Oct 21, 2006

புக்கர் பரிசு 2006: கிரண் தேசாய்

ஆங்கில வாசகர்களிடமும், படைப்பாளிகளிடம் பெருமதிப்பு பெற்றதும், இலக்கிய உலகில் இரண்டாவது பெரிய பரிசு எனக் கருதப்படுவதுமான "புக்கர் பரிசு" இந்த ஆண்டு இந்தியாவைச் சார்ந்த கிரண் தேசாய் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அவரது இரண்டாவது நாவலான "தி இன்ஹெரிடன்ஸ் ஆ·ப் லாஸ்(The Inheritance of Loss)" இந்த விருதினைப் பெறுகிறது.

இந்நாவல், 1986லிருந்து 1988 வரையிலும் தீவிர வன்முறை மிகுந்த நிகழ்வாக இருந்த, மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்ட நேபாள மக்கள் தனி மாநிலம் கோரி நிகழ்த்திய கோர்க்காலாண்ட் இயக்கத்தினை (Gorkhaland movement) பின்புலமாகக் கொண்டது. ஓய்வுபெற்ற நீதிபதியும், விபத்தொன்றில் தனது பெற்றோரை இழந்துவிட்ட அவரது பேத்தி, சாய் ஆகியோரை மையமாகக் கொண்டு நிகழும் நிகழ்வுகள் புதினத்தில் கோர்க்கப்படுகின்றது.

தேசியம், பன்முகக் கலாச்சாரத்தன்மை, ஊடுருவிக் கிடக்கும் மனிதம் என பல விஷயங்களையும் மென்மையாக, நாவல் தொட்டுச் செல்கிறது. தனது நோக்கம் அரசியல் புதினம் படைப்பதல்ல என்றும் அத்தகையதொரு போராட்டச் சூழலில் வாழும் மக்களின் தகவமைவையும், நிகழ்வுகளில் மக்கள் செய்யும் தியாகங்களையும் பதிவு செய்வதே என்று பத்திரிக்கை பேட்டி ஒன்றில் தெரிவிக்கிறார்.

தனது முதல் நாவலில் இருந்து தனக்கான மொழி, புதினத்திற்கான கட்டமைப்பு ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை உணர்வதாகவும், முதல் நாவலைக் காட்டிலும், இரண்டாவது நாவலில் பக்குவத்தன்மை அடைந்திருப்பதாக ஏற்றுக் கொள்ளும் கிரண், இந்த நாவலைப் படைக்க ஏழு ஆண்டுகள் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத் தகுந்த அம்சம். பெரும்பாலான படைப்பாளிகளைப் போன்றே தனக்கான பதிப்பாளருக்காக அலைவதில் பெரும் காலம் கழிந்திருக்கிறது.

கிரணின் தாயார் அனிதா தேசாயும் மூன்று முறை புக்கர் பரிசுக்கான இறுதிச் சுற்று வரை பரிந்துரைக்கப்பட்டு பரிசு பெறாதவர். தனது எழுத்துக்கள் தனது தாயாரின் தாக்கத்தால் படைக்கப்படுவதாகச் சொல்லும் கிரண்,பரிசு பெறும் தனது நாவலை தாயாருக்குச் சமர்ப்பிக்கிறார்.

1971 ஆம் ஆண்டு, டெல்லியில் பிறந்த கிரண் தேசாய், தனது பதினான்காம் வயதில் இங்கிலாந்திற்குச் சென்று பின்னர் அமெரிக்காவில் கல்வி பயின்றார். 1998 ஆம் ஆண்டிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் இவர், இதுவரை எழுதி இருப்பது இரண்டு நாவல்கள் மட்டுமே.

மிக இளைய வயதில் புக்கர் பரிசு பெறும் பெண் எழுத்தாளர் என்னும் சிறப்பினை அடையும், கிரணின் வயது 35. இதற்கு முன் இந்தச் சிறப்பினை தனதாக்கியிருந்த அருந்ததி ராய், 1997ஆம் ஆண்டில் தனது 36வது வயதில் "த காட் ஆ·ப் ஸ்மால் திங்ஸ் (The God of small things)" என்னும் புதினத்திற்கு பெற்றார்.

டேவிட் மிட்ஷெல், பீட்டர் கேரெ, பேரி அன்ஸ்வொர்த், சாரா வாட்டெர்ஸ் மற்றும் நாடினெ கார்டிமெர் ஆகிய ஐந்து எழுத்தாளர்களை, இறுதிச் சுற்றில் பின்தள்ளும் கிரண் தேசாயின் "கதை சொல்லும் முறைக்கும் வரலாற்று உண்மைக்காவும்" பரிசளிக்கப்படுவதாக நடுவர் குழு அறிவிக்கிறது.

தனக்கான வாசகர்கள் யார் என்னும் வினாவில், தான் தனக்காக மட்டுமே எழுதுவதாகவும், தனக்கான வாசர்கள் குறித்து கவலைப்படுவதில்லையென்றும் குறிப்பிடும் கிரண், தான் எழுதுவது தனக்கென்ற சுயநலம்தான் என்கிறார்.

சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய் வரிசையில் கிரண் தேசாயும் இந்திய எழுத்து, உலக அரங்கில் தனிக்கவனம் பெற புதிய கதவுகளை திறந்துவிடுவதற்கான முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

நன்றி: திண்ணை.காம்

Oct 18, 2006

ஷசி தாரூர்

ஐ.நா சபை பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட ஷசி தாரூர் நான்காம் கட்ட மாதிரி தேர்தலுடன் போட்டியிலிருந்து விலகி இருக்கிறார். இத் தேர்தலில் ஷசி அவர்கள் எட்டு வாக்குகள் ஆதரவாகவும், மூன்று வாக்குகள் எதிராகவும், நான்கு வாக்குகள் கருத்து அற்றதாகவும் பெற்றிருக்கிறார்.

ஐந்து நிரந்தர உறுப்பினர்களையும், பத்து தற்காலிக உறுப்பினர்களையும் கொண்ட ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் குறைந்த பட்சம் ஒன்பது வாக்குகளைப் பெற வேண்டும். வீட்டோ(நிரந்தர உறுப்பினர்) நாடுகளின் எதிர்ப்பினைப் பெறவும் கூடாது.

வெல்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பெற்றுவிட்ட தென்கொரியாவின் பான், பதினான்கு வாக்குகள் ஆதரவாகவும், ஒரு வாக்கு மட்டும் கருத்து அற்றதாகவும் பெற்றிருக்கிறார். அந்த ஒரு வாக்கு ஜப்பான் அளித்திருக்கும் எனக் கருதப்படுகிறது.

முதல் மூன்று மாதிரி வாக்குப்பதிவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரே நிறத்தில் வாக்குச் சீட்டு வழங்கப் பட்டிருந்தது. நான்காவது மற்றும் இறுதி வாக்குப் பதிவில் தற்காலிக உறுப்பினர்களுக்கு ஒரு நிறத்திலும், நிரந்தர உறுப்பினர்களுக்கு வேறொரு நிறத்திலும் வாக்குச் சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இத்தேர்தலில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய அம்சம் அமெரிக்கா, இந்தியாவிற்கு எதிராக வாக்களித்திருப்பதுதான். ஒருவேளை ஒன்பது வாக்குகளை ஷசி தாரூர் பெற்றிருந்தாலும் கூட, அமெரிக்கா தனக்கான வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இவரைத் தோல்வி அடையச் செய்திருக்கலாம்.

ஷசியின் இத்தோல்வி மிக வருந்தத் தக்கதாக இல்லையென்ற போதிலும், தோல்விக்கு பல காரணங்களைச் சுட்டிக்காட்ட இயலும்.

ஷசிதாரூக்கு அரசியல் ரீதியான பலம் மிகக் குறைவு. ஐ.நாவில் தகவல் தொழில்நுட்ப பிரிவொன்றில் உயர் பதவியில் இருந்திருக்கிறார். மாறாக பான், ஐ.நாவுக்கான கொரியாவின் தூதராக செயல்பட்டிருக்கிறார். தற்போதைய தென் கொரிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கிறார். மிகச் சிறந்த ராஜதந்திரி என்ற பிம்பமும் உலக நாடுகளிடையே அவருக்கு உண்டு.

பொருளாதார ரீதியாக இந்தியா தென் கொரியாவை விட பன்மடங்கு வலிமை வாய்ந்தது. ஐ.நா வில் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக வலிமையான, பெரிய நாடுகளுக்கு முக்கிய பொறுப்புகளைக் கொடுக்கத் தயக்கம் இருந்து வந்திருக்கிறது. எப்பொழுதும் சிறிய நாடுகளுக்கே முன்னுரிமை அளிக்கப் படுகிறது. இந்தியா அணு ஆயுத பலம் பெற்ற நாடு வேறு.

சீனாவிற்கும் சரி, அமெரிக்காவிற்கும் சரி. வட கொரியா பயங்கர தலைவலி கொடுக்கும் நாடு. வட கொரியாவிற்கு 'செக்' வைக்க தென் கொரியா அவர்களுக்கு நல்ல 'சாய்ஸ்'.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான காரணம் என வல்லுநர்கள் கருதுவது, இந்தியாவிற்கென வெளியுறவுத்துறை அமைச்சர் இல்லாதது. தனக்கான வாக்குகளைப் பெற வேட்பாளரே பிரயத்தனப் பட வேண்டியிருந்தது அல்லது வேறு வலிமையற்ற அதிகாரி எவராவது மற்ற நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தது மிகப் பெரிய பலவீனம். ஒரு வெளியுறவுத் துறை அமைச்சர் இருந்து, அவர் ஒரு மாதம் இதற்காக பணியாற்றியிருந்தால் நிலைமை மாறியிருந்திருக்கலாம்.

கடைசி வரை இரண்டாம் இடத்தைப் பிடித்து, மானத்தைக் காப்பாற்றியிருக்கிறார் என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்.

இப்பதவி சுழற்சி முறையில் ஒவ்வொரு கண்டத்திற்கும் மாறி மாறி வழங்கப் படுகிறது. அடுத்த முறை ஆசியாவிற்கு வரும் போது இந்தியா தனது வேட்பாளரை நிறுத்துமா என்று தெரியவில்லை. அப்படியே நிறுத்தும் போதும் மேற்சொன்ன பொருளாதார, அரசியல் நிலைகளில் இந்தியா பல படிகள் முன்னேறியிருக்கும். ஐ.நா பொதுச் செயலாளராக இந்தியர் ஒருவர் பதவி ஏற்பது இனி குதிரைக் கொம்பாகத் தான் இருக்கும்.

நன்றி: தமிழோவியம்.காம்

Oct 16, 2006

கொங்கு நாட்டுச் சொற்கள் - மூன்றாம் பாகம்

சொற்கள் ஊற்றினை போல சுரந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசிப்பதற்கான நேரமும் மனநிலையும்தான் வருவதில்லை. பின்னூட்டங்கள் வாயிலாகவும், தனி மின்னஞ்சல் மூலமாகவும் இப்பதிவினை குறிப்பிடும் நண்பர்களின் பங்களிப்பு தொடர்ந்து உற்சாகமூட்டுவதாக இருக்கின்றது.

இந்தச் சொற்களில் பெரும்பாலானவை என் ஆயாவிடமிருந்து நான் கற்றுக் கொண்டவை. நான் பார்த்த, பார்க்கப் போகும் மனிதர்களுல், ஆயாதான் இந்தச் சொற்களை இறுதியாக பயன்படுத்தியவரோ என்ற பதட்டமும் ஒட்டிக் கொள்கிறது. கிழவி தன்னோடு சேர்த்து புதைத்துக் கொண்டதோ என்ற சந்தேகமும் வருகிறது.

இன்னமும் என் மண்ணில் புழங்கிக் கொண்டுதான் இருக்கும் என்றாலும், எனக்கு இவற்றோடான அறிமுகம் அருகிக் கொண்டே வருவதும் இப்படி எண்ணக் காரணமாக இருக்கலாம்.

முத்து(தமிழினி) சில சொற்களைத் தந்து அடுத்த பட்டியலில் இணைத்துக் கொள் என்று சொன்னார். அவையும் இணைக்கப் பட்டிருக்கின்றன.

1. வங்கு - பொந்து, சந்து

2. கம்மனாட்டி - முட்டாள், மடையன்

3. உருமாளை - தலைப்பாகை

4. சிம்மாடு - தலைப்பாகை.
தலைப்பாகையில் இருந்து சற்று வேறுபட்டது. ஏதேனும் பொருளை தலையில் சுமக்கும்
போது நழுவி விடாமல் இருப்பதற்காக துணியைச் சுற்றி வைப்பது.

5. கருப்பு - கருமாதி(ஈமச்சடங்கு)

6. அவுசாரி - விபச்சாரி

7. கட்டுக்கொலை - தன் சாதியைச் சார்ந்த நிகழ்வுகளில் பங்கு பெறும் மற்ற சாதிகள்.
உதாரணமாக, கவுண்டர் இனத்தைச் சார்ந்தவர்கள் நாவிதர்கள், குயவர்கள்
போன்றவர்களை கட்டுக்கொலைக்காரர்கள் என்பார்கள்.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள்(சக்கிலியர், பறையர்) இந்தக் கட்டுக்
கொலைக்காரர்கள் என்ற சொல்லுக்குள் வரமாட்டார்கள்.

8. ஓரியாட்டம் -சண்டை
சொற்றொடர்: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.

9. மிஞ்சி - மெட்டி

10. பொல்லி - பொய்.

11. அக்கட்ட - அந்தப் பக்கம்.
அடுப்புக்கிட்ட நிக்காத. தீ மூஞ்சிலையே அடிக்குது. அக்கட்ட போடா.

12. இக்கட்ட - இந்தப் பக்கம்.
இந்த வேச காலத்துல அக்கட்ட இக்கட்ட நகர முடியல.

13. வேச காலம் - கோடை காலம்

14. ராவுடி - டார்ச்சர்
அந்தப் பையன் செம ராவுடி புடிச்சவன்.

15. ராங்கு - தவறாக நடத்தல்.
ஏண்டா போலீஸ்காரங்கிட்ட ராங்கு பண்ணுனா அப்பாம என்ன முத்தமா கொடுப்பான்?

16. அப்பு - அறை.
அவள ஓங்கி ஒரு அப்பு அப்புடா. மொகற கட்ட பேந்து போற மாதிரி.

17. மொகற கட்ட - முகம்

18. செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி

19. அக்கப்போரு - அட்டகாசம்
இந்த பிலாக் எழுதறவிய அக்கப்போரு தாங்க முடியலைடா. :)

20. பொடனி - தலையின் பின்புறம்

21. முசுவு - கவனமாக/ குறிக்கோளுடன்
குடுத்த வேலைய ஒரே முசுவுல செஞ்சு முடிச்சாதான் உங்கப்பனுக்கு தூக்கமே வரும்.

22. வல்லம் - மூன்று அல்லது நாலு படி அளப்பதற்கான அளவை. (கிட்டத்தட்ட 3.5
கிலோகிராம் வரும்)

23. அலும்பு - அலம்பல்.

24. அரமாலும் - ரொம்பவும்
அரமாலும் அலும்பு பண்ணுறாடா அவ.

25. திலுப்பாமாரி - மேனா மினுக்கி

26. அட்டாரி - பரண்.

27. புழுதண்ணி - இரவில் மீதியான சோற்றில் நீர் ஊற்றி வைப்பார்கள். விடிந்த பின் அந்த
நீர் புழுதண்ணி.

28. மக்காநாளு - அடுத்த நாள்

29. சீராட்டு - கோபம்.
கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகுல. அதுக்குள்ள புள்ள சீராடிட்டு வந்துடுச்சு.

30. அன்னாடும்- தினமும்

31. பால்டாயில் - பாலிடால் என்ற விவசாய பூச்சிக் கொல்லி.
யார் விஷம் குடித்தாலும் இதைத்தான் சொல்லுவார்கள்

32. ஒரு ஒலவு(உழவு) மல - ('ழ'கர உச்சரிப்பு இருக்காது)மழை பெய்யும் அளவை
குறிப்பது.
ஆட்டுக்கல் அல்லது உரலில் இருக்கும் குழி நிரம்பினால் ஒரு உழவிற்குத்
தேவையான அளவு மழை பெய்திருக்கிறது என்று அனுமானம் செய்து கொள்வார்கள்.

33.அகராதி புடிச்சவன் - விதண்டாவாதம்/குறும்பு பிடித்தவன்.

34. தாரை - பாதை
எறும்பு தாரை- எறும்பு ஊர்ந்த பாதை.

Oct 11, 2006

ஒருத்தியையும் கிஸ் கூட அடிச்சது இல்லை.

"முப்பது வயசு ஆகப் போகுது. இதுவரை ஒருத்திக்கும் கிஸ் கூட கொடுத்ததில்லை. வாழ்க்கையில் வெறுமை வந்துவிட்டது போல உணர்கிறேன்". இப்படி ஒருவர் புலம்பினால் உடனடி நிகழ்வு என்னவாக இருக்கும்? நண்பர் புலம்பியதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கவலைகளும், நிறைவேறும் தருவாயில் இருந்தாலும் கரங்களுக்கு அகப்படாத ஆழ்மன ஆசைகளும் சுவாரசியமானதாக இருக்கின்றன.

"ஒரு அழைப்பிதழைப் போன்று
எங்கும் பரவியுள்ளது வெறுமை" என்று படித்த ஞாபகம்.

காலச்சுவடு பதிப்பத்தின் "அதற்கு மேல் ஒன்றும் இல்லை" என்ற மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகை நூலில் இருந்தது. ரீட்டா டோன் என்ற கவிஞரின் வரிகள் இவை.

ஒவ்வொரு மனமும் ஏதோ ஒன்றினைத் தேடிக் கொண்டே இருப்பதும், அது கிடைக்கும் வரை வெறுமை விரவிக் கிடப்பதுமாக இருப்பதும் இயல்பான ஒன்றாகவே இருக்கிறது.

******************
நூலில் இருந்த சில கவிதைகள் ஏதேனும் ஒரு விதத்தில் என்னைப் பாதிப்பதாக இருந்தன. ஐந்து கவிதைகள் உங்களின் பார்வைக்கும்.

*****************
தோழி ஒருவர் சொன்னார். புதிதாக சென்னையில் வந்திருக்கும் பண்பலை வரிசையில் வரும் 'ரகசியமாய்' என்ற நிகழ்ச்சி குறித்து. அதில் ஒருவன் பேசுகிறான். அவனின் காதலிக்கு வேறு இடத்தில் நிச்சயமாகிவிடுகிறது. அரசியல் செல்வாக்கு மிக்க அவளது தந்தையை எதிர்த்து அவனால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அவர்களுக்கு இது பெரிய பாதிப்பில்லை. இருவரும் சேர்ந்து இப்பொழுது திரையரங்கில் இருக்கிறார்கள். நாளை இவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறான். அவளின் கணவனுக்கும், இவனின் மனைவிக்கும் தெரியாமல் இவர்கள் சேர்ந்து வாழப் போகிறார்கள்.

எத்தகைய பெரிய விஷயத்தையும், மிக எளிதாக மறைத்துவிடலாம் என்று துளிர்த்துக் கிடக்கும் மனிதனின் நம்பிக்கை ஆச்சரியமானது.
ஏதாவது ஒரு சிறிய வினா பெரும் சிக்கலின் முடிச்சை அவிழ்த்துவிடக் கூடும் என்பது பற்றிய பிரக்ஞை இல்லாமல் ஒவ்வொரு கணமும், எதிர்ப்படும் ஒவ்வொருவரையும் ஏமாற்றிவிடலாம் என நம்பித் திரிகிறான்.

மீன்

குழந்தை
என்னிடம் கேட்டது:

மீன் உடம்புக்குள்
ஈரமாக இருக்குமா?

இல்லை
என்றேன் நான்.

அப்படியென்றால்
வேறு எப்படி இருக்கும்?

சிவப்பாகவும் இளஞ்சிவப்பாயும்
காலை நேரத்துக் கல்லறை போலக்
குளிர்ச்சியாகவும் இருக்கும் என்றேன்.

குழந்தை
மறுபடியும் கேட்டது:

உனக்கு எப்படித் தெரியும்
அது இறந்து போனாலன்றி.


மூலம் : பிரெய்ன் டர்னர்
தமிழில்: எஸ்.பாபு

****************
காரின் கண்ணாடி

பின்புறம் காட்டும் கார்க் கண்ணாடியில்
சட்டென்று ப்யுவாயி தேவாலயத்தின் பெரும்பகுதியைக் கண்டேன்
பெரிய பொருள்கள் சிறியவற்றில் குடியிருக்கின்றன
ஒரு நொடிப் பொழுதேனும்


மூலம்: ஆடம் ஜாகாஜேவ்ஸ்கி (போலிஷ்)
தமிழில்: பசுவய்யா.


இக்கவிதையின் அழகியலும், புதைந்திருக்கும் பேருண்மையும் சட்டென கவனத்தைக் கோருவதாக இருக்கிறது.

*************
தப்பித்தல் ஒரு கலை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாக நிலைமை எப்படி இருந்திருக்கும் எனத் தெரியவில்லை. இன்றைய சூழலில் Escapsism என்பது தவறே இல்லை. தொடர்ச்சியாக பொறுப்புகளும் சுமைகளும் அடுத்தவனின் தலை/தோள் மீது கடத்தப் படல் வேண்டும். நாளை பிரச்சினை என்று வந்தால் விரலினை அவனை நோக்கி நீட்டிக் கொள்ளலாம். பாராட்டெனில் உடன் நின்று சிரித்துக் கொள்ளலாம். பொறுப்பை சிறிது கணம் தானும் சுமந்திருக்கிறேன் என்ற அடிப்படையில்.

புதிய மனைவி

மூன்றாம் நாள் அவள் சமையலறையில் புகுந்தாள்
தன் கைகளைக் கழுவிக் கொண்டாள்.
கஞ்சி தயாரித்தாள்
தன் மாமியாரின் ருசி பற்றி ஏதும் அறியாத நிலையில்
நாத்தியிடம் ருசி பார்க்கச் சொன்னாள்.


மூலம்: வாங் சியன்
தமிழில்: வெ. ஸ்ரீராம்.


இக்கவிதைக்கு மேற்சொன்ன விளக்கம் மட்டுமே விளக்கம் அன்று. இக்கவிதை தப்பித்தலை மட்டும் பேசவில்லை. என் பார்வையில் தப்பித்தல் என்பது இக்கவிதையின் கருவாக, பூதாகரமாகத் தெரிகிறது. அவ்வளவே.

****************
நகரவாசி

நகரவாசி நான்
வினோதமான விதத்தில்
இயற்கையைத் தொலைத்தேன்

மனிதர்களுடனேயே
சாலையோர மரங்களும்
பஸ் ஏறக் காத்திருப்பது போன்ற ஒரு சாலை
அப்படி ஒரு மரத்தின் பின்னால்
நானும் கடைசியாக

பஸ் வந்த போது
அறிவாளி நான்
அந்த மரம் ஏறிக் கொண்ட பிறகு
ஏறிக் கொள்ளலாம் என
நின்று கொண்டிருந்தேன்
அப்போதுதான் எனக்குத் தெரிந்தது
மரம் பஸ்ஸில் ஏறாது என.

மரத்தைப் பின்னால் விட்டு விட்டு
பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொள்கிறேன்.

நகரவாசி நான்
இப்படித்தான் இயற்கையிலிருந்து பிரிந்து போகிறேன்.

பஸ்ஸில் அமர்ந்திருக்கும் எனக்கு
சாலையின் இருபுறமும்
வழிநெடுக
மரங்கள் வேண்டும் என்ற ஆசை.

என் அறையில்
மாட்டி வைத்திருக்கிறேன் நான்
அடர்ந்த காடு ஒன்றின் சித்திரத்தை.


மூலம்: வினோத் குமார் சுக்லா
தமிழில்: ராதிகா ராணி.****************
கவிதைகள் பற்றிப் பேசத் 'தகுதி' இருக்க வேண்டும் என்பது என் கருத்து. அந்தத் தகுதி எனக்கு இருப்பதாக அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

இந்தக் கவிதையை நான் எழுதியது போலவே உணர்வதால், கவிதை பற்றிப் பேச எனக்கும் தகுதியிருக்கிறது.

என் கவிதைகளை கவிதைகள்
என்று யார் சொன்னது?
என் கவிதைகள் கவிதைகள்
அல்ல.
என் கவிதைகள்
கவிதைகள் அல்ல
என்று தெரிந்துவிட்டதனால்
நாம் இருவரும் சேர்ந்து
பேசத் தொடங்கலாம்

கவிதைகள் பற்றி.


மூலம்: ரியோக்கன்
தமிழில்: யுவன் சந்திரசேகர்.


******************

நானும்தான் அப்படியே இருக்கிறேன் என நண்பருக்கு ஆறுதல் சொன்னேன். சரி வாருங்கள். நாம் இருவரும் கவிதை பற்றி பேசத் தொடங்கலாம்.

Oct 9, 2006

கொங்கு தேசத்துச் சொலவடைகள்

இவற்றைப் பழமொழிகள் என்னும் வட்டத்துக்குள் கொண்டுவர முடியும் என நான் நினைக்கவில்லை. இச்சொலவடைகள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு நாட்டுப்புறக் கதையின் எச்சமாக தொக்கி நிற்கின்றன. முதலில் கதைகள் அழிந்துவிட மிச்சமான வாக்கியங்கள் மட்டுமே 'பட்டிக் காட்டு' ஆட்களோடு புழங்கித் திரிகின்றன.


1. அறுக்கமாட்டாதவன் இடுப்பைச் சுத்தி அம்பதெட்டு அருவாளு.

2. பழைய குருடி கதவத் தெறடின்னு.
தவறாக நடந்து மாற்றி நன்றாக செய்துவிட்டு, மீண்டும் தவறாக்கும் போது "பழைய குருடி
கதவத் தெறடிங்குற கதை ஆயிருச்சு"என்று சொல்வார்கள்.

3. மொசப் புடிக்கிற நாய் மூஞ்சிய பார்த்தா தெரியாதா?

4. நான் புடிச்ச மொசலுக்கு மூணு காலுங்காத.

5. நாய்க்கு பேரு முத்துமாலை.
பொருத்தமில்லாத ஒன்று என்றால் எள்ளலாக "நாய்க்கு பேரு முத்துமாலையாமா"
என்பார்கள்.

6. செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி

7. ஆனதுக்கு சொன்னா அறிவுண்டு நெனவுண்டு. ஆகாவழிக்குச் சொன்னா இல்லிடத்தையும்
தோத்துட்டுப் போக வேண்டியதுதான்.
அறிவுரை கூட உருப்பட வாய்ப்பிருப்பவனுக்குத்தான் கொடுக்க வேண்டும்.

8. ஆடமாட்டாதவன் நெலம் கோணைன்னு சொன்ன கணக்கா இருக்குது.
கோணை - கோணல்

9. நாயக் குளிப்பாட்டி நடுவூட்டுல வெச்சாலும் நாக்கத் தொங்கக் போட்டுட்டு
இட்டாரிக்குத்தான் போகும்.

10. கெழவன் கோமணம் கட்டுன மாதிரி

11. அழுதழுது பெத்தாலும் அவதான் பெக்கோணும்.
பெக்கோணும் - குழந்தை பெறுதல்.

12. பொழப்பு கெட்ட நாசுவன் பொண்டாட்டி தலைய செரச்சானாம்.

13. பொழக்கிற புள்ளைய பேல உட்டு பார்த்தா தெரியாதா?

14. எல்லோரும் சிரிச்சாங்கன்னு பூனை பொடக்காலில போயி சிரிச்சுதாம்.

15. மொளச்சு மூணு எலை உடுல.
வயதில் சின்னவர்கள் ஏதேனும் பிடிக்காத காரியத்தைச் செய்யும் போது உபயோகிப்பது.

16. எங்கயோ போற மாரியாத்தா எம் மேல வந்து ஏறாத்தாங்குற கதையா

17. நட்டாத்துக்கு போனாலும் நாய்க்குச் சலக்குத் தண்ணிதான்.
நடு ஆற்றுக்குச் சென்றாலும் நாய் 'சலக் சலக்' என்று நக்கித்தான் குடிக்கும்.
என்னதான் புகழ், பணம் கிடைத்தாலும் அவனவன் அவனவன் தகுதிக்கு ஏற்பதான்
நடப்பார்கள்.

18. புது வட்டலக் கண்டா நாய் எட்டு வட்டல் தண்ணி குடிக்குமாம்.
வட்டல் - தட்டம்.

Oct 4, 2006

ஐ+ட்+ட+ம் = ஐட்டம்

கண்ணன் சின்னப்பையன். ரொம்ப சின்னப்பையன் என்று முழுமையாக ஒதுக்கி விட முடியாது. விடலை. அங்கு கறுப்பு சட்டை போட்டுக் கொண்டு, சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரத்துல இருக்கான் பாருங்க அவன்தான். பள்ளி வரைக்கும் என் கூடத்தான் படித்தான். பள்ளி முடிந்தவுடன் வேறு வேறு கல்லூரிக்கு மாறிவிட்டோம். அவன் ஈரோடுக்கு அருகில் ஒரு கல்லூரி நான் சேலத்தில் ஒரு கல்லூரி. இருவரும் அடிக்கடி பார்ப்பது குறைந்திருந்தது. என்றபோதும் அவ்வப்போது என்னைப் பார்ப்பதற்காக சேலம் வருவான்.

கண்ணன் பயங்கர சுறுசுறுப்பு. கில்லி ஆட்டம் போதும், அவன் சுறுசுறுப்பை நிரூபிக்க. கில்லி விளையாடும் போது சின்னக் குச்சியை மேலே தூக்கி அடிக்க வேண்டும். எத்தனை அடி வேண்டுமானாலும் அடிக்கலாம். முதல் அடியிலேயே சின்னக் குச்சி விழுந்துவிட்டால் விழுந்த இடத்திலிருந்து குழி வரைக்கும் பெரிய குச்சியில் அளக்க வேண்டும். அத்தனை புள்ளிகள் கிடைக்கும். இரண்டு அடி என்றால் சின்னக் குச்சியில் அளக்கலாம். இப்படியே அடியின் எண்ணிக்கை அதிகமாகும் போது பின்னூசி, குண்டூசி, நெல்மணி, எள், மணல் என்று போகும். மற்றவர்கள், அதிக பட்சமாக இரண்டு அடி அடித்து, சின்னக் குச்சியில் பத்து அல்லது அம்பது புள்ளிகள் எடுத்தால், கண்ணன் மணலில் அளக்கும் அளவிற்கு அடித்து லட்சம், கோடி என்று புள்ளிகள் எடுப்பான்.

பள்ளியில் படிக்கும் போது புளூபிலிம் பற்றி அவன் பேசியது ஞாபகம் இருக்கிறது. புளூபிலிம் எல்லாம் பார்த்தா எந்தப் பொண்ணும் அசிங்கமா தெரிவாங்களாடாம் என்று சொன்னான். அதனால் கல்யாணம் வரைக்கும் தான் புளூபிலிம் பார்க்கப் போவதில்லை என்று சொன்னான். அப்படிச் சொன்னவன் இந்தக் கதையைச் சொன்ன போதுதான் நம்ப முடியவில்லை. கதை கேட்கும் உங்களுக்கும் கூட சந்தேகம் வரலாம்.

பி.இ முதல் வருட இறுதித்தேர்வில், கணிதத்திற்கு மட்டும் ஏழு நாட்கள் விடுமுறை. மற்றவர்கள் எல்லாம் விழுந்தடித்துப் படிக்க, 'சூரப்புலி' கண்ணன் மட்டும் சேலத்திற்கு கிளம்பியிருக்கிறான். அங்கு இருந்தால் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டாவது இருக்கலாம். ஆனால் ஏதோ படம் ஒன்று ரிலீஸ் ஆகப் போகிறது என்பதால் சேலத்தில் பார்த்துவிடலாம் என்று கிளம்பி இருக்கிறான்.

சேலம் புது பஸ்ஸ்டாண்டில் இறங்கி ஈரோடு பஸ் நிற்கும் இடத்திற்கு அருகில் அவளைப் பார்த்திருக்கிறான். சின்ன வயசுதானாம். புடவை கட்டி, நிறைய மல்லிகைப்பூவும், பவுடரும், சென்ட்டும் அடித்திருந்த அவள், இவனைப்பார்த்து சிரித்து வைக்க, நம் கதாநாயனுக்கு சில்லிட்டிருக்கிறது. அங்கேயே நின்று கமுக்கமாக பார்ந்திருக்கிறான். மறுபடியும் அவள் சிரித்த போது என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியவில்லை. கண் அசைவில் அங்கு வா என்று சொல்லி அவள் நகர்ந்தபோது ஏதோ ஒரு பரவசம் ஒட்டியிருக்கிறது.

மெதுவாக பதுங்கியபடி அவள் இருக்கும் இடத்திற்கு நகர்ந்த போது, சதிகாரனாக ஒரு ஆஜானுபாகுவான மனுஷன் இருவருக்கும் இடையே புகுந்திருக்கிறான். பயம் வந்தாலும் சமாளித்தபடி நின்ற போதுதான் தெரிந்திருக்கிறது, அவனும் 'அதற்கு'தான் வந்திருக்கிறான் என.
அவனிடம் ஐநூறு ரூபாய் என்றாளாம். கொஞ்ச நேர பேரத்திற்கு பின் 'ரேட்' படியாத காரணத்தால் அவன் கிளம்பிவிட்டான். பிறகு கண்ணனிடம் முந்நூறு ரூபாய் என்றிருக்கிறாள். இவனிடம் பணம் இருந்தாலும் கூட தன் பேரம் பேசும் திறமையைக் காட்ட
நூற்றிருபதுதான் இருக்கிறது என்று சொல்ல, யோசித்து அவளும் சரி என்று சொல்லிவிட, உற்சாக வெள்ளத்தில் பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டான்.

இருவரும் பழைய பஸ்ஸ்டாண்ட் போகும் பேருந்தில் ஏறி அண்ணா பூங்காவிற்கு டிக்கட் எடுக்கும் போது "அங்கே எதற்கு?"என்று திருவளத்தான் மாதிரி கேட்டிருக்கிறான். அங்குதான் அவள் வீடு இருக்கிறது என்று அவள் சொன்னால்தானே தெரியும்?.

பஸ்ஸில் போகும் தன் தொடை மீது வைத்துக் கொள்ளும்படி அவன் கைகளை எடுத்து வைத்தாளாம். இவன் "நல்லா இருக்கு" என்று செமத்தியாக வழிந்திருக்கிறான். ஆஜானுபாகுவான ஆள் என்றால் சமாளிப்பது சிரமம் அதனால்தான் அவனை துரத்திவிட்டேன். நீ ரொம்ப அழகு என்று உசுப்பேற்றியிருக்கிறாள். பஸ்ஸில் இருக்கும் எல்லோரும் இவர்களை மட்டுமே பார்ப்பது போல இருந்திருக்கிறது. இவனுக்கு உண்மையா, பிரம்மையா என்று தெரியவில்லை. ஆனால் கனவுகளும், கற்பனைகளும் கும்மாளியாக ஆடியிருக்கின்றன.

அண்ணா பூங்காவில் இறங்கியவுடன் வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், பூங்காவுக்கு நுழைவுச்சீட்டு வாங்கி இருக்கிறாள். அப்பொழுதும் "அங்கே எதற்கு?" என்று கண்ணன் கேட்டதற்கு, அங்கே ஒரு மூலையில் இடம் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறாள். ஏதோ தன் கனவு கோட்டையில் தூர் விழுகிறது என அர்த்தமாகியிருக்கிறது.

"கண்டத எல்லாம் கற்பன பண்ணிக்காத. நீ கொடுத்த நூத்தி இருபது ரூபாய்க்கு ஒரு மணி நேரம் உன் கூட இருப்பேன். எங்க வேணும்னாலும் கைய வெச்சுக்க. அவ்வளோதான். என்ன புரியுதா? இங்க உட்காரலாமா?" என்று அவள் சொன்ன போதும் பூங்காவில் இருந்தவர்கள் இவர்களையே பார்த்திருக்கிறார்கள்.

கண்ணன் சொல்லி இருக்கிறான். "அக்கா...(ஆமாம் அக்காதான்!) வீட்டுக்கு போவணும் டைம் ஆச்சுக்கா"

சிரித்துக்கொண்டு சொன்னாளாம். "கட்டுலுக்குன்னா வருவீங்கடா...இங்க உட்காரலாம்முன்னா வரமாட்டயா?"

கண்ணன் அழுவது போல பாசாங்கு செய்து "அக்கா...வேண்டாம். எனக்கு பயமா இருக்கு...நான் கிளம்புறேன். என் காச கொடுத்துடுங்க" என்று சொல்ல,

"இத பாரு. கெளம்புறதுன்னா கெளம்பு. காசு எல்லாம் தரமுடியாது. மறுவடியும் அக்கான்னு சொன்னா செவுள பேத்துடுவேன்" என்றவுடன் ஆட்டம் கண்டிருக்கிறான்.

அவளே சொன்னாளாம் "என்னைய கைய புடிச்சு இழுத்தான்னு சத்தம் போட்டுடுவேன்" என்று.

ஏதோ தைரியத்தில் இவனும் தத்தக்காபித்தக்காவாக "நானும் போலீஸ்கிட்ட போயி சொல்லுறேன். என்ன கூட்டிட்டு வந்து மிரட்டுறான்னு" என்று சொல்லி இருக்கிறான். அவளுக்கும் தூக்கிவாரிப் போட்டிருக்க வேண்டும்.

ஜாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்து வெளியே எடுத்து கீழே எறிந்து "எடுத்துக்க" என்று சொல்லி இருக்கிறாள்.

வியர்வைக் கசகசப்பான பர்ஸைத் தொடும் போது அடுத்த அஸ்திரம் வந்திருக்கிறது. "இங்க பூரா எங்க ஆளுங்க இருக்காங்க. பணத்த எடுத்துட்டு இந்த பார்க்க தாண்டுறதுக்குள்ள செத்தடா மவனே".

திண்றி போய் விட்டான். வழியே இல்லை. கெஞ்ச வேண்டியதுதான். ஏதோ அக்கா, அத்தை என்றெல்லாம் கெஞ்சி, முகத்தை பரிதாபமாக, சோகமாக, அஷ்ட கோணலாக என்றெல்லாம் செய்து, அவளை ஒரு வழிக்கு கொண்டு வந்திருக்கிறான்.

"ஊருக்கு போக எவ்வளவுடா காசு?"

"அம்பது ரூவா".

எடுத்துக் கொடுத்துவிட்டு சொன்னாளாம். "சாகற வரைக்கும் எவகிட்டவாவது போலாம்ன்னு போயி அவ உசுற வாங்காத. த்த்த்தூ...மூஞ்சில முழிக்காத... போடா"

"தேங்க்ஸ் கா".

ஊருக்கு போக முப்பது ரூபாய்தான். எப்படியோ ஐம்பது ரூபாய் வாங்கியாச்சுன்னு சந்தோஷம் கண்ணனுக்கு. கூடுதலாக கிடைத்த இருபது ரூபாயும், இன்னும் தான் நல்லவன் என்ற நினைப்பும் இழந்த எழுபது ரூபாயை மறைத்திருக்கலாம்.

**************************
vaamanikandan@gmail.com

Oct 3, 2006

கொங்கு வட்டார வழக்கு - II

கடந்த பதிவில், கொங்கு வட்டார வழக்கில் உள்ள சில சொற்களைப் பதிவு செய்தால், அதைப் போல இரண்டு மடங்கு சொற்களை நண்பர்கள் கொடுத்தார்கள். உற்சாகத்தில் மேலும் யோசிக்க ஆரம்பித்தால் என் ஊரை விட்டு வெளிவந்த இந்த ஆறு வருடத்தில் பல சொற்கள் என்னை விட்டு வெளியே சென்றிருக்கின்றன. சில சொற்களின் உபயோகம் மிகக் குறைந்திருக்கிறது.

நாகரீகம் என்று கருதி என் முன்னோர் கொடுத்தவற்றை அழித்து வந்திருக்கிறேன். இன்னமும் என் நினைவில் இருக்கும் மிச்ச மீதி சொற்களை எல்லாம் ஏதாவதொரு இடத்தில் பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.

நண்பர் ஒருவரிடம் சொன்னதற்கு, கொங்கு வட்டார சொற்களை மதுரை, சென்னையை சார்ந்தவர்கள் படித்தால் என்ன வரப்போகிறது என்றார். அவரின் இந்த வினாவுக்கு என்னிடம் சரியான பதிலில்லை. இந்த கேள்வி என் வேகத்தை குறைக்கிறதோ என்று தோன்றுகிறது.

செய்வதைச் செய்யலாம்.

1.மோனக்காரர் - விவசாயத்தொழிலுக்கு கூலி ஆட்களை அழைத்து வருபவர். கிட்டத்தட்ட மேஸ்திரி போல்.

2. பண்ணையத்தாளு - ஒரு வருடத்திற்கு இவ்வளவு பணம் என்று பேசி முடிவு செய்திருப்பார்கள். அந்த ஆள் அந்த வருடம் முழுவதும் அந்த விவசாயியிடம் பணியாற்ற வேண்டும். எனக்குத் தெரிந்தே பத்து வருடங்களுக்கு முன்பு வரை கூட ஒரு விவசாயியிடம் ஒரு ஆள் தன் வாழ்வின் கடைசிக் கட்டம் வரை இருப்பார். இப்பொழுது இது மிக அரிதாகிக் கொண்டிருக்கிறது.

3. முறைமைக்காரன் - முறைக்கு சொந்தக் காரன்
உதாரணமாக், மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜையின் போது கிடாவெட்டும் உரிமை ஒருவருக்கு கொடுக்கப்பட்டால் அவர் அந்த நிகழ்வின் முறைமைக்காரர்.

4. தண்ணிவாக்கி - வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுபவர். வயல்களின் உரிமையாளர்கள் கூடி, நீர் பாய்ச்சவென ஒருவரை நியமித்திருப்பர். அவர்தான் சரிசமமாக, கவனமாக தண்ணீர் பாய்ச்சுவார். ஒவ்வொரு போகமும் முடிந்த பின் குறிப்பிட்ட பொதி நெல் வாங்கிக் கொள்வார்.

5. பொதி - மூன்று அல்லது நான்கு மூட்டை நெல் ஒரு பொதி எனப்படும்.

6. கருக்காய் - குறையுள்ள நெல்மணிகள்.

7. கொறத்திக் குஞ்சு - இளம் தவளை. (தலைப்பிரட்டை)
நீர் நிலைகளில் கிட்டத்தட்ட மீன் குஞ்சு போல் இருக்கும். எளிதில் சிக்கிவிடுமாகையால் சிறுவர்கள் இதனைப்பிடித்து வைத்து மீன் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

8. ஒறட்டாங்கை - இடது கை. வலது கையை, சோத்தாங்கை என்பார்கள்.

9. ரோட்டா - நீர்க் குடுவை (டம்ளர்) (Lota என்னும் ஆங்கிலச் சொல்)

10. அங்கராக்கு - சட்டை

11. பாப்பராண்டி - அரணை. (ஊர்வன வகையினைச் சார்ந்தது.)

12. செம்பூத்து - செண்பகப் பறவை

13. கழுமுண்டராயன் -ஆஜானுபாகுவான மனிதன்.
அவனுக்கென்ன கழுமுண்டராயன் மாதிரி இருக்கறான் என்று சொல்வது வழக்கு.

14. புறடை - புரூடா (பொய்)
அங்க போறான் பாரு. அந்த ஆளு செரியான புறட மன்னண்டா.

15. தெல்லவாரி, தேசாபோகம் - ஊதாரித்தனமானவன்.
சொற்றொடர்: இவுனுக்கு தெல்லவாரி, தேசாபோகத்துக் கூடதான் சாவுகாசமே.

16. சாவுகாசம் - சகவாசம்

17. ரவைக்கு - இரவுக்கு
சொற்றொடர்: ரவைக்கு சித்தப்பன காவலுக்கு போவச் சொல்லு.

18. போத்தாலை - புகையிலை.

19. கொழுந்தனார் - கணவனின் தம்பி

20. கொழுந்தியா - மனைவியின் தங்கை

21. நங்கையா - மனைவியின் அக்கா.

22. பொன்னாம்பூச்சி - பொன்வண்டு

23. தொருசு - ஊதாரியாக, பொறுப்பற்று சுற்றுதலைக் குறிக்கும் (ஆண்பால், பெண்பால் வேறுபாடற்றது).
நான் "கடைக்கு போயிட்டு வர்றேன்" என்று சொன்னால், என் அம்மா நக்கலாக, "செருப்புத் தொட்டுட்டு தொருசு கிளம்பிடுச்சு பாரு" என்பார்கள்.

24. தொண்டு - கொங்குப் பகுதியில் குறிப்பாக கோபி வட்டாரத்தில் தொண்டு என்றால், பல பேருடன் தகாத உறவு கொண்டிருப்பதைக் குறிக்கும். (ஆண்பால், பெண்பால் வேறுபாடற்றது)

25. மொளைக்க போடுதல் - முளைக்கப் போடுதல். தொலைத்து விடுதல் என்னும் பொருளில் எடுத்தாளப்படும்.
சொற்றொடர்: அவன்கிட்ட போயி கொடுத்த பாரு. அவன் மொளைக்க போட்டுறுவான்னு உனக்குத் தெரியாதா?

26. கொட்டை போட்டுட்டாரு - இறந்து விட்டார்.
அந்த மனுஷன் எப்பவோ கொட்டை போட்டுட்டாரு.

27. நலங்கு - உடல்நலமற்றுப் போதல்.(குழந்தைகளுக்கு மட்டுமே இச்சொல்லை உபயோகப்படுத்துவார்கள்)
குழந்தை நலங்கி போச்சு

28. கதக்கு - குழந்தை வாந்தி எடுத்தல்
குழந்தை கதக்கி வெச்சுடுச்சு.

29. மோடம், கருக்கல் - மேகம்

30. கும்மாயம் - சமையலறையில் உபயோகப்படுத்தும் கருவி (மத்து)

31. சடஞ்சு - சோர்வடைந்து
மனுஷன் சடஞ்சு போயி வந்தா நச்சாம இருக்க மாட்டயா?

32. நேக்கு - கவனமாக,சரியாக
நேக்கு பாத்து ஒரே போடா போட்டேன். வக்காரோலுது ரெண்டா போயிடுச்சு

33. எச்சா - அதிகமாக
சோறு கொஞ்சமா போனா கூட போச்சாது. பையனுக்கு கறி எச்சா வை.

34. நேசர் பாரு - உளவு, உண்மை நிலை
எதுக்கால ஊட்ல(எதிர் வீடு) போயி சண்டையான்னு நேசர் பாத்துட்டு வா. போ

35. பூலவாக்கு -உண்மை நிலை.
டேய் சும்மா பேசாத. கடன் வாங்கீட்டு போனா எப்படித் தருவ? உன்ற பூல வாக்கு எனக்கு தெரியாதா?

36. பண்டம் பாடி - கால்நடைகள்

37. பீத்து - பெருமை
அவ பையன் பத்தாவதுல நெறயா மார்க்கு வாங்கி தள்ளிட்டானாம். பீத்து பீத்துன்னு பீத்தறாப்பா.

38. பீத்தை - பழைய
அந்த வண்டியவா வாங்குற? அது பீத்த வண்டி டா.

38. சீக்கு- நோய்

39. பிலுக்கு - பந்தா.
அவிய அமத்தா பப்ஸ் வாங்கிட்டு வந்திருக்குதாம். ஒரே பிலுக்கு அவளுக்கு.

40. கொக்காணி - தனக்கு மட்டும் ஒரு பொருள் கிடைக்குமிடத்து கிடைக்காதவரைப் பார்த்து பழிப்பாக செய்யப்படும் செய்கை.

41. பொறந்தவன்/ பொறந்தவள் - சகோதரன்/சகோதரி
என்ன சுப்பாயா...பொறந்தவனூட்டுக்கு கெளம்பீட்டாப்ல இருக்குது?

42. தொண்டுபட்டி - கால்நடைகளை கட்டி வைக்கும் இடம்.