நிலையிலும் வரவேற்கப்பட வேண்டியதுதான்.

அந்தப் 'படைப்பாளியை' ஓரிருமுறைகள் சந்தர்ப்பவசமாகச் சந்தித்திருக்கிறேன். முதல்முறை இவர் உலகக் கவிஞர் ஒருவருடன் மேற்கொண்டிருந்த பயணத்தில் இடையீடாக வீட்டிற்கு வந்திருந்தபோது. பின்னர் ஒருமுறை மதுரைக் கடைத் தெருவில். மூன்றாம்முறை, தனது திட்டங்கள் கடைசிவரை தனக்கே தெரியாதபடி செயல்படும் நண்பர், ஒரு பயணத்தின்போது முன் அறிவிப்பில்லாமல் என்னை அப்'படைப்பாளி' வீட்டு வாசலில் இறக்கியபோது. மூன்றுமுறையும் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசியதில்லை. கடிதம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி, தொலைபேசித் தொடர்பு எதுவும் எப்போதும் இருந்ததில்லை. ஓரிருமுறை அவர் காலச்சுவடுக்கு அனுப்பிய 'படைப்புகள்' அவற்றிற்கு உரிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றன. தமது படைப்புகளுக்கு இடமளிக்காத ஒரு தளத்தின்மீது எழுத்தாளர்கள் வருத்தம் கொள்ளலாம். ஆனால், எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. காலச்சுவடுமீது சில எழுத்தாளர்கள் 'பிளாக் மெயில்' ரக முயற்சிகளை மேற்கொள்வது ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

இந்தப் 'படைப்பு' என் பெயர் கொண்ட ஒரு கதாபாத்திரத்திற்கும் கதாசிரியருக்குமான அல்லது கதைசொல்லிக்குமான உறவையும் ஊடலையும் புனைகிறது. மேற்படி கதையில் என் பெயர் இடம் பெற்றிருப்பது வெறும் கற்பனை என்று ஒதுக்குவோம். பத்திரிகையாளர் எனத் தொழிற் பெயர் இடம் பெறுவதையும் மறந்துவிடுவோம். மேற்படி 'படைப்பாளி'க்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை? ஏன் உங்களைத் திட்டிக்கொண்டே இருக்கிறார்? என்று சில நண்பர்கள் தில்லியிலிருந்து குமரிவரை அவ்வப்போது என்னை விசாரிப்பது இப்'படைப்பாளி'யின் மனப்பிராந்துக்கு ஆதாரமாக உள்ளது. சதா பாதாளச் சாக்கடை முன் நிற்பதுபோல முகபாவம் காட்டும் அப்'படைப்பாளி'யோடு எனக்கு ஒவ்வாமையைத் தவிர வேறு எந்த உணர்வும் ஏற்பட்டது இல்லை. ஆர்.எஸ்.எஸ். அரசாங்கம் ஏற்பட்டால், அதன் சென்சார் போர்டில் பணியாற்றத் தகுதியான ஆச்சாரமான கருத்துகள்கொண்ட இந்தப் 'படைப்பாளி', இங்கு 'முற்போக்கு' வட்டாரத்தில் உலாவுவது தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.

கதையில் இவ்வாறு ஒரு கூற்று வருகிறது "நேரடியா படுக்க வர்றியா"னு கேட்பதே யோக்கியம் என்று. தமது படைப்புகள் வழி தமது ஆற்றாமையை வெளிப்படுத்தும் படைப்பாளிகள், தமது கதாபாத்திரத்தின் சில அறிவுறுத்தல்களையும் பின்பற்றுவது நல்லது.

மேற்படி கதை வெளிவந்த 'புதிய பார்வை' இணை ஆசிரியர் மணா அவ்விதழ் வெளிவந்து சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு என்னைத் தொடர்பு கொண்டார். அவர் குரலில் பதற்றமும் வலியும். மேற்படி சிறுகதையின் உள்சரடுகள் அவரது கவனத்திற்குத் தாமதமாகவே வந்திருக்கின்றன. தெரிந்தும் என்னிடம் ஏன் கூறவில்லை என்று என்னைக் கடிந்துக்கொண்டார். உதவி ஆசிரியர்கள் அச்சிறுகதையை வெகுளித்தனமாகத் தேர்வு செய்துவிட்டார்கள் என்று வருத்தம் தெரிவித்தார். 'புதிய பார்வை' இதழ் ஏப்ரல் 1-15, 2007இல் இக்குறிப்பு இடம்பெற்றுள்ளது.

சில இதழ்களுக்கு முன் 'புதிய பார்வை'யில் வெளிவந்த ஒரு சிறுகதை, சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியவாதிகள் மத்தியில் சலனத்தை உருவாக்கியிருக்கிறது. காரணம் - குறிப்பிட்ட சிறுகதையில் பாத்திரத்தின் பெயராகக் கருதப்பட்ட ஒரு பெயர் குறிப்பாக ஒருவரைச் சுட்டுகிற விதத்தில் எழுதப்பட்டிருப்பதுதான். படைப்பாளியின் படைப்புச் சுதந்திரத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் பேரிலேயே அதைப் பிரசுரித்திருந்தோம். ஆனால் தனிப்பட்ட ஒருவர் மீதான விமர்சனத்திற்கு அந்தச் சிறுகதை வடிவத்தைப் பயன்படுத்தியிருப்பதைப் பிறகே உணர்ந்தோம். தனிப்பட்ட தாக்குதல்களும் மோசமான வசைகளும் அவ்வப்போது நவீனமாக நிகழ்கிற தமிழ் இலக்கியச் சூழலில் - 'புதிய பார்வை'யைப் பொறுத்தவரை - கடந்த இரண்டாண்டுகளாக அதைக் கவனத்துடன் தவிர்த்துவந்திருக்கிறோம். எழுதப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க -வார்த்தைகளின் மூலமாக வலியைப் பரப்பும் பிறாண்டல்களுக்கு இடமளிப்பது திரும்பத் திரும்பக் குழுவாதத்தையே கௌரவப்படுத்துவதாக அமையும் என்றிருந்த கவனத்தை மீறி, தனிப்பட்ட தாக்குதலை மையமாகக்கொண்ட சிறுகதையை வெளியிட்டதற்காக வருத்தத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

'புதிய பார்வை' குறிப்பு வெளிவந்த பிறகு ஒரு பன்மொழி எழுத்தாளர் நவீன சரோஜாதேவி ரகக் கதைகளும் டௌன்லோட் கட்டுரைகளும் எழுதி விண்புகழை எட்டியிருப்பவர் - பலருக்கும் கிளுகிளுப்போடு குறுஞ்செய்தி அனுப்பிவந்ததாக அறிந்தேன். காக்கை உகக்கும் பிணம்.

சின்னக்ளூ: அந்தப் 'படைப்பாளியின்' பெயர் 'தி'யில் ஆரம்பித்து 'மா'வில் முடியும். இந்தக் கண்டுபிடிப்பிற்கெல்லாம் பரிசு கிடையாது.

Oct 11, 2007

என்ன‌ கொடுமை சார் இது?

என்னால் துளி கூட‌ நம்பமுடியவில்லை. மாதம் நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் வல்லுநருக்கு, ரோட்டில் குழந்தையை வைத்து பிச்சை எடுக்கும் பெண் மீது காதல் வந்திருக்கிறது என்றால் நீங்கள் மட்டும் நம்பவா போகிறீர்கள். ஆனால் நீங்கள் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை.

காதல் எனக்கு இல்லை. என் 'ரூம் மேட்' வெங்க‌ட் என்கிற வெங்கடாசத்திற்கு. என்னை விட இரண்டு வயது இளையவர். ஹைதராபாத் வந்து ஐந்து மாதம்தான் ஆகிறது. பெங்களூரிலிருந்து நான் பணிபுரியும் கம்பெனிக்கு வேலையை மாற்றிக் கொண்டு வந்த போது, ஹைதராபாத்தை மேய்ந்து கொண்டிருக்கும் என் தொலைபேசி எண்னை அவரது சொந்தக்கார அம்மிணி கொடுத்திருக்கிறார். அந்த அம்மிணி ஏற்கனவே எனக்குத் தோழி.

அதுவரை தடிமாடு கணக்காக வேலைக்குப் போவதும், ஞாயிற்றுக் கிழமையானால் நல்ல கடையாகத் தேடி கோழி பிரியாணியை வஞ்சகம் இல்லாமல் தின்பதுமாகச் சுற்றிக் கொண்டிருந்த எனக்கு பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த சந்தோஷம். ஆனால் இந்தக் கடவுளுக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லை. இந்த உலகில் இருக்கும் இருநூற்றம்பது கோடி பெண்களில் ஒருத்தி கூட என்னோடு சேர்ந்து சுற்றும் வழியைச் செய்வதில்லை.

வெஙகட், சாண்டில்யன்,கல்கி என்று வாசித்துவிட்டு இ.பா,கரிச்சான் குஞ்சு வழியாக ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணனில் 'டேரா' போட்டிருக்கும் காஞ்சிச் சிங்கம். தூங்கக்ப்போகும் போது இல‌ட்சிய‌வாத‌ம் பேசிக் மொக்கை போடும் போதெல்லாம் நான் பேசாம‌ல் இருந்துவிடுவேன். வெளிநாட்டுக்கார‌னுக்கு சலாம் போட்டுவிட்டு டால‌ரையோ, யூரோவையோ எண்ணி ச‌ட்டைக்குள் போடும் ஆசாமிக‌ளின் இல‌ட்சிய‌ம் மேல் எல்லாம் என‌க்கு ந‌ம்பிக்கையில்லை. ஏன் என்றால் நானும் அதே வகைய‌றாதான்.'ம‌ர‌த்த‌ ஜென்ம‌ம்'என்று ஒருவன் சொன்னான்.

நானும், வெங்க‌ட்டும் மெக‌திப்ப‌ட்ட‌ண‌த்தில் ஒரு வீட்டை வாட‌கைக்கு எடுத்துக் கொண்டோம். அலுவ‌ல‌க‌ம் இருக்கும் இட‌ம் பேக‌ம்பேட். 49 எம் ப‌ஸ் பிடித்தால் போதும். அரைமணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக அலுவலகம் வந்து விடலாம். அதுவும் ஆந்திர‌ அர‌சாங்க‌ம், வேலைய‌ற்ற‌ இளைஞ‌ர்க‌ளுக்கென்று ஒரு திட்ட‌த்தில் நிறைய‌ 'மினிப‌ஸ்'க‌ளை இய‌க்குகிற‌து. இருப‌து பேர் அம‌ர‌க்கூடிய‌ வ‌ண்டியில் அறுப‌து பேரைத் திணித்துக் கொள்வார்க‌ள். மெக‌திப்ப‌ட்ட‌ண‌த்திலேயே இட‌ம் பிடித்து அம‌ர்ந்துவிட்டால் த‌ப்பித்துக் கொள்ள‌லாம். இல்லையென்றால் எவ‌னாவ‌து பான் போட்டு முக‌த்திற்கு முன்னாடியே பேசுவான். தெறிக்கும் எச்சில் சார‌லைத் துடைத்துக் கொண்டே வ‌ர‌ வேண்டியிருக்கும். இந்த‌ எரிச்ச‌லை போக்குவ‌த‌ற்காக‌ நான் அடிக்க‌டி முணுமுணுக்கும் பாட‌ல் 'அந்திம‌ழை பொழிகிற‌து'.

வெங்க‌ட் ஹைதராபாத் வ‌ந்த‌ நாளிலிருந்தே, தீவிர‌வாதிக‌ளுக்கு குண்டு வெடித்துப் பார்ப்ப‌துதான் பொழுதுபோக்காக‌ இருக்கிற‌து. நாங்கள் இருவரும் க‌வ‌லையே ப‌டுவ‌தில்லை. சென்ற‌முறை லும்பினி பார்க்கில் 7.55க்கு குண்டு வெடித்த‌து. 9.00 ம‌ணிக்கு ஹைத‌ராபாத் பிரியாணி ஹ‌வுஸில் மூக்கு பிடிக்க‌ தின்று கொண்டிருந்தோம்.

நான்தான் க‌ஞ்ச‌த்த‌ன‌ப்ப‌ட்டு ஒரு பைக் வாங்க‌வில்லையென்றால், வெங‌க‌ட்டும் அப்ப‌டித்தான். இர‌ண்டு பேரும் நாம் காந்தியை போல‌ 'எளிமையாக‌' வாழ்வோம் என்று தேற்றிக் கொள்வோம். ம‌ன‌சுக்குள் சிரித்துக் கொள்வேன், த‌மிழில் எப்ப‌டி மோச‌மான‌வ‌ற்றையும், ந‌ல்ல‌ வார்த்தைக‌ளை வைத்து மொழுகிவிட‌ முடிவ‌தை நினைத்து.

ப‌த்து நாட்க‌ளுக்கும் முன்ன‌தாக‌ மினிப‌ஸ்ஸில் வ‌ரும் போது, ப‌த்து ரூபாயை எடுத்து ப‌ஞ்ச‌குட்டாவில் பிச்சை எடுத்த‌வ‌ளுக்குக் கொடுத்தார். என‌க்கு விய‌ர்த்துவிடும் போலாகிவிட்ட‌து.

'பாவ‌ங்க‌. பாருங்க‌ குழ‌ந்தையை வைத்துக் கொண்டு எப்ப‌டி அழுகிறாள்' என்றார். க‌ம்பெனிக்கு ஏற்க‌ன‌வே தாம‌த‌மாகிவிட்ட‌ க‌டுப்பில் இருந்தேன். பேசாம‌ல் அலுவ‌ல‌கத்திற்கு வ‌ந்துவிட்டோம். இர‌வில்தான் யோசித்தேன் வெங்க‌ட்டின் பெரிய‌ ம‌னம் குறித்து.

அடுத்த‌ நாளும் ப‌த்து ரூபாய் கொடுத்தார். வ‌ண்டியை விட்டு கீழே இற‌ங்குங்க‌ள் என்று இற‌க்கினேன். எதுக்கு அவ‌ளுக்கு தின‌மும் ப‌த்து ரூபாய் என்றேன். அவ‌ள் தின‌மும் ஒவ்வொரு வண்டியாகச் சென்று அழுவ‌தாகவும், குழந்தையை வேறு சுமந்து திரிகிறாள். மாத‌ம் முந்நூறு ரூபாயில் ஒன்றும் ஆகிவிட‌ப்போவ‌தில்லை என்றார். 'யோவ்..உன‌க்கு பைத்திய‌மா' என்று அவ‌ளைக் காண்பித்தேன். சிக்ன‌ல் விழுந்து வ‌ண்டிக‌ள் நிற்கும் போது அழுகிறாள். ம‌ற்ற‌ நேர‌ங்க‌ளில் இன்னொரு பிச்சைக்காரியுட‌ன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். இருபத்தைந்து வயதிருக்கும். சற்று உய்ரமாக இருந்தாள். அவளின் சாமுதிரிகா ல்ட்சணம் பற்றியெல்லாம் என்னால் சொல்ல முடியாது. வேண்டுமானால் ஹைராபாத் வந்து பார்த்துக் கொள்ளுங்கள்.

மெதுவாக‌ எங்க‌ளிட‌ம் வ‌ந்த‌வ‌ள், என்னை ஏதோ ஒரு ஜ‌ந்துவைப்போல‌ பார்த்தாள். வெங்க‌ட்டை பார்த்து சிரித்தாள். என‌க்கு என்ன‌ நட‌க்கிற‌து என்று புரிய‌வில்லை. அவ‌ளிட‌ம் அடித்த‌ நாற்ற‌மும், ப‌ல்லில் ப‌டிந்திருந்த‌ க‌றையும் வெறுப்பை அதிக‌மாக்கின‌.

இர‌வு அறையில் பேசினோம்.

'ஒரு சின்ன‌ விஷ‌ய‌ம்'

'சொல்லுங்க'

'வீட்ல‌ பொண்ணு பார்க்க‌ ஆர‌ம்பிச்சுட்டாங்க‌'

'சூப்ப‌ர் வெங‌ட்'

'இல்லைங்க‌ நான் இன்னைக்கு காலையில் பார்த்தோமே அந்த‌ப்பொண்ணை க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க ஆசைப்ப‌டுறேன்'.

'யாரு? ந‌ம்ம‌ க‌ம்பெனியா?'

'இல்லை. ப‌ஞ்ச‌குட்டாவில்"

என‌க்கு அந்தச் சமயத்தில் கூட‌ அவ‌ள் பெண் என்ற‌ நினைப்பே வ‌ரவில்லை.

'ப‌ஞ்ச‌குட்டாவில் யாரையுமே பார்க்க‌வில்லையே'.

'விளையாட‌தீங்க‌. அந்த‌ப் பிச்சை எடுக்கிற‌ பெண்தான்'.

இந்த‌ இட‌த்தில் நீங்க‌ள் இருந்தால் என்ன‌ செய்திருப்பீர்க‌ள்? என‌க்குள் பெரும் பூக‌ம்ப‌ம் வ‌ந்துவிடும் போலாகிவிட்டது. அநேக‌மாக‌ ஜ‌ன்னி வ‌ந்துவிட‌க்கூடும்.பல்லை நறநறத்ததில் விழுந்துவிடும் போலிருந்தது. அந்த ஆளின் வார்த்தையை கவனியுங்கள். நான் விளையாடுகிறேனாம்.

அவ‌ளுக்கு இத‌ற்கு முன்பாக‌வே பார‌டைஸில் பிரியாணி பார்ச‌ல் வாங்கிக் கொடுத்த‌தெல்லாம் சொன்னார். பார‌டைஸில் பிரியாணி என்ன விலை தெரியுமா?நூற்றிருப‌த்தைந்து ரூபாய். இனி என‌க்கு சொல்வ‌த‌ற்கு ஒன்றுமே இருக்க‌வில்லை. ஆனாலும் கூட‌ப்ப‌ழ‌கிய‌ தோஷ‌த்திற்கு பேசாம‌ல் இருக்க‌ முடிய‌வில்லை.

அவ‌ள் வீட்டில்(?) எந்த‌ப்பிர‌ச்சினையும் வ‌ராது என்றாலும், உங்கள் வீட்டில் பிர‌ச்சினை எதுவும் வ‌ராதா என்றேன். அவ‌ளை குளிக்க‌ வைத்து மேக்க‌ப் போட்டு ச‌ரிக்க‌ட்டிவிடுவ‌தாக‌ச் சொன்ன‌தும், த‌லையில் க‌ல்லைத் தூக்கிப் போட்டு கொன்றுவிட‌லாம் போன்று இருந்த‌து. நீங்கள் ஹைதராபாத் வந்து ஒரு வேளை அவ‌ளை நேரில் பார்த்தால் உங்க‌ளுக்கும் வெங்க‌ட் மேல் இப்ப‌டித்தான் கோப‌ம் வ‌ரும். அவ‌ள் குளித்து, அழுக்கைப் போக்கி, நாற்ற‌த்தை த‌ணித்து, எண்ணெய் ப‌டாத‌ த‌லையில் சிண்டு எடுத்து, அதை விட‌ மிக‌ முக்கியமாக, ப‌ல்லின் க‌றையை போக்கி.... நினைத்தாலே த‌லை சுற்றிய‌து.

'வெங்க‌ட், இது எல்லாம் ஒத்து வ‌ராது. க‌லைவாணியோ, ச‌ங்கீதாவையோ பாருங்க‌ள் அல்ல‌து ந‌ம்ரிதா மொக‌ந்தியிட‌மாவ‌து பேசிப்பாருங்க‌ள். ஒரிசாக்காரி. கொஞ்ச‌ம் உய்ர‌மாக‌, குதிரை மாதிரி ந‌ட‌க்கிறாள். எப்ப‌டியாவ‌து வீட்டில் ச‌ம்ம‌த‌ம் வாங்கிவிட‌லாம்' என்றெல்லாம் பேசினேன்.

செவிட‌ன் காதில் ச‌ங்கு ஊதிய‌து போலாகிவிட்ட‌து. இவ‌ர்க‌ளின் காத‌ல் உட‌ல் பார்த்து வ‌ருவ‌தில்லையாம். உடலைப் பார்த்தால்தான் வ‌ந்திருக்காதே என்று நான் சொன்ன‌தும் கூட‌ செ.கா.ஊ.ச‌ங்கு தான். தின‌மும் இந்த‌க்காத‌ல் க‌தையின் அரிப்பு அதிக‌மாகிக் கொண்டே போகிற‌து.

இங்கு இருந்தால் ஒன்று நான் செத்துவிடக்கூடும் அல்லது கொலைகாரனாகி விடக்கூடும் என்பதால் இர‌ண்டு நாள் ஊருக்குப் போய்விட்டு வ‌ந்துவிட‌லாம் என்று முடிவு செய்தேன். என்ன ரொமான்ஸ் நடக்கப்போகிறதோ என திகிலாக இருந்தது. ஊரிலிருந்து திரும்பி வ‌ந்த‌ பிற‌குதான் வெங்க‌ட் ஒன்ற‌ரை மாத‌ங்க‌ளாக‌ தாய்லாந்தில் இருப்ப‌து ப‌ற்றி யோசித்தேன்.

அப்ப‌டியானால் வெங்கட்டின் இந்த‌க் காத‌ல் விவ‌கார‌ம் எல்லாம்? என‌க்கு குழ‌ப்ப‌மாக‌ இருந்த‌து. சுரேஷிட‌ம் பேசினேன். இப்படி வெங்கட் பஞ்சகுட்டா பிச்சைக்காரியை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக எனக்கு ஒரு எண்ண‌ம் வ‌ந்த‌து என்று. அவன் சிரித்துக் கொண்டே அது உன் ம‌ன‌'விஸ்கி' என்றான். எத்த‌னை நாளைக்குத்தான் 'பிராந்தி'யை உப‌யோக‌ப்ப‌டுத்துவ‌து என்று 'விஸ்கியை' உப்யோகப் படுத்தினானாம்.

எனக்கு இன்னும் ச‌ரியாக விள‌ங்க‌வில்லை. க‌தையாக‌ எழுத‌ட்டுமா என்றேன். உன் உள் ம‌ன‌ ஆசைக‌ளை நீ தீர்த்துக் கொள்ளும் 'Wish fulfillment' க‌தையாக‌ இருக்கும்டா என்றான்.

அப்ப‌டியானால் என‌க்கு அந்த‌ப்பெண்ணின் மீது ஆசையா? அட‌க்க‌ட‌வுளே. இப்பொழுதுதான் 'சென்னை 6000028' ப‌ட‌ம் பார்த்தேன். 'என்ன‌ கொடுமை சார் இது?'.

Oct 10, 2007

(எனக்குத் தெரிந்த‌)ஒரு நடிகையின் கதை

பரம ரகசியம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ரகசியம் என்பதை எழுதி வைத்தால் எல்லோருக்கும் தெரிந்துவிடாதா என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான். ஒரு விஷயம் ஊரில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டாலும் கூட ஒரே ஒருவனுக்கு மட்டும் தெரியாமல் மறைத்தால் அதுவும் ரகசியம்தானே. இதுவும் அப்படியான ரகசியம்தான்.

இந்த விஷயத்தை நீங்கள் எல்லோரும் தெரிந்து வைத்தாலும் கூட பரவாயில்லை. உங்களுக்குத் தெரிந்த விஷயம் தீப்திக்கு ம‌ட்டும் தெரிந்துவிடக் கூடாது.

தீப்தி என்னுடன் ப‌டித்த‌வ‌ள்தான். த‌ற்பொழுது ந‌டிகையாகிவிட்டாள். ந‌டிகை என்றால் டிவி சீரிய‌லில் இல்லை. திரைப்ப‌ட‌ங்க‌ளில் நடித்து முக்கியமான வாரப்பத்திரிக்கைகளின் நடுப்பக்கங்களை அலங்கரிக்கும் சினிமா நடிகை. ஆனால் தீப்தி என்ற‌ பெய‌ரில் இல்லை. உங்க‌ள் மேல் ந‌ம்பிக்கை இருக்கிற‌துதான் என்றாலும், தீப்தியின் த‌ற்போதைய‌ பெய‌ரை உங்க‌ளிட‌ம் சொல்ல எனக்கு விருப்ப‌மில்லை. இந்த‌க் க‌தையை முடிக்கும் போது உங்களில் சிலர் தீப்தி யார் என்று க‌ண்டுபிடித்து விடும் வாய்ப்பிருக்கிற‌து.

நான் எட்டாவது படிக்கும் போது நாங்கள் படித்த சசி அண்ணன் டியூசனில் தீப்தியும் சேர்ந்தாள். நாங்கள் காட்டுப் பள்ளிக்கூடத்தில் வெறும் காலோடு கில்லி ஆடிவிட்டு காலையில் அம்மா கொடுத்த‌ எட்டணாவிற்கு இலந்தப் பொடி வாங்கிக் கொண்டு புழுதியப்பியபடி டியூசனுக்கு வருவோம். காலையிலேயே நாக்கையும், ஆசையையும் அடக்க முடியாமல் ஏதாவது வாங்கித் தின்றிருந்தால், சாயந்தரமாக் ஏதாவது தின்ன வேண்டும் என்றிருக்கும் போது யாரிடமாவது 'துளியூண்டு' பொடி வாங்கி நக்கிக் கொள்வோம்.

தீப்தி எங்களை மாதிரி இல்லை. அமலா மெட்ரிகுலேஷனுக்கு ஆட்டோவில் போய்த் திரும்புவாள். பள்ளி முடிந்து வந்தவுடன், கைகால் கழுவி, துணி மாற்றி, தலை சீவி, பவுடர் அடித்து 'ஜம்' என்று டியூசனுக்கு வருவாள். சில நாட்களுக்கு ஜாதிமல்லி பூ வைத்துக் கொண்டு வருவாள். அந்த மல்லிப்பூ வாசமும், பவுடரின் நறுமணமும் எனக்கு மிகப்பிடித்ததாக இருக்கும்.

அவளோடு பேசுவதற்கான தைரியத்தைக் கூட எங்களுக்கும் அவளுக்கும் இருந்த வித்தியாசங்கள் தடுத்து வந்தன. அவள் எங்களோடு சேர்ந்தால் பன்றிக் குட்டிகளோடு பசு சேர்ந்து சுற்றுவதைப் போல ஆகிவிடும். 'கருவாயன்' குமார் எல்லாம் தெரிந்தவன் போல நடந்து கொள்வான், எங்களோடு திரியும் போது எருமை மாதிரி இருந்தாலும், பெண்களைப் பார்த்தவுடன் பெரிய மனுஷத்தனத்தை அவிழ்த்து விடுவான். 'ஆய்ஷ்மன் பவ' என்று சமஸ்கிருத வார்த்தையை தெரிந்து வைத்துக் கொண்டு அலம்பல் செய்து கொண்டு திரிந்தான். தீப்தியிடம், இந்த மந்திரத்தை நோட்டுகளில் எல்லாம் எழுதி வைத்தால் நன்றாக படிப்பு வரும் என்று சொன்னான். அவளும் எழுதிக் கொண்டாள். கருவாயன் ஹீரோவைப் போல‌ சுற்றித் திரிந்தான். அவனை விடவும் நான் கொஞ்சம் சிவப்புதான். இருந்தாலும் என்னுடன் அவள் பேசவே இல்லை.

கொஞ்ச நாளில் 'கருவாயன்'குமார் பெரிய அண்ணன், 'கூளையன்' சரவணன் சின்ன அண்ணன், தீப்தி தங்கை என்று உறவு முறை அமைத்துக் கொண்டு, அவர்கள் தனிக்குழுவாக அமர்ந்து படித்து ஒப்பித்து பார்த்துக் கொள்வார்கள். கருவாயனுக்கும், கூளையனுக்கும் கையெழுத்து வேறு அழகாக இருக்கும். என் கையெழுத்தை பார்த்து 'கோழி குப்பையை கிளறிய‌து' போல இருப்பதாக ராமசாமி வாத்தியார் குட்டு வைப்பார். இது வேறு எனக்கு எரிச்சலாக இருக்கும். மற்ற பையன்கள் இந்த விவாகாரத்தை எல்லாம் கண்டுகொள்ளவில்லையென்றாலும் எனக்கு காதில் புகை வந்து கொண்டிருந்தது.

பிரகாஷ் என்னிடம் வந்து 'டேய் அவுங்க மூணு பேரும் லவ்ஸ் பண்ணிக்கிறாங்களாமாடா' என்றான். அந்தச் ச‌மயத்தில் 'லவ்ஸ்'ன் அர்த்தம் 'கெட்ட வார்த்தை'தான். 'போடா..அவுங்க அண்ணன் தங்கச்சிடா' என்று சொன்னேன். இதைச் சொல்வது எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் பிரகாஷ் ஏதோ சொல்லிவிட்டு போய்விட்டான். இதன் பிறகு எப்படியாவது அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் இருந்தது.

என் எட்ட்ணா இலந்தப் பொடியை கருவாயனுக்கும், கூளையனுக்கும் கொடுக்க ஆரம்பித்தேன். நான் தீப்தி கூடப் பழகத்தான் இவர்களுக்கு வாங்கித்தருகிறேன் என்பதை கருவாயன் எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டான். 'எங்க கூட நீ பிரண்டா இருந்துக்கலாம். ஆனா எங்க தங்கச்சி கூட நீ சேரக் கூடாது. ஏன்னா நாங்கதான் அவளை நல்லபடியா பார்த்துக்கணும்ன்னு குமார் சொல்லி இருக்கான்' என்று கூளைய‌னை தூதாக‌ அனுப்பி சொல்ல‌ச் சொன்னான். எனக்கு வந்த கோபத்திற்கு கூளையன் பல்லைத் தட்டிவிட வேண்டும் போலிருந்தது. வேறு விஷ்யமாக இருந்தால் என் பொடியை எல்லாம் 'கக்குங்கடா' என்று சண்டை போட்டிருக்கலாம். இதற்கு சண்டையும் போட முடியாது. தீப்தியிடம் உனக்காகத்தான் சண்டை போட்டோம் என்று பாசமாக பேசி என்னை வில்லனாக்கிவிடுவார்கள்.

கால்பரீட்சை விடுமுறை சமயத்தில் எப்படியோ தீப்திக்கு நண்பனாகிவிட்டேன். எப்படி ஆனேன் என்று இப்பொழுது யோசித்தால் ஞாபகம் வரவில்லை. தீப்தியின் அம்மா பேங்க் வேலை, அப்பா கரண்ட் ஆபிஸில் வேலை என்பதால் இரண்டு பேரும் பகல் நேரத்தில் இருக்கமாட்டார்கள்.

கருவாயனும், கூளையனும் 'சீன் பாத்' எடுக்க வாய்க்காலுக்கு போய்விடுவார்கள். 'சீன் பாத்' கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெண்கள் மார்பை மறைக்கும்படி பாவாடையைக் கட்டிக் கொண்டு வாய்க்காலில் குளிப்பதை வேடிக்கை பார்ப்பது. வயலில் வேலை செய்யும் பெண்கள்தான் குளிப்பார்கள். எனக்கும் போக ஆசையாக இருக்கும் என்றாலும் தீப்தி கூட பேசுவதற்காக நான் போக மாட்டேன்.

சரி இதுவா முக்கியம்? ப்ள்ஸ் ஒன் படிக்கும் போது தீப்தியின் பக்கத்து வீட்டுக்கு அவர்களின் தூரத்துச் சொந்தக்காரக் குடும்பம் குடி வந்தது. மாமா என்று சொன்னாள். அவர்களின் மகன் படு அசிங்கமாக இருந்தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே அவள் 'பெரிய மனுஷி' ஆகிவிட்டாள் என்று எங்களோடு பழகுவதை குறைத்துக் கொண்டாள்.

ஆனால் அவர்களின் மாமா குடும்பம் வந்த பிறகு அந்த வீட்டீற்கு போகும் போதும், வரும் போதும், பொதுக் குழாயருகில் கிரிக்கெட் விளையாடும் போது பார்த்துச் சிரிப்பாள். கொஞ்ச நாட்களுக்குள்ளாக‌ தீப்தி வீட்டில் அடிக்கடி பெரும் சண்டை நடக்க ஆரம்பித்தது. பிளஸ் டூ பாதி வருடம் கழிந்த பிறகு தீப்தியின் அம்மா தீயில் கருகிப் போனார். நான் தகவல் தெரிந்து ஓடி பார்க்கும் போது, அவரை உடம்பில் துணியில்லாமல் வாழையிலை மீது படுக்க வைத்திருந்தார்கள்.

தீப்தி அழுது கொண்டிருந்தாள். நான் அதுவரை நிர்வாணமாக ஒரு பெண்ணையும் பார்த்ததில்லை என்பதால் வருத்தத்தை மீறி காமப்பார்வை பார்த்தேன். எனக்கு நான் தவறு செய்வதாகத் தோன்றியது. ஆனால் நகராமல் நின்று கொண்டிருந்தேன்.

மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற மூன்று நாட்களில் தீப்தியின் அம்மா இற்ந்துவிட்டார். தீப்தி அவளின் மாமா பையனைக் காதலித்திருக்கிறாள். இருவரும் அவர்கள் வீட்டிற்கு தெரியாமல் சென்று பாரியூர் கோவிலில் திருமணம் செய்திருக்கிறார்கள். அந்தப்பையனின் அம்மா நடத்தை சரியில்லாதவர் என்று சொன்னார்கள். அவளின் குடும்பமே 'தறிகெட்ட' குடும்பமாம். இதனால் தீப்தியின் அம்மா இவ‌ர்களின் காதலை எதிர்த்திருக்கிறார். அதையும் மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டது தெரிந்ததும் மனமுடைந்து தீயிட்டுக் கொளுத்திக் கொண்டாராம்.

ஆனால் வேறு மாதிரியும் ஒரு பேச்சு இருக்கிறது. தீப்திக்கு எப்படியாவது தன் அண்ணன் மகனை திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என அவளின் அம்மா முயன்றிருக்கிறார். இதனை தீப்தியும், அவளது அப்பாவும் எதிர்த்திருக்கிறார்கள். பேச்சுவார்த்தை முற்றிப் போய் தீப்தியின் அப்பா கன்னத்தில் அறைந்திருக்கிறார். இதனால் கோபம் வந்து தீயீட்டுக் கொண்டாராம். இந்தக் இரண்டு கதைகளையும் "விருமாண்டி" பட ஸ்டைலில் இன்னொரு நாள் சொல்கிறேன்.

இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தீப்தியும் அவரது அவளது அப்பாவும் சென்னை சென்றுவிட்டார்கள். தீப்தி ப்ளஸ் டூ தேர்வு கூட எழுதியிருக்கவில்லை. நாடகமாக இருந்தால் கதையின் இந்த இடத்தில் திரை விழ வேண்டும். திரை விலகும் போது, தீப்தி அஜீத் அல்லது விஜய்யுடன் ஆட்டம் போட்டிருக்க வேண்டும். ஆனால் க‌தை இங்கு முடிய‌வில்லை.

தீப்தியின் அம்மா இரண்டு கதையிலும் வருவது போல தானாக கொளுத்திக் கொள்ளவில்லை. தீப்திதான் கொளுத்தினாள். சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வாங்கித்தருவதாக அவளின் மாமா சொன்ன போது தீப்தியின் அம்மா தெரிவித்த மறுப்புக்கான தண்டனைதான் இது.

இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும். எப்படி உனக்கு தெரியும் என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். கேட்டாலும் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

Oct 1, 2007

என் பிரச்சினை எனக்கு

எனக்கு இருக்கும் தொந்தரவுகளிலேயே பெரும் தொந்தரவு படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுவதுதான். எனக்கு பத்து வயதாக இருந்திருந்தால் இதைப்பற்றி நான் வருந்தியிருக்கமாட்டேன். உங்களுக்கும் இது பெரிய விஷயமாக இருக்காது. ஆனால் எனக்கு இந்த ஏப்ரல் வந்தால் முப்பத்தி நான்கு வயது முடிகிறது.

தொட்டில்பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்ற பழமொழி எனக்கு இந்த விவகாரத்தில் முழுவதுமாகப் பொருந்துகிறது. ஐந்து அல்லது ஆறு வயது வரைக்கும் நான் அப்பாவிடமும், தம்பி அம்மாவிடமும் படுத்துக் கொள்வது வழக்கம். நான் படுக்கையை நனைக்கும் போதெல்லாம் அப்பாவையும் நனைத்து வைப்பதால், அப்பா தன் லுங்கியை மாற்றிக் கொள்வார். எனக்கும் வேறு ட்ரவுசரை மாற்றிவிட்டு கீழே பாய் போட்டு படுத்துக் கொள்வோம். மறுநாள் காலையிலேயே நான் நனைத்த மெத்தையை வெயிலில் காய வைப்பார்கள்.

எனக்கு பத்து வயதாகும் போது அப்பா தினமும் பாதி இரவில் எழுந்து தூக்கம் கெடுவது குறித்து சலிப்படைந்திருக்க வேண்டும். நான் அம்மாவிடமும், தம்பி அப்பாவிடமும் இடம் மாறிக் கொண்டோம். த‌ம்பி உற‌க்க‌த்தில் உதைப்ப‌தாக‌ அப்பா அவ்வ‌ப்போது புல‌ம்பி இருக்கிறார். இருந்தாலும் அடுத்த‌ ஐந்து வ‌ருடங்களுக்கு பெரிய‌ மாற்ற‌மிருக்க‌வில்லை. இந்த‌ ஐந்து வ‌ருடங்களும் அம்மா த‌ன் புட‌வையை நடு இரவில் மாற்றிக் கொண்டிருந்தார்.

ப‌தினைந்து வ‌யதிற்குள்ளாக என் விவகாரம் உற‌வின‌ர்க‌ளுக்கு எல்லாம் தெரிந்துவிட்ட‌து. கூட்ட‌மாக‌ இருக்கும் போது பேசுவதற்கான விஷயத்திற்கு பற்றாக்குறை வரும் போதெல்லாம் என் குறைதான் அவ‌ர்களுக்கு சிரிப்புக்கான‌ பொருள். அதுவும் அம்மாவின் தாய்மாம‌ன் இருக்கிறார் பாருங்க‌ள். அழிச்சாட்டிய‌ம் செய்வார்.

தூங்குவ‌த‌ற்கு முன்னால் 'அதில்' த‌வளையைக் க‌ட்டி வையுங்க‌ள். சிறுநீர் க‌ழிக்கும் போதெல்லாம் த‌வ‌ளை ஈர‌ம் க‌ண்ட‌ உற்சாக‌த்தில் துள்ளிக் குதிக்கும், ப‌ய‌த்திலேயே நிறுத்திவிடுவான் என்பார். என‌க்கு உண்மையாக‌வே செய்துவிடுவார்க‌ளோ என்ற‌ ப‌ய‌ம் தொற்றிக் கொள்ளும். வெட்கமும் வேறு வ‌ந்துவிடும். இத்த‌னை பெண்க‌ள் முன்பாக‌ இப்ப‌டி பேசுகிறாரே என்ற‌ கோப‌த்தில் கிணற்று மேட்டில் அம‌ர்ந்து அழுது கொண்டே அவ‌ரை திட்டிக் கொண்டிருப்பேன்.

அப்பொழுது பார்த்து அம‌த்தாக் கிழ‌வி கிணற்று மேட்டுக்கு வ‌ந்துவிடும்.(அம்மாவின் அம்மா). "எஞ்சாமீ...இங்க‌ வ‌ந்து பொக்குன்னு அழுவுது பாரு...உங்க‌ப்பாரு கிட‌க்குறான்...அவுனுந்தான் க‌ண்ணால‌த்து வ‌ரைக்கும் ப‌டுக்கையில‌ ஒண்ணுக்கு போனான்" என்று சொல்லி என்னைச் சமாதானப்படுத்தும். என‌க்கும் கொஞ்ச‌ம் ஆறுத‌லாக‌ இருக்கும். என்னை ச‌மாதான‌ம் செய்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது நான் கிண‌ற்று மேட்டில் த‌னியாக‌ அழுத‌தாக‌ப் ப‌ரிதாப‌மாக அமத்தா சொல்லும் போது, என‌க்கே என் மேல் சுய‌பச்சாதாப‌ம் வ‌ந்துவிடும். பொத்துக் கொண்டு அழுகை வரும். கூட்டமாக இருப்பதால் கஷ்டப்பட்டு கண்ணீரை அடக்கிக் கொள்வேன். அடுத்த‌ க‌ணமே அப்பாரு தன்‌ கிண்ட‌லை ஆர‌ம்பித்துவிடுவார்.

குதிரை முடியை எடுத்து 'அதன்' மீது க‌ட்டி வைத்தால் சிறுநீர் க‌ழிப்ப‌தை நிறுத்திவிடுவான் என்று சொல்லி 'கெக்க‌பிக்கே' என‌ச் சிரிப்பார். அது உண்மையா அல்லது பொய்யா என்று ஒருவருக்கும் தெரியாது. அவ‌ர் ச‌ரியான‌ குதிரைப் பிரிய‌ர். உல‌கின் அத்த‌னை நோய்க்கும் குதிரையிட‌ம் ம‌ருந்து இருப்ப‌தாக‌ ந‌ம்புவார். குதிரை முடி விவ‌கார‌த்தை அவ‌ர் சொன்ன‌வுட‌ன் அம்மாவும் ந‌ம்பிக்கையில் 'அப்ப‌டியா மாமா?' என்பார். என‌க்கு வ‌ந்த‌ கோப‌ம் இருக்கிற‌தே, அடுத்த‌ முறை அப்பாரு வ‌ரும் விழாக்களுக்கு வ‌ர‌வே கூடாது என்று முடிவு செய்து கொள்வேன். ஆனால் என் கையில் ஒன்றுமே இருக்காது. அடுத்த‌ முறை வ‌ரைக்கும் என் ப‌டுக்கை ப‌ழ‌க்க‌ம் எந்த‌ மாற்ற‌முமில்லாம‌ல் தொட‌ரும். அப்பாரையும் ச‌ந்திக்க‌ வேண்டி வ‌ரும்.

என‌க்கு என்ன‌ செய்வ‌து என்றே தெரிய‌வில்லை. சோம‌சுந்த‌ர‌ம் டாக்ட‌ரிட‌ம் அழைத்துச் சென்றார்க‌ள். இது மன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌து என்றும் வ‌யதாகும் போது ச‌ரியாகிவிடும் என்று சொல்லிவிட்டார். என‌க்கு கொஞ்ச‌ம் அறிவுரை சொன்னார். என‌க்கு ஒன்றுமே காதில் விழ‌வில்ல‌. அருகில் நின்று சிரித்துக் கொண்டிருந்த‌ ம‌லையாள‌ ந‌ர்ஸ் மீதுதான் கோப‌ம் வ‌ந்து கொண்டிருந்து. வெளியே வ‌ரும்போது 'ஞான் பார்க்கட்டா?' என்று அம்மாவிட‌ம் கேலியாக‌க் கேட்டாள். நான் த‌ற்கொலையே தேவ‌லாம் என்று நினைத்துக் கொண்டேன்.

ப‌த்தாம் வ‌குப்பின் விடுமுறைச் ச‌ம‌ய‌த்தில் தொட‌ர்ச்சியாக‌ ஒரு ப‌த்து நாள் ப‌டுக்கையில் சிறுநீர் க‌ழிக்க‌வில்லை. பெரும் வெற்றிவீரனாக‌ உல‌வ‌ ஆர‌ம்பித்தேன். சிறு சிறு வெற்றிக‌ளை எல்லாம் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் த‌ம்பட்ட‌ம் அடித்துக் கொள்ளும் நான் இந்த‌ வெற்றியை ம‌ட்டும் நானே கொண்டாடும்ப‌டி ஆகிவிட்ட‌து. அம்மாவுக்கு என் 'வெற்றி' குறித்து அப்ப‌டியொரு ச‌ந்தோஷ‌ம்.

அன்று ம‌திய‌ம் மொட்டை வெயிலில் கிரிக்கெட் விளையாடினேன். கைகால் எல்லாம் ப‌ய‌ங்க‌ர‌ வ‌லி. சிறுநீர் க‌ழிக்க‌ வேண்டும் போலிருந்த‌து. சாக்க‌டையில் நான் இந்த‌ப்ப‌க்க‌மும், லாரிக்கார‌ர் பைய‌ன் செந்தில் அந்த‌ப்பக்க‌மும் நின்று சிறுநீர் க‌ழித்தோம். பாதி க‌ழிக்கும் போதுதான் தெரிந்தது,எல்லாமே க‌ன‌வென்று. என் லுங்கி ந‌னைந்து போயிருந்த‌து. மெதுவாக‌ எழுந்து விள‌க்கைப் போட்ட‌தும் அம்மா விழித்துவிட்டார். 'அட‌க் கிறுக்கா!' என்று சிரித்துக் கொண்டார். நான் நொந்துவிட்டேன்.

இப்ப‌டி அவ்வ‌ப்போது ப‌டுக்கையை ந‌னைப்ப‌து அடுத்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்குத் தொட‌ர்ந்து க‌ல்லூரிக்கும் வ‌ந்துவிட்டேன். இப்பொழுதும் என் ப‌ழ‌க்க‌ம் தொட‌ர்கிற‌து என்றாலும், நான் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை. இர‌வில் நான் எழும்போதெல்லாம் அறையில் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எதைப்ப‌ற்றியும் க‌வ‌லைப்ப‌டாம‌ல் உற‌ங்குவார்க‌ள். நான் பொறுமையாக‌ லுங்கியை மாற்றிக் கொண்டு, ஈர‌ லுங்கியிலேயே பாயை சுத்த‌மாக‌ துடைத்துவிட்டு, துவைத்த‌ லுங்கியின் க‌த‌க‌த‌ப்பிலும் சோப்பு ந‌றும‌ண‌த்திலும் உற‌ங்கிவிடுவேன். ந‌ல்ல வேளையாக‌ க‌ல்லூரியில் என் விவ‌கார‌ம் யாருக்கும் தெரிய‌வில்லை. தெரிந்திருந்தால் ப‌ட்ட‌ப்பெய‌ர் வைத்து சாக‌டித்திருப்பார்க‌ள்.

க‌ல்லூரியும் முடித்து வேலைக்குப் போகும் போதும் நான் மாறியிருக்க‌வில்லை.ஆனால் இன்னும் அதிக‌மான‌ சுத‌ந்திர‌ம் கிடைத்த‌து. த‌னி அறையில் நான் க‌வ‌லையே ப‌ட‌ வேண்டிய‌தில்லாம‌ல் இருந்த‌து. அவ்வ‌ப்போது ந‌ள்ளிர‌வில் எழுவ‌துதான் எரிச்ச‌லை உண்டாக்கும். ஆனால‌ அது ப‌ர‌வாயில்லை. என்ன‌தான் இப்பிர‌ச்சினை என‌க்கு தொந்த‌ர‌வாக‌ இருந்தாலும், பகல் வேலையில் க‌ளைத்துப் போன‌ நாட்க‌ளில் என் ஊர் சாக்க‌டையில் சிறுநீர் க‌ழிப்ப‌து போன்ற‌ க‌ன‌வுக‌ளின் மூல‌மாக‌ ப‌டுக்கையில் சிறுநீர் க்ழிப்ப‌தும், தொட‌ர்ந்து வ‌ரும் லுங்கியின் க‌த‌க‌த‌ப்பும், சோப்புத்தூளின் ந‌றும‌ண‌மும் என்னைக் க‌வ‌ர்வ‌தாக‌வே இருக்கின்ற‌ன‌.

இருப‌த்தொன்ப‌து வ‌ய‌தில் க‌ல்யாண‌ம் ந‌ட‌க்கும் போதுதான் அனைத்து எதிர்கால‌க் க‌ன‌வுக‌ளையும் மீறி இந்த‌ விவ‌கார‌ம் ப‌யமாக‌த் துருத்திக் கொண்டிருந்த‌து. ஆனால் இத‌ற்காக‌ க‌ல்யாண‌ம் வேண்டாம் என்று சொல்வ‌து என்னைப் போன்ற‌ ஒரு 'வீரனுக்கு' (நானாக‌ அவ்வ‌பொழுது சொல்லி என்னை உற்சாக‌மூட்டிக்கொள்வேன்.)அழ‌கில்லை என்ப‌தால் ச‌ம்ம‌திட்துவிட்டேன்.

ஷ‌ர்மிளாவுக்கு என் விவ‌கார‌த்தைச் சொல்ல‌வில்லை. ஆணாதிக்க‌ ம‌ன‌ப்பான்மை உள்ள‌ என்னால் இதை வெளிப்ப‌டையாக‌ ஒத்துக் கொள்ள‌முடிய‌வில்லை. திரும‌ண‌த்திற்குப் பிற‌கு மூன்று நான்கு ஆண்டுக‌ள் என‌க்கு பிர‌ச்சினையில்லை. ந‌ந்துவும் பிற‌ந்துவிட்டான். அவ‌ன் எனக்கும், ஷர்மிக்கும் இடையில் ப‌டுத்துக் கொள்வான். அவ‌னுக்கு நாப்கின் அணிவிக்காம‌ல் ப‌டுக்க‌ வைப்ப‌தில்லை.

ப‌ழைய‌ வ‌ழ‌க்க‌ப்ப‌டி இன்று எதேச்சையாக என் க‌ன‌வில் சாக்க‌டை வ‌ந்துவிட்ட‌து. விழித்துப் பார்க்கும் போது ந‌னைந்து கிட‌ந்தேன். ஷ‌ர்மிளாவுக்கு இது தெரிந்தால் என‌க்கு அவ‌மான‌மாகிவிடும். ம‌னைவிதான் என்றாலும் என‌க்கு அவ‌ளிட‌ம் சொல்ல‌ வெட்க‌மாக‌ இருக்கிற‌து. அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ நந்துவின் நாப்கினை க‌ழ‌ட்டி குப்பைக் கூடையில் எறிந்துவிட்டு, ஷ‌ர்மியை எழுப்பினேன். கொஞ்ச‌ நேர‌ம் முன்பாக ந‌ந்து சிணுங்கிய‌தாக‌வும் நாப்கினை நான் தான் க‌ழ‌ட்டி படுக்க வைத்தேன் என்றும், இப்பொழுது அவ‌ன் மீண்டும் சிறுநீர் க‌ழித்துவிட்ட‌தாக‌வும் சொன்னேன்.

சோம்ப‌ல் முறித்து எழுந்த‌வ‌ளிட‌ம், 'நீ ப‌டுத்துக்கடா செல்ல‌ம், நான் பாக்கிறேன்' என்று சொன்னேன். அவ‌ளுக்கு ச‌ந்தேக‌ம் வ‌ந்திருக்குமா என்று தெரிய‌வில்லை.

இதை எழுதுவ‌தற்காக‌ டேபிள் மீது அம‌ரும் போது இந்த இரவு நேர‌த்தில் அப்ப‌டி என்ன‌ அவ‌ச‌ர‌மாக‌ எழுதுகிறீர்கள் என்றாள். க‌தை எழுதுவ‌தாக‌ச் சொன்ன‌தும் நாளை காலையில் ப‌டிக்கிறேன் என்று சொன்னாள். நான் எப்படியாவது மறைத்துவிடுவேன். நீங்கள் இதைப் ப‌டித்துவிட்டு ஷ‌ர்மியிட‌ம் சொல்லிவிடாதீர்க‌ள்.ப்ளீஸ்.

Sep 28, 2007

ஹைதராபாத் விநாயகர் சதுர்த்தி

நான் ஹைத‌ராபாத் வ‌ந்த‌ பின்ன‌ர் இந்த ஆண்டு ந‌டைபெற்ற‌ விநாய‌க‌ர் ச‌துர்த்தி ஊர்வ‌ல‌ம் மூன்றாவ‌து ஊர்வ‌ல‌ம். முத‌ல் இர‌ண்டு ஆண்டுக‌ளும் ம‌த‌க் க‌ல‌வ‌ர‌ம் வ‌ர‌லாம், குண்டு வெடிக்க‌ வாய்ப்பு இருக்கிற‌து, கூட்ட‌த்திலும் போக்குவ‌ர‌த்து நெரிச‌லிலும் உயிரே போய்விடும் போன்ற‌ எச்ச‌ரிக்கைக‌ளால் த‌விர்த்து வ‌ந்தேன்.

இந்த‌ ஆண்டு ஊர்வ‌ல‌த்தை பார்க்க‌ ம‌ழை விட‌வில்லை என்றாலும், ம‌திய‌ நேர‌த்தில் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ சிலைக‌ளைக் க‌ரைக்கும் 'டேன்க் ப‌ண்ட்' ஏரிக்க‌ரையில் சுற்றித்திரிந்தேன். ஹைத‌ராபாத் உற்சாக‌த்தின் உச்ச‌த்தில் மித‌ந்தது. முந்தைய‌நாளில் இந்தியா உல‌க‌க்கோப்பையில் வென்றிருந்த‌து, 'தேச‌ப‌க்தி' வெள்ள‌த்தை ஓட‌ விட்டிருந்த‌து.

'ஜெய் போலோ...க‌ணேஷ் ம‌கராஜ்க்கி...ஜெய்' என்ற‌ கோஷ‌த்தோடு 'பார‌த் மாதாக்கி...ஜெ' என்ற‌ கோஷ‌மும் சேர்ந்திருந்த‌து. காவிக் கொடிக‌ளோடு மூன்று வ‌ண்ண‌க் கொடிக‌ளை பிடித்து கொண்டு கோஷ‌ம் எழுப்பினார்கள்.

கீழே இருக்கும் விநாயகர் சிலை, இந்தியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலை. (42 அடி உயரம். இது கைரதாபாத் என்னுமிடத்தில் வைக்கப்பட்டிருந்தது)


சார்மினார், ப‌ழைய‌ ந‌க‌ர‌ம் போன்ற‌ இட‌ங்க‌ளில் இசுலாமிய‌ர்க‌ள் 'கார்பெட்' விரித்து விநாயகரை வரவேற்றார்கள். இது நல்லிணக்கத்தின் அடையாளமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது

உற்சாகப் பெருக்கின் முடிவில் விநாய‌க‌ர்க‌ள் த‌ண்ணீருக்குள் சோக‌மாக‌ விழுந்து கிட‌ந்தார்க‌ள். ப‌த்துநாள் உற்சாகத்தின் முடிவான‌ ஊர்வலத்தின் அடுத்த நாள், சிலைகள் செய்யப் பயன்படுத்தப்பட்ட கம்பிகளை ஏரிகளில் இருந்து பொறுக்கிக் கொள்ளுபவர்கள் வரை ஆயிர‌க்க‌ண‌க்கானோருக்கு விநாயகர் சதுர்த்தி சிறு ச‌ந்தோஷ‌த்தையாவ‌து கொடுக்கிற‌து.

ர‌ம்ஜான் ஆக‌ட்டும், கிறிஸ்தும‌ஸ் ஆக‌ட்டும் வேறு ஏதேனும் ப‌ண்டிகையாக‌ட்டும், இந்த‌ ப‌ண்பாட்டு ரீதியான‌ உற்சாக‌ம், ஆன்ம‌ ப‌ல‌த்தை த‌ருகிற‌து என்றே சொல்வேன்.

குருட்டாம்போக்கில் மதத்தோடு தொடர்புடைய நிகழ்வுகளையும் எதிர்க்கும் 'ப‌குத்த‌றிவு' பேசும் ஆட்க‌ள் கிட‌க்கிறார்க‌ள்.

Sep 26, 2007

உயிர்மை-50

அக்டோபர்'2007 இதழ் உயிர்மையின் ஐம்பதாவது இதழ்.

நவீன தமிழ் இலக்கியத்தில் உயிர்மை உருவாக்கியிருக்கும் சொல்லாடல்களும், கருத்துக்களும் நிகழ்காலத்திலும், எதிர்வரும் சமூகத்தின் கலை, இலக்கிய நிகழ்வுகளிலும் முக்கியமான ஆவணங்களாகின்றன.

உயிர்மையின் தலையங்கங்களும், சமூகத்தின் நிகழ்வுகளை பதிவு செய்யும் கட்டுரைகளும் மிகுந்த கவனம் பெற்றிருக்கின்றன.

உயிர்மை விமர்சனங்களிலிருந்தும் தப்பவில்லை. சமீப‌ ஆண்டுகளில் நிகழ்ந்த இலக்கிய சச்சரவுகளில் உயிர்மையின் பெயர் தீவிரமாக அடிபட்டிருக்கிறது. தொடர்ச்சியான தாக்குதல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது.

உயிர்மை எதிர் கொள்ளும் சிக்கல்களையும், இடையூறுகளையும் அவற்றை உயிர்மை குழுவினர் கையாள்வதையும் ஓரளவு அறிந்தவன் என்னும் முறையில், ஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து எவ்வித தொய்வுமின்றி வெளிவரும் உயிர்மையை தற்கால‌ தமிழ் இலக்கிய வெளியில் மிக முக்கியமான சாதனை எனச் சொல்வேன்.

இந்த ஆண்டில் கி.ரா வின் 'கரிசல் அறக்கட்டளை' விருதினை உயிர்மை பெற்றிருக்கிறது.

உயிர்மையில் எனது முதல் கவிதையை வெளியிட்டு தமிழ் இலக்கியத்திற்கு என்னை அறிமுகம் செய்து வைத்தது உயிர்மை என்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது.

தொடர்ந்து வெற்றிகரமாகவும், உற்சாகமாகவும் செயல்பட உயிர்மை ஆசிரியர் மனுஷ்ய புத்திரனுக்கும், உயிர்மை குழுவினருக்கும் என் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.

அன்புடன்
வா.மணிகண்டன்.

Sep 10, 2007

மார்கோஸ் டொரடாவின் படைப்புலகம்.

மார்கோஸ் டொரடா(Marcos Dorado) மெக்ஸிகோ கலைஞன். தனது ஐந்தாவது வயதில் கலிபோர்னியா மாகாணத்திற்கு குடும்பத்தோடு குடியேறினார்.

தற்பொழுது முழு நேர ஓவியராக இருக்கும் மார்கோஸ் தன் படைப்புகளை அமெரிக்கா முழுவதும் காட்சிக்கு வைக்கிறார்.

மனித உடலை தன் படைப்புகளில் பிரதானப்படுத்தும் மார்கோஸின் ஓவியங்களுள் சில.Sep 5, 2007

என் தோட்டத்தின் பூக்கள் நிறங்களை இழந்துவிட்டன.

(1)
பறவைகள் நிசப்தத்தை விட்டுச் சென்றிருக்கும்
என் தோட்டத்தின் பூக்கள் நிறங்களை இழந்துவிட்டன.

உதிர்ந்து கிட‌க்கும் மெளன‌ங்க‌ளை பொறுக்கும் கிழவிக்கு
தெரிந்திருக்கிற‌து எல்லாமும்.

சிரிப்புக‌ளால் நிர‌ப்ப‌ முய‌ன்று தோற்றுப் போகிறார்க‌ள்
வ‌ந்து செல்லும் சிறார்கள்.

உன் வாச‌ம் ஒட்டியிருக்கும் செடியிலைக‌ள்
உதிராம‌ல் இருக்க‌ என் க‌ட‌வுளை பிரார்த்திக்கிறேன்.

என் குரலைக் கேளாம‌ல்
ரோஜா செடியொன்றை ந‌ட்டு வைக்கிறான். ஒரு சிவ‌ப்பு ரோஜா
மெலிதாக‌ சிரிக்கிற‌து.
அல‌ட்சியமாக‌. மிக‌ அல‌ட்சிய‌மாக.

----------------------------

(2)
தனித்து விடப்பட்டிருக்கும் இந்த‌ப் ப‌ற‌வையின்
நகரத்தில் மட்டும் காற்று வீசுவதில்லை.
வெளியெங்கும் வியாபித்திருக்கும்
ஏமாற்றத்தின் கவிச்சை வெம்மையில்
சிறகுகளை அமைதிபடுத்த ஒரு கிளையின்றி பதறுகிறது.

நீ வீசிச் சென்ற சொற்களின்
சிதறலைத்தேடி பறந்து கொண்டேயிருக்கும்
அத‌ன்
அறிந்து கொள்ள‌ முடியாத
ஞாப‌க‌ அடுக்கிலிருந்து
சொற்களின் எழுத்துக்கள்
மரணப் பிடியிலிருப்பவனின்
உச்சரிப்பாக விழுகின்றன.

----------------------------------

(3)

அமைதி நுழைய முடியாத‌
இந்த நகரத்தின் மயானத்தில
இரண்டு சிறுவர்கள் விளையாடுகிறார்கள்.
ஒரு குருவி க‌த்திக் கொண்டிருக்கிற‌து.
மூன்று ஆண்க‌ள் சூதாடுகிறார்க‌ள்.
ஒருவ‌ன் சுவ‌ரோர‌ம் சிறுநீர் க‌ழிக்கிறான்.

ச‌வ‌த்தை எடுத்து வ‌ருகிறார்க‌ள்.

க‌ண‌ ஸ்த‌ம்பிப்புமின்றி தொட‌ர்கிற‌து.
எல்லாமும் எல்லாமுமாக.

-----------------------------

(4)
வேதனைகளால் நிரம்பிய கோடையின் இரவு ஒன்றை
கடவுளிடம் கொடுக்கிறேன்.
கசகசப்பில் அருவருப்படையும் கடவுள
இரவின் அடர்த்தியைக் குறைத்து.
சாரல் மழையோடு
மெலிதாக காற்று வீசச் செய்கிறார்.

இருந்தும


கோடையின் இரவில் உறங்க‌ முடிவதில்லை
எழுத முடிவதில்லை
நினைக்க முடிவதில்லை.

எதுவுமியலவில்லை என புலம்ப முடிகிறது.

-----------------------------------

(5)

மண்கட்டியில் தனித்துவிட்ட
ஒற்றை புல் மெல்ல அசைகிறது.
பனியீரத்தில் நனைந்து கிடக்கிறது தரை.
டி.வி பெண் ஓயாம‌ல் பேசுகிறாள்.
இந்த‌க் குழ‌ந்தைக்கு எந்த‌ப் பிர‌க்ஞையுமில்லை.

கொஞ்ச‌ம் விஷ‌ம் த‌ருகிறீர்கள்
என் பங்குக்கு
நானும் தருகிறேன்.

ப‌ருகிக் கொண்டிருக்கிறோம் இருவ‌ரும்.நன்றி: உயிர் எழுத்து

Aug 18, 2007

யாரும் பதிக்காத கால்தடங்கள்

உனக்கு எழுதி முடித்த கடிதத்தின்
கோடொன்று
சலனமில்லாத் தனிமையில்
இருள் துளைத்து
மரங்களற்ற பரப்பொன்றில்
சாலையாக நீள்கிறது.

சிரிப்புகளின் அதிர்வொலி
திட்டுக்களாகி இருக்கும்
அதன் பாதையில்
யாரும் பதிக்காத கால்தடங்கள்
பறவையின் எச்சத்தைப் போல‌ கிடக்கின்றன.

ரகசியப் பேசுக்கள் யாவும்
உறைந்து கிடக்கும்
காற்று வெளி நிசப்தத்தில்

உன் வாசல் தொட்ட கணம்
சுருங்கிய கோடு
நசுங்கிய ரோஜாச் சாற்றின்
புள்ளியாக
கடிதத்தில் படிகிறது.

வெறுமை கவிந்து கிடந்த அந்த இதழ்
உன்னை இறுதியாகத் தொட்டவைகளில்
தானும் ஒன்றென
பதறுகிறது.

Jul 3, 2007

காலச்சுவடு கவிதைகள்.

ஜூலை,2007 காலச்சுவடு(இதழ் 91)ல் வெளிவந்திருக்கும் எனது ஐந்து கவிதைகள்.
------------------
(1)
கலாமந்திர் விளம்பரப் பலகையில்
முதுகு காட்டிப் படுத்திருந்தாள் வினைல் பெண்.

இடுப்பில் சிறிய
மடிப்பிருந்தது.

மடிப்பில் ஊர்ந்த விளக்கொளியின் இருள் எறும்பை
கரங்களை நீட்டித் தொட முயன்றேன்.

கூச்சமாக இருந்தது.

தாங்கிப் பிடித்த
கம்பி வழியாகச் சொன்னேன்.

வெம்மையான நிலம் குறித்துப்
பேசும் போது
உன் விரல்களுக்கிடையேயான
பரப்பினைநினைத்துக் கொள்வேன் என்று.

சிரித்துவிட்டு
மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

குழப்பத்தில் அவசரமாக நகர்ந்தான்
சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தவன்.

------------
(2)

எவருடைய நிழலும்
வருடியிராத இந்தப் புள்ளியில்தான்

எரிமலையின் சிதறலொன்று
க‌ட‌ந்து சென்ற‌து.
-----------
(3)
என் ஜன்னலைத் திறந்தால்
பெயர் தொலைத்துவிட்ட பிணம்
கிடக்கிறது.சகதியப்பிய முகத்துடன்.
துருத்திய பற்கள் அதன்அமைதியைக் குலைக்கின்றன.
தெரிந்த முகங்களை தன் முகத்தில் பொருத்தி
நடுக்கமூட்டுகிறது.

தூர நின்று பார்த்துவிட்டு நகரும்
மூன்று மனிதர்கள்
பயந்து நெருங்கும் சில நாய்கள்
தாவித் தாவி வரும் காக்கைகள்.

த‌விர‌

வேறுயாரும் வருவதாக இல்லை.
இரவில் மழை நனைக்கலாம்
நாளை வெய்யில் அதன் முகத்தைச் சுடலாம்.
கண்களை மட்டும் அந்தக் காக்கைகள்
எடுக்க
குடல் நாய்க்கென்று இருக்கக்கூடும்.

சற்று விறைக்காமல் இருப்பின்
என்னைப் பார்த்து சிரிக்கும்.
அல்லது கூட்டிச் செல்லச் சொல்லும்.

அநாதைப் பிணங்களின் உலகம் வேறுபட்டது.
எது குறித்தும் யோசிக்காமல்
நகர்ந்துவிட வேண்டும்
-----
(4)
பிளாட்பாரத்தில்
தொடை தெரிய தூங்குபவள்
பஸ்ஸில் முறைத்தவளை
ஞாபகப் படுத்துகிறாள

தலை நசுங்கிக் கிடப்பவன்
கழுத்தில் பொருந்துகிறது-
நேற்று மணக்கோலத்தில் பார்த்தவன்
முகம

காயத்தின்
குருதியில் தெரிகிறது
உன் உருவம்.

அடையாளமற்ற‌
புள்ளியில் திருகுகின்றன‌
நிகழ்வுகள்
---
(5)
மஞ்சள் வெய்யில்
பூ
காத‌ல்
ம‌ழை
ப‌ற‌வை
நீ
அல்ல‌து
நான
என்று எளிதாக‌
சொல்ல‌ முடிவ‌தில்லை.

ம‌ர‌ண‌த்தை.
-----------

வா.மணிகண்டன்.

நன்றி: காலச்சுவடு

Jun 27, 2007

ஆத்ம‌ திருப்தி

தட்டானின் வாலை பிய்த்து
புல் செருகி பறக்கவிடுங்கள்
அதற்கு ராக்கெட் என்று பெயர்

பொன்வண்டின் கழுத்தில்
நூலினைக் கோர்த்து க‌ட்டி வையுங்கள்.
அடுத்த இரவில் வ‌ண்ண‌ முட்டைக‌ளிடும்

ஈர‌ம‌ண‌லில் கிட‌க்கும்
நாயின் மீது இரத்தம் தெறிக்க‌‌க் க‌ல்லெறியுங்கள்
வலியில் ஊளையிடும்

பெண்ணொருத்தி குளிக்கும் போது
அவ‌ளுக்குத் தெரியும்ப‌டியாக‌ எட்டிப்பாருங்க‌ள்.
அவ‌ள் திட்டுவ‌து காதில் விழ‌ட்டும்

கோழியின் க‌ழுத்தை
வட்டமாக திருகிக் கொல்லுங்க‌ள்
ர‌த்த‌ம் வெளியேறாத‌ க‌றி
சுவை மிக்க‌து.

தேடுங்கள்.

ஆத்ம‌திருப்தி எப்ப‌டி வேண்டுமானாலும்
கிடைக்கும்.

Jun 22, 2007

மனுஷ்ய புத்திரன் : நேர்காணல்-III

T.D. ராமகிருஷ்ணன் அவர்கள் மலையாள சஞ்சிகை ஒன்றிற்காக எடுத்த நேர்காணலின் இரண்டாம் பாகம் இது.

11. ஏன் தமிழ் எழுத்தாளர்களிடையே இந்த அளவுக்கு தனிப்பட்ட விரோதங்களும் குழுமனப்பான்மைகளும் நிலவுகின்றன?

தமிழ் இலக்கியத்தில் எட்டப்பட்டிருக்கும் பெரும் சாதனைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாதவர்களே திரும்பத் திரும்ப குழுச்சண்டைகளைப் பற்றியும் சச்சரவுகளைப் பற்றியும் பேசுகிறார்கள். உண்மையில் இந்தச் சச்சரவுகள் அனைத்தும் ஒரு தற்காலிகமான பொழுதுபோக்கு என்பதற்குமேல் அதில் இலக்கியச் சாரம் ஏதுமில்லை. இத்தகைய புகைச்சல்களும் வெறுப்புகளும் உலகெங்கிலும் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன.
அதன் வழியே அந்த மொழியின் இலக்கியப் போக்குகள் மதிப்பிடப்படுவதில்லை. மேலும் தமிழில் இந்த இலக்கியச் சச்சரவுகள் அதன் வளர்ச்சியை எந்த விதத்திலும் பாதித்ததுமில்லை. தனிமனித பிறழ்வுகள், தனிமனிதப் பிரச்சினைகளே தவிர இலக்கியப் பிரச்சினைகளே அல்ல. தற்செயலாக அவர்கள் எழுத்தாளர்களாக இருந்துவிட்டால்
அவை மொழியில் பதிவு செளிணியப்படுகின்றன. பலவீனமான எழுத்தாளர்களே சச்சரவுகளின் வெப்பத்தில் குளிர் காய்கிறார்கள். அவர்களின் நிலை மிகவும் பரிதாப மானது. அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது ஒரு கலவரம் நடக்கும்போது கடையில் இருக்கும் பொருள்களை திருடிக்கொண்டு ஓடுபவர்களுக்கு கிடைக்கும் ஆதாயத்திற்கு சமமானது. எனவே நீங்கள் தமிழ் இலக்கியத்தை சச்சரவுகளின் பரப்பாகப் பார்ப்பதை நான் கடுமையாக மறுக்கிறேன்.

12. தமிழ் இலக்கியத்தில் பெண்ணியத்தின் பாத்திரத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

அது ஒரு தரப்பு. வளர்ந்து வரும் வலுவான தரப்பு. அவர்கள் இருப்பும் மொழியும் திடமானது. கடந்த பத்தாண்டுகளில் எழுத வந்திருக்கும் பெண்களின் எண்ணிக்கையும் தீவிரமான வெளிப்பாடுகளும் பெண்ணிய எழுத்தின் மேல் பெரும் கவனத்தை உருவாக்கி இருக்கின்றன. அதில் பெரும்பாலானோர் தொடக்க கால கவிஞர்கள், எழுத்தாளர்கள். அவர்கள் ஆழமான, தனித்துவம் வாய்ந்த இலக்கியப் பிரதிகளை இனிமேல்தான் உருவாக்க வேண்டும். இப்போது நடந்துகொண்டிருப்பது ஒரு எதிர்கொள்ளல். ஒரு துவக்கப் புள்ளியின் பதட்டங்கள். ஆனால் இந்தப் புள்ளியிலிருந்து
ஒரு சிறப்பான இலக்கியப் போக்கு தமிழில் வளரும் என்பதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். இதில் மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் பல பெண் படைப்பாளிகள் இலக்கியம் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்குப் பதில் பெண்ணிய அரசியலின் சாய்மானங்களைப் பற்றிக்கொண்டு நிற்க விரும்புகிறார்கள். அரசியல் கருத்தாக்கங்களின் புரவலர்கள் ஒரு படைப்பை ஒரு நாளும் பாதுகாக்க முடியாது என்பதை பல பெண் படைப்பாளிகள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் தங்கள் படைப்பின் சவால்களை மொழிக்குள்ளும் வாழ்வினுள்ளும் தேடிச் சொல்லும்போதே இந்த யுகத்திற்கான பிரதிகளை உருவாக்க முடியும்.

13. தமிழில் ஆண் எழுத்தாளர்கள் பெண் எழுத்தாளர்களை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகிறதே.

இந்தக் கேள்வியை ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதிர்கொள்வதற்காக நான் மிகவும் கூச்சமடைகிறேன். இதுபோன்ற கேள்விகளை ஒரு எழுத்தாளனை நோக்கி எழுப்புவதற்கு நீங்களும் கூச்சமடைய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
என் நண்பரும் சிறுகதை எழுத்தாளருமான ஜீ. முருகன் ஒருமுறை எழுதினார், ‘பையன்களால் கேலி செய்யப்படும் பள்ளி மாணவிகள் தங்கள் அப்பாக்களிடம் அவர்களைப் பற்றி முறையிடுவதைப் போல சில பெண் எழுத்தாளர்கள் தங்கள் சக ஆண் எழுத்தாளர்களைப் பற்றி ஊடகங்களிடம் முறையிடுகிறார்கள் என்று.’

இதுபோன்ற பாலியல் துன்புறுத்தலுக்கு ஆண் எழுத்தாளர்களால் துன்புறுத்தப்படுவதாகச் சொல்லும் ஒரு பெண் எழுத்தாளர்கூட இதுவரை ஒரு ஆண் எழுத்தாளர் பெயரையும் எங்கும் சொல்லியதில்லை. அவர்களின் பெயர்கூட தெரியாத நிலையில் அவர்கள் எழுத்தாளர்கள் என்று எப்படி அறிந்துகொண்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

நம்முடைய சமூகத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுவது பரவலான
ஒன்று. அதிலும் அவர்கள் பொது வாழ்க்கையில் இருந்துவிட்டால் இந்தத்
துன்புறுத்தல்கள் இன்னும் அதிகமாகிவிடுகின்றன. இது ஒரு சமூகப் பிரச்சினை. துன்புறுத்தப்படும் பிற பெண்களோடு இணைந்து இப் பெண் எழுத்தாளர்கள் போராட வேண்டுமே அல்லாது தாங்கள் எழுத்தாளர்கள் என்பதற்காக தங்கள் மீதான துன்புறுத்தல்களுக்கு விசேஷ அந்தஸ்தையும் அடையாளத்தையும் கோரக் கூடாது. பொதுவாக தமிழில் பெண் எழுத்தாளர்கள் தொடர்பாக போலி சர்ச்சைகளை உருவாக்கும் பத்திரிகைகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை உற்சாகத்துடன் பிரசுரிக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளின் மூலமாக தங்களுடைய இலக்கிய அடையாளத்தை உயர்த்திக்கொள்ள யாராவது விரும்பினால் அது அவர்களுடைய
தனிப்பட்ட பிரச்சினை.

14. பொதுவாக எழுத்தாளர்களும் அறிவாளிகளும்தான் கருத்துச் சுதந்திரத்திற்காக குரல் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். தமிழில் அவ்வாறு நிகழாதது ஏன்?

கடந்த சில ஆண்டுகளில் தமிழில் பல முக்கியமான பிரச்சினைகளில் தமிழ்
எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். கூட்டறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள். பல்வேறு அரசு ஒடுக்குமுறை சம்பந்தமான உண்மை அறியும் குழுக்களில் பங்கேற்றிருக்கிறார்கள். மரண தண்டனை முதலான விஷயங்களுக்கெதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள். பொதுவாக எழுத்தாளர்களின்
கருத்துக்கள் மதிப்பீடுகளை வெகுசன ஊடகங்கள் பிரதிபலிப்பதில்லை என்பதால் வெகுசன அரசியல் இயக்கங்கள் அவற்றை முன்னிலைப்படுத்துவதில்லை என்பதால் தமிழ் எழுத்தாளர்கள் அபிப்ராயங்கள் இல்லாதவர்கள் என்று அர்த்தமல்ல.

15. தமிழில் ஆண் எழுத்தாளர்கள் ஆகட்டும், பெண் எழுத்தாளர்கள் ஆகட்டும் ஏன் விமர்சனங்களை சகித்துக்கொள்வதோ நேர்மறையாக எதிர்வினையாற்றுவதோ இல்லை?

கடந்த ஐம்பதாண்டுகளாக நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் நடந்திருக்கும்
விவாதங்களுக்கு கருத்தியல் சார்ந்த மோதல்களுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. இந்த மோதல்களில் சிலசமயம் தனிமனித கசப்புகள் இருந்திருக்கலாம். ஆனால் சி.சு. செல்லப்பா, க.நா.சு., பிரமிள், சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், அ. மார்க்ஸ், தமிழவன், ராஜ் கௌதமன், ஜெயமோகன் என எத்தனையோ விமர்சகர்கள் கோட்பாட்டு ரீதியிலும் அழகியல் பூர்வமாகவும் மிகத் தீவிரமான விமர்சனங்களையும் விவாதங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். அவை பற்றிய ஏராளமான பதிவுகள் தமிழ் சிறுபத்திரிகை வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பதிவுகளை நீங்கள் கவனித்தால்தான் தமிழில் இலக்கிய இயக்கம் என்பது கோட்பாடு சார்ந்த ஒரு தளத்தில் உருவாக்கப்பட்டதேயழிய அது வெறும் தனிமனித சச்சரவு அல்ல என்பது புரியும். இதுபோன்ற கற்பனைகளை களைய வேண்டுமென்றால் எங்களைப் படித்துப் பார்ப்பதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் கிடையாது.


16. குடும்பம் என்ற அமைப்பைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? குடும்பம் எழுத்தாளர்களின் சுதந்திரத்தை பாதிக்கிறதா?


குடும்பம் என்ற அமைப்பு தம்மளவில் நல்லதோ கெட்டதோ அல்ல. அதன்
குணாதிசயத்தை அதிலிருக்கும் மனிதர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். தவறான அதிகார வெறி கொண்ட மனிதர்கள் ஒடுக்குமுறையான குடும்பங்களையும், சுதந்திர உணர்வு கொண்டவர்கள் இணக்கமான குடும்பங்களையும் உருவாக்குகிறார்கள். எனவே இந்த அமைப்பு குறித்த பொத்தாம் பொதுவான அபிப்ராயங்களை நான் சொல்வதற்கு தயங்குகிறேன். எழுத்தாளனின் சுதந்திரம் என்பது ஒரு சிக்கலான பிரச்சினை. குடும்பம் மட்டுமல்ல சாதி, மதம், அரசியல் அமைப்பு, ஒழுக்க நியதிகள் அனைத்துமே கலைஞனின் சுதந்திரத்தை ஓரளவிற்கு கண்காணிக்கவே செய்கின்றன. இந்தக்
கண்காணிப்பை ஒரு எழுத்தாளன் எவ்வாறு மீறுகிறான், அதிலிருந்து எப்படித்
தப்பிச் செல்கிறான் என்பதுதான் கலையின் பிரச்சினை. மேலும் சுதந்திரம் என்பது கலையை உருவாக்குவதில்லை. போராட்டம்தான் உருவாக்குகிறது. வேறுவிதமாகச் சொன்னால் சுதந்திரத்தை நீங்கள் கலையின் மூலம்தான் அடைய முடியும்.

17. தமிழ்ச் சமூகம் பாலியல் சார்ந்த விஷயங்களில் ஒரு பாசாங்கான அணுகுமுறையைக் ஏன் கொண்டிருக்கிறது?

அது பழமையும் அல்லாத நவீனத்துவமுமில்லாத ஒரு சமூகத்தின் பாசாங்குகள். தமிழர்கள் இரண்டு யுகங்களுக்கிடையே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மரபு சார்ந்த ஒழுக்கவியல் மதிப்பீடுகளை ஒருபுறம் சுமக்கிறார்கள். இன்னொரு புறம் நவீன வாழ்க்கையின் எல்லையற்ற சுதந்திரங்களை கொஞ்சம் தொட்டுப்
பார்க்கிறார்கள். இது ஒரு தத்தளிப்பு. இந்தத் தத்தளிப்பு இரட்டை நிலையை
உருவாக்குகிறது. பாசாங்குகளை உருவாக்குகிறது. ஒரே நபர் பாலியல் சார்ந்த விஷயங்களை ஒடுக்குகிறவராகவும், மீறுகிறவராகவும் இருக்கிற அபத்தம் இதனால்தான் நிகழ்கிறது. பாலியல் சார்ந்த சுதந்திரம் என்பது பொதுவாக நமக்கு அறிமுகமாகி யிருக்கிறது. அது அனுபவமாக மாற இந்த சமூகத்தில் எவ்வளவோ மாறுதல்கள் நிகழவேண்டியிருக்கிறது.

18. நீங்கள் காதல், திருமணம் மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

நிறுவனங்கள் காதலை அழிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு காதலும் நிறுவனத்தை நோக்கி வளர்கின்றன. இந்த முரண்பாட்டில் எவ்வாறு ஒருவன் அல்லது ஒருத்தி தன்னுடைய காதலை தக்கவைத்துக் கொள்வது என்பது ஒரு சிக்கலான பிரச்சினை. நம்மால் திருமணம் போன்ற சமூக நிறுவனங்களை ஒழிக்க முடியாது. அதே சமயத்தில்
அந்த நிறுவனங்களை மேலும் காதலும் ஜனநாயகத் தன்மையும் கொண்டதாக எவ்வாறு மாற்றுவது என்பதைப் பற்றியே நான் சிந்திக்கிறேன்.

19. தமிழ் எழுத்தாளர்கள் ஏன் தலித் இலக்கியத்தை மைய நீரோட்டத்தில் அங்கீகரிக்க மறுக்கிறார்கள்?

எண்பதுகள் வரை தமிழில் பெருவாரியான எழுத்தாளர்கள் உயர் வகுப்பினரைச் சார்ந்தவர்கள். பெரும்பாலும் பிராமணர்கள். அந்தக் காலகட்டத்தில்கூட அவர்கள் தாங்கள் அறிந்த ஒரு வாழ்க்கையினை எழுதியிருக்கிறார்களே தவிர யாரும் சாதிய மனப்பான்மையினையோ பிறருக்கு எதிரான வெறுப்பையோ வெளிப்படுத்தியவர்கள் அல்ல. எண்பதுகளுக்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்தே பெருவாரியான படைப்பாளிகள் உருவாகி வந்திருக்கிறார்கள். இன்றும் இளம்தலைமுறை படைப்பாளி களில் உயர்சாதியினரைச் சார்ந்தவர்களைக் காண்பதே அரிது. அந்த அளவுக்கு இன்று நவீன இலக்கியப் பரப்பு முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த இளம் தலைமுறைப் படைப்பாளிகளால் நிரம்பியிருக்கிறது. ஒருவிதத்தில் சொல்லப் போனால் இவர்களே இன்று மைய நீரோட்ட படைப்பாளிகளாக இருந்து வருகிறார்கள். உண்மையில் இவர்களை அங்கீகரிக்கும் அளவிற்கு இலக்கிய அதிகாரம் படைத்த உயர்சாதி எழுத்தாளர்கள் யாரும் இல்லை.

20. நல்ல எழுத்து, மோசமான எழுத்து என்பதை நீங்கள் எந்த அளவுகோலின்படி வரையறுப்பீர்கள்?

நான் நல்ல எழுத்து, கெட்ட எழுத்து என்று வரையறுப்பது இல்லை. அவை
கருத்தியல் மற்றும் மதிப்பீடுகள் தொடர்பானவை. நான் இலக்கியத்தை அவற்றின் வழியே அணுகுவதில்லை. என்னைப் பொறுத்தவரை உயிருள்ள எழுத்து, செத்த எழுத்து என்ற இரண்டு பிரிவினைகள்தான் உள்ளன. நாம் வாழுகிற காலத்தின் உணர்வுகளையோ சிந்தனைகளையோ மொழியையோ பிரதிபலிக்காத புதுப்பிக்காத எழுத்துக்களை நான் செத்த எழுத்துக்கள் என்பேன். அவற்றைக் கொண்டாடுவதற்கான செத்த மூளைகள் இருக்கக் கூடும். உயிருள்ள எழுத்து என்பது ஒரு பண்பாட்டையே சலனமுறச் செய்வது, காலத்தின் மீது ஒரு குறுக்கீட்டை நிகழ்த்துவது, அனுபவத்தை
ஒரு ரகசிய விசையின் மூலம் முன்னோக்கிச் செலுத்துவது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இத்தகைய படைப்புகளை உருவாக்கியவர்களே அந்த மொழியின் பிரதானமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதி அத்தகைய ஒரு சக்தி. புதுமைப்பித்தனும் பிரமிளும் ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும்கூட
அத்தகைய சக்திகளே.

21. ‘வாசித்தலின் இன்பம்’ என்ற கருத்தாக்கம் வெகுசன எழுத்துக்களுக்கு
பயன்படுத்தப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?


எல்லா கலைப் பிரதிகளும் வாசித்தலின் இன்பத்தைக் கொடுக்கக்கூடியதாக
இருக்க வேண்டுமென்பதே என் குறிக்கோள். அந்த இன்பத்தை உருவாக்காத படைப்புகள் வாசகராலும் காலத்தாலும் கடுமையாக நிராகரிக்கப்பட்டுவிடும். அது எந்த வகையான எழுத்தாக இருந்தாலும் சரி, அதன் முதல் பயன்பாடு வாசகனை குதூகலமும் உவகையும் மனவிரிவும் கொள்ளச் செய்ய வேண்டும். ஒரு பிரம்மாண்டமான துயரத்தைக் குறித்த சித்தரிப்புக்கூட ஒரு வாசகனிடம் முதலில் ஏற்படுத்துவது துயரம் அல்ல. வாசிப்பின் வழியே அது முதலில் ஒரு உள்ளார்ந்த ரகசிய இன்பத்தை ஏற்படுத்துகிறது. அது அறிதலின் இன்பம். பிறகு அதிலிருந்தே அந்தப் பிரதி உருவாக்கும் துயரம் வாசகன் மேல் கவியத் தொடங்குகிறது. இது மிகவும் நுட்பமான, சிக்கலான ஒரு பிரச்சினை. வெகுசன எழுத்துக்கள் கேளிக்கைக்காக மட்டுமே எழுதப்படுகின்றன.
ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதில் கேளிக்கை என்ற அம்சம் இருப்பதே இல்லை. வெகுசன தளங்களில் பலவீனமான புத்திகூர்மையற்ற எழுத்தாளர்களே மலிவான கேளிக்கைகளைத் தொடர்ந்து உருவாக்கி வந்திருக்கிறார்கள். அந்தச் சக்கைகளை வேறு மாற்றுகள் இல்லாததால் வாசகர்கள் தொடர்ந்து சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழில் சுஜாதா இதற்கு ஒரு விதிவிலக்கு. வெகுசன எழுத்துக்
களை அதன் அசட்டுத்தனத்திலிருந்து முதலில் விடுவித்தவர் அவர்தான். வெகுசன எழுத்திற்கு நவீனத்துவத்தையும் உற்சாகத்தையும் தனித்துவமான பாணியையும் அவர் உருவாக்கினார். 50 ஆண்டு காலம் அவர் தொடர்ந்து இந்தப் புதுமையை உருவாக்குபவராக இருக்கிறார். சுஜாதாவின் எழுத்துக்கள் வாசிப்பின் இன்பத்தை பெருமளவிற்கு வாசகரிடம் உருவாக்கியவை.

22. உங்களுடைய அரசியல் என்ன? உங்கள் எழுத்தின் அரசியல் என்ன?

நான் அடிப்படையில் இடதுசாரி கொள்கைகளால் வார்க்கப்பட்டவன். பின்னர்
அவற்றின் ஏமாற்றங்களால் சற்றே மனங்கசந்து போனவன். கவிதையில் என்னுடைய அரசியல் என்பது நம்முடைய வாழ்வின் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நுண்ணதிகாரத்தின் வன்முறையை எதிர்கொள்வதாகும்.

23. இன்றைய மனித குலத்தின் பெரும் அபாயமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

மௌனம். அநீதிக்கெதிரான மௌனம்.

24. இந்துத்துவ பாஸிச சக்திகளை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

ஒரு எழுத்தாளன் என்ற முறையில் ஹிந்துத்தவ பாஸிச சக்திகளை மட்டுமல்ல, எல்லா அடிப்படை மதவாத சக்திகளையும் நான் எதிர்க்கிறேன். அவை மனித சமூகங்களுக்கிடையே தீராத பகையையும் துயரத்தையும் விளைவிக்கின்றன. இந்தியாவில் அத்வானி போன்றவர்கள் என்றால் உலக அளவில் ஜார்ஜ் புஷ்ஷ§ம் பின் லேடனும் மிகப் பெரிய மனித குல விரோதிகள் என்றே நான் குறிப்பிட விரும்புகிறேன். இவர்கள் வாழ்வுக்கும் கவிதைக்கும் எதிரானவர்கள்.

25. வன்முறை வன்முறைக்கே வித்திடும் என்ற வாதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வன்முறைக்கும் அகிம்சைக்கும் இடையே இன்று மனித குலம் தத்தளித்துக்
கொண்டிருக்கிறது. இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. வன்முறை ஒரு சூழல். நீங்கள் எந்தக் கணத்தில் அதன் ஒரு பகுதியாக மாறுகிறீர்கள் என்பதை நீங்கள் நிர்ணயிப்பதில்லை. ஆனால் எந்த நிலையிலும் வன்முறைக்கு நம் மனசாட்சியை இணங்கச் செய்யக்கூடாது. மனசாட்சி ஒரு கணம் அதற்கு இணங்கிவிட்டால் பிறகு என்றென்றும் நாம் கொலைகளையும் ரத்த வெள்ளத்தையும்
நிறுத்த முடியாது.

26. தமிழ் சமூகத்தின் மீது உலகமயமாதலின் தீவிரமான விளைவுகள் என்ன?

மூன்றாம் உலக நாடுகள் முழுக்க எது நடந்ததோ அதுதான் தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் நடக்கிறது. உள்ளூர் வளங்கள் அழிக்கப்படுதல், உள்ளூர் தொழில்கள் நசுக்கப்படுதல், உலகச் சந்தையின் ஒரு காலனியாக தமிழ் சமூகம் மாறுதல் இது ஒரு புறம் என்றால் சில புதிய தொழில் வாளிணிப்புகளும் அதையட்டிய பண்பாட்டு
மாற்றங்களும் இதன் இன்னொரு புறம். ஒருவிதத்தில் தேங்கிப்போன தமிழ்ப் பண்பாட்டு வாழ்க்கையின் மீது உலகமயமாதல் ஒரு புதிய உற்சாகத்தையும் நகர்வையும் உண்டாக்கியிருக்கிறது. ஆனால் இதன் ஆழமான விளைவுகள் நெடுங்காலத்திற்கு நம்மை பாதிக்கப் போகிறவை.

27. தமிழ் சினிமா, அரசியல், அதினாரம் மூன்றுக்குமான உறவை விளக்குங்கள்.

அதை பற்றிச் சொல்வதற்கு புதிதாக ஒன்றும் இல்லை. சினிமா நடிகர்கள் திரையில் பேசுகிற வசனங்கள் கொள்கை முழக்கங்களாகவும், அவர்களது நடத்தைகள் ரோல் மாடல்களாகவும் பாதிக்கப்படுகிற சமூகத்தில் நடிகர்கள் தலைவர்கள் ஆவதும் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் இயல்பான நிகழ்வுகள். தமிழகத்தில்
அரசியல் இயக்கங்கள் தோல்வியடைந்துவிட்டன. அவற்றிற்கு மக்களிடம் எவ்வித செல்வாக்கும் இல்லை. அரசியல் இப்போது சினிமாவைப் போல ஒரு கேளிக்கை. அதனால் இவை இரண்டும் சேர்ந்து அரசியல் அதிகாரத்தை உருவாக்கும்போது ஒட்டுமொத்த சமூகச் சூழலும் கேலியும் அபத்தமும் நிறைந்ததாக மாறிவிடுகிறது

Jun 21, 2007

அப்துல் கலாம்: மீண்டும் ஒரு முறை.

அப்துல்கலாம் மீண்டும் ஒரு முறை குடியரசுத்தலைவர் ஆகலாம் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

நாம் வாழ்ந்த காலகட்டத்தில் செயலூக்கம் மிக்க ஒரு குடியரசுத் தலைவர் என்று ஒருவர் இருந்தாரேயானால் அது அப்துல்கலாம் மட்டும்தான் என உறுதியாகச் சொல்வேன்.

தேச‌ம் முழுவ‌தும் ல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ சிறுவ‌ர்க‌ளிட‌ம் பேசியிருக்கிறார்.இது எல்லாம் ஒரு சாதனையா என்கிறீர்களா? அது சரி.

"அக்கினிக் குஞ்சொன்று க‌ண்டேன்; அதை ஆங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன்" என்ற‌ க‌விதை பொருந்தும். சிறுவ‌ர்க‌ளிட‌ம் விதைக்கும் க‌ருத்துக்க‌ள் உட‌ன‌டி ப‌ல‌ன் ஏதும் த‌ராத‌ போதும் அத‌ன் விளைவு அணைந்து போன‌தாக‌ அர்த்த‌மில்லை. கலாம் போன்ற துடிப்பான குடியரசுத் தலைவர் என்ற பட்டியல் இருந்தால் சொல்லுங்கள்.


இவ‌ர‌து சாத‌னைக‌ளை விள‌க்க‌ அல்ல‌ இந்த‌ப் ப‌திவு.

"வெற்றிக்கான‌ வாய்ப்பு உறுதியாகும் ப‌ட்ச‌த்தில் போட்டியிடுவ‌தாக‌ச் சொல்லியிருக்கிறார்". இதில் என்ன‌ த‌வ‌று இருந்து விட‌ப் போகிற‌து? . ஒரு குடிய‌ர‌சுத்த‌லைவ‌ராக‌ இருந்த‌வ‌ர், போட்டியிட்டு, தோல்வியோடு வெளியேறுவ‌தை விட‌, ஆத‌ர‌வில்லாத‌ ப‌ட்ச‌த்தில் போட்டியிலிருந்தே வில‌கிக் கொள்கிறேன் என்ப‌தில் எந்த‌ த‌வ‌றும் இருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை,

சோனியா ஏன் எதிர்க்கிறார் என்று குழ‌ப்ப‌மாக‌ இருக்கிற‌து. அவ‌ர‌து ப‌த‌வியேற்கும் ச‌ம‌ய‌த்தில் அவ‌ர‌து குடியுரிமை குறித்தான‌ வினாவொன்றை க‌லாம் எழுப்பிய‌தாலேயே சிங் அவ‌ர்க‌ளை பிர‌த‌மராக்கி 'தியாகி' ஆனார் என்ற‌ பேச்சு எழுந்ததே அது உண்மையாக‌ இருக்குமோ என‌த் தோன்றுகிற‌து? வேட்ப்பாளரை அறிவித்துவிட்டார்களாம். விலக்குவது மிகக் கடினம் அல்லவா? சரி.

ப‌த‌வி வெறி, பெண்க‌ளுக்கான‌ வாய்ப்பினை ம‌றுக்கும் ஆணாதிக்க‌ம் என்ற கூறுகளை எல்லாம் கலாம் மேல் பதிப்பதை வ‌ற‌ட்டுக் கூச்ச‌லென்று சொல்வேன். ப‌த‌வியைப் பிடித்துத் தொங்கும் சாதார‌ண‌ அர‌சிய‌ல்வாதியில்லை க‌லாம். பதவியும் பணமும் பொருட்டாக இருந்ததில்லை அவருக்கு.

ச‌ந்திர‌பாபு நாயுடு சொன்ன‌தைத் திரும்ப‌ச் சொல்வ‌தானால் "ம‌க்க‌ள் நேர‌டியாக‌ வாக்க‌ளிப்ப‌தென்றால் க‌லாம் வெற்றி குறித்து பிர‌ச்சினையேயில்லை."

ஆனால் பாழாய்ப்போன‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் அல்ல‌வா வாக்க‌ளிக்கிறார்க‌ள்?

நீங்க‌ள் ஆத‌ரவினைத் தெரிவிப்ப‌தானால் க‌லாமின் மின்ன‌ஞ்ச‌லுக்கு ஒரு மெயில் த‌ட்டிவிடுங்க‌ள். ந‌ம்மால் இய‌ன்ற‌து அது ம‌ட்டுமே.

Email: presidentofindia@rb.nic.in

Jun 11, 2007

வெர்னர் ஹெர்சாக்கின் "வொய்செக்"

நான் மிக ரசித்த ஜெர்மானிய படங்களுல் மிக முக்கியமானதாக கருதுவது, சோபியா (Shopiya Magdelana Scholl) என்ற பெண்‍, ஹிட்லர் காலத்தில் அரசுக்கெதிரான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டதற்காக, தன் அண்ணன், அவனது நண்பண் ஆகியோரோடு சேர்த்து சிரச்சேதம் செய்யப்பட்ட கதையான‌ 'தி பைனல் டேஸ்'.

அதன் பிறகு வெர்னர் ஹெர்சாக் (Werner Herzog) என்ற ஜெர்மானிய இயக்குனரின், 70களின் ஆரம்பத்தில் வெளியான Woyzeck (1979), Nosferatu the Vampyre (1979)ம‌ற்றும் 80களின் தொட‌க்க‌த்தில் வெளியான‌ Fitzcarraldo (1982) ஆகிய‌ படங்களை பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது.

இவ‌ற்றில் ஃபிட்ஸ்க‌ரால்டோ உல‌க அள‌வில் பேச‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ம் என்ற‌ போதிலும் எனக்கு வொய்செக் மிகப் பிடித்திருந்த்து. ம‌ற்ற‌ இர‌ண்டு பட‌ங்க‌ளில் இய‌ற்கையை பிர‌ம்மாண்டாக‌ காட்டியிருந்த‌ வெர்ன‌ர், வொய்செக்கில் ம‌னித‌ ம‌ன‌த்தினை க‌ண்ணாடியின் துல்லிய‌த்தோடு வ‌ர்ணித்திருந்தார்.
_________

வொய்செக், ராணுவ‌த்தில் சிப்பாயாக‌ இருக்கிறான். த‌ன் ம‌னைவிக்காக‌ நிறைய‌ ச‌ம்பாதிக்க‌ வேண்டும் என்ற‌ வெறியோடு அலையும் வொய்ச‌க், தன் கேப்ட‌னுக்கு ச‌வ‌ர‌ம் செய்வ‌து உட்ப‌ட‌ அனைத்து வித‌மான‌ ப‌ணிவிடைக‌ளையும் மேற்கொள்கிறான். உள்ளூர் ம‌ருத்துவ‌ன் ஒருவ‌னின் ஆராய்ச்சிக்காக‌ த‌ன்னை உட்ப‌டுத்திக்கொள்கிறான். ப‌ட்டாணி ம‌ட்டுமே உண்டு வாழ‌ச்சொல்லும் ம‌ருத்துவ‌னின் க‌ட்ட‌ளையாளும், மிக‌த் தீவிர‌ சிந்த‌னையாளும் அவ‌னைச் சுற்றிலும் ஓசைக‌ள் கேட்டுக் கொண்டேயிருப்ப‌தாக‌ உணர‌த்துவ‌ங்குகிறான். நகரத்தின் மையத்திலிருந்து எழும் புகை அவனைத் தொடர்ந்து துரத்தி வதைப்பதாக பயப்படுகிறான். அவ‌னது செய‌ல்பாடுக‌ள் முற்றிலுமாக‌ நிலை குலையத் துவ‌ங்குகின்ற‌ன‌. இதே ச‌ம‌ய‌த்தில் அவ‌ன‌து ம‌னைவி, ஆண்டர்ஸ் என்னும் 'டிரம்' இசைக்க‌ருவி வாசிப்ப‌வ‌னோடு காத‌ல் கொள்கிறாள்.

வொய்செக்கிட‌ம், அவ‌னது கேப்டனும், ம‌ருத்துவ‌னும் "உன் சூப்பில் யாரேனுமுடைய தாடி முடி கிட‌ந்த்ததா? இல்லையெனிலும் ஒரு ஜோடி இத‌ழ்க‌ளில் கிடைக்கக் கூடும்" என்கிறார்க‌ள். அதிர்ச்சிய‌டையும் வொய்செக், த‌ன் ம‌னைவியிட‌ம் விசாரிக்கிறான்.

த‌ன‌க்குத்தானே பித‌ற்றித்திரியும் அவ‌னிட‌ம், ஆன்ட்ர்ஸ் தான் ஒரு ஆண் என்று அவளின் தொடைகள் அழகாக இருப்பதாகவும் பேச‌, கோப‌த்தின் உச்ச‌ நிலைக்குச் செல்கிறான். ஆண்ட‌ர்ஸோடு, அவ‌ன‌ ம‌னைவி ஒரு விடுதியில் ந‌ட‌ன‌மாடிக்கொண்டிருப்ப‌தை க‌வ‌னித்துவிடும் வொய்செக்கின் காதுக‌ளில் "நிறுத்தாதே" என்ற‌ அவ‌ள‌து சொற்க‌ள் விழுகின்ற‌ன. தொட‌ர்ச்சியாக‌ அதே சொற்க‌ளைத் திரும்ப‌ திரும்ப‌ உச்ச‌ரிக்கிறான்.

த‌ன் ம‌னைவியை த‌னியாக‌ அழைத்துச் சென்று ந‌திக்க‌ரையில் கொலை செய்துவிட்டு நடன விடுதிக்குச் செல்கிறான். அங்கு "கேட்டி" என்ற‌வ‌ளோடு வெறித்த‌ன‌மாக‌ ந‌ட‌ன‌மாடுகிறான். அவ‌ள், அவ‌ன்து க‌ர‌ங்க‌ளில் இருக்கும் இர‌த்த‌ம் குறித்து விசாரிக்கிறாள். ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் அவ‌ளோடு சேர்ந்து கொள்ள‌, மூர்க்க‌மாக‌ வெளியேறி தான் வீசிய‌ க‌த்தியை ந‌திக்க‌ரையில் தேடுகிறான். அத‌னை எடுத்து ந‌திக்குள் வீசிய‌ பிற‌கு, ந‌ம்பிக்கையில்லாம‌ல் மீண்டும் எடுதது வீசுகிறான். ந‌தியின் உட்புற‌மாக‌ ந‌க‌ர்ந்து காணாம‌ல் போகிறான்.

ம‌றுநாள் காலையில், ந‌கர‌த்தின் காவ‌ல‌ர்க‌ள் "மிக‌ அழ‌கான‌ கொலை. ந‌ம் வாழ்நாளில் க‌ண்டிராத‌ கொலை" என்று வ‌ர்ணிக்கிறார்க‌ள்.
_________

இந்த‌ப்ப‌ட‌ம் ப‌தினெட்டு நாளில் எடுத்து முடிக்க‌ப்ப‌ட்ட‌து.
__________

இந்த‌ப்ப‌ட‌த்தின் மைய‌ இழை ஒரு ஆண், பெண்ணின் மீது வைத்திருக்கும் அள‌வுக்கு மீறிய‌ அன்பின் வெளிப்பாடுதான். அன்பினை வெளிப்ப‌டுத்த‌த் தெரியாத‌ ப‌ரிதாப‌த்திற்குரிய‌தான‌ க‌தாபாத்திர‌மாக‌ Klaus Kinski அற்புத‌மாக‌ ந‌டித்திருப்பார். த‌ன் இய‌லாமையை எந்த‌ இட‌த்திலும் ம‌றுக்காத‌ க‌தாபாத்திர‌ம். வொய்செக்கின் ம‌னைவியாக‌ Eva Mattes. தான் செய்வ‌து த‌வறென்று உண‌ர்கிறாள். அட‌க்க‌விய‌லாத‌ காம‌ம் ஒரு பேயைப் போல‌ துர‌த்துகிற‌து அவ‌ளை.

பெண்ணின் ம‌ன‌த்த‌ள‌த்தில் இருக்கும் வெவேறு ந‌ட்பு அடுக்குக‌ளும் த‌ன‌க்குத் தெரிந்தாக‌ வேண்டும் என்ற‌ ஆசை அந்த‌ த‌ள‌ங்க‌ளிள் எந்த‌த் த‌ள‌த்திலும் தான் இருந்தாலும் ஒரு ஆணுக்கு இருக்கிற‌து. அது குறித்தான‌ த‌க‌வ‌ல்க‌ள் தெரிய‌வ‌ராத‌ போது, அவற்றை ம‌ர்ம‌ங்க‌ளாக‌ உணர‌த்துவ‌ங்குகிறான். தான் ம‌ற்ற‌வ‌ர்க‌ளோடு போட்டியிட‌ இய‌லாத‌வ‌னோ என்ற‌ தாழ்வுண‌ர்ச்சி வ‌ரும்போது, எப்ப‌டியாவ‌து வென்றுவிட‌ முனைப்பு காட்டும் ம‌ன‌ம் எந்த‌க் காரிய‌த்தையும் செய்துவிட‌த் துணிகிற‌து.

வில‌கி இருந்து ம‌கிழ்ச்சிய‌டையும் ச‌ந்தோஷ‌த்தை தொட்டுப்பார்க்க‌ முய‌ல்வ‌தில்லை.
_______________