Jun 24, 2006

கோபிச் செட்டிபாளையம்

இந்த ஊர்ப் பெயரை பேரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கொங்கு மண்டலத்தில்- ஈரோடு மாவட்டத்தின் முக்கியமான ஊர். உடனடியாக நினைவுக்கு கொண்டு வர வேண்டுமானால், இன்றிலிருந்து சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் வந்த கிராமியப் படங்கள் பெரும்பாலானவற்றில் கோபி நடித்திருக்கும். (கோபிச் செட்டிபாளையத்தை சுருக்கி கோபி என்றுதான் சொல்வார்கள்). வயல்வெளி, வாய்க்கால், தூரத்தில் மலைப் பிரதேசம் என்றால் கண்ணை மூடிச் சொல்லலாம் அது கோபி என. மிக அருகாமையில் அமைந்த அல்லது தென்னந்தோப்பு போன்றவை இருந்தால் அது பொள்ளாச்சி.

கோபி பெரிய ஊர் எல்லாம் இல்லை. ஊரின் கிழக்கு முனையில் பயணத்தைத் தொடங்கினால் மேற்கு முனையை அதிக பட்சமாக பன்னிரண்டு நிமிடங்களில் அடைந்துவிடலாம். அதே போலத் தான் வடக்கும் தெற்கும். ஆக கோபி என்று சொல்லும் போது சுற்றியுள்ள ஊர்களையும் எடுத்துக் கொள்வதுதான் சரி. அரசாங்கத்தின் கூற்றுப் படி சொல்ல வேண்டுமானால் சட்டமன்றத்தொகுதி, நாடாளுமன்றத் தொகுதி, கோட்டம், நகராட்சி எனச் சொல்லலாம்.

ஆனால் இந்த அம்சங்கள் யாவும் பொருந்தக் கூடிய வேறு ஊர்களும் இருக்கலாம் என்ற போதும் அவைகளுக்கு இல்லாத தனித் தன்மைதான் கோபியின் சிறப்பு. ஈரோட்டிலிருந்து, சத்தியமங்கலத்தை நோக்கிப் பயணம் துவங்கினால், ஊர் எப்போது வரும் எனக் கவலைப் படாமல் தூங்கலாம். பேருந்தின் ஜன்னலோரத்தில், குளிர்காற்று வீசத் தொடங்கினால் கோபியை நெருங்கி விட்டதாக அர்த்தம். குளிர் காற்றினை மலைப் பிரதேசக் காற்றுடன் ஒப்பிட முடியாது. இது இந்த ஊர் தன்னைச் சுற்றி போர்த்திக் கொண்ட நெற்பயிரின் சுவாசம். முழுமையான குளிர் என்று சொல்ல முடியாத, வெக்கையுடன் கூடிய குளிர்ச்சி. இதனை நீங்கள் மேலும் அனுபவிக்க வேண்டுமானால், கோபிக்கு வடக்கே உள்ள தூக்க நாய்க்கன் பாளையம் என்னும் ஊருக்கு செல்லும் வழியில் பயணிக்க வேண்டும். வயலின் குளிர்ச்சி மெதுவாக-நத்தையின் வேகத்தில் நம் மீது படிவதை உணரலாம். வாய்க்கால்களும் சிறு கொப்புகளும் நரம்புகளைப் போல வயல்களினூடாக ஓடிக் கிடக்கும். சுவாசம், பார்வை என எல்லாவற்றிலும் மஞ்சளும் வெக்கையும் கலந்த பசப்பின் அநுபவம் கிடைக்க வேண்டுமானால், இருசக்கர வாகனப் பயணம் அவசியம். இந்தப் பகுதியில்தான் கொடிவேரி, குண்டேறிப் பள்ளம் போன்ற முக்கியமான சுற்றுலா செல்வதற்கான இடங்கள் இருக்கின்றன. ஒரு நாள் முழுமையாகத் தேவைப்படும் நிறைவாக ரசிக்க.

பாரியூர் என்னும் பெயரில் உள்ள பாரி என்பது கடையெழுவள்ளல் பாரியினைக் குறிக்கும் எனப் படித்திருக்கிறேன். ஆனால் சரியான வரலாற்றுப் பூர்வமான ஆதாரம் எனக்குத் தெரியவில்லை. இங்கு உள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவிலும், குண்டத்திருவிழாவும் மிகப் பிரபலம்.கைது அற்புதமான இயற்கைச் சூழல் நிறைந்த இடம். அருகில் உள்ள பச்சைமலை, பவள மலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

மற்ற ஊர்களின் மாரியம்மன் பண்டிகைகளை விட இந்தப் பகுதியின் பண்டிகை மிக வித்தியாசமானது. அது குறித்து தனிப் பதிவே எழுதலாம். பங்குனி, சித்திரையில் வரும் இந்த விழாவின் ஏழு நாட்களும் மிக ரசனையான கொண்டாட்டம்.

கோபிப் பகுதியை சார்ந்தவர்களை, சற்றே தள்ளியிருக்கும் வறட்சி பாய்ந்த மண் காரர்கள் கரவழிக்காரர்கள்(கரை வழிந்து ஓடும் பகுதி) என்று சொல்வது உண்டு. இது பவானி ஆற்றின் புண்ணியம். கோபியில் மழை பெய்ய வேண்டிய அவசியமே இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்தால் போதும், பவானியில் தண்ணீர் வந்துவிடும். அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, கீழ் பவானி என நிறைய வாய்க்கால்களை வெட்டி வைத்து தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமற் செய்திருக்கிறார்கள்.

கொங்குத் தமிழ் என்றால் கோபிதான். கோயம்புத்தூர் அந்த மண்டலத்தில் பெரிய ஊர் என்பதாலும், அந்தக் காலத்தில் ஒருங்கிணைந்த ஈரோடு, கோவை மாவட்டங்களுக்குத் தலைநகரம் என்பதாலும் கொங்குத் தமிழை- கோயம்புத்தூர் தமிழ் ஆக்கிவிட்டார்கள். திட்டுவதாக இருந்தால் கூட மரியாதையாகத் தான் திட்டுவார்கள். அதற்காகவாவது ஏதேனும் கிராமப் பகுதி பாட்டியிடம் திட்டு வாங்கலாம்.

கோபிப் பகுதிக்கென சில உணவு வகைகள் உண்டு. எனக்குப் பிடித்த வகை 'அரிசியும் பருப்பும்'. மிக விரைவாக செய்துவிடுவார்கள். நெய் ஊற்றி, ஊறுகாய் வைத்து முதலில் சாப்பிட வேண்டும். அடுத்து கத்தரிக்காய்ப் புளிக் குழம்பு அதன் பின் கெட்டியான, வெண்ணெய் எடுக்காத தயிர் ஊற்றி குழைத்துச் சாப்பிட வேண்டும். எருமைப் பால் தயிராக இருந்தால் இன்னும் தேவலை. இந்தச் சுவையைப் பழகிவிட்டால் வேறு உணவு வகைகள் சற்று தள்ளி நிற்க வேண்டும். நிறைய வெளியூர் நண்பர்கள் இந்தப் பெயரை கேள்விப்பட்டது கூட இல்லை.

பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், நடிகர் ரஞ்சித் போன்ற பிரபலங்களுக்கு கோபியுடன் நெருங்கிய தொடர்புண்டு. கோபியைத் திரைப்படங்களில் பிரபலப் படுத்தியதில் பாக்யராஜ் அவர்களுக்கு மிக முக்கியப் பங்குண்டு. 'முந்தானை முடிச்சு' பெரும்பலாலும் கோபியிலேயே எடுக்கப்பட்டது. எனக்குத் தெரிந்து கோபியில் 100 நாளைக் கடந்த முதல் படம் அதுவாகத் தான் இருக்கும்.

சில ஆண்டுகள் வரை நிறையக் கல்லூரிகள் இருந்ததில்லை. இப்பொழுது நிறைய உருவாகியிருக்கின்றன. மக்கள் விவசாயம் தாண்டியும் வெளி வரத் தொடங்கியிருக்கிறார்கள். கொஞ்சம் பொறாமை நிறைந்த மக்கள் என எனக்குப் படுகிறது. வதந்திகளுக்கு மிகப் பிரபலம். கண் காது மட்டுமல்ல, நல்ல துணிமணி, நகை எல்லாம் எடுத்துக் கொடுத்து வதந்தியைப் பரப்புவதில் கில்லாடிகள். இந்த விஷயத்தில் கவனம் தேவை.

நகரமும் கிராமமும் கலந்த வாழ்க்கையின் உண்மையான பொருளை கோபியில் அறியலாம்.

முக்கியமான விஷயம் பெரும்பலான கோபிப் பெண்கள் மிக அழகானவர்கள். வர்ணிக்க முயலும் போது வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கும்.