Jun 6, 2006

முற்றாகக் களைந்து அம்மணம் கொள்.

பசுவய்யா(சுந்தர ராமசாமி)

பசுவய்யாவின் கவிதைகளை படிக்கும் போது என்னால் மிகுந்த உற்சாகம் கொள்ள முடிகிறது. கவிதைகளை தொடர்ச்சியாக வாசிக்க முடிகிறது என்பதும், வாசித்த பின்னர் யோசிப்பதற்கான சாளரங்கள் திறப்பதும் படிப்பவனை தனது பிடிக்குள் வைத்திருக்கும் சூத்திரங்கள். என்னைப் பொறுத்த வரையிலும் சு.ரா விற்கு அந்த சூத்திரம் இயல்பாக இருக்கிறது. என்னால் உரக்கக் கத்த முடியும். இந்த நூற்றாண்டில் தமிழின் மிக முக்கிய நவீன படைப்பாளி சு.ரா என்று.

(1)

எனக்குத் தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது.
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கிய போது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள் அழுதன.
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக் கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்.
'இந்தப் பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்.'


கவிதை ஒன்று கருப்பெறும் போது சூழல், படைப்பவனின் மனநிலை ஆகியவற்றைக் அறிந்து கொண்டு படித்தால், வேறு ஒரு காட்சி மனதில் தோன்றும். அது, இவற்றை அறியாத வாசகனின் மனநிலையில் படிக்கும் போது உள்ள புரிதலுக்கு முழுமையாக முரணாகக் கூட இருக்கும்.

இந்தக் கவிதை, நமது நாடகத்தனமான வாழ்க்கையையும், பிறர் முன் நாம் நடிக்க வேண்டிய சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டியக் கட்டாயத்திற்கு உள்ளாகிறோம் என்பதனை வடிவாக்குவதாக உணர்கிறேன். நடிப்பு, உலகியலில் முக்கியமான அங்கமாகிவிட்டது. அதற்கு ஆண்,பெண், குழந்தைகள் என்ற பேதமெல்லாம் இல்லை. மற்றவனை மகிழ்ச்சியாக்க, தப்பித்துக் கொள்ள என பல கணங்களிலும் நடிப்பு நம்மைத் துரத்துகிறது.

நமது அசட்டுத்தனங்களை மறைக்க, நம்மை நாமே தாழ்த்தி பிறருக்கு அந்த அசட்டுத்தனத்தினை உணர்த்துவது இயல்பானது. இது ஒரு தற்காப்பு கலை. அடுத்தவன் நம்மை இளக்காரமாக பார்ப்பதனை பெருமளவு தடுத்துவிடும். இந்த மனநிலையை, இக்கவிதையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மெல்லிய எள்ளலில் உணர்த்தப்படும் போலித்தனமான வாழ்க்கை முறை முகத்திலறைகிறது.

(2)
வயோதிகம் மறித்தது நடுவழியில்
நான் காதலைத் தேடிச் சென்று கொண்டிருந்த போது
'விடு என்னை
இப்போதுதான் உணர்ந்து கொண்டேன் காதலின் அருமையை'
என்று அதன் காலில் விழுந்து கெஞ்சினேன்.
'சற்று முன்தான் நான் வயோதிகம்
இப்போதோ மரணம்' என்று
என்னை இறுகத் தழுவிக் கொண்டது.


இந்தக் கவிதை இயல்பான ஒன்று. எளிதில் உள்வாங்க முடிகிறது. நினைப்பதனை அடைய முடியாத இயலாமை, இழப்புகள், தவிர்க்கவியலாத தோல்விகள் என பல கூறுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

(3)
பெண்ணே
உன் கடிதம்
எழுதுவது எப்படி என்று என்னைக் கேட்காதே
எழுது
அதுவே அதன் ரகசியம்

எழுது
எவர் முகமும் பாராமல்
உன் முகம் பார்த்து

உன் தாகம் தீர்க்க
நதியிலிருந்து நீரை
கைகளால் அள்ளுவது போல்
கண்டுபிடி உன் மன மொழியை.

மார்புக் கச்சையை முற்றாக விலக்கி
காலக் குழந்தைகளுக்கு பாலூட்டு

உனக்கும் உன் அனுபவங்களுக்கிடையே
ஆடைகளை முற்றாகக் களைந்து
அம்மணம் கொள்.

புகை மூட்டத்தைப் புணர்ந்து
மெய்மையைப் பேரானந்ததுடன் கருத்தரி.

எழுதுவது எப்படி என்று என்னைக் கேட்காதே
எழுது
அதுவே அதன் ரகசியம்


கவிதை குறித்தான புரிதல் சரியாக அமைந்திராத போது, நண்பரொருவர் இந்தக் கவிதையைப் படிக்கக் கொடுத்தார். மார்பு,அம்மணம்,புணர்ச்சி ஆகிய சொற்களில் நான் தேங்கி நின்றேன். க்விதை விளங்கும் போது எழுத்து அமைய வேண்டிய முறையை அற்புதமாக கொணர்ந்துவிடுகிறார் கவிதை சொல்லி.

தொடங்கி விட வேண்டும். அதுதான் எழுத்தின் ரகசியம். மற்றவனின் விமர்சனத்திற்காக முகம் பார்ப்பது போல மோசமான நிலை, படைப்பாளிக்கு வேறெதுவுமில்லை.

உனக்கென உள்ள மன மொழியில் எழுது. மறைந்து கிடக்கும் அனுபவத்தினை உன்னுள் ஏற்றி எழுது. எழுத்தில் உண்மை வேண்டும்.

மறுமுறை வாசிக்கும் போது அந்த மூன்று சொற்களும் தட்டுப்படுவதில்லை. அதனை மீறிய படிமம், பொருள் தெரிகிறது. கவிதை வென்று விடுகிறது.

****************************************************

இந்தக் கட்டுரைகளுக்கு தலைப்பிடும் போது சிறிது மனச்சஞ்சலத்திற்குள்ளாக வேண்டியிருக்கிறது. முழுமையாக, பிறரைக் கவர்வதற்கில்லை என்னால் சொல்லிவிட முடியாது. அதுவும் ஒரு காரணம்தான். ஆனால் அது மட்டுமே காரணமில்லை என்பதனையும் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கல்யாண்ஜியின் கவிதைகள் குறித்தான கட்டுரையின் தலைப்புக்கு காட்டமான விமர்சனங்கள் வந்தன. ஒரு நண்பர் கட்டுரையை ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் தலைப்பினை அல்ல என்றார். நான் சிறிது விளக்கிய பின்னரும், அவர் 'உங்களின் சமாதானத்தில் மகிழ்ச்சி அடைய மாட்டேன்' என்றார். சற்று வருத்தம்தான்.

சில சொற்கள், இந்திய மனநிலைக்கு பேரதிர்ச்சியினை உண்டாக்கி விடுகின்றன. அந்த வரி, காமத்தில் தியானத்தை உணரும் கவிஞரின் மனநிலையை சொல்கிறது என்பதனால் தேர்ந்தெடுத்தேன். இந்த விளக்கம் இவ்வளவு நாள் கழித்துத் தேவையில்லை என்ற போதும் சொல்லத் தோன்றியது.

இந்தக் கட்டுரைக்கான தலைப்பிலும் முரண்கள் வரலாம்.ஆனால் சரி என்பதாக எனக்குப் படுகிறது.