Jun 14, 2006

ஜேர்மானிய தமிழனுக்கு(?) ஒரு மடல்.

வணக்கம்.

தங்களின் நலனுக்கு எந்தக் குறைச்சலும் இருக்காது என நம்புகிறேன்.

தங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று தங்களின் கவிதையைப் படித்தவுடன் தோன்றியது. தனியொரு பின்னூட்டமிட்டும் கூட,ஒரு பதிவு எழுத வேண்டும் எனத் தோன்றியது ஆனால் தங்களைப் பற்றி எனக்கு சரியான நினைவு இல்லை.

ஒரு சம்பவம் மட்டும் இருக்கிறது.

முன்பொருமுறை கொலை மிரட்டல் குறித்தான பதிவொன்றெழுதி, தன் முடிவு நெருங்கிவிட்டதாகவும், மனைவி மக்கள் எல்லாம் கதறுவது போலவும் ஒரு 'புரளி' கிளப்பியவர் என்று ஞாபகம். நீங்கள் பதிவு போடாமல் இருந்தால் குடியொன்றும் மூழ்கி விடப்போவதில்லை என நினைத்து பின்னூட்டம் போட மனம் வரவில்லை. அது பரபரப்புக்கான வெற்றுக் கூச்சல் என்றும் ஒரு பொறி என்னுள் இருந்தது. ஆனாலும் ஒரு வேளை அது உண்மையாக இருப்பின் அது தங்களை புண்படுத்தும்படி ஆகி விடக் கூடும் என்பதாலும் 'சும்மா' இருந்து விட்டேன். சரி நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். உங்களை ஏன் 'பொய்யர்' ஆக்க வேண்டும்?. பின்னூட்டம் வாங்குவதனைக் காட்டிலும் தங்களின் பதிவுகள் வேறொன்றும் 'புரட்சி' செய்திடவில்லை என்பது எனக்குத் தெரியும். உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் கூட.

பாசிசம் குறித்தெல்லாம் பேசிய போது எல்லாம் தங்களின் 'அறிவு ஜீவி'ப் பிம்பம்தான் என்னுள் இருந்தது. நடுநிலைமையுடன் தாங்கள் சிந்திப்பதாகவும் நினைத்தேன். முதலில் நினைத்தேன். நாம் செய்யும் தவறுகளை நாமே எப்பொழுது ஒத்துக் கொண்டிருக்கிறோம். ஜெர்மனியில் இருக்கும் ஒரு தமிழன்(?) நேர்மையாகவும், நெஞ்சுரத்தோடும் சொல்லி வருகிறார் என. எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி வருகிறீர்கள். அது சரி! எனக்கு எல்லாம் தங்களைப் பற்றி என்ன பிம்பம் இருந்தால் என்ன வந்து விடப் போகிறது?

இதில் பெரிய காமெடியே நீங்கள் உபயோகப் படுத்தும் 'பாசிசம்' என்ற சொல்தான்.

ஈழம் என்பதெல்லாம் பெரிய விஷயம். இது குறித்து பேசவோ, எழுதவோ எனக்கு உங்களைப் போல 'விஷய ஞானம்' போதாது. எனவே எனக்கு எதற்கு இது எல்லாம் என்று மூ* க் கொண்டு இருக்கலாம். ஆனால் 'இளரத்தம்' அமைதியாக இருப்பதில்லை.

ஏழாம்தரமாகக் கூட உங்களை விமர்சிக்க முடியும். ஆனால் அது உங்களுக்கு 'உறைப்பதை'க் காட்டிலும் 'எரிச்சல்' உண்டாக்கி விடக் கூடும் என எழுதவில்லை. எனக்கு ஒன்றும் அறிவுஜீவி பிம்பம் குறித்தான கவலையில்லை. ஏழாம் தரமாக விமர்சிக்கவும் தயங்கப் போவதில்லை.

நீங்கள் மனித உரிமை பற்றியும், வன்முறைகள் பற்றியும் சரியான பார்வை கொண்டவராக இருப்பின், இரு தரப்பு குற்றங்களையும் முன் வையுங்கள். அவன்தான் விமர்சகன். ஒரு பக்கக் குறைகளை மட்டும் பட்டியலிட்டு அடுத்த பக்கக் குறைக்களின் மீது திரையிடுபவனுக்கு வேறு பெயர் இருக்கிறது.

எங்களுக்கு தெரியும் அளவிலான 'ராணுவக் கொடுமைகள்' கூட தங்களுக்கு தெரியாமல் போவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

முளைத்து மூன்று இலை கூட விடாத 'பொடிப் பையன்' நான். தமிழன் என்பதனைத் தவிர எனக்கும் ஈழ மக்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. எனக்கு இருக்கும் அக்கறை கூட மெத்த அறிந்த உம் போன்றவரிடம் இல்லையே என்பதுதான் என் வருத்தம் எல்லாம். உங்களுக்கு கோபம் வரலாம் அல்லது கோபம் வருவது மாதிரி நடிக்கலாம். 'எனக்கா அக்கறையில்லை?' என்று. அக்கறை இருக்குமெனில் அதை விட மகிழ்ச்சி இந்தக் கணத்தில் வேறொன்றுமில்லை எனக்கு.

நான் எல்லாம் 'வாய் சவடால்' தான். 'கருத்து சுதந்திரம்' எனக் கொண்டு தமிழனுக்கு ஆதரவாக பேசவும் எழுதவும் மட்டும்தான் முடியும். அது சரி. உங்களிடம் 'வாய்சவடால்' பற்றி பேசி என்ன வந்து விடப் போகிறது. நீங்களும் பாவம் என்னைப் போலதானே. ஆனால் வயது ஏறும் போது நான் மாறிவிட வாய்ப்பிருக்கிறது. அதுதான் உங்களைப் பார்த்து என்னை பரிதாபப் பட வைக்கிறது.

தாங்களோ அல்லது தாங்களைச் சார்ந்தவர்களோ வரிந்து கட்டிக் கொண்டு என்ன எழுதினாலும் எனக்குக் கவலையில்லை. எனக்கு வருத்தமெல்லாம் என் சகோதரன்,சகோதரி கொலையுறும் போது தட்டிக் கேட்பவன் மீது, எங்கோ மறைந்து கொண்டு ஏவி விடப்படும் விமர்சனங்கள் குறித்துதான்.

இந்தியா என் தாய்நாடு. அதற்கு எந்தப் பங்கம் வரவும் விரும்பமாட்டேன். அதே போல்தான் ஈழத்தமிழன் என் சகோதரன். அவனுக்குக் கொடுமை என்றால் பயந்து முக்காடு போட்டு போர்வைக்குள் சுருங்கவும் விருப்பமில்லை.

ஆள்காரன் குசு விட்டால் அடிடா புடிடா என்பதும் முதலாளி குசு விட்டால் மணக்கிறது மணக்கிறது என்பதான மனநிலையை தூர வைத்து விட்டு குரல் கொடுங்கள். தோள் கொடுக்கும் முதல் அணியில் நான் நிற்பேன்.

அன்புடன்...
வா.மணிகண்டன்.