Nov 22, 2006

கொங்குச் சொற்கள்: நான்காம் பட்டியல்

கொங்கு நாட்டு மொழிவழக்கின் நான்காவது பட்டியல் இது. சொற்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

இந்த வாரம் ஊருக்குச் செல்கிறேன். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு. :) சேகரித்து வர இயலும் என எண்ணுகிறேன். 'சேகரித்து' என்பதனைக் காட்டிலும் 'நினைவு படுத்திக் கொண்டு வருதல்' என்பது சரியாக இருக்கும்.

நான் பேசிய சொற்கள், என்னிடம் புழங்கிய மொழியை தொலைத்துக் கொண்டிருக்கிறேன். மீட்டெடுக்க வேண்டும்.

1. மொனவாத - முணுமுணுக்காத

2. மூஞ்சு போச்சு - தீர்ந்து விட்டது.

3. சாடை பேசுறான் - மறைமுகமாக தாக்கிப் பேசுகிறான்
நமக்கு புரியற மாதிரி சொல்லணும்னா உள்குத்து :)

4. மம்மானையா - மென்மேலும்

5. இண்டம் புடிச்சவன் - கஞ்சன்

6. பொங்கான் பொசுக்கான் - வலிமையற்று
அவனே பாவம்! பொங்கான் பொசுக்கான்னு இருக்குறான். அவனப் போயி ஏண்டா நோண்டுற?

7. மொன்னை - முனை மழுங்கியது/ ரோசம் இல்லாதவன்.

8. சுளுவா - சுலபமாக

9. வெட்ருப்பு - கடுகடுப்பு
அந்தப் பொம்பள ரொம்ப வெட்ருப்பானவ. பார்த்துப் பேசிட்டு வா.

10. சிலுவாடு - சிறு சேமிப்பு
உங்க அமத்தா பூ வித்த காச சிலுவாடு சேத்தியே ஒரு வெள்ளாடு வாங்கிருச்சு.

11. தலைக்கு வாத்துடு - தலையோடு சேர்த்துக் குளி

12. மேலுக்கு வாத்துட்டு வா - உடம்புக்கு மட்டும் குளிச்சுட்டு வா.
டேய் நோம்பி நாளும் அதுவுமா என்னடா மேலுக்கு மட்டும் வாத்துட்டு வந்து நிக்குற? போயி தலைக்கு வாத்துட்டு வா.

13. மாதாரி - சக்கிலி.

14. வெறுமானம் - அமாவாசைக்கும் மூன்றாம் பிறைக்கும் இடைப்பட்ட நாள்.
வெறும் வானம்.
அமாவாசையை, நெறஞ்ச அமாவாசை என்று குறிப்பிடுவார்கள். வெறுமானம் அன்று எந்த காரியமும் செய்யமாட்டார்கள்.

15. புண்ணியார்ச்சனை - புதுமனை புகுவிழா

16. கருப்பு - கருமாதி

17. அடப்பு - இறந்த நேரத்தை ஜோஸியர்களிடம் கொடுத்துப் பார்ப்பார்கள். சில குறிப்பிட்ட நேரத்தில் இறந்திருந்தால், சில தினங்களுக்கு அடப்பு வைக்க வேண்டும் என்று சொல்வார். அந்த நாட்களுக்கு தொடர்ச்சியாக விளக்கு எரிந்து கொண்டிருக்கும். மனைவி இருந்தால் வெளியே வராமல் வீட்டிலேயே அடைந்து இருப்பார். இன்னு ம் பல சடங்குகளும் இருக்கும்.

18. ஒளப்பிக்காத - குழப்பிக்காத.
கண்ட கண்டதுக்கெல்லாம் மனசப் போட்டு ஒளப்பிக்காத. நடக்குற போது பாத்துக்கலாம்.

19. மதுக்கான் - சுறுசுறுப்பற்றவன்

20. சோப்பலாங்கி - சோம்பேறி/ சுணங்கி இருப்பவன்

21. நோக்காடு - நோய்
அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்னைக்கு வரக் காணோம்.

22. கதுமை - கூர்மை
கத்தி பயங்கரக் கதுமை.

23. கட்டுச்சோறு - புளி சாதம், எலுமிச்சை சாதம் போன்ற வகையறா.
பெண் கர்ப்பமாக இருக்கும் போது ஐந்து அல்லது ஏழு வகையான சோறு செய்து விருந்து(வளை காப்பு) நடக்கும். அவ்விருந்தின் பெயரே கட்டுச் சோத்து விருந்துதான்.

24. பலகாரம் - பெயரில் காரம் மட்டும் இருந்தாலும் பலவகையான இனிப்பும், காரமும் கலந்த கலவை.

25. ஒடக்கா - ஓணான்

26. தவுட்டு பலாக்கா - சீதாப்பழம்

27. அழுகுவண்ணாங்குருவி - மைனா
அழகு வண்ணக் குருவி தான் அழுகுவண்ணாங்குருவி ஆகிவிட்டது என்று யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

28. தோப்பட்டை - பெரியது
உன்ர சட்டை என்னடா தோப்பட்டையாட்ட இருக்குது? கெழவன் சட்டை போட்ட மாதிரி.

29. சால் - தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரம். அண்டா மாதிரியும் இல்லாமல், குடத்தை விட சற்றே பெரியதாக இருக்கும்.

30. நாளாண்ணிக்கு - நாளை மறுநாள்.

31. சோமாரம் - திங்கட்கிழமை.

32. வாதிக்காத - வதைக்காதே.

Nov 20, 2006

ஜாலியான சோகக் கதை

உங்ககிட்ட எனக்கு கல்யாணமான விஷயத்தை சொல்லி இருக்கேனா? அதுவே ஒரு பெரிய கதை. ஆனால் இங்கு அது ஒரு கிளைக்கதைதான். எனக்கு பொண்ணு பார்க்கப் போகிற செய்தி கிடைத்தவுடன் வீட்டில் பிரச்சினை செய்ய ஆரம்பித்துவிட்டேன். எனக்கு காதல் திருமணம் செய்து கொள்ளத்தான் ஆசை. என் அப்பா அதற்கெல்லாம் மசிவாரென்ற நம்பிக்கை இல்லை. அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும். அதற்குதான் நான் செய்யும் பிரச்சினைகள் எல்லாம்.

திருமணம்தான் காதல் திருமணம். ஆனால் காதலி எல்லாம் யாரும் இல்லை. இதுவரை தேடியதில்லையா என்று கேட்கிறீர்களா? தேடி இருக்கிறேன். எனக்கு அவ்வளவாக திறமை போதாது. சொல்லாமலே என் காதல் அவிஞ்சு போயிருக்கும். அல்லது சொன்னவுடன் பொசுங்கி போயிருக்கும். அவற்றை எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் நாவாலகிவிடும். அதனால் பிளீஸ் கேட்காதீர்கள்.

காதல் திருமணம் என்றால் எனக்கு பிடித்த பெண்ணாக, என் அட்டகாசம், அலம்பல்கள் குறித்து ஏற்கனவே தெரிந்தவளாக இருப்பாள் என்ற நப்பாசைதான் காரணம். மற்றபடி படிக்காதவளாக இருந்தாலும் பரவாயில்லை.

பிரச்சினை என்று சொன்னேன் அல்லவா? அதற்கு வருவோம். திருமணமே வேண்டாம். நான் பிரம்மசாரியாகவே இருக்கப் போகிறேன் என்று ரகளை செய்து கொண்டிருந்தேன். வீட்டில் அவ்வாறு சொல்லி இருந்தாலும் உள்ளூர பயம் இருந்தது. சரி பிரம்மசாரியாகவோ இருந்து கொள் என்று சொல்லிவிடுவார்களோ என. அதற்கும் காரணம் இருக்கிறது. எனக்குத் திருமணம் செய்து வைக்க பேரன் பேத்திதானே முக்கியமான காரணமாக இருக்க முடியும்? அதற்கு என் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தால் போகிறது. அவன் அம்மா அப்பா பேச்சு கேட்கும் நல்ல பையன் என்ற பேர் உண்டு. எனக்குதான் தறுதலை, அடங்காப்பிடாரி என்ற பெயர்கள் எல்லாம்.

நல்லவேளையாக நான் பயந்தது எதுவும் நடக்கவில்லை. அம்மா பக்கத்தில் வந்து பொறுமையாகக் கேட்டார். ஏதாவது நீயே பொண்ணு பார்த்து வெச்சிருக்கியாடா? இருந்தா சொல்லு அதையே பார்த்துப் பேசிடலாம். அப்பாவும் வேற ஜாதின்னா கூட பரவாயில்லைன்னு சொல்றாரு என்றார். முதல் மாங்காய் விழுந்துவிட்டது. நாளையிலிருந்து முழுநேர வேளையாக பெண் தேட வேண்டுமென முடிவு செய்து பஸ் ஸ்டேண்ட், பார்க், சினிமா தியேட்டர் என்று எல்லாம் சுற்றினேன். இந்த நாட்டில் எல்லா பெண்களுக்குமே காதலனோ அல்லது கணவனோ இருக்கிறார்கள். முப்பத்தெட்டு வயதான பின், ஒரு பெண்ணைப் பார்த்து லெட்டர் கொடுத்து, அவள் சரி என்று சொல்லி, சினிமாவுக்கு கூட்டிப் போய்...இது எல்லாம் நடக்கிற காரியமாகவே தெரியவில்லை. விழுதிருந்த சொட்டை கொஞ்சம் அதிகமானதுதான் மிச்சம். இன்னொன்றும் மிச்சம் இருக்கிறது. ஊருக்குள் பேசிக் கொண்டார்களாம் "பையன்- பையன் என்னும் சொல் என் வயதைக் குறைக்க நானே உபயோகப் படுத்திக் கொண்ட சொல். ஊருக்குள் 'ஆள்' என்கிறார்கள். இந்த ஆளு ரோடு ரோடா நின்னு போற வர்ற பொண்ணுகளை மொறச்சு மொறச்சு பார்க்குறானாம். பாவம் அதது நடக்க வேண்டிய வயசுல நடக்கலைன்னா இப்படிதான்" பச்சாதாபத்தோடு முடிக்கிறார்களாம். ஏற்கனவே பஞ்சராகி இருக்கும் என்னால் இந்த மாதிரியான பேச்சுக்களை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியாது.

அம்மாவிடமே பொறுப்பை ஒப்படைத்துவிடுவதுதான் உசிதம். அப்படி வந்தவதான் இந்த சங்கீதா. ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். "சாகப் போற வயசுல பேரப் பாரு..சங்கீகீகீகீகீதா". இந்தப் பெயரை அந்த உச்சரிப்பில் படிக்க வேண்டும். சங்கீதா அதிகம் படிக்கவில்லை. இரண்டாவது மட்டும் இரண்டு மூன்று தடவை படித்ததால் சட்டிபானை கழுவப்போட்டதாக பெரிய சொட்டை சொன்னார். சின்ன சொட்டை என்ற பெயர் எனக்கு கொடுக்கப்பட்டதால் சொந்த பந்தத்தில் என் மாமனாருக்கு பெயர் பெரிய சொட்டை. அதுக்கென்ன மாப்பிள்ளைதான் 'இஏபீஏ' படிசிருக்காரே என்று சொல்லி என் மேல் அவரின் வாயிலிருந்த வெற்றிலையைத் துப்பி அதை துண்டை வைத்து துடைத்து ஒரு வழி பண்ணினார்.

என் சங்கீதா ரொம்ப நல்லவள். இதைப் படிக்க வேண்டுமானால் வடிவேல் பாணியை உபயோகப் படுதிக்கொள்ளலாம். பளிச்சுன்னு கைகால் கழுவி ரெடியாக இரு சினிமாவுக்கு போகலாம் என்றால் முகத்தில் விளக்கெண்ணெய் பூசி பளிச்சென்று இருப்பாள். அந்த அளவுக்கு சொன்ன சொல் கேட்பவள். திருமணம் முடிந்து கொஞ்ச நாள் ஆகிவிட்டது. ஒரு கதை சொல்லுங்க என்று கேட்டாள். சந்தோஷத்தில் சொல்ல ஆரம்பித்தேன். "மலை உச்சிக்கும் உடல் சிதறுவதற்குமான கணத்தில் ஒரு கவிதை எழுதிய சாத்தியம்"ன்னு ஏதோ ஒரு கவிதையில் வரும் என்று ஆரம்பித்தேன். ஒரு எழவும் புரியவில்லை என்றாள். அட! மலையில இருந்து கீழ விழுறதுக்குள்ள ஒரு கவிதை எழுதி முடிச்சானாம் என்றேன். என்ன கருமாந்திரமோ சாவப் போறவனுக்கு கவிதைதான் முக்கியமா. போங்க நீங்களும் உங்க கதையும் என்று மீண்டும் சட்டிபானை கழுவப் போய்விட்டாள்.

மூன்றாவது மாசம் பெரிய சொட்டையிடம் கம்ப்ளெயிண்ட் செய்திருக்கிறாள். 'இந்த ஆளு(நான்தான்) எதை எதையோ கிறுக்கி புரியுதா புரியுதான்னு கேட்கிறான்' என. நேற்று ஒரு கதை எழுதி இருந்தேன். படித்துக் காட்டியதன் விளைவுதான் அது. நான் எழுதுவது எனக்கே புரியாது. அவள் பயந்ததிலும் அர்த்தம் இருக்கிறது. ஆனால் இன்னும் எப்படி காலத்தை ஓட்டப் போகிறேன் என்று தெரியவில்லை. மாமனாரின் மொத்த சொத்தும் இவளுக்குத் தான் வரும். அதற்காக? அவனவன் சாப்ட்வேர் பொண்ணுகளைக் கட்டிக் கொண்டு பீட்ஸாகார்னர், டிஸ்கோத்தேன்னு அலையறாங்க. நான் மட்டும் இளிச்சவாயனா? அதை வேறு சொல்ல மறந்துவிட்டேன். திருமணம் முடிந்த ஒன்றரை மாதத்திலிருந்தே நான் 'இனாவானா'த்தனமாக நடப்பதாக சுட்டிக் காட்ட ஆரம்பித்துவிட்டாள்.

நான் முடிவு செய்துவிட்டேன். விவாகரத்து கோரப்போவதாக நேற்று வக்கீலிடமும் பேசினேன். எப்படியோ மோப்பம் பிடித்த மாமனார், என் காலை வெட்டி படுக்கையில் போட்டு கடைசி வரைக்கும் கஞ்சித்தண்ணி ஊற்றுவேன் என்று செல்போனில் அழைத்து மிரட்டினார். அந்த மனுஷன் பேசிய தொனியைப் பார்த்தால் செய்தாலும் செய்வான். பெரிய சதிகாரன் போல பேசுகிறான். பிரகாஷ்ராஜ் மாதிரி என்றால் கூட கொஞ்சம் தைரியமாக இருக்கலாம். அசோகன், நம்பியார் மாதிரி பேசுவதுதான் பிரச்சினையே.

தற்கொலையும் ஒத்துவராது. ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். அவசரத்துக்கு கயிறு கிடைக்காததால் அரைஞாண் கயிறை அறுத்து தூக்கு மாட்ட முயன்றேன். அறுந்து கீழே விழுந்துவிட்டேன். விஷயம் தெரிந்து அக்கம்பக்கத்தில் சிரிக்காத சின்னஞ்சிறுசுகளே இல்லை. தப்பித்துப்போனதால் சாவதை நினைத்தாலே பயமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது. அதனால்தான் தெரியாத ஊருக்கு ஓடிவிடப் போகிறேன். காசி, இமயமலை என்று எங்கேயாவது. இது பழைய ஸ்டைல்தான். ஆனால் எனக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை.

கதை படிப்பவர்கள் வேறு எதாவது ஐடியா இருந்தாலும் கூட கொடுக்கலாம். ஆனால் சன்மானம் கொடுக்கும் அளவுக்கு எனக்கு வழியில்லை. இந்தக் கதை பிரசுரமானால் கிடைக்கும் தொகையில் ஐம்பது சதவிகிதம் தருவேன். மற்றபடி ஒரு அப்பிராணிக்கு வழி சொன்ன புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும்.

கதை முடியப் போகிறது. கதையில் திருப்பமே இல்லை என்பவர்களுக்காகத் தான் இந்த பத்தி. என் வாழ்க்கையில் விபரீதத் திருப்பங்கள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்குதான் இந்தக் கதையே. எனக்கு பெண் தேட ஆரம்பித்துவிட்டார்கள். யாராவது என் அம்மாவிடம் இந்தக் கதையை சொல்லுங்கள். நான் பிரம்மச்சாரியாக இருக்கப் போகிறேன் என இப்பொழுதுதான் சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.

Nov 16, 2006

உயிர்மையில் ஒரு கவிதை!

Photobucket - Video and Image Hosting

புரிந்து கொள்வதற்கு
எதுவுமில்லை.

வேம்பின் சிறைப் பிடிப்பை மீறி
முற்றத்தின் நுனியில்
நகர்ந்து கொண்டிருக்கிறது
வெய்யில்.

இந்தக் குழந்தை
மூக்கில் நீர் வடிய
நமுத்த முறுக்கொன்றை
சப்புகிறது.

உருவாக்கப் பட்டிருந்த
சப்தங்கள் ஒடுங்கி
மெளனத்திற்கு இடம் கொடுக்கின்றன.

பாம்பின் நெளிதலைப்
போல காற்றில் பறக்கிறது
காகம்.

பிரக்ஞையற்ற மரக்கிளை
சாவாதானமாக
சன்னலை உரசுகிறது.

அவையவை
அவ்வாறே நடக்கின்றன.

இதில்
புரிந்து கொள்வதற்கு
எதுவுமில்லை.


* இக்கவிதை நவம்ப‌ர்'2006 மாத இதழில் வெளிவந்திருக்கிறது.

* பெரும்பாலனவற்றினை அறிவு வ‌ரைக்கும் எடுத்துச் சென்று புரியவில்லை என புலம்பியிருக்கிறேன். இது தேவையில்லாதது என்பது என் எண்ணம்.

* பல விஷயங்களை நம் பார்வையோடு நிறுத்தி ரஸித்தால் போதும், புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற நிலையில் எழுதிய கவிதை.

* கமல் மாதிரி.."ஒண்ண பார்த்தா அனுபவிக்கணும்..ஆராயக்கூடாது" :)

Nov 5, 2006

நோபல் பரிசு 1982: காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

"கண்டத்தின் வாழ்க்கை மற்றும் போராட்டங்கள் கற்பனைவாதத்தால் புனையப்பட்டு அற்புதம் மற்றும் உண்மையை பிரதிபலிக்கும் இவரின் புதினங்கள் மற்றும் சிறுகதைகளுக்காக" என நோபல் அறக்கட்டளை காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்(Gabriel Garcia Marquez ) அவர்களுக்கு 1982 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசினைக் கொடுக்கும் போது அறிவித்தது.

மார்க்வெஸ், 1928 ஆம் ஆண்டு தென்னமெரிக்க நாடான கொலம்பியாவின் மலைகளுக்கும் கரீபியன் கடலுக்கும் இடையேயான அரகாட்டாக்கா என்னும் கிராமத்தில் பிறந்து, தாய்வழி பெற்றோரிடம் வளர்ந்தார். சட்டப் படிப்பை துவங்கிய மார்க்வெஸ், தனது பத்திரிக்கையாளர் பணிக்காக கல்வியைக் கைவிட வேண்டியதாகிற்று.

பணிநிமித்தம் காரணமாக 1954 ஆம் ஆண்டு ரோம் நகருக்கு அனுப்பட்டதிலிருந்து தன் வாழ்க்கையை பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழ்ந்தார்.

அடிப்படையில் தன்னை ஒரு உண்மைவாதி(Realist) எனக் கருதி வந்த மார்க்வெஸ், தனது படைப்புகளில், தான் கவனித்த, உணர்ந்த கொலம்பியா மற்றும் இலத்தீன் அமெரிக்க நிகழ்வுகளைப் பதிவு செய்தார். கொலம்பிய வரலாற்றுப் புத்தகங்களில் மறக்கப்பட்டுவிட்ட ஆண்டிக்வா படையினரால் அரங்கேற்றப்பட்ட வாழைத்தோட்டத் தொழிலாளர்கள் கொலை, தனது எட்டு வயதில், வளர்த்த தாத்தாவின் மரணம், பாட்டியின் கண்பார்வை இழப்பு போன்ற நிகழ்வுகள் கடுமையாகப் பாதித்தன.

1959 ஆம் ஆண்டு காஸ்ட்ரோவின் கொரில்லாப் புரட்சி வெற்றிபெற்று, படைகள் ஹவானாவுக்குள் அணிவகுத்தன. இலத்தீன் அமெரிக்காவின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணிய இந்நிகழ்வு, மார்க்வெஸ்ஸின் எண்ணத்திலும் பெரும் மாறுதல்களைக் கொணர்ந்தது.

எல் ஸ்பெக்டேடர்(El Espectador) என்னும் பத்திரிக்கையில் பணியாற்றிய போது கொலம்பிய கப்பற்படையின் சீர்குலைவு குறித்து எழுதிய கட்டுரைகள் Relato de un naufrago (The Account of a Shipwrecked Person, 1970) என்னும் பெயரில் வெளிவந்து பேசப்பட்டது.

மார்க்வெஸ்ஸின் முதல் கதையான "மூன்றாவது ராஜினாமா(The Third Resignation)" 1947 ஆம் ஆண்டு வெளிவந்தது. கேபோ(Gabo) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மார்க்வெஸ்ஸின் "ஒரு நூற்றாண்டுத் தனிமை(One hundred years of solitude)" உலகம் முழுவதும் கவனிக்கப் பெற்று பெயர் வாங்கித் தந்தது.

1975 ஆம் ஆண்டு வெளிவந்த நாவலான "த ஓட்டம் ஆ·ப் த பேட்ரியார்க் (The autum of the patriarch)" என்ற படைப்பும் குறிப்பிடப் படவேண்டிய ஒன்று. தனது புனைவுகளைத் தவிர்த்து திரைக் கதைகளும் எழுதியுள்ளார்.

மார்க்வெஸ்ஸின் படைப்புலகில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தன் வாழ்வில் சந்தித்த நபர்களாகவே இருப்பர். மயக்க நிலை நினைவுகளையும், கனவுகளையும் படைப்புகளில் பதிவு செய்யும்(Surrealsim) மார்க்வெஸ், இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கதை சொல்லியாக படைப்பாளிகளால் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். புதினம், சிறுகதை என எந்த வடிவமாக இருப்பினும் மிகச் சிறந்த கதை சொல்லியாக மார்க்வெஸ் விளங்கினார்.

கற்பனையின் மிகச் சிறந்த ஆற்றலையும், மனித மனத்தின் அவிழ்க்க முடியாத புதிர்களையும் மார்க்வெஸ்ஸின் படைப்புகளில் உணரமுடியும். படைப்புகளின் உண்மைத் தன்மை உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாகவும், அதே சமயம் லெளகீக எல்லைக்குட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மார்க்வெஸ்ஸின் படைப்புகளிலும் இத்தன்மைககளை வாசகன் தாண்டிச் செல்ல முடியும்.

பேரழகும், வலிகளும் விரவிக் கிடக்கும் இந்தப் படைப்புகள் உண்மைக்கும், கனவு நிலைக்குமான இடைப்பட்ட நிலையில், நம்பிக்கையற்ற கோடுகள். இந்த படைப்புலகம் நாம் ஒவ்வொருவரும் விரும்பத்தக்க உலகம்.

மார்க்வெஸ்ஸின் மற்ற படைப்புகள்:

1. நோ ஒன் ரைட்ஸ் டு த கர்னல் (No one writes to the colonel)
2. லீ·ப் ஸ்டார்ம் (Leaf Storm)
3. இன்னொசென்ட் இரெந்திரா(Innocent Erendira)

புதினங்கள்:

1. இன் ஈவிள் ஹவர் (In Evil Hour)
2. க்ரோனிக்கிள் ஆ·ப் அ டெத் ·போர்டோல்ட்( Chronicle of a death foretold)
3. லவ் இன் த டைம் ஆ·ப் காலரா (Love in the time of Cholera)


இலக்கியம் தவிர்த்து அரசியல் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். 1973ல் இடதுசாரி பத்திரிக்கையை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வந்தார். பிடல் காஸ்ட்ரோவுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருந்த அவர், மெக்ஸிகோவில் மனித உரிமை இயக்கத்தையும் வீச்சோடு நடத்தினார்.

தமிழோவியம்.காம்