May 8, 2006

அறிவுஜீவித் தனத்தை காட்டுறாம் பாரு-I

கவிதை பற்றி எழுதிய பதிவிற்கு பின்னூட்டமிட்ட திரு.முத்து(தமிழினி) கவிதைகள் குறித்தான தொடர் எழுதச்சொல்லி கருத்து தெரிவித்திருந்தார். அந்தக் கட்டுரையே அதிகப் பிரசங்கித்தனமானதோ என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

என்னால் கவிதை குறித்து எல்லாம் எழுத முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் பிடித்த கவிதைகளையும் அவற்றில் என் புரிதல்களையும் எழுதலாம் எனத் தோன்றுகிறது. இது நவீனத்தில் என் பார்வையை இன்னும் வேறு தளத்திற்கு நகர்த்த உதவும் என்றும் நம்புகிறேன்.

வலைப்பதிவு உலகத்தில் கவிதைகளுக்கு இருக்கு 'வரவேற்பு' மிக பயமுறுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.

என்.டி.ராஜ்குமாரின் கவிதைகளில் ஆரம்பிக்கிறேன்.

(1)

சிரசில் எதையோ சிலாகித்துக்கொண்டே

குறிபார்த்தடிக்குமென் மாந்ரீகக் கிழவியைப்போல்
பளிச்செனச் சொல்லிவிடுகிறேன் கண்ணில்பட்டதை

சொல்லித்தெரிவதா சொல்லில் உதிக்கும் சூட்சுமம்

கொழுந்து விட்டெரியும் தீயினுள்ளே
நீலப்புடவை கட்டி புணர்ந்தாடுகிறாள்

நெருப்பு மங்கை

***********************************************************
இந்தக் கவிதை எனக்கான கவிதையாகப் படுகிறது.

//சொல்லித்தெரிவதா சொல்லில் உதிக்கும் சூட்சுமம்//

கவிதை புரிதலில் இருக்கிறது. சொல்லில் இருக்கும் சூட்சமத்தை ஏன் விளக்க வேண்டும்?

ஒரு மெழுகுவர்த்தி அல்லது "சிம்னி" விளக்கு எரியும் போது சுடரினுள் தெரியும் நீல நிறம், கவிதை சொல்லியின் கண்களுக்கு நீலப் புடவை கட்டி ஆடும் மங்கையாக தெரிகிறது.

ஒரு காட்சியினை, கவிதையாக்க- அக்காட்சியினுள், நீலப் புடவை கட்டியிருக்கும் பெண்ணின் படிமம் நுழைக்கப்படும் முறை ரசிக்கத் தக்கது.

அவரே சொல்லியும் விடுகிறார். மாந்திரீகக் கிழவி போல 'பட்ட்'(பளிச்)என சொல்லி இருப்பதாக.

இன்னும் கோடிக்கணக்கான காட்சிகள் கவிதைக்குள் நுழையாமலே இருக்கின்றன. இயலபான காட்சிகள் யாவும் கவிதையில் ஏற்றப் பட்ட பின்னரும், அந்ததந்தக் கால கட்டத்தின் காட்சிகள் கவிதையில் பயணிப்பதற்காக காத்திருக்கத் துவங்கி விடும்.

இதே காட்சி வேறொரு கவிதை சொல்லிக்கு படும் கோணம் வேறு மாதிரியாக இருக்கக் கூடும். அல்லது புரிந்து கொள்பவருக்கு வேறு மாதிரியாக இருக்கலாம்.(2)
ஒரு முத்தம் கேட்டு கெஞ்சுகிறேன் நான்
குழந்தையின் மலம் துடைத்தெறிகிறாள் மனைவி

ஒரு முத்தம்கேட்டு அலைகிறேன் நான்
குழந்தையின் மூத்திரத்துணியை கழுவிப்போடத் தருகிறாள்
முனைவி

ஒரு முத்தம் கேட்டு புலம்புகிறேன் நான்
குழந்தையை உறங்கவிடாத நாயின் வள்வள்ளை
திட்டித்தீர்க்கிறாள் மனைவி
ஒரு முத்தம் கேட்டு சண்டையிடுகிறேன் நான்
பால்குடிக்கும் குழந்தையின் மார்பை மறைக்கிறாள் மனைவி

ஒரு முத்தம் கேட்டு கறங்குகிறேன் நான்
கொசுக்கள் அண்டாமலிருக்க வலைபோட்டு மூடுகிறாள் மனைவி

அடிவயிர் கிழிசல் காய்ந்தபின்னும்
பச்சை உடம்புக்காரி பதறுகிறாள் என்னைப் பார்த்து

எரிகிற உடலின் மனவிளி நிராகரிக்கப்படுகையில்
புணர்ச்சி பழகிய பேருடலில் விந்து முட்டி நிற்கிறது

எனது மிருகங்களின் கூரேறிய குறிகளை
மிகப்பக்குவமாய் வெட்டிச்சாய்த்தும்

மூளையின் பின்னால் பதுங்கியிருக்கிறதொரு
கலவரமனம்.

************************

எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய அற்புதமான கவிதை.

இது சாதரணமாக ஆணின் மனநிலையை விவரிப்பது போல இருப்பினும், நடுத்தரக் குடும்பத்தின் காட்சியினையும், காமத்தினை அடக்க வேண்டிய கட்டாயம்(பொறுப்பு என்னும் சொல்லும் பொருந்தக் கூடும்), புணர்ச்சி என்னும் போதை பழகிவிட்ட மனம் மற்றும் உடலின் இயலாமை அனைத்தும் இந்தக் கவிதையில் வந்து விடுகிறது.எந்தவொரு வலிந்த திணித்தலும் இன்றி.

ஆணின் மனம் அலைந்து திரிகையில், எதனைக் குறித்தும் பிரக்ஞயற்று குழந்தையின் மீது மட்டும் கவனத்தைச் செலுத்தும் தாய்மையைப் பார்கலாம்.

இதுதான் நவீன கவிதை வேண்டுவது. ஒரு பொருளை கொண்டாடும் போது பிறவற்றினை இயல்பாக கவிதைக்குள் கொணர்ந்துவிடல். வர்ணனை அல்லது முலாம் எதுவும் தேவை இல்லை. வர்ணனை நுழைக்கப்படும் போது அல்லது தேவயற்று சொற்களுக்கு வெளிசமிடும் போது கவிதையின் ஆழம் தவிர்க்கப்பட்டு, வாசகனின் கவனம் சொற்களினூடாக நின்றுவிடுகிறது.

இயல்புத் தன்மை நவீனத்தின் முக்கியமான அம்சம்.

வேறு கவிதைகளை தொடர்ந்து ரசிக்கலாம்.

(அய்யா பெரிய மனுஷங்க்ளா...'அறிவுஜீவித் தனத்தை காட்டுறாம் பாரு'னு வரிந்து கட்டாதீங்க. ஏதோ என்னால முடிஞ்சது. தப்புனா சொல்லுங்க. திருத்திக்கலாம். தப்பே இல்லை)