லைசென்ஸ் எடுக்க எட்டு போடுவது போல ஆகிவிட்டது. இங்கு பதிவுகளில் ஆறு போடுவது. கவுண்டமணியண்ணன் இந்தியன் படத்தில் சொன்னது போல பதினொன்றில் ஆரம்பிக்கலாம். பதினொன்றில் ஆரம்பித்து ஒன்றில் முடிப்பது உசிதம். ஆனால் 11+10+9...என அறுபத்தாறு விஷயங்களைக் கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.
வெற்றி அவர்கள் என்னையும் இந்த வட்டத்திற்குள் இழுத்திருக்கிறார். நன்றி வெற்றி.
ஆனால் எனக்கு இட்லி வடை பிடிக்குமா(வலைப் பதிவு இல்லை...கிளப்பி விட்டுவிட வேண்டாம். பொதுவாகச் சொன்னேன்) அல்லது சாம்பார் இட்லி பிடிக்குமா என்று எழுதுவதா என்று குழப்பமாகவும் இருந்தது. ஏதாவது நடிக்கைக்கு தான் பொருந்தும். "எங்கப்பா ஸ்டாக்ஹோம்மில் இருந்து வாங்கி வந்த டெடிபியருக்குதான் முதலிடம்" என பீட்டர் விட.
நானும் இயன்ற வரை முயன்றிருக்கிறேன். 'பீட்டர் விடவா?' என்கிறார் சிபி.
ஏழு திரைப்படங்கள்:
1)த மிடாஸ் டச்(ஹங்கேரி)
மிடாஸ்(அல்லது மைதாஸ்) என்னும் அரசன் தான் தொடும் பொருள்களைத் தங்கமாக்கிவிடும் ஆற்றல் பெற்றிருந்தான். இதனைக் கருவாகக் கொண்டு தங்கத்தின் மீதான கதையின் நாயகனின் மோகமும், இறுதியில் வாழ்வு அவனுக்கு காட்டும், தன் கொடூர முகமும் தான் கதை. இறுதிக்காட்சிகளில் வீச்சு பெற்ற நீரின் பிடியில் சிக்குண்ட சிறகொடிந்த பறவையொன்றினைப் போல நாயகன் அலைவுறும் காட்சிகள் பார்வையாளனை பதறச் செய்வன.
2)சினிமா பாரடிஸொ(இத்தாலி)
திரைப்படத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் சிறுவன், அதற்கு முட்டுக் கட்டை போடும் தாயார், சிறுவனுக்கு உதவும் திரையரங்கின் ஆப்ரேட்டர் ஆகியோரைச் சுற்றி சுழலும் கதை. உலக சினிமாவில் கொண்டாடப்பட்ட திரைப் படங்களில் ஒன்று.
3)த பியானோ டீச்சர்(பிரான்ஸ்)
இஸபெல் ஹ¥யுபெர்ட் நடித்த திரைப்படம். திறமைமிக்க பியானோ ஆசிரியையின் பாலுணர்வும், அதனைத் கட்டுபடுத்த இயலாமல் மனநோயால் பீடிக்கப் படுவதும் கதை. இஸபெல்லின் முகபாவனைகளும், பாலுணர்வின் கோரத்தை அதன் நுணுக்கங்கள் சிதைவுறாமல் காட்டியிருந்ததும் என்னைக் கவர்ந்த அம்சங்கள்.
4)முதல் மரியாதை
எனக்கு நினைவு தெரிந்து அழுத திரைப்படம் இது. வடிவுக்கரசி மூக்கு சிந்தி, சோறு போடுவது பார்த்து அருவெருப்புடன் அன்று சாப்பிடாமல் இருந்தது கூட மங்கலாக நினைவில் இருக்கிறது.
5)முந்தானை முடிச்சு
இந்தப் படத்தின் கதையை விட எங்கள் ஊரில் எடுக்கப்பட்ட படம் என்பதுதான். படம் பார்த்து விட்டு எங்கள் அப்பாவிடம், படத்தில் வரும் இடங்களை எல்லாம் காட்டச் சொன்னோம். அப்பா, நான், தம்பி மூன்று பேரும் டி.வி.எஸ் 50யில் சுற்றினோம். சென்டிமெண்டல் டச்.
6)அத்தடு(தெலுங்கு)
ஆந்திரச் சீமையில் காலடி வைத்த போது யாருடைய அறிமுகமும் இல்லை. இரவில் என்ன செய்வது என்று தெரியாமல் தனியாக இரவுக்காட்சிக்கு சென்றிருந்தேன். மொழி புரியாத போதும், அனைத்து மசாலாக்களும் சரிவிகிதமாகக் கலந்திருந்தது. ஏன் நம்ம விஜய் தெலுங்குப் படமாகத் தேடிப் போகிறார் என்பது புரிந்தது.
7) பாட்ஷா
நோ கமெண்ட்ஸ்.
//எல்லோரும் ஆறு எழுதி, ஆறுக்கு அளவிற்கு மீறி மதிப்புக் கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது. எனவே ஆறு இங்கு இடை நீக்கம் செய்யப் படுகிறது//
புத்தகங்கள் ஐந்து:
1) காடு
இந்த நாவலில் ஒரு சிரமம் உண்டு. அதன் மொழிநடையை சிதைவுறாமல் உள் வாங்குவது கடினம். அது ஒரு வேகத்தடை போல. ஜெயமோகனிடம் சொல்வதற்கான வாய்ப்பு கிடைத்த போது, மொழிநடையின் குறுக்கீட்டால் என்னால் உள்வாங்க முடியவில்லை எனச் சொல்லி இருந்தேன். அது மண்ணின் மொழி, அது சிதைக்கப் பட்டால், அந்த நாவலில் பொருளில்லை எனச் சொன்னார். அதுவரை இந்தக் கோணத்தில் பார்க்காமல் இருந்து, மீண்டும் வாசித்த போது- சில அத்தியாயங்களுக்குப் பின்னர் எந்த விதச் சிரமும் இல்லை. இதுவரை பலமுறை திரும்பத் திரும்ப படித்திருக்கிறேன்.
2) நெடுங்குருதி(எஸ்.ராம கிருஷ்ணன்)
சலிப்புற வைக்காத வேகம். வறண்ட கிராமத்தின் சோகத்தையும் அதன் மக்களின் வாழ்வியல் முறைகளையும் வேறு எழுத்துகளில் என்னால் உணர்ந்து கொண்டிருக்க இயலுமா எனத் தெரியவில்லை. நாவலை முடித்த பிறகும், நாகு நம்மோடு சில நாட்களாவது வாழ்வான். "சுவரின் ஆயிரம் நாவுகள்" மழையின் ஈரத்தை உறிஞ்சுவதாக வறட்சியின் காட்சிகளை குரூரத் தன்மை மாறாமல் கவித்துவ உரைநடையில் விளக்கியிருப்பார் கதை சொல்லி.
3) மணலின் கதை(மனுஷ்ய புத்திரன்)
4) பசுவைய்யா கவிதைகள்
கவிதை சொல்லியின் மனோநிலை எந்த விதமான சொற்கூட்டலும் இல்லாமல் இருக்கும் இந்த இரண்டு கவிதைத் தொகுப்புகள், எனது நவீன கவிதை குறித்தான சிறு புரிதலுக்குத் திறவுகோல்கள் எனச் சொல்வேன்.
5) அது அந்தக் காலம்
இங்கு, புத்தகத்தின் ஆசிரியரோடு(எஸ்.வி.ராம கிருஷ்ணன்) பழகி, அவரது ஒவ்வொரு கட்டுரை குறித்தும் அவரிடமே விவாதித்துக் கொண்டிருப்பது, மிகச் சிறந்த வாசக அனுபவம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னதான காலகட்டம் குறித்து அறிந்து கொள்வது என் தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கு அரிதான விஷயம். எனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் புத்தகம் அதற்கான அடிப்படை.
நான்கு இடங்கள்+உணவும் (இட்லி சாம்பார் வகை மேட்டரைத் தவிர்க்க இயலவில்லை):
1. புண்ணாக்கு கார ஆயா கடை.
எங்கள் ஊரில் வாய்க்கால் ஓரமாக உள்ள மூதாட்டியின் மிட்டாய்க் கடை. ஆளரவமற்ற இடம். நிர்வாணமாக குளித்த காலத்திலிருந்து, ஜீன்ஸ் போடும் கால கட்டத்திற்கு முன்பாக வரை குளித்திருக்கிறேன். இந்த இடத்தில் இருக்கும் நாவல் மரங்கள்தான் ஹைலைட். அதுதான் இந்த இடத்திற்கான உணவு.
2. வைரவிழாப் பள்ளி மைதானம்
இங்கு அரிசியும் பருப்பும், முட்டையும் சாப்பிட்ட காலங்கள். அது ஒரு கனாக் காலம்.
3. கோவை எக்ஸ்பிரஸ்
ஜோலார்பேட்டை தாண்டியவுடன் வீட்டில் கட்டி வந்த சப்பாத்தி, வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கிய சட்னியைப் பிரித்து ஒரு கட்டு கட்டுதல்.
4. சேலம் புரோட்டா
சேலத்தில் கிட்டத்தட்ட எல்லா கடைகளிலும் முட்டை புரோட்டா பிரமாதப் படுத்தும்.
மூன்று சம்பவங்கள்:
1. அரட்டை அரங்க மேடையில் இருந்த கணம். இடையில் மேடையை விட்டு இறங்கி வரும்போது ஒரு குழந்தையிடம் அதன் அம்மா , 'இந்த அண்ணா யாரு தெரியுதா?' என்றார். ஏதோ பூமி உருண்டை காலடியில் உருள்வதாக நினைத்துக் கொண்டேன். அதன் இன்மையைப் புரியாமல்.
புகழ்ச்சி மனிதனை எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் போடும்.
2. பொறியியல் படிப்பு முடித்த சமயம் திரு.சுஜாதாவைப் பார்க்கச் சென்றிருந்தேன். எண்.10, ஜஸ்டிஸ் சுந்தரம் தெருவின் வாசலிலேயே காலை 10 மணியிலிருந்து காத்திருந்து மாலை வாக்கில் உள்ளே சென்றேன். என் கவிதைகளைப் பாருங்கள் என்ற போது, நான் கவிதைகள் எல்லாம் படிப்பதில்லை, விகடன், குமுதம் பத்திரிக்கைகளுக்கு அனுப்புங்கள் என்றார்.
எனக்கு ஒரு சுஜாதா. அவருக்கு ஆயிரம் மணிகண்டன்கள்.
3. +2 படிக்கும் போது தனிப்பயிற்சிக்கு செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த சமயம். ஆசிரியரை தற்செயலாகவோ அல்லது தெரிந்தோ பார்க்கச் சென்ற அம்மா அப்பாவிடம் '+2 தேறுவது கஷ்டம்' என்று சொல்லிவிட்டார். எதற்கெடுத்தாலும் புலம்பும் அம்மா என்னிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. எதுவுமே பேசாமல் இருக்கும் அப்பா 'படிப்பை விட்டா வேறு என்னடா சொத்து நமக்கு?' என்றார்.கலங்கிப் போய். குற்றவுணர்ச்சி தின்று செரித்துவிடக் கூடும் என்றிருந்தது.
இரண்டு இலக்கிய இதழ்கள்:
1) காலச் சுவடு
2) உயிர்மை
இரண்டு புத்தகங்களுக்குமே இதுவரையிலும் நான் சந்தாதாரன் இல்லை. ஆனால் எப்படியாவது, பிடித்து படிப்பது வாடிக்கையாக இருக்கிறது.
நான் அழைக்க விரும்பும் ஒருவர்:
1) கார்திக் வேலு- கவிதைகள் குறித்தான இவரது பார்வையும், அதனை வெளிப்படுத்தும் விதமும் இவரிடம் எனக்கு மிகப் பிடித்த அம்சம். இவரது கவிதைகள் நவீனத்தின் பார்வை கொண்டு நிகழ்கால இயல்புகளை வெளிப்படுத்துகின்றன.
நான் அழைக்க விரும்பும் பலரும் ஏற்கனவே தங்கள் 'ஆறு' பதிவை முடித்தவர்களாக இருக்கிறார்கள். அல்லது வலைப்பதிவு நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி 'ஓய்வு' எடுக்கிறார்கள்.
அப்பாடி.........எழுதி விட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......................
Jul 10, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 எதிர் சப்தங்கள்:
மொத மூணூ ஒண்ணுமே பிரிலிங்ணா (சிபிட்ட தான் கேக்கனும்)
//இரண்டு புத்தகங்களுக்குமே இதுவரையிலும் நான் சந்தாதாரன் இல்லை. ஆனால் எப்படியாவது, பிடித்து படிப்பது வாடிக்கையாக இருக்கிறது.//
ஹி..ஹி நோ கமெண்ட்ஸ்.
முட்டைபரோட்டா மதுரையிலும் சூப்பரா இருக்குங்ண்ணா.
கல்பனான்னு ஒரு பொண்ணுகூட பேசுச்சே அந்த அரட்டை அரங்கமா?
மணிகண்டன்,
மிகவும் வித்தியாசமான பதிவு. நன்றாக உள்ளது. அழைப்பை ஏற்று பதிவு போட்டமைக்கு மிக்க நன்றி.
மனசு,
புரியவில்லையா? அடக் கடவுளே. மதுரை புரோட்டா குறித்து கேள்விப் பட்டிருக்கிறேன்.
கல்பனா? சரியாக பெயர் நினைவில் இல்லை. இது நடந்தது சேலம். ஒரு பெண் தன் கணவன் இழந்தது குறித்து அழுததும், அதற்காக அந்தப் பெண்ணுக்கு நிதி உதவியும், ஒருவர் திருமணம் செய்து கொள்ள முன் வந்ததும் நிகழ்ந்தது. நினைவில் வருகிறதா? அந்த அ.அரங்கம்.
நன்றி வெற்றி.
Post a Comment