Jun 5, 2006

நவீனத்துவம்

நவீனத்துவம் குறித்து எழுதும் தகுதி எனக்கு இருப்பதாக கருதவில்லை என்னும் நிலையிலும், எனக்கு புரிந்த நவீனத்துவம், பின் நவீனத்துவம் குறித்து எழுதினால் நான் இன்னும் தெளிவாக முடியும் என்பதன் எண்ணம்தான் இந்தப் பதிவு.

இந்தப் பதிவில் நவீனத்துவம் குறித்து சிறு அறிமுகம்.

19 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் நவீனத்துவம் வடிவம் பெற ஆரம்பித்தது. கலை, இலக்கியம், வாழ்வியல் முறை யாவற்றிலும் சலிப்புத்தன்மை இருப்பதனை உணர்ந்தவர்கள், அவற்றினைக் கேள்விக்குள்ளாக்குவதும், ஏற்றுக் கொள்ள முடியாதவற்றைனை புறந்தள்ளுவதும் எனத் தொடங்கியபோது நவீனத்துவம் பிறந்துவிட்டது. நவீனத்துவம் இலக்கியத்தில் என்று மட்டுமில்லாது கட்டடக்கலை, வாழ்வியல் முறை, தத்துவம் என எல்லாவற்றிலும் தனக்கான இடத்தினைப் பெறத் துவங்கியது.

இருப்பில் இருந்து வந்த முறைகளில் உண்டான கேள்விகளைப் பதிவு செய்ய ஆரம்பிக்கும் போது, இலக்கியத்திலும் modernism இடம் பெற்றது.இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் முதல் ஐம்பது ஆண்டுகளில் கவிதை, ஓவியம் என இலக்கியத்தின் எல்லாக் கூறுகளிலும் நவீனத்துவம் பரவியது. படைப்பாளிகள் தொடர்ச்சியான, அதுவரையிலும் கட்டமைக்கப்பட்டிருந்த முறைகளை கேள்விக்குள்ளாக்கினர். பிம்பங்கள் தகர்க்கப் பட துவங்கப்பட்டது. தத்துவங்கள் அதுவரை இல்லாத அதிர்ச்சிகளை உண்டாக்கின.

கடவுள், இயற்கை, நம்பிக்கைகள் என எதுவும் தப்பவில்லை. காமம், ஆண்பெண் உறவு முறை, ஓரினச் சேர்க்கை முறைகள் உட்பட.

இலக்கியத்தில் நவீனத்துவத்தினை புகுத்த முயன்ற சில முக்கியமானவர்கள் Guillaume Apollinaire ,Paul Valery , D.H. Lawrence , Virginia Woolf , James Joyce , T.S. Eliot , Ezra Pound , Wallace Stevens , Max Jacob ,மற்றும் Franz Kafka. இவர்களைப் போலவே கட்டடவியல், இசை என பலதுறைகளிலும் பலரும் நவீனத்துவத்தினை கொணர்ந்தனர்.

பழையனவற்றை முழுமையாக புறந்தள்ளுவதன் மூலம் மட்டுமே மாற்றத்தினைக் கொணர முடியும் என பெரும்பாலான நவீனத்துவவாதிகள் கருதினர். நவீனத்துவம் கருத்து சுதந்திரம், ஆய்தல், தொகுப்பாய்வு என்பனவற்றை மிக முக்கியமாக வலியுறுத்திற்று.

இவை பழமைவாதிகளிடம் இருந்தும், பாரம்பரியக் கூறுகளின்பால் நம்பிக்கை உள்ளவர்களாலும் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வந்தது.

நவீனத்துவம் சிக்கலானது மற்றும் பல கூறுகளைத் தன்னுள் அடக்கியுள்ளது. ஆங்கில கவிதைகளில் நவீனத்துவத்தினைப் புரிந்து கொள்ள Yeats, Frost, Pound, Eliot, Stevens, Williams ஆகியோரில் தொடங்கலாம்.

ஆங்கிலம் மட்டுமில்லாது நவீனத்துவம் ஸ்பானிஷ்,ரஷ்யா,இலத்தீன் என பல பகுதிகளிலும் பரவத் துவங்கியது. தமிழ் உட்பட.

1908 ஆம் ஆண்டு T.E.Hulme "நவீன கவிதைகள் குறித்தான விரிவுரை" ஒன்றினை கவிஞர்கள் மாநாட்டில் வாசிக்கிறார். அதன் சாராம்சம் இவ்வாறு அமைகிறது. "முட்டைக்கு ஓடு என்பது குறிப்ப்பிட்ட காலம் வரை தேவைப் படுகிறது. ஆனால் அது காலம் முழுமைக்கும் இருக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே ஓடு உடைக்கப்பட வேண்டும் என முடிக்கிறேன்"

********************************************************

இந்தப் பதிவின் நோக்கமே வேறு. நவீனத்துவத்தின் வரலாற்றினை தொடங்க வேண்டும் என்பது. என்னால் உணர முடிகிறது. அதன் நுனியினைக் கூட கட்டுரை தொடவில்லை.

இதன் சாராம்சமாக ஒன்றினைச் சொல்ல முடியும். நிகழ்கால எண்ணங்களை, நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கும், அதிர்வூட்டும் படைப்புகளாக நவீனத்துவ படைப்புகள் இருக்க வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் எனச் சொல்ல எனக்கு தகுதியில்லை என்ற போதும், காலங்காலமாக சொல்லப்படுகின்ற கூற்றுகளை அப்படியே தனக்குரிய சொற்களை பயன்படுத்தி சொல்லிவிட்டு நவீனத்துவம் என்று சொல்வதனைப் புறந்தள்ளும் உரிமை எனக்கிருக்கிறது.

இயலுமெனில் நவீனத்துவம், பின் நவீனத்துவம் குறித்து தொடர்ந்து எழுது ஆர்வம் இருக்கிறது. ஆனால் அதற்கான ஆற்றல் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

குறிப்பு: இந்தப் பதிவில் தவறு இருப்பதற்கு வாய்ப்புண்டு. கருத்துக்களை முன் வையுங்கள். நல்ல விவாதம்- தெளிவடைய உதவும். வாழ்த்தினைக் காட்டிலும், விமர்சனம் நல்ல எதிர்கால படைப்புகளுக்கு வழிவகுக்கும்.


*******************************************************