Oct 18, 2006

ஷசி தாரூர்

ஐ.நா சபை பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட ஷசி தாரூர் நான்காம் கட்ட மாதிரி தேர்தலுடன் போட்டியிலிருந்து விலகி இருக்கிறார். இத் தேர்தலில் ஷசி அவர்கள் எட்டு வாக்குகள் ஆதரவாகவும், மூன்று வாக்குகள் எதிராகவும், நான்கு வாக்குகள் கருத்து அற்றதாகவும் பெற்றிருக்கிறார்.

ஐந்து நிரந்தர உறுப்பினர்களையும், பத்து தற்காலிக உறுப்பினர்களையும் கொண்ட ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் குறைந்த பட்சம் ஒன்பது வாக்குகளைப் பெற வேண்டும். வீட்டோ(நிரந்தர உறுப்பினர்) நாடுகளின் எதிர்ப்பினைப் பெறவும் கூடாது.

வெல்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பெற்றுவிட்ட தென்கொரியாவின் பான், பதினான்கு வாக்குகள் ஆதரவாகவும், ஒரு வாக்கு மட்டும் கருத்து அற்றதாகவும் பெற்றிருக்கிறார். அந்த ஒரு வாக்கு ஜப்பான் அளித்திருக்கும் எனக் கருதப்படுகிறது.

முதல் மூன்று மாதிரி வாக்குப்பதிவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரே நிறத்தில் வாக்குச் சீட்டு வழங்கப் பட்டிருந்தது. நான்காவது மற்றும் இறுதி வாக்குப் பதிவில் தற்காலிக உறுப்பினர்களுக்கு ஒரு நிறத்திலும், நிரந்தர உறுப்பினர்களுக்கு வேறொரு நிறத்திலும் வாக்குச் சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இத்தேர்தலில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய அம்சம் அமெரிக்கா, இந்தியாவிற்கு எதிராக வாக்களித்திருப்பதுதான். ஒருவேளை ஒன்பது வாக்குகளை ஷசி தாரூர் பெற்றிருந்தாலும் கூட, அமெரிக்கா தனக்கான வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இவரைத் தோல்வி அடையச் செய்திருக்கலாம்.

ஷசியின் இத்தோல்வி மிக வருந்தத் தக்கதாக இல்லையென்ற போதிலும், தோல்விக்கு பல காரணங்களைச் சுட்டிக்காட்ட இயலும்.

ஷசிதாரூக்கு அரசியல் ரீதியான பலம் மிகக் குறைவு. ஐ.நாவில் தகவல் தொழில்நுட்ப பிரிவொன்றில் உயர் பதவியில் இருந்திருக்கிறார். மாறாக பான், ஐ.நாவுக்கான கொரியாவின் தூதராக செயல்பட்டிருக்கிறார். தற்போதைய தென் கொரிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கிறார். மிகச் சிறந்த ராஜதந்திரி என்ற பிம்பமும் உலக நாடுகளிடையே அவருக்கு உண்டு.

பொருளாதார ரீதியாக இந்தியா தென் கொரியாவை விட பன்மடங்கு வலிமை வாய்ந்தது. ஐ.நா வில் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக வலிமையான, பெரிய நாடுகளுக்கு முக்கிய பொறுப்புகளைக் கொடுக்கத் தயக்கம் இருந்து வந்திருக்கிறது. எப்பொழுதும் சிறிய நாடுகளுக்கே முன்னுரிமை அளிக்கப் படுகிறது. இந்தியா அணு ஆயுத பலம் பெற்ற நாடு வேறு.

சீனாவிற்கும் சரி, அமெரிக்காவிற்கும் சரி. வட கொரியா பயங்கர தலைவலி கொடுக்கும் நாடு. வட கொரியாவிற்கு 'செக்' வைக்க தென் கொரியா அவர்களுக்கு நல்ல 'சாய்ஸ்'.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான காரணம் என வல்லுநர்கள் கருதுவது, இந்தியாவிற்கென வெளியுறவுத்துறை அமைச்சர் இல்லாதது. தனக்கான வாக்குகளைப் பெற வேட்பாளரே பிரயத்தனப் பட வேண்டியிருந்தது அல்லது வேறு வலிமையற்ற அதிகாரி எவராவது மற்ற நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தது மிகப் பெரிய பலவீனம். ஒரு வெளியுறவுத் துறை அமைச்சர் இருந்து, அவர் ஒரு மாதம் இதற்காக பணியாற்றியிருந்தால் நிலைமை மாறியிருந்திருக்கலாம்.

கடைசி வரை இரண்டாம் இடத்தைப் பிடித்து, மானத்தைக் காப்பாற்றியிருக்கிறார் என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்.

இப்பதவி சுழற்சி முறையில் ஒவ்வொரு கண்டத்திற்கும் மாறி மாறி வழங்கப் படுகிறது. அடுத்த முறை ஆசியாவிற்கு வரும் போது இந்தியா தனது வேட்பாளரை நிறுத்துமா என்று தெரியவில்லை. அப்படியே நிறுத்தும் போதும் மேற்சொன்ன பொருளாதார, அரசியல் நிலைகளில் இந்தியா பல படிகள் முன்னேறியிருக்கும். ஐ.நா பொதுச் செயலாளராக இந்தியர் ஒருவர் பதவி ஏற்பது இனி குதிரைக் கொம்பாகத் தான் இருக்கும்.

நன்றி: தமிழோவியம்.காம்

7 எதிர் சப்தங்கள்:

Sivabalan said...

நல்ல பதிவு

நன்றி

குழலி / Kuzhali said...

நல்ல கட்டுரை

Jom said...

wish if i could read Tamil...!

Vajra said...

ஷசி தரூர் பற்றி எனக்கொன்றும் நல்ல அபிப்ராயம் இல்லை.

http://www.unforum.com/UNheadlines346.htm

Typical Nehruvian secularist. இந்தியர் என்பதனால் மட்டுமே support செய்யலாம் என்றிருந்தேன்...இப்போது அந்த மதிப்பும் போய் விட்டது.

Anonymous said...

ஷசி தாரூர் அல்ல. சசி தரூர். அவர் சோனியா காந்திக்கு சொம்பு தூக்குவது பற்றியும் எழுதியிருக்கலாமே. நரேந்திர மோடி கேங்கிற்கு தூக்காத வரை நல்லது.

Vajra said...

எத்தனையோ திறமை வாய்ந்த இந்தியர் இருக்கையில் இந்த ஆசாமியைப் போய் இந்தியா தேர்ந்தெடுத்தது...

இந்தியாவின் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் சீட்டுக்கு மண் அள்ளிப் போட்டுக் கொள்ள இந்த சோனியாவின் கூஜா தூக்கியை கூப்பிட்டனுப்பியது யாரு?

Ponnarasi Kothandaraman said...

Hi
1st time here :)
Nice post!
And nice blog 2 :)