Dec 27, 2006

ஆபாசமென்று நீங்கள் முடிவு செய்யலாம்.

இக்கவிதையை நீங்கள் படித்துவிட்டு ஆபாசமான கவிதை என்ற முடிவுக்கு நீங்கள் வ‌ரக்கூடும்.

நெரிசலில்
திருடக் கொடுத்த
முலைகளைத்
தேடியலைகிறாள். பச்சைச் சுடிதார்க் காரி.

பிருஷ்டத்தைத்
தடவிய விரல்களும்
கிள்ளிய விரல்களும்
ஒன்றா என பிதற்றித் திரிகிறாள். சிவப்புப் புடவைக் காரி.

விலகும்/விலக்கிய மாராப்பின்
காற்றசைவில் முளைத்துக் குதிக்கிறது
காமச் சாத்தான்.

சுரப்பின்
காலச்சுருதியில் நீர்க்கிறது. காமம்.

தலைப்பை ஆமோதிப்பவ‌ர்களுக்கு: நான் ஒன்றும் செய்வதற்கில்லை.

Dec 18, 2006

ஓடை நகரும் பாதை: தமிழில் நவீனத்துவக் கவிதைகள்

நவீனத்துவம் என்பதற்கு சிறிய விளக்கம். ஒரு பொண்ணு/பையன் 'மாடர்னா இருக்கா' என்று சொல்வதற்கும் 'ட்ரெடிஷனா இருக்கா' என்று சொல்வதற்குமான எளிய வித்தியாசம்தான்.

வழிவழியாக பின்பற்றி வந்த பாதையில் இருந்து விலகி இருத்தல் நவீனத்துவம். மாடர்னிசம், மேற்கத்திய உலகங்களில் தொழிற் புரட்சியின் விளைவாக தனக்கான இடத்தினைப் பெறுகிறது. கட்டிடக்கலை, தொழிற்சாலைகள், மருத்துவம் என யாவும் தத்தம் துறையில் புதிய யுக்திகளைக் கையாளத் துவங்கின. இதுதான் நவீனத்துவத்தின் அடிப்படை.

கலையும் இதில் தப்பவில்லை. உரைநடை, கவிதை, நாடகங்கள் என இலக்கியத்தின் பல கூறுகளும் புது வடிவத்தைப் பெறுகின்றன.

மாடர்னிச காலகட்டத்தில் கவிதைக்கென அதுவரை கட்டமைக்கப்பட்ட வடிவங்களை தகர்த்தெறிந்து புதிய வடிவத்தில் புதிய வீச்சுடன் நவீன கவிதைகள் வாசகர்களை அடைந்தன. பெரும்பாலும் தொழிற்புரட்சியின் விளைவுகள், நகர் சார்ந்த வாழ்வு முறையின் நெருக்கடிகள், தனிமனித துன்பங்கள் போன்றவற்றை கவிஞர்கள் தங்களின் படைப்புகளில் வைக்க ஆரம்பித்தார்கள்.

மேற்கத்திய தொழிற்புரட்சியின் தாக்கம் இந்தியாவில் உடனடியாக உணரப்படவில்லை. அதுவரை படர்ந்திருந்த சுதந்திரப் போராட்டமே முக்கியமான காரணமாக இருந்திருக்கக் கூடும். படைப்பாளிகள் சுதந்திர போராட்டத்திற்கான உணர்ச்சிமிக்க கவிதைகளையோ அல்லது "கொக்கு பறக்குதடி கோண வாய்க்கா மூலையிலே" என மறைமுகமாக ஆங்கிலேயர்களைத் தாக்கும் வகையிலான படைப்புகளையோ படைத்தார்கள். (படிமம் என்பது இப்படிப் பட்டதுதான் என்பதனை கவனிக்கவும்).

பாரதி தனிமனிதன் சார்ந்த விஷயங்களையும், சமூகம் சார்ந்த நிகழ்வுகளையும் தனக்கெனெ புது வடிவத்தில் எழுத முயன்று தமிழில் நவீனத்துவத்திற்கான புது அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கிறார். சொல்லப்படும் முறையும், சொல்லப்படும் தகவல்களும் இதுவரை யாரும் முயன்றிடாத முறையும் இதன் நுணுக்கமான தனித்துவங்கள்.

இது தொடர்ச்சியாக வளராமல், அரசியல் சார்ந்த நடவடிக்கைகளும் தமிழின் கவிதைகளுக்குள் நுழைய, நவீன கவிதைகளின் வளர்ச்சிப் போக்கு சுணக்கம் அடைகிறது.

ஓசையின் ஒழுங்கு அமைவிலும், உணர்ச்சிகளை கவிதையில் காட்டுவதிலும் மிகுந்த ஆரவம் கொண்ட கவிஞர்கள் "வானம்பாடி" என்ற குழுவில் இணைந்து எழுத ஆரம்பித்தார்கள். இவர்களில் முற்றிலும் வேறுபட்ட கவிஞர்களான ஞானக் கூத்தன், சி.மணி, ந.பிச்ச மூர்த்தி போன்றவர்கள் "எழுத்து" இதழில் எழுத ஆரம்பித்தார்கள்."எழுத்து" கவிதைகள் தனிமனித இடர்பாடுகளையும், வாழ்வியல் சார்ந்த துன்பங்களையும், மறைந்து கிடக்கும் வாழ்வின் இருளையும் வெளிப்படுத்தினார்கள்.

சமூகம் சார்ந்த கவிதைகளில் அதீத உணர்ச்சிகளையும், கற்பனாவாதங்களையும், சொற்களுக்கும், ஓசை முறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து கவிதை எழுதிய வானம்பாடிக் குழுவினர், எழுத்து கவிஞர்களை "இருண்மைவாதிகள்" என்றழைக்க, எழுத்து கவிஞர்கள் வானம்பாடியினரை "கூச்சல் குழு" என்றழைக்க, புதிய இலக்கிய உலகத்திற்கான சண்டைகளுக்கு சிறகு முளைக்க ஆரம்பிக்கிறது.

திராவிட இயக்கம் தனது பிரச்சார யுக்திகளிலும், மேடைப் பேச்சு முறையினாலும் சாமானியர்களைக் கவர்ந்து தனித்து கால்பதிக்க ஆரம்பிக்கிறது. இதே கால கட்டத்தில் பிரச்சார யுக்தியைப் பயன்படுத்தி வானம்பாடிக் கவிஞர்கள் கவிதை எழுத, அவை திராவிட ஊடகத்தில் பரவ, கவிதைக்கான வடிவம் இதுதான் என முடிவு செய்த இளைஞர் குழுக்கள் எழுதித் தள்ளின. சற்று பிரிந்த 'திராவிட' எழுத்தாளர்கள் (அண்ணா, கருணாநிதி போன்றோர்) முழுமையான பிரச்சார எழுத்துக்களை முன் வைத்தார்கள். அவர்களின் வழித் தோன்றலுக்கு இதுவே பாதையாகிப் போனது.

வானம்பாடியும், திராவிட எழுத்து வடிவமும் பெரும்பாலும் முரண்படாததும், இந்த எழுத்தாளர்கள் அரசியல் நிலையிலும் செல்வாக்கான இடத்தைப் பெற்றதும் கவனிக்கப் பட வேண்டிய அம்சம். இந்த நிகழ்வுகள் சமூகம் சார்ந்த எழுத்துக்களை, எல்லாவிதமான உணர்ச்சிகளையும் பொதித்து வெளிப்படுத்தினால் கவனிக்கப்படலாம் என்ற பிம்பத்தை உண்டாக்குகிறது.

பெரும்பான்மை சமூகத்தில் கவிதை என்பதற்கான எல்லா அங்கீகாரத்தையும் வானம்பாடி, திராவிட எழுத்துக்கள் பெற்றுவிட, மேலோட்டமான வாசகனால் உள்வாங்கிக் கொள்ள முடியாத, திருகலான மொழியமைவுடன் எழுதப்பட்ட நவீன கவிதைகளுக்கான வாசகர் வட்டம், எண்ணிக்கையின் ஒப்பீட்டளாவில் மிகக் குறைந்து போனது.

நவீனகவிதைகள் இயங்குவதெற்கென தளத்தினை சிற்றிதழ்கள் உருவாக்கிக் கொடுத்தன. உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல், ஓசைகளுக்கு முக்கியத்துவத்தினை ஒழித்து, கவிஞர்களின் பேச்சு குறைந்து கவிதைகள் பேசின. உத்வேகத்துடன் எழுத ஆரம்பித்த பல கவிஞர்கள், பின்னர் தொடர்ந்து இயங்காமல் போனதும், எழுதிய கவிஞர்கள் தொடர்ந்து தங்களின் வடிவத்தை புதுபித்துக் கொள்ளாததும், தமக்கு சாதகமான வடிவத்தை உதறித்தள்ளி வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான கவிஞனின் பயங்களும் தமிழில் நவீன கவிதைகளின் மிகப்பெரும் சரிவு.

தமிழின் சாலையோர வாசகனுக்கு தெரிந்த கவிதைக்கான சாத்தியக்கூறுகளின் வடிவம் நவீன கவிதைகளின் வடிவத்திற்கு முற்றும் மாறுபட்டதாக அமைந்ததும், அவனை தனக்குள் அழைக்க இயலாத இரும்புச் சட்டகங்களும் இன்னமும் தகர்க்கப்படாமலேயே இருக்கின்றன.

சுயம் சார்ந்த கவிதைகளை வாசகன் புரிந்து கொள்ளுதலே, அவன் தன்னை புரிந்து கொள்கிறான் என்பதற்கான அடையாளமாக அமையலாம். தனி மனிதனில் இருந்து தொடங்கும் இலக்கியம் செறிவானதாக இருக்கும். சமூகத்திலிருந்து தொடங்குகிற இலக்கியத்திற்கான கவர்ச்சியைக் காட்டிலும், தனிமனிதனிலிருந்து தொடங்கும் இலக்கியத்திற்கான கவர்ச்சி குறைவென்றாலும், இவ்வகை இலக்கியத்தின் உள்ளீடு வலிமை வாய்ந்தது.

நவீனத்துவம் சமூக, அரசியல் இலக்கியங்களை புறந்தள்ளுவதில்லை. அவையும் அவற்றின் கூறுகள்தான் என்ற போதிலும் அவை தனிமனிதனில் இருந்து தொடங்குகின்றன.

தமிழில் எழுதப்படுகின்ற பெரும்பானமையான நவீன நெடுங்கவிதைகள் ஏதேனும் ஒரு புள்ளியில் தொய்வுறுகின்றன. இது படைப்பவனின் பலவீனமேயழிய நவீனத்துவத்தின் பலவீனமன்று.

கவிதையின் வடிவமும், பொருளும் தொடர்ந்து மாறுவதும், கவிதையில் வாசகனை சலிப்புறச் செய்யாத படைப்புகளும்,கவிதையின் செறிவான முகத்தினை சாமானிய வாசகனும் உணர்ந்து கொள்ளுதலும் நவீனத்துவத்திற்கான இடத்தை தெளிவு படுத்தும்.

நவீனத்துவத்தில் சில கூறுகளை ஒதுக்கி பின் நவீனத்துவம் நிலை பெறுகிறது. இதே போல உண்மைவாதம், சர்ரியலிஸம் என எண்ணற்ற தளங்களும் இலக்கியத்தில் உருவாகி, உருமாறித் திரிகின்றன.

தேடும் வாசகனுக்கு எல்லாமே சுலபமானதுதான். சுகமானதுதான்.

நன்றி: திண்ணை.காம்

Dec 13, 2006

கரட்டடிபாளையம்

கரடு(சிறு குன்று)+அடி+பாளையம். வெள்ளிமலைக் கரடுக்கு கீழாக இருக்கும் ஊர். வெள்ளிமலைக் கரடு இப்பொழுது கோபி கலைக் கல்லூரி ஆகிவிட்டது.

ஒரு ஊர் பட்டணமாகவும் இல்லாமல், பட்டிக்காடாகவும் இல்லாமலிருப்பது சுகானுபவம். என் ஊர் அப்படித்தான். கோபியிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்தால் கிராமப்புறத்தின் எல்லை எங்கள் ஊரிலிருந்து ஆரம்பிக்கும்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

மாரியாத்தா கோயில் மட்டும் ஏழு இருக்கு. ஒவ்வொரு சாதி/பகுதிக்கும் ஒவ்வொன்று என. மழை வேண்டிய அவசியமே இல்லை. பவானி ஆற்றின் பாசனத்தை வைத்துதான் ஊரின் பொழப்பு ஓடுகிறது. மழை தேவையில்லாத ஊருக்குள் எதற்கு ஏழு மாரியாத்தா என்று தெரியவில்லை.

அந்தக் காலத்தில் ஆண்டு முழுவதும் சேர்த்த காசை எப்படி செலவழிப்பது எனத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இவர்கள் கம்பம் வெட்டி வருவதாகச் சொல்லி வருடம் தவறாமல் ஏழு மரத்தை வெட்டுகிறார்கள். இருக்கட்டுமே. எவ்வளவு சந்தோஷம் அந்த ஏழு நாட்களும்? மரத்திற்கா பஞ்சம்?

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

வயலில் நெல், மஞ்சள் அல்லது வாழை பயிரிடுவார்கள். எருமை மாடு மேய்க்க ஆட்கள் இருப்பார்கள். ஊரில் கவுண்டர்கள் அதிகம். இப்பொழுது இங்கும் Floating Population வந்து ஊர் பிய்ந்து தொங்க ஆரம்பிக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னர் கவுண்டர்கள் என்றால் படு ஜம்பப் பேர்வழியாக இருப்பார்கள். இரட்டை மாட்டு வண்டி, வேலைக்காரன், பண்ணையத்தாளு, சமையல்காரன் என.

ஒரீரு வருடங்களுக்கு முன்னர், பவானி கண்ட வறட்சியில் அரண்டு போன கவுண்டர்களின் வாரிசுகள் தாங்களே மாடு ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

நரம்பு கட்டி கவுண்டர்கள், வன்னியர், தாழ்த்தப்பட்டோர் என ஊருக்குள் கலந்து இருக்கிறார்கள்.

அட இந்த புராணம் எல்லாம் எதுக்குங்க? படத்தைப் பாருங்க! எப்படி நம்ம ஊரு? எனக்கே பெருமையா இருக்குங்க. :)

இந்தப்படங்கள் எல்லாமே கரட்டடிபாளையம் மட்டும்தான்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

நண்பர் பிரதீப் அனுப்பினார்.

Dec 11, 2006

பெரியார் என்னடா பண்ணினார்?

செம பேஜாராகிக் கிடக்கிறேன். ஆரியன், திராவிடன்னு அடி பின்னுறத பார்த்தா புகை கிளம்புது. காலங்காலமாக திராவிட இனத்துக்கு சலுகை வழங்குவதாகச் சொல்லி மாயை ஏற்படுத்துவதும், அவனுக்கே தெரியாமல் அவர்களினூடாக புகைச்சலை விளைவித்து, பிரிந்து கிடப்பவர்களை, எதிர் இனம் ஒவ்வொருத்தனாக வேட்டையாடுவதும் இயல்பானதுதானே?

அண்ணா, ஒருத்தர் தனித்தனியா பேரு போட்டு திட்டுறாருன்னு சொல்லுறீங்க. அசிங்கஅசிங்கமா பேசுறாருன்னு சொல்லுறீங்க. அதுக்குத்தான் நாட்டாமைத் தனம் பண்ணி ஒதுக்கி வெச்சாச்சு. அதோட விடுறீங்களா? அதுக்கு படிச்ச, நாகரீகம் தெரிஞ்ச நீங்க இப்படியா பதில் சொல்லுவீங்க?

வெட்கமா இல்லை? சோத்துக்கு உப்பு போட்டு தானே திங்குறீங்க?

பெரியார் உங்களை என்னடா பண்ணினார்? உங்களை மாதிரியே எல்லோரும் பேசினா என்ன ஆகும் இந்த பேட்டை? அடங்கொக்கக்கா பெரியாரை சமத்துவ மாமான்னு சொல்லுறத எத்தனை நாளைக்குதான் வேடிக்கை பார்க்கிறது?

ஒரு விவகாரம் ஆறிப் போனா நல்லாவா இருக்கும்? புண்ணை சொறிஞ்சுட்டே இருந்தாதான் சுகம். ஆறிபோனா அந்த இடத்த எதுக்கு கண்டுக்க போறோம்?சொறிங்க...சொறிங்க..வூட்டாண்ட யாராவது வெட்டியா குந்திகினு இருந்தா உள்ள இழுத்து விடுங்க..அவியளும் சொறியட்டும்...
ரத்தம் சீழா மாறி நாறடிக்கட்டும்.

இந்த சனியன் புடிச்ச சண்டை போடுறதுக்கு நான் ஒண்ணும் எளக்கியவாதியும் இல்லை, மேட்டர் தெரிஞ்ச மெத்தப் படிச்ச புடு**யும் இல்லைன்னுதான் பேசுறதே இல்லை. சண்டை இருந்தா உங்களோட நிறுத்த வேண்டியதுதானே? செத்துப் போன நல்ல மனுஷனுகளை எல்லாம் இழுத்துப் போட்டு நாறடிக்கிற நாறவாயனுகளுக்குள்ள சிக்கிட்டோம்ன்னு வருத்தமாதான் இருக்கு.

பெரியார் மட்டுமில்லை. காந்தீயம், அம்பேத்கரியல் என எல்லா இயங்களும், இசங்களும் மறுவாசிப்புக்கும் மறுஆய்வுக்கும் உட்படுத்த வேண்டிய காலகட்டம்தான். கருத்துப் பூர்வமாக விவாதிப்பதும், எல்லாக் கருத்துக்களையும் ஏற்பதும்/மறுப்பதும் அல்லது சில கருத்துகளை ஏற்பதும்/மறுப்பதும் அடுத்த தலைமுறைக்கான சித்தாந்தங்களும், வாழ்வியல் நெறிமுறைகளும் உண்டாவதற்கான வழிகளைத் திறக்கும். சமூகத்திற்கான நல்ல விவாதமாகவும் அமையும்.

பெரிய ஆளுங்க பேசிட்டுப் போனத, செஞ்சுட்டுப் போனத பேசுங்கன்னு சொன்னா, புதைச்ச இடத்துல இருந்து எடுத்துட்டு வந்து அறுத்துப் போட்டு பேசுறீங்க. போற போக்குல குரூப் சேர்ந்து எந்தத் தலைவன் குறி பெருசுன்னும் பேசுவாங்க....நாமதான் பார்த்து நடந்துக்கணும்.

அரை வேக்காட்டுத் தனமாக ஒரு தலைவரை தெரிந்து கொள்வதும், அரையுங் குறையுமாக உளறுவதும் சகிக்கலை ராஜாக்களா...

தனிப்பட்ட முறையில் நீங்கள் நாறிக் கொளவதற்காக பெரியவர்களை அசிங்கப் படுத்தாதீர்கள். அது பெரியாரோ, ராஜாஜியோ, கலைஞரோ, புரட்சித் தலைவியோ. நீ யாருடா இதை சொல்றதுக்குன்னு எவனாவது கேட்டா நான் என்ன சொல்வேன் தெரியுமா? தே*** பையா அந்த மனுஷன அசிங்கமா பேசுறதுக்கு நீ யாருடான்னு. பின்ன அந்த மனுஷர்களா வரப்போறாங்க? நாமளா எதாவது திட்டி மூஞ்சி மேல சாணி எறிஞ்சாத்தான் உண்டு.

இந்த விஷயத்துல கொஞ்சம் கூட வெட்கமே இல்லைங்க எனக்கு. கடைஞ்செடுத்த பச்சைப் பொறுக்கி. என்னை மாதிரி பல பேரு திரியறோம். சும்மா மனசுக்குள்ள பெரிய 'ராடு'ன்னு நினைசுட்டு கண்டத கிறுக்காதீங்க.

அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்...இவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் பழைய பல்லவியை எடுத்து விடாதீங்க அப்புகளா.....

இதுல அடிவருடித் தனமும் இல்லை, ஜல்லியடித்தலும் இல்லை. நீங்க எப்படி வேணும்னாலும் நாறிக்குங்க. மக்களிடம் தலைவர் என்ற நிலையில் இருப்பவர்களின் கருத்துக்களை விவாதிக்காமல், தனிப்பட்ட முறையில் அசிங்கப் படுத்தாதீர்கள் என்பதுதான் கன்குளூஷன்.

வெட்டித்தனமாக வாந்தி எடுக்கறதை நிறுத்துங்கள். சுத்தம் செய்து விட யாரும் வரப் போவதில்லை.