Aug 27, 2006

ஏங்க..இங்க கொஞ்சம் வந்துட்டு போறீங்களா?

ஏங்க..இங்க கொஞ்சம் வந்துட்டு போறீங்களா?

இல்லாமல் இருக்கும் ஆண்டவா! இந்தப் பதிவு அரசியல் கூட்ட நன்றியுரை போல் மாறாமல் இருக்க அருள்புரிவாய் தோழா!!!

வள்ளுவர் சொன்னார், எனச் சொல்லி

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு


எனக் குறளை எழுதினால், இவன் என்னடா "ரொம்ப பேசுறான்" என நினைப்பதற்கு வாய்ப்பு அதிகம். எனவே நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன். எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

குத்துமதிப்பாக எல்லோருக்கும் சொன்னால் நன்றாக இருக்காது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொன்னாலும் ஆகாது. பின்னர் யாருக்குத் தான் நன்றி சொல்வது என்று குறிப்பாகத் தெரியவில்லை.

************************
தமிழ்மணத்தில் இருந்து அறிவிப்பு வந்தவுடனே நிறைய "குஜால்" பதிவுகளைப் போடவேண்டும் என முடிவு செய்தேன். சிலவற்றைத் தயார் செய்தும் வைத்தேன். முன்னோட்டமாக நடிகைகள் படத்தைப் போட்டதற்கு நான் மதிக்கும் சிலரிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. எனக்கென இருக்கும் பாதை இதுவல்ல என முடிவு செய்து கொண்டேன்.

எனக்கு பொறுப்பு வந்து விட்டதா? (மறுபடியும்.....அடக் கடவுளே!)
**************************
எனது பதிவுகளை கவனித்து "நட்சத்திரமாக"த் தேர்ந்தெடுத்த மதி கந்தசாமி மற்றும் அவரின் குழுவிற்கும், தமிழ்மணத்திற்கும் நன்றிகள்.
************************

ஏன் என்று தெரியவில்லை வெள்ளிக்கிழமை காலையிலிருந்து ஒரு சோம்பல் வந்துவிட்டது. பின்னூட்டம் எண்ணிக்கை குறைந்ததால் இருக்கலாமா?(போச்சுடா மணி...நீயும் அலையுற குழு மெம்பரா? .சரி உன் ரேஞ்ச்சுக்கு எல்லாம் மனசுல இப்படி எல்லாம் ஆசை இருக்கத்தான் செய்யும். இது நல்லதுக்கு இல்லை. சீக்கிரம்் மாறிடு). இப்போதைக்கு வேண்டுமானால் இப்படி மேல்பூச்சு பூசலாம். "முதல் நான்கு நாட்களில் சொல்ல வேண்டியவற்றை சொல்லி விட்டேன்". (பிளீஸ் நம்பிடுங்க!!!)
*************************

நான் எழுதிய பதிவுகளில் கவிதை பற்றிய பதிவு மட்டும் கூடுதல் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. யாருக்காக எழுதுகிறேன் என்றார்கள்? யாருக்காகவும் இல்லை. எனக்கே எனக்காக. அப்புறம் எதற்கு வலைப்பதிவு? "டைரியில் எழுது" என்றார்கள். என் டைரி பொதுச் சொத்து யார் வேண்டுமானாலும் படிக்கலாம். (மணி....அடி பின்னுறடா...என்ன பண்ண? நானே சொல்லிக்க வேண்டியதுதான்)
************************

பின்னூட்டமிட்டும், மின்னஞ்சலிட்டும் ஊக்கமளித்த நண்பர்களுக்கும் நன்றிகள். சவூதியிலிருந்து மெனக்கெட்டு என்னை அலைபேசியில் அழைத்து பாராட்டுக்களும், கருத்துக்களும் சொன்ன நண்பர் முபாரக் அவர்களுக்கும் நன்றி.

பின்னூட்டம் அளவுக்கு மீறி வந்தால் இவனுக்கு தலைக்கனம் வந்துவிடலாம் என்று கருதியோ, இதுக்கு/இவனுக்கு எல்லாம் மெனக்கெட்டு எவன் பின்னூட்டமிடுவான் என நினைத்தோ 'எஸ்கேப்' ஆன நண்பர்களுக்கும் நன்றி. (ஆமாங்க! என்னை எல்லாம் கையிலேயே பிடிக்க முடியாது). சில பேர் அவர்களை டாஸ்டோயோவ்ஸ்கி ரேஞ்சில் நினைத்து பண்ணும் அலம்பல் பார்த்து சிரித்தாலும் நான் எங்கேயாவது பண்ணித் தொலைத்துவிடுவேனோ என்ற பயம் ஆட்டிப் படைக்கிறது.

ஒரு சீன் போட்டுக்கட்டுமா?:
டாஸ்டாயோவ்ஸ்கியின் முதல் நாவல் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை பெற்ற போது, 1846-பிப்ரவரி முதல் தேதியில் தனது சகோதரனுக்கு முதிர்ச்சியற்று எழுதினாராம். "எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது என". (ஹலோ....ஸ்டாப்...ஸ்டாப்)

இது ஒரு சும்மா உதாரணம்தான். நான் கூட அப்படி அட்டகாசம் பண்ணக் கூடும் இல்லையா?.நானும் முதிர்ச்சியற்ற சின்னப் பையன்தானே.

கூடிய விரைவில் என் தலை வழுக்கை ஆகிவிடலாம். அதற்குள் எத்தனை முறை உபயோகப் படுத்த இயலுமோ அத்தனை முறை "சின்னப் பையன்" என்பதனை உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும்.
***************************

அவன் மலைமீது அமர்ந்திருந்தான்
ஒரேயொரு கணம்
அவன் தோளுக்கு வலிக்காமல்
ஒரு பறவையின் நிழல்
சற்றே
அமர்ந்து கடந்து விட்டது.


இந்த ராணிதிலக் கவிதை போல் இந்த வாரம் "வந்து- சென்று"விட்டது. பெரிதாக எந்த பாதிப்போ அல்லது அதிர்வோ இன்றி. அதுதான் நானும் எதிர்பார்த்தது. சமுதாயக் கழிவுகளை என் பேனா முனையில்(சாரி..கீ போர்டு தட்டலில்) எரித்து விடுவா முடியும்?
***************************

இனிமேல் எப்பவுமே முதல் பக்கத்தில் இருக்க முடியாது.(அந்த போட்டோவை கொஞ்சம் பாருங்களேன்! ச்சும்மா 'போஸ்' எல்லாம் கொடுத்து எடுத்தேன் தெரியுமா?) ஒரு கட்டுரை போட்டால் அரை மணி நேரத்தில் ஓடிவிடும். அப்புறம் பின்னூட்டத்தை பதிவிட்டு இங்கு வந்து பார்க்க வேண்டும். அது தான் கொஞ்சம் 'பீலிங்ஸூ'. பின்னூட்டப் பக்கத்திலும் காணாமல் போனால் அடுத்த பதிவுக்கு மேட்டர் தயாரிக்க வேண்டும். (நல்ல பொழப்பு டா!!!)
**************************

இங்கு, அலுவலகத்தில் பிளாக்கர் திங்கட்கிழமை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது. கதை முடிந்தது என முடிவு செய்து கொண்டேன். நல்ல வேளையாக முத்து(தமிழினி) அவர்களும், பொன்ஸ்ம் பதிவுகளை வெளியிடுவதில் உதவியாக இருந்தனர். நன்றி.

ஸ்வீடனிலிருந்து பின்னூட்டங்களை மட்டுறுத்த உதவிய சகோதரி லீலாவிற்கும் நன்றிகள். நண்பர் ஜெய்கணேஷ், குப்புசாமி செல்லமுத்து, ராய் ஆண்டனிக்கும் நன்றிகள்.

பாலமாக இருந்த ஜிமெயிலுக்கும் கூட.
*************************

இவ்வளவு சொல்லியாச்சு...நடிகைகள் கிட்ட சுதந்திர தினச் செய்தியாக மக்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்கன்னு கேட்பாங்க இல்ல?
அந்த மாதிரி ஒண்ணே ஒண்ணு. நான் எந்தக் கட்டுரை கவிதை எழுதினாலும் அடிச்சு பிரிச்சு மேய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். விமர்சனம்-படைப்பவனை கூராக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ளும் பக்குவமே படைப்பாளியின் பலம். எனவே விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன். (ஓவரான பேச்சா? அப்படியே இருந்தாலும் போர்வையை போர்த்தி அடிக்காதீங்க அப்பு!!!). அப்படியே நல்லா இருக்குதுன்னும் சும்மாவாச்சும் சொல்லணும்(மீசை+கூழு). இல்லைன்னா மனசு ஒடிஞ்சு போயிடும்ல புள்ள....

*****************************

சில விஷயங்களை ஜனரஞ்சகமாக எழுதவேண்டும், சில விஷயங்களை கோபமாக எழுத வேண்டும். இரண்டுமே முயன்று பார்த்தேன். இன்னும் சரியாகத் தெரியவில்லை. எழுத்தின் பிடி என் கரங்களுக்குள் வந்திருக்கிறதா என. அது சரி. தேடல்தானே வாழ்க்கை. முடிவு செய்து விட்டால் முடிந்து விட வேண்டியதுதான்.

இவ்வளவுதான் இன்றைய தினத்தில் என் திறமை. நன்றாக இருந்திருந்தாலும், இல்லையென்றாலும் அவ்வளவுதான் என்னால் முடிந்தது. நட்சத்திர வாரம் முடித்தும் முடங்காமல் தொடர வேண்டும் என எண்ணுகிறேன். நன்றி.

**********************

(டிஸ்கி இல்லையென்றால் என்னுடைய பதிவே இல்லை எனக் கங்கணம் கட்டிச் சொல்பவர்களுக்காக
டிஸ்கி: ஒன்றரை வருடமாக என்னை ஆபாசமாகவோ அல்லது பெருங்கோபம் கொண்டு திட்டியோ ஒரு பின்னூட்டம் கூட இடாமலும் மற்றும் என் பெயரில் போலியாக உலா வராத மவராசன்களுக்கும் நன்றி. ஆனால் போலி என்ற மேட்டர் நல்ல விளம்பர யுக்தி. அப்படித்தானே!!!)

அன்புடன்
வா.மணிகண்டன்

Aug 26, 2006

எனக்கு பிடித்த என் கவிதைகள்

எனது இக்கவிதைகளில் சில ஏற்கனவே இப்பதிவில் இடம்பெற்றிருப்பினும் மீள்பதிவு செய்கிறேன்.

**********************

நகர்ந்து கொண்டிருக்கிறது
மங்கலான அடர்த்தியான நிழல்
எனக்கு முன்பாகவும்
நீளம் குறைந்து காலடியில்
பதுங்கியும்.
பின்புறமாகவும் நீள்கிறது.
நடுங்காமல், நேர்த்தியாக.
நிழல் எந்தப் பக்கமெனினும்
சரளைக் கற்களினூடே புதையும் பாதங்களின்
ஒலி மட்டும் ஒரே திசையில்.


ஏப்ரல்'2006 உயிர்மை.
*************************************

தன் நாவுகளால்
என் கண்ணீரையும்
அசைவற்ற விழிகளில்
நிர்வாணத்தின்
நெளிவுகளையும்
பதிவு செய்திருக்கிறது
-இந்தச் சுவர்.

இப்போது
படிமமாக்குகிறது.
சுண்ணாம்பினை
உதிர்த்து,
தனக்கான ஓவியங்களை


அக்டோபர்'2005 காலச்சுவடு
*********************************************

கண்ணாடி பதித்த
ஓட்டின் வழியே
நகர்ந்து கொண்டிருக்கும்
இந்த வெய்யிலின்
ஒளியில்
நனைந்து
கொண்டிருக்கிறேன்
உருவமற்ற
உணர்ச்சியில் வழியும்
வியர்வையில்


அக்டோபர்'2005 காலச்சுவடு
*****************************


இன்று -
குளிக்கும் போதும்
வலது காலின் பெருவிரலில்
ஒரு கல் தடுக்கிய நொடியும்
உன்னை நினைக்கவில்லை.

நினைத்ததை விட
நினைக்காத நேரத்தை
சொல்வது
எளிதெனக்கு.


ஜூலை' 2006 உன்னதம்
****************************

நிசப்தம்
விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன் விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன


காலச்சுவடு
*****************************

நிலாக் கிழவியை இழுத்துச் செல்வதற்காக யோசிக்கிறேன்.
கீழே இறக்குவது சுலபமில்லை. கூனி
விழுந்து இடுப்பை முறித்துக் கொள்வாள்.
நான் திண்டில் அமர,
சாக்கடை நீரில் மிதக்கிறாள்.
துப்பும் எச்சிலிலும், நகரும் கொசுவிலும்
கலங்கிக் கொண்டு.
சுடும் வடையின் எண்ணெய்ப் புகை நிலவினைச்
சூழும் போது நிலாவோடு சேர்ந்து நகர ஆரம்பித்துவிடுகிறாள்.
மெதுவாக உடன் நகர்ந்து வீட்டு வாசலில்
சேர்த்து விட்டேன்.

அக்காவின் குழந்தையை வெளியே கூட்டிவரும்போத
தம்பி சொன்னான்.

"நிலாக் கிழவியை வீதி நுனிச்
சாக்கடையிலிருந்து கூட்டி வருகிறேன்".உயிர்மை
*********************8

காற்றில் சிக்குண்ட சருகு

ஹங்கேரிய மொழிப்படங்கள் குறித்தான பரிச்சயம் எனக்கிருந்ததில்லை. நல்ல வெளிநாட்டுப் படங்களைப் பார்ப்பது அந்த நாட்டின் இலக்கியங்களைப் படிப்பதற்கு சமமானது என எழுத்தாளர் எஸ்.வி.ராமகிருஷ்ணன் சொல்வார். 'ஹைதராபாத் பிலிம் கிளப்' இந்தியாவில் செயல்படும் ஒத்த வகையான அமைப்புகளுல் முக்கியமானது மட்டுமல்லாது செயலூக்கம் மிக்கது.அங்கு ஹங்கேரியப் படங்கள் திரையிடப்படுகின்றன என்பதனை அறிந்த போது குறுகுறுப்பான ஆர்வம் தொற்றிக் கொண்டது. அவை ஆழமான கதையமைவுடன் காமம் நிறைந்த படங்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

'த மிடாஸ் டச்'(The Midas Touch/Eldorado) மற்றும் 'மை ட்வென்டியத் செஞ்சுரி'(My twentieth century) என இரண்டு படங்கள் அடுத்தடுத்த நாட்களில். இந்தப் படங்கள் உருவாக்கிய அதிர்ச்சி இன்னமும் கைகள் வரை ஊடுருவிக் கிடக்கின்றன. வெவேறு தளங்களில் பயணிக்கும் இந்தப் படங்கள், மனித வாழ்வின் முகங்களற்ற வினாக்களையும், நுண் கூறுகளையும் தொகுப்பாய்வு(Analysis) செய்வதாக அமைந்திருந்தது, உணரப்பட்ட அதிர்ச்சிக்கு மூலமாக இருக்கக் கூடும். பார்வையாளன் தனக்குள் உண்டாக்கப்படும் நடுக்கத்தினை தவிர்க்க முயலாமல் ஏற்றுக்கொள்ளும் போது அவனால் வேறுபட்ட உலகங்களை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

*
கிரேக்கத்தில் நிலவும் நம்பிக்கையான, அரசன் மிடாஸ் (King Midas) தான் தொடும் பொருட்கள் யாவற்றையும் தங்கமாக மாற்றிவிடும் ஆற்றல் பெற்றிருந்தான் என்பதனை இழையாகக் கொண்டு கெழ பெரெமெனி(Geza Beremenyi)யால் உருவாக்கப்பட்ட படம் 'த மிடாஸ் டச்'. இரண்டாம் உலகப்போரின் முடிவிலிருந்து, ஹங்கேரிய எழுச்சி நடந்த 1956 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கதை நிகழ்கிறது. ஹங்கேரிய தலைநகரான புடபெஸ்ட்(Budapest)ல், உபயோகப்படுத்திய பொருட்களை விற்கும் சந்தையொன்றுதான் கதைக்களம்.

சந்தையில் கள்ளப் பொருட்களை விற்கும் மொனோரி(Monori) எப்படியாவது சந்தையின் கட்டுப்பாட்டினை தனது கைகளுக்குள் கொண்டுவர காரியமாற்றுகிறார். காகிதங்களில் அச்சடிக்கப்படும் பணத்தின் மீதான நம்பிக்கையற்று, தங்கமாக சேமித்து வைக்கிறார். சில வருடங்களுக்கு முன்பாக வீட்டிலிருந்து வெளியேறிவிட்ட மகள், தன் கணவன் மற்றும் குழந்தையுடன் திரும்பி வருகிறாள். தனக்கு பேரன் கிடைத்த மகிழ்ச்சியில் மகளின் மீதான கோபத்தை மறந்து தெருக்களில் உரத்த இசையோடும், மிகுந்த போதையோடும் ஆடி மகிழ்கிறார்.

தன் மருமகனுக்கு தங்கத்தை வாரிக்கொடுத்து சொந்தமாக வீடு வாங்கச் சொல்லும் மொனோரியை தடுக்கும் மகள், தனது கணவன் தங்கத்திற்கு தகுதியற்றவன் எனவும், தங்கத்தோடு அவன் ஓடிவிடக்கூடும் எனவும் எச்சரிக்கை செய்கிறாள். மொனோரி தங்கம் கொடுத்ததே அவனை இங்கிருந்து விரட்ட வேண்டும் என்பதற்காகத்தான் என்று மொனொரியின் மனைவி, தனது மகளிடம் காரணம் சொல்கிறாள். தந்தையுடன் ஏற்படும் தொடர்ந்த பிரச்சினைகளினூடாக, பிறிதொரு நாளில் மகளும் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இந்தக் காலகட்டத்தில் பேரன் 'டிப்தீரியா' நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறான். பேரதிர்வுறும் மொனோரியின் மனைவி கடவுளை தவிர வேறு கதி இல்லை என நம்பத் தொடங்குகிறாள். கடவுளையும், தனது மனைவியையும் தொடர்ச்சியாக- கேள்விகளுக்கும், பரிகாசத்திற்கும் உள்ளாக்கும் மொனோரி தனது தங்கத்தால் பேரனைக் காக்க முடியும் என நம்புகிறார்.
பிணவறைக்கு எடுத்து செல்லப் பட்டவனை மீட்க, மருத்துவருக்கு தங்கத்தைக் கொடுத்து, குறிக்கோளில் வெற்றியும் பெறுகிறார்.

சந்தை வீழ்ச்சியுறத் தொடங்கும் சமயம், தங்கங்கள் யாவும் அரசிடம் சமர்பிக்கப் பட வேண்டும் என உத்தரவு வருகிறது. இந்தத் தருணத்தில் வீட்டிற்கு வரும் மொனோரியின் மகள் தான் வேறொரு பொறுப்பானவனை திருமணம் செய்து கொண்டதாக சொல்கிறாள். தன் மகன் தன்னிடம் இருப்பதுதான் நல்லது என்பதால் தன்னிடம் ஒப்படைக்கப் பட வேண்டும் என மொனோரியை வலியுறுத்துகிறாள். அப்படியில்லாத பட்சத்தில், தங்கத்தின் இருப்பு குறித்து அரசிடம் காட்டிக் கொடுக்கப் போவதாக மிரட்டுகிறாள். இந்தச் சூழலிலும் தங்கம் வெல்கிறது. பேரனை மகளிடம் ஒப்படைக்க சம்மதிக்கிறார்.

ரஷ்யப் படை ஹங்கேரியின் நகரங்களுக்குள் நுழைகிறது. தன் மகளின் குடும்பத்தைக் காக்கச் செல்லும் மொனோரியால் தன் பேரனை மட்டும் மீட்க முடிகிறது. நகரத்தினை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காக பிணங்களைச் சுமந்து செல்லும் செஞ்சிலுவைச் சங்கத்தின் வாகனத்தில் பயணிக்கிறார். வதைக்கத் துவங்கும் குடல்வால் நோய்க்கு சிகிச்சை பெற நுழையும் மருத்துவமனையின் கதவுகள் யாவும் பூட்டப் படுகின்றன. போரில் காயமுற்றவர்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கப் படுகிறது. தோளில் சுமந்து திரியும் தங்கப் பையுடன் ஒவ்வொரு அறைக் கதவாகத் தட்டுகிறார். சோர்ந்து மூலையில் முடங்கும் நிலையில், மருத்துவர்களை அழைத்து வரச் சென்ற பேரனும் தோல்வியுடன் திரும்புகிறான். தங்கத்துடன் சரிந்து விழுகிறார் மொனோரி.

*
"அது காந்தம். தொடாதே, உன்னை இழுத்துவிடும்" என 1880 ஆம் ஆண்டு தாமஸ் ஆல்வா எடிஸனின் மின்விளக்கு குறித்தான விளக்கம் அமெரிக்காவின் மென்லோ பூங்காவில் நடக்கிறது என்பதாக 'மை ட்வென்டியத் செஞ்சுரி' படம் தொடங்குகிறது. அதே தினத்தில் ஹங்கேரியின் புடபெஸ்ட் ல் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. டோரா,லில்லி எனப் பெயரிடப் படுகிறார்கள். வறுமையின் பிடியிலிருந்து தங்களை மீட்டுக் கொள்வதற்காக பனி பெய்யும் முன்னிரவொன்றில் தீப்பெட்டி விற்றுக் கொண்டிருக்கும் சகோதரிகளை இரு வேறு
குழுக்கள் கடத்திப் போகின்றன.

கதை இருபதாண்டுகள் முன்னோக்கி 1900 க்கு நகர்கிறது. சகோதரிகள் ஒரே தொடரூர்தியில் வேறு வேறு பெட்டிகளில் பயணம் செய்கிறார்கள். டோரா வசதியான குடும்பத்தில் வளர்ந்திருக்கிறாள். லில்லி அரசையும், ஆட்சியாளர்களையும் எதிர்க்கும் புரட்சியாளராக வளர்ந்திருக்கிறாள். 'Z' என்பவரின் வழிகாட்டுதலின் பேரில், உள்துறை அமைச்சரின் மீது குண்டெறிந்து கொலை செய்வதற்காக பயணிக்கிறாள். டோரா ஆண்களின் மீதும், பாலுறவின் மீதும் மிகுந்த பேராசை கொண்டவளாக இருக்கிறாள். 'Z' ஐ எதேச்சையாக பார்க்கும் டோரா அவனின் மீது காமுற்று அவனது அறைக்கு செல்கிறாள். பின்னிரவில் வரும் 'Z', டோராவை, லில்லி என நினைத்து உறவு கொள்கிறான். அமைச்சரைக் கொல்லும் இலக்கில் தோல்வியுறும் லில்லி, தப்பிச் செல்வதற்காக மறைவிடம் தேடி அலைகிறாள். சகோதரிகள் இருவரும் சந்திக்கிறார்கள். இருவரும் தாங்கள் தீப்பெட்டி விற்ற இடத்திற்கு வருகிறார்கள்.

*
இல்டிகோ என்யெடி(Ildiko Eyedi) என்னும் பெண் இயக்குனரின் முதல் திரைப்படம் இது. கோர்வையான திரைக்கதையற்று காட்சிகளின் தொகுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. நியூ ஜெர்ஸி, புடபெஸ்ட் என பல இடங்களுக்கும் நகரும் கதையமைவில், 'Surrealsitic' எனப்படும் வேறுபட்ட அல்லது முரணான காட்சிகள் படம் முழுவதும் பிணைக்கப்பட்டு விரவிக் கிடக்கின்றன. தான் மிருக்காட்சி சாலைக்கு வந்த கதையை சிம்பன்ஸி கூறுவது உதாரணம்.

விசித்திரமான 'Z'ன் பாத்திரப்படைப்பு, குண்டு வைக்க வரும் லில்லியின் வாழ்க்கைச் சூழல் போன்றவை எல்லாம் சிதறிக் கிடக்கும் காட்சியமைப்புகள். ஆனால் பார்வையாளனால் கதையின் நகர்வினை தொடர முடிவது, இயக்குனரின் சாமர்த்தியம். ஒரு ஆராய்ச்சியாளர் பாலுறவில் ஆண்-பெண் உளவியலை விவரிக்கும் போதும், ஆண் பெண் குறிகளின் அளவுகளை கரும்பலகையில் வரையும் போதும், கலாச்சார கட்டமைப்பில் சிக்குண்டிருக்கும் ஹங்கேரியப் பெண்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதே காலகட்டத்தில் வாழும் டோராவின் பாலுறவு சார்ந்த இச்சைகள், ஆண்கள் மீதான அவளின் கட்டுப்பாடற்ற மோகம் படம் முழுவதும் நீண்டு கிடக்கின்றன. ஒருங்கிணைக்கப் பட்ட தார்மீகமின்றி நகரும் படம் முழுவதும் அரசியல், விஞ்ஞானம், காமம் ஆகியவற்றின் மாற்றங்களையும், உண்மைக் கூறுகளையும், தனது கதையின் துணுக்குகளாக அமைத்திருக்கிறார் இயக்குனர். டோரா, லில்லி ஆகிய இரண்டு பாத்திரங்களிலும் டொரொத செக்டா(Dorotha Segda) நடித்திருக்கிறார்.

*
இரண்டு படங்களும் வேறு தளம், வேறு கதையமைவு. இருப்பினும் மெல்லிய நூலொன்றின் மூலமாக இணைக்கப் பட்டிருப்பதனை உணர முடிகிறது. இரண்டு கதைகளிலும் மனித மனதின் ஆசைகளையும், அவற்றினை புற-அக வாழ்வில் வெளிக்காட்டும் முறைகள், அதனால் விழையும் சிக்கல்கள் ஆகியவற்றின் மூலமாக தொடர்புபடுத்தப் படுகின்றன. தனிமனித ஆசை, சமூகம் குறித்தான விருப்பம், அதனில் நுழைக்கப்பட வேண்டிய மற்றங்கள் குறித்த வேட்கை போன்றவற்றினை நிறைவேற்ற வேண்டி மனித மனம் எதனையும் செய்யத் தயாராகி நிற்கிறது.

மொனோரி தனது தங்கத்தின் மீதான வெறி காரணமாக எதிர்ப்படும் எந்த விதமான விளைவுகளையும் சந்திக்க முற்படுகிறான். வேட்கை தாண்டிய வெறி, உளவியல் சிக்கல் என்பதனை உணர முடியாதவனாக, அவனுள் ஆசை வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் விளைவாக அவன் பெறும் பலன், ஆயிரம் வினாக்களை தொடுக்கிறது.

மற்றொரு படம், இரண்டு சகோதரிகளின் ஆசையினை அடிப்படையாகக் கொண்டது. டோராவின் ஆசை தன் உடல் குறித்தான விருப்பம், ஆண்களின் மீதான மோகம் என சுயம் சார்ந்தது. லில்லி, சமுக மற்றும் அரசியல் அவலங்களை தீவிரவாதத்தால் தகர்க்க முடியும் என வெடிகுண்டு சுமந்து திரிகிறாள்.மனிதனை இயக்கும் கருவியாக ஆசை மட்டுமே நிலை பெறுகிறது.

ஒரு வேட்கையை இலட்சியமாகக் கொண்டு மனிதன் ஓடிக் கொண்டே இருக்கிறான். உலகின் மற்ற கூறுகளை கவனிக்கக் கூட விருப்பமின்றி. இறுதிப் புள்ளியாக வைத்திருக்கும் இலட்சியத்தை தொடும் கணம் வரை அவனது புறக்கணிப்புகளால் ஏற்படும் இழப்புகள் கணக்கிலடங்காமல் கிடக்கின்றன. தளத்தின் வெளியே நின்று பார்க்கும் போது உண்டாகும் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ள மனம் தயாரில்லை. யோசிக்கக் கூட இயலாத மனம் அலைந்து கொண்டிருக்கிறது. சூறாவளிக் காற்றில் சிக்குண்ட இலைச் சருகு ஒன்றினைப் போல்.

Aug 25, 2006

சாகத் தவறிய மறுநாள்!!!

மரணமும் அது குறித்தான செய்திகளும் கொண்டிருக்கும் புதிர்கள் எப்பொழுதுமே அவிழ்க்க முடியாதவையாக இருந்திருக்கின்றன. சாவு பற்றி பேசும் போது எனக்குள் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். அதன் குரூரமோ பயமுறுத்தலோ பெரிதாக பாதித்ததில்லை.

மூன்றாம் வகுப்பு படிக்கும் போது என் தாத்தா இறந்தார். தீபாவளி மூன்று நாளில் வரப் போகிறது. ஆட்டோவில் மிகுந்த உற்சாகத்துடன் வந்து கொண்டிருந்த சமயம் கண்ணமத்தை "உங்க தாத்தன் செத்துப் போச்சு" என சாவாதானமாகச் சொன்னார். அது எனக்குத் தெரிந்த முதல் மரணம். வீட்டிற்கு சென்ற போது தலைவிரி கோலமாக ஆயா அழுது கொண்டிருந்தார். இறந்தவரைக் காட்டிலும், இறப்பின் பாதிப்புத் தாக்கியவரை எதிர்கொள்வது பயங்கரமானதாக இருக்கிறது.

நேற்று சாலையில் தலை நசுங்கி செத்துக் கிடந்தவனைக் காட்டிலும் அவனருகில் அழுது கொண்டிருந்த பெண் பயமூட்டுபவளாக இருந்தாள்.

மரணம் குறித்தான கவிதைகள் அதிர்வூட்டுவது இயல்பானதாகவே இருக்கிறது. ஒவ்வொருவரும் ஏதாவதொரு சமயத்தில் சாவினை சந்தித்திருப்போம்.

*******************************************

சாகத்தவறிய மறுநாள்

சாவதும் ஒரு கலை- எல்லாவற்றையும் போல
-ஸில்வியா பிளாத்

கடைசி மாத்திரையை விழுங்கியதும்
மனம் அலைகளடங்கி அமைதியானது
இறப்பு கருணையுடன் நெருங்கியது

இனி
விழிப்பின் அவலங்கள் இல்லை
கண்ணீரோ
ஓயாமல் கசியும் காயங்களோ
அலைக் கழிதலோ இல்லை
பொய்யின் கசப்போ
அழுகிய புன்னகைகளின் துர்நாற்றமோ
நொந்து கொள்வதோ இல்லை

பயமோ
நிரந்தரமாய் கவிந்த வெறுமையோ
நேசமற்ற கணங்களோ இல்லை
காலம் வெளிபெயர்கள் இல்லை
மேலாக வாழ்வின் குமட்டல் இல்லை

மனம் அலைகளடங்கி அமைதியானது
நினைவில் புதைந்த இசை
வெளிப்பட்டுத் ததும்பியது
மனம் அலைகளடங்கி அமைதியானது

காலையில்
ஒளி வந்து அழைக்க எழுந்து
என் கிளிக்குப்
பழங்கள் பொறுக்கக்ப் போனேன் வழக்கம் போல
சந்தோஷம்
துக்கம் என்னும் சலனங்களற்று
சிறு நீர் அடங்கிய அடிவயிறாய்க்
கனத்தது மனம்


சுகுமாரன்


இந்தக் கவிதையில் மரணிக்கப் போகுபவனின் நிம்மதியையும், அம்முயற்சி தோல்வியுறும் போது எழும் உணர்வு சந்தோஷமா அல்லது துக்கமா என்னும் பிரிக்கத் தெரியாததாக மட்டுமில்லாது, உலக வாழ்வின் போலித்தனங்களும், அது நமக்கு தரும் வலிகளும் கவிதையில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

**********************************
எங்கிருந்தோ ஓடிவந்து
சட்டெனக் கையைப் பற்றிக்கொண்டது
அந்தக் கெட்ட செய்தி

செய்திக்குரியவன்
நானாகவே இருந்திருந்தால்
நிம்மதியாய்ப் போயிருக்கும்

கொடுமதியின் காலம்
இன்றென்னைத் தேர்வு செய்தது
கெட்ட செய்தி கொண்டுபோகிறவனாக

அந்த வீட்டின் குழந்தைகள்
இப்போதுதான் தூங்கப்போயிருப்பார்கள்

அந்த வீட்டின் பெண்
நாளின் இறுதிக் கடமையையும்
பூர்த்தி செய்து
உடலைத் தளர்த்திக்கொண்டிருப்பாள்

அந்த வீட்டின் மனிதன்
நாளைக்கான
ஒரு அர்த்தமற்ற வரைபடத்தை
எழுதிக்கொண்டிருப்பான்

அந்த வீட்டின் விருந்தாளி
தனது இடத்தை
இன்னொரு முறை
சரிபார்த்துக்கொள்வாள்

சற்றைக்கு முன்
அரிந்தெடுத்த
மாமிசத்தின் சூட்டுடன்
சித்திரமாக உறையப் போகும்
நாளொன்றை
அவர்களுக்காகக் கொண்டுபோகிறேன்

முதலில் கதவு திறக்கப் போகும்
துரதிர்ஷ்டசாலிக்காக
என் கண்கள்
ஒரு வஞ்சகமுள்ள மிருகத்தின்
கண்களாகின்றன

எனது முதல் வாக்கியம்
சுவர்களை
இடம் மாற்றி வைத்துவிடும்

இரண்டாம் வாக்கியம்
தலைக்கு மேலுள்ள
கூரையை அகற்றிவிடும்

மூன்றாம் வாக்கியத்தை
யாரும் கேட்கமாட்டார்கள்

பிறகு
அவர்கள் ஒரு நாளும் மறக்க இயலாது
எனது இன்றைய முகத்தை
எனது இன்றைய குரலை
எனது இன்றைய ஆடைகளை

அழுகும் புண்ணொன்றின்
அருவெருப்பான புழுவாகி
நிரந்தரமாகத் தங்கிவிடுவேன்

புதைநிலங்களின் பாதையில்
என் கால்கள்
முடிவில்லாமல் செல்கின்றன

உருவாக்க வேண்டிய
வாக்கியத்தின் பதிலியாய்
முற்றிலும்
வேறொன்று உருவாகலாம்

தெய்வங்கள் இரங்கினால்
எனக்கு முன்
யாரேனும் சென்றிருக்கக்கூடும்

மனுஷ்ய புத்திரன்

சாவுச் செய்தியை, அந்தச் சாவிற்கு சம்பந்தம் உள்ளவர்களுக்கு முதலில் தெரிவிப்பவனின் மனநிலையை வெளிப்படுத்தும் இக்கவிதை, அதிர்வூட்டிய கவிதை.

என் பெரியப்பா இறந்ததாக தகவல் வந்த போது உறவினர்கள் பதட்டத்தில் செய்வதறியாமல் கதறியழுததும், தகவல் கொண்டு வந்தவரும் வெடித்து அழுததை நினைக்க முடிகிறது. அப்பொழுது அவர் எந்தக் காரணத்திற்கு அழுதிருப்பார் என இப்பொழுது யோசிக்கிறேன்.

***************************

அலுவலகத்தில் என் அறை மேல்தளத்தில் இருக்கிறது. சுற்றிலும் காடு. முந்தின நாள் பிணம் ஒன்று கிடப்பதனைப் பார்த்தேன். அநேகமாக நான் மட்டும்தான் பார்த்திருக்கக் கூடும். முதலில் விலங்கென நினைத்தேன். மூன்று ஆடு மேய்ப்பவர்கள் அருகில் நின்று பார்த்தார்கள். ஏதோ பேசிக் கொண்டு சென்றதால் விலங்காக இருக்கும் என உறுதிப் படுத்திக் கொண்டேன். அடுத்த நாள் வந்த போது சுற்றிலும் மக்கள் நின்றார்கள். அது மனிதன் என்பதனை தெரிந்த போது வேதனையாக இருந்தது.

இந்த இரண்டு கவிஞர்களின் கவிதைகளோடு என் கவிதையையும் இணைக்க மனம் வரவில்லை. என்றாலும் சற்று சம்பந்தம் உள்ள கவிதையாக இருப்பதால் இணைக்கிறேன்.

பிணங்களின் உலகம் வேறுபட்டது.

என் ஜன்னலைத் திறந்தால்
சகதியப்பிய முகத்துடன்
பெயர் தொலைத்துவிட்ட பிணம்
கிடக்கிறது.

அதன் அமைதி குலைக்கும் துருத்திய பற்களை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பிணத்தைப் பார்ப்பது பயமாக இருக்கிறது.
தெரிந்த முகங்களை தன் முகத்தில் பொருத்தி
நடுக்கமூட்டுகிறது.

சற்று விறைக்காமல் இருப்பின்
என்னைப் பார்த்து நகைக்கும் அல்லது
கூட்டிச் செல்லச் சொல்லும்.

தூர நின்று பார்த்துவிட்டு
நகரும் மூன்று மனிதர்கள்
பயந்து நெருங்கும் சில நாய்கள்
தாவித் தாவி நகரும் காக்கைகள்.

தவிர
வேறுயாரும் வருவதாக இல்லை.

இரவில் மழை நனைக்கலாம்
நாளை நான் வராமலிருக்கும் சமயத்தில்
வெய்யில் முகத்தைச் சுடலாம்.
கண்களை மட்டும் அந்தக் காக்கைகள்
எடுக்க
குடல் நாய்க்கென்று இருக்கக்கூடும்.

பரிமாணம் புரியாத
அநாதைப் பிணங்களின் உலகம் வேறுபட்டது.

எது குறித்தும் யோசிக்காமல்
நகர்ந்து விட வேண்டும்.


வா.மணிகண்டன்

**************************

சில உவ்வே படங்கள்!!!

இந்தப் படங்களைப் பார்த்து வா.மணிகண்டன் இப்படித்தான் என முடிவு செய்யவேண்டாம். காலத்தின் கட்டாயமாகிறது. நடிகைகளின் படத்தையும் என் படத்தையும் பார்த்த நண்பணோடு பணிபுரியும் பெண்கள், "பையன் முகத்தைப் பார்த்தால் நல்லா இருக்கான். கேரக்டர் சரியில்லையோ" என்றார்களாம். :)

இது என்னுடைய 101வது பதிவு. இந்தப் பெயரில் மட்டுமே, இந்தப் பதிவில் மட்டுமே எழுதுகிறேன். நண்பரொருவர் கேட்டது போல் என் கருத்துக்களைச் சொல்ல எனக்கு வேறு பெயரோ, முகமோ தேவையில்லை.(இதுக்கு எல்லாம் சர்டிபிகேட் கொடுக்க வேண்டியிருக்குப்பா!)

100வது பதிவே தனிப்பதிவிடலாம் என நினைத்திருந்தேன். ஆனால் நேற்று எழுதிய பதிவு முக்கியமானதாகத் தோன்றியதால் தனிப்பதிவிட இயலவில்லை. கடந்த நூறு பதிவுகளில், என் எழுத்திலும், பார்வையிலும் நல்ல மாற்றங்களை நான் உணர்கிறேன்.(மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை.) நன்றி வலையுலகமே. (சுஜாதா சார், இது கூட வலைப்பதிவுகளின் பயன்தான். யாராவது எடுத்துச் சொல்லுங்க!)

குளிர்ச்சியாகப் படங்கள் போடுவதாக சொல்லி இருந்தாலும், பச்சையாக இருப்பதனைத் தவிர்க்க இயலவில்லை. கோபிச் செட்டிபாளையத்தை சுற்றி இருக்கும் பகுதிகளின் படங்கள் இவை.
Photobucket - Video and Image Hosting

கோபியின் பழைய பெயர் வீரபாண்டி கிராமம் என்பதாகும்.

ஊரின் சிறப்பம்சமே இந்தப் பசுமைதான். பவானி ஆறு இப்பகுதிக்கான முக்கிய பாசன ஆதாரம். இந்த ஆறு பல கால்வாய்களாக வெட்டப்பட்டு பல பகுதிகளுக்கும் பாசனம் அளிக்கின்றன. தொலைவில் தெரியும் மலைப் பகுதிகள் கர்நாடகாவை, தமிழகத்தில் இருந்து பிரிக்கின்றன. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் "வீரப்பன் மலை".
Photobucket - Video and Image Hosting
பெரும்பாலும் கோபியின் அனைத்துப் பகுதிகளும் திரைப்படங்களில் முகம் காட்டி இருக்கக் கூடும். கொடிவேரி மிகப் பிரசித்தம். சின்னத்தம்பி படத்தில் பிரபுவின் இல்லம் இந்த அணையில் அமைக்கப்பட்டிருக்கும்.
Photobucket - Video and Image Hosting
இப்பகுதியின் முக்கியத்திருவிழா பாரியூர்(கொண்டத்துக் காளியம்மன்) குண்டம் திருவிழா. ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். இளவட்டங்களுக்கு "முத்துப் பல்லக்கு". அம்மனின் ஊர்வலமும் இருக்கும். பாவடை தாவணி, சுடிதார் தேவதைகளின் ஊர்வலமும் இருக்கும்.

கோபியைச் சுற்றிலும் இருக்கும் பாரியூர், பச்சைமலை, பவளமலை, கொடிவேரி மற்றும் குண்டேறிப் பள்ளம் போன்றவை இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசங்கள். ஒரு முறையாவது காண்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
Photobucket - Video and Image Hosting
வாய்க்கால் பாசனம் தவிர்த்து, கிணற்றுப் பாசனம் பெறும் நிலப் பரப்புகளும் உண்டு.(தோட்டம்). நெல், கரும்பு, மஞ்சள் ஆகியவை அதிகம் பயிரிடப்படுகின்றன. வாழையும் உண்டு.
Photobucket - Video and Image Hosting
நிறைய சாதிகள் இருப்பினும் கவுண்டர்கள்(கொங்கு வெள்ளாளர்) அதிகம் வாழும் பகுதி. இவர்கள் தவிர்த்து நரம்புகட்டி கவுண்டர்கள், வேட்டுவக் கவுண்டர்கள், முதலியார்கள் ஆகியோரும் கணிசமாக உண்டு. எளிமையான வாழ்க்கை முறை என்றாலும், கரைவழிந்து நீர் ஓடும் வளமையின் காரணமாக கொஞ்சம் "பந்தா பார்ட்டிகள்".
Photobucket - Video and Image Hosting
முக்கியமான பண்டிகை மாரியம்மன் பண்டிகை.(மாரி=மழை). கம்பம் வெட்டுதல், கம்பம் குதித்தல், அம்மை அழைத்தல், மா விளக்கு எடுத்தல்,அக்கினிக் கும்பம் எடுத்தல், கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டம், மறுபூசை, பண்டாரன் வீடு சேர்த்தல் என ஏழு நாள் திருவிழா.
Photobucket - Video and Image Hosting
இந்தப் புகைப் படங்களை நண்பர் பிரதீப் எனக்கு அனுப்பி வைத்தார். (இவரைப் பற்றி ஏற்கனவே கொங்கு நாட்டு காதல் கதைங்கண்ணா என்ற பெயரில் எழுதி இருக்கிறேன்.)

இன்றைய டிஸ்கி: அந்த "உவ்வே" சந்தோஷமாகச் சொல்ல வேண்டிய உவ்வே. வாந்தியெடுக்கும் உவ்வே அல்ல. ;)

Aug 24, 2006

வந்தே மாதரமும் வெங்காய சாம்பாரும்!!!

தாய்மண்ணே வணக்கம்ன்னு சொல்லுடான்னு சொன்னா கேட்க மாட்டீங்களா? என்ன தெனாவெட்டு உங்களுக்கு? இமாம் டெல்லியில குந்திகினு "முடியாது முடியாது"னு கூவிகினு இருந்தா நாங்க மூடிகிட்டு இருக்கணுமா? வாயை.

நான் சொல்லை ஐயா. நான் சொல்லை. ஓரிரு தினங்களுக்கு முன்னால் ஒரு தேசியத் தொலைக்காட்சியில் யாரோ கத்திக் கொண்டிருந்த மேட்டர்தான் அது.

பக்கிங்காம் சட்டர்ஜி இந்நேரம் கல்லறையில் இருந்து எழுந்து வந்து மீண்டும் தூக்கு போட எத்தனிப்பதாகக் கேள்வி. யோவ்..யாருய்யா சவுண்டு விடுறது? உங்க புள்ளாரும் (அதாம்பா விநாயகரு) துர்காவும் பால் குடிப்பாங்க. ஆனால் சட்டர்ஜி வரமாட்டாரா? நல்லா கீது பா உங்க டயலாக்கு.

ஒரு அரசாங்கம் பாடுன்னு சொல்லுது. நீங்கதான் பாடிடுங்களேன்னு கேட்டா அதெல்லாம் முடியாதுன்னு சொல்றான் இந்த சாதிக். அல்லாவைத் தவிர வேறெதுவும் கடவுள் இல்லை. அம்மா, அப்பா கூட அட அவ்வளவு ஏன் அந்த முகமது நபி கூட கடவுள் இல்லையாம். ஜனகண மண பாட மாட்டோம்னா கேளுடா அது தேசிய கீதம். தேசிய பாடல்ன்னா பாடுங்க. வேண்டாம்ன்னு சொல்லலை. எங்களை ஏண்டா நச்சுறீங்க? அப்படிங்குறான்.

அது சரி. அது அவன் நம்பிக்கை. ஏம்ப்பா ஜனநாயகவாதிகளே. எல்லோருக்கும் சுதந்திரம் இருக்குதுன்னு சொல்றீங்க. அப்புறம் என்னய்யா?

அதுக்குன்னு அப்புறம் எதுக்கு சட்ட திட்டம்ன்னு ஒண்ணு இருக்கு?புடிச்சா இங்க இரு. இல்லையா பக்கத்து நாட்டுக்கு மூட்டை கட்டு.

பார்றா......த்தூ நாயே......பாட்டு பாடிட்டு குண்டு வெச்சா தேசபக்தி பொங்குமா? நீயும்தான் பாட்டு பாடுற. நீ பண்றது எல்லாம் நாட்டுக்கு ஆவுற காரியமா? பாடிட்டு ஆகஸ்ட் 15ல நெஞ்சு மேல கொடியக் குத்தினா மட்டும்தான் தேசபக்தி, அவனுக்கு மட்டும்தான் இந்த நாடுன்னா.....ஙோ....இந்த நாட்டில பாதிக்கு மேல போலித்தனம் பேசுறவனாத் தாண்டா இருப்பீங்க.

துலுக்கன தூக்கி தலையில வெக்கிறதுக்குன்னே வந்துடுறானுக தூக்கி கட்டிட்டு...அப்படித்தானே முனவுற?

முனவு ராசா....முனவு.

காஷ்மீர்ல குண்டு வெச்சா இங்க நல்லகவுண்டபாளையத்து சையத் அலியக் கூட தீவிரவாதியாத்தானே பார்க்கிறோம்?எல்லாத் துலுக்கனுமா தீவிரவாதி? எல்லா இந்துவுமா தேசியவாதி?

நான் வர்றது இருக்கட்டும். நீங்களும் வர்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க அப்பு. நீங்களே அவனுக மனசுல கொஞ்சம் கொஞ்சமா இந்த நாட்டுக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லைன்னு பேசுங்க. அப்புறமா அவன் பிரிவினை வாதம் பேசுறான்னு சொல்லுங்க.

எப்போ பேசினோம்னு கேட்குறீங்களா? திரும்பப் படிச்சுப் பாருங்க. இஷ்டம்னா இருன்னா என்ன அர்த்தம்? பொறப்புல இருந்து ரத்ததுல ஊறிக்கிடக்குறது மதம்தான் அய்யா. முதல்ல சாதி, அப்புறம் மதம், அப்புறம் மொழி, அப்புறம்தான் நாடு மனுஷன் எல்லாம். இல்லைன்னு சொல்லிட முடியுமா?

கவுண்டனும், ஐயரும் அடிப்பட்டு கிடந்தா(ஒரே அளவு) மூணாவதா இன்னொரு கவுண்டனுக்கு அந்த ரெண்டு பேரு சாதியும் தெரிஞ்சு, ஒருத்தனத்தான் காப்பாத்த முடியும்னா யாரைக் காப்பாத்துவான். கமுக்கமா சிரிக்காத. யோசிச்சு ஒழுங்காச் சொல்லு.

இங்க பாரு. சொன்னது சொல்லியாச்சு. நாங்க மதச்சார்பற்ற நாடுன்னு. அப்புறமென்ன? அவனவன் அவனுக்கு புடிச்ச மாதிரிதான் இருப்பான். முதல்ல குண்டு வைக்கறவன புடி. குண்டு வெடிச்சவுடனே துலுக்கன்தான் வெச்சான்னு அலறாத. அப்படியே அவன் வெச்சிருந்தாக் கூட இந்தியாவுல இருக்குற அத்தன முஸ்லீமும் சேர்ந்து வெச்சான்னு சொல்லாத. ஆச்சு பார்த்தயா?

வெறுப்பத் துப்புறது மட்டுமில்ல தேசபக்தி. நீ ஒழுங்கா இருந்து, அவன நசுக்காம இருந்தா உன்னை விட அவன் நாட்டுக்கு ரத்தம் அதிகமா கொடுப்பான். ஏதோ நாட்டுப்பற்றை மொத்தமா குத்தகைக்கு எடுத்துட்டு வந்த மாதிரி கூவாத. அப்படியே இருந்தாலும் அடக்கி வை. சத்தம் போட்டு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அதான் உண்மையான நாட்டுப் பற்று. நூறு கோடி பேரும் இந்தியன்னு நினைக்க வை. அவன் பிரிச்சுட்டு போறான்னா தொலையட்டும் சனியன்னு சேர்ந்து துரத்தாத. ஏன் போறான்னு யோசிச்சுப் பாரு. புரியுதா?

அடேசாமி.......மூச்சு விட முடியலை......கொஞ்சம் இந்த சரக்க இப்போதைக்கு நிறுத்துங்கைய்யா...காத்து வரட்டும்....அடேய் யாருப்பா அங்க? தண்ணி கொண்டு வாங்க.....கண்ணைக் கட்டுதுடா சாமீ.......

சாவதும் ஒரு கலை.

உங்களுக்கு சில்வியா பிளாத் பற்றித் தெரியுமா? எனக்கு ஷோபனாவைத் தெரியும் வரை சில்வியா பிளாத் தெரியாது. ஷோபனாவை எப்படித் தெரியும் என்பதும் சொல்ல வேண்டிய விஷயம்தான். அருண்ஜவர்லால் எனது முக்கியமான நண்பர்களில் ஒருவர். ஜவகர்லால் இல்லை-ஜவர்லால். என்னோடு வேலூரில் படித்தவர். தற்பொழுது, பெரும்பான்மைப் பொறியாளர்களைப் போலவே, சென்னையில் உள்ளதொரு மென்பொருள் நிறுவனத்தில் பணி.

என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார், பெண்களோடு பழகுங்கள், சுவாரசியம் இருக்கிறது, அதுதான் வாழ்க்கையை மேலும் ரஸிக்க வைக்கும் காரணியென.

வாஸ்தவம்தான். பெண்களுடன் அறிமுகம் ஆவதில்தான் எனக்குப் பிரச்சினையே. நம்புவது கடினமாகக் கூட இருக்கலாம். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். நான் 21 வயது வரையிலும் பெண்களுடன் பேசியது இல்லை. அதன் தாக்கம்தான் இன்னும் தொடர்கிறது.

'ஜிமெயில் சாட்டிங்'ல் அருண் சொன்னார். ஷோபனா என்றொரு சுவாரசியமான பெண் குறித்து. நவீன படைப்பாளிகள் மார்க்வெஸ்,தெரிதா குறித்தெல்லாம் பேசக் கூடியவள் என்றும், அவளிடமும் என்னைப் பற்றி சொல்லி இருப்பதாகவும். அவள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பபோவதாகச் சொல்லி குறுகுறுப்பை அதிகப் படுத்தினார். எதற்கும் இருக்கட்டும் என்று அவள் மெயில் ஐ.டி யைச் சேர்த்து வைத்தேன். எதிர்பார்த்துக் கொண்டிருந்தது போலவே அவளிடம் இருந்து மின்னஞ்சல் வந்தது.

ஆரம்பத்தில் பெரிதாகத் தோன்றாத விஷயம், எனக்குள்ளாக சிறிது மாற்றங்களை நுழைத்தது. அவளிடம் இருந்து வரும் சாதாரண மின்னஞ்சல் கூட எனக்கு நாள் முழுவதுக்குமான உற்சாகத்தை தேக்கி வருவது போல இருந்தது. உடலின் வேதியியல் மாற்றங்களை தெளிவாக உணர்ந்த தருணங்கள் அவை. இதுவரையிலும் பெண்கள் யாரிடமாவது யதேச்சையாக வரும் கடிதங்கள் குறித்து இவ்வாறு எல்லாம் யோசித்ததில்லை. அது, சிறு சந்தோஷம். சிட்டுக் குருவிக்கு அரிசிமணி கிடைத்தது போல். அவ்வளவே. அந்தச் சமயங்களில் எல்லாம் சுற்றி இருக்கும் நண்பர்களிடம், அந்தக் கடிதம் குறித்தும், அதன் விஷயங்கள் குறித்தும் மறைப்பதற்காகவே நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. நானாக வலிந்து ஏதாவது சொல்லிவிடக்கூடும் என்னும் தயக்கம் இருக்கும். ஆனால் இப்பொழுது அப்படியில்லை என்பதால் கடிதத்தை ரஸிக்க முடிகிறது. இந்த ஊர் எனக்கு தந்த தனிமையே, அதற்கான சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறது.

எனக்கு சந்தோஷமான விஷயம், அவளும் ஹைதராபாத்தில் இருக்கிறாள் என்பது. என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு என்னிடம் பேச ஆரம்பித்தாள். அவளிடம் செல்போன் கிடையாது. அது சுதந்திரத்தின் எதிரி என்றாள். சில்வியா பிளாத் பற்றி அவள்தான் சொன்னாள். சில்வியா தற்கொலை செய்து கொண்ட போது அவளின் "சாவதும் ஒரு கலை" உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டதாம். அந்தச் சமயத்தில் தமிழின் நவீன கவிஞர்களும் உலகப் படைப்பாளிகளுடன் சேர்ந்து கொண்டார்களாம். சாவு குறித்தும், அதன் முகங்கள் குறித்தும் அவள் பேசியதை எல்லாம், நான் இதுவரை யோசித்தது கூட இல்லை. சில்வியா பிளாத் ஐ விட, ஷோபனா குறித்துதான் பிரம்மாண்டப் படிமம் என்னுள் உண்டானது.

அதனை எல்லாம் நொறுக்கி விடும் விதமாக ஒரு நாள் பேசினாள். எதிர்வரும் அந்த ஞாயிற்றுக் கிழமை மதியம், ஹைதராபாத் என்.டி.ஆர் கார்டன்ஸில் சந்திக்கலாம் என முடிவு செய்திருந்தோம். சனிக்கிழமை இரவு தொலை பேசியில் பேசும் போதுதான் அது நிகழ்ந்தது.

ஏதோ பேசிக் கொண்டிருந்தவள், திடீரென "செக்ஸ் என்றவுடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?" என்றாள்.

தூக்கிவாரிப் போட்டது. என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை.

"என்னங்க? இப்படி திடீர்ன்னு கேட்டா?"

"அதான் கேட்டேன்ல. சொல்லுங்க"

"இல்லை. என்ன சொல்றதுனு தெரியலை"எதுவெதுவோ சொல்லிப் பார்த்தேன். விடுவதாக இல்லை. மெதுவாக ஆரம்பித்தேன்.

"அது.....ஆண்-பெண்....இல்ல....உயிர்களுக்கு...கொஞ்சம்....புனிதமான..."

சிரித்துக் கொண்டே "ஓ....அதுதான் உங்களுக்குத் தோன்றுமா? எனக்கு அப்ளிகேஷன் பார்ம் நிரப்புவதுதான் தோன்றும்" என்றாள்.

எனக்கு படபடப்பாக இருந்தது. ஆனால் தப்பித்து விட்டதாக மெலிதான நிம்மதி.

"ஆளவந்தான் ஜோக்..."அவளே சொன்னாள்.

"நவீனத்துவம், பாரம்பரியத்தின் கட்டுடைக்கும் படைப்புகள் ன்னு எல்லாம் பேசுறீங்க. இந்த ஒரே கேள்விக்கு அரண்டு போய்டீங்க"

எப்படி சமாளிக்க வேண்டும் என விளங்கிக் கொள்ள முடியவில்லை. சூழல் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பது மட்டும் தெரியும்.

சமாதானத்துக்கு வந்தவளாக அடுத்த நாளின் சந்திப்பு பற்றி பேசினாள். ஆடைகளை- அடையாளத்துக்காக அப்பொழுதே முடிவு செய்து கொண்டோம். அவள் கறுப்புச் சுடிதார், சிவப்பு நிற தொப்பி, ஸ்கூட்டி. நான் வெள்ளைச் சட்டை, ப்ளூ ஜீன்ஸ். யார் முன்னதாக வந்தாலும் வாயிலில் நிற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கண்டுபிடிக்க முடியாதபட்சத்தில் என்னை செல்போனில் அழைப்பாள்.

அவளைப் பார்க்கப் போவது சந்தோஷமாக இருந்தாலும், அவளின் பேச்சை சமாளிக்க முடியுமா என்பது சிறிய உறுத்தலாக இருந்தது. பேசிவிட்டு பிரஸாத் ஐமேக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க வேண்டும். ஆன்லைன் புக்கிங் செய்தாகிவிட்டது. காலை நேரம், பஸ்ஸில் கூட்டம் குறைவு. போக்குவரத்து நெரிசலும் இல்லை. ஞாயிற்றுக் கிழமை என்பது காரணமாக இருக்கலாம். கோயிலுக்கு/இண்டர்வியூவுக்கு போவது போல கிளம்பி இருந்தேன்.

மூசாபேட் அருகே மட்டும் பேருந்து மெதுவாக நகர்ந்தது. இந்த இடம் எப்பொழுதுமே இப்படிதான். மும்பை-புனேவிலிருந்து வரும் வாகனங்கள் ஹைதராபாத் அல்லது செகந்திராபாத் செல்வதற்கான பிரிவு இங்குதான் இருக்கிறது. அதுதான் பெரும்பாலான நெரிசலுக்கும் காரணம். சென்னை போல் அல்லாது எல்லா நேரத்திலும் கனரக வாகனங்களை நகரினுள் அனுமதிக்கிறார்கள். வாகனம் மெதுவாகச் செல்வதால், பேருந்தில் இருந்த பலரும் எட்டிப் பார்த்தார்கள். நானும் கூட. தலைகளைத் தாண்டி ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பதற்கு சிறிது எத்தனிக்க வேண்டியிருந்தது.

விபத்து நிகழ்ந்திருக்கிறது. ஆறு சக்கர டிரக் வண்டி ஒரு பெண்ணின் மீது ஏறி இருந்தது. கறுப்புச் சுடிதார், ஸ்கூட்டி, சிவப்பு நிற தொப்பி. பஸ்ஸிலிருந்து இறங்கிப் பார்த்தேன். சிறிது தூரத்திற்கு பின்சக்கரம் இழுத்துச் சென்றிருக்க வேண்டும். இரத்தம் பட்டைக் கோடாக சாலையில் படிந்து கிடந்தது. ஒற்றைச் செருப்பும், கொஞ்சம் மல்லிகையும் இரத்தச் சிவப்போடு சிதறியிருந்தது. குப்புறக் கிடந்தாள். முகத்தைப் பார்க்க இயலவில்லை. என்னையும் மீறிய அழுகை கண்களை ஈரப் படுத்தியது. ஒருவர் தெலுங்கில் ஏதோ கேட்டார். கோபமாக வந்தது. அவனை கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டும் போல இருந்தது. திரும்பிப் பார்த்தேன். சுற்றி நின்ற சிலரைத் தவிர பெரும்பாலானோர் வருத்தமான முகத்துடன் நகரத் தொடங்கினர்.

அதே சாலையில் பெண்ணொருத்தி கறுப்பு சுடிதார் அணிந்து, ஸ்கூட்டியில் போய்க் கொண்டிருந்தாள். அவள் தலையில் தொப்பி இல்லை.

நன்றி: ஆனந்தவிகடன்

Aug 23, 2006

ஈழம்: இந்திய மனநிலை!!!

ஈழத் தமிழர்கள் பிரச்சினை குறித்தான இந்திய அரசின் பார்வை வருத்தம் தரக்கூடிய ஒன்று. வன்முறை என்பது பிரச்சினைக்கு எளிய தீர்வாக அமைந்துவிட முடியாது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் எல்லா தேசத்திலும், எல்லா ஆட்சியாளர்களுக்கும் எதிராக போராட்டம் நடத்த அகிம்சாவாதிகளும், அவர்களின் ஆயுதமாக உண்ணாவிரதமும், ஒத்துழையாமை போராட்டங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. போராளி எடுக்கும் ஆயுதம் அவனது எதிரியால்தான் நிர்ணயிக்கப் படுகிறது.

தீவிரவாதமா அல்லது மிதவாதமா என்பது குறித்தான விவாதத்திற்குள் நுழைய விரும்பவில்லை. தனது போராட்ட வழிமுறையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, பாதிக்கப் பட்ட அந்த மக்களைச் சார்ந்தது.

நேபாளம் அல்லது பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் உள்நிகழ்வுகளின் தாக்கம் இந்திய தேசத்தில் உடனடியாக உணரப்படுகிறது. இந்த நாடுகள் தரைவழி மார்க்கமாக தொடர்பு கொண்டிருப்பதும், தலைநகரின் அருகாமையில் இருப்பதும் காரணமாக இருக்கக் கூடும். ஆனால் கண்ணீர்த்துளி நாட்டின் நிகழ்வுகளை அப்படிச் சொல்ல முடிவதில்லை. அதிகபட்சமாக அகதிகளின் வருகையைத் தவிர பெரிய பாதிப்போ, கவலையுறச் செய்யும் அம்சமோ இல்லாதவை அவை.

இந்திய அரசுக்கும் சரி, ஊடகங்களுக்கும் சரி, அது பொருட்டான விஷயமாகவே படுவதில்லை. ஊடகம் என நான் குறிப்பிடுவதில் தமிழக ஊடகங்களும் அடக்கம்.

யோசித்துப் பார்த்தால் இந்திய மக்கள்- குறிப்பாக தமிழர்களின்- அக்கறையின்மை அல்லது ஆட்சியாளர்கள்/காவல்துறை குறித்தான பயம் அவர்களை அமைதியாக இருக்கச் செய்கிறது. மற்ற எந்த விவாதங்களையும் களத்தின் மையத்தில் வைத்து விவாதிக்கும் இந்தியனின் அறிவும், 'போலி' தைரியமும் இதில் மட்டும் அடங்கிப் போய்விடுகிறது. மீறி வரும் உணர்வுகள் என்றிருப்பின், அதனை அடக்க அவன் பேச வேண்டுமானால் முகவரியற்ற சந்து ஒன்று வேண்டும் அல்லது முகத்தை மறைக்க முகமூடி வேண்டும்.

"நமக்கென்ன போச்சு?" என்னும் ஒதுங்கி வாழும் மனநிலை கிட்டத்தட்ட 'நல்லவர்களின் மனநிலை' ஆகிவிட்டது. அந்த 'நல்ல' மனநிலை பெரும்பான்மை இந்திய மனநிலை ஆனதுதான் வேதனை. சாலையில் அடிப்பட்டுக் கிடப்பவனை பார்ப்பதிலிருந்து, இன்னொரு நாட்டின் விவகாரம் வரையிலும் இதே மனநிலை தொற்றிக் கிடக்கிறது. தனக்கு வரும் வரையிலும் தலைவலி குறித்தான கவலையில்லை.

உலகில் சமூக அக்கறை குறைந்த, வியாபார நோக்கம் மட்டுமே முதன்மையாகக் கொண்ட ஊடகங்களுள் இந்திய ஊடகம் மிக முக்கியமானது. குறிப்பாக அந்நிய செய்தித் தொலைக்காட்சிகளும் அவற்றில் ஒரு சாராரின் ஆக்கிரமிப்பும் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அவர்கள் வியாபார முக்கியத்துவமற்ற செய்திகளை முன்னிலைப் படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது மூடத்தனம். திரைக் கவர்ச்சி, பாலியல் சார்ந்த பிரச்சினைகள் போன்ற மேல் மட்ட, நடுத்தர இந்தியர்கள் அக்கறை காட்டும் அம்சங்கள்தான் அவர்களுக்குச் செய்திகள்.

இந்தியன், தமிழன் என்றெல்லாம் பிரிக்க வேண்டாம். தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ளும் போது மனித இரத்ததின் வாடையும், அழுகுரலும், வேதனைக் கதறலும் அவனை பேச வைக்க வேண்டும். ஆனால் அங்கும் மெளனமே திரை விரித்து நிற்கிறது. நம் மக்களின் இந்த குரூரமான, புரிந்து கொள்ள முடியாத அமைதி கலவரப்படுத்துகிறது.

புலிகள் செய்வது தவறா அல்லது சிங்கள இராணுவம் தவறா என்பதெல்லாம் இந்த விவாதத்தில் தேவையற்றது. அவர்களைப் பற்றி பேச வேண்டியதில்லை. சோற்றுக்கும், அடுத்த கணத்தில் வாழ்க்கையை எதிர்கொள்ள அடுத்தவனின் உதவியை எதிர்பார்க்கும் சாமானிய ஈழ மக்களின் நிலை குறித்தான சிந்தனை வேண்டும். ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் பங்களிப்பும், தேடி வரும் அகதிகளின் மறுவாழ்வு குறித்தான அக்கறையையும் அரசுக்கு உணர்த்தவாவது குரலெழுப்பலாம், குரலெழுப்புபவர்களுக்கு உறுதுணையாக இருக்கலாம். குறைந்த பட்சம் ஆதரவாகப் பேசுபவர்களை புழுவினைப் பார்ப்பது போல் பார்ப்பதனை நிறுத்தலாம்.

இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை துப்பாக்கிகளின் முனையில் கொண்டுவந்து நிறுத்துவது துன்பியல் செயல். தன்னை உலகின் மிகப் பெரிய மக்களாட்சி தேசம் என்று சொல்லிக் கொள்ளும் இந்தியா இந்த நிகழ்வுகளை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதும், "இலங்கை நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிக்கிறோம்" என பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை மறக்காமல் அறிக்கை வெளியிடும் நடைமுறையும் மாற்றப்படல் வேண்டும்.

அரசியல்வாதிகளின் கொள்கைகள் பற்றி ஒவ்வொருவரும் தெளிவாகவே உணர்ந்திருக்கிறோம். ஆட்சியில் இல்லாத சமயம் ஒரு குரலும், ஆட்சியில் இருக்கும் போது வேறொரு குரலும், எதிர்கட்சியெனில் ஒரு தொனியும், அரசின் கூட்டணியெனில் மாற்றப்பட்ட தொனியும் பார்த்து, சலித்துப் போன சம்பவங்கள். அரசாங்கம் ஈழப் பிரச்சினையில் தலையிட வேண்டுமானால் ஊடகம் மற்றும் மக்களின் பிரதிநிதிகள் இந்தப் பிரச்சினையைப் பேச ஆரம்பிக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு ஊதியம் தேவை. ஊடகம் எனில் விளம்பரம். மக்கள் பிரதிநிதிகளுக்கு வாக்கு.

இரண்டிற்கும் ஒரே வழிதான். பொதுமக்கள் பேச வேண்டும். அப்பொழுது மக்களின் கவனத்தைப் பெற மேற்சொன்ன இருவரும் பேசுவார்கள். அரசாங்கம் திரும்பிப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

மதம், கொள்கை, வன்மம், பழிதீர்த்தல் என எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து, மனிதத்துடன் குரல் கொடுக்கலாம். உறவுகளை இழந்து வாடுபவருக்காகவும், தாய்மண் விட்டு வந்து வாழ வழிதேடும் பாவப்பட்ட ஜென்மங்களுக்காகவும், கடல் அலையின் சாரலில் கதறும் பச்சிளம் குழந்தைக்காகவும்.

பலருக்கும் பிடிக்காத ஒன்று!!!

முன் குறிப்பு: இது சற்றே பெரிய பதிவு. இரண்டாகப் பிரிக்க விருப்பமில்லை. ஆனால் பத்திகளுக்கு எண்ணிட்டு எழுதி இருக்கிறேன். எத்தனை முறை வேண்டுமானாலும் விட்டு விட்டு படிப்பதற்கு ஏதுவாக.

கட்டுரை வடிவில் எழுதினால் படிப்பதற்கு சிரமம் வரலாம் என்பதனால், பத்தாம் வகுப்பு சமூக ஆறிவியல் தேர்வில் ஐந்து மதிப்பெண் கேள்விக்கு பதிலளிப்பது போல எழுதுகிறேன்.(எனக்கும் எளிது). முழுமையாகப் படிக்க விருப்பமில்லையெனில் இறுதிப் பத்தியை மட்டும் படித்துச் செல்லுங்கள்.

நண்பரொருவர், எனக்கு ஏன் கவிதைகள் பிடிக்கின்றன என்பதற்கான காரணங்களை சொல்ல வேண்டும் எனச் சொன்னார்.

எனக்குப் பிடிக்காத கவிதைகள் என எதனையும் பட்டியலிட விரும்பவில்லை. அதே கவிதையால் பாதிக்கப்பட்ட வாசகன் என் செயலால் கோபமடையக் கூடும்.

(போலி அறிவுஜீவித் தனம் எந்தவிதத்திலும் வெளிப்படாமல் இருக்க முயல்கிறேன். எட்டிப் பார்த்தால் பொறுத்தருள்க நண்பர்களே)

* எந்தவிதத்திலும் யாரையும் குழப்பி விட வேண்டும் என முயற்சிக்காமல் எழுத முற்பட்டிருக்கிறேன். அதனையும் மீறிக் குழப்பினால் நான் பொறுப்பல்ல. அந்தக் குறிப்பிட்ட இடத்தில் நான் புரிந்து கொண்டவை அரைவேக்காட்டுத் தனமாக இருக்கக் கூடும். எனவே வெளிப்படுத்துவதில் பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்.


************************
-1-


* தமிழ்ச் சூழலில் கவிதை என்று வாசகன் முதலில் அறிவது, பாடத்திட்டங்களிலிருந்து அல்லது பொதுஜன ஊடகங்களிலிருந்து அல்லது கவியரங்ககளிலிருந்து அல்லது இந்த மூன்றிலிருந்தும்.

* என்னைப் பொறுத்தவரையிலும் இந்த வகைக் கவிதைகள் யாவுமே ஒரே விதமான ஓசையை எழுப்புகின்றன. அவற்றின் முக்கிய நோக்கம் கவிதையைக் கேட்பவன் உடனடியாகக் கரகோஷம் எழுப்ப வேண்டும் என்பதாகவே இருக்கிறது. கவிதையின் நோக்கம் அதுவாக இருக்கும் போது கவிதை தோல்வி அடைகிறது.

* இந்தக் கவிதைகள் தவிர்க்கப் பட வேண்டும் என சொல்ல முடியாது. மொழியின் மீது விருப்பமற்றவனைத் திரும்பிப் பார்க்க வைப்பதில் இவ்வகையான கவிதைகளின் பங்களிப்பு அதிகம் இருப்பதாக நம்புகிறேன். இதன் பிறகு வாசகனின் தேடல் விரிவடையும் போது அவனுக்கு வேறு விதமான கவிதைகள் கிடைக்கக் கூடும். இவ்விடத்தில் தேங்கும் வாசகன் அடுத்த தளத்திற்கு வருவதில் நிறைய தடைகளைச் சந்திக்கிறான்.

* தேவையற்ற ஒலிகளையும், உணர்ச்சிகளையும் தன்னுள் புதைத்துக் கொண்டு பேசும் கவிதையுடன் ஒரு விதமான ஸ்னேகம் ஏற்படுவதாக உணர்கிறேன்.(இந்த இடத்தில்தான் எனக்குப் பிடித்த கவிதைகள், பிடிக்காத கவிதைகளுடன் வேறுபடுகின்றன). கவிதை மனக்கிளர்ச்சியூட்டும் ஆயுதமாக இருக்க வேண்டும்.

* சில பழக்கப்பட்டுவிட்ட சொற்களை உரைநடைகளே கூட தவிர்க்க வேண்டும் எனச் சொல்லும் போது கவிதைகள் சுமந்து திரிவது ஏற்றுக் கொள்ளப் பட முடியாத ஒன்று.

*மலையாளத்தில் "நகரம்" போன்ற சொற்கள் கவிதையில், முற்றிலுமாகப் புறக்கணிக்கப் படுவதாக மலையாள நண்பரொருவர் தெரிவித்தார். தமிழிலும் இதுபோல பழக்கப்பட்ட, நிறைய முறை உபயோகிக்கப் பட்ட நூற்றுக் கணக்கான சொற்களைக் கண்டறிய முடியும்.

* கவிதை சொல்லப்படாத ஒன்றையும், சொல்ல விரும்புவனவற்றை புதிய கோணத்தில் சொல்வதாகவும் இருத்தல் வேண்டும். இதற்கு கவிஞனுக்குத் தொடர்ச்சியான வாசித்தல் அவசியமாகிறது. நாம் எழுதியவற்றை முன்பே வேறொருவர் அதன் சாயலில் எழுதி இருக்க முடியும்.


****************************
-2-


* படிமம் கவிதையின் சிறப்பம்சம். கவிதையில் கொண்டுவரப்படும் படிமம் ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு விதமான காட்சியைத் தரக் கூடும். படிமம் என்பது மிக எளிதான விஷயம். பயப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. சொல்ல வருவதனை நேரடியாகச் சொல்லாமல் வேறொன்றின் மீது ஏற்றிவிடுதல்.

* என்னைப் பொறுத்த வரைக்கும் படிமத்தின் முக்கிய அம்சமே பல்வேறு தளங்களை படிப்பவனுக்குத் தருவதுதான்.(இக்கருத்தில் சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம்)

* நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் என வைத்துக் கொள்வோம். ஆனால் புரிந்து கொள்பவனும் அதே விஷயத்தை, அப்படியே புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. உதாரணமாக, பெண்ணொருத்தி(என் காதலி)யுடன் விருந்துக்குப் போகிறேன். அந்த நிகழ்வையும், அந்த தருணத்தையும் கவிதையில் பதிவு செய்ய வேண்டும். இக்கவிதையை படிப்பவனுக்கு அதே அனுபவம்(காதலியுடன்) கிடைத்திருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். அப்படியிருக்கும் பட்சத்தில், இக்கவிதையுடன் அந்நியத்தன்மையை அவன் உணர வாய்ப்பிருக்கிறது. எனவே பொதுவாக வேறொரு பொருள் குறித்து எழுதி விடலாம். அவன் அம்மாவுடன் விருந்துக்குச் சென்றிருக்கலாம், சகோதரியுடன் அல்லது இன்னும் கூட பொதுவாக நண்பனுடன். அவனுக்கு அந்த அனுபவம் மனக் கண்ணில் வரலாம். அல்லது இவை எதுவுமே இல்லாமல் அது வேறொரு நிகழ்வினைக் கூட அவனுக்கு நினைவூட்டலாம். இது படிமத்தை எப்படி கவிதைசொல்லி கையாள்கிறான் என்பதனைப் பொறுத்திருக்கிறது.

* "ஓவியப் பறவை அந்தச் சுவரிலேயே பறக்கிறது" என்பது ஒரு படிமம். ஓவியத்தில் வரையப்பட்ட பறவை குறித்து எழுதப் படுவது. இது வேறு விதமான எண்ணங்களை எல்லாம் தருவதில்லை. ஒரே விதமான புரிந்து கொள்ளுதல்தான். படிமம் இப்படியும் கூட அமையலாம்.


****************************
-3-


* கவிதையில் கதையினைக் கொண்டு வருவது நுட்பமான விஷயமாகத் தெரிகிறது. கவிதைக்கான மொழி எது? கவிதைக்கான எளிதாகப் புரிந்து கொள்ள இயலாத மொழியென்று உருவாக்கப்பட்டு தன்னைச் சுற்றிலும் மேக மூட்டத்தைக் கொண்டிருக்கிறது. கவிதையில் கதை உணரப்படும் போது கவிதை, தனக்கான நிலப் பரப்பினை அடைந்து விடுவதாகச் சொல்ல முடியும்.

* இவ்வகையான கதை சொல்லும் கவிதைகளில் நயம் இல்லை, உரைநடைத் தன்மைதான் மேலோங்கி இருக்கிறது எனச் சொல்வது வழக்கமாக இருக்கிறது. இது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அலங்காரங்களை அல்லது நயத்தினை கதையினைச் சொல்லும் கவிதைக்குள் நுழைக்க முற்படும் போது கவிதை, சொல்லப் பட வேண்டிய கதை மீதான தனது ஆளுமையை இழக்கக் கூடும்.

* பழமலய் அவர்களின் நிறையக் கவிதைகளை கதைகளைச் சொல்லும் கவிதைகளுக்கு உதாரணமாகச் சொல்ல முடியும்.( முன்பு நான் எழுதி இருக்கும் "பற வீரன்" பதிவைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.)


**********************************
-4-


* உவமை, உவமேயம், அலங்காரம், படிமம் அனைத்தும் கவிதையில் இருக்கலாம். இவை யாவும் சொல்லப் படாத வேறுபட்ட தளத்தில் சொல்லப்படுவதாக இருத்தல் வேண்டும். திரும்பத் திரும்ப சொல்லப் பட்ட உவமைகள் பதிவு செய்யப்படும் போது வாசகனுக்கு சலிப்புத் தட்டி விடுகிறது.

* உவமை, அலங்காரங்கள், ஓசை, நயம்- இவை எதுவுமேயற்ற இயல்பான கவிதைகளும் இருக்க இயலும்.

வகிடெடுக்கவும்
பொட்டு வைத்துக் கொள்ளவும்
போதும்
கைதவறி நழுவவிட்ட
கண்ணாடியின் பெரிய துண்டு.
வரும் போதெல்லாம்
சொல்லாமல் இருப்பதில்லை
பக்கத்து வீட்டு மருமகள்
"ஒடஞ்ச கண்ணாடில
மொகம் பாத்தா குடும்பத்துக்காவாது"
ஆகாமல் போவதற்கு,
ஒன்றுமில்லை என்பதறிந்தும்
சரி என்னதான் இருக்கிறது
எனக்கும் அவளுக்கும் பேசிக் கொள்ள
இருந்து விட்டுப் போகட்டுமே
ஓர் உடைந்த கண்ணாடித்துண்டாவது.


இளம்பிறையின் இந்தக் கவிதை மிகச் சிறந்ததாகப் படுகிறது. எந்த அலங்காரங்களோ, வர்ணணைகளோ இல்லை. பேசுவதற்கு கூட சொற்கள் தீர்ந்துவிட்ட வறுமையின் வறட்சியை அற்புதமாகச் சொல்கிறது கவிதை.

* மனித வாழ்வின் துன்பங்களையும், அது தரும் கண்ணீரின் உவர்ப்புச் சுவையைப் பதிவு செய்யும் கவிதைகளும் எளிதாக வாசகனை அடைகின்றன. ஆனால் இங்கும் ஏற்கனவே சொல்லப் பட்ட விஷயத்தை வேறு எந்த வடிவதிலும் சொல்ல முற்பட்டாலும், அக்கவிதைக்கு அது வீழ்ச்சியாகவே அமைகிறது.

* இவற்றை மட்டும்தான் சொல்ல வேண்டுமென்பதில்லை, நம்மைச் சுற்றிலும் நடக்கும் காட்சிகள், நிகழ்வுகள் போன்ற பெரும்பாலானவை கவிதைகளில் பதிவு செய்யப்படாமல் காத்திருக்கின்றன. இவையெல்லாம் சொல்லப்படும் போது கவிதை கவர்வதாக அமைகிறது.

சமயவேலின் ஒரு கவிதை

பெயர் தெரியாத பூச்சி
பருப்பு டப்பாவுக்குள் இருந்தது.

அதன் தாய்தந்தை யார் எதுவரை
படித்திருக்கிறது அதன் லட்சியம் என்ன
சாதனை என்ன வீட்டுப் பொறுப்பை
செவ்வனே செய்கிறதா பூர்ஷ்வாவா
கஞ்சா பிடிக்குமா
சமூகப் பிரக்ஞை உண்டா
கல்யாணம் ஆனதா லெபனான்
போர் பற்றி அதன் அபிப்ராயம் என்ன
ஒன்றும் தெரியாது

சாம்பல் நிறத்தில் வரிவரியாக
இத்தினியூண்டு மீசையுடன்
ஒட்டிக் கொண்டிருக்கிறது.


*********************
-5-


* நமக்கான பண்பாடுகள் யாவுமே ஒரு சாராரின் மீது திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகளாவே இருந்திருக்கின்றன. எல்லோரும் ஏதோவொரு விதத்தில் மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தவே விரும்பியிருக்கிறோம்.

* தன் மீது சுமத்தப்பட்ட கட்டுப்பாடுகளையும், கண்ணுக்குள் ஊசி செலுத்துவது போன்ற வன்முறைகளையும், கட்டவிழ்க்கப்பட்ட அடக்கு முறைகளையும் பாதிக்கப்பட்ட அந்தப் பிரிவினர் இலக்கியத்தில் பதிவு செய்யும் போது அதிர்வூட்டுகிறது.

* குட்டி ரேவதி 'முலைகள்' என எழுதும் போதும், சுகிர்தராணி 'சவரம் செய்யப்படாத என் நிர்வாணம்' என எழுதும் போதும் உண்டாகும் அதிர்வுகள் இவ்வகையினதே.

* உடலியல், காமம் குறித்துப் பெண்கள் பேசும் போது, அவை பெரும்பாலும் எத்தகைய வலிகளையும், மனக் குமுறல்களையும் கொண்டிருந்தாலும், 'கிளுகிளுப்பு'களுக்காக சர்ச்சைக்குள்ளாக்கப்படுகின்றன.

அந்த நிமிடங்களில் நீ நீயாக இருக்கவில்லை
உன்னுள் இருந்த மதுபோதை ஒருபுறம் காமப் பசி மறுபுறம்
இரண்டின் வெளிப்பாட்டில்
நீ புணரும் மிருகமானாய்
காதலுக்கு மட்டுமே கசிகின்ற என் யோனி
உன் ஆவேசத்திற்கு கசிய மறுத்தது
உன் விடாப்படியான போராட்டதினூடே
என் வறண்ட யோனிக்குள்
தாகம் தீர்க்க முயன்றது உன் ஆண்குறி
ஒன்று...இரண்டு....மூன்று என
என் யோனித் துவாரத்தை
நீ ஊடறுக்கும் ஒவ்வொரு முறையும்
உடலை விட மனது வலித்தது
உன் வேகம் அதிகரிக்க
என்னில் கண்ணீர் தயாரானது
வழமையின் காதலில் கசிந்து
உன்னைக் கட்டியணைத்து
முத்தமிடும் எனக்கு
உன் மூச்சுக் காற்றின்
மது நெடி சாட்டையடித்தது...
எங்கிருந்தோ வந்து
அம்மாவின் முகம்
மனதில் நிழலாடியது
இதைத்தானா
"பெண் பொறுப்பதற்கு
பிறந்தவள்" என்றாய் அம்மா?
உன் உயிரின் கடைசிச் சொட்டு
பலம் வரை பொறுத்திருந்தேன்
அப்பாடா..
உன் நீர் கசிந்து
நீ மனிதனாய்
என்ன உணர்ந்தாயோ
"பசிக்குதா?" என்றாய்
முழுதாய் உனது பசி தீர்ந்த பின்
குரல் தழும்ப
"வலிக்குது" என்றேன்
எந்தப் பதற்றமும் இல்லாமல்
"ஸாரிடா செல்லம்" என்றாய்...
உருண்டு திரண்டிருந்த
என் கண்ணீர்த்துளிகள்
மெளனமாய் வழிந்தன...
சில நிமிட மெளனங்கள்...
எங்கே என் தலை கோதி
என்னை வருடிக் கொடுப்பாயோ
என எதிர்பார்த்த எனக்கு
உன் குறட்டை ஒலி
உயிரை வதைத்தது...
உன் தாகம்
உன் தேவை- தீர்ந்ததால்
உனக்கு உறக்கம்
என் வலி
என் அழுகை-ஓயாமல்
விழி மூடி விழித்திருந்தேன்.

காலச்சுவடு இதழ் நடத்திய பெண்கவிஞர்களுக்கான போட்டியில் பரிசுபெற்ற கவிதை இது. மாதுமை சிவசுப்ரமணியம் எழுதிய இக்கவிதையில் பாலியல் நிகழ்வுகளைத் தாண்டிய வலியினை உணர முடிகிறது.

*தலித்தியக் கவிதைகளும், பெண்ணியக் கவிதைகளும் வெளிச்சம் பெறும் போதும், அதிர்வுகளற்று அவை விவாதத்திற்குள்ளாகும் போதும் கவிதைக்கான மாற்றமாக மட்டுமில்லாது அவை சமூக மாற்றத்திற்கும் கூட அடுத்த தளமா அமைகின்றன.

*சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் கேள்விக்குள்ளாக்கும் கவிதைகளும் விவாதத்திற்கு உட்படுத்தப் படல் வேண்டும்.


****************************
-6-


* கவிதை படைப்பவனுக்கும், படிப்பவனுக்கும் ஒரே அலைவரிசைத் தொடர்பை ஏற்படுத்தினால் மட்டுமே கவிதை புரியும். அதற்கு வாசகன் படைப்பாளியின் மன நிலையில் நின்று பார்க்க வேண்டியிருக்கிறது. சில கவிதைகள் உடனடியாகப் புரியலாம் அல்லது சில காலம் கழித்து வேறொரு அனுபவத்தின் சமயத்தில் புரியலாம் அல்லது குறிப்பிட்ட கவிதை அந்த வாசகனுக்கு புரியாமலே கூட சென்றுவிடலாம்.

* சில கவிஞர்களின் திருகலான சொற்களமைப்பு புரிவதில்லை என்ற கூற்றிருக்கிறது. தொடர்ச்சியான வாசிப்பின் மூலம் இத்தடையைத் தகர்த்துவிட முடியும் எனத் தோன்றுகிறது. அப்படி எதற்காகச் சிரமப்பட்டு அதனைப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால், மொழியில் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும் என்னும் நம்பிக்கை மொழியின் மீதான நம் ஆளுமை குறித்து உற்சாகமூட்டுவதாக இருக்கும்.

* என்னை இது குறித்து எழுதச் சொன்ன அதே நண்பர்(முத்து(தமிழினி)) தேவதேவன் போன்றோரின் கவிதைகளை உள்வாங்குவதில் சிரமமிருப்பதாகச் சொன்னார்.

தேவ தேவனின் ஒரு கவிதை
அமைதி என்பது.....

பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
நான் உன்னருகே வருகிறேன்
அமைதி என்பது மரணத்தருவாயோ?
வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ?
வாழ்வின் பொருள் புரியும் போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது
அமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ
எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ?

* படித்தவுடன் முதல்முறையிலேயே இக்கவிதையைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் புரிபட ஆரம்பிக்கும் போது நிறைய கோணங்கள் தெரிகின்றன.

* இக்கவிதையில் முதலில் வரும் அமைதி ஒரு நாளின் அமைதி. வேலை முடித்துக் களைத்து வரும் போது உணரும் அமைதி மரணத் தருவாயா அல்லது பறவை ஒன்று வந்தமரும் போது அசையும் கிளையா என்கிறார்.

-இரண்டாவது அமைதி வாழ்வின் பொருள் புரியும் போது கிடைக்கும் அமைதி. அது எந்த வயதிலாகவும் இருக்கலாம்(பெரும்பாலும் வாழ்வின் இறுதிக் கட்டம்). அந்த அமைதி வாழ்வின் தலைவாயிலா அல்லது எழுந்து செல்லும் பறவையால் அசையும் கிளையா என்கிறார்.

-முரண்கள் கவனிக்கப் பட வேண்டும். ஒன்று மரணத்தின் தருவாய் மற்றது வாழ்வின் தலைவாயில்.

-ஒன்று வந்தமரும் பறவையால் அசையும் கிளை மற்றது எழுந்து செல்லும் பறவையால் அசையும் கிளை.

-எந்த முரண் எந்த இடத்தில் என உணரப்படும் போதும், கவிதையில் இப்பகுதி புரிந்து கொள்ளப்படும் போதும், கவிதை பிரம்மாண்ட உலகத்தின் கதவினைத் திறக்கிறது. இனி நம் சிந்தனையைப் பொறுத்து ஏராளமான பொருள் தருகிறது.

* இந்த சூட்சுமம்தான் எனக்குப் பிடித்த அம்சம். கவிதை வாசகனுக்கு ஏதாவது விட்டுச் செல்ல வேண்டும் என்று சொல்வதுண்டு. அந்த- வாசகனுக்கு ஏதாவது ஒன்றினை விட்டுச் செல்வது என்பது இது போன்ற ஒன்றைத்தான்.


*********************
-7-


* எல்லோருக்கும் எல்லாக் கவிதைகளும் புரிவதுமில்லை. பிடிப்பதுமில்லை.

* கவிதை என்னும் பெயரில் மலிந்து கிடக்கும் சப்தம் மிகுந்த சொற்களின் கூட்டம் தாண்டி,கவிதையின் செறிவான முகம் அறியப்படல் வேண்டும். அக்கவிதை எந்த இயக்கத்தைச் சார்ந்ததாகவும் இருக்கட்டும்.


***********************

-8-


இவன் யார் கவிதை எப்படி இருக்க வேண்டும் என வரையறை செய்வதற்கு? என்பவர்களுக்காக

* வரையறை எதுவும் இங்கு நிர்ணயிக்கப் படவில்லை. இந்தக் கணத்தில் எனக்கு ஒரு கவிதை பிடிக்கிறதென்றால், இந்த அம்சங்கள் இருக்க வேண்டும் என எதிர் பார்க்கிறேன்.

* எந்தப் படைப்பாளியைப் பார்த்தும், இப்படித்தான் நீ எழுத வேண்டும் எனச் சொல்லும் உரிமை வாசகனுக்கு இல்லை. ஆனால் இப்படி இல்லை எனில் மொத்தமாகப் புறக்கணிப்பேன் எனச் சொல்லும் உரிமை அவனுக்கு இருக்கிறது.

* இது வாசக விருப்பம். இதில் நான் குறிப்பிட்டவற்றில் ஒரு அம்சம் கூட இல்லாத கவிதை எனக்குப் பிடிக்கலாம் அது கவிதையின் ஆற்றல். அல்லது இந்த அம்சங்கள் அனைத்தையும் முற்றாகப் புறந்தள்ளும் வாசகனும் இருக்கலாம். அது அவனது விருப்பம்.


***********************
-9-


இறுதியாக

* கவிதை(கவிதை என்றில்லை. எந்தப் படைப்பும்) இப்படித்தான் இருக்க வேண்டும் எனச் சொல்வதைப் போன்ற முட்டாள்தனம் வேறொன்று இலக்கியத்தில் இருக்க முடியாது எனத் தோன்றுகிறது. ஆனால் அதனைச் செய்திருக்கிறேன். ஒரு வாசகனாக மட்டுமே.

Aug 22, 2006

வாய் முகூர்த்தம்

சேலத்தில், பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது விடுதி வாசம். நான்காண்டுகளும், அந்தச் சதுர வடிவ விடுதிக் கட்டடதிலேயே முடிந்தது. ஊத்தாப்பமும், வெண்பொங்கலும் அதோடு பல்லி விழுந்திருக்கிறதா என்று பார்த்துப் பார்த்து எடுக்கும் தோசையும் எங்களிடையே மிகப் பிரசித்தம். தோசை சுடும் போது கல் மீது அந்தப் பல்லி விழுந்திருக்கலாம் என்றார்கள். மூடி வைக்காத மாவுக்குள் விழுந்திருக்கும் என்று நாங்கள் சொன்னோம்.

எனக்கும், சில நண்பர்களுக்கும் ஒரு நம்பிக்கை உண்டு. ஏதாவது நடக்கட்டும் என நான் சொன்னால் அதற்கு நேர் மாறாக நடக்கும் என்று. பெயில் என்று சொன்னால் பாஸ், பாஸ் என்று சொன்னால் பெயில், வெற்றிக்கு தோல்வி, தோல்விக்கு வெற்றி என. இதற்கு காதல், தேர்வு, விளையாட்டு என்றெல்லாம் விதிவிலக்கு இல்லை. எல்லாவற்றிற்கும் பொருந்தும். ராஜேஷ் கொடுத்த ரோஜாவை இந்து குப்பைக் கூடையில் எறிந்ததிலிருந்து, ராமமூர்த்தி ரேங்க் வாங்கியது வரை என் வாய் முகூர்த்தம் இருப்பதாக நம்பிக்கை.
Photobucket - Video and Image Hosting

தோசையில் பல்லி விழுந்த சமயம் மெஸ்ஸில் வேலை செய்வதற்கென சிறுவர்கள் வந்து சேர்ந்தார்கள். கணேஷ்,சக்தி வேல் இருவரும்தான் வந்தவர்களிலேயே சின்னவர்கள். பாக்கிய சுப்பிரமணிக்குதான் முதலில் 'பெட்' ஆனார்கள். எனக்கு கணேஷை பிடித்தது. ஆனால் சக்திவேலை பார்த்தாலே கடுகடுப்பு. ஒரு முறை அப்பாவுடன் தேர்வு குறித்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது, உள்ளே புகுந்த சக்தி வேல், இந்தத் தடவை பெயில் என்று சொன்னான். அப்பாவுடன் பேசிக் கொண்டிருப்பதையும் மறந்து ஆறெழுத்து கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டேன். அது குறித்தான அப்பாவின் கேள்விகளை எதிர்கொள்வதற்குள் பெரும் பாடாகிவிட்டது.

சிறிது நாட்களுக்குள்ளாக இருவரிடமும் சகஜமாகப் பேசினாலும் கணேஷின் மீது அக்கறை அதிகம். ஒரு முறை அசைன்மெண்ட் எழுதிக் கொண்டிருக்கும் போது இரண்டு பேரும் வந்தார்கள். கணேஷிற்கு காதல் கவிதை வேண்டுமாம். 13 வயதில் என்னடா காதல் என்றால் பெரிய மனுஷத்தனமாக பதில் சொன்னான். பத்து வருடம் புரிந்து கொண்டு, பின்னர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக. என் கவிதை என்னுடன் படிப்பவர்களுக்கே புரிவதில்லை, நான் எழுதிக் கொடுத்தால் அந்தப் பெண் திரும்பிக் கூட பார்க்க மாட்டாள், அதிகபட்சமாக உன்னை 'ஒரு மாதிரி' என நினைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லி, 'சென்னிமலை'பிரபு வை சிபாரிசு செய்தேன்.

கணேஷ் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. எலெக்ட்ரிகல் மெஷின் டிசைன் தேர்வன்று காலையில் அனைத்து சூத்திரங்களும் மறந்தது போலாகிவிட்டது. அந்த பாடத்தில் சூத்திரம் தவிர எதுவுமே இருக்காது. கணேஷிடம் சொல்லி மைக்ரோஜெராக்ஸ் எடுத்து 'பறக்கும் படை' சென்ற பிறகு தண்ணீர் கொடுக்கும் தருணம் தரச் சொன்னேன். இம்மியும் பிசகாமல் செய்து காப்பாற்றினான்.

ஒட்டுமொத்த ஹாஸ்டல் மாணவர்களுக்கும் ஒரு முறை குலதெய்வம் ஆனான். அந்தச் சமயம் மாணவர்களுக்கும், வார்டன் சுகவனத்திற்கும் இடையே பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. பெரும்பாலான பெற்றோர்களுக்கும் கடிதம் சென்று சேர்ந்துவிட்டது. நாளை கூட்டம் என்ற நிலையில், நாங்கள் மூச்சு திணறிக் கொண்டிருந்தோம். ஏற்கனவே தொலைபேசியில் ஒவ்வொருவருக்கும், அவரவரின் பெற்றோரிடமிருந்து அர்ச்சனை. எனக்கு கிட்டத்தட்ட காதில் இரத்தம் வடியும் அளவிற்கு. பிரச்சினை ஒன்றும் பெரிதில்லை. எங்களது விடுதிக் கட்டடத்தை ஒட்டியே மாணவிகளுக்கும் விடுதி. அறைகள் எல்லாம் தெரியாது என்றாலும் அவர்கள் விளையாடும் கூடம் தெரியும். சந்திரசேகர ஆசாத்தும், 'ட்ரிப்பிள் ஈ' சரவணனும் பெண்கள் மீது 'லேசர் லைட்' அடிக்க, சேர்மேனின் உறவுக்கார பெண்ணொருத்தி மயக்கம் அடைந்துவிட்டாள். இதற்குத்தான் கூட்டம். நாங்கள் புலம்புவதைக் கண்ட கணேஷ், கொஞ்ச நேரத்தில் வந்து நாளை வார்டன் வரமாட்டார் என்று சொன்னான்.

ஆச்சரியமாக இருந்தாலும் விசாரித்த போது சந்தோஷமாக இருந்தது. வார்டனுக்கு கொடுத்த டீயில் எதையோ கலக்கிவிட்டான். எலி மருந்தா அல்லது பினாயிலா என்று சொல்லத் தெரியவில்லை. அடுத்த நாள் மீட்டிங்கில் 'வேட்டி' வெங்கடாசலம்தான் பேசினார். அவருக்கு எங்களிடமே நன்றாக பேசத் தெரியாது என்பதால் கொஞ்சமும் கவலையோ பயமோ இன்றி இருந்தோம். இதில் இரட்டைச் சந்தோஷம் என்னவென்றால் வார்டனுக்கு மட்டுமில்லாது, எங்களை எல்லாம் போட்டுக் கொடுத்த 'வாட்ச்மேன்' சித்தனுக்கும் 'டீ' கொடுத்ததுதான். வார்டன் ஒருவாரம் விடுப்பில் சென்றார். ஆஜானுபாகுவான சித்தன் பதினைந்து நாள்.

சாந்தி தியேட்டரில் என்ன 'பிட்' எவ்வளவு நேரம் என்பது குறித்தெல்லாம் துல்லியமாகச் சொல்வான். அதுவரை அந்த விஷயத்தில் கோலோச்சி வந்த பாரதிக்கு கூட அதில் வருத்தம். விடுதியின் அதிகாரபூர்வ 'புக்ஸ் டிரான்ஸ்பர் ஏஜண்ட்' கணேஷ்தான். சகலவிதமான் புத்தகங்களையும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு, மூன்றாவது மனிதர்களின் கண்களில் படாமல் மாற்றிக் கொடுப்பான்.

நான்காவது வருட இறுதி நாளில் பெரும்பாலும் எல்லா மாணவர்களும் கிளம்பிவிட்டார்கள். நானும் கணேஷ் மட்டும் படம் பார்க்கச் சென்றோம். அவன் நிறைய பேசிக் கொண்டே வர, நான் கேட்டுக் கொண்டே வந்தான். காணவில்லை என்று மெஸ் மேனேஜர் திட்டப் போறார் என்றேன். 'டீ இருக்குண்ணா' என்று சிரித்தான்.

கிளம்பும் போது, ஐம்பது ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, சாந்தி தியேட்டருக்கா? என்றேன். நீ கொடுத்த காசை செலவு பண்ண மாட்டேன் என்றான். ஒரு மாதிரியாகி விட்டது. சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். இருந்தாலும் நல்ல மனதோடு சொன்னால் ஒன்றும் பிரச்சினையில்லை என முடிவு செய்து "நல்லா இருப்படா" என்று சொன்னேன். பஸ்ஸில் செல்லும் போது ஏதோ மனதிற்குள் உறுத்திக் கொண்டிருந்தது.

முதுநிலை படிப்பு, வேலை என்றெல்லாம் மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. கடந்த முறை ஊருக்கு சென்ற போது கல்லூரிக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தேன். குறிப்பாக கணேஷைப் பார்க்க வேண்டும். நான் சென்றிருந்த போது விடுதியில் பெரிதாக எதுவும் மாற்றம் இருக்கவில்லை. நீச்சல் குளம் மட்டும் புதிதாக இருந்தது. மாணவர்களின் முகம் எதுவும் பரிச்சயமானதாக இல்லை. சித்தன் 'நைட் டியூட்டி' என்றார்கள். பழனிதான் 'பகல் டியூட்டி'யில் இருந்தார். வெளியாட்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என்று என்னை வெளியே உட்கார வைத்தார். எனக்கு சிரிப்பு வந்தது. மெஸ்ஸிலிருந்து சக்தி வேலும் இன்னும் சிலரும் வந்தார்கள். கணேஷைக் காணவில்லை. சக்திவேலுக்கு என்னை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கவில்லை. கணேஷ் குறித்து கேட்டேன்.

"அது தெரியாதா? நீங்க எல்லாம் போன ஒரு மாசத்துக்குள் மாடியில் துணி காய வைக்கப் போயிருந்தான். அப்போ அங்க இருந்த கரண்ட் கம்பிய மிதிச்சு அப்பவே செத்துட்டான்" சொல்லிவிட்டு இழப்பெதுவுமற்றவன் போல நகர்ந்துவிட்டான். நான் "நல்லா இருப்படா" என்று சொல்லியது நினைவுக்கு வந்து என் குற்றவுணர்ச்சியை அதிகப் படுத்தியது. தேம்பி அழுது கொண்டிருந்தேன். யாராவது அந்தப் பகுதியைக் கடக்கும் போது அழுகையை மறைக்க வேண்டியிருந்தது, என் மனதை மேலும் கீறுவதாக இருந்தது.

சிறிது நேரத்தில் வந்த பழனி, கண்கள் கலங்கியிருப்பது குறித்து வினவினார். "கணேஷ்ணா..." என்றேன். "ஓ..அவனா...நேத்து புளிச்ச மோரை நிறையக் குடிச்சுட்டான்னு சொன்னாங்க. கக்கூஸ்ல இருப்பான். வரச் சொல்றேன் இரு" என்று உள்ளே சென்றார். என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த இடத்தில் சிரிக்க வேண்டுமா என்று கூட குழப்பமாக இருந்தது. கிளம்பி வந்துவிட்டேன்.

Aug 21, 2006

ஜொள்ளு தவிர வேறொன்றுமில்லை!!!

இன்று ஜொள்ளுக்கான பதிவு. இஷ்டமில்லாதவங்க, சின்னபசங்க(யாரெங்கே..நமுட்டுச் சிரிப்புடன்...நான் பெரியவனாக்கும்) அல்லதுவயது முதிர்ந்த பெரியவங்க எல்லாம் பார்க்க வேண்டாமய்யா......

கட்டிளம் காளைகளே...இளம் சிங்கங்களே..சீறி வரும் சிறுத்தைகளே....வாழ்க்கைவாழ்வதற்கே.....வாருங்கள்.... நாம் என்ஸாய்ய்ய்ய்ய்ய்ய் செய்யலாம். ;)

கதை எழுதும் தினங்களில் இலவச இணைப்பு கொடுக்கப் பட வேண்டும் என்னும்காரணத்தினால், இன்றைய இலவச இணைப்பாக ஆந்திராவில் சூடு கிளப்பும்நடிகைகளின் படமும், சிறுகுறிப்பும்.(குறிப்பா முக்கியம் என்கிறார்கள்சிலர்.) இதே எண்ணம் எனக்கும் இருப்பதால், குறிப்பின் அளவு குறைக்கப்படுகிறது.

இலியானா:

தேவதாசு, போக்கிரி என இரண்டு படங்களுமே அடைந்த வெற்றியில், இலியானாஇப்போது தெலுங்குப் பட உலகின் உச்சாணிக் கொம்பில் நிற்கிறார்.Photobucket - Video and Image Hosting

த்ரிஷா:

நம்ம ஊரு அம்மணி த்ரிஷா வழக்கம்போல முக சேஷ்டையை மட்டும் வைத்துக் கொண்டுஆந்திரவாடுகளை கட்டிப் போட்டிருக்கிறார். எத்தனை நாள் இது தேறும் என்பதுயாருக்கும் தெரியாது. கடைசியா சில பிளாப்கள். ஸ்டாலின் படம்சிரஞ்சீவியின் கடைசிப் படமாக இருக்கலாம் என்கிறார்கள். அம்மணிதான் கதாநாயகி.

Photobucket - Video and Image Hosting

ஸ்நேகா:

தமிழ்நாட்டைப் போலவேதான் இங்கும். குடும்பப் பாங்காகவும் இருப்பார்,கவர்ச்சியிலும் படம் காட்டுவார் என நம்புகிறார்கள். நாகர்ஜூனாவுடன்நடித்த ராமதாசு என்ற வரலாற்றுப் படம் சமீபத்தில் நன்றாக ஓடி இவரின்இடத்தை உறுதிப் படுத்தியிருக்கிறது.
Photobucket - Video and Image Hosting

சார்மி:

நாம்தான் இந்த ஆத்தாவைத் துரத்தி விட்டு விட்டோம். இங்கு இவர் தெலுங்கானாவில் ஆட்டம் போட்டால், ராயலசீமாவும், ஆந்திராவும் ஒட்டுமொத்தமாக அதிர்கின்றன.(அடேயப்பா...என்ன ஆட்டம்?என்ன ஆட்டம்!!!)

Photobucket - Video and Image Hosting


சமீரா ரெட்டி:

செளத்ரிகள் ராஜ்ஜியம்தான் தெலுங்குப் பட உலகில். ரெட்டிகளைப் தூக்கி விட்டுக் கொள்கிறார்கள் ரெட்டிகள். (எனக்கு அப்படித் தான்தோன்றுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?)
Photobucket - Video and Image Hosting


அனுஷ்கா:

சூப்பர் என்ற படத்தில் இரண்டாவது நாயகி. இப்பொழுது ரவி தேஜா என்ற ஒரு"அன்குள்"(அங்கிள் அல்ல)டன் "விக்ரமார்குடு" என்ற படத்தில் "ச்சும்ச்சும்வாயா..சும் சும் வாயா" எனப் பாடி ஆடி மழை காலத்தில் சூடேற்றுகிறார்.ஜுர்ர்ருரும் ஒச்சுந்தி"(காய்ச்சல் வந்துடுச்சு)என்ற பாடல் வேறு.காய்ச்சல் யாருக்கு என்பதுதான் முக்கியம்.

Photobucket - Video and Image Hosting

ஷ்ரேயா:

டெல்லிக்கார அக்கா(அக்கா என்றால் எனக்கு அக்கா என்று நினைக்க வேண்டாம்).எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறார்!நம்ம சூப்பர் ஸ்டார்"சோடி"ங்கோவ்.

Photobucket - Video and Image Hosting

காம்னா:

இந்தப் பாப்பாவை எனக்கு மிகப் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும்.நன்றாக(டபுள் மீனீங் இல்லை ராசுகளா) பாருங்கள்!! அதனால் "நோகாமெண்ட்ஸ்".

Photobucket - Video and Image Hosting

ஐஷா டாக்கியா:

இவர் நடித்த சூப்பர் படம் ஓடவில்லை. ஆனால் இவர் 'ஓடியது' ஒன்று போதும்.இன்னமும் பெருமூச்சு வாங்கிக் கிடக்கிறார்கள். நானும்தான்.

Photobucket - Video and Image Hosting

கொசுறு:

இலவச இணைப்பில் கொசுறு கொடுப்பது அவசியமாகிறது. அதற்கு தமிழ் கூறும்நல்லுலகம் அறிந்த நமீதா(ஹி...ஹி)

Photobucket - Video and Image Hosting

குறிப்பு:

மக்களே இது ச்ச்ச்சும்மா டிரைலர்தான். மெயின் படம் நாளை மறுநாள் அடுத்தகதையின் இலவச இணைப்பாகக் கொடுக்கப்படும். இன்று பார்த்த படங்கள் எல்லாம்என்ன? ஜுஜுபி!!! அடுத்த படத்தின் குளிர்ச்சியைப் பாருங்கள். ஜமாய்க்கும்.அதுவரை வெயிட்டீஸ்!!!

(டிஸ்கி ;) : கதைக்குதான் இலவச இணைப்பு என்று முடிவு செய்யப்பட்டது.அக்காக்களைப் பார்த்தால் இவர்களுக்குதான் முதலிடம் என்பதால் கதை மாலையில்போடப்படும்....... :) )

தேசியம்+சுதந்திரம்+பெரியார்+ஆண்மை.

தேசியம், சுதந்திரம், குப்பைமேடு என அடி பின்னி எடுக்கிறார்கள். பெரியாரை உள்ளே இழுத்துப் போட்டு ஒரு குத்துப் பாட்டு வேறு. ஆண்மகன்/பெண்மகள் என இன்னொருத்தர் "கும்தலக்கடி"யாக எழுதுகிறார். ஒரே விஷயம் பல பதிவுகளில் நாறடிக்கப்படுவது புதிதல்ல. ஆனால் பிச்சைக்காரன் பாத்திரம் போல எல்லோர் வீட்டு சோற்றையும் இப்பொழுதுதான் குழைத்து அடிக்கிறார்கள் என நினைக்கிறேன்.


இவர்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்தால், தேசியம், சுதந்திரம் எல்லாம் ஒரு குழு பேச வேண்டும். பெரியார், திராவிடம், பருத்திக் கொட்டை, புண்ணாக்கு குறித்து எல்லாம் பேச இன்னொரு குழு தயாராக இருக்கிறது. எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம், விஜயகாந்த்தின் காமராஜர், அண்ணா கலந்த புது'இசம்' போல பலவற்றையும் கலந்து எழுத இன்னொரு குழு தீட்டிக் கொண்டு நிற்கிறது.


சுதந்திரம்னா என்னய்யா? யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம், செயல்படலாம். அடுத்தவனை பாதிக்காத வகையில். எங்கே அனுமதிக்கிறீர்கள்? அடிமட்டத்தில் இருந்து வந்தவர் சுதந்திரத்தைக் கிழித்தால் தேசபற்று பீய்ச்சி அடிக்கிறது. தனிமனித தாக்குதல் வரை இழுத்துச் செல்கிறது. காலம் காலமாக நசுக்கி வைத்த இடத்திலேயே சூடு வைக்கிறீர்கள். சுருங்கி கிடக்கட்டும் ....மவனுக என்று.


அமெரிக்காவின் பிடியில்லாமல் செயல்பட முடிகிறதா நாம் அமைத்து வைத்திருக்கும் நடுவண் அரசால். அது காங்கிரஸ் ஆக இருக்கட்டும் அல்லது பா.ஜ.க வாக இருக்கட்டும். எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு சப்தமும், ஆளும் கட்சியெனில் அமெரிக்காவுக்குக் குனிந்து போடும் கூழைக் கும்பிடும் பார்த்துப் பார்த்து பழகிவிட்டது.


அணு ஆயுத ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்றால் செய்வார்களா? அறிக்கை மட்டும்தானே சமர்ப்பிக்கப் படுகிறது? அடேயப்பா என்ன வீராவேசம்?.


ஈரானிலிருந்து வருவதாக இருந்த எண்ணெய்க் குழாய்த் திட்டம் என்ன ஆனது? அமெரிக்க எதிர்ப்பினால்தானே கிடப்பில் போட்டீர்கள்? இல்லை.. பாகிஸ்தான்காரன் வழி விட மாட்டான் என்று சொல்லி காமெடி பண்ணப் போகிறீர்களா?


அமெரிக்கக் கூட்டுப் படையின் பித்தலாட்டங்களையும், வன்முறை வெறியாட்டங்களையும், ஏவி விட்டு விளையாடும் சில்லரைத் தனங்களை வேடிக்கை மட்டும்தானே பார்க்கிறது நமது சுதந்திர அரசு? ஒரு கேள்வி கேட்க முடிகிறதா? 100 கோடி மக்கள் என்கிறோம். உலகில் ஆறு பேரில் ஒருவன் இந்தியன் என்கிறோம். மிகப்பெரிய ஜனநாயக நாடு நாம் என்கிறோம். இதுதான் நம் தைரியம். ராஜதந்திரம் எனச் சப்பைக் கட்டு கட்டுவீர்களோ?


அட விடுங்கய்யா!!! உலகச் சமாச்சாரம் எல்லாம் பெரிய மேட்டரு.
உள்நாட்டுக்கு வருவோம். பிரச்சினை என்றால் கோகோ கோலா அல்லது பெப்ஸியை மிரட்ட முடியுமா? 'கறுப்புப் பட்டியல்'லில் வைப்போம் என பூச்சாண்டியாவது காட்ட முடியுமா? கோலி சோடாவையும், வின்சென்ட் மார்க் குளிர்பானத்தையும் அடித்து மிரட்டிதானே அவனது கொடி பறக்கிறது இங்கே?
எந்த வெளிநாட்டு நிறுவனத்தையும் மிரட்ட கூடாது. அவன் மூட்டை கட்டிவிட்டால் அந்நியச் செலவாணி திவாலாகிவிடும். பார்த்துக் கொள்ளுங்கள் நம் "தன்னிறை"வை. அவன் சிறுநீர் அடைத்து விற்றால் கூட நம் நடிகன் கோடியை வாங்கிக் கொண்டு வாயில் ஊற்றிக் காட்டுவான்.
சுதந்திரம் என்றால் இன்னொன்றும் இருக்கிறது. "சுய சார்புத் தன்மை" அடுத்தவன் தயவு தேவை இல்லை என்ற தன்மை. சொல்ல முடியுமா ஒரு சராசரி இந்தியனால்? காலையில் பல் விளக்க ஆரம்பிப்பதிலிருந்து, படுக்கப் போகும் வரையிலும் எல்லாவற்றிலும் வெளிநாட்டுப் பொருள்தான் இருக்கிறது.


வாங்கிய சுதந்திரத்தை கொண்டாடுவோம். முற்றாகச் சுதந்திரம் இல்லை என்பதல்ல என் வாதம். அன்னியனை துரத்தி விடுதல் மட்டுமன்று விடுதலை. கிடைத்திருக்கும் அரைச் சுதந்திரத்தில் பாதிக்கப்பட்டவன் கதறினால் காது கொடுங்கள். கண்ணை மூடிக் கொண்டு தேசபக்தியை முன் வைத்து வாந்தியெடுக்க வேண்டாம்.


பத்தாம்பசலித்தனமாக பேசுகிறான். இது எல்லாம் தாராளமயம், உலகமயம் காலம் என்று சொல்ல வருகிறீர்களா? ஒன் நிமிட்.


நான் இல்லை என்றெல்லாம் சொல்லவில்லை. அப்படியே இருக்கட்டும். அரைலட்சம் சம்பளம் எல்லாம் எந்தக் காலத்தில் நினைத்துப் பார்த்திருக்கும், இந்த பரதேசிகள் நிறைந்த பாரத நாடு.


இந்த கஸ்மாலம் பிடித்த சட்டத்திருத்ததுக்கு கையெழுத்துப் போட மாட்டேன் என ஜனாதிபதி கூட சுதந்திரமாகச் சொல்ல முடியவில்லை. ஒற்றைக்காலில் நின்று கையொப்பம் வாங்குகிறார் நம் பிரதமர். காபினெட்டை மீற குடியரசுத்தலைவருக்குத்தான் அதிகாரமில்லையே? அடப் பாவிகளா....


உலக விஷயத்தில் இருந்து நம் அரசியல்வாதிகள் ஆடும் ஆட்டம் வரை நம் சுதந்திரம் பல்லிளிக்கிறது.


ஜால்ரா தட்டுக. புனிதனாக மாறுக. நாறிக்கிடக்கும் பகுதியைப் பாராதே. குப்பையைக் கிளறாதே. அப்படி எல்லாம் செய்தால் நல்லவன். வெரி குட்.


பேச விடுவதில்லை, எழுத விடுவதில்லை, சுயமாக நிற்க முடிவதில்லை. பிறகென்ன சுதந்திரம்....வெங்காயம்!


சுதந்திரத்திற்கென அடிப்படை இலக்கணமே இல்லாத போது, அது பற்றி ஒருவர் பேசினால் ஏன் குத்துது? குடையுது?

அட வெங்காயம் என்றவுடன் நம்மாளு நினைவுக்கு வருகிறார். நம்மாளுக்கு தமிழன் நாறுவதை மாற்றவே ஒரு ஜென்மம் தேவைப் பட்டிருக்கிறது. அவர் இருந்த காலகட்டத்தில் வடக்கு வாழ்வதும், தெற்கு தேய்வதும் நிகழ்ந்த உண்மைதானே? ஆரியனிடமிருந்து தமிழனைப் பிரித்து அவனுக்கென இருந்த அடையாளம் காட்டவே பாவம்.. மனுஷன் படாத பாடு பட்டிருக்கிறார்.

அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும் சுதந்திரம் வந்தால் திராவிடன் யாரிடம் அடிமை ஆவான் என்று. அடிமை என்றான போது எஜமானன் எவனாக இருந்தால் என்ன? இந்த மனநிலை தான் அவருக்கு இருந்திருக்கும். அதே வழியில் வந்த அண்ணா, கருணாநிதி பின்னர் ஒருங்கிணைந்த இந்தியாவையும், இந்திய இறையாண்மையையும் ஏற்றுக் கொண்டது போல், பெரியாரின் வாழ்வும் நீடித்திருக்குமாயின் அவரது எண்ணம் மாறி இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. பரவாயில்லை. இந்தப் பசங்கள்(திராவிடன்) கூட மேலே வருவதற்கான வாய்ப்பிருக்கிறது எனத் தெரியும் சமயத்தில்.

அவரை ஏன் இந்த விளையாட்டில் கொத்து புரோட்டா போடுகிறீர்கள் என்று தெரியவில்லை.

ஓ...... மீள் பார்வை? அது சரி... நடக்கட்டும்.. நடக்கட்டும்.......


வழக்கம் போலவே டிஸ்கி: இது யாருக்கும் வக்காலத்து வாங்கவோ, யாரின் காலையும் வாரி விடவோ எழுதப் படவில்லை. ஆனால் இது குறித்து எழுத வேண்டும் என்பதற்கான தூண்டுதல் - போன வார, இந்த வாரப் பதிவுகள் தான்.

***அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 அரிவாள்கள்

இந்தச் சொலவடை கொங்குப் பகுதியில் பிரபலம். அறுக்க முடியாதாவன் இடுப்பைச் சுற்றிலும் ஐம்பதெட்டு அரிவாள்களைச் சுற்றிவைத்திருப்பது போல ஆகிவிடுமோ என்ற தயக்கம் இருக்கிறது. இந்த நட்சத்திரம் என்னும் ஒரு வார காலம்.

***************************
அது குண்டக்க மண்டக்க காலம். சினிமாவில் பாட்டெழுதிவிடலாம் என்ற நம்பிக்கையில், சென்னையில் எட்டு மாத காலம் சுற்றினேன். வார இறுதிகளில் கவிதை ஏட்டினைச் சுமந்து கொண்டு சென்னை நகரத்தின் முக்கியமான தெருக்களில் அலைந்ததை இப்பொழுது நினைத்தால் வலியுணர்த்தும் சந்தோஷமாக இருக்கிறது. நிறைய திரைப் பிரபலங்களைச் சந்தித்தேன். முதலில் திரைப்பட கவிஞர்கள், பின்னர் இசையமைப்பாளர்கள், அதன் பிறகு புதிய இயக்குனர்கள்.

சினிமா திகிலூட்டக் கூடியது. எழுதும் போது அதன் பிரம்மாண்டத்தை எந்தச் சொற்களுக்குள் அடைக்க முடியும் என்று தெரியவில்லை.

பிரபல இயக்குனர்களைச் சந்திக்கும் தருணம் வந்த போது 'ப்ராஜக்ட்' கழுத்தைப் பிடித்தது. அந்தக் கல்வியாண்டை முடிக்கும் சமயம், வழி தவறிவிட்டேன். "விடுடா மணி! இன்னொரு கண்ணதாசனை சினிமா இழந்துவிட்டது" என ஆறுதல் வந்தது. கொஞ்சம் தேற்றிக் கொண்டேன். (நானே சொல்லிக் கொண்ட ஆறுதல் அது)

******************************

மனுஷ்ய புத்திரன் அவர்களை, தமிழச்சியின் "எஞ்சோட்டுப் பெண்" புத்தக மதிப்புரை விழாவில் சந்தித்தேன். அதன் பிறகு உயிர்மை அலுவலகத்தில் இலக்கிய உலகில் எனக்கு அறிமுகமாகாத புதிய பெயர்கள், படைப்புகளை அறிவதற்கும் நிறைய கற்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது.

ஒரு சந்தர்ப்பத்தில், மனுஷ்ய புத்திரன் அவர்களின் கூற்றில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. தெரியப்படுத்தினேன். என் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, நான் பிரச்சினையின் தன்மையை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்று பதில் சொன்னார். ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் மகிழ்வாக இருந்தது.

**********************************

இதன் பின்னர் வந்த காலம், நவீன கவிதைகள், அதன் பன்முகம், புரிந்து கொள்ளும் யுக்திகள் போன்றவை எனக்குப் பிடிபட ஆரம்பித்த காலகட்டம். கவிதைகளின் திருகலான சொற்கள், மொழி நடை, படிமத்தைக் கொண்டு படிப்பவனின் மூளைக்குள் வினாக்களைச் சொருகும் வித்தை ஆகிய அம்சங்கள் என்னை ஈர்த்தன. அவற்றை முதன் முறை உள்வாங்குவது கடினம். பிடி கிடைத்துவிடும் போது உதறித் தள்ளுவதும் இயலாத காரியம்.

அதுவரையிலும் எழுதி வைத்திருந்த கவிதைகள் மெதுவாக மரணிக்க ஆரம்பிக்க, வேறு வடிவக் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். சிலர் புரியவில்லை என்று சொல்லும் போதெல்லாம், இன்னொரு நகுலன் உருவாகிறான். (இதுவும் என் கமெண்ட்)

***************************

எனக்குத் திமிர் வந்துவிட்டது. ஒரு பதிவில் இருந்த கவிதைகளைத் தெனாவெட்டாக விமர்சித்தேன். அடிப்பதற்கு ஆள் அனுப்பாமல், குழுவாகச் சேர்ந்து, என்னைப் பற்றி எழுதி எழுதியே அடித்துப் பிரித்தார்கள். 'அள்ளு விடுதல்' என்பதனை அப்பொழுதுதான் உணர்ந்தேன்.

தேசிகன், வலைப்பதிவு உலகத்தை அறிமுகப் படுத்தினார். அதன் பின்னர் நான் செய்த 'ரவுசுகள்' யாவும், இந்தப் வலைப்பூவில் சாட்சியாக இருக்கிறது.

**************************
முட்டையில் படைத்ததுதான் கட்டைக்கு போகும் வரைக்கும்:

"உட்டாலக்கடி கிரி கிரி. சைதாப்பேட்டை வடகறி" என்ற வாசகம் எனக்குத் தெரிந்த முதல் கவிதை. எங்கள் ஊரில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் தேர்தல் சமயத்தில் உபயோகித்தார்கள். பள்ளி நூலகத்தில் இருந்து கவிதை நூல்களை சுட்டுவிடுவேன். கவிதைப் புத்தகங்கள்தான் அளவில் சிறியவை. சட்டைக்குள் எளிதாக நுழைக்கலாம். அவைதான் கவிதையின் மீதான ஆர்வத்தைக் கூட்டியிருக்கும் எனத் தோன்றுகிறது.

இன்னமும் கூட நாவல் படிப்பதென்பது, பத்தாம் வகுப்பு கணக்குத் தேர்வு போல பயமுறுத்துகிறது.

********************************
முக்கியமான நவீன கவிஞர்களின் கவிதைகளை பதிவிலேற்றிய போது, நான் காமம் சார்ந்த கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக சிலர் வருத்தப் பட்டனர்.

"படைப்பாளி-அவன் எந்தத் துறையைச் சார்ந்தவன் என்றாலும் மித மிஞ்சிய பாலுணர்வு இருக்கும். பாலுணர்வு படைப்புசக்தியின் மறு வடிவம்" என்ற ஓஷோவின் கூற்று நினைவில் வருகிறது. பாலுணர்வினை மறைத்து வைப்பவர்கள் புனிதர்களாகிறார்கள். வெளிப்படையாக பேசுபவன் பண்பாடு, சமுதாயத்தின் எதிரி ஆகிறான். பேசுபவன் தனக்கு அக்கா,தங்கைகள் இருக்கிறார்களா என்னும் வினாவிற்கு கண்டிப்பாக பதில் தந்தாக வேண்டும். சமூகம், கட்டமைப்பு எனச் சொல்லி பாலுணர்வை மறைத்துக்கொள்ள தமிழன் கட்டும் வேஷம் திரைப் படத்தின் "சோக நகைச்சுவை"யை ஒத்திருக்கிறது.

************************************
எட்டாம் வகுப்பில் ஆரம்பித்தத பழக்கம் திராவிடக் கழகத்தின் கூட்டங்களுக்குச் செல்வது. "கடவுள் ஒழிக!" என்று சொல்லி 'செமத்தியாக' வாங்கிக் கட்டியிருக்கிறேன். வீட்டில் கண்காணிப்பு அதிகப் படுத்தப் பட்டது. அதையும் மீறி திராவிடம், ஈழம், இட ஒதுக்கீடு பற்றியெல்லாம் அறிமுகம் கிடைத்தது. சக்கிலி பையனுடன் விளையாடுவதாகவும், பறைப் பையனுடன் சேர்ந்து சைக்கிளில் போவதாகவும் ஊருக்குள் 'மானம் போவதாக' அம்மா புலம்புவதில் கூட புரட்சிக்காரன் என்ற சந்தோஷம் இருந்தது.

வெங்காயம்.

வாழ்க்கை குறித்தான பயம் புரட்சி குறித்தெல்லாம் யோசிக்க விடாமல் செய்து வென்று கொண்டிருக்கிறது. இது நாடகத்தனமாக இருப்பினும் அதுதான் உண்மை.
*****************************
திராவிடனாக இருப்பவன், இந்துவாக இருக்கக் கூடாது எனச் சொல்லி வைத்தது யார்? ஆரியன் மட்டுமே இந்து என்றால் திராவிடன் என்பவன் யார்? அவனுக்கென இருக்கும் மதமென்ன? திராவிட உணர்வாளன் என்பவனெல்லாம் நாத்திகன், இந்து மத எதிர்ப்பாளன் என்பதில் எனக்கு துளியும் சம்மதமில்லை.

பிராமணீய ஆதிக்கத்தை எதிர்க்க இந்து மதத்தை எதிர்க்க வேண்டுமென்பதுமில்லை. மற்ற மதங்களைத் தலையில் சுமந்து வருடிக்கொடுக்க வேண்டிய அவசியமுமில்லை. போலித் திராவிடம் பேசும் அரசியல்வாதிகள் கட்டமைத்த போராட்ட வழிமுறைகள் மாற்றப்படல் வேண்டும்.

இந்துத்துவத்திற்கு ஆதரவாகப் பேசும் பா.ஜ.கவை எதிர்க்கலாம், பஜ்ரங்-தளத்தை எதிர்க்கலாம், ஆர்.எஸ்.எஸ் ஐ எதிர்க்கலாம். அவர்களை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்துத்துவத்தை எதிர்ப்பது சரியான வழிமுறையில்லை என்பேன்.

*******************************
கம்யூனிஸம் குறித்து சற்று நம்பிக்கை இருந்தாலும், கம்யூனிஸ்ட்களின் பச்சோந்தித் தனத்தால் வெறுப்பே அதிகம். காரியம் ஆகும் வரை உடனிருப்பவர்கள், கொள்கையெல்லாம் முக்கியமற்ற காரியவாதிகள் என்ற பிம்பம் அவர்கள் மீது உண்டு.

சி.எஸ்.சுப்பிரமணியம் என்ற முதுபெரும் கம்யூனிஸ்ட் கோபிச் செட்டிபாளையத்தில் வாழ்கிறார். ரஜினி பாமிதத்தின் அறிமுகம் மூலம் கம்யூனிஸம் பயின்றவர். ஜீவா போன்றவர்களுடன் சேர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் இங்கிலாந்து பத்திரிக்கை ஒன்றிற்காக குறிப்பெடுத்தவர். கம்யூனிஸ்ட்களின் அதிகாரப்பூர்வ நாளேட்டின் ஆசிரியர் என பல பொறுப்புகளில் இருந்தவர்.

தொண்ணூற்றாறு வயதில் உறவுகள் எதுவுமில்லாமல், தனிமையில் அல்லலுறும் அவரை "கொள்கைவாதிகள்" கண்டுகொள்ளும் "லட்சணம்" இந்த இயக்கத்தின் மீதான வெறுப்பை அதிகமாக்குகிறது. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறியவர்கள்தான்.

*********************************
ரஜினிகாந்த் அவர்களை தலைவன் எனக் கொண்டாடியிருக்கிறேன். ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்குச் செல்லும் முன் தினமும் ஒரு ரஜினி படம் (25 பைசா) வாங்கித் தர வேண்டும். படையப்பா படம் பார்க்க சேலம் திரையரங்கில், போலீஸ்காரரிடம் வாங்கிய அடிகள் மறக்க முடியாதவை. இரத்ததோடு 'தலைவர்' கலந்திருந்தார். அவரை உபயோகப்படுத்திக் கொண்டு கறிவேப்பிலை ஆக்கிவிட்டார்கள்.

ஆழ்மன பயமே அவரின் அனைத்து தோல்விகளுக்கும் காரணம்.

இப்பொழுது யாராவது என்னிடம், நான் வாழும் கட்டத்தில் வாழ்ந்த உலகின் தைரியமற்ற வி.ஐ.பி யார் எனக் கேட்டால் ரஜினிகாந்த் என்று சொல்வேன். மிக வருத்தமாக இருக்கிறது.

***************************
ஹைதராபாத்தில் இருந்த காலம் ஒரு வருடம் மட்டுமே. ஆனால் இது தனிமையின் வேதனையும், இனம்புரிந்து கொள்ள முடியாத துக்கத்தின் கசப்பும் நிறைந்த கசங்கலுக்கு என்னை உட்படுத்தி வருகின்றன. அந்தக் கணத்தை தாண்டிவந்து ரசிக்கும் போது "துன்பியல் தரும் இன்பமாக" இருக்கிறது. இந்த ஊரின், நேற்று என்பதனை நினைத்தால் மகிழ்ச்சியும், இன்று என்பது கடந்துவிட முடியாத துன்பமாகவும், நாளை புதிர்களைச் சுமந்து கொண்டு என்னை ஆக்கிரமிக்க வரும் பயம் என்பதும்- ஒட்டுமொத்த வாழ்வின் துளி அடையாளமாகத் தெரிகிது.

******************************
செய்த தவறுகள் யாவுமே அனுபவமாக மாறிவிடுவது பேரனுபவம். அரைவேக்காட்டுத் தனமாக ஏதாவது எழுதிவிட்டு திரும்பப் படிக்க நேரும் போது வெட்கம் தின்கிறது. அடுத்த முறை மாற்றிவிட முயல நினைத்துதான் எழுதுகிறேன். அடுத்த முறை அதுவும் அப்படியே தெரிகிறது. நான் வளர்கிறேனா அல்லது தேங்குகிறேனா என்பதை புரிந்து கொள்ள முடியாததே வாழ்வின் புதிர்களை அவிழ்க்கும் ஆதாரமாக இருக்கிறது.

மற்றவர்களின் இந்த மாதிரியான செயல்கள் பரிகாசத்திற்குரியனவாகவும், நான் செய்யும் போது வெட்கத்திற்குரியனவாகவும் அமைவது கூட நகைச்சுவையே.

*****************************
தயக்கம் இருந்தாலும், சிறு நம்பிக்கையும் இருக்கிறது. உங்களின் வாழ்த்துக்கள், ஆதரவுடன் நம்பிக்கை துளிர்க்கக் கூடும்.

நன்றி.

Aug 8, 2006

செக்ஸ் இல்லாத கதை.

"ஏண்டா செக்ஸ் பத்தி சொல்லாம கதை எழுதமாட்டியா" கண்ணன் இப்படித்தான் ஆரம்பித்தான். கண்ணணைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். என்னோடு படித்தவன் என்றாலும் நன்றாகப் படித்தவன். ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் இருந்த சமயங்களில் எல்லாம், எங்கள் ஊரில் இருந்த சில அழகான பெண்களுக்கு கதாநாயகன். இது என்னைப் போன்ற சிலருக்கு பயங்கர பொறாமையாக இருக்கும். கில்லி, கிரிகெட், காதல் மட்டுமில்லாமல் எல்லா விஷயங்களும் பேசுவான். உடனே "அமெரிக்கா-கியூபா விவகாரம், நெரூடா கவிதைகளாக இருக்கும்" என நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல. விடலைகளுக்கான விவகாரங்கள் தான். அந்தக் காலகட்டத்தில், அந்த விஷயங்களில் "எங்கள் அண்ணன்" கண்ணன் ஒரு சூரப்புலி.

அவன்தான் நேற்று அப்படிக் கேட்டான்.

"இல்லையே. எழுதுவேனே. ஆனா நான் எல்லாம் எப்போ பெரிய எழுத்தாளன் ஆகிறது. அப்படி எழுதினா உடனே படிக்கிறாங்கடா"

"நான் ஒரு மேட்டர் சொல்றேன். குஜால் மேட்டர். ஆனால் நல்ல கதையா நீ மாற்றி எழுதணும். சரியா?"

சவாலில் வென்றால் 'டிரீட்' உண்டென உறுதியளித்தான். சரியென்று ஒத்துக் கொண்டேன்.

அவனுக்கு பக்கத்து வீட்டில் ராஜேந்திரன் என்ற போலீஸ்காரர் உண்டு. அதிசயம் என்னவென்றால் அவர் பைசா லஞ்சம் வாங்காத போலீஸ் என்பது. அதற்கு காரணம் இருக்கிறது. கல்யாணம், குடும்பம், குழந்தை குட்டி என்ற எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாத மனுஷன்.

மற்ற எந்த விவகாரமாக இருந்தாலும் அவரை அனுப்பும் இன்ஸ்பெக்டர், விபச்சார கேஸ்களுக்கு மட்டும் அனுப்புவதில்லை. இவர் சரியான சபலக் கேஸ் என்பதால் இந்த விவகாரத்தில் மட்டும் கோட்டை விட்டு விடுகிறார்.

ஒரு சமயம் கச்சேரி மேட்டில் ஒரு வீட்டில் சிலர் சந்தேகத்திற்குரிய விதத்தில் இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. சந்தேகம் என்றால் வேறெதுவுமில்லை. விபச்சாரம்தான். ராஜேந்திரனைப் பற்றி தெரியாத புது இன்ஸ்பெக்டர் அவரை அனுப்பி இருக்கிறார். வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் செய்துவிட்டார். அடுத்த இரண்டு நாட்கள் ராஜேந்திரனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. விசாரித்து விட்டு இன்ஸ்பெக்டர் அந்த வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்தவர்கள் புதிதாக வந்த பெண்ணைக் காணவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். இரு தரப்பினருக்கும் அதிர்ச்சி. ராஜேந்திரன்தான் அவளைக் கொடைக்கானல் அழைத்து சென்று இருக்கிறார். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் "தள்ளிக் கொண்டு".

சஸ்பெண்ட், டிஸ்மிஸ் என்று போக வேண்டிய விவகாரம் மேலதிகாரிகளின் தயவால் சுமூகமாக முடிந்திருக்கிறது. விபச்சார வழக்குகளுக்கு செல்லும் போது மட்டும் இவரைக் 'கழட்டி'விட்டுச் செல்வதே மற்ற போலீஸ்காரர்களுக்கு பெரும்பாடு ஆகிவிடுகிறது. சிறு பிள்ளையைப் போல அடம் பிடிப்பாராம். "நானும் வருகிறேன். நானும் வருகிறேன்" என்று.

நான் சொன்ன விவகாரம் இனிமேல்தான் வருகிறது. லலிதா புதிதாகக் ராஜேந்திரன் பக்கத்து வீட்டுக்கு குடி வந்தவள். முப்பது வயதிருக்கும். 'செமக் கட்டை' என்று கண்ணன் வர்ணித்தான். எல்லோரும் அவளை நடிகை ஹீரா போல் இருப்பதாகச் சொல்கிறார்களாம். அவளோடு தற்போதைக்கு யாரும் இல்லை. தனியாகத் தான் அந்த வீட்டில் வாசம்.

கொஞ்ச நாள் யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருந்திருக்கிறாள். ஆனால் நிலைமை வெகு சீக்கிரமாக மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம் ராஜேந்திரன் அவள் வீட்டிலேயே தவம் இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். ரிட்டயர்டு ஆகும் சமயத்தில் அந்தாளுக்கு எதற்கு இதெல்லாம் என்பவர்கள் ஒரு குழுவாகவும், இதில் என்ன தவறு என்று பேசுபவர்கள் ஒரு குழுவாகவும் ஊருக்குள் பிரிந்து விட்டார்கள்.

ஊரில் இருந்த சில இளந்தாரிகளுக்கு அரைக் கிழவனுக்கு லலிதா சிக்கியதில் ஏகப்பட்ட பொறாமை. ராஜேந்திரன்-லலிதா கதை ஊருக்குள் பரவலாக சுற்றுவதில் இவர்களின் கைங்கர்யம் அதிகமாக இருந்தது. செந்தில் என்ற சிறுவன்தான் தகவல் பரப்பும் கடமையைச் செய்து வந்தான். இளந்தாரிகள் சொல்லித் தருவதை ஊருக்குள் அப்படியே ஒப்பிப்பான். சில சமயம் அவனே இட்டுக் கட்டும் அளவிற்கு தேறி இருந்தான்.

"அந்த அக்கா துணியே போடலை. சன்னல் வழியா எட்டிப் பார்த்தேன். அப்போ அந்த போலீஸ் மாமா.....அய்ய்ய்ய்யயய" என்று முழுதாகச் சொல்லி முடிக்காமல் ஓடுவான். பலருக்கும் "சப்"பென்று ஆகிவிடும். ஆனால் உறுதிப் படுத்தப் பட வேண்டிய அந்த விஷயத்தை மட்டும் உறுதிப் படுத்திக் கொண்டார்கள்.

திடீரென்று ஒரு ஞாயிற்றுக் கிழமை லலிதா வீட்டில் கூட்டம். அவள் தூக்குப் போட்டுக் கொண்டாள். தூக்குப் போட்டு இரண்டு நாட்கள் ஆகி இருக்கலாம். சற்று வாடை வர ஆரம்பித்து விட்டது. ராஜேந்திரன் வீடும் திறக்கப்படாமல் இருந்தது. பரபரப்பு தொற்றிக் கொண்ட சில மணி நேரத்தில் ஆற்றங்கரையில் ராஜேந்திரனின் பிணம் கிடப்பதாக தகவல் வர பலரும் அங்கே சென்றனர்.

ஊருக்குள் இவர்களின் விஷயம் தெரிந்து விட்டதால் தற்கொலை செய்து கொண்டார்கள் எனப் பேசிக் கொண்டனர். சிலர் வேறு மாதிரி சொன்னார்கள். ராஜேந்திரனுக்கு சிறு வயதில் ஏதோ ஒரு பெண்ணிடம் தொடர்பிருந்தததாம். அவளின் மகள்தான் லலிதாவாம். இந்த விஷயம் இரண்டு பேருக்கும் இப்பொழுதுதான் தெரிந்திருக்கிறது. தந்தை மகள் என்ற குற்றவுணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டார்களாம்.

கண்ணன் சொல்லி முடித்தான். எது உண்மை என்று அவனுக்குத் தெரியவில்லை.

"செக்ஸ் இல்லாத கதை" என்று தலைப்பிட்டிருக்கிறேன். இனிமேல்தான் எழுத வேண்டும். எனக்கு என்னமோ சன்னலுக்குள் செந்தில் பார்த்த விஷயம்தான் எழுத வருகிறது. 'டிரீட்' கிடைக்காது என்று தோன்றுகிறது.