May 30, 2006

சுயதம்பட்டம்/தற்பெருமை

'ஓவர்'னு எல்லாம் நினைக்காமல் தலைப்போடு சேர்த்துப் படியுங்கள். :)
(இந்த ஸ்மைலிக்கு அரசியல் தொடர்பெல்லாம் கிடையாதுங்க)

ஊருக்குப் போகும் போதெல்லாம் 'உன்னதம்' இதழின் ஆசிரியர் கெளதம சித்தார்த்தன் அவர்களுடன் உரையாடுவது வழக்கம். புதுவகை எழுத்து குறித்தும் இலக்கிய அரசியல் குறித்தும் விரிவாகவும் மிக ஆக்ரோஷமாகவும் பேசும் படைப்பாளி. மிகுந்த சிரமங்களுக்கிடையில் 'உன்னதம்' இதழினை தொடர்ந்து நடத்தி வருகிறார். இதழின் தலையங்கத்தில் எனது பெயரினைக் குறிப்பிட்டு எழுதி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இருந்தது. இதனை வலைப்பதிவில் பதிப்பிக்க வேண்டுமா என யோசித்த போது, 'வலைப்பதிவு' மக்களுக்கு தெரியாமல் உனக்கு என்ன இலக்கியப் பயணம் என்ற வினா எழுந்தது. விளைவு இந்தப் பதிவு.

உன்னதம்
ஜனவரி - பிப்ரவரி 2006

தலையங்கம்

புதுவகை எழுத்துக்கான உரையாடலில் ஆர்வமுடன் கலந்து கொள்ள வந்த வா.மணிகண்டன், இசை, இளஞ்சேரல், சக்தி, மிதுன், பாலமுருகன், கோவிந்தன் மற்றும் கடிதம் தொலைபேசி வாயிலாக விசாரித்த அனைத்து இளம் படைப்பாளிகளின் உற்சாகம், ‘சிறுகதைகளின் காலம் முடிந்து போய்விட்டது’ என்ற வெற்று ஆரவாரங்களைப் போக்கி, மிகுந்த புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. விரைவில் உரையாடல்களையும் அதற்கான செயல்பாடுகளையும் ஊக்கத்துடன் வடிவமைப்போம்.

இந்த இதழில் மேலும் மூன்று புதிய பத்திகளும், சிறப்புப் பகுதி ஒன்றும் அறிமுகமாகின்றன.

தமிழ் எழுத்து வரலாற்றிலேயே முதன் முறையாக அரவாணித் தோழர் ப்ரியாபாபு அவர்களால், தங்களது வாழ்வியலின் எழுதப்படாத பக்கங்கள் உங்கள் முன்னே விரிகின்றன. இதுவரை அரவாணிகள் குறித்த கொச்சையான படிமங்களும், பறவைப் பார்வையுமாகவே ஊடகங்களால் ஊதிப் பெருத்த விஷயங்கள் நிராகரிக்கப் படவேண்டிய சூழலை உருவாக்குகிறார் அவர். சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட அவர்களது உடல் சார்ந்த மொழி தமிழின் நவீன எழுத்து தளத்தில் பதியட்டும். இதுவரை மறைக்கப்பட்ட அவர்களது பண்பாடும், வழக்காறுகளும், தொன்மங்களும், படிமங்களும், மொழியும், இசையும் வரலாற்றைப் புரட்டிப் போடட்டும்.

காலங்காலமாய் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்ட பெண் எழுத்தின் பல்வேறு பரிமாணங்களையும் அது எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்களையும் தனக்கே உரித்தான மொழியில் எழுத வருகிறார் சுகிர்தராணி. அதேபோல டி.டி.ராமகிருஷ்ணன் மலையாளத்தின் சமூக அக்கரை சார்ந்த கலை இலக்கியம், அரசியல், மாற்றுச் சிந்தனைகள், விளிம்பு நிலையாடல்கள் குறித்தெல்லாம் எழுதுகிறார்.

‘அண்டை வீட்டார்’ என்னும் சிறப்புப் பகுதியில் மலையாள, கன்னட இலக்கியத்தின் இளைய தலைமுறைப் படைப்பாளிகள் சிலரைத் தேர்வு செய்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு படைப்பாளியாக, தமது மொழியில் நடக்கும் நடப்பு நிலை குறித்தும், கலை இலக்கியம், அரசியல், மாற்றுச் சிந்தனைகள், விளிம்பு நிலையாடல்கள், தலித்தியம், பெண்ணியம் ஆகிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வைக்கிறது. இந்தப் பகுதியின் ஒருங்கிணைப்பாளர் களாக திரு.விவேக் சான்பாக் (ஆசிரியர்-தேசகாலா. கன்னட இலக்கிய இதழ்) திரு.நஞ்சுண்டன், பெங்களூர். மற்றும் திரு.டி.டி.ராமகிருஷ்ணன், திரு.டாக்டர்.டி.எம்.ரகுராம், கேரளா ஆகியோர் ஆர்வத்துடன் இசைவு தெரிவித்தும் படைப்புகள் பெற்றுத் தந்தும் உறுதுணையளித்தார்கள். மிக்க நன்றி.

அடுத்த இதழில், கன்னடப் படைப்பாளி திரு. அரவிந்த மாளஹத்தி எழுதுகிறார்.

சுட்டி:http://keetru.com/unnatham/jan06/editorial.html

உன்னதம்

நவீன இலக்கியத்தின் பன்முக ஆளுமை
(தனிச்சுற்றுக்குமட்டும்)
இருமாத இதழ்

ஆசிரியர், வெளியிடுபவர்:
கௌதமசித்தார்த்தன்

சந்தா விவரம்
தனிஇதழ் ரூ.15
ஆண்டுச் சந்தா ரூ90

உன்னதம்
ஆலத்தூர் அஞ்சல்
கவுந்தப்பாடி 638 455
ஈரோடு மாவட்டம்.

unnatham@rediffmail.com
unnatham@gmail.com
தொலைபேசி: 04256 243125
செல்பேசி: 9443224945